கந்த சஷ்டி 5: சினிமாவில் திருப்புகழ்!
ஐந்தாம் நாள் சஷ்டிப் பதிவில்...கொஞ்சம் வித்தியாசமாக...
சினிமாவில் திருப்புகழ் என்பதற்குப் பதிலாக...
சினிமாவில் அருணகிரியின் மற்ற பாடல்கள் என்று பார்க்கலாமா?
சினிமாவில் சில திருப்புகழ்களைப் சென்ற பதிவுகளில் பார்த்தோம் அல்லவா? திருப்புகழ் மட்டும் தானா அருணகிரியார் பாடியது?
கந்தர் அலங்காரம்? அனுபூதி? வேல் விருத்தம்? மயில் விருத்தம்? இவை சினிமாவில் வந்துள்ளதா?
அருணகிரி அருளிய நூல்கள், ஆறுமுகனைப் போலவே, மொத்தம் ஆறு!
1. திருப்புகழ்
2. கந்தர் அந்தாதி
3. வேல்-மயில்-சேவல் விருத்தம்
4. திருவகுப்பு
5. கந்தர் அனுபூதி
6. கந்தர் அலங்காரம்
இவற்றில் சில வரிகள், அருணகிரிநாதர் படத்திலேயே வந்துள்ளன! ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?
முதலில் கந்தர் அலங்காரம்!
நான் பொருள் சொல்லத் துவங்கி, சென்ற Dec-2009இல் பாதியிலேயே நின்று போனது!
அதோடு சேர்த்து நானும் நின்று போயிருக்க வேண்டும்!
ஆனால் ஏதேதோ நடந்து, எப்படியோ தொடர்ந்து கொண்டிருக்கிறேன்!
நான் எங்கே நினைத்தாலும், அங்கே என்முன் வந்து நிற்பான், என் முருகன்!
பாடலை இங்கே கேட்டுக் கொண்டே வாசிக்கவும்!
குரல்: TMS
இசை: ஜி.ராமனாதன்
வரி: அருணகிரி
படம்: அருணகிரிநாதர்
செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும்
பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதும மலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே
செம்மை நிறக் கோபம் கொண்ட சின வடிவேல்...திருமுகம்...
அடியவர்களின் பாரம் தாங்கும் பன்னிரு தோள்...
தாமரையில் தேன்துளியும் முத்தும் சிதறும் திருச்செங்கோடு என்னும் ஊர்...
அந்த செங்கோட்டுக் குமரன் எப்படித் தெரியுமா?
நான் எங்கே நினைப்பினும், அங்கே என் முன் வந்து தோன்றுவானே!
என்னவொரு நம்பிக்கை, பிடிமானம் பாருங்கள்! எங்கே நினைத்தாலும் அங்கே வந்து தோன்றுவானாம் என் முருகன்!
அதுவும் எப்படி? சும்மா அசரீரியா குரல் எல்லாம் கொடுக்க மாட்டானாம்! கனவில் தோன்ற மாட்டானாம்! = "முன்" வந்து தோன்றுவான்! முன் "வந்து" தோன்றுவான்!
* நான் பூசை அறையில் நினைப்பேன் = என் முன் வந்து தோன்றுவான்!
* நான் படுக்கை அறையில் நினைப்பேன் = என் முன் வந்து கிள்ளிச் சீண்டுவான்!
* நான் பாத்ரூமில் கூட நினைப்பேன் = ஹேய், உன் மேல் வாசனையா இருக்கு-ன்னு சொல்லுவான்!
* நான் Subway Train-இல் நினைப்பேன் = கம்பி மேல் தாங்குவது போல் என் மேலும் தாங்குவான்!
* நான் அலுவலகத்தில் நினைப்பேன் = அவ கூட மொக்கை போட்டது போதும்! என்னை வந்து கவனி-ன்னு சொல்லுவான்!
* நான் வீட்டினில் நினைப்பேன் = எல்லாம் நல்லா இருக்குடீ! ஆனா உன் காரம் தான் தூக்கலா இருக்கு-ன்னு சொல்லுவான்!
* நான் ஓய்வாக உறங்குவேன்! அப்போ நினைப்பேனா? தெரியாது! ஆனால் அவன் மடி, என் தலையைத் தாங்கிக் கொண்டிருக்கும்! அவன் கரம் என் மார்பைத் தட்டிக் கொண்டிருக்கும்! நான் என்னையும் அறியாமல் அவனுள் கலந்து...முனகி முனகி...முருகா முருகா...
எங்கே நினைப்பினும் அங்கே என் முன்-வந்து எதிர் நிற்பனே
செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும்!!!
இதோ...
அலங்காரத்தைத் தொடர்ந்து திரையிசை...முருகன் பாமாலை என்னும் தொகுப்பில் (album) இருந்து...
இந்தப் பாட்டை முதன்முதலாகக் கேட்ட போது, எனக்கு-ன்னே சுசீலாம்மா பாடி இருக்காங்களோ-ன்னு நினைச்சிக்கிட்டேன்!
காலைத் தனிமையிலும், இரவுத் தனிமையிலும் = தனி மயில்!
அவனொடு நான்! கூடவே இந்தப் பாடல்!
ஒரு நாளும் தவறவே தவறாது! கேட்டுப் பாருங்கள்! நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!
எனக்கும் உனக்கும் இருக்குதய்யா உறவு! - அதில்
எப்போதும் இல்லை ஒரு குறைவு!!
முருகா...எனக்கும் உனக்கும் இருக்குதய்யா உறவு!
இனிக்கும் சுவைக் கனிக்கும் மேலான உறவு!
இதயத்திலே பெருகி எழும் காதல் உறவு!
(எனக்கும் உனக்கும்)
வனக்குறத்தி வள்ளியிடம் கள்ள உறவு!
தேவ இனத்தவள் குஞ்சரி மண உறவு!
தனக்கு உயிர் உடலாகத் தங்கும் உறவு - இந்தத்
தாரணியைக் காத்திருக்கும் தேவன் உறவு!
(எனக்கும் உனக்கும்)
மனக்கவலை மறக்க வைக்கும் வேலன் உறவு - நல்
மகிழ்ச்சி அங்கு இருக்க வைக்கும் கந்தன் உறவு
மணமலர் போல் இருக்கும் இன்ப உறவு
திரு-மால் மருகன் வேல் முருகன் அன்பின் உறவு!
முருகா...
எனக்கும் உனக்கும் இருக்குதய்யா உறவு!
அதில் எப்போதும் இல்லை ஒரு குறைவு!
I Love You Murugaaaaa!
5 comments:
காலமெலாம் காதலித்து
இருந்திடலாம் கந்தனை
எந்தவொரு நேரத்திலும்
நேரிடதொரு நிந்தனை
இடைவிடாது செய்திருப்போம்
வேலனையே சிந்தனை
வினையொன்றுமிலாது
கூடிடலாம் சேந்தனை
இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கின்றன!
@ அருணையடி அண்ணா
//எந்தவொரு நேரத்திலும்
நேரிடதொரு நிந்தனை
இடைவிடாது செய்திருப்போம்
வேலனையே சிந்தனை//
சூப்பர்!
கந்தனை...சிந்தனை செய் மனமே!
நிந்தனை...வந்தனை ஆகிடுமே தினமே!
// குமரன் (Kumaran) said...
இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கின்றன!//
இரண்டாவது பாடல் எனக்கு ரொம்பபபபப பிடிக்கும் குமரன் அண்ணா! :)
//நான் பொருள் சொல்லத் துவங்கி, சென்ற Dec-2009இல் பாதியிலேயே நின்று போனது!
அதோடு சேர்த்து நானும் நின்று போயிருக்க வேண்டும்!
ஆனால் ஏதேதோ நடந்து, எப்படியோ தொடர்ந்து கொண்டிருக்கிறேன்!//
என்ன ஆச்சுன்னு ஒண்ணும் தெரியலை :( ஆனால், இது வரை தாங்கியவன் இனியும் தாங்குவான். கந்தர் அலங்காரத்தையும் தொடருங்கள், ப்ளீஸ்...
Post a Comment