கந்த சஷ்டி 6: திருச்செந்தூரின் கடலோரத்தில்? ஈழத்தின் கடலோரத்தில்?
மக்களே, இன்று தான் கந்த சஷ்டி (Nov-11)! முருகன் (Sanskrit சுப்ரமண்யன்), சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் சொல்லப்படுவது திருச்செந்தூர் கடற்கரை!
ஒவ்வோர் ஆண்டும் கந்த சஷ்டியின் போது, செந்தூரில் வெகு விமரிசையாக நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது!
ஆனால் கந்த புராணம் சொல்வது என்ன?
இலக்கியங்கள் சொல்வது என்ன?
(சிறந்த பிராமணத்துவம் பெற்றவன்)
அம்மையப்பனிடம் வேல்/ஆயுதங்கள் வாங்கிய சுப்ரமண்யன், தேர் ஏறித் தெற்கு நோக்கிச் செல்கிறான்.
விந்தியமலையின் அடிவாரத்து மாயாபுரத்தைத், தாராகாசுரன் ஆண்டு வருகிறான். இவன் சூரனின் தம்பி.
கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி இவன் வழிமறிக்க, வீரபாஹூத் தேவர் அவனுடன் போர் புரிகிறார்.
ஆனால், வீரபாஹூவும், சுப்ரமண்யனின் சேனையும், அந்த மலைக்குள் மாட்டிக் கொள்கின்றனர்!
தாரகன் சுப்ரமண்யனோடு, நேரடியாக மோதவில்லை! எனினும் சுப்ரமண்யன், கூர் வேலை அவன் மேல் எறிய, மலை பிளந்து, தாருகன் அழிக்கப் படுகிறான்.
அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர்.
சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான். எதிரிப் படை பலம் வாய்ந்ததோ என்ற ஐயம் முதன்முதலாக அவனுக்கு வருகிறது. சுப்ரமண்யன் சேனையைக் கணக்கிட உளவுப்படையை அனுப்பி வைக்கிறான்.
மன்னி ஆற்றங்கரையில், ஈஸ்வரனாகிய சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவ தச்சனைப் பணிக்கிறார் சுப்ரமண்யப் பெருமான்.
ஈசனும் சுப்ரமண்யன் முன்னே தோன்றி, பாசுபதம் என்னும் அஸ்திரம் அளிக்கின்றார். பின்னரே திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது.
பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், சுப்ரமண்யனைச் செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள். புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவ குருவான வியாழனிடம் (பிரகஸ்பதி), சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கிறார் சுப்ரமண்யன். அதன் பின்னரே வீரபாஹூவை மட்டும் தூது அனுப்ப முடிவாகிறது!
தூது செல்லும் வீரபாஹூ முதலிலேயே சூரனைச் சந்திக்கவில்லை! சிறைப்பட்ட தேவ இளவரசனான, இந்திரனின் மகன், சுப்ரமண்ய அணுக்கன் ஜெயந்தனைத் தான் முதலில் போய்ப் பார்க்கிறான்!
ஜெயந்தனுக்கும் சுப்ரமண்யனுக்கும் அப்படியென்ன அணுக்கம்? என்று கதையில் சொல்லப்படவில்லை!
பின்னரே, சூரன் அவைக்குச் சென்று தூது உரைக்கிறான் வீரபாஹூ! ஆனால் அசுரனின் மறுப்பால் தூது முறிகிறது.
அப்போது ஏற்பட்ட கைக்கலப்பில் சூரனின் புதல்வர்கள் சதமுகன், வச்சிரவாகு இருவரும் வீரபாஹூவால் கொல்லப்படுகிறார்கள்.
வீரபாஹூ திருச்செந்தூர் திரும்பி, சுப்ரமண்யனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான்.
இனி தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை செல்கிறார் சுப்ரமண்யன்.
ஈழத்தில், ஏமகூடம் என்னும் ஊரில் படைக்கலன்களுடன் தங்க, அங்கிருந்து தான் போர் துவங்குகிறது.
பானுகோபன் என்னும் சூரனின் மகனை முதலில் சுப்ரமண்யன் முறியடிக்கிறார்.
ஈழத்து வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன்.
கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போக, கடைசியில் வெறுத்துப் போய், கடலுக்கு அடியில் ஒரு மாமரமாய் நிற்கிறான்.
கூர் வேல் சூரனைப் பிளந்து.....சேவலும் மயிலுமாய் ஆக்குகிறது. சூரசங்காரம் நடந்து முடிகிறது!
சூரன் ஒருவனை மட்டும் அழிக்காமல், சூரனின் மொத்த கிளையும், உற்றார் உறவோடு, அத்தனை பேரும் அழிக்கப்படுகிறார்கள்!
சுப்ரமண்யன் ஆணைப்படி, வருணன் மொத்த ஊரையும், தூங்கும் குழந்தைகள் உட்பட, கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது.
வெற்றித் திருமகனாய், சுப்ரமண்யன் திருச்செந்தூர் திரும்புகின்றார்.
ஆனால் இப்படிச் சூரனின் குடும்பம், குலம், நாட்டு மக்கள் யாவரையும் தாமே அழித்த மனக்கேதம் தீர்க்க, சுப்ரமண்யன் மனம் எண்ணுகிறது!
செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறார் சுப்ரமண்யன்.
இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர்க் கருவறையில் காண்பது!
கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்!
ஆக, சூரசங்காரம் நடந்தது ஈழத்தில் இருந்து தான்! ஏமகூடம் என்ற ஊர் இப்போது இலங்கையில் எங்கு இருக்கு? யாரேனும் அறியத் தாருங்கள்!
திருச்செந்தூரில் நடித்துக் காட்டப்படும் சூர சங்காரம் மிகப் பிரபலமானதால், பலருக்கும் திருச்செந்தூரில் தான் போர் நடைபெற்றது என்ற நினைப்பு வந்து விடுகிறது!
திருச்செந்தூர் மட்டுமல்லாது, பல முருகன் (சுப்ரமண்யன்) ஆலயங்களிலும், ஏனைய ஆற்றுப்படை வீடுகளிலும் கூடச் சூர சங்காரம் நடித்துக் காட்டப்படுகிறது! ஆனால் சூர சங்காரம் நடந்தது ஈழத்தில் தான்!
இன்றைய சஷ்டிப் பாடல்... = திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!
சீர்காழியும், TMS-உம் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல், உச்ச குரலில், உணர்ச்சி ஒருமித்துப் பாடுவது!
படம்: தெய்வம்
குரல்: சீர்காழி, TMS
வரிகள்: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்!
அசுரரை வென்ற இடம் - அது
தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும்
ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்!
அன்பர் திருநாள் காணுமிடம்!
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்,
தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்,
குமரனவன் கலையா?
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
(சாதி பார்த்து, ஆலய நுழைவு மறுத்த வரலாறு, திருச்செந்தூருக்கு உண்டு)
(சாதி பார்த்து, ஆலய நுழைவு மறுத்த வரலாறு, திருச்செந்தூருக்கு உண்டு)
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!
இது வரை சஷ்டிப் பதிவுகளுக்கு, வந்திருந்த முருக அன்பர் அனைவர்க்கும் அடியேன் நன்றி!
இது வரை சஷ்டிப் பதிவுகளுக்கு, வந்திருந்த முருக அன்பர் அனைவர்க்கும் அடியேன் நன்றி!
8 comments:
முருகா! முருகா!
சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்
எங்கும் கேட்கும் குரல்
தாங்கள் கூறியது அரிய விஷயம் எளிய நடை
தேவர் சிறை மீட்டவன்னா இப்பத் தானே புரியுது. அது ஜெயந்தன் முதலான தேவர்களைச் சிறை மீட்டதைச் சொல்லலை. வீரபாகு தேவரை சிறை மீட்டதைச் சொல்லுது! :-)
தமிழ் ஈழத்தில் தான் சூரசம்ஹாரம் நடந்தது என்றால் அது குமரிக்கண்டம் மூழ்கிய பிறகு நடந்ததா? :-)
கருவறைக்குள் சிவலிங்கம் தெரியுமா? பஞ்ச லிங்கம் கருவறைக்குப் பின்னாடி வேற ஒரு வழியா போய் பார்த்தோமே இந்த வருடமும், உங்க தயவாலே?
@ராஜேஷ்
எப்படி இருக்கீங்க? "அரிய" விஷயமெல்லாம் ஒன்னுமில்ல! அடியார்கள் "அறிய", விஷயம் சொன்னேன்! அவ்வளவே! :)
@ குமரன் அண்ணா
//கருவறைக்குள் சிவலிங்கம் தெரியுமா?//
ஆமாம்! அவனுக்கு இடப்பக்கம், கருவறைக்குள்ளேயே இருப்பது ஜகன்னாதர் என்னும் சிவ லிங்கம்!
அதோடு பாம்பறை வழியாகச் சென்று பார்த்தால் திருச்சுற்றில் இருப்பது பஞ்ச லிங்கம்!
//போய் பார்த்தோமே இந்த வருடமும், உங்க தயவாலே?//
ஆகா! என் தயவாலா? நோ வே! எல்லாம் செந்திலாண்டவன் தயவும், என் இராகவப் பெருமாள் அன்பும்-ன்னு வேணும்-ன்னாச் சொல்லுங்க!
//தேவர் சிறை மீட்டவன்னா இப்பத் தானே புரியுது. அது ஜெயந்தன் முதலான தேவர்களைச் சிறை மீட்டதைச் சொல்லலை. வீரபாகு தேவரை சிறை மீட்டதைச் சொல்லுது! :-)//
ஹா ஹா ஹா
வீரவாகுத் தேவர் சிறை இருந்தாரா என்ன? :)
மலையில் மாட்டிக் கொண்டதெல்லாம் சிறையாகுமா? கம்பி எண்ணினால் மட்டுமே சிறை! :)
//தமிழ் ஈழத்தில் தான் சூரசம்ஹாரம் நடந்தது என்றால் அது குமரிக்கண்டம் மூழ்கிய பிறகு நடந்ததா? :-)//
அச்சச்சோ! அப்போ இதுவும் "கங்கை கொண்ட சோழபுரம்" போல் குரு பரம்பரைக் "கதையா"? :)
குமரிக் கண்டம் மூழ்கும் முன்னரே, குமரவேள் கதை அனைத்தும் முடிந்து விடுகிறதே! எனவே ஈழம் அப்போதும் இருந்தது! அதுவுக் கடலை ஒட்டி! ஆனால் இப்போது போல் தீவாக இல்லை!
குமரிக்கண்டம் பத்தி ஒரு பதிவு போடுங்க
அன்பெனும் கடவுள் வழியில் இத்தனை கொலைகளா?.பிரானே
Post a Comment