Thursday, November 04, 2010

ஷஷ்டி விரதம்

முருகனுக்குரிய மூன்று விரதங்களில் (செவ்வாய்க்கிழமை விரதம், கார்த்திகை விரதம், ஷஷ்டி விரதம்) மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. மாதம் தோறும் ஷஷ்டி திதியிலும் விரதம் இருக்கலாம்.


சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதற்கு “சஷ்டியில் விரதம் இருந்தால் அதன் அருள் அகப் பையில், அதாவது உள்ளத்தில் வரும்” என்பதுதான் உண்மையான பொருள். இவ்விரதம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகத்தான விரதமாகும்.




முதல் நாள் அமாவாசை முதல் தொடர்ந்து ஆறுநாட்களும் அனுசரிக்கப்படும் இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர். சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர். விரத நன்னாளில் தர்ப்பை அணிந்து சங்கல்பம் செய்துகொண்டு ஆறு நாட்களும் முழு உபவாச விரதமிருந்து இறுதி நாளில் தர்ப்பையை அவிழ்த்து தாம்பூலத் தட்சணையுடன் அர்ச்சகரிடம் அளித்து விரதத்தை நிறைவு செய்பவர்களும் உண்டு. இவர்களில் பலர் முருகன் ஆலயத்திலேயே தங்கி விரதம் இருப்பர். உண்ணா நோன்பு மட்டுமல்லாமல் மௌன விரதம் இருப்போர்களும் உள்ளனர்.



விரத காலத்தில் முருக நாம ஜெபம், கந்த புராணம் படித்தல் நற்பலன் அளிக்கும். ஆறாம் நாள் கந்தஷஷ்டி அன்று துயிலாமல் விழித்திருந்து முருகன் பெருமைகளை நினைந்தும், பேசியும் வழிபடுதல் சிறப்பு. முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கந்த ஷஷ்டி தினத்தில் மட்டுமாவது உபவாசம் இருத்தல் நன்மையைத் தரும். ஏழாம் நாளன்று நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து களி செய்து உண்டு விரதத்தை முடிக்கலாம். ஆறு நாள்களும் கந்த புராணத்தை முழுமையாகப் படிக்கலாம். கந்தர் ஷஷ்டிக் கவசம், ஸ்கந்த குரு கவசம், ஷண்முக கவசம் இவற்றைப் பாராயணம் செய்யலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, வேல் மாறல் பதிகம், திருவடித் துதி முதலியவற்றைப் பாராயணம் செய்தலும் சிறப்பு தரும். ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கத்தை உள்ளன்போடு பாராயணம் செய்ய எண்ணிய காரியம் வெற்றி பெறும்.






விரத பலன்




ஆறு நாள்களும், ஆறு காலங்களும் உண்மையாக முருகனை பூஜித்து வழிபடுவோருக்கு வேண்டு வரம் கிட்டும் என்பது மட்டுமில்லை, முருகனது அருட்காட்சியும் கிடைக்கும். கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டு, வலன் என்ற அசுரனை இந்திரன் அழித்தான் என்பதிலிருந்தே இதன் பெருமையை நாம் தெரிந்து கொள்ளலாம்.





ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரஹண பவ





செவ்வாய்க்கிழமை, அங்காரகனுக்கு உரிய நாள். அங்காரகனின் மூலக் கடவுள் முருகன் என்பதால், இந்தத் தோஷம் [செவ்வாய் தோஷம்] உள்ளவர்களும், பொதுவாகவே முருக பக்தர்களும், அங்காரகனின் கடுமையிலிருந்து விடுபட 'செவ்வாய்க்கிழமை விரதம்' முருகனுக்கென நேர்ந்து கொள்வார்கள்.


மற்றபடி சஷ்டி விரதத்தில் சொல்லியிருப்பது போலவே ஒரு பொழுது மட்டும் உணவுண்டு, முருகனுக்கான தோத்திரங்களைப் படிப்பதன் மூலம் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.

எத்தனை வாரங்கள் வேண்டுமானாலும் தொடரலாம்.

நன்றி : வி.எஸ்.கே

3 comments:

தி. ரா. ச.(T.R.C.) November 05, 2010 1:48 AM  

good nalla aarambam

Kannabiran, Ravi Shankar (KRS) November 12, 2010 2:41 AM  

இப்போ தான் ஒவ்வொரு பதிவா பாத்துக்கிட்டு வரேன்!
சிபி அண்ணா, சஷ்டி விரத முறைமையை முருகனருளில் சொன்னமைக்கு நன்றி! தூங்காமல் விழித்து இருக்கணுமா ஆறாவது நாள்? அச்சோ நான் தூங்கிட்டேனே நேற்று? :)

பொதுவா விரதமிருந்து மாலையில் சூர சங்காரம் ஆனவுடன் உணவுன்பார்கள் தெரியும்! தூங்காமலும் இருக்கணும் என்பது இப்பத் தான் தெரியும்! இவ்ளோ நாள், சிவராத்திரி, ஏகாதசிக்கு மட்டும் தான் உறக்கமின்மை-ன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) November 12, 2010 2:48 AM  

//சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதற்கு “சஷ்டியில் விரதம் இருந்தால் அதன் அருள் அகப் பையில், அதாவது உள்ளத்தில் வரும்” என்பதுதான் உண்மையான பொருள்//

வாரியார் இதை வேறு விதமாகவும் சொல்லுவார்!
சஷ்டியில் விரதம் இருந்தால் தானே, கருவானது அகப்பையில் (கர்ப்பத்தில்) வரும்- என்று சொல்லுவார்! மகப்பேறுக்கான விரதம் என்னும் அளவில்...

இருப்பினும், இதெல்லாம் இலக்கிய நயமாகச் சொல்லப்படுவதே! நயம்-சுவை என்ற அளவில் சரியே!

ஆனால் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது ஒரு = எளிமையான நாட்டுப்புறப் பழமொழி! அதற்கு நேரடிப் பொருள் பானையில் இருந்தால் தானே கரண்டியில் வரும்? தன்னிடம் இருந்தால் தானே எடுக்க முடியும் என்ற எளிய பொருள் தான்!

மற்றதெல்லாம் நாட்டார் மொழியின் மேல் தன் மொழியை ஏற்றும் புனைவுகளே!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP