கந்த சஷ்டி 7: தாவணிக் கனவுகள்!
ஹேய்! சஷ்டி முடிந்து என்ன விருந்து கொடுக்கலாம்? இந்தக் கனவு, அவன் கிட்ட இருந்து ஏதோ சேதி வேற கொண்டாந்திருக்கே! என்ன சேதி, என்ன கனவா?
சேச்சே! அதையெல்லாம்...வாயால் சொல்ல வெட்கமா இருக்கும்! பாடத் தான் ஈசியா இருக்கும்! So, பாட்டுல படிச்சித் தெரிஞ்சிக்கோங்க! :)
கயல் உண்கண் யான் இரப்ப, துஞ்சிற் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன் மன்
- (குறள் 1211 - கனவு நிலை உரைத்தல்); கனவு காண்பதில் உள்ள நிம்மதியை வள்ளுவர் சொல்கிறார் பாருங்கள்...
If my fish eating eyes, close in sleep, at my lament...
I could fully relate my sufferings to My Beloved...
ஒரு விளையாட்டு விளையாடிப் பார்க்கிறேன்! அதன் பெயர் கூடல்...
என் கண்களைத் துணியால் இறுக்க மூடிக் கொண்டேன்!
கை நிறைய கோல மாவை எடுத்துக் கொண்டேன்!
அவன் வீட்டு முற்றத்தில், ஒரு வட்டம் வரைய ஆரம்பிக்கிறேன், கண்களை மூடிக் கொண்டு!
வட்டம் தொடங்கிய இடத்திலேயே, முடிவும் வர வேண்டும்!
அப்படி வட்டம் கூடினால் அவனும் என்னைக் கூடுவான்! ஆகா!
ஐய்யய்யோ! ஒரு வேளை வட்டம் கூடா விட்டால்?
"பயப்படாதே டீ! அவனை எண்ணும் போதெல்லாம் ஏன் உடல் இப்படிப் பதறுகிறது உனக்கு?
பத்து முறை அதே போல் வட்டம் போடு! அதில் இரட்டைப் படையாய் வந்து வட்டம் கூடினால், அவனும் உனக்குக் கூடுவான்! என்ன சரியா? வட்டம் போடுகிறாயா?"
ஆகா! இது வெறும் விளையாட்டா? அல்ல! விதியின் விளையாட்டு!
என்ன விதி? = அவனுக்கு என்னை "விதி"!
அவனுக்கு என்னை "விதி" என்ற இம்மாற்றம், நாம் கடவா வண்ணமே நல்கு!
என் கொங்கை நின் அன்பர் அல்லால் தோள் சேராது! சேராது!! இது சத்தியம்!
ஐயோ, யாரடா இது? வட்டம் போட விடாமல் என்னை ஒரு கை தடுக்கிறதே!
அப்பா பெருமாளே, ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே! என்னை அவனுக்கென்றே சேர்ப்பித்து விடு! சேர்ப்பித்து விடு!
மீண்டும் வட்டம் போடத் துவங்குகிறேன்!
ஐயோ மீண்டும் ஒரு கை தடுத்துப் பிடிக்கிறதே! யார் இது? முருகாஆஆஆ!
"ஹேய்! என்னைத் தெரியலையா உனக்கு? எண்ணிக்கை வட்டம் போடுகிறாயா பேதை நெஞ்சே?
என்னை எண்ணிக் கை பற்றி விட்டாயே!
எண்ணிக்கை வட்டம் வேறு தேவையா?"
ஆகா! யார் குரல் இது?
எனக்கு மிகவும் பழக்கமான குரல் போல் இருக்கே! என் ஏக்கங்களைச் சொல்லக் கூடத் தேவை இல்லாமல்...அவனே வந்து விட்டானோ?
அவனோடு கூட்டமாக இன்னும் பல பேர் வந்து விட்டார்களே! வந்து என் அப்பா கிட்ட என்னென்னமோ பேசறாங்களே! ஒரே கோஷமா இருக்கே! ஏதோ ஓதறாங்களே! டும் டும் டும் என்று சத்தம் கேட்குதே! என்னென்னமோ நடக்குதே!
எங்கு திரும்பினாலும் ஒரே வேலும் மயிலுமா இருக்கே! திடீர்-ன்னு இத்தனை வேல் எங்கிருந்து முளைச்சிது? நான் காண்பதெல்லாம் கனவா? நனவா?
சந்தேகமே இல்லை! நனவே தான்!......என்னை அவன் தொடும் போது கூசுதே!
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்! - தோழீ நான்!
ஏரகன் முருகன் ஏகின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் ஏந்திப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்!...(1)
(ஏரகம்=திருவேரகம்=சுவாமிமலை!
ஏரக முருகன் தந்தைக்கே பாடம் சொன்னவன் ஆதலாலே, என்னைத் தாய்-தந்தையரிடம் தைரியமாக அறிமுகப்படுத்துவான்! அதனால் தான் எனக்கு ஏரக முருகன்!
*திருப்பரங்குன்றம்=அசடு
*திருச்செந்தூர்=உஷ்ணம்
*பழனி=முறைப்பு
*திருத்தணி=இளைப்பு
*பழமுதிர்சோலை=களைப்பு
*சுவாமிமலை மட்டுமே சிரிப்பு!
சுவாமிமலை முருகன் - அந்த இதழ்க் கோட்டோரம், சந்தனக் காப்பை வழித்தெடுத்தால் தெரியும்,
கள்ளச் சிரிப்பழகா...மறக்க மனம் கூடுதில்லையே!)
நாளைத் திருமணம் அதற்கென்றே நாளிட்டு
பாளைக் கமுகுடன் பசும் வாழைப்-பந்தல் கீழ்
வேளைப் போதினில் வேல்முருகன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் - தோழீ நான்!...(2)
தோணியன் ஈசரோடு தேவர் குழாம் எல்லாம்
வேணியன் எந்தை வேங்கடவன் மகள்பேசி
காணியல் கூறைச் சீலையொடு மாலையும்
வாணியள் சூட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(3)
(சீர்காழித் தோணியப்பர் எனப்படும் சிவபெருமான் தலைமையிலே, அனைவரும் வந்திருந்து,
எந்தை தந்தையாம், சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து அண்ணலிடம், என்னைப் பெண் கேட்க...
காண அழகுடைய அரக்குச் சிவப்பான கூறைச் சீலையைக் கொடுத்து,
ஈசனின் மானசீக மகளான வாணி, நாத்தனராக மாலை சூட்டி, என்னை அழைத்துச் செல்ல...)
நால்திசை நாரங்கள் கொணர்ந்து நனிநல்கி
வேல்முறைச் சான்றோர் வேதமாம் தமிழ்ஓதி
சேல்விழி் மைந்தன் சேந்தனோடு என்தன்னை
ஆல்மரக் காப்பிடக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(4)
(நாரம்=தண்ணீர்; ஜீவநதிகளின் நீர்க் கொண்டு,
வேல்முறை வேளாண்மைச் சான்றோர்கள் தமிழ் மந்திரங்களை ஓத,
பந்தக்காலில் உள்ள ஆலமரத்துக் காம்பிலே கட்டிய மஞ்சக் காப்பினை எடுத்து,
எங்கள் இருவருக்கும் காப்பு கட்ட...)
கதிரொளித் தீபம் வரிசைகள் பலவேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையின் சங்கத் தமிழ்வேள் மண்டபத்துள்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(5)
மத்தளம் கொட்ட நாதசுரம் நின்றூத
முத்துடை தாமம் மாதவிப் பந்தல் கீழ்
மைத்துனன் முருகன் திருத்தாலி கட்டியெனைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(6)
(மாதவிப் பந்தல் என்னும் செண்பகக் கொடிகளின் கீழே, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க,
மைத்துனன்-மச்சான் என்று நான் ஆசையோடு அழைக்கும் முருகத் திரு நம்பி,
துளசி மாடம் பொருந்திய, சக்கரம், சங்கு, தண்டு, வாள், வில் துலங்கும் ஐம்படைத் தாலியைக் கழுத்திலே கட்டி,
என் கைத்தலம் பற்றி, என்னை அவனுக்கென்று ஆக்கிக் கொள்ள...)
வாய்நல்லார் மாறன் தமிழ்ஓதி மந்திரத்தால்
சேய்வேண்டி நாணல் படுத்துப் பரிதிவைத்து
சீர்வளர் மயில் அன்னான் மயிலாள் என் கைப்பற்றித்
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(7)
(அரையர்கள், தமிழ் வேதமான திருவாய்மொழியை, மாறன் மறையை
- "நல்ல கோட்பாட்டு உலகங்கள் முன்றினுள்ளும் தான் நிறைந்து,
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே"
என்று ஓத - நாணல் பரப்பி - அகில் குச்சிகளால் வேள்வி ஓம்பி
என் கைப்பிடித்து - இரு மயில்கள் நடந்து வருவது போல், ஒயிலாகத் தீவலம் வர...)
இன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
என்னை உடையவன் எழில்முருகத் திருநம்பி
முன்னை என் கால்பற்றி முன்றில் அம்மியின் மேல்
பொன்மெட்டி பூட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(8)
வரிசிலை மன்மதன் அண்ணன்மார் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
கரிமுகத்து இளையோன் கைமேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(9)
(உலகம் அத்தனைக்கும் கிளர்ச்சி ஊட்டும் மன்மதனோ, என் சொந்த அண்ணன்; நாரணத் தந்தையின் மானசீக மகன்
ஆனால் திருக்கை வேலின் காதல் முன்னால், கரும்பு வில்லின் காமம் நிற்குமோ?
தொலைவில் இருந்து அம்பெய்த முடியாமல், அருகில் வந்து,
முருகனின் மைத்துனன் ஆனதாலே, பொரி முகம் தட்டி,
என்னை யானைமுகத்தான் தம்பியிடம் ஒப்புவிக்க..)
குங்குமம் இட்டு குளிர்ச் சாந்தம் எனக்கிட்டு
மங்கலக் குடதீபம் கையேந்தி மனைக்குள்ளே
அங்கவனோடு நான் உடன்சென்று இல்வாழ
முங்கினேன் முருகொடு முதலிரவில் - தோழீ நான்! ...(10)
(நித்ய சுமங்கலிப் பொட்டிட்டு, சாந்தும் இட்டு,
காமாட்சி அம்மன் விளக்கைக் குடத்தில் வைத்து,
பத்திரமாக முருக மனைக்குள் புக...பின்பு முருக நம்பியும் எனக்குள் புக...
மருந்தாய் என்றும் மனத்துள்ளே, அவனை வைத்து இருப்பேனே,
பெருந்தாள் உடைய முருகனை, பிரியாது என்றும் இருப்பேனே!)
திருமணத்தோடு கூடிய சஷ்டிப் பதிவுகள் நிறைந்தன!
6 comments:
இரவி,
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
//குமரன் (Kumaran) said...
இரவி,
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!//
ஒரே ஒரு நூற்றாண்டு மட்டும் தானா குமரன் அண்ணா? :)
ஆசி வழங்கறது தான் வழங்கறீங்க! தாராளமா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் முருகொடு-ன்னு வழங்கலாம்-ல்ல? :)
அடடா, அற்புதம் கண்ணா!
உங்க ஆசைப்படி... எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் அவனோடு இருக்க வாழ்த்துகள்!
KRS
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க
//கவிநயா said...
அடடா, அற்புதம் கண்ணா!//
அற்புதம் கண்ணாவா? அற்புதம் முருகன் இல்லீயா? :)
//உங்க ஆசைப்படி... எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் அவனோடு இருக்க வாழ்த்துகள்!//
ஆயிரம் நன்றிக்கா!
//KRS
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க//
அவனோடு-ன்னு சேர்த்துச் சொல்லுங்க சிபி அண்ணா!அடியோமோடும் நின்னோடும் ஆயிரம் பல்லாண்டு என்பது தானே பாட்டும்? :)
Post a Comment