கந்த சஷ்டி 4: முருகன் - காமராஜர் - பி.சுசீலா
கந்த சஷ்டியில் காமராஜர் எங்கே வந்தாரு-ன்னு பார்க்கறீங்களா? ஹிஹி! விஷயம் இருக்கு! விஷமமும் இருக்கு! :)
என் பிறந்த வீட்டின் வாழ்வு, கண்ணன் வாழ்வு என்பதால், விஷமங்களும் டகால்ட்டிகளும் இயற்கையே! ஆனால் இது என் புகுந்த வீட்டில் பிடிக்காது! :)
நான் என்ன செய்ய? முருகா முருகா! உன் வீட்டில் எல்லாரும் ஞான பரமா இருக்காங்களேடா! ஒருத்தருக்கும் குறும்பே பிடிக்காதா?
ஏதோ என் மாமா ஈசனார் மட்டும் கொஞ்சம் ஞானம்-கொஞ்சம் குறும்பா அப்பப்போ திருவிளையாடல் பண்ணுவார்! ஆனால் அதுவும் ஞானம் கலந்த விளையாடல் தான்! வெண்ணெய் விளையாட்டு அல்ல! :)
நான்காம் நாள் சஷ்டிப் பதிவில் - சுசீலாம்மாவின் அழகிய முருகன் பாட்டு = அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி!
யாருங்க சிவகாமி மகன்? = முருகன் தானே?
இல்லை!
சிவகாமியின் மகன் = பெருந்தலைவர் காமராசரும் கூட!
இப்போ பாட்டைப் பாருங்க!
* அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி = சிவகாமி அம்மாள் மகன், காமராசரிடம் சொல்லடி!
* என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி = என்னைக் கட்சியில் சேர்க்கும் நாள் பார்க்கச் சொல்லடி!
இப்படித் தூது விடுகிறார் கவிஞர்! வேற யாரு? கண்ணதாசனே தான்! :)
கண்ணனின் தாசன் அல்லவா! அதான் இப்படிக் கபட நாடகம் ஆடுறாரு! :)
தி.மு.க-வில் முதல் பிளவு!
அறிஞர் அண்ணா அவர்களிடம் கோபித்துக் கொண்டு, ஈ.வெ.கி சம்பத் (அட நம்ம EVKS இளங்கோவனின் அப்பா தான்) கட்சியை விட்டுப் போகிறார்!
தமிழ்த் தேசியக் கட்சி-ன்னு புதுசா ஆரம்பிக்கிறார்! அய்யய்ய...கட்சி பேரே நல்லா இல்லையே! கழகம், திராவிட, முக போன்ற குறிச் சொற்கள் இல்லாமல் கட்சி ஆரம்பித்தால் எடுபடுமா? :)
அவருடன் கண்ணதாசனும் தி.மு.க-வை விட்டு விலகுகிறார்! அதான் வனவாசம்-ன்னு எழுதிட்டாரே!
கலைஞர் கருணாநிதிக்கும் கண்ணதாசனுக்கும் ஒத்து வருமா என்ன? கவிஞர் தான் உள்ளத்தில் உள்ளதை அப்படியே பேசும் "உணர்ச்சிகரமான" மனிதர் ஆயிற்றே!
ஆனால் சம்பத் துவங்கிய கட்சி சோபிக்க வில்லை! கலைத்து விட்டு காங்கிரசில் சேர்ந்து விடுகிறார் சம்பத்! கவிஞரின் கதி? அரசியல் நெளிவு சுளிவு அறியாதவர் ஆயிற்றே!
முன்பு காமராசரின் கொள்கைகள் சிலவற்றை, திமுக-வில் இருந்த போது எதிர்த்த தாம் எப்படி அங்கே போவது-ன்னு தயக்கம்! :)
அந்த நேரம் பார்த்து வந்த சினிமா தான் பட்டினத்தில் பூதம்!
ஜெய்சங்கர், நாகேஷ் கூட ஒரு ஜீ-பூம்-பா பூதம் சுத்துமே! திருப்பதி லட்டு எல்லாம் மேஜிக்-ல்ல வருமே! அதே படம் தான்!
அதில் கவிஞர் கண்ணதாசன் ஒரு பாட்டை எழுத, அது காமராசருக்கு மறைமுக ஓலை!
* பாட்டுடைத் தலைவன் முருகன் போலவே பாட்டு இருக்கும்!
* ஆனால் உள்ளுறையாக, கவிஞர் காமராசருக்கு சொல்ல விரும்புவது போலவும் இருக்கும்!
நமக்கு எதுக்குங்க அரசியல் உள்ளுறை-உள்குத்து எல்லாம்? நாம முருகன்-ன்னே எடுத்துக் கொண்டு மேலே தொடர்வோமா?
சிவகாமி மகன் = என் முருகன் தான்! அந்தச் சிவகாமி மகனை சண்முகனை சிந்தனை செய் மனமே...
சுசீலாம்மாவின் இன்-குரலில் இதோ... பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!
அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல் தோகை ஏதடி?
(அந்தச் சிவகாமி மகனிடம்)
கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண் எனப் பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறன்ன வேலை?
(அந்தச் சிவகாமி மகனிடம்)
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழல் ஆடும் விழியோடும் ஆடினானே!
அன்று நிழலாடும் விழியோடு ஆடினானே
என்றும் கண்ணில் நின்றாடச் சொல்லடி!
(அந்தச் சிவகாமி மகனிடம்)
மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால், நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால், பேதங்கள் தோன்றுமோ?
காலம் மாறினால் காதலும் மாறுமோ?
மாறாது மாறாது இறைவன் ஆணை!
என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை!
இந்தச் சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி
இன்னும் சேரும் நாள் பார்ப்பது என்னடி?
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?
தோகை இல்லாமல் வேலன் ஏதடி?
படம்: பட்டினத்தில் பூதம்
குரல்: TMS, பி.சுசீலா
இசை: ஆர். கோவர்த்தனம்
வரி: கண்ணதாசன்
ஊன்-மையான காதல் ஒன்னு! உண்மையான காதல் இன்னொன்னு!
ஒன்றில் lust அதிகம்! இன்னொன்றில் love அதிகம்!
ரெண்டுமே காதல் தான்! ஆனால் சில அடிப்படைகள் மாறி இருக்கும்!
உண்மையான காதல் எப்படி இருக்கும்? கவிஞரே சொல்கிறார்!
* நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ = நிலைமை மாறினாலும் அவன் நினைவு மட்டும் மாறவே மாறாது!
* நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ? = நெஞ்சுள்ளே காதல் என்பதால், நெஞ்சு அவனை நெருங்கியே இருக்கும்! அவன் பால் பேதம் தோன்றாது!
காலம் மாறினால் காதலும் மாறுமோ? மாறாது மாறாது இறைவன் ஆணை!
என் ஐயா முருகா, உன் மேல் ஆணை!
பெரு காதல் உற்ற தமியேனை - நித்தல் பிரியாதே, பட்சம் மறவாதே!
வேலன் இல்லாமல் தோகை ஏதடி என்று ஆரம்பித்தவர்
தோகை இல்லாமல் வேலன் ஏதடி? என்று மாற்றி முடிக்கிறார்!
டேய் முருகா, நான் இல்லாமல் நீயும் இல்லை!
உன் வேல் என்னதே, உன் மயில் என்னதே!
நீயும் என்னதே! என் ஆவி உன்னதே! முருகாஆஆஆ!
4 comments:
//டேய் முருகா, நான் இல்லாமல் நீயும் இல்லை!
உன் வேல் என்னதே, உன் மயில் என்னதே!
நீயும் என்னதே! என் ஆவி உன்னதே!//
நான் உன்னை நினைச்சேன்.! நீ என்னை நினைச்சே "
என்ற கதை ஆகிவிடுமோ !!
சுப்பு ரத்தினம்.
//வேலன் இல்லாமல் தோகை ஏதடி என்று ஆரம்பித்தவர்
தோகை இல்லாமல் வேலன் ஏதடி? என்று மாற்றி முடிக்கிறார்!
டேய் முருகா, நான் இல்லாமல் நீயும் இல்லை!
உன் வேல் என்னதே, உன் மயில் என்னதே!
//
Nice KRS
@சூரி சார்
//நான் உன்னை நினைச்சேன்.! நீ என்னை நினைச்சே" என்ற கதை ஆகிவிடுமோ !!//
அதே அதே! :)
நான் உன்னை அன்றி இல்லேன் கண்டாய் நாரணனே!
நீ என்னை அன்றி இல்லை!!
@அருணையடி அண்ணா
என்ன இது, ரெண்டு பேரும் ஒரே வரியைக் கட்டம் கட்டி ரசித்து இருக்கீங்க? :)
Post a Comment