Friday, November 05, 2010

கந்த சஷ்டி 1: தமிழ்ச் சினிமாவில் "திருப்புகழ்"!

இதோ....இனிய தீபாவளியும், நோன்பும் முடிஞ்சி, கந்த சஷ்டி துவங்கி விட்டது! (Nov-6-21010)!

ச"ஷ்"டி என்று இருப்பதால், இது பகல் பத்து/இராப் பத்து போல் தமிழ் விழாவாக இல்லாமல் இருக்கலாம்!
ஆனால் "கந்த" என்று இருப்பதால், என் முருகனின் விழாவே தான்! முருகன் இருப்பதால் தமிழும் கூடவே இருக்கும் தான்!

பதிவு எழுதத் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் முருகனருளில் சஷ்டிப் பதிவுகளைத் தவற விட்டதில்லை!
சில காரணங்களினால், இந்த ஆண்டு தவற விட்டு விடுவேனோ-ன்னு ஒரு அச்சம்! அஞ்சு முகம் தோன்றில்??
மருத்துவ மனையிலும் மயிலான் தோன்றி விட்டான்!

அவனைத் தவிர ஒன்றை விட முடியும்....
அவனைத் தவற விட முடியுமோ?

சஷ்டிப் பதிவுகள் - வெறும் பாட்டாக மட்டும் கொடுக்காமல், ஒவ்வொரு நாளும் ஒரு படைவீடு-ஒரு பாடல் என்றெல்லாம் முன்பு கொடுத்திருந்தோம்!
இந்த ஆண்டு என்ன செய்யலாம்? திருப்புகழைத் தரலாமா? அதுவும் ஜனரஞ்சகமாக! சினிமாவில் வந்த சில திருப்புகழை?

சில திரையிசைத் திருப்புகழும், சில திரையிசை முருகன் பாட்டுமாய்...
கதம்பமாய்க் கடம்பனுக்கு...இந்த ஆண்டும், இதோ....சஷ்டிப் பதிவுகள்!



திருப்புகழைச் சுவைக்கலாமா? அது என்ன அவ்வளவு சுவையாகவா இருக்கும்?

அவன் இதழ்ச் சுவை தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! :)
ஆனால் அதை விடவும் அதிக சுவை ஒன்னு இருக்கு! ஆகா....என்னாது அது?

உனக்குப் பிடிச்ச பெருமாள் கோயில் பொங்கலா? லட்டா? அதிரசமா?
திருக்கண் அமுதா? சாற்றமுதா? அக்கார அடிசிலா? சுகியமா?
ததியோதனமா? தேன் குழலா? திருப்பாவாடைச் சோற்றமுதா? ஹிஹி!

என் முருகனின் இதழைக் காட்டிலும் சுவையானது = தமிழ்ச் சுவை!
கனியிடை ஏறிய சுளையும், முற்றல் கழையிடை ஏறிய சாறும்
இனியன என்பேன் எனினும், தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!

வெறும் தமிழுக்கே இவ்வளவு சுவையென்றால், வேலன் தமிழுக்கு?
இனியனின் இதழ்ச் சுவையோடு கூடிய இன்-தமிழ்ச் சுவை = இனியது கேட்கின், இனியது சுவைக்கின்!
இந்த ஆண்டு சஷ்டிப் பதிவுகளின் மையப்பொருள்(Theme) = தமிழ்ச் சினிமாவில் திருப்புகழ்!


யாமிருக்க பயம் ஏன்? என்றொரு தமிழ்ப் படம்! எம்.எஸ்.வி-வாலி கூட்டு!

ஜெய்கணேஷ், கே.ஆர்.விஜயா, ஃபடாபட் ஜெயலட்சுமி, ராஜேஷ், மனோரமா என்று பலரும் நடித்த படம்!
"யாமிருக்க பயமேன்" என்றே சுசீலாம்மாவும் தன் தேன் குரலால் பாடி இருப்பாங்க! "திரை அருட் செல்வர்" கே.சங்கர் அவர்கள் இயக்கிய படம்!

இந்தப் படத்தில் திருப்புகழா? அதுவும் ஒரு சூப்பர் பெண் குரலில்?

திருப்புகழ்-ன்னாலே அவ்வளவு சீக்கிரம் புரியாதே, செந்தமிழில்-ன்னா இருக்கும்? சந்தம் வேறு "தொம் தொம்" என்று வந்து, நம் தமிழ் உச்சரிப்பையே சோதித்துப் பார்க்குமே!
ஆனால் இந்தப் பாடல் அப்படி அல்ல! மிகவும் எளிமையான-அழகான திருப்புகழ்! சினிமாவுக்கேற்ற திருப்புகழ்! :)
அறுபடை வீடுகளில் எனக்கு மிகவும் பிடிச்சவன் - இதழ்க் கோட்டோரம் கள்ளச் சிரிப்பழகன் - சுவாமி மலை முருகன் - அவன் மீதான திருப்புகழ்!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி-யின் கை வண்ணத்தில், வாணி ஜெயராம் குரலில்,
அருணகிரியின் தமிழ் எப்படி ஒரு நதி போல நெளிகிறது? பார்க்கலாமா - பாதி மதி நதி!

படம்: யாமிருக்கப் பயமேன்
குரல்: வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.வி
வரி: அருணகிரிநாதர்

திருப்புகழ்: பாதிமதி நதி
தலம்: சுவாமிமலை



பாதி மதி நதி போது மணி சடை
நாதர் அருளிய குமரேசா!
பாகு கனி மொழி மாது குற மகள்
பாதம் வருடிய மணவாளா!

பாதி மதியும், கங்கை நதியும் சடையில் சூடிய ஈசன்! அவன் அருளிய குமரேசா!
பாகு+கனி இரண்டின் இனிமையும் கொண்ட ஒரு பேதைப் பெண்!
முருகன் தன்னை ஏற்றுக் கொள்வானா என்று கூடத் தெரியாது, தன் வாழ்வாக ஏற்றுக் கொண்ட ஒரு பேதை! அவளின் பாதம் வருடியவா! என் மணவாள முருகா!

அவள் பாதங்களை எதுக்கு முருகன் பிடிச்சி விடணும்?
இது போல நக்கீரர் முதற்கொண்டு யாருமே சொன்னதில்லையே! அருணகிரி மட்டும் ஏன் இப்படி அடிக்கடி பாடுறாரு?

பொதுவா ஆண்கள் கால்களைப் பெண்கள் தான் பிடிச்சி விடுவாங்க! சினிமாவில் அப்படித் தான் காட்டுவாய்ங்க! ஆண்களோ பெண்ணின் வேறு பாகங்களை அல்லவா வருடுவாங்க? :)

ஏன் முருகன் மட்டும் அங்கெல்லாம் பிடிக்காம, அவ காலை மட்டும் அடிக்கடி தொடுகிறான்?
என் முருகனுக்கு இந்த மேட்டரில் விவரம் போதாதோ? :) நைட் லைஃப்-ன்னா என்னான்னே அவனுக்குத் தெரியாதோ? :)
இதோ, அப்பறமா படிச்சிப் பாருங்க, அந்தக் காரணத்தை!


காதும் ஒரு விழி காகம் உற அருள்
மாயன் அரி திரு மருகோனே!
காலன் எனை அணுகாமல் உனது இரு
காலில் வழிபட அருள்வாயே!

பொதுவா பல நேரங்களில், சக தோழிகளிடம் கூட, முகத்தைப் பார்க்காது, "வேறு எங்கோ" பார்த்துப் பேசுவது தான் பலரின் வழக்கம்! :)
ஒரு பெண்ணின் மார்பகத்தைப் பார்ப்பது என்பது முற்றிப் போய்.....தெருவோரக் காமத்தால் (Roadside Romance), அவளைச் சீண்டவே நினைத்தவன் ஒருவன்!

ஆனால் சீண்ட முடியவில்லை! ஏன்-ன்னா கணவனும் அருகில் இருக்கிறான்!
ஆசை துடிக்கிறது! காகமாய் மாறி, ஏதோ பட்சணத்துக்காக "அறியாமல் கொத்துவது" போல், அவள் மார்பை அறிந்தே கொத்துகிறான் அந்த ஆண்மகன்!

யார் இந்த யோக்கிய சீலன்? அசுரனா?? = சேச்சே! தேவன்!
தேவர்களுக்கு எல்லாம் தலைவன் இந்திரனின் சீமந்த புத்திரன் = ஜெயந்தன்!

இதைக் கண்ட இராகவன், வெகுண்டு, புல்லையே பாணமாகக் கிள்ளி எறிய, அதுவே சக்கரமாகச் சுழன்று துரத்த, தப்ப முடியாமல், அவள்-அவன் பாதங்களிலேயே வந்து வீழ்கிறான்!
ஒரு கண்ணை மட்டும் புல்லினால் துளைத்து, காமத்தின் ஊற்றுக் கண்ணைத் துளைக்கிறான் இராகவன்! = காதும் ஒரு விழி, காகம் உற, அருள் மாயன் அரி, திரு மருகோனே!

இதை எதுக்கு இங்கு அருணகிரி குறிப்பிட்டுச் சொல்லணும்? இது என்ன திருப்புகழா? திருமால் புகழா?? :)

* அன்று....அசுர குருவான சுக்கிராச்சாரியாருக்கும் ஒரு விழி போனது!
* இன்று........தேவர்களின் இளவரசன் ஜெயந்தனுக்கும் ஒரு விழி போனது!
எம்பெருமானுக்கு தேவ-அசுர பேதங்கள் கிடையாது!
எம்பெருமான் அனைவருக்கும் பொது! அவரவர் செயல்களே தேவ-அசுரத்தனத்தை நிர்ணயிக்கின்றன!

* அசுர குலத்தில் பிறந்த பிரகலாதனை, "பிரகாலதாசுரன்" என்று வைணவத்தில் சொல்வதில்லை! = "பிரகலாதாழ்வான்"!
* தேவ குலத் தலைவன் மகனை, "ஜெயந்த தேவன்" என்று வைணவத்தில் சொல்வதில்லை! = காகா-அசுரன்!

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்!
அப்படியான எந்தை மாயனின் மருகோனே! என் முருகோனே! காலன் எனை வந்து அணுகாமால், உனதிரு காலில் வழிபட அருள்வாயே!

காலன் வந்த போது தான் ஜெயந்தன் (எ) காகாசுரனுக்குக் காலில் விழத் தோன்றியது!
ஆனால் காலன் எனை அணுகும் முன்பே, காமம் அணுகட்டும்! உன் திருவடிக் காமம் அணுகட்டும்! உனதிரு காலில் வழிபட அருள்வாயே!
பேதையின் காலை வருடிய மணவாளா! உனதிரு காலில் வழிபட அருள்வாயே!



ஆதி அயனொடு தேவர் சுரர் உல(கு)
ஆளும் வகையுறு சிறை மீளா
ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வர வரும் இளையோனே!

பிரம்மன் முதலான தேவர் கூட்டம் சிறையில் வாடிய போது, அவர்களை சிறை மீட்டு வந்தவனே! என் கந்தவனே!
ஆடும் மயிலில் ஏறி, ஆடாது அசங்காது வா முருகா! அமரர் சூழ வர, வரும் வரதா!

சூதம் மிக வளர் சோலை மருவிடு
சுவாமி மலை தனில் உறைவோனே!
சூரன் உடல் அற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே!!

மணம் மிக்க சோலைகள் மருவிக் கொஞ்சும் காவிரி ஆற்றங்கரையில், சுவாமி மலையில் உறையும் சுவாமியே!
சுவாமிக்கும் நாதனான சுவாமி நாதப் பெருமாளே! ஏரகம் நீங்கா இறைவனே!

அன்று சூரன் உடல் அற இரண்டாக்கி, சேவல்-மயிலாக்கி, மாயத்தால் உண்டான கடலை வற்றச் செய்து,
வேலை விட்டவா! என்னைத் தொட்டவா! உன் திருவடிக் காமத்தை எனக்கு அருள்வாயே!



என்னாங்க எளிமையான திருப்புகழ் தானே? கே.ஆர்.விஜயாவே ஈசியாப் பாடுறாங்க-ல்ல? :)

சினிமாவில் அல்லாமல், பக்தர்கள் குழுவாகப் பாடுவதாகவும் இந்தப் பாட்டு இருக்கு! ஏ.எஸ்.ராகவன் அவர்கள் தலைமையில், திருப்புகழ் அன்பர்கள் சேர்ந்து பஜனை போல் பாடுவது இங்கே:


பாதி மதி நதி
போது மணி சடை
நாதர் அரு ளிய
-ன்னு ஒரு நதி ஓடி வரும் சந்தம் போலவே இருக்கு பாருங்க!
பாதி மதி நதி! இதான் நம்ம அருணகிரியின் தமிழ்!


இந்தப் பாட்டு முன்பு இணையத்தில் இல்லை! Youtube-இலும் இல்லை!
அடியார்கள் பொருட்டு, எனக்கு இதை வலையேற்றித் தருமாறு என்னுயிர்த் தோழனைக் கேட்டேன்!
அவனோ, என்னிடம் பதிலுக்கு வேறென்னமோ ஒன்னு குடு-ன்னு கேட்டான்! போடா என்று முட்டிக் கொண்டது :)

இல்லை...முதலில் நீ தான் தர வேண்டும் என்று நான் சொல்ல...
இல்லை...முதலில் நீ தான் தர வேண்டும் என்று அவன் சொல்ல...

அடியார்கள் முதலில், அப்புறம் தான் உன் சொந்த வேலை என்று நான் சொல்ல...
இல்லை...என் சொந்த வேலை தான் முக்கியம் என்று அவன் சொல்ல...

கோ.இராகவனிடம் கோபித்துக் கொண்டே தூங்கி விட்டேன்...
கோ.இராகவனிடம் சிரித்துக் கொண்டே கனவில் கேட்டேன்...
மறுநாள் காலை....விழித்த கணம்....கணினியைத் திறக்க....
Youtube-இல் Youravi-க்கென்றே இந்த பாடல் தரவேறி இருக்கு! :)

சொந்த வேலை முக்கியம் என்று சொன்ன தோழனின்
கந்த வேலை கண்ட களிப்பில்....
மீண்டும் தொலைபேசியில் சீண்டல் தொடங்க...

அதை...இன்று...இந்தத் திருப்புகழில் எண்ணிப் பார்க்கின்றேன்!
இரு நிலம் மீதில் எளியனும் வாழ....எனது முன் ஓடி வர வேணும்!
எனது முன் ஓடி வர வேணும்! முருகாஆஆஆ!

Thursday, November 04, 2010

ஷஷ்டி விரதம்

முருகனுக்குரிய மூன்று விரதங்களில் (செவ்வாய்க்கிழமை விரதம், கார்த்திகை விரதம், ஷஷ்டி விரதம்) மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. மாதம் தோறும் ஷஷ்டி திதியிலும் விரதம் இருக்கலாம்.


சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதற்கு “சஷ்டியில் விரதம் இருந்தால் அதன் அருள் அகப் பையில், அதாவது உள்ளத்தில் வரும்” என்பதுதான் உண்மையான பொருள். இவ்விரதம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகத்தான விரதமாகும்.




முதல் நாள் அமாவாசை முதல் தொடர்ந்து ஆறுநாட்களும் அனுசரிக்கப்படும் இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர். சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர். விரத நன்னாளில் தர்ப்பை அணிந்து சங்கல்பம் செய்துகொண்டு ஆறு நாட்களும் முழு உபவாச விரதமிருந்து இறுதி நாளில் தர்ப்பையை அவிழ்த்து தாம்பூலத் தட்சணையுடன் அர்ச்சகரிடம் அளித்து விரதத்தை நிறைவு செய்பவர்களும் உண்டு. இவர்களில் பலர் முருகன் ஆலயத்திலேயே தங்கி விரதம் இருப்பர். உண்ணா நோன்பு மட்டுமல்லாமல் மௌன விரதம் இருப்போர்களும் உள்ளனர்.



விரத காலத்தில் முருக நாம ஜெபம், கந்த புராணம் படித்தல் நற்பலன் அளிக்கும். ஆறாம் நாள் கந்தஷஷ்டி அன்று துயிலாமல் விழித்திருந்து முருகன் பெருமைகளை நினைந்தும், பேசியும் வழிபடுதல் சிறப்பு. முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கந்த ஷஷ்டி தினத்தில் மட்டுமாவது உபவாசம் இருத்தல் நன்மையைத் தரும். ஏழாம் நாளன்று நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து களி செய்து உண்டு விரதத்தை முடிக்கலாம். ஆறு நாள்களும் கந்த புராணத்தை முழுமையாகப் படிக்கலாம். கந்தர் ஷஷ்டிக் கவசம், ஸ்கந்த குரு கவசம், ஷண்முக கவசம் இவற்றைப் பாராயணம் செய்யலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, வேல் மாறல் பதிகம், திருவடித் துதி முதலியவற்றைப் பாராயணம் செய்தலும் சிறப்பு தரும். ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கத்தை உள்ளன்போடு பாராயணம் செய்ய எண்ணிய காரியம் வெற்றி பெறும்.






விரத பலன்




ஆறு நாள்களும், ஆறு காலங்களும் உண்மையாக முருகனை பூஜித்து வழிபடுவோருக்கு வேண்டு வரம் கிட்டும் என்பது மட்டுமில்லை, முருகனது அருட்காட்சியும் கிடைக்கும். கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டு, வலன் என்ற அசுரனை இந்திரன் அழித்தான் என்பதிலிருந்தே இதன் பெருமையை நாம் தெரிந்து கொள்ளலாம்.





ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரஹண பவ





செவ்வாய்க்கிழமை, அங்காரகனுக்கு உரிய நாள். அங்காரகனின் மூலக் கடவுள் முருகன் என்பதால், இந்தத் தோஷம் [செவ்வாய் தோஷம்] உள்ளவர்களும், பொதுவாகவே முருக பக்தர்களும், அங்காரகனின் கடுமையிலிருந்து விடுபட 'செவ்வாய்க்கிழமை விரதம்' முருகனுக்கென நேர்ந்து கொள்வார்கள்.


மற்றபடி சஷ்டி விரதத்தில் சொல்லியிருப்பது போலவே ஒரு பொழுது மட்டும் உணவுண்டு, முருகனுக்கான தோத்திரங்களைப் படிப்பதன் மூலம் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.

எத்தனை வாரங்கள் வேண்டுமானாலும் தொடரலாம்.

நன்றி : வி.எஸ்.கே

Monday, October 18, 2010

இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

ஆன்மீகத்தைப் போயும் போயும், "சினிமாத்தனமாக" எழுதுவதாக முன்பெல்லாம் ஒரு அன்பான குற்றச்சாட்டு உண்டு, என் மீது! :)
ஆனால் இந்தக் குறிப்பிட்ட சினிமாப் பாட்டு போல், நான் தமிழாய் நேசிக்கும் அருணகிரியின் திருப்புகழ் கூட என்னைக் கசிய வைத்ததில்லை!

* எத்தனையோ திருப்புகழ் உண்டு! = நாத விந்த கலாதீ நமோநம, முத்தைத் தரு பத்தித் திருநகை, பாதி மதி நதி போது மணி சடை, கலை மேவும் ஞான பிரகாசா, அயெனனவாகி அரியெனவாகி...
* எத்தனையோ கந்த கவசங்கள் உண்டு! = கந்த சஷ்டிக் கவசம், சண்முக கவசம், ஸ்கந்த குரு கவசம்...

* எத்தனையோ நல்ல மரபு இசைப் பாடல்கள் உண்டு = பெ.தூரன், தண்டபாணி தேசிகர், ரமணி அம்மாள், முருகனைப் பாடவென்றே பிறந்த சீர்காழி கோவிந்தராஜன், TMS, கே.பி. சுந்தராம்பாள்!!!
* மெல்லிசையில் கூட சுசீலாம்மா, வாணி ஜெயராம் பல அழகிய முருகன் பாடல்களைப் பாடி உள்ளனர்! (முருகனருள் வலைப்பூவின் வலப்பக்கம் பாருங்கள்)

ஆனால்,
ஆனால்,
ஆனால்....
எந்தச் சந்தப் பாடலும், இந்தக் கந்தப் பாடல் போல் கசிய வைக்குமோ?

MS ராஜேஸ்வரி என்பவர் பாடியது! இன்றைய பல பேருக்கு. இவர்கள் யார் என்று கூடத் தெரியாது! ஆனால் இந்தப் பாட்டு???

எனக்கு மிகுந்த தாபமாக இருக்கும் போது, இந்தப் பாட்டில் உள்ள ரெண்டே வரி தான் மனதிலும் வாயிலும் ஓடிக்கிட்டே இருக்கும்!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

என் முருகனோடு பேசுவது போலவே இருக்கும்!
அவன் சட்டையை உலுக்கி, டேய் முருகா முருகாஆஆஆ என்று அவனை இரு கன்னத்திலும் அறைந்து,
அறைந்த கையோடு அவன் கையும் கோர்த்து, அவன் தோளில் சாய்ந்து கொள்வது போலவே இருக்கும்!

இன்று அதே ரீங்காரத்தில்....நான்.....இதோ!



பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
(அம்மாவும் நீயே!)

தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!
மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

படம்: களத்தூர் கண்ணம்மா
இசை: ஆர்.சுதர்சனம்
குரல்: எம்.எஸ்.ராஜேஸ்வரி
வரி: வாலி



எல்லாருக்கும் தெரிந்த தகவல், குழந்தை கமலஹாசன் நடித்த முதல் படம் இதுவென்று!
இதை வாலியா எழுதினார் என்ற சந்தேகம் எனக்கு வருவதுண்டு! இப்படிச் சாகா வரம் பெற்ற பாடலாகி விட்டதே!

இதைப் பாடும் எம்.எஸ்.ராஜேஸ்வரி, குழந்தைக் குரல் பாட்டுக்கென்றே சொந்தமானவர்!
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா, மண்ணுக்கு மரம் பாரமா, படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு போன்ற பாடல்கள் பிரபலமானவை! ஆனால் அக்காலக் குழந்தைப் பாடகரான இவர் பாடிய இக்கால இன்னொரு பாட்டும் மிகவும் பிரபலம் = நான் சிரித்தால் தீபாவளி!


முருகா...என் கண்ணாளா...
நான் உன் சட்டையை உலுக்கிக் கேட்கட்டுமா?
கையால் உன் கன்னத்தில் அறைந்து கேட்கட்டுமா?
இதழாலும் உன் கன்னத்தில் அறைந்து கேட்கட்டுமா?
உன் தோளில் சாய்ந்து கொண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே கேட்கட்டுமா?

ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

Saturday, October 16, 2010

குன்றெங்கு இருந்தாலும்....!


குன்றெங்கு இருந்தாலும்

சென்றங்கு அருள்பவனே
என்றென்றும் எம்மனதில்
குன்றாது நிற்பவனே
ஆறுமுக ஆண்டவனே!
என்னப்பன்
ஆறுமுக ஆண்டவனே!

எம் எண்ணத்தை
ஒன்றாக்கி
அதையே நான் குன்றாக்கி
வைத்துள்ளேன் நீ குடிகொள்ளவே!
வேலா!
நீ இங்கு குடிகொள்ளவே!

குன்றெங்கு இருந்தாலும்
சென்றங்கு அருள்பவனே...!

நானென்ற ஒன்றிங்கு
இல்லாமல் செய்திட்டாய்!
நீயன்றி வேறொன்றாய்
ஏதொன்றுமில்லாமல்
எனையே நீ ஆட்கொண்டாயே!
முருகா!
எனையே நீ ஆட்கொண்டாயே!

அன்னையாய் நீயிருந்து
அன்பை ஊட்டுவித்தாய்!
அப்பனாய் நீயிருந்து
அறிவை ஊட்டுவித்தாய்!
எனக்கு எல்லாமும் நீயேயன்றோ!
வேலா!
எனக்கு எல்லாமும் நீயேயன்றோ!

குன்றெங்கு இருந்தாலும்
சென்றங்கு அருள்பவனே...!

எம் சிந்தை ஒருபொழுதும்
உமை அகலாதிருக்கும் வண்ணம்
உம் சிந்தையாய் எனை ஆக்கிவிடு!
இப்பொழுதும் எப்பொழுதும்
முப்பொழுதும்
உம் சிந்தையாய் எனை ஆக்கிவிடு!

உயிரெழுத்து, மெய்யெழுத்து
எல்லாமாய் நீயிருக்க
வெறும் எழுத்தாய் நானிங்கு
உன் பாதச் சரண் தேடினேன்!
முருகைய்யா!
உன் பாதச் சரண் தேடினேன்!

குன்றெங்கு இருந்தாலும்
சென்றங்கு அருள்பவனே...!

(இதை இயற்றியவரும் ஒரு நாமக்கல் கவிஞர்(!?)தான்.)
---------------------------------------------------------------
ஒரு கொசுறுச் செய்தி!
ஒரு ஆங்கிலேய முருக பக்தர் "முருக தாஸ்" கந்த புராணத்தை தன்னோட தளத்தில்அழகா (ஆங்கிலத்தில்தான்) பதிவு செஞ்சி வெச்சிருக்கார்! நீங்களும் படிச்சிப் பாருங்க!

Thursday, October 07, 2010

உனைப் பாடும் "தொழில்"!

இந்தப் பதிவு, நாமக்கல் சிபி என்னும் சிபி அண்ணாவை, முருகனருளில் வாழ்த்தும் பொருட்டு, தாமே பெற வேலவர் தந்ததினால்...

முருகனருள் வலைப்பூவை முதன் முதலில் 2006-இல் துவக்கியவர் இவரே! = அவரே நாமக்கல் சிபி!

அப்பறம் தோழன் இராகவன், குமரன், TRC, VSK, வாத்தியார் ஐயா எல்லாம் இணைய...
அப்பறமா வந்து சேர்ந்த வந்தேறியும் "கந்தே"றியும் தான் அடியேன்! :)

பணி நிமித்தமோ என்னவோ சிபிக்கு! ஆளு பிஸியாகி விட்டார்! இந்தப் பக்கமே வரதில்லை :)
1. இனி, அப்பப்ப வந்து, முருகனருளில் பதிவிடவும்
2. சிபி சேர்ந்துள்ள புதிய அலுவலகத்தில், பணியில் சிறந்து, வளர்ச்சி காணவும்...
முருகனருள் அன்பர்கள் அனைவரும், கூடி இருந்து குளிர்ந்தேலோ வாழ்த்திடுவோம்!

பாடும் பணியே பணியாய் அருள்வாய்! - உனைப் பாடும் "தொழில்"!




பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்! சுட்டி இதோ!

குரல்: TMS
வரிகள்: தமிழ் நம்பி
இசை: VR மாணிக்க விநாயகம்

உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை!
எனை காக்க உனையின்றி யாருமில்லை!
முருகா! முருகா! முருகா! முருகா!

கற்பனையில் வருகின்ற சொற்பதமே - அன்பு
கருணையில் உருவான அற்புதமே!
சிற்பச் சிலையாக நிற்பவனே - வெள்ளைத்
திருநீறில் அருளான விற்பனனே!

முருகா! முருகா! முருகா! முருகா!
(உனைப் பாடும் தொழில் இன்றி)

அமுதம் இருக்கின்ற பொற்குடமே - இயற்கை
அழகு வழிகின்ற எழில் வனமே!
குமுத இதழ் விரிந்த பூச்சரமே - உந்தன்
குறுநகை தமிழுக்கு திருவரமே!

முருகா! முருகா! முருகா! முருகா!
(உனைப் பாடும் தொழில் இன்றி)

Tuesday, September 28, 2010

வை+ணவ முருகா வருகவே! வாராதிருக்க வழக்குண்டோ?

பல சமயங்களில் மனம் பேதலிக்கும் போது, நமக்குன்னே இருக்கும் ஒரு ஜீவன், இங்கே, இப்போது வந்தால், எவ்வளவு இதமா இருக்கும்?
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவேனே! தூங்குவது போல் தூங்கினாலும், அப்பப்போ அவன் மடியிலிருந்தே அவன் முகத்தை அரைக் கண்ணால் முழுங்குவேனே!

-
இப்படியெல்லாம் ஏக்கம் வந்தால், அப்போது என் நெஞ்சில் ஓடும் பாட்டு.......இது தான்!

இந்த முருகன் பாட்டை எழுதியவர் ஒரு "வைணவர்"!
அப்படி-ன்னு உலகம் முத்திரை குத்தி வச்சிருக்கு!
வை+நவமோ, வையாத+நவமோ...
இந்த வைணவத்தை என் முருகன் தழுவிக் கொண்டான்!

அந்தக் கதை அங்கே! அந்தப் பாடல் இங்கே!




பேராதரிக்கும் அடியவர் தம்
பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும்

பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா!!

சேரா நிருதர் குல கலகா,
சேவற் கொடியாய்த் திருச்செந்தூர்த்

தேவா, தேவர் சிறைமீட்ட
செல்வா என்று உன் திருமுகத்தைப்


பாரா மகிழ்ந்து முலைத் தாயார்
பரவிப் புகழ்ந்து விருப்புடன் அப்பா

வா வா என்று உன்னைப் போற்றப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்


வாரா திருக்க வழக்கு உண்டோ?
வடிவேல் முருகா வருகவே


வளரும் களபக் குரும்பை முலை
வள்ளிக் கணவா வருகவே!!



பாடல்: திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்
பாடியது: பகழிக் கூத்தர்

வைணவன் என்று சிலர், இகழிக் கூத்தனாய் இகழ்ந்தாலும்,
வை+நவா என்று அவன், பகழிக் கூத்தனை அணைத்துக் கொண்டான்!

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவேனே!
தூங்குவது போல் தூங்கினாலும், அப்பப்போ அவன் மடியிலிருந்தே அவன் முகத்தை அரைக் கண்ணால் முழுங்குவேனே!
வாரா திருக்க வழக்கு உண்டோ? வடிவேல் முருகா வருகவே!!
பாரா திருக்க அறுமுகம் ஏன்?
பேதையைப் பார்க்க வருகவே!!

Tuesday, September 14, 2010

வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

அரோகரா!! அரோகரா!! அரோகரா!! அரோகரா!!
அரோகரா!! அரோகரா!!

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செய்யும் முக ...... மலராறும்
அரோகரா!!

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்
அரோகரா!!

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்
அரோகரா!!

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும் (இது விராலிமலை திருப்புகழ்)



அரோகரா!!

முருகா! முத்துக்குமரா!! வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

எண்ணங்கள் ஈடேற எங்களுள்ளம்தான் மகிழ
எண்ணை அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----எண்ணை அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

பாசமெல்லாம் பொங்குதப்பா வாசனைப்பொடி அபிஷேகம்,
பாசமெல்லாம் பொங்குதப்பா வாசனைப்பொடி அபிஷேகம்
பாபம் தீர உன்னைக்காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----உன்னைக்காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

மலர்களெல்லாம் உனக்காக மகிழ்வுடனே தேன் சிந்தும்
மலர்கள் எல்லாம் உனக்காக மகிழ்வுடனே தேன் சிந்தும்
தேனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----தேனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

சந்திரனோ சூரியனோ தந்த நிறம் சந்தனமோ,
சந்திரனோ சூரியனோ தந்த நிறம் சந்தனமோ
சந்தனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----சந்தனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

பத்துக் காதம் மணக்குதப்பா! பன்னீரின் வாசமப்பா!!
பத்துக் காதம் மணக்குதப்பா! பன்னீரின் வாசமப்பா!!
பன்னீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----பன்னீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

இளகுதப்பா கல்மனமும் இளையவனே உனைக்காண,
இளகுதப்பா கல்மனமும் இளையவனே உனைக்காண
இளநீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----இளநீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

தனித்து நின்ற இளையவனே,தண்டாயுதம் தரித்தவனே!!
தனித்து நின்ற இளையவனே,தண்டாயுதம் தரித்தவனே!!
தயிரால் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----தயிரால் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

தஞ்சமென்று வருவோர்க்கு வஞ்சமில்லா தருள்பவனே
தஞ்சமென்று வருவோர்க்கு வஞ்சமில்லா தருள்பவனே
பஞ்சாம்ருத அபிஷேகம் காண புண்ணியம்செய்தோம்
நாங்கள்----பஞ்சாம்ருத அபிஷேகம் காண புண்ணியம்செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

பண்டாரம் ஆனதனால் வீபூதி அபிஷேகம்,
பண்டாரம் ஆனதனால் வீபூதி அபிஷேகம்
விபூதி அலங்காரம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----விபூதி அலங்காரம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

புண்ய தீர்த்தம் பல சேர்த்து புனித வேதத் தமிழ்வேதம்
புண்ய தீர்த்தம் பல சேர்த்து புனித வேதத் தமிழ்வேதம்
கும்பாபிஷேகமும் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----பூர்ண அபிஷேகமும் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!!
முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!!
அரோகரா!அரோகரா!!அரோகரா!!! அரகரோகரா!!!




......... சொல் விளக்கம் .........

சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார ...
வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும்,

வெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் ...
பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு முகங்களையும்,

சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் ...
சிறப்பு உற்று ஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு
தோள்களையும்,

நீளும் வரி அளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் ...
நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி ரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும்,

ஆராத காதல் வேடர் மட மகள் ஜீமூதம் ஊர் வலாரி மட மகள் ... முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம் மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய அழகிய பெண்ணாகிய தேவயானையும்,

ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் ...
பக்தர்களின் பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும்,
இடது பாகத்திலும் உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும்,

ஆராயும் நீதி வேலும் மயிலும் ...
நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும் உனது வேலையும் மயிலையும்,

மெய்ஞ் ஞான அபிராம தாப வடிவமும் ...
ஞான ஸ்வரூபியான கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும்,

ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும் ...
மிகக் கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும்
(மேற்சொன்ன அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற வேண்டுகிறேன்.

***

திரு. பித்துக்குளி முருகதாஸ் ஐயாவும் குழுவினரும் பாடிய இந்தப் பாடலையும் வரி வடிவத்தையும் அனுப்பிய திரு. பிரகாசம் ஐயாவிற்கு நன்றி.

Monday, August 23, 2010

அந்தோணி முத்து! என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி!

இந்த நாளில், முருகனருளில் ஒரு அஞ்சலி!
ஊனங்கள் பல இருந்தும், வானங்கள் தொட முடியும் என்பதற்கும்...
எவ்வளவு தோண்டினாலும், தன்னம்பிக்கை சுரக்கச் சுரக்க, சுரக்கும் என்பதற்கும்...
என் கண் முன்னே எடுத்துக்காட்டாய் நின்றவர்...
அந்தோணி முத்து அண்ணா!

இளம் வயதில், அவர் மறைந்த செய்தி, என்னை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது!


இப்பத் தான், நானும் மதுமிதா அக்காவும், சென்னை புழலேரியில், இவர் வீட்டிற்குச் சென்று பார்த்தாப் போல இருக்கு! இளையாராஜா இசையில் உச்சி வகிடு எடுத்து-ன்னு பாடக் கேட்டாப் போல இருக்கு!

காலன்றி, மேல்கொண்டு, தவழ்ந்து தவழ்ந்தே அவர் எங்களை உபசரித்த விதம்...
இல்லத்துக்கு வருவோரை முகத்தாலேயே எப்படி மனங்குளிர வரவேற்கலாம் என்பதை நண்பர்களை விட இவரிடத்தில் தான் தெரிந்து கொண்டேன்!

என்னவொரு முனைப்பு, தன்னார்வம், சுய சம்பாத்தியம், பொது முனைப்பு!
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்! - இந்தக் குறளுக்கு உரை = அந்தோணிமுத்துவின் வாழ்வு!

இதோ, அந்தோணி அண்ணன் பற்றிய இசை இன்பப் பதிவு!
அவருக்குப் பிடிச்ச சிவரஞ்சனி பாட்டு பத்தி அவரே எழுதின பதிவு இங்கே!

ஊரெல்லாம் ஓரோர் பேர் சொல்லி என்னை அழைக்க...நீங்கள் மட்டும் "விஷ்ணு" என்று எதற்கு அழைத்தீரோ? அறியேன்!
ஆனால் இதோ உங்கள் "விஷ்ணுவின்" துதிகள்! - பிதாவே, இவர் மனத்தை சொஸ்தம் பண்ணி ஆற்றும்! இணையடி நீழலில் ஆற்றும்!

என் முருகா.....அந்தோணிமுத்து அண்ணாவின் ஆவி குடி இருக்க...ஆவி-நன்-குடி அருள்வாய் தானே?
Father, into thy hands I commit my spirit!" - Luke 23:46
Mr. Antonimuthu passed away on August 23, 2010 at 10.00 a.m. due to stomach tumor and wheezing in Chennai.
Funeral Mass offered at 11.00 a.m. on August 23, 2010, at Peria Nayagi Chapel in his native village, Peria Nayagi Nagar, Villupuram District 605702.



ஆவி குடி இருக்க - ஆவினன் குடி! இதுவே இந்த வார முருகனருள் பாடல்! சீர்மிகு சீர்காழியின் குரலில்...இதோ


ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி - அங்கே
கொலுவிருக்கும் அழகுத் திருவடி
(என் ஆவி குடியிருக்கும்)

பாவங்களைப் போக்கும் பால் காவடி
தேன் பஞ்சாமிருதம் இனிக்கும் குகன் சேவடி
(என் ஆவி குடியிருக்கும்)

சேவல் எழுந்தாடும் வெற்றிக்கொடி
சேந்தன் திருப்பாதம் பற்றிப்பிடி
வேல் வந்து வரவேற்கும் வா இப்படி
கேளாய் நீ நெஞ்சே என் சொல் படி
(என் ஆவி குடியிருக்கும்)

நீல மயில் ஆடும் கோயில் படி
நித்த நித்தம் காணும் நிலை எப்படி
காலம் எல்லாம் நினைந்து கண்ணீர் வடி
வாழ்வு தரும் முருகன் வண்ணப்பொற் கழலடி
(என் ஆவி குடியிருக்கும்)

Tuesday, August 03, 2010

குவா குவா! குகா குகா! - ஊமைச் சிறுவன் கதை!

குழந்தை பிறக்கலையே என்ற கவலை ஒரு சிலரை வாட்டினால், குழந்தை பிறந்தும்......ஒரு சிலரைக் கவலை தொத்திக் கொள்ளும்!
ஒரு ஜீவன் உலகை எட்டிப் பார்ப்பதை வைத்துத் தான், எத்தனை எத்தனை இன்ப உணர்ச்சிகள், துன்ப உணர்ச்சிகள்! ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில், ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர..."நான்" என்றே இருந்த மனிதன், "நாம்" என்று திசை மாறுகிறான்! :)

தாமிரபரணிக் கரை ஊரான ஸ்ரீவைகுண்டம் என்னும் அழகிய தலத்தில் ஒரு சைவ வேளாளக் குடும்பம்! சண்முக சிகாமணிக் கவிராயர்-சிவகாம சுந்திரி அம்மை!
குடும்பமே தமிழ்ப் புலமையிலும் முருகனிலும் தான் நடந்து கொண்டிருந்தது! அந்த வீட்டின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு சத்தம்...குவா-குவா! குகா-குகா!

குமரகுரு என்று பேரிட்டுக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த குழந்தைக்கு, பதி்லுக்குக் கொஞ்சத் தெரியவில்லை!
"அம்மா, அப்பா" என்று அழைத்தால், அதைக் கேட்க, ஏங்கும் காது!
ஆனால் "மா, பா" என்று அழைத்தாலே போதும், அதாவது நடக்காதா என்று ஏங்கியது மனம்! - குழந்தைக்குப் பேச்சு வரவில்லை!

அட, எல்லாக் குழந்தையும் முதல் ஆண்டிலேயே பேசி விடுகிறதா என்ன? அதன் போக்கில் விட்டுப் பார்ப்போம் பார்ப்போம் என்று பார்த்தது தான் மிச்சம்.....கேட்க ஒன்றும் மிச்சமே இல்லை! ஐந்து ஆண்டுகள் கழித்துத் தெரிந்தது...குழந்தை "ஊமை"!



இந்த "ஊமை" என்கிற சொல்லே பிடிக்கலை! அது என்ன "ஊமை ஊரைக் கெடுக்கும்" என்று பழமொழி? நல்லாவே இல்லை! வேறு ஏதாச்சும் நல்ல சொல் உள்ளதா?

பார்வையற்றோர், காது கேளாதோர் என்பது போல்...வாய் பேசாதோர் என்று அழைப்பது ஓரளவு மரியாதையாக இருக்கும்!
விழிப்புலனர்கள், செவிப்புலனர்கள், வாய்ப்புலனர்கள் என்று அழைக்கலாமோ? Physically Handicapped-ஐ விட, Physically Challenged என்பது போல், இது பிடிச்சிருக்கு!

நடுங்கிப் போன குமரகுருவின் பெற்றோர் மருத்துவரை நாடினர்!
பிறவிப் பலனாய் வாய்த்ததை பிற மருத்துவர் தீர்க்க முடியுமா? பிறவி மருத்துவன் அல்லவா தீர்க்க முடியும்!
யார் அவன்? = என்னை...செந்தூர் முருகா சேர்த்துக் கொள்!

மடியேறிய குழந்தையுடன் படியேறினாள்! முருகன் படியேறினாள்! காதலன் வீட்டுப் படி இல்லை என்று ஆனாலும், முருகன் வீட்டுப் படி இல்லை என்று ஒருநாளும் ஆகுமா?

அந்தச் செந்தூர் வீட்டுப் படியிலேயே படியாய்க் கிடந்தனர் பெற்றோர்!
படியாய்க் கிடந்து, உன் பவளவாய் காண்பேனே என்பது ஆழ்வார் பாசுரம்!
இங்கோ, படியாய்க் கிடந்து, மகன் பவளவாய் பேசக் காண்பேனே என்று ஆயிற்று பெத்த வயிறுப் பாசுரம்!

திருச்செந்தூர் தரையிலே வளர்த்தி விட்ட குழந்தை, முருகனருள் முன்னிற்க, வாய் அசைக்கத் தொடங்கியது! அலை அசைக்கும் திருச்செந்தூரில் வாய் அசைக்க, வந்து சேய் அசைக்க, கண்டு தாய் அசைக்க, தமிழ் அசைக்கத் தொடங்கியது!

பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமுங் காணாத போதமாய்...

என்று கந்தர் கலி வெண்பா பிறக்கத் துவங்கிற்று! பிள்ளைக் கலி தீர வந்த குழந்தை, கந்தர் கலியைப் பாடத் துவங்கிற்று!

(புத்தேள் = இறைவன்; தேறு அரிய = தெளிய முடியாத; பழமறை = பழமையான மறைகள்;
தேமேவு = இறைவனை சார்ந்த; நாதமும் = நாத தத்துவம்; நாதாந்தம் = விந்து தத்துவம்
நவை = குற்றம்; போதமும் காணாத போதம் = அறிவால் அறிய முடியாத இறைவன்!)


சிறுவனுக்கு முன்பு வாய் மூடி இருந்தாலும், அவன் செவி மூடவில்லை போலும்!
தந்தை சண்முக சிகாமணிக் கவிராயரின் தமிழை, வீட்டில் கேட்டுக் கேட்டே வளர்ந்த குழந்தை, இன்று பாட்டு பாட்டே என்று பாடத் துவங்கி....பையன் குமரகுரு, சில நாளில், குமரகுருபர சுவாமிகள் ஆனார்!



துறவு கொள்ளும் முன், தன் குருவான தருமபுர ஆதீனத்தின் சொற்படி, பல தலங்களுக்குச் சென்ற குமரகுருபரர்...
* மதுரையில் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் பாடினார்!
* வைத்தீஸ்வரன் கோயிலில் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழைப் பாடினார்!
* தில்லையில் சிதம்பரக் கோவை பாடினார்!
* பின்பு துறவு பூண்டு, காசிக்குச் சென்று, சகலகலாவல்லி மாலை பாடினார்!
பிள்ளைத்தமிழ் நூல்களில் எல்லாம், இவரின் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே, இலக்கிய வளத்துக்காகப் பெரிதும் கொண்டாடப்படுகிறது!

தில்லையில், பல சைவ அன்பர்கள், இவரிடம் ஒரு வித்தியாசமான வேண்டுகோள் வைத்தனர்!
தமிழில் உள்ள யாப்பருங்கலக் காரிகை என்னும் பிற்காலத் தமிழ் இலக்கண நூல்! அதில் சமணக் கருத்துக்கள் உள்ள உதாரணச் செய்யுள்கள் இடம் பெறுவதாக அவர்கள் கருதியதால், அதை மாற்றி, அந்நூலின் இலக்கணங்களுக்குச் சைவ விஷயமாகச் செய்யுள் அமைத்துத் தர வேண்டினார்கள்! குமரகுருபரர் முதலில் தயங்கினாலும், பின்னர் எழுதித் தந்தது தான் சிதம்பரச் செய்யுள் கோவை!

இவர் வாழ்வில், சிங்கத்தின் மேலேறிச் சென்று, டில்லி பாதுஷா ஒளரங்கசீப் மன்னரைச் சந்தித்ததாகவும், இந்துஸ்தானி மொழியிலேயே பேசி, அவரிடம் கொடைகள் பெற்று, காசியில் குமரகுரு மடம் அமைத்ததாகவும் சொல்லுவார்கள்!

ஆனால் இது வரலாற்றில் எவ்வளவு தூரம் நிற்கும் என்று தெரியவில்லை!
ஆனானப்பட்ட ஒளரங்கசீப் சிவாலயத்துக்கு நன்கொடை அளித்தாரா? அவர் சிசியா (Jiziya) என்னும் மத வரியைப் போடாமல் விட்டாலே போதும் என்று இருந்த காலம்! அதனால், இப்படியான அதீத சமயப் புனைவுகள் தேவை இல்லை!

மேலும், திருமலை நாயக்கர் முன்னிலையில், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடியதாகவும் இன்னொரு குறிப்பு உண்டு! ஆனால் நாயக்கரோ 1659-லேயே மறைந்து விட்டார்! ஒளரங்கசீப் ஆட்சிக்கு வந்ததே அப்போது தான்!
அப்படி இருக்க, அதற்கு முன்னரே நாயக்கர் முன்னிலையில் பாடி, உடனே காசி யாத்திரையும் சென்று, டில்லி பாதுஷாவைச் சந்தித்தார் என்பதும் ஒட்டாது!

எனவே, டில்லி பாதுஷா என்று குறிப்பிட்டாலும், அது தாரா ஷிகோ-வாக இருக்க வாய்ப்புண்டு!
இவரே ஷாஜகானின் மூத்த வாரிசு! நல்ல சமயப் பொறையாளர்! இவரிடம் குமரகுருபரர் மான்யம் வாங்கி இருக்கலாம்! பின்னாளில், அண்ணன் தாரா ஷிகோ ஒரு முஸ்லீமே அல்ல என்று அறிவித்த ஒளரங்கசீப், தாராவை ஓட ஓட விரட்டி, காட்டிக் கொடுக்க வைத்து, கொன்றது எல்லாம் வரலாற்றுப் பிரசித்தம்!

எனவே, குமரகுருபரர் போன்ற நல்-அடியவர் கதைகளில், ஒட்டாமல் இருக்கும் விஷயங்களைத் திருத்தி எழுதுவது, நாளைய தலைமுறைக்கு நன்மையே பயக்கும்! இதை இன்றைய சமயப் பெரியவர்கள், எதிர்ப்பு என்று எண்ணாது, புரிந்து கொள்ள வேணும்!


காசியில் இன்றும் குமரகுரு மடம் உள்ளது! அங்கே மடம் அமைத்துத் தங்கி, வடகாசியில் தென்மொழித் தொண்டாற்றி வந்தார் குமரகுரு!

இந்துஸ்தானி/இந்தியிலும் புலமை கொண்டவர் ஆதலால், அம்மொழிகளிலும் உபன்னியாசம் நிகழ்த்துவார்! அப்போது ஆற்றியது தான் கம்பராமாயணச் சொற்பொழிவு! = கேட்டவர் துளசிதாசர்! பிறந்தது துளசி ராமாயணம்!

வடமொழி ஆதிக்கம் மிகுந்த அந்தக் காலக் கட்டத்திலேயே, பெருமாள் கோயில்களில்...
* தமிழ்ப் பாசுரங்கள் ஓதி முன்னே செல்ல,
* தமிழை அந்த இறைவனே பின் தொடர,
* அதற்குப் பின்னர் தான் வடமொழி வேதங்களையே ஓதி வந்தனர்!
இந்தக் காட்சிகளைக் கண்ட குமரகுருபரர் மிகவும் லயித்துப் போய்,
இது போன்ற ஒரு நிலை, தில்லையில் வராதா, தமிழ் கடவுளான முருகன் கோயில்களில் தமிழ் என்று முன் செல்லுமோ என்று ஏங்கினார்! அப்போது அவர் வாய் விட்டுப் பாடியது தான் - "பச்சைத் தமிழின் பின் சென்ற பசுங் கொண்டலே!!"

காசியிலேயே குமரகுருபரர் நெடுநாள் வாழ்ந்து, தமிழ்த் தொண்டாற்றி, பின்னர் சிவனடியைச் சேர்ந்தார்!
அன்னாரின் பிள்ளைத் தமிழ் = பிள்ளையின் மீதும், தாயின் மீதும்!
* ஒன்று முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்!
* இன்னொன்று மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்!
இரண்டுமே தமிழ் இலக்கியத்தின் விலைமதிக்க முடியாத பெருஞ்சொத்து! அரசு குமரகுருபரர் நினைவாக வெளியிட்ட அஞ்சல் தலை இதோ!



சரி, எதுக்கு இன்னிக்கி குமரகுருபரர் பற்றி மாதவிப் பந்தலில் பதிவு-ன்னு பாக்கறீங்களா? அவர் குருபூசை-நினைவு நாள் ஏதாச்சும்? இல்லை!
கீழே Youtube காணொளியைப் பாருங்க! - தாய்ப்பால் கொடுத்தாள்! தமிழ்ப் பால் கொடுத்தான்!!


தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தி - தனிக்கருணைத்
தமிழ்ப் பால் கொடுத்தான் தமிழ் முருகன்!
வாய்ப்பால் `நான்பாடும் பழந்தமிழில் - பாடத் தொடங்குகிறேன்
ஆடும் மயில் வேலன் அருள்!!

தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த
முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்! - பல்
முளைக்கு முன்னே எனக்குக் கவிதை தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!

ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான் - கலை
ஞானக்கண் திறந்து வைத்து தமிழும் தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!


ஆங்கார சக்தி என்னும் ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு கந்தன் வந்தான்!
என்றும் நீங்காத செந்தமிழில் கவிதை தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!


வந்தகலி தீர்ந்ததென்று கந்தர்கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறுகவிச் சரணம் தந்தேன்!
அந்தக் கந்தனவன் தனது திருச்சரணம் தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!


வரிகள்: கண்ணதாசன்
குரல்: ராதா ஜெயலட்சுமி (ராதா ஜெயலட்சுமி பாடிய இதர திரைப்பட முருகன் பாடல்கள், இதோ! ; மனமே முருகனின் மயில் வாகனம் என்ற பாட்டு மிகவும் பிரபலமானது!)
இசை: கே.வி. மகாதேவன்
படம்: ஆதிபராசக்தி

Monday, July 19, 2010

முருகன் - பார்த்தால் பசி தீருமா? பசி வருமா??

இன்னிக்கு TMS குரலில், ஒரு வித்தியாசமான பாட்டை, கிட்டத்தட்ட கிறிஸ்துவ ட்யூன்-இல் இருக்கும் முருகன் பாட்டைக் கேட்போம்! :)
ஓப்பனிங் பீஸ், ஒரு பழைய தமிழ்ப் பாட்டு - சிவாஜி படப் பாட்டு போலவே இல்ல? என்ன சினிமாப் பாட்டு-ன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்! :)

முருகனைப் பார்த்தால் பசி தீருமா? பசி வருமா??
பார்த்தால் பசி தீரும் என்பார்கள்!
ஆனால் எனக்கு, அவனைப் பார்க்கப் பார்க்க, பசி தான் இன்னும் அதிகமாகும்... :)

பின்னே? படையலில் வச்சிருக்கும் தேன், தினைமாவு, அப்பம், அதிரசம் - இதெல்லாம் பார்த்தால்?
இதெல்லாம் கூட சமாளிச்சிறலாம்...
ஆனால் அவன் இதழ்க் கோட்டோரம் அந்தச் செழும்-செவ்-இதழ்கள்...அதைப் பார்த்தால்...பசி அல்லவோ அதிகமாகிறது? :) பாட்டைக் கேட்டுக்கிட்டே படிங்க!

பன்னிரு விழி அழகை, முருகா
பார்த்தால் பசி வருமா? - உன்

பனிமொழி வாய்த் தமிழை, முருகா

கேட்டால் துயர் வருமா?

(பன்னிரு விழி அழகை)

கண் இரண்டு இருந்தென்ன - உன்
கதிர்வேல் அழகைப் பாராமல்?

கால் இரண்டு இருந்தென்ன - உன்

குன்றத்தில் வந்து சேராமல்?

(பன்னிரு விழி அழகை)

பொன் பொருள் எதற்காக - உன்
புன்னகை இன்பம் இல்லாமல்?

என்னுயிர் எதற்காக - உன்

இணையடிப் போற்றிக் கொள்ளாமல்?
(பன்னிரு விழி அழகை)

ஓசைகள் எதற்காக - ஓம்
ஓம் என்று
ஒரு தரம் பாடாமல்?
ஆசைகள் எதற்காக - உன்
அருள் பெறும் வழியை நாடாமல்?

(பன்னிரு விழி அழகை)

முருகா ... முருகா ...
முருகா ... முருகா ...



உன் அருள் பெறும் வழியை நாடாமல், ஆசைகள் எதற்காக? என்கிறாரே! ஆசை வேணும்-ங்கிறாரா? வேணாம்-ங்கிறாரா?
ஆசையை ஒழி! ஆசையே துன்பத்துக்குக் காரணம்-ன்னுல்ல சொல்லுவாங்க?

அருள் பெறும் வழியை நாடாமால், கண்ட கண்ட ஆசை இருந்தால், அப்போது பயனில்லை!
ஆனால் அவன் அருளை நாடி, அதையே முதல் முதல் ஆசையாய், தலையாய ஆசையாய் வைத்து விட்டால், மத்த ஆசை எல்லாம் இருந்தாலும், அதெல்லாம் நம்மை ஒன்னும் செய்யாது விட்டு விடும்! :)

அவன் திருமேனி மீது அதிக ஆசை வையுங்கள்! மற்ற ஆசைகள் எல்லாம் அதற்கு அப்புறம் தான் என்று வைத்து விடுங்கள்! அப்படி வைத்து விட்டால்.....
முருக ஆசையே மேலோங்கி நிற்கும்!
இதர பருக ஆசையெல்லாம் அதன் பின்னால் தான் நிற்கும்!

நான் ஆசையை ஒழிக்க மாட்டேன்!
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!

Friday, July 16, 2010

ஈழம் - கதிர்காமம் - ரமணி அம்மாள்!

ஈழத்தில் இன்று பலவும் முடிந்து விட்ட கோலம்! ஆனால் இன்னும் முடியாது முகாம்களில் தவிக்கின்ற கோலமும் கூட!
* முன்னது...கடந்த காலம் = உயிர் கடந்த காலம்!
* பின்னது...நிகழ் காலம் = உயிர் நிகழும் காலம்!

இருக்கும் இந்த உயிர்களையும், கடந்த காலமாய் ஆக்கி விடாது...
ஐ.நா-வின் அண்மைய ஈழ முயற்சிகள் பலன் அளிக்க வேணுமாய்...
பரமனையும் முருகனையுமே வேண்டிடுவோம்!

முருகனுக்கு ஆறு வீடுகள் இருப்பது போல், முகாம்களில் இருப்பவர்களுக்கும் வீடுகள் உள்ளன அல்லவா?
அவர்கள் எல்லாம், தம் ஒரு வீடு திரும்ப, ஆறு வீடு முருகன், மனம் வைத்தே ஆக வேண்டும்! மனம் வைத்தே ஆக வேண்டும்!!

வீடேறி வந்து நின்று, வேண்டியவர்களால் விரட்டப்பட்டால் அல்லவோ, வீட்டின் அருமை தெரியும்! அந்த அருமையைத் தெரிந்து கொள் என் முருகா!

இன்று முருகனருள் வலைப்பூவில்...
ஏழாம் படை வீடு என்று சிலாகிக்கப்படும் கதிர்காமம்=ஈழத்து முருகன்!

ஈழத்து ஆலயங்கள்



ரமணி அம்மாள் பற்றியும், அவர் முருகன் பாடல்கள் பலவும் அவ்வப்போது முருகனருள் வலைப்பூவில் இட்டு வந்துள்ளேன்!
* அம்மனுக்கு ஒரு பெண் பாடகர் = எல்.ஆர்.ஈஸ்வரி என்றால்,
* முருகனுக்கு ஒரு பெண் பாடகர் = ரமணி அம்மாள்!

மரபு இசை நுணுக்கம் உள்ளவர்! அதே சமயம் மக்களோடு மக்களாக எளிமையாக, கும்மாளமாகப் பாடக் கூடியவர்! கே.பி.சுந்தராம்பாள் போலவே வெங்கலக் குரல் அம்மாளுக்கு! கூடவே நம்மையும் பாட வைப்பார்!

திரைப்படங்களிலும் எம்.எஸ்.வி/குன்னக்குடி இசையில் பாடியுள்ளார்!
வேல் முருகா வேல் முருகா...வேல்ல்ல்ல்ல்ல்-ன்னு இவர் உச்ச கட்டத்தில் பாடும் போது, மைக் செட்டே அதிரும்! குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் பாட்டைத் தெரியாதவங்க இருக்க முடியாது! அவ்வளவு சிறப்பு!

ரமணி அம்மாள் பாடிய ஈழம்-கதிர்காமப் பாடல் தான் இன்றைய பதிவு!



கதிர்காமம், ஈழத்தின் தென் கிழக்குக் கோடியில் உள்ளது! எப்படி தமிழ்நாட்டில் திருச்செந்தூர் உள்ளதோ, அதே போல! ஆனால் கடலோரத்தில் இல்லை! கடலுக்குச் சற்று அருகே!
தமிழ்ப் பகுதிகளின் தென் கிழக்கு மாகாணத்தின் வால் பகுதியில் கடைசியாக ஒட்டிக் கொண்டு இருக்கும் ஊர்! இதைச் சுற்றிலும் சிங்களப் பகுதிகள் தான் அதிகம்!

முருகன் என்று நாம் பரவலாகச் சொன்னாலும், மொத்தம் மூன்று மதங்கள் சங்கமிக்கும் "புதிரான-புனிதமான" இடம் தான் இந்தக் கதிர்காமம்!
* தமிழ் = முருகன்!
* பெளத்தம் = "கதிர"தேவோ என்னும் மக்கள் வீரன்; போதி சத்துவர்-மகா சேனா ஆகியோரின் காலடி பட்டதாகச் சொல்வோரும் உண்டு!
* இஸ்லாம் = அல் கதிர் என்னும் இறைத் தூதர் மற்றும் வீரர் இஸ்கந்தர்; இருவரும் ஞான ஊற்றினைத் தேடிய இடம், அல் கதிருக்குத் தான் அகப்பட்டது என்பது வழக்கு; அதான் "கதிர்"காமம்!

இந்த மூன்று ஆலயங்களும் ஒன்று சேர்த்தே, "கதிர்காம தேவளே" என்று தற்போது அழைக்கப்படுகிறது!


கதிர்காமத்தை ஒட்டி ஏழுமலைகள்! ஆனால் முருகன் மலை மீது இல்லை!
முல்லைத் தெய்வமாக, காடும் காடு சார்ந்த இடத்தில் வசிக்கின்றான்! :)

குன்று இருக்கும் "இடம் எல்லாம்" குமரன் இருக்கும் இடம் என்று ஒரு நயத்துக்குச் சொன்னாலும்...இதோ...இந்தக் குறிஞ்சித் தெய்வம், கதிர்காமத்து முல்லைக் காட்டில்!
அருகில் மாணிக்க கங்கை ஆறு பாய்கிறது! இயற்கை அழகு கொஞ்சும் இனிய தொட்டிலில் தான், நம் அழகன் முருகனும் இளைப்பாறுகிறான்!

இந்த மூன்று மதங்களின் மக்கள் மட்டும் அல்லாமல், வேட்டா (வேட) என்ற பழங்குடி இனத்தவருக்கும் இதுவே கோயில்! இவர்களே இலங்கையின் ஆதி குடிகள்!
வள்ளிமலை வேடர்கள்-வள்ளியின் கதை போலவே தான் இவர்களின் கதையும்! இவர்களின் முருகனின் பெயர் = "கந்தே யாகா"= மலைகளின் ஆவி! தங்கள் குலப் பெண்ணான வள்ளியின் புகுந்த வீடே இவர்களின் கதிர்காமம்!

மற்ற இந்து ஆலயங்களில் இருப்பது போல், கதிர்காமத்தில் முருகனுக்குக் கருவறைச் சிலை கிடையாது! வேல் வழிபாடும் கிடையாது!
பின்னால் ஒரு எந்திரமும், முன்னால் ஒரு துணித் திரையும் தான் கருவறை!
அந்தத் திரையில் உள்ள வள்ளி-முருகன்-தேவயானையே மூலவர்!


கருவறையில் உள்ள அறுகோண எந்திரம், கதிர்காமத் தேவரின் அரு-உருவமாகக் கருதப்படுகிறது! அதைப் பெளத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் மூவருமே வழிபடுகிறார்கள்!

அவரவர் விழாக்களில் அது புறப்பாடும் கண்டருள்கிறது! பெளத்தர்களும் தங்கள் கிரி விஹாரத்தில் இதை எழுந்தருளப் பண்ணிப் பூசிக்கிறார்கள்!

முருகன் திரையில் இருக்க, திரைக்குப் பின்னுள்ள யந்திரத்துக்கு, ஒரு இஸ்லாமியர் பூசை செய்வதைக் கற்பனை செய்து பாருங்கள்! ஆகா!
புத்த பிக்குகள் முருகனின் திரைச்சீலைக்கு முன்னால் அமர்ந்து பூசிப்பதையும் மனக் கண்ணால் பாருங்கள்! ஆகா!

* "கதிர்காமத் தேவன்" யார்? தமிழ் முருகனா? பெளத்த தேவனா? இஸ்லாமிய இஸ்கந்தரா? = யாருக்கு வேணும் அதெல்லாம்?
* ஒரு இஸ்லாமியர் என்னவாய் நினைத்துக் கொண்டு, அந்தத் திரையின் முன்னால் நிற்பார்? = யாருக்கு வேணும் அதெல்லாம்?

அவன், என்றுமே "அவன்" தான்!
அவன் முன், யார் என்ன நினைத்துக் கொண்டு நின்றாலும், அவர்கள் அடியவர்களே! - வாழ்க சீர் அடியாரெல்லாம்!


இதோ...ரமணி அம்மாளின் பாடலைக் கேட்டுக் கொண்டே, கதிர்காமத்து பதிவைப் படியுங்கள்! கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே!!

madhavipanthal.podbean.com

ஆடு மயிலே கூத்தாடு மயிலே!
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே!

அருகினில் நின்று அருள் புரியும் குகன் - கந்தன்
அருமையாய் அந்தரங்கத்து இருக்கும் குகன்
கருவிழி வள்ளிமானுக்கு உகந்த குகன் - கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே!

(ஆடு மயிலே)

துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் - கந்தன்
அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன்
வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் - கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே!
(ஆடு மயிலே)

மனமது கனிந்திடில் மருவும் குகன் - கந்தன்
கனவிலும் கண் சிமிட்டிக் காட்டும் குகன்
தனதென தான் பரிந்து பேசும் குகன் - கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே!

(ஆடு மயிலே)

அருகினில் நின்று அருள் புரியும் குகன் - கந்தன்
ஆறுமுகம் கொண்ட சரவண முருகன்
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முருகன் - கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே!!!

(ஆடு மயிலே)


மேலே சொன்ன தகவல் பலவும், படித்தும், கேட்டும், உணர்ந்தும் எழுதியதே! இது வரை நான் கதிர்காமம் சென்றதில்லை....
கால்களால் சென்றதில்லையே தவிர, மனத்தால் பல முறை சென்றுள்ளேன்! எங்கள் வள்ளியைச் சொல்லும் காடும் கழனியும் அல்லவா!

தன்னை ஏற்றுக் கொள்வானா என்று கூடத் தெரியாது, அவனுக்காகவே தன் வாழ்வை அமைத்துக் கொண்டவள்!
பார்க்கவே பார்க்காத...பார்த்தாலும் ஏற்றுக் கொள்வானா என்று கூடத் தெரியாத ஒருவனுக்கு...ஒருத்தி, இப்படிக் காதலாய் நின்று விட்டாளே!

என் பால் நோக்காயே ஆகிலும், உன் பற்று அல்லால் பற்றில்லேன்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால், வேறு அகம் குழைய மாட்டேனே!!

இது...ஒரு கால்...ஒருதலைக் காதல் ஆகி இருந்தால்???
ஐயோ!
எப்படியும் வள்ளி அவனிலே வாழ்ந்திருப்பாள்!
ஆனால் முருகன் தான் தன்னிலே தாழ்ந்திருப்பான்!


கதிர்காமம் பாடல் பெற்ற தலம்! அருணகிரியார் பதினான்கு திருப்புகழ்களாகப் பாடியுள்ளார்!

திருமகள் உலாவும் இருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள் காண்!
மருவும் அடியார்கள் மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண்!

மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர்காமப் பெருமாள் காண்!
அரவு பிறை வாரி, விரவு சடை வேணி
அமலர் குரு நாதப் பெருமாள் காண்!

காண், காண் என்று வரிக்கு வரி காணச் சொல்கிறாரே! ஐயோ! கதிர்காமக் கந்தனை நான் காணும் நாள் எந்த நாளோ???
கதிர்காமம் அழைத்துச் செல்வதாக, முன்பு கா.பி அண்ணாச்சியும் மற்றும் ஸ்வாதியும் சொல்லி இருந்தார்கள்!

எவரும் ஏற்காத என்னைக் கதிர்காமத்து என் முருகனே ஏற்கட்டும்!
வனமுறை வேடன் அருளிய பூஜை - மகிழ் கதிர்காமம் உடையோனே!
இருநிலம் மீதில் எளியனும் வாழ - எனது முன் ஓடி, வரவேணும்!

கதிர்காமத்துறை கதிர்காமத்துரையே, என் முருகா...
எனது முன் ஓடி வரவேணும்!
பேதையை ஏற்க வரவேணும்!

Wednesday, July 07, 2010

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு: தமிழ்க்கடவுள் முருகன்!

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு!
தமிழ்க் கடவுள் முருகன் என்பவனைக் காணவில்லை!
வயது = ஆறில் இருந்து அறுபது வரை!
உயரம் = 5 அடி 11 அங்குலம்!
நிறம் = சிவப்பு (சேயோன்)

சுருள் முடி, சூரியக் கண்கள்
சுறுசுறு மூக்கு, சுவை இதழ்கள்
ஆறிரு திண் புயத்து அழகிய மார்பு
இஞ்சி இடுப்பு, இக-பர வளைவு
அதற்கும் கீழே....
இல்லை...அதற்கும் மேலே...

இதயம்!
- இது மட்டும் அவனுக்கு இருக்கவே இருக்காது!



மூவிரு முகங்கள் போற்றி, முகம் பொழி கருணை போற்றி என்று ஒப்புக்குப் பாடுவார்கள்! ஏன்?
இதயத்தில் தானே கருணை பொழியும்?
இவனுக்குத் தான் இதயமே இல்லையே! அதான் "முகம்" பொழி கருணை போற்றி என்று பாடல்!

பார்த்தவுடன் சொல்லவல்ல குணாதிசயங்கள்:

* மெத்த திமிர் பிடித்தவன் - பிடிவாதம் ஜாஸ்தி
* கொஞ்சம் வீரன் - கையில் வேல் இருக்கும்! - ஆனால் அதை "விட" எல்லாம் தெரியாது! சும்மாத் "தொட" மட்டுமே தெரியும்!
- தொளைபட்டு உருவத் "தொடு"வேலவனே, "தொடு"வேலவனே-ன்னு தான் இவனைச் சொல்லுவாங்க!

* சுமாரான அழகன் - மீசையில்லாத முகத்தை வச்சிக்கிட்டு ஊரை ஏமாற்றுபவன்
* அலங்காரப் பிரியன் - ஷோக்குப் பேர்வழி! நல்லா டிரெஸ் பண்ணுவான்! உடம்பில் சந்தனம் போல ஒரு மெல்லிய வாசனை வீசும்
* சரியான அலைஞ்சான்....பார்வை கண்டபடி மேயும்...மனம் முந்தியதோ, விழி முந்தியதோ, கரம் முந்தியதோ எனவே...

* நெற்றியில் மெல்லீசா மண்ணு போல திருநீறு இருக்கும்! அதை இவனே அப்பப்போ அழிச்சி விட்டுக்குவான்!
* பைக் ஓட்டக் கூடத் தெரியாது! வெறும் மொபெட் தான்! அதான், தானே ஓடவல்ல திறமையுள்ள மயிலை ஏமாத்தி, தன் பிடிக்குள்ளாற வச்சிருக்கான்!

* இவனுக்கு வெற்றி இல்லை! வேலுக்குத் தான் வெற்றி! - வெற்றிவேல் என்று வேலைத் தான் கூப்பிடுவாங்க! இவனை அல்ல!
இவன் சும்மா "தொடுவதோடு" சரி! மத்ததெல்லாம் வேலே தன் திறமையால் பார்த்துக்கும்!



இந்த மாங்கா தான் என் காதலன்! இந்த poRkki தான் என் pokkisham!
எல்லாம் என் விதி! - இவன் வந்து வாய்த்து விட்டான்!
கருவாய், உயிராய், கதியாய், "விதியாய்" - வாய்த்து விட்டான்!

இவனைத் தான் பல நாளாக் காணவில்லை!
ஆறு முகங்களைப் பார்த்து ஆறு மாசம் ஆகுது!
என்னமோ ஒரு மாதிரியாகவே இருக்கு!

இவனைக் கண்டு பிடித்துத் தருவோர்க்கு, எந்தை, எம்பெருமான்.......அதான் இவன் மாமன்....
தக்க சன்மானம் கொடுப்பதாகச் சொல்லி இருக்காரு! - வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
யாராச்சும்....இந்தக் காணாமப் போனவனை....கண்டு பிடிச்சித் தருமாறு உங்களை இறைஞ்சுகிறேன்! டேய்...எங்க இருந்தாலும் வந்துருடா.....வந்துருவ தானே?

ஆறுமோ ஆவல்? ஆறுமுகனை நேரில்...காணாது....


இன்று முருகனருளில் இந்தப் பிரபலமான பாடல்! கேட்டுக்கிட்டே படிங்க!
The Best of MLV - எம்.எல்.வசந்தகுமாரி - Must Listen!

குன்னக்குடி வயலினில்

சுதா ரகுநாதன் குரலில், கீழே:


ஆறுமோ ஆவல்?
ஆறுமுகனை நேரில்...காணாது
(ஆறுமோ ஆவல்?)

ஏறு மயிலேறி, குன்றுதோறும் நின்று ஆடியவன்
பெரும் புகழைத் தெரிந்தும், அவன் பேரழகைப்...பருகாமல்

(ஆறுமோ ஆவல்?)

ஞான குருபரன் தீனத்தருள் குகன்
வானவரும் தொழும் ஆனந்த வைபோகன்
காணக் கிடைக்குமோ? கூறுதற்கு இல்லாமல்
அற்புத தரிசனம், கற்பனை செய்தால் மட்டும்....
(ஆறுமோ ஆவல்?)

வரிகள்: கண்ணன் ஐயங்கார்
ராகம்: மாண்டு
தாளம்: ஆதி

* கண்ணன் ஐயங்கார் சிறந்த வைணவ அறிஞர்! இராமானுச தொண்டு குழுமத்தைச் சேர்ந்தவர்! அவர் பாடல்களில் என்றும் நிலைத்தது இந்த முருகன் பாட்டே!
* மாண்டு என்பது துள்ளலான கம்பீர ராகம்! மாண்ட் என்று இந்துஸ்தானி இசையிலும் குறிப்பிடுவார்கள்! மாசிலா நிலவே நம்..., ஜாதி மல்லிப் பூச்சரமே போன்ற பாடல்கள் எல்லாம் இந்த மெட்டில் தான்!


ஆறு முகத்தால், ஆறு மோகத்தால் - ஆறுமோ என் ஆவல்?

வாழ்வே கற்பனையாகிப் போனதா?...
கற்பனையே வாழ்வாகிப் போனதா?...
ஆறுமோ என் ஆவல்?
செந்தூர் முருகா சேர்த்துக் கொள்!

Friday, July 02, 2010

எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு...


எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!

எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
சித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்!
பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!!

பிள்ளைத்தமிழ் பாடக் குமரன் உள்ளம் களித்தாடும்! - அந்தப்
புள்ளி மயிலோடு வடிவேல் துள்ளி விளையாடும்!

வள்ளி தெய்வானை சூழ்ந்திருக்கத் திருக்காட்சி அளித்திடுவான்! - கொடை
வள்ளலைப் போலக் கருணை எல்லாம் அள்ளி வழங்கிடுவான்!

எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
சித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்!
பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!

ஆற்றுப்படைவீடு, திருமுறுகாற்றுப்படைவீடு! - சுவை
ஊட்டும் தமிழோடு முருகனைப் போற்றிப் புகழ்பாடு!

சந்தநடைத்தமிழ் திருப்புகழ்தனில் கந்தனவன் வருவான்!
சிந்தை குளிர்ந்திட சந்தன முருகன் நல்லருளைத் தருவான்!

எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
சித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்!
பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!

எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!!


பாடலைக் கேட்க...

எத்தனை அருமையான பாடல்! எத்தனை அருமையான பாவம்! சீர்காழி கோவிந்தராஜன் ஐயா பாடிய இந்தப் பாடல் முருகனருள் பதிவைப் பார்த்துவிட்டுப் பாடியது போல் இருக்கிறது! :-) இந்தப் பாடலின் ஒலி வடிவத்தையும் வரி வடிவத்தையும் இங்கே இடுவதற்குத் தந்த பிரகாசம் ஐயாவிற்கு நன்றி!

Tuesday, June 22, 2010

எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆடவில்லையே - ஏன்?

இந்தச் செவ்வாயில், அன்பர்களின் செவ்-வாய் தோறும் மணக்கும் ஒரு அழகான முருகன் பாடல், TMS பாடியது!
தித்திக்கும் தேன் பாகும், திகட்டாத தெள்ளமுதும், தீஞ்சுவை ஆகவில்லையே, முருகய்யா! தீஞ்சுவை ஆகவில்லையே! - ஏனாம்?

சர்க்கரை/வெல்லப் பாகு திகட்டும்! ஆனால் தேனில் எடுக்கும் பாகு திகட்டாது! - அதான் திகட்டாத தெள்ளமுது!
ஆனாலும் அது கூடத் தீஞ்சுவை ஆகவில்லையாம்! ஏன்-ன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்!

அதுக்கு முன்னாடி பாட்டை முதலில் பார்த்து விடுவோம்! முதலில் முருகன்! அப்பறம் ஆராய்ச்சி! ஓக்கேவா? :)
இதோ...கேட்டுக் கொண்டே படிங்க!




குரல்: டி.எம்.எஸ்
வரிகள்: ?
தொகுப்பு: முருகன் பக்திப் பாமாலை


தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா - தீஞ்சுவை ஆகவில்லையே!

எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே - குமரய்யா - இன்பம் ஏதும் இல்லையே!

அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே - முருகய்யா - அங்கம் மணக்கவில்லையே!


சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல
சீர் மணம் வேறு இல்லையே - குமரய்யா - சீர் மணம் வேறு இல்லையே!

முத்தும் இரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும்
முதற் பொருள் ஆகவில்லையே - முருகய்யா - முதற் பொருள் ஆகவில்லையே!


சத்திய வேல் என்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே - குமரய்யா - மெய்ப் பொருள் வேறு இல்லையே!


எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே - முருகய்யா - எண்ணத்தில் ஆடவில்லையே!


மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே - குமரய்யா - மற்றொரு தெய்வமில்லையே!

(தித்திக்கும் தேன் பாகும்)


இப்போ ஒவ்வொன்னா உன்னிச்சிப் பாருங்க...முருகனுக்காக, உன்னித்து எழுந்தன...உணர்வலைகள்!

* தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே = தீஞ்சுவை-ன்னா என்ன?
தேன்பாகு, தெள்ளமுது எல்லாம் சுவையாத் தான் இருக்கு! ஆனால் "தீஞ்சுவை"யா?

* அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும் அங்கம் மணக்கவில்லையே = என்ன அங்கம்? எப்படி மணக்கும்?

* முத்தும் இரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும் முதற் பொருள் ஆகவில்லையே = முதற் பொருள் எது? நீங்காத செல்வம் தான் முதற் பொருள்! அது எது?

* எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆடவில்லையே = எண்ணற்ற தெய்வங்களா? ஒன்றே குலம் ஒருவனே தேவன்-ன்னு அல்லவா கேள்வி? :)
ஏன் முருகனைத் தவிர வேறு எந்த தெய்வ வடிவமும் எண்ணத்தில் ஆடலை-ன்னு பாடணும்? :) சொல்லுங்க பார்ப்போம், சொல்லுங்க!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP