குன்றெங்கு இருந்தாலும்....!
சென்றங்கு அருள்பவனே
என்றென்றும் எம்மனதில்
குன்றாது நிற்பவனே
ஆறுமுக ஆண்டவனே!
என்னப்பன்
ஆறுமுக ஆண்டவனே!
எம் எண்ணத்தை
ஒன்றாக்கி
அதையே நான் குன்றாக்கி
வைத்துள்ளேன் நீ குடிகொள்ளவே!
வேலா!
நீ இங்கு குடிகொள்ளவே!
குன்றெங்கு இருந்தாலும்
சென்றங்கு அருள்பவனே...!
நானென்ற ஒன்றிங்கு
இல்லாமல் செய்திட்டாய்!
நீயன்றி வேறொன்றாய்
ஏதொன்றுமில்லாமல்
எனையே நீ ஆட்கொண்டாயே!
முருகா!
எனையே நீ ஆட்கொண்டாயே!
அன்னையாய் நீயிருந்து
அன்பை ஊட்டுவித்தாய்!
அப்பனாய் நீயிருந்து
அறிவை ஊட்டுவித்தாய்!
எனக்கு எல்லாமும் நீயேயன்றோ!
வேலா!
எனக்கு எல்லாமும் நீயேயன்றோ!
குன்றெங்கு இருந்தாலும்
சென்றங்கு அருள்பவனே...!
எம் சிந்தை ஒருபொழுதும்
உமை அகலாதிருக்கும் வண்ணம்
உம் சிந்தையாய் எனை ஆக்கிவிடு!
இப்பொழுதும் எப்பொழுதும்
முப்பொழுதும்
உம் சிந்தையாய் எனை ஆக்கிவிடு!
உயிரெழுத்து, மெய்யெழுத்து
எல்லாமாய் நீயிருக்க
வெறும் எழுத்தாய் நானிங்கு
உன் பாதச் சரண் தேடினேன்!
முருகைய்யா!
உன் பாதச் சரண் தேடினேன்!
குன்றெங்கு இருந்தாலும்
சென்றங்கு அருள்பவனே...!
(இதை இயற்றியவரும் ஒரு நாமக்கல் கவிஞர்(!?)தான்.)
---------------------------------------------------------------
ஒரு கொசுறுச் செய்தி!
ஒரு ஆங்கிலேய முருக பக்தர் "முருக தாஸ்" கந்த புராணத்தை தன்னோட தளத்தில்அழகா (ஆங்கிலத்தில்தான்) பதிவு செஞ்சி வெச்சிருக்கார்! நீங்களும் படிச்சிப் பாருங்க!
9 comments:
அன்பின் சிபி கவிதை அருமை - பாடல் அருமை - குன்றிருக்கும் இடமெல்லாம் குடி இருக்கும் குமரனின் பூரண அருள் வாய்க்க நல்வாழ்த்துகள் சிபி நட்புடன் சீனா
@சீனா ஐயா,
மிக்க நன்றி!
மீள் நல்வரவு சிபி அண்ணா! :)
//எண்ணத்தை ஒன்றாக்கி
அதையே நான் குன்றாக்கி
வைத்துள்ளேன் நீ குடி கொள்ளவே!//
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது ஒரு இலக்கியச் சுவைக்குத் தான்!
குன்று இல்லாத இன்றைய திருச்செந்தூரிலும் குமரன் இருக்கான்!
குன்றின் மேல் உள்ள இதர தெய்வங்களின் ஆலயங்களும் உள்ளன! (திருவேங்கடம், சிங்கவேள் குன்றம், பரங்கிமலை...)
அப்படின்னா, குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது என்ன? நல்லதொரு பதில் இந்தப் பாடலில் = எண்ணத்தை ஒன்றாக்கி, அதையே நான் குன்றாக்கி!
//உயிரெழுத்து, மெய்யெழுத்து எல்லாமாய் நீயிருக்க//
உயிரும் மெய்யும் மட்டுமா?
தலையெழுத்தும், அக-எழுத்தும் எல்லாமாய் அவனிருக்க.....
//எம் சிந்தை ஒருபொழுதும்உமை அகலாதிருக்கும் வண்ணம்உம் சிந்தையாய் எனை ஆக்கிவிடு!//
கதியாய் விதியாய்
என் கதியாய்
என் விதியாய்
அருள்வாய் குகனே!
நாமக்கல் கவி வாழ்க! கவி என்றால் பல பொருள் உண்டு! எந்த பொருள் இங்கே பொருத்தம் என்று கேட்காதீர்கள் சிபி! :-)
விதி என்று ஒன்றிருந்தால் விதிவிலக்குகளும் உண்டு இரவி. செந்தூரும் வேங்கடமும் விதிவிலக்குகள்.
// கவி என்றால் பல பொருள் உண்டு! எந்த பொருள் இங்கே பொருத்தம் என்று கேட்காதீர்கள் சிபி! :-//
ரைட்டு! :)
//அன்பின் சிபி கவிதை அருமை - பாடல் அருமை - குன்றிருக்கும் இடமெல்லாம் குடி இருக்கும் குமரனின் பூரண அருள் வாய்க்க நல்வாழ்த்துகள்
//
repeatuuu
குமரா, கந்தா, ஷண்முகா, வேலா, கதிர்வேலா,
வடிவேலா, முருகா, குகா, ஸ்வாமினாதா, சுப்பிரமணியா,
ஆறுமுகனே ! ஆறு படை வீட்டுடையோனே !
குன்றென்ன ! உன்னைத்தொழும் பக்தர்கள்
குகையில் இருந்தாலும் நீ வருவாய் !
அருள் தருவாய்.
சுப்பு ரத்தினம்.
http://kandhanaithuthi.blogspot.com
Post a Comment