Tuesday, June 22, 2010

எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆடவில்லையே - ஏன்?

இந்தச் செவ்வாயில், அன்பர்களின் செவ்-வாய் தோறும் மணக்கும் ஒரு அழகான முருகன் பாடல், TMS பாடியது!
தித்திக்கும் தேன் பாகும், திகட்டாத தெள்ளமுதும், தீஞ்சுவை ஆகவில்லையே, முருகய்யா! தீஞ்சுவை ஆகவில்லையே! - ஏனாம்?

சர்க்கரை/வெல்லப் பாகு திகட்டும்! ஆனால் தேனில் எடுக்கும் பாகு திகட்டாது! - அதான் திகட்டாத தெள்ளமுது!
ஆனாலும் அது கூடத் தீஞ்சுவை ஆகவில்லையாம்! ஏன்-ன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்!

அதுக்கு முன்னாடி பாட்டை முதலில் பார்த்து விடுவோம்! முதலில் முருகன்! அப்பறம் ஆராய்ச்சி! ஓக்கேவா? :)
இதோ...கேட்டுக் கொண்டே படிங்க!




குரல்: டி.எம்.எஸ்
வரிகள்: ?
தொகுப்பு: முருகன் பக்திப் பாமாலை


தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா - தீஞ்சுவை ஆகவில்லையே!

எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே - குமரய்யா - இன்பம் ஏதும் இல்லையே!

அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே - முருகய்யா - அங்கம் மணக்கவில்லையே!


சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல
சீர் மணம் வேறு இல்லையே - குமரய்யா - சீர் மணம் வேறு இல்லையே!

முத்தும் இரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும்
முதற் பொருள் ஆகவில்லையே - முருகய்யா - முதற் பொருள் ஆகவில்லையே!


சத்திய வேல் என்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே - குமரய்யா - மெய்ப் பொருள் வேறு இல்லையே!


எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே - முருகய்யா - எண்ணத்தில் ஆடவில்லையே!


மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே - குமரய்யா - மற்றொரு தெய்வமில்லையே!

(தித்திக்கும் தேன் பாகும்)


இப்போ ஒவ்வொன்னா உன்னிச்சிப் பாருங்க...முருகனுக்காக, உன்னித்து எழுந்தன...உணர்வலைகள்!

* தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே = தீஞ்சுவை-ன்னா என்ன?
தேன்பாகு, தெள்ளமுது எல்லாம் சுவையாத் தான் இருக்கு! ஆனால் "தீஞ்சுவை"யா?

* அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும் அங்கம் மணக்கவில்லையே = என்ன அங்கம்? எப்படி மணக்கும்?

* முத்தும் இரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும் முதற் பொருள் ஆகவில்லையே = முதற் பொருள் எது? நீங்காத செல்வம் தான் முதற் பொருள்! அது எது?

* எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆடவில்லையே = எண்ணற்ற தெய்வங்களா? ஒன்றே குலம் ஒருவனே தேவன்-ன்னு அல்லவா கேள்வி? :)
ஏன் முருகனைத் தவிர வேறு எந்த தெய்வ வடிவமும் எண்ணத்தில் ஆடலை-ன்னு பாடணும்? :) சொல்லுங்க பார்ப்போம், சொல்லுங்க!

Friday, June 18, 2010

முருகனை நினை மனமே!

உணர்வில் பெருகும் அன்புடன் அனுபவங்களையும் தொகுத்துத் தரும் இனிமையான பாடல் இது. இன்று காலையில் தான் முதன்முதலில் கேட்டேன். இது வரை பல முறை கேட்டுவிட்டேன். பாடியவர் இளையராஜா என்று குரலை வைத்துத் தெரிகிறது. இசையும் அவருடையதாகத் தான் இருக்கும். இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. அதுவும் அவரேயாக இருக்கலாம். வரிகளில் தெறிக்கும் அனுபவ உண்மைகளைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றுகிறது.




முருகனை நினை மனமே! - நலங்கள்
பெருகிடும் தினம் தினமே!
உருகிடும் மறு கணமே! - நெருங்கி
வருவது அவன் குணமே! (முருகனை)

ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்!
ஒவ்வொரு செயலிலும் பெருமையைக் கொடுப்பவன்!
உடலுக்கு உயிரெனில் உயிருக்கு ஒளி அவன்!
உணர்ந்தவர் தொழுதிடும் உயர்ந்தவர் பரவிடும் முருகனை...

அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்!
அவன் விழி அசைவினில் கணைகளும் மலர்ந்திடும்!
அவன் அருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்!
அறிவுடன் பொருள் புகழ் அனைத்திலும் சிறந்திட முருகனை ...

Tuesday, June 08, 2010

குரு-சிஷ்யை! MLV-சுதா ரகுநாதன்! முருகன் ஒரு துறவியா?

குருவும் சிஷ்யையும் சேர்ந்து பாடிப் பார்த்து இருக்கீங்களா? ரெண்டு பேருமே பிரபலமானவர்கள்! யாரு அவிங்க?

MLV எனப்படும் எம்.எல்.வசந்தகுமாரி அவர்களைப் பற்றிப் பலரும் அறிவார்கள்! தமிழ் சினிமாவில் கலக்கிய ஸ்ரீவித்யா அவர்களின் தாயார்! எம்.ஜி.ஆரின் மன்னாதி மன்னன் படத்தில் வரும் "ஆடாத மனமும் உண்டோ?" என்ற ஹிட் பாடலைப் பாடியவர்! மேடையிலும் சினிமாவிலும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடிப் பிரபலப்படுத்தியவர்!

கர்நாடக இசை உலகில் கோலோச்சிய பெண் மும்மூர்த்திகளில் எம்.எல்.வி-யும் ஒருவர்!
* எம்.எஸ் அம்மா = ஆத்மார்த்தமான பக்திப் பொழிவு என்றால்
* எம்.எல்.வி = மேதைமை தவழும் இசை கம்பீரம்!

இவரின் சீடர் தான், இன்று பிரபலமான பாடிகியாக வலம் வரும் திருமதி சுதா ரகுநாதன்!
கர்நாடக இசையில் கொடி கட்டிப் பறக்கும் பெண் கலைஞர்களில் இவரும் ஒருவர்! பார்த்திபனின் இவன், உளியின் ஓசை, வாரணமாயிரம், ஆதவன் போன்ற பல திரைப்படங்களிலும் பாடி உள்ளார்!

இந்தக் குருவும் சிஷ்யையும் சேர்ந்து பாடிப் பார்த்து இருக்கீங்களா? முருகனருளில் இன்னிக்கி பார்க்கலாமா? இதோ குரு-சிஷ்யை முருகன் பாட்டு!



Video Link opens in a new Page = இங்கே!

முருகனின் மறுபெயர் அழகு - அந்த
முறுவலில் மயங்குது உலகு!
(முருகனின்)

குளுமைக்கு அவனொரு நிலவு
குமரா எனச் சொல்லிப் பழகு!
(முருகனின்)

வேதங்கள் கூறிடும் ஒளியே - உயர்
வேலோடு விளையாடும் எழிலே!
துறவியும் விரும்பிய துறவே - நீ
துறவியாய் நின்றிட்ட திருவே!
(முருகனின்)

வரிகள்: குரு சூரஜானந்தா
ராகம்: பெஹாக்
தாளம்: கண்ட சாபு


என் முருகனின் முறுவலில் மயங்குது மனம்! அவன் குளுமையாமே! பாவி, என்னைச் சிரித்து சிரித்து மயக்கிச் சூடாக்கியவன்...குளுமைக்கே நிலவாய் இருக்கிறானாமே! போகட்டும்! அது என்ன துறவியும் விரும்பிய துறவு? சொல்லுங்க பார்ப்போம்!

அது கூடப் பரவாயில்லை! "துறவியாய் நின்றிட்ட திருவே!"-ன்னு பாடுறாங்களே? அவன் ரெண்டு பொண்டாட்டிக்காரன்! அவன் எப்படிய்யா துறவியாய் நின்றிட்டவன்? சொல்லுங்க பார்ப்போம்! :)

Tuesday, June 01, 2010

சிவாஜி vs சரிதா - கீழ் வானம் சிவக்கும்! முருகன் பாட்டு!

கீழ்வானம் சிவக்கும்-ன்னு ஒரு படம் வந்துச்சி! சிவாஜி-சாவித்திரி மாதிரி, சிவாஜி-சரிதா காம்பினேஷன்-ன்னு வச்சிக்குங்களேன்!
ரெண்டு பேரும் மாமனார்-மருமகளா போட்டி போட்டுக்கிட்டு நடிச்சி இருப்பாங்க!


நாங்க எல்லாரும் சென்னைக்கு வந்த போது...புரசைவாக்கம், Roxy தியேட்டரில் (இப்போ இந்த தியேட்டரே இல்ல, அடுக்கு மாடி சரவணா ஸ்டோர்ஸ் ஆகி விட்டது வேறு விஷயம்)...
ஒரே மாசத்தில் நாலைஞ்சு பழைய படங்களை எல்லாம் ஓட்டினாங்க! சிவாஜி ஹிட் படங்கள்! அதுல இதுவும் ஒன்னு! எப்படி ஞாபகம் இருக்கு-ன்னா...

1. சென்னையில், நாங்க எல்லாரும் சேர்ந்து பார்த்த முதல் படம் இது!
2. தியேட்டருக்கு கீழேயே, White Field Bakery! சின்னப் பையன் எனக்கு, அந்த கேக் வாசனையும், பட்டர் பிஸ்கட் வாசனையும்...ஆஆ...
3. இந்தப் படத்தில் வரும் - "முருகா முருகா முருகா" பாட்டு!

இந்தப் பாட்டில், ஒரு வீட்டுத் தோட்டத்தின் நடுவே முருகன் சிலை இருக்கும்!
அங்கே நின்னுக்கிட்டு, சிவாஜியும் சரிதாவும், மாறி மாறிப் பாடுவாங்க!
என்னமோ தெரியலை, அந்த முருகன் சிலை எனக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சி!

"அப்பா, மெட்ராஸ்-ல்ல வாடகை வீடு நல்லாவே இல்லை! ரொம்ப குறுகல்! நாம சொந்தமா வீடு கட்டிக்கிட்டுப் போனா, சின்ன தோட்டமாச்சும் வைக்கணும்!
நடுல, இதே போல ஒரு முருகன் சிலை வைக்கணும்!"-ன்னு சொல்லிய ஞாபகம்...எனக்கே இருக்கு! :)



படத்துக்கு வருவோம்!
சிவாஜி, பெரிய மருத்துவர்! அவரு பையன் சரத்பாபு - மருமகள் சரிதா! ரொம்ப பாசமா இருப்பாங்க மாமனாரும் மருமகளும்!
அப்போ....பார்வையற்ற ஜெய்சங்கர், கண் அறுவை சிகிச்சை செஞ்சிக்க, சிவாஜி கிட்ட வருவாரு! தன் தங்கையின் வாழ்வைக் கெடுத்தவனைக் கொலை பண்ணும் வெறியில் இருப்பாரு! அவர் கையில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த சிவாஜிக்கு செம ஷாக்!

சரத்பாபுவும்-அந்தப் பெண்ணும் ஃபோட்டோவில் இருப்பாய்ங்க!

தன் பையன் சரத்பாபுவைப் போட்டுத் தள்ளத் தான் ஜெய்சங்கர் வந்திருக்காரு-ன்னு தெரிஞ்ச பிறகும், சிகிச்சை செய்வாரு சிவாஜி!
ஆனா Doctor vs Father உணர்ச்சிப் போராட்டத்தில் அப்பப்போ தவிப்பாரு! இதனால், சரிதா, சிவாஜி மேல சந்தேகப்பட்டு, வெறுப்பும் கோபமும் தானாவே வளர்த்துக்குவாங்க! ஆனா தன் கணவன் தான் அதில் உள்ளான்-ன்னு தெரியாது!

தன் புருஷன் தான் இதுல Involved-ன்னே தெரியாம, சிவாஜியைத் தாறுமாறாகச் சரிதா பேச...கதை விறுவிறு-ன்னு போகும்!

சிவாஜியைப் பொய்யர், புரட்டர், மருத்துவத் துரோகி-ன்னு எல்லாம் பேசிய அந்தப் பாசமிகு மருமகள்...சான்சே இல்லை!
சிவாஜிக்கு ஈடு குடுத்து நடிக்கவல்ல ஒரே பின்னாளைய கதாநாயகி = சரிதா! முதல் மரியாதை ராதா கூட அப்புறம் தான்!



பாட்டைக் கேளுங்க!

முருகன் முன்னாடி...
* குற்றம் சாட்டி ஒதுக்கும் ஒரு உள்ளமும்,
* குற்றவாளி "ஆக்கப்பட்டு" அழும் இன்னொரு உள்ளமும்,
மாறி மாறி மோதும் காட்சி!

குரல்: TMS, பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: MSV
படம்: கீழ்வானம் சிவக்கும்

சரிதா:
கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே,
முருகா முருகா முருகா!
என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்?
சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?

சிவாஜி:
கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா

சரிதா:
சுந்தர வேல்முருகா, துண்டுகள் இரண்டாக
சூரனைக் கிழித்தாய் அன்றோ! - ஒரு
தோகையைக் காலடியில், சேவலை கை அணைவில்
காவலில் வைத்தாய் அன்றோ!

சிவாஜி:
மந்திரத் தெய்வங்களின் மாயக் கதைகளுக்கு
வரைமுறை கிடைாது அன்றோ!
அவை தந்திரம் செய்வதுண்டு, சாகசம் கொள்வதுண்டு
சகலமும் நன்றே அன்றோ!

என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்?
சில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?
(கண் கண்ட தெய்வமே)

சரிதா:
காட்சியைக் கொன்றவர் முன், சாட்சியைக் கொன்றுவிட்டு
ஆட்சியும் செய்தாய் ஐயா - உன்தன்
மாட்சிமை என்னவென்று காட்சிக்கும் தோன்றவில்லை
சூழ்ச்சியைச் சொல்வாய் ஐயா!

சிவாஜி:
பிள்ளையைக் கொன்றுவிட்டு, பெரிய விருந்து வைத்தான்
கள்ளமில் பரஞ் சோதியே - விருந்து
எல்லாம் முடிந்த பின்னே, பிள்ளையினை அழைத்தான்
இறைவன் அருள்ஜோதியே!

சரிதா: காரிருள் சூழ்ந்ததும் கதிரும் மறைந்தது - நீதி எல்லாம் துடிக்கும்!
சிவாஜி: மேற்கினில் சூரியன் மறைந்தாலும் - கீழ் வானம் சிவக்கும்!
சரிதா: கந்தன் இருப்பது உண்மை என்றால் இது உண்மைகள் வெளியாகும்!
சிவாஜி:காலம் வரும் வரை காத்திருந்தால் அது நல்லவர் வழியாகும்!!

இருவரும்:கண் கண்ட தெய்வமே! கை வந்த செல்வமே! முருகா முருகா முருகா!முருகா முருகா முருகா!



சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?-ன்னு அது கேட்க...
சில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?-ன்னு இது கேட்க...

பாவம், என் முருகன் என்ன தான் பண்ணுவான்? ரெண்டு பேருமே முருகனைத் தான் துணைக்கு கூப்பிடறாங்க! யாரை-ன்னு அவன் பாக்குறது?

அவன் அர்ச்சனையைப் பார்ப்பதில்லை! = லட்சார்ச்சனை லட்சம் பேர் செய்யறாங்க....ஒரு டிக்கெட் ரூ100.00 தான்!
ஆட்களைப் பார்ப்பதில்லை! அவனோட பேரை, நிறைய வாட்டி ஒருவர் சொல்வதாலேயே அவர்களைப் பார்ப்பதும் இல்லை! = சரவணபவன் அண்ணாச்சி சொல்லாத முருகன் பேரா?

பின்பு எதைப் பார்க்கிறான் முருகன்?

சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது உன் வேலையா? வேலய்யா இது உன் வேலையா? என்று ஒரு உள்ளம் குற்றம் சாட்டும் போது...
தன்னையும், தன்-மானத்தையும், தன் மகிழ்வையும்...
அன்புக்காகவே இழக்கத் துணிந்த அந்த அன்பு...டைக்கும் தாழ் இல்லாத அன்பு

= அந்த உருக அன்பு ஒன்றினையே, முருகன் பார்க்கிறான்! போதும் நீ பட்டது; வா என்னிடம் என்று வாரி அணைத்துக் கொள்கிறான்!

பெருகாதல் உற்ற தமியேனை
நித்தல் பிரியாதே! பட்சம் மறவாதே!
கை வந்த செல்வமே! என் - முருகா முருகா முருகா!

Thursday, May 27, 2010

பித்துக்குளி - ஜிரா எழுதும் பதிவு - சிந்திக்கிலேன்!

முன்பு கண்ணன் பாட்டில், பித்துக்குளி ஹிட்ஸ் வரிசையில், "பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்" என்ற Fast Beat கண்ணன் பாட்டைப் பார்த்தோம் அல்லவா? அதே அலைவரிசையில், பித்துக்குளியார் முத்துக் குளித்த முருகன் பாடல்களை, முருகனருள் வலைப்பூவிலும் தொடர்ந்து காண்போம்! வாருங்கள்!


 
இன்று மிகவும் இயைந்து வரும் தினம்! மூவரின் பிறந்த நாள்! 
1. தமிழ்க் கடவுள் - என் காதல் முருகப் பெருமான் 
2. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் (எ) நம்மாழ்வார்
இருவருமே வைகாசி விசாகத்தில் தோன்றியவர்கள் தான்! 
இந்த ஆண்டோ, வைகாசி விசாகம், May-27 அன்று வருவதால்... இவர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிக் கொள்ளும்... 
3. தோழன் இராகவன் (எ) ஜிரா... 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முருகா! 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாறா! 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா! :) 

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பல்லாண்டு பல்லாண்டு! 
  மகரந்தம் என்றும், இனியது கேட்கின் என்றும்...முன்னொரு காலத்தில் பல பதிவுகள் வாரி வழங்கிய கைகளால்...... இராகவன் கைகளால்...
ரொம்ப நாள் கழிச்சி...இன்றைய முருகனருள் பதிவு எழுதப்படுகிறது! இனி... இராகவன் கரம்; என் கரம்... இடையே பித்துக்குளிக்கு மட்டும்!
 
சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன்! - எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில்! நாம் நிறைய தவறு செய்திருக்கிறோம். குற்றம் செய்திருக்கிறோம். ஆண்டவன் நமக்கும் வாழ்வளிப்பானா என்று என்றைக்காவது ஐயம் ஏற்பட்டால் இந்தக் கந்தர் அலங்காரப் பாடலைப் படியுங்கள், உண்மை விளங்கும். 

நாம் புகழாததால், நாம் வணங்காததால், நாம் நினைக்காததால் ஆண்டவன் நம்மை ஒரு போதும் தண்டிக்கப் போவதில்லை. ஆண்டவன் அனைவருக்கும் பொதுவானவர். தன்னை வணங்காதவரைத் தண்டிக்க அவர் இரண்டாந்தர எஜமானன் இல்லை. அவர் அனைவருக்கும் பொது. நல்லவருக்கு ஆன அதே இறைவனே தீயவனுக்கும். இருவரையும் வாழ்விக்க வேண்டிய கடமை ஆண்டவனுக்கு உண்டு. 

போருக்குப் போகிறான் சூரன். அவனது முகம் கடுகடுவென இருக்கிறது. செக்கச் சிவந்து இரத்த நிறத்தில் இருக்கிறது. கண் பார்வையில் அனல் பறக்கிறது. முருகனை ஒரு பிடி பிடிக்கவேண்டும் என்ற வெறியோடு போகிறான். போர்க்களத்தில் முருகனும் நிற்கின்றார். முருகனைப் பார்த்த சூரனுக்கு வியப்பு. பின்னே. புன்னகை தவழ குளிர் முகத்தோடு வந்து நின்றால்? 

கச்சியப்பர் சொல்கின்றார். "முழு மதியன்ன ஆறுமுகங்களும் முந்நான்காகும் விழிகளின் அருளும் வேறுள படையி சீரும் அணிமணி தண்டையார்க்கும் செழுமலரடியும் கண்டாண்". 
 ஆக சூரனுக்குத் தான் முருகன் மேல் ஆத்திரம். ஆனால் முருகனுக்கோ சூரன் மேல் அன்பு. குளிக்காமல் போவதால் ஆறு நம் மீது கோவிக்குமா? நாம் குளிக்கப் போனால் நம்மைத் தூய்மைப் படுத்துவது ஆறு. அப்படித்தான் முருகக் கடவுளும். நாம் வணங்கினால் நம்மை வாழ்விப்பார். நாம் வணங்காமல் போனால் நம்மை கோவிக்கவே மாட்டார். 

இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் என்று உணர்த்தும் தத்துவம். இது தமிழுக்கு மட்டுமே உரியது.

சரி......பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்? எனக்கு என் முருகன் ஞாபகம் வருவான்! :) அப்பறமா முருகதாஸ்-இன் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf! :) மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :)) பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் இயற்பெயர் பாலசுப்ரமணியம்! கோயம்புத்தூர் காரரு! இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்! நல்ல கர்நாடகப் பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, கூட்டான பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, அழகாகப் பாடிக் காட்டியவர்!

இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, "ஓ" போட வைக்குது! Fast Beat காவடிச் சிந்தை, செஞ்சுருட்டி/நாதநாமக் கிரியை-ன்னு ராகத்தில் போடறது தப்பில்லை! ஆனா காவடிச் சிந்தின் அந்த ஜீவனான "துள்ளல்" போயிறக் கூடாதுல்ல? சில பண்டிதர்கள் அதை இழுத்து இழுத்தே ஜீவனைப் போக்கிருவாங்க! :) 

ஆனால் நம்ம பித்துக்குளியாரின் காவடிச் சிந்தைக் கேட்டுப் பாருங்க! "சுருட்டி" ராகமும் இருக்கும்! காவடியைச் "சுருட்டிக்"கிட்டு போகாமலும் இருக்கும்! :) சான்றாக, இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்களேன்! = சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன்! அன்பே...உன்னைச் சிந்திக்கவே இல்லை....ஒருநாளும்! அன்பே...உன்னைச் சேவிக்கவே இல்லை....ஒருநாளும்!

இந்தப் பாடல் = சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன்... அருணகிரிநாதர், தம் வாயாலும் மனத்தாலும் அலங்காரம் செய்து பார்த்த கந்தர் அலங்காரப் பாடல்! - இதை முருகதாஸ் எப்படி Handle பண்றாரு? * திருப் பரங்கிரி தனில் உறை, சரவண பெருமாளே-ன்னு, திருப்புகழை Hum பண்ணி ஆரம்பிக்கறாங்க திருமதி. பித்துக்குளி - தேவி சரோஜா! 
* அடுத்து, சிந்திக்கிலேன்ன்ன்ன்ன்ன் என்று ஏன்ன்-கறாரு, ஏங்கறாரு பித்துக்குளி! - கந்தர் அலங்காரம்
* கந்தர் அலங்காரத்தில் இருந்து மீண்டும் திருப்புகழுக்குத் தாவறாங்க! ஒரு டெம்ப்போ உருவாக்க, மெல்லிய பஜனை...மக்களோடு! கேட்டுக்கிட்டே பதிவை வாசிக்க, இதோ சொடுக்குங்கள்: பித்துக்குளியின் மாயக்குரலில்!


சிந்திக்கிலேன், நின்று சேவிக்கிலேன், தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன், ஒன்றும் வாழ்த்துகிலேன், மயில் வாகனனைச்
சந்திக்கிலேன், பொய்யை நிந்திக்கிலேன், உண்மை சாதிக்கிலேன்,
புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே!!!

சிந்திக்கிலேன் = முருகா உன்னைப் பற்றி உள்ளத்தில் கொஞ்சமும் சிந்திக்கவில்லை 
நின்று சேவிக்கிலேன் = உன்னை "நின்று" சேவிக்கவில்லை! "நின்று" வணங்கவில்லை 
தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன் - அணிமணி தண்டை அணிந்த உனது செந்தாமரைப் பாதங்களை நான் கண்டு வழிபடவில்லை 
ஒன்றும் வாழ்த்துகிலேன் - ஒருமுறையாவது உனது பெயரைச் சொல்லியும் புகழைப் பாடியும் வாழ்த்தவில்லை 

மயில் வாகனனைச் சந்திக்கிலேன் - மயில் மீது அமர்ந்த ஐயனே உன்னைத் தேடி வந்து சரணடையவில்லை 
பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன் - பொய்யை நிந்தித்து உண்மையே பேசி வாழவில்லை. (பொய்யா விளக்கே விளக்கு என்கிறார் வள்ளுவர். அத்தோடு பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த.) 
புந்திக் கிலேசமும் - அறிவில் ஏற்படும் துன்பமும் 
காயக் கிலேசமும் - உடலில் ஏற்படும் துன்பமும் 
போக்குதற்கே - தீர்வதற்கே! 

முருகா, உன்னைப் புகழ்ந்து ஒன்றும் சொல்லாது போனாலும், உன்னை வணங்காது போனாலும், உனது புகழைப் பாடாது போனாலும்... உடலால், மனதால் அடையும் துன்பங்களைக் களைந்து, எங்களைக் காக்கின்ற உன் கருணைக்கு அளவுண்டோ! 

சிந்திக்கிலேன் = சரி! அது என்ன "நின்று" சேவிக்கிலேன்?
சொல்லுங்க பார்ப்போம்!  "நின்னாத்" தான் சேவிக்க முடியுமா? நடந்தோ, உட்கார்ந்தோ, படுத்தோ, மனசாலயே சேவிக்க முடியாதா? தரையில் உருண்டு, அங்கப் பிரதட்சிணம் செய்து, படுத்து எல்லாம் சேவிக்கிறாங்களே! ஏன் அருணகிரி, "நின்று" சேவிக்கிலேன் என்பதை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லுறாரு? சொல்லுங்க பார்ப்போம்! 

பின்னூட்டத்தில் நீங்கள் "நின்று" பேசிய பின், நாளைக்கி இங்கு செல்லுங்கள்! அங்கே விடை உண்டு! முருகக் கொடை உண்டு! மயிலின் நடை உண்டு! தடைக்குத் தடை உண்டு! 

அன்புடன், கோ.இராகவன் Ref: http://iniyathu.blogspot.com/2005/12/blog-post.html

அன்பே...உன்னைச் சிந்திக்கவே இல்லை....ஒரு நாளும்! 
அன்பே...உன்னைச் சேவிக்கவே இல்லை....ஒரு நாளும்! அன்பே, உன்னை "நின்று" சேவிக்கிலேன்! முருகாஆஆஆ!

Tuesday, May 18, 2010

எம்.ஜி.ஆர்-முருகன் பாட்டு! கந்தனுக்கு மாலையிட்டாள்!

சிவாஜி படத்தில் முருகன் பாட்டு இருக்கு-ன்னு பலருக்கும் தெரியும்!
படம் = கந்தன் கருணை! வெற்றிவேல், வீரவேல்-ன்னு, சிவாஜி வீரவாகு போல் Walking Style காட்டுவாரு! இதோ அந்தப் பதிவு!
ஆனால், எம்.ஜி.ஆர் படத்தில்? எம்.ஜி.ஆர், முருகன் பாட்டு பாடி இருக்காரா என்ன?

அட, பாட்டு என்ன? எம்.ஜி.ஆர் முருகனாவே வேஷங் கட்டியிருக்காருப்பா!
ஒரே ஒரு பாட்டுக்குப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முருகனாக நடிக்க, ஜெயலலிதா வள்ளியாக நடித்தார்!
இதைத் தேர்தல் போஸ்டர்களில் கூடச் சிலர் பார்த்திருக்கலாம்! படம் = தனிப் பிறவி!

இன்னொரு படம் = உழைக்கும் கரங்கள்!
நாளை உலகை ஆள வேண்டும், உழைக்கும் கரங்களே-ன்னு பாட்டு வருமே! அந்த எம்.ஜி.ஆர் படம்!
அதில் கந்தனுக்கு மாலையிட்டாள்-ன்னு ஒரு முருகன் பாட்டு!
அதை வாணி ஜெயராம் மிக நேர்த்தியாகப் பாடி இருப்பாய்ங்க! வீணை இசையோடு காதல் இசை!

நடிகை பவானி பரதநாட்டிய நடனக் கலைஞர்! எம்.ஜி.ஆர் மேல் அதீத அன்பும் காதலும் கொள்வார்! எம்.ஜி.ஆரும் அன்பு செலுத்துவது போல் இருக்கும்! ஆனால் அது ஏனோ காதலாக மலராது! அப்புறம் எம்.ஜி.ஆர் லதாவைக் கரம் பிடிப்பார்!
எம்.ஜி.ஆரும்-லதாவும், பவானி வீட்டிலேயே அடைக்கலம் கொள்வார்கள்! அன்று முதல் இரவு!

அவர்கள் முதலிரவுக்கு வேண்டிய அனைத்தையும் பவானியே செய்ய வேண்டிய இக்கட்டான நிலைமை! பாவம்...அவள் மனம் பதபதைக்கும்!
இருப்பினும் பழைய காதலன் மேல் உள்ள மாறா அன்பால் அதையும் செய்வாள்! தம்பதிகளை முதலிரவு அறைக்கு அனுப்பி விட்டு, இவள் மட்டும் தனி அறையில்...

தேவனைத் தேடிச் சென்றேன்....தேவியுடன் அவனிருந்தான்!
வீணையுடன் நானிருந்தேன்....விதியை எண்ணிப் பாடுகின்றேன்!
கதியாய் "விதியாய்"...வருவாய் குகனே!

உள்ளத்தை இழந்தவள், உயிரை இழந்தவள் அல்லவா?
இனி ஒன்றுமே இல்லை என்று எல்லாமே இழந்தவளுக்கு...
இனி ஏது அடைக்கலம்? = முருகன் மட்டுமே அடைக்கலம்!
கந்தனுக்கு மாலையிட்டாள்! கந்தனுக்கு மாலையிட்டாள்!



கந்தனுக்கு மாலையிட்டாள்
கானகத்து வள்ளி மயில்
கல்யாண கோலத்திலே
கவிதை சொன்னாள் காதல் குயில்!

சொக்கருடன் மீனாட்சி
சொக்கி நிக்கும் திருக்காட்சி
காண வந்த கண்கள் ரெண்டும்
காதலுக்கு ஒரு சாட்சி!

பூவோடு பொட்டும் தந்தேன்!
ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன்
சலங்கை கட்டும் இல்லத்திலே
தாலி கட்டும் நடக்க கண்டேன்!

தேவனைத் தேடிச் சென்றேன்
தேவியுடன் அவனிருந்தான்
வீணையுடன் நானிருந்தேன்
விதியை எண்ணிப் பாடுகின்றேன்!

வரிகள்: கவிஞர். முத்துலிங்கம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்: வாணி ஜெயராம்
படம்: உழைக்கும் கரங்கள்

உன் கையும் உண்டு, இனி "என் மெய்த் துணையே"! முருகாஆஆஆஆஆ!

Tuesday, May 11, 2010

மனசை மயில் வாகனமாய் மாற்றுவது எப்படி?

முருகனருள் வலைப்பூ அன்பர்களே...
அழகனின் அழகிய பாடல்களின் தொடர்ச்சியாக...
இன்னிக்கு ஒரு எளிமையான, இனிமையான பாட்டு!
நாலே வரி தான்!
ஆனா மனசு பூரா ஓடிக்கிட்டு இருக்கு! :)


பொங்கி வரும் வீணை இசையோடு, பார்க்கறீங்களா?
இதோ:
கேட்க மட்டுமான ஒலிச்சுட்டி இங்கே!

மனமே முருகனின் மயில் வாகனம் - என்
மாந்தளிர் மேனியே குகன் ஆலயம் - என்
குரலே செந்தூரின் கோவில் மணி - அதில்
குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி! 



குரல்: ராதா ஜெயலட்சுமி
வரிகள்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: MSV
படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை
ராகம்: இந்தளப் பண்/ஹிந்தோள ராகம்

MSV இந்தளப் பண்ணில் கையே வைக்காம, சினிமாவுக்காக அட்ஜஸ்ட் பண்ணாம, அப்படியே ராகத்தைக் கொடுத்துட்டாரு போல!
அருமையாப் பாடி இருக்காங்க ராதா ஜெயலட்சுமி! செளகார் ஜானகி வீணை வாசிக்கறது தெரியுது!
பாடும் நடிகை யாரு-ன்னு தெரியலை! அழகா நளினமா இருக்காங்க!
மனம் எப்படி முருகனின் வாகனம் ஆகும்? 
மனத்தின் வேகம் போல, வேற ஒன்னும் இல்லை! Rocket-இல் செயற்கைக் கோள் விட்டாக் கூட, நிலவில் போய் இறங்க கொஞ்சம் நாளாவும்! ஆனால் மனம் அடுத்த நொடியில் போய், நிலவில் சேவல் கொடி பதிக்கும்! :)

ஆனா மனம் அது மட்டும் தான் செய்யுமா? வேற பலான பலான விடயம் கூடச் செய்யும்! அமலா, பாவனா, இலியானா வீட்டுக்கு எல்லாம் கூடப் போய் வரும்! :)

அப்படி அலை பாயுற மனசு! ஆனா அதை மயில் வாகனமா ஆக்கிட்டா?

மயில் மேல வேற யாராச்சும் ஒருத்தரு ஏறுவாங்களா?
அவன் ஒருத்தன் மட்டும் தானே ஏறுவான்! அவனுக்கே நான்! அவனுக்கே நான்! 

மற்றாரும் பற்றில்லேன்! நானே அவனோட மயில்!
சூரனை மயிலாய் மாற்றியது எல்லாம் அப்புறம் தான்!
அதற்கும் முன்பே முருகனுக்கு மயில் வாகனம் உண்டு!
நானே அவனோட ஆசை மயில்!
என் மாந்தளிர் மேனியே குகன் ஆலயம் = இதுக்கு என்னா சொல்றது!
வெட்கமா இருக்கு! பேசாம கீழே இருக்குற படத்தைப் பார்த்துக்கிடுங்க :)

ஆனா ஒன்னு மட்டும் சொல்லுறேன்!
* என் மேனி, வெளியிலும் அவனுக்குத் தான் = மயிலாக
* என் மேனி, உள்ளேயும் அவனுக்குத் தான் = ஆ+லயமாக = அவன் லயமாக!

மாந்தளிர் மேனியே குகன் ஆலயம்!
 முருகனோடு, உள்ளேயும், வெளியேயும், அவனுடனேயே இருப்பேன்!
அகலகில்லேன்! அகலகில்லேன்!

என் குரலே செந்தூரின் கோவில் மணி!
என் குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி!
முருகனருள் வலைப்பூவில் ஒலிக்கும் இனி!

Monday, May 03, 2010

TMS: முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு!

இந்தப் பாடல் முருகருளில் இம்புட்டு நாள் வராதது தான் வியப்பு!
அதனாலென்ன?
எப்போது எதை வெளிப்படுத்த வேணும் என்று நம்மைக் காட்டிலும் நன்மை காட்டும் முருகனுக்கு அல்லவா தெரியும்!
அந்த அருள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பது மட்டுமே பேதைக்குத் தெரியும்!

ஐயன் முருகனைக் கூப்பிட்டு...
ஐயன் முருகனைக் கூப்பிட்டு...




இந்தப் பாட்டைப் படிக்கும் போதும், பாடப் பக்கம் நின்று கேட்கும் போதெல்லாம்...
அதுவும் TMS குரலில்...
இந்தச் செவ்வாயில், செவ் வாய் மணக்க, சேயோனை...இதோ...கேட்டுக்கொண்டே வாசியுங்கள்!

குரல்: TMS
வரிகள்: எம்.பி. சிவம்
இசை: டி.கே. புகழேந்தி

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!

உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே!!
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)

குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு
குறைகள் யாவும் போகுமே!
அவர் குடும்பம் தழைத் தோங்குமே!
சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால்
சகல பயம் நீங்குமே!!
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)

அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்
அருகில் ஓடி வருவான்!
அன்பு பெருகி அருள் புரிவான்!
அந்தக் கருணை உருவான குருபரன்
என்றுமே கைவிடாமல் ஆளுவான்!!
(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
காரியம் கைகூடுமே!
பகை மாறி உறவாடுமே!
சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி
மேன்மை உயர்வாகுமே!!
(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)


என்றுமே கைவிடாமல் ஆளுவான்


ஐயன் முருகனைக் கூப்பிட்டு...
ஐயன் முருகனைக் கூப்பிட்டு...
என் ஐயா...என் ஐயா...
இனியும் நான் உன்னைக் கூப்பிடாது, நீ என்னைக் கூப்பிட்டுக் கொள்!

Tuesday, April 20, 2010

சிவாஜியின் Walking ஸ்டைல் - யார் இந்த வீரவாகு?

கந்தன் கருணையில், பலரும் பார்த்து இருப்பீங்க! நடிகர் திலகம் சிவாஜி நடந்து காட்டும் ஸ்டைலை! :)
அந்தப் படத்தில் ஹீரோ என்ன தான் முருகனாக (சிவகுமார்) இருந்தாலும், Focus என்னமோ வீரவாகு மேலத் தான் விழும்! All Bcoz of Sivaji! :)

வீரவாகு அப்படித் தான் நடந்தாரோ, தெரியாது! ஆனால் சிவாஜி நடந்து காட்டுவது, ஒரு அணிவகுப்பு-ன்னா என்ன என்பதைக் கண் முன்னே கொண்டாந்து நிறுத்தும்!

அட, இப்படியெல்லாம் கூட யாராச்சும் நடப்பாங்களா என்ன? இதெல்லாம் ஓவர் ஆக்டிங் என்று சிலர் பேசலாம்! ஆனா, யாராச்சும் சிகெரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பாங்களா-போன்ற கேள்விகள் மட்டும் வரவே வராது!
யாரு அட்ஜஸ்ட் பண்ணிக்கறாங்களோ அவிங்கள தான் உலகம் அட்ஜஸ்ட் பண்ணிக்கச் சொல்லும்! கேள்வியெல்லாம் இது போன்ற ஆட்களை நோக்கித் தான் :)


சிவாஜி ஓவர் ஆக்டிங்கோ இல்லையோ, இவர்கள் ஓவர் ரியாக்டிங் என்பது வேணும்னா உண்மையா இருக்கலாம்!
அட, உணர்ச்சிகளை உள்ளபடியே காட்டாம, நடிப்புக்குள்ள கூட நடிக்கணும் என்பது தான் இவர்கள் எதிர்பார்ப்போ?



முன்பே சஷ்டிப் பதிவில் பார்த்தது போல்.....சூரசங்காரம் நடந்த இடம் திருச்செந்தூர் அல்ல! தமிழ் ஈழத்தில் உள்ள ஏமகூடம் என்ற இடமே அது!
செந்தூர் என்பது படைவீடு (Battle Camp) மட்டுமே! சூரனுக்கு எதிரான தேவர் படைகளைத் திரட்டி, போர் துவங்கும் முன்னால், அணி வகுப்பைப் பார்வையிடுகிறான் சேனாபதி!

எந்தச் சேனாபதி? கந்தச் சேனாபதியா?

தேவ சேனாபதி என்னவோ = முருகன் தான்!
ஆனால் முருகச் சேனைக்கும் ஒரு சேனாபதி உண்டு = அவன் தான் வீரவாகு!

யார் இந்த வீரவாகு?

* முருகன் = அன்னையவள் கரம் படாது, நேராகத் தந்தையவர் கண்ணில் தோன்றியவன்!
* வீரவாகு = தந்தையவர் கரம் படாது, நேராக அன்னையவள் காற்சிலம்பில் தோன்றியவன்!

தந்தையின் கண்களில் இருந்து, ஆறு முருகன்கள் தோன்றிய அதே வேளையில்...
அன்னையின் காற் சிலம்பு வெடித்து, அதில் நவ சக்திகள் என்னும் ஒன்பது சக்திகள் தோன்ற, அதில் முதல்வன் இந்த வீரவாகு!
விநாயகருக்குப் பதிலாக, முருகன்-வீரவாகு தான் அண்ணன்-தம்பி என்று உறவாய்க் கூடச் சிலர் கொள்வதுண்டு!

வீரபாகு, முருகனைப் போலவே அழகன்! ஆற்றல் மிக்கவன்!
இவனைப் பற்றிய சங்கத் தமிழ்ப் பாடல்கள் உள்ளனவா என்று ஆய்ந்து பார்க்க வேண்டும்!
தமிழ்க் கடவுளான குறிஞ்சிக் கடவுளைப் பற்றி ஆர்வம் உடையோர்கள், வீரவாகுவைப் பற்றிச் சற்றே முயன்று பார்த்துச் சொல்லலாமே! முருகாற்றுப்படை நக்கீரரிடமிருந்தே கூடத் துவங்கிப் பார்க்கலாம்!

முருகனைப் பற்றிக் கிடைக்கும் குறிப்புகள் போல், வீரவாகு பற்றி தனிக் குறிப்புகள் அவ்வளவாக கிடைப்பதில்லை!
ஆலயங்களில் கூட இடும்பனுக்கு உண்டு! ஆனால், வீரவாகு-க்கு தனியான சன்னிதிகள் அவ்வளவாக இல்லை! திருச்செந்தூரில் முன் மண்டபத்தில் வீரவாகு வாயிற் காப்போனாக இருப்பான்-ன்னு நினைக்கிறேன்!
சுவாமிமலையில் இலக்குமியாகிய திருமகள் சன்னிதிக்கு அடுத்து, வீரவாகு சன்னிதி உண்டு!



முருகன், பால முருகனாய் வளர்ந்து வரும் போது, வீரவாகுவும் அங்ஙனமே வளர்ந்து வந்தான்!
சொல்லப் போனால், முருகனின் வீர தீரச் செயல்களுக்கு முன்னமேயே, வீரவாகுவின் வீரம் தான் முதலில் பேசப்படுகிறது!

நாரதரின் வேள்வியில் உதித்த ஆடு, ஊருக்கே உலை வைக்க, அதை வீரவாகுச் சிறுவனே முதலில் அடக்கி, முருகனிடம் சேர்ப்பிக்கிறான்! இந்த ஆடே முருகனின் முதல் வாகனமாக ஆகின்றது!

முருகன், திருமாலின் புதல்வியருக்குத் தோன்றி, அவர்களை மணங் கொள்ள இசைந்து, வாக்கு கொடுக்கும் போதும், வீரவாகு உடன் இருக்கின்றான்!
முருகன், ஈசனின் வேலாயுதத்தை, அன்னையின் கையால் பெற்றுக் கொள்ளும் போதும், வீரவாகு உடன் இருக்கின்றான்!

போருக்குச் செல்லும் வழியில், தாருகன் பெரும் மலையாக நின்று தடுக்கிறான்! வீரவாகு தான் முதலில் எதிர்க்கச் சென்று, அசுரர்களின் மாயத்தில் மாட்டிக் கொள்ள...
அதன் பின்னரே முருகன் கிரெளஞ்ச மலைக்கு வந்து, மலைமாவு சிந்த வடிவேல் எறிகிறான்! மலைச்சிறையில் இருந்து வீரவாகுவை மீட்டு எடுக்கின்றான்!

பின்னர் திருச்செந்தூரில் படைவீடு அமைத்து, சிவபூசை செய்யப்படுகிறது!
தேவதச்சன் அமைத்த மயிலாசனத்தில் அமர்ந்து, சூரனின் முழுக் கதையினையும், தேவ குரு சொல்லக் கேட்கின்றான் முருகன்!
அதன் பின்னரே, வீரவாகுவைத் தன் தூதுவனாக அசுரனிடம் அனுப்பி வைக்க ஏற்பாடு ஆகின்றது!

இங்கு தான் வீரவாகுவின் பல சாகசச் செயல்கள் பேசப்படுகின்றன! கிட்டத்தட்ட இராமாயணக் கதைக் களன் போலவே இருக்கும்!


வீரமகேந்திரபுரத்தில் நுழைந்த வீரவாகு, முதலில் சந்திப்பது, சிறையில் இருக்கும் ஜெயந்தனைத் தான்!
ஏன்-னு தெரியலை! ஜெயந்தன் இந்திர குமாரன்! அவனுக்கு ஆறுதல் கூறி, முருகன் உன்னை விடுவிக்க வருவான் என்று நம்பிக்கை ஊட்டுகின்றான்! பின்னரே அசுர சபைக்குச் செல்கின்றான்!

சபையேறி வந்தவனைக் கண்ணியம் கூட தராமல் நடத்துகிறது படித்த சூர உள்ளம்!

ஆனால் முருகனருள் முன்னிற்காதோ!
இதய ஆசனத்தில் முருகன் இருக்க, மதியாதார் வாசலிலும் ஆசனம் தோன்றுகிறது!
தூது பேசுகிறான் வீரவாகு! காதற்ற ஊசியில் நூல் நுழையுமோ? கடும் நெஞ்சில் நூலோர் சொல் நுழையுமோ?

தூது தோல்வியில் முடிகிறது! வீரவாகுவைச் சிறைப்பிடிக்க ஆணையிடுகிறான் சூரன்! வீரவாகுவோ தன்னை அடக்க வந்த சூரனின் மகன் வச்சிரவாகுவைக் கொல்கிறான்! சதமுகன் முதலான பிற படைவீரர்களையும் கொன்று...
அத்தாணி மண்டபத்தை அழித்து, தூதின் தோல்வியில் தளர்ந்து, செந்தூர் முருகனிடமே மீண்டு வருகின்றான்!

போர், ஈழத்தில், ஏமகூடத்தில் துவங்குகிறது! பல அசுர மாயங்கள் அரங்கேறுகின்றன!
சூரனின் மகன் பானுகோபன், மாயாயுதம் எறிந்து, வீரவாகுவை நன்னீர்க் கடலில் மூழ்கடிக்கிறான்!
அப்போது தான், முருகன் வீரவாகு மேல் வைத்த பாசம் தெரிய வருகிறது!


வீரவாகு வீழ்ந்தான் என்னும் போது தான், கோபமே கொள்ளாத நம்ம Cool Guy முருகனும், ஊரறிய முதலில் கோபப்படுகிறான்! வீரவாகுக்கு என்னவாயிற்றோ என்று அப்படி ஒரு பதைபதைப்பு!
என் முருகா - ஆர்வலர் புன்கண்ணீர் பூசல் தரும் - என்பது உன்னளவில் மட்டும் என்னிக்குமே உண்மை தான் முருகா!

மாயாயுதம் தகர ஞானாயுதம் எறிந்து, தன் அன்பனை மீட்டெடுக்கிறான் முருகன்!
பத்தாம் நாள் போரில், மாயத்தால் எங்கும் இருட்டாக்கி, அதே நன்னீர்க் கடலுக்குக் கீழே சென்று, மாமரமாய்....மரத்துப் போய் நிற்கிறான் சூரன்!
பிடிவாதம்! அதுவும் தலைகீழாக! வேர்கள் மேலே! கிளைகள் கீழே!

அப்போது தான்...........வேலால் வெஞ்சூர் பிளந்து, மயில் வாகனமாகவும், சேவற் கொடியாகவும் ஆக்கிக் கொள்கிறான், ஐயன் முருகன்!
முருகனின் ஆணையால், மொத்த வீரமகேந்திரபுரத்தையும், கடலில் மூழ்கடிக்கிறான் வருணன்!

செந்தூர் திரும்பி, மீண்டும் சிவபூசை நடக்கிறது!
* கையில் செபமாலையுடன் இன்றும் செந்தூர் முருகனைக் கருவறையில் காணலாம்!
* அந்த முருகனுக்குக் காவலாக, வீரவாகுவை இன்றும் அர்த்த மண்டபத்தில் காணலாம்!


இது தான் வீரவாகு-வின் சுருக்கமான கதை! :)
என் முருகனுக்கு வேண்டியவர்கள் எல்லாம், எனக்கும் வேண்டியவர்கள் அல்லவா! அவர்கள் நலத்தை இங்கு முருகனருளில் சொல்ல வைத்த முருகனருளை எனக்கு ரொம்பவே பிடிக்கும்! :)

இதோ, நடிகர் திலகம் சிவாஜியின் அந்த வீரவாகு பாடல்!!


வெற்றிவேல்! வீரவேல்!
சுற்றிவந்த பகைவர் தம்மைத்
தோள் நடுங்க வைத்த எங்கள்
சக்திவேல்! ஞான சக்திவேல்!

ஆதிசக்தி அன்னை தந்த ஞானவேல்!
அசுரர் தம்மை அஞ்சவைத்த வீரவேல்!
மோதி அந்தக் குன்றழித்த சக்திவேல்!
முவர் தேவர் வாழ்த்தவந்த வெற்றிவேல்!
(வெற்றிவேல்...வீரவேல்)

தெய்வம்உண்டு தெய்வம்உண்டு என்றுசொல்லும் வெற்றிவேல்!
தெய்வபக்தி உள்ளவர்க்குக் கைகொடுக்கும் வீரவேல்!
எய்தபின்பு மீண்டும் கந்தன் கையில்வந்து நின்றவேல்!
எங்கும்வெற்றி எதிலும்வெற்றி காணும்எங்கள் சக்திவேல்!
(வெற்றிவேல்...வீரவேல்)

வானத்தோடு பூமிதொட்டு வளர்ந்துநிற்கும் மாயவேல்!
இமயம்தொட்டுக் குமரிமட்டும் காத்துநிற்கும் சக்திவேல்!
ஆதிவேல்! அழகுவேல்! அன்புகாட்டும் தூயவேல்!
அகிலமுற்றும் புகழ்பரப்ப வேலெடுத்த முருகவேல்!
(வெற்றிவேல்...வீரவேல்)

குரல்: TMS
வரிகள்: ???
இசை: கே.வி. மகாதேவன்
ராகம்: நாதநாமக்ரியை
படம்: கந்தன் கருணை

Monday, April 12, 2010

பி.சுசீலாவின் முதல் முருகன் பாட்டு! - வைகறைப் பொழுதில் விழித்தேன்!

வணக்கம் மக்களே! இன்னிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை! வெளிய வெயில் காய்ஞ்சாலும் உள்ள படபட-ன்னு குளிருது! :)
அதனால், இந்தச் செவ்வாய்க்கு....ரொம்ப எழுதாமல்...

ஒரு அபூர்வமான பாட்டு முருகனருளில்! கிட்டத்தட்ட சுசீலாம்மாவின் முதல் முருகன் பாட்டு-ன்னே சொல்லீறலாம்-ன்னு நினைக்கிறேன்! நீங்களே கேட்டுப் பாருங்க! சுசீலாம்மாவின் ஆரம்ப காலக் குரல்!

பாட்டில் நாதசுரமும் இருக்கு! இருந்தாலும் சுசீலாவின் குரல் நாதசுரத்துக்குப் பொருந்தி வருது - ஜானகியை விட! :) இது பற்றிய கேள்வி ஜானகி-சுசீலா பதிவில் இருக்கு! :)




வைகறைப் பொழுதில் விழித்தேன் - அந்த
வடிவேல் முருகனை நினைத்தேன்
நெஞ்சத்தை மலராய்த் தொடுத்தேன் - அவன்
நினைவில் காலத்தைக் கழித்தேன்!
(வைகறைப் பொழுதில்)

திருப்புகழ்த் தேரில் இழுத்தேன் - அதை
தினமும் மனத்தால் சுவைத்தேன் - என்
தேவைகள் யாவையும் உரைத்தேன் - அவன்
திருவருள் தந்தான் களித்தேன்!
(வைகறைப் பொழுதில்)

உள்ளத்தில் கோயிலை அமைத்தேன் - பக்தி
உணர்வில் ராகத்தை வளர்த்தேன்
ஓம் எனும் மந்தரம் படித்தேன் - அவன்
கருணையைப் பொழிந்தேன் மகிழ்ந்தேன்!
(வைகறைப் பொழுதில்)

சூடிடும் குறிஞ்சி மலராவான் - அவன்
ஏந்திடும் தீபத்தின் ஒளியாவான் - மெய்
அருள் வரும் ஞானக் களியாவான் - என்றும்
அவனே வாழ்வுக்கே உயிராவான்!
(வைகறைப் பொழுதில்)

ஓம் சரவண பவாய நம ஓம்!

வரிகள்: ?
இசை: ?
குரல்: பி.சுசீலா


ஓம் சரவண பவாய நம ஓம் என்று அழகாக இழுத்து முடிக்கிறார்!

சின்ன வயசில், ஊரில் மார்கழி மாசம் போது, இந்தப் பாட்டைத் தான் வைகறைப் பொழுதில் மொதல்ல போடுவாங்க! திருப்பாவை ஒலிக்க விடுவதற்கு முன்பு, இந்தப் பாட்டு தான் ஒலிக்கும்! ஏன்-ன்னா சவுண்ட் சர்வீஸ் அண்ணா (பாஸ்கர்-ன்னு நினைக்கிறேன்) ஒரு தீவிர முருக பக்தர்! :)

நானும் "வைகறைப் பொழுதில் விழித்தேன்"-ன்னு கேட்டுக்கிட்டே தான் விழிச்சி இருக்கேன்! அப்பறம் தான் திருப்பாவை! யாரோ ராகமாப் பாடுவாங்க ஸ்பீக்கர்-ல! ஒரே லைனை பத்து வாட்டி இழுப்பாங்க! அது அவ்ளோ நல்லா இருக்காது சுசீலாம்மா பாடுவதைப் போல்! :)
இருந்தாலும் திருப்பாவை ஆச்சே! எப்படி வுட்டுக் கொடுக்கறது? மனசு வராதே! விதியே-ன்னு முப்பது பாட்டும் ஸ்பீக்கர்-ல்ல கேட்டுக்கிட்டே, கோயிலடி-கிணத்தடி-மஞ்சக் காப்பு அரைக்கிறது போல வேலையெல்லாம் முடிச்சி இருப்பேன்!

ஐயமாரு, அவிங்க வீட்ல தனி வாளியில் பொங்கியாந்த பொங்கலை, எனக்குத் தனியாக் கூப்புட்டுக் கொடுப்பாரு! பெருமாள் சாப்பிடாம அவரு சாப்பிட மாட்டாரு! ஆனா என்னைய மட்டும் சாப்பிடச் சொல்வாரு! சின்ன புள்ள ஒத்தை ஆளா மஞ்ச அரைச்சிருக்கேன்-ல்ல? :)
நானும் பெருமாள் சாப்புட்டாரா-ன்னா சென்ட்டி எல்லாம் அப்போ பார்த்ததில்லை! நல்ல புள்ளையா, பசியிலும் குளிரிலும் சுடச்சுட எறங்கும்! :)

Btw, திருப்பாவை முப்பதும் சுசீலாம்மாவும் தன் ஸ்டைலில் பாடி இருக்காங்க! யாராச்சும் சுட்டியோ, தகவலோ கொடுங்களேன்! புண்ணியமாப் போவும்!

சரி...என் முருகன் பாட்டுக்கு வருவோம்! நான் பேச்செடுத்தாலே பொறந்த வீட்டு பெருமாள் பேச்சு வந்துருது-ல்ல? :)
இந்தப் பாட்டில் தேன் தேன்-ன்னு வருது, கவனிச்சீயளா?
இப்படி சுசீலாம்மாவின் முதல் முருகன் பாட்டே தேனாகி...
பின்பு காலமெல்லாம் தித்திக்கும் பாடல்களைத் தந்தது!

நெஞ்சத்தை மலராய்த் தொடுத்தேன்!
அவன் நினைவில் காலத்தைக் கழித்தேன்!
அவன் நினைவில் காலத்தைக் கழித்தேதேதேதேன் - என்பதில் தான் எத்தனை "தேன்"!!! செல்வமே முருகாஆஆஆ!

Friday, April 09, 2010

மாயக் குறமாதின் மனம் மேவும் வாலக் குமரேசா!


திருப்புகழ் பாடல்கள் முதன்முறையாகப் படிக்கும் போது கடினமாக இருப்பது போல் தோன்றும். அவையே இசைவாணர்கள் பாடக் கேட்டால் எளிமையாக இருப்பது போல் தோன்றும். அவ்வகையிலான ஒரு பாடல் இது.

பதிவு எழுத வந்த புதிதில் (2005 நான்காவது காலாண்டில்) கால்கரி சிவா அண்ணா இப்பாடலின் எம்பி3 அனுப்பினார். அதனை இன்று தான் ஜிமெயிலில் கண்டெடுத்து இங்கே இட முடிந்தது.

கலை மேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் கடலேறிப்
பல மாய வாதிற் பிறழாதே
பதி ஞான வாழ்வைத் தருவாயே
மலை மேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் குமரேசா
சிலை வேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் பெருமாளே


இப்பாடலை கந்தர்வக் குரலோன் ஜேசுதாஸின் குரலில் இங்கே கேட்கலாம்.

பாடலின் பொருளை எஸ்.கே. ஐயாவோ இரவிசங்கரோ தந்தால் மிக நன்றாக இருக்கும். இரவியின் எதிரே ஒரு மின்மினி ஆடுவதைப் போல் இப்பாடலுக்குப் பொருள் தர விழைகிறேன். அவர்கள் வந்து இன்னும் அழகான பொருள் தருவார்கள்!

மலை மேவு மாயக் குறமாதின் - வள்ளிமலையில் வாழும் வியப்பூட்டும் அழகை உடைய குறப்பெண்ணான வள்ளியம்மையின்

மனம் மேவும் வாலக் குமரேசா - மனத்தில் நிலையாக வீற்றிருக்கும் என்றும் இளையவனான குமரேசா!

சிலை வேட - வில்லையேந்திய வேடனே!

சேவற் கொடியோனே - சேவலைக் கொடியாகக் கொண்டவனே!

திருவாணி கூடற் பெருமாளே - திருவும் வாணியும் கூடும் திருவாணிக்கூடலாம் பவானியில் எழுந்தருளும் பெருமாளே!

கலை மேவு ஞானப் பிரகாசக் கடலாடி - எல்லா கலைகளையும் தனக்குள் வைத்திருக்கும் ஞான ஒளியாகிய கடல் முருகப்பெருமான்; அக்கடலில் திளைத்து ஆடி,

ஆசைக் கடலேறிப் - ஆசைகள் என்னும் பெருங்கடலை அவன் கருணையால் நீந்திக் கடந்து, மற்றை நம் காமங்கள் அவன் அருளாலே தீர்ந்து,

பல மாய வாதிற் பிறழாதே - பல வகையான மனத்தை மயக்கும் வீண் வாதங்களில் அடியேன் வழி தவறிச் செல்லாமல்,

பதி ஞான வாழ்வைத் தருவாயே - பசு, பதி, பாசம் என்னும் மூவகைப் பொருள்களைப் பற்றிய ஞானமும் அதனை ஒட்டிய அன்பு வாழ்க்கையும் தருவாயே!

Monday, April 05, 2010

கமல்-ஸ்ரீதேவி முருகன் பாட்டு! - வடிவேலன் மனசு வச்சான்!

சில பாடல்களில்... கமல்-ஸ்ரீதேவி தனியாத் தெரிவாங்க! ஆனா அந்த Romance-இல் என் முருகன் தெரிவானா? :)
இந்தப் பாட்டைக் கேளுங்க, பதில் உங்களுக்கே தெரிஞ்சிடும்!

இதில் கமலும்-ஸ்ரீதேவியும் ஸ்டைலாகச் சொடுக்கிச் சொடுக்கி ஆடுவது...
எனக்கென்னவோ...
தினைப்புனத்தில் முருகனும்-வள்ளியும் ஆடுவது போலவே இருக்கும்! அப்படித் தான் கற்பனை பண்ணிக்குவேன்! :)



அப்போ சென்னைக்கு வந்த புதுசு; தண்ணிப் பஞ்சம் வேற;
கீழே இருந்து மாடிக்கு, தண்ணிக் குடம் சுமப்பதற்குள், என் bend-u கழண்டுரும்:)
அப்பல்லாம் வானொலிப் பாட்டு தான்,  புள்ளைக்கு உற்சாகம்!

வீட்டில் ஒரு Sharp Tape Recorder;
பள்ளி ஆசிரியர் வாங்கிக் குடுத்தது; அப்பா, காசெட்டில் (TDK 45 , 60  and 90), "உள்ளம் உருகுதைய்யா" தான் முதலில் பதிஞ்சி வைப்பாரு;
எல்லாக் காசெட்டிலும் மொத பாட்டு இதே வச்சா, கோவம் வருமா? வராதா? நீங்களே சொல்லுங்க!:)

சின்னப் புள்ள எனக்கோ, "வடிவேலன் மனசு வைச்சான்" கேட்டதில் இருந்து, அதை Record பண்ண ஆசை! (TMS க்காக மட்டுமில்லை; but for Sridevi also:)))

ஒரு நாள் வானொலியில் ஒலிபரப்பும் போது,
நான் Record+Play Button, சேர்த்து அழுத்தி விட,
அது "உள்ளம் உருகுதையா" மேல் பதிஞ்சி போயிரிச்சி;

அவ்ளோ தான்; அப்பா என்னை விளாசித் தள்ளிட்டாரு;
பாட்டி தான் ஒன்னும் புரியாம..
"வடிவேலன் மனசு வச்சான்" கூட முருகன் பாட்டு தானேடா? எதுக்கு கொழந்தைய அடிக்கற? -ன்னு... அப்பவே, என் "முருக பக்தியை" மெச்சினாங்க:))


தாயில்லாமல் நானில்லை!
எம்.ஜி.ஆர் பாட்டு இல்லீங்க! இது கமலஹாசன் நடித்த படம்!
ஹீரோவான பிறகு, ரஜினி வில்லனாக நடித்த படமும் கூட!

மருத்துவமனையில் இருந்த போது, அருகிலேயே உள்ள வாகினி ஸ்டூடியோவுக்கு, ரஜினி தானே விரும்பிச் சென்று, ஒரு சீனில் சான்ஸ் கேட்டு நடித்த படம்! தேவர் ஃபிலிம்ஸ் படத்தின் மதிப்பு அப்படி!

இளவரசியான ஸ்ரீதேவியை, இசைக் குழுவின் கமல் காதலிக்க... ஸ்ரீதேவியின் அப்பா-சமஸ்தான மகாராஜா, ரவுடி ரஜினியை ஏவி விடுவார்!
ஆனால் ஸ்ரீதேவி தன் உள்ளம் பொங்க அழுது....காதலை வெளிப்படுத்த, ரஜினி மனம் மாறி, வாழ்த்தி விட்டுப் போய் விடுவார்!

இதில் வரும் கமல்-ரஜினி சண்டைக் காட்சிகளில்,
நீண்ட நாள் கழிச்சி, மறுபடியும் இரு தரப்பு ரசிகர்கள்.....நிஜமாலுமே சண்டை போட்டுக் கொண்டார்களாம்! அப்போவெல்லாம் பதிவுலகம் என்பது இல்லை போல! :)

சரி நாம பாட்டுக்கு வருவோம்!
* எப்போதும் உடனிருக்கும் மயிலார் (அவரு பேரு: வடிவேலன்),
* காதலர்கள் களிப்பிலும் உடன் இருக்க...
* ஸ்ரீதேவி பக்குவமா மயிலைக் கொஞ்சி...
* "ஹேய்...யாராச்சும் வெளிய வராங்களா-ன்னு பாத்துக்கோ"-ன்னு சொல்ல...
* மயிலார் தத்தித் தத்தி அழகா நடக்க...
* இதுல மயில் அகவுற சத்தமும் கேட்கும்.....யாராச்சும் இதுவரை கேட்காதவங்க கேட்கலாம்! :)

இதோ...முருகனும் முருகியும், அவனும் அவளுமாய்....
பாட்டின் நடுவில் வரும் மெட்டு...
தத்தாத தானா...... தத்தாத தானா.......
தத்தாத தாந் - தனா தானா!

முன்பெல்லாம் தனியறையில் நானும் இப்படியெல்லாம் பாடிக்கிட்டே ஆடுவேன்! அதில் ஒரு தனிப்பட்ட சுகம்! :))

இதோ பாடல், கேட்டுக் கொண்டே படிங்க!


படம்: தாயில்லாமல் நானில்லை
இசை: சங்கர் கணேஷ்
குரல்: TMS & பி.சுசீலா


வடிவேலன்
மனசு வச்சான், மலர வச்சான், மணக்குது ரோஜாச் செடி!
மாந்தோப்பு ஜோடிக்கிளி! மங்காத தங்கக்கொடி!!

(தத்தாத தானா..
தத்தாத தானா...
தத்தாத தாந் தனா தானா!)

அச்சாரமா ஒண்ணு கொடு, ஆராயிரம் அள்ளிக்கொடு!
இந்த மச்சான் வந்து மாலை இடுவான்!
வருவான் தருவான்! வருவான் தருவான்!

செவ்வத்திப்பூ கன்னத்துக்குள், தேனூறுது என்னத்துக்கு?
சின்னச் சிட்டு உன்னைக் கட்டிப் புடிப்பா
கொடுப்பா...முடிப்பா! கொடுப்பா...முடிப்பா!
(வடிவேலன்)

அன்னக்கொடி சின்ன இடை! அம்மாடியோ என்ன நடை!
அடி கண்ணால் ஏண்டி கட்டி இழுத்த?
சிரிச்சேன்...ரசிச்சேன்! சிரிச்சேன்...ரசிச்சேன்!

இந்நேரமாக் கண்ணுறங்கேன்! என்னென்னமோ கொண்டுவந்தேன்!
அந்தக் கந்தன் வள்ளி இந்தக் கதை தான்!
அதுதான்...இதுதான்! அதுதான்...இதுதான்! :)
(வடிவேலன்)


இது முருகன் பாட்டு தானா? முருகனருளில் போடலாமா?
அதுவும், செவ்வாய்க் கிழமை அதுவுமா?
என் முருகனின் "செவ்"வாய் இனிமைக்குக் கிழமை ஏது? எந்நாளும்.....அவன் அதரம் மதுரம், வதனம் மதுரம்! So,

அந்தக் கந்தன் வள்ளி இந்தக் கதை தான்!
அதுதான்...இதுதான்!
My Darling Boy Muruga! - அதுதான்...இதுதான்! :)

பாட்டு நல்லா இருந்திச்சா? :)
எண்பதுகளில், TMS-சுசீலாம்மா ஜோடி சேர்ந்து பாடுவது....அதுவும் இளைய தலைமுறை கமல்-ஸ்ரீதேவிக்கு என்பது அபூர்வம்! அதில் இது ஒன்னு!

Wednesday, March 31, 2010

ஜானகியா? சுசீலாவா? - சிங்கார வேலனே தேவா!

முருகனருள்-150 உற்சவத்தின் தொடர்ந்த தொடர்ச்சியாக...
149 - உனக்கும் எனக்கும் கல்யாணமா!
150 - கவிக் காவடி

சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?
உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு, ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா! பாடு சாந்தா, பாடு!


இது நம்மில் எத்தனை பேருக்கு மனப்பாடம் ஆன வரிகள்! கல்லூரியில் இதை வைத்துச் செய்யாத கேலியா? ஆனால் இன்று இந்தப் பாட்டைத் தனிமையில் (ஏகாந்தமாக) கேட்கும் போது, அப்படியே மனம் லயித்து விடுகிறது!
நாதசுரச் சக்கரவர்த்தி, காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களின் வாசிப்பு அப்படி!

காட்சியை youtube-இல் ஓட்டாமல், மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள்!
ஜெமினியின் அசைவுகள், நடிகையர் திலகம் சாவித்திரியின் நளினம், கே.சாரங்கபாணியின் கன ஜோரான பாவனை-அதுவும் உதட்டைப் பிதுக்கித் தவில் கொட்டும் ஸ்டைலே தனி!

"சிங்கார வேலனே தேவா" = இதைப் பாடுவது ஜானகியா? சுசீலாம்மாவா?

சந்தேகமே இல்லை! "Melody Queen of the South" எனப்படும் ஜானகியே தான்!
* சரி, இந்தப் பாட்டை ஏன் சுசீலாம்மா பாடவில்லை?
* ஜானகி = "Melody Queen of the South" என்றால், சுசீலாம்மா = "Music Queen of the South" ஆச்சே?
* ஜானகி = "இன்"னிசை அரசி! சுசீலாம்மாவோ = "இசை" அரசி!
* அப்பறம் ஏன் இதைச் சுசீலாம்மா பாடவில்லை?
யார் பாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்-ன்னு நினைக்கறீங்க? சொல்லுங்க பார்ப்போம்! :)

இந்தப் பாட்டுக்கு ஒரு பின்னணிக் கதையும் உண்டு, வாரீகளா? பார்க்கலாமா?



இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, முதலில் இந்தப் பாட்டைப் போடுவதாக இல்லை! அவர் போட எண்ணிய பாட்டு, ஞான சம்பந்தரின் தேவாரப் பாடல்! - "மந்திரம் ஆவது நீறு, வானவர் மேலது நீறு"!
இதைத் தான் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் வாசித்து விட்டுச் சென்றாராம் நாதசுரத்தில், இப்போதைய மெட்டில்! நம்ப முடியலை-ல்ல? :)
karaikurichi

பின்னர்...வெறுமனே நாதமாக இல்லாமல், ஒரு பாடகியின் குரலும் சேர்ந்து ஒலித்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல, எஸ்.ஜானகி வரவழைக்கப்பட்டார்!
தேவாரப் பாடலும் ஏனோ மாறியது! கவிஞர் கு.மா.பா "சிங்கார வேலனே தேவா" என்று மாற்றி எழுதினார்! ஜானகி பாடினார்!
தகப்பனுக்கு வர வேண்டிய புகழை, தகப்பன்-சாமி தட்டிச் சென்று விட்டான்! :)

ஆனால் காருக்குறிச்சியார், தேவாரம்-ன்னு நினைச்சி, ஏற்கனவே வாசித்துக் கொடுத்தது, கொடுத்தது தான்! அதை மாற்ற யாருக்கும் மனமில்லை!
பாடலையும், இசையும் பின்னர் காப்பி & பேஸ்ட் செய்தார்கள்! ஆனால் கேட்கும் போது அப்படி மிக்ஸ் செய்தார்கள் என்று சொல்லத் தான் முடியுமா?
அத்தனை நேர்த்தி! எப்போ? = 1960-களில்! கீ-போர்ட் வந்து கீச் கீச் என்னாத கால கட்டம்! :)


சரி, இவ்வளவு கனமான, கர்நாடக இசை மலிந்த ஒரு பாட்டுக்கு...
அதுவும் ஆபேரி ராகமாம்...(நமக்குத் தெரிஞ்சதெல்லாம் ஸ்டராபேரி, கையில் எப்பமே இருக்கும் ப்ளாக்பேரி தான்! :)

இப்படி ஒரு நுணுக்கமான மரபு இசைக்கு, எப்படி ஜானகியைத் தேர்வு செய்தார் இசையமைப்பாளர்?
இத்தனைக்கும், இதற்கு முன்பு ஜானகி அவர்கள், அவ்வளவா கனமான பாடல்களைப் பாடியதும் இல்லை! அப்போது தான் அவர்கள் சினிமாப் பயணமே ஆரம்பம்!

கனரக மரபிசைப் பாடல்கள் - அதுவும் வேகமா - சாம்பிளுக்கு இதோ:
* சுசீலாம்மா = மன்னவன் வந்தானடி தோழி, மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன, இரவும் நிலவும் வளரட்டுமே..
* ஜானகி = சிங்கார வேலனே தேவா, சங்கராபரணம்-சாமஜ வர கமனா (கீச் கீச் நிறையவே உண்டு :)
* வாணி ஜெயராம் = ஏழு ஸ்வரங்களுக்குள், கேள்வியின் நாயகனே!

ஜானகி அவர்கள் பாடிய மரபிசை - சின்னத் தாயவள், சுந்தரன் ஞீயும் சுந்தரி ஞானும்...போன்ற பாடல்கள் எல்லாம் இனிமை தான்! சந்தேகமே இல்லை!
ஆனால் அந்தப் பாடல்கள், மன்னவன் வந்தானடி போல் "கனரகம்" இல்லை!

அப்படி இருக்க, "சிங்கார வேலனே தேவா"-என்னும் கனரகத்துக்கு, ஜானகி எப்படித் தேர்வானார் என்ற காரணத்தைத் தெரிஞ்சிக்கிட்டா மலைச்சிப் போயிருவீக! :)


இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, நாதசுரத்துக்கு-ன்னே ஈடு கொடுக்கக் கூடிய குரல்களைப் பல விதமா ஆய்வு பண்ணாராம்!
ஏன்-ன்னா நாதசுரத்துக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை! அம்புட்டு கனம்! அந்த சப்தத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய கனம் யாருக்கு இருக்கு?

பல பாடகர்களையும் பொருத்திப் பொருத்திப் பார்த்து, ஜானகி தான் நாதசுரத்துக்கென்றே மிகவும் இயைந்து பொருந்தினாராம்!

ஆந்திர அரசின் பி.சுசீலா விருதைப் பெறும் முதல் கலைஞர், எஸ்.ஜானகி


உம்ம்ம்ம்...என்ன காரணத்தால் அப்படிச் சொல்லப்பட்டதோ தெரியாது!
ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்தப் பாடலை, "மன்னவன் வந்தானடி" பாடிய சுசீலாம்மா பாடினால் எப்படி இருந்திருக்கும்?-ன்னு கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை! :)
பின்னாளில், நாதசுரத்துக்கும் தன்னால் ஈடு கொடுக்க முடியும் என்பதைத் தில்லானா மோகனாம்பாளில்...சுசீலாம்மா நிரூபித்துக் காட்டினார் = "மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன"?

அதற்காக ஜானகி அவர்களை இந்தப் பாடலுக்கு தோது இல்லை-ன்னு சொல்ல வரலை! நல்லாத் தான் பண்ணி இருக்காங்க!
ஆனா ஜானகிக்கு எப்பமே ஒரு "கிக்"கான மெல்லீலீலீய குரல்! அது நாதசுரத்துக்கு ஈடு கொடுக்க வல்லது-ன்னு "சொல்லப்பட்ட காரணம்" தான், எனக்குச் சட்டு-ன்னு பிடிபடலை!
அப்படிப் பார்த்தா, எல்.ஆர்.ஈஸ்வரி தான் நாதசுரத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய Best Choice! :)

மத்தபடி, காதல் பாட்டு-ன்னு வந்துச்சி-ன்னா, எப்பமே நான் ஜானகியின் பரம விசிறி-ன்னு பல பேருக்கு, குறிப்பா கண்ணன் பாட்டு வலைப்பூ வாசிச்சவங்களுக்கு நல்லாவே தெரியும்! Coz of that "kick"! :)

மேகம் கருக்குது, நிலாக் காயும் நேரம், பட்டுப் பூவே மெட்டுப் பாடு, இஞ்சி இடுப்பழகா, கொடியிலே மல்லியப்பூ, தாலாட்டுதே வானம் - இப்படிச் சதா சர்வ காலமும் ஜானகியைக் கேட்ட நான்...உம்ம்ம்...
Janaki Madam is a Very Good Companion = When You are in Happy Times! But am always so? முருகா!


சரி...சரி...சுசீலாவா?-ஜானகியா? இந்தச் சிக்கல்-ல நுழையும் முன்னாடி, சிக்கல் சந்நிதிக்குள்ளாற நுழைவோம் வாருங்கள்!

முருகன் ஊருலாத் திருமேனி (உற்சவர்) = சிங்கார வேலன்....கொள்ளை அழகு! வடித்த சிற்பி யாரோ?

இதழ்க் கோட்டோரம் புன் சிரிப்பு தவழும் வதனம்!
சைட் ஆங்கிலில் இருந்து பார்த்தால் கூட, நம்மைப் பார்ப்பது போலவே ஒரு பாவனை! படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்....தெரியும்!
சந்தனக் காப்பை முகத்தில் வழித்து விடும் போது...
அந்த இடது பக்க இதழோரமா.....
Two Lips-My Tulips....அப்படியே குவிச்சி என்னை என்னமோ பண்ணும்! :)

சிக்கல் சிங்கார வேலர்


(பெரு காதல் உற்ற தமியேனை நீ நித்தல் பிரியாதே! பட்சம் மறவாதே!
பெருவாழ்வு பற்ற அருள்வாயே! உனக்"கே" என்னை அருள்வாயே!

வாரணமாயிரம் சூழ வலஞ் செய்து
ஏரக முருகன் ஏகின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக், கனாக் கண்டேன்!
)

இக்கோவிலின் மூலமூர்த்தி முருகன் அல்ல! சிவனார் தான்!
பல புகழ் பெற்ற முருகன் கோயில்களிலும் இப்படியே - திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உட்பட!
இறைவன் = நவநீத ஈஸ்வரர் (வெண்ணெய்ப் பிரான்)! இறைவி = வேல் நெடுங் கண்ணி! சூர சங்காரத்தில், அம்மையிடம் முருகன் வேல் வாங்கும் போது, இந்தக் கோயிலில் ஒரு அதிசயம் காணலாம்! என்னென்று சொல்லுங்கள்? புதிரா புனிதமாவில் ஒரு முறை கேட்கப்பட்டது!

சரி வாங்க பாட்டைக் கேட்கலாம்!
For a change, முதலில் தெலுங்கில் கேட்போமா? :)

பயப்படாதீங்க! சூப்பரா இருக்கு! ஜானகியே தான் பாடறாங்க! - "நீ லீலா பாடித தேவா, மனதே ஆலிஞ்ச வேடக தேவா!"-ன்னு தெலுங்கில் வருது! படம்: முரிப்பிஞ்சே முவ்வாலு! கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!


படம்: கொஞ்சும் சலங்கை
வரிகள்: கு.மா.பாலசுப்ரமணியம்
குரல்: எஸ்.ஜானகி
இசை: எஸ்.எம்.சுப்பையாநாயுடு
நாதஸ்வரம்: காருக்குறிச்சி அருணாசலம்
ராகம்: ஆபேரி

தமிழில்...


சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா - திருச்
செந்தூரில் நின்றாடும் தேவா - முல்லைச்
சிரிப்போடும் முகத்தோடும் வாவா!

செந்தமிழ்த் தேவனே சீலா - விண்ணோர்
சிறைமீட்டுக் குறை தீர்த்த வேலா
சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா!


சரி...நாதசுரத்துக்கு ஈடுகொடுக்க வல்லவர்-ன்னு...ஆய்வு எப்படியோ இருக்கட்டும்....
அப்போது தான் திரைப் பயணத்தை ஆரம்பித்த ஜானகி அவர்களுக்கு,
முருகன் கொடுத்த அழகிய Lift என்றே இதைக் கொள்ள வேணும்!
இந்தப் பாட்டுக்கு அப்புறம் ஜானகியின் கொடி பட்டொளி வீசி பறக்கத் துவங்கி விட்டது!



படத்தில் ஜெமினி-சாவித்ரி பாடல் காட்சி:


Other Versions:

தவில் - வலையப்பட்டி:


கீ-போர்ட் சத்யா:


புல்லாங்குழலில்..விமல் என்ற இளங்கலைஞர்

மலையாளக் கலைஞர் Stephen Devassy on Keyboard:


மலையாளத் தொலைக்காட்சிப் போட்டி ஒன்றில்...அருணா மேரி:


கடைசீயா....நம்ம சின்மயி :)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP