மாயக் குறமாதின் மனம் மேவும் வாலக் குமரேசா!
திருப்புகழ் பாடல்கள் முதன்முறையாகப் படிக்கும் போது கடினமாக இருப்பது போல் தோன்றும். அவையே இசைவாணர்கள் பாடக் கேட்டால் எளிமையாக இருப்பது போல் தோன்றும். அவ்வகையிலான ஒரு பாடல் இது.
பதிவு எழுத வந்த புதிதில் (2005 நான்காவது காலாண்டில்) கால்கரி சிவா அண்ணா இப்பாடலின் எம்பி3 அனுப்பினார். அதனை இன்று தான் ஜிமெயிலில் கண்டெடுத்து இங்கே இட முடிந்தது.
கலை மேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் கடலேறிப்
பல மாய வாதிற் பிறழாதே
பதி ஞான வாழ்வைத் தருவாயே
மலை மேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் குமரேசா
சிலை வேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் பெருமாளே
இப்பாடலை கந்தர்வக் குரலோன் ஜேசுதாஸின் குரலில் இங்கே கேட்கலாம்.
பாடலின் பொருளை எஸ்.கே. ஐயாவோ இரவிசங்கரோ தந்தால் மிக நன்றாக இருக்கும். இரவியின் எதிரே ஒரு மின்மினி ஆடுவதைப் போல் இப்பாடலுக்குப் பொருள் தர விழைகிறேன். அவர்கள் வந்து இன்னும் அழகான பொருள் தருவார்கள்!
மலை மேவு மாயக் குறமாதின் - வள்ளிமலையில் வாழும் வியப்பூட்டும் அழகை உடைய குறப்பெண்ணான வள்ளியம்மையின்
மனம் மேவும் வாலக் குமரேசா - மனத்தில் நிலையாக வீற்றிருக்கும் என்றும் இளையவனான குமரேசா!
சிலை வேட - வில்லையேந்திய வேடனே!
சேவற் கொடியோனே - சேவலைக் கொடியாகக் கொண்டவனே!
திருவாணி கூடற் பெருமாளே - திருவும் வாணியும் கூடும் திருவாணிக்கூடலாம் பவானியில் எழுந்தருளும் பெருமாளே!
கலை மேவு ஞானப் பிரகாசக் கடலாடி - எல்லா கலைகளையும் தனக்குள் வைத்திருக்கும் ஞான ஒளியாகிய கடல் முருகப்பெருமான்; அக்கடலில் திளைத்து ஆடி,
ஆசைக் கடலேறிப் - ஆசைகள் என்னும் பெருங்கடலை அவன் கருணையால் நீந்திக் கடந்து, மற்றை நம் காமங்கள் அவன் அருளாலே தீர்ந்து,
பல மாய வாதிற் பிறழாதே - பல வகையான மனத்தை மயக்கும் வீண் வாதங்களில் அடியேன் வழி தவறிச் செல்லாமல்,
பதி ஞான வாழ்வைத் தருவாயே - பசு, பதி, பாசம் என்னும் மூவகைப் பொருள்களைப் பற்றிய ஞானமும் அதனை ஒட்டிய அன்பு வாழ்க்கையும் தருவாயே!
12 comments:
ஏனுங்க, வருசக்கணக்கா உங்க பதிவைப் பார்க்கலியே! ஊருலதான் இருக்கீங்களா? நல்ல பாட்டுங்கோ.
நான் எழுதலைன்னு என்னைக் கேக்கறீங்களா கூட்டுப் பதிவான இந்தப் பதிவில யாரும் எழுதலைன்னு கேக்கறீங்களான்னு தெரியலையே?!
இந்தப் பதிவைப் பத்திக் கேக்கறீங்கன்னா தொடர்ந்து போன மாதத்துல இருந்து இடுகைகள் வந்துகிட்டே இருக்கு.
என்னைப் பத்திக் கேக்கறீங்கன்னா என்னோட இன்னொரு பதிவைப் பாருங்க. பதிவோட பேரு கூடல். அங்கே தொடர்ந்து எழுதிக்கிட்டு தான் இருக்கேன். koodal1.blogspot.com
பல மாய வாதிற் பிறழாதே -::::)))
ரொம்ப சரியானது.
அருமை மிக்க நன்றி Mr.kumaran
SK ஐயாவின் வருகைக்குக் காத்திருந்து, சரி...நேரங் கடப்பதால் சற்றே சொல்லலாம் என்றெண்ணி, கான மயிலாட கண்டிருந்த வான் கோழியாக இதோ...
கலை மேவு ஞானப் பிரகாச
= என் முருகனுக்கு ஞானப் பிரகாசன் என்றொரு பேரும் உண்டு! அது என்ன ஞானப் பிரகாசன்? ஞானம் வெறுமனே இருந்தால் ஒரு பயனும் இல்லை! அது வீட்டுக்கே, ஊருக்கே பிரகாசித்தால் தான் பயன்! அது போல முருகன் வெறுமனே ஞான ரூபன் மட்டுமல்ல! அவன் ஞானப் "பிரகாசன்"! = Light House!
கலை மேவு ஞானம் = இவன் கலைகளைத் தேடிப் போவதில்லை! இவனிடம் கலைகள் வந்து மேவின! மேவுகின்றன!
கலை மேவு ஞானப் பிரகாசக் கடலாடி = அந்த ஞானப் பிரகாசமாகிய முருகக் கடலில் மூழ்குவோம்!
Light House என்று சொன்னாயே? இப்போ கடலில் மூழ்குவோம்-ன்னா என்ன அர்த்தம்? மூழ்குவதற்கா Light House? அதுக்கு அடுத்த வரியைப் பார்க்கணும்! :)
ஆசைக் கடலேறி = ஆசை என்னும் கடலில் ஒருத்தர் நீந்தத் தான் முடியுமா? அப்படி அரும் பாடுபட்டு, தானே, தன் முயற்சியால் நீந்திக் கரை சேரத் தான் முடியுமா?
அதான் கடல் நீந்தி-ன்னு சொல்லாம, அருணகிரி, கடல் "ஏறி"-ன்னு சொல்கிறார்!
ஏற்கனவே ஆசையால் அழுது பரிதவிக்கும் உள்ளத்தைப் போய்..."உம் நீந்து நீந்து"-ன்னா.....பாவம் அது என்ன பண்ணும்?
அதான் என் முருகனே கலமாய், கப்பலாய், கதியாய், என் விதியாய் வருகிறான்! ஆசைக் கடலில் நீந்த மாட்டாது, "ஏறி"க் கொள்கிறேன்! முருகன் என்னும் கப்பலில், அவன் ஏற்ற ஏற்ற, ஏறிக் கொள்கிறேன்!
இப்போ சென்ற கேள்விக்கு வருவோம்!
நான் கடலில் மூழ்கவா, அவன் பிரகாசனாய் இருக்கான்?
ஆமாம்! ஆனால்...ஆசைக் கடலில் மூழ்க அல்ல! முருகக் கடலில் மூழ்க!
அந்த ஞானப் பிரகாச Light House என்ன பண்ணுது? வெறும் பிரகாசம் மட்டுமே காட்டி...உம்...வேகமா நீந்து...வா வா-ன்னு வெரட்டுதா?
* அதுவே கப்பலாகவும் வந்து என்னைக் கூட்டியும் செல்லுது! = கடல் "ஏறி"!
* அதுவே கப்பலில் ஏறிய பின், கடல் இருளில், மாசில்லா அன்பு எனும் ஒளியும் பாய்ச்சுது! = பிரகாச கடல் ஆடி!
* ஆசைக் கடலில் மூழ்கிய நான்,
* ஆசை முருகக் கப்பலில் ஏறி,
* முருகப் பிரகாசத்தில் மூழ்குகின்றேன்!
இதான் கடல் "ஏறி" + கடல் "ஆடி" என்பதற்குப் பொருள்!
அந்த இரண்டு வரிகளை மறுபடியும் சேவித்துக் கொள்ளுங்கள்!
கடல் மேவு ஞானப் பிரகாசக்
கடல் ஆடி, ஆசைக் கடல் ஏறி
பதி ஞான வாழ்வைத் தருவாயே!
முருகா தருவாயே!
என் முருகா தருவாயே! என் முருகா தருவாயே!
பல மாய வாதிற் பிறழாதே =
கப்பலில் ஏறிய பின், அபாயம் நீங்கி இருக்கும் போது, மறுபடியும் இந்த அல்ப மனம் அலை பாயும்!
வானத்தில் மினு மினுக்கும் நட்சத்திரங்கள் திடீர்-ன்னு அழகாத் தெரியும்!
Light House ஒன்னும் அவ்வளவா அழகு இல்லை! என்ன இருந்தாலும் நட்சத்திர ஜொலி ஜொலிப்பு வருமா?-ன்னு மனம் மாறும்!
அப்படியெல்லாம், "பல மாய வாதிற் பிறழாதே".....
பல மாயா வாதங்களில் மனசு செல்லாதே...
மாயத் தெருவில் தோன்றியவற்றில் எல்லாம் மனசு செல்லாதே...
பதி ஞான வாழ்வைத் தருவாயே =
முருகா, நீயே என் "பதி" = இந்தப் பதி விரதை தர்மத்தில் என்னைச் சேர்த்துக் கொள்! என் கண்ணாளா...
பல மாய வாதில் நான் பிறழாதே
"பதி" ஞான வாழ்வை எனக்குத் தருவாயே! என் முருகா தருவாயே!
எந்நாள் எம்பெருமான் உனக்கு என்று எழுதப்பட்டேன்...
வேறு எங்கும் அகம் குழைய மாட்டேனே!
பலமாய வாதில் பிறழாதே
"பதி"ஞான வாழ்வைத் தருவாயே! என் முருகா தருவாயே!
மலைமேவு மாயக் குறமாதின் = மலையெல்லாம் மேவித் திரிந்த குறத்தி வள்ளியின்
மனமேவு வாலக் குமரேசா = அவள் மனசெல்லாம் மேவித் திரிந்த இளங் குமரேசா...
சிலை வேட சேவற் கொடியோனே = வில் ஏந்தி வேடனாய்...அவளைக் கொள்ள வந்த கொடியோனே! திருவாணி கூடற் பெருமாளே = ஈரோடு மாவட்ட பவானி என்னும் முக்கூடல் சங்கமத்தில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமாளே!
அவளோ முன்பின் காணாத உனக்காக, நீ அவளை ஏற்றுக் கொள்வையோ என்று கூடத் தெரியாது...
* உனக்காக மலையெல்லாம் மேவித் திரிந்தாள்!
* நீயோ, அவள் மனசெல்லாம் மேவித் திரிந்தாய்!
சிலை வேட = வில் ஏந்திய வேடன் என்பது மட்டும் தான் பொருளா?
சேவற் கொடியை மட்டும் காட்டும் அருணையின் கருணை, என்றுமுள வேலைக் காட்டாதோ?
முருகன் கையில் என்றுமே தவழும் வேல்...
அது இன்று இவளுக்காக வில்லாய் மாறிப் போனது!
அதான் சிலை "வேடம்" = வேல் வேடம் போட்டுக் கொண்டது! என்னவாய்? சிலையாய் = வில்லாய்!
இப்படிச் "சிலை வேடமும்", சேவற் கொடியும் ஏந்திய என் முருகா...என் கண்ணாளா...
"பதி"ஞான வாழ்வைத் தருவாயே!
"பதி"ஞான வாழ்வைத் தருவாயே!
அருமை. நன்றி இரவிசங்கர்.
Thanks Rajesh!
எல்லாரும் என்னை ரொம்பவே மன்னிக்கணும். ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் வலைப் பதிவு பக்கமே கொஞ்ச நாளாய் வரவில்லை! அதனால் முருகனருள் பதிவுகளையும் படிக்கவில்லை! ரவி அவர்களின் சிறப்பான விளக்கத்துக்குப் பின் சொல்ல என்ன மிச்சம் இருக்கிறது!
...அப்பிடீன்னு சொல்லுவேன்னுதானே பார்த்தீங்க! விட மாட்டோம்ல! வழக்கம் போல விரைவிலேயே நீட்டி முழக்கிகிட்டு வந்திருவேன்!:)))
எஸ்.கே. ஐயா. இன்னும் காத்திருக்கிறோம்!
Post a Comment