முருகனை நினை மனமே!
உணர்வில் பெருகும் அன்புடன் அனுபவங்களையும் தொகுத்துத் தரும் இனிமையான பாடல் இது. இன்று காலையில் தான் முதன்முதலில் கேட்டேன். இது வரை பல முறை கேட்டுவிட்டேன். பாடியவர் இளையராஜா என்று குரலை வைத்துத் தெரிகிறது. இசையும் அவருடையதாகத் தான் இருக்கும். இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. அதுவும் அவரேயாக இருக்கலாம். வரிகளில் தெறிக்கும் அனுபவ உண்மைகளைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றுகிறது.
முருகனை நினை மனமே! - நலங்கள்
பெருகிடும் தினம் தினமே!
உருகிடும் மறு கணமே! - நெருங்கி
வருவது அவன் குணமே! (முருகனை)
ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்!
ஒவ்வொரு செயலிலும் பெருமையைக் கொடுப்பவன்!
உடலுக்கு உயிரெனில் உயிருக்கு ஒளி அவன்!
உணர்ந்தவர் தொழுதிடும் உயர்ந்தவர் பரவிடும் முருகனை...
அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்!
அவன் விழி அசைவினில் கணைகளும் மலர்ந்திடும்!
அவன் அருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்!
அறிவுடன் பொருள் புகழ் அனைத்திலும் சிறந்திட முருகனை ...
11 comments:
இசை, பாடல் வரிகள், பாடியது அனைத்தும் இளையராஜாதான் :)
- என். சொக்கன்,
பெங்களூரு.
இடுகையை இட்டபின்னர் தான் கவனித்தேன். இராகவன் 2007லேயே இந்தப் பாடலை இட்டிருக்கிறார். நானும் கட்டாயம் அப்போது கேட்டிருப்பேன். என் மறதியால் வழக்கம் போல் மறந்துவிட்டேன்! அதனால் என்ன இந்த இடுகையோடு இராகவனின் இடுகையையும் சேர்த்துப் படிப்போமே!
http://muruganarul.blogspot.com/2007/06/48.html
உறுதிபடுத்தியமைக்கு நன்றி சொக்கன்!
தினம் ஒரு கவிதை காலத்தில் தினந்தோறும் உங்கள் பெயரைப் பார்த்தேன். அப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உங்கள் நூல்களைப் பற்றிய செய்திகளில் பார்த்ததுண்டு. இப்போது இந்த பின்னூட்டம் மூலம் உங்கள் வலைப்பதிவைக் கண்டேன். இனித் தொடர்கிறேன்.
அன்பன்,
குமரன்.
ஒவ்வொரு செவ்வாயும் முருகனருளில் இடும் பதிவு, இந்த வாரம் மிகுந்த அசதியால் விட்டுப் போனது!
ஆனால் அந்தத் தித்திக்கும் செவ் வாயன், செவ்வாயில் விட்டதை, வெள்ளியில் பிடிக்கிறான் போலும்! வெள்ளி எழுந்து செவ்வாய் உறங்கிற்று! :)
முன்பு இராகவன் இட்ட பாடலை மீட்டு இட்டமைக்கு நன்றி குமரன்! :)
இது கீதாஞ்சலி என்னும் இசைத்தொகுப்பில் உள்ள பாடல்! அதில் விநாயகர் மீது ஒரு பாட்டும், அம்மன் மேல் ஐந்து பாட்டும், முருகன் மேல் மூன்று பாட்டும் இளையராஜாவே பாடி இருப்பார்! அதில், இந்த முருகனை நினை மனமே கேட்கம் மிகவும் இதமாக இருக்கும்! பிருந்தாவன சாரங்கம் என்னும் ராகத்தில்...
//நெருங்கி வருவது அவன் குணமே!//
நாம் போனாலும் போகா விட்டாலும், நம்மை நெருங்கி நெருங்கி வரும் குணம் தானே அவனுக்கு? = நீர்மை!
//ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்!//
எப்படி?
எப்பவும் கூடவே இருந்து என்னைய மோப்பம் பிடிப்பானா அந்த முருகன்? :)
பதிலை அடுத்த வரியிலேயே சொல்றாரு பாருங்க!
//உடலுக்கு உயிரெனில் உயிருக்கு ஒளி அவன்!//
உடல் மிசை உயிரென
கரந்தெங்கும் பரந்துளன்
- என்ன பாடல் தெரியுதுங்களா?
முருகா,
ஏது வந்தாலும் நீங்காது...
ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன் நீயே!!
http://prakash-prakasham.blogspot.com/2010_05_01_archive.html
மேற்கண்ட எனது பதிவில் இருக்கும் முத்துக்குமரன் படத்தையும் தங்கள் பதிவில் இட வாய்ப்பிருந்தால் வெளியிட வேண்டுகிறேன்
நன்றி பிரகாசம் ஐயா. கட்டாயம் இனி வரும் இடுகைகளில் முத்துக்குமரன் திருவுருவப் படங்களை இடுகிறோம்!
குமரன்...
இதே கீதாஞ்சலி தொகுப்பில், ராஜா பாடும் இன்னொரு அபூர்வ, ஆழமான முருகன் பாட்டு இருக்கு! - "மறந்தேன் பிறந்தேன் - மரம் போல் வளர்ந்தேன் - முருகா முருகா முருகா!"
முடிந்தால் அதையும் முருகனருளில் இடுங்கள்!
இளையராஜா இசையமைப்பாளர் மட்டுமல்ல, ஒரு நல்ல கவிஞர் என்பதைக் காட்டவல்ல பாடல்கள், இவை!
திரு.சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய “எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக் குமரனுக்கு” என்ற பாடல் மற்றும் TMS அவர்கள் பாடிய “தமிழாக நின்றாய்” ஆகிய பாடல்கள் mp3 வடிவில் என்னிடம் உள்ளது. அதை அனுப்ப வேண்டிய முகவரி எனது மின்னஞ்சல் m.prakasham@gmail.comக்குத் தெரிவித்தால் அனுப்பி வைக்கிறேன். தங்கள் பதிவில் இடலாம்
@பிரகாசம் ஐயா
TMS-இன் தமிழாக நின்றாய் என்ற பாடல் ஏற்கனவே Draft-இல் இருக்கு! இன்னும் சில நாட்களில் பதியப்படும்!
எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக் குமரனுக்கு என்ற பாட்டின் வரிகளும், ஒலிக்கோப்பும் shravan.ravi@gmail.com க்கு மயிலனுப்ப முடியுமா?
நன்றி குமரன் :)
- என். சொக்கன்,
பெங்களூரு.
Post a Comment