Tuesday, April 20, 2010

சிவாஜியின் Walking ஸ்டைல் - யார் இந்த வீரவாகு?

கந்தன் கருணையில், பலரும் பார்த்து இருப்பீங்க! நடிகர் திலகம் சிவாஜி நடந்து காட்டும் ஸ்டைலை! :)
அந்தப் படத்தில் ஹீரோ என்ன தான் முருகனாக (சிவகுமார்) இருந்தாலும், Focus என்னமோ வீரவாகு மேலத் தான் விழும்! All Bcoz of Sivaji! :)

வீரவாகு அப்படித் தான் நடந்தாரோ, தெரியாது! ஆனால் சிவாஜி நடந்து காட்டுவது, ஒரு அணிவகுப்பு-ன்னா என்ன என்பதைக் கண் முன்னே கொண்டாந்து நிறுத்தும்!

அட, இப்படியெல்லாம் கூட யாராச்சும் நடப்பாங்களா என்ன? இதெல்லாம் ஓவர் ஆக்டிங் என்று சிலர் பேசலாம்! ஆனா, யாராச்சும் சிகெரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பாங்களா-போன்ற கேள்விகள் மட்டும் வரவே வராது!
யாரு அட்ஜஸ்ட் பண்ணிக்கறாங்களோ அவிங்கள தான் உலகம் அட்ஜஸ்ட் பண்ணிக்கச் சொல்லும்! கேள்வியெல்லாம் இது போன்ற ஆட்களை நோக்கித் தான் :)


சிவாஜி ஓவர் ஆக்டிங்கோ இல்லையோ, இவர்கள் ஓவர் ரியாக்டிங் என்பது வேணும்னா உண்மையா இருக்கலாம்!
அட, உணர்ச்சிகளை உள்ளபடியே காட்டாம, நடிப்புக்குள்ள கூட நடிக்கணும் என்பது தான் இவர்கள் எதிர்பார்ப்போ?முன்பே சஷ்டிப் பதிவில் பார்த்தது போல்.....சூரசங்காரம் நடந்த இடம் திருச்செந்தூர் அல்ல! தமிழ் ஈழத்தில் உள்ள ஏமகூடம் என்ற இடமே அது!
செந்தூர் என்பது படைவீடு (Battle Camp) மட்டுமே! சூரனுக்கு எதிரான தேவர் படைகளைத் திரட்டி, போர் துவங்கும் முன்னால், அணி வகுப்பைப் பார்வையிடுகிறான் சேனாபதி!

எந்தச் சேனாபதி? கந்தச் சேனாபதியா?

தேவ சேனாபதி என்னவோ = முருகன் தான்!
ஆனால் முருகச் சேனைக்கும் ஒரு சேனாபதி உண்டு = அவன் தான் வீரவாகு!

யார் இந்த வீரவாகு?

* முருகன் = அன்னையவள் கரம் படாது, நேராகத் தந்தையவர் கண்ணில் தோன்றியவன்!
* வீரவாகு = தந்தையவர் கரம் படாது, நேராக அன்னையவள் காற்சிலம்பில் தோன்றியவன்!

தந்தையின் கண்களில் இருந்து, ஆறு முருகன்கள் தோன்றிய அதே வேளையில்...
அன்னையின் காற் சிலம்பு வெடித்து, அதில் நவ சக்திகள் என்னும் ஒன்பது சக்திகள் தோன்ற, அதில் முதல்வன் இந்த வீரவாகு!
விநாயகருக்குப் பதிலாக, முருகன்-வீரவாகு தான் அண்ணன்-தம்பி என்று உறவாய்க் கூடச் சிலர் கொள்வதுண்டு!

வீரபாகு, முருகனைப் போலவே அழகன்! ஆற்றல் மிக்கவன்!
இவனைப் பற்றிய சங்கத் தமிழ்ப் பாடல்கள் உள்ளனவா என்று ஆய்ந்து பார்க்க வேண்டும்!
தமிழ்க் கடவுளான குறிஞ்சிக் கடவுளைப் பற்றி ஆர்வம் உடையோர்கள், வீரவாகுவைப் பற்றிச் சற்றே முயன்று பார்த்துச் சொல்லலாமே! முருகாற்றுப்படை நக்கீரரிடமிருந்தே கூடத் துவங்கிப் பார்க்கலாம்!

முருகனைப் பற்றிக் கிடைக்கும் குறிப்புகள் போல், வீரவாகு பற்றி தனிக் குறிப்புகள் அவ்வளவாக கிடைப்பதில்லை!
ஆலயங்களில் கூட இடும்பனுக்கு உண்டு! ஆனால், வீரவாகு-க்கு தனியான சன்னிதிகள் அவ்வளவாக இல்லை! திருச்செந்தூரில் முன் மண்டபத்தில் வீரவாகு வாயிற் காப்போனாக இருப்பான்-ன்னு நினைக்கிறேன்!
சுவாமிமலையில் இலக்குமியாகிய திருமகள் சன்னிதிக்கு அடுத்து, வீரவாகு சன்னிதி உண்டு!முருகன், பால முருகனாய் வளர்ந்து வரும் போது, வீரவாகுவும் அங்ஙனமே வளர்ந்து வந்தான்!
சொல்லப் போனால், முருகனின் வீர தீரச் செயல்களுக்கு முன்னமேயே, வீரவாகுவின் வீரம் தான் முதலில் பேசப்படுகிறது!

நாரதரின் வேள்வியில் உதித்த ஆடு, ஊருக்கே உலை வைக்க, அதை வீரவாகுச் சிறுவனே முதலில் அடக்கி, முருகனிடம் சேர்ப்பிக்கிறான்! இந்த ஆடே முருகனின் முதல் வாகனமாக ஆகின்றது!

முருகன், திருமாலின் புதல்வியருக்குத் தோன்றி, அவர்களை மணங் கொள்ள இசைந்து, வாக்கு கொடுக்கும் போதும், வீரவாகு உடன் இருக்கின்றான்!
முருகன், ஈசனின் வேலாயுதத்தை, அன்னையின் கையால் பெற்றுக் கொள்ளும் போதும், வீரவாகு உடன் இருக்கின்றான்!

போருக்குச் செல்லும் வழியில், தாருகன் பெரும் மலையாக நின்று தடுக்கிறான்! வீரவாகு தான் முதலில் எதிர்க்கச் சென்று, அசுரர்களின் மாயத்தில் மாட்டிக் கொள்ள...
அதன் பின்னரே முருகன் கிரெளஞ்ச மலைக்கு வந்து, மலைமாவு சிந்த வடிவேல் எறிகிறான்! மலைச்சிறையில் இருந்து வீரவாகுவை மீட்டு எடுக்கின்றான்!

பின்னர் திருச்செந்தூரில் படைவீடு அமைத்து, சிவபூசை செய்யப்படுகிறது!
தேவதச்சன் அமைத்த மயிலாசனத்தில் அமர்ந்து, சூரனின் முழுக் கதையினையும், தேவ குரு சொல்லக் கேட்கின்றான் முருகன்!
அதன் பின்னரே, வீரவாகுவைத் தன் தூதுவனாக அசுரனிடம் அனுப்பி வைக்க ஏற்பாடு ஆகின்றது!

இங்கு தான் வீரவாகுவின் பல சாகசச் செயல்கள் பேசப்படுகின்றன! கிட்டத்தட்ட இராமாயணக் கதைக் களன் போலவே இருக்கும்!


வீரமகேந்திரபுரத்தில் நுழைந்த வீரவாகு, முதலில் சந்திப்பது, சிறையில் இருக்கும் ஜெயந்தனைத் தான்!
ஏன்-னு தெரியலை! ஜெயந்தன் இந்திர குமாரன்! அவனுக்கு ஆறுதல் கூறி, முருகன் உன்னை விடுவிக்க வருவான் என்று நம்பிக்கை ஊட்டுகின்றான்! பின்னரே அசுர சபைக்குச் செல்கின்றான்!

சபையேறி வந்தவனைக் கண்ணியம் கூட தராமல் நடத்துகிறது படித்த சூர உள்ளம்!

ஆனால் முருகனருள் முன்னிற்காதோ!
இதய ஆசனத்தில் முருகன் இருக்க, மதியாதார் வாசலிலும் ஆசனம் தோன்றுகிறது!
தூது பேசுகிறான் வீரவாகு! காதற்ற ஊசியில் நூல் நுழையுமோ? கடும் நெஞ்சில் நூலோர் சொல் நுழையுமோ?

தூது தோல்வியில் முடிகிறது! வீரவாகுவைச் சிறைப்பிடிக்க ஆணையிடுகிறான் சூரன்! வீரவாகுவோ தன்னை அடக்க வந்த சூரனின் மகன் வச்சிரவாகுவைக் கொல்கிறான்! சதமுகன் முதலான பிற படைவீரர்களையும் கொன்று...
அத்தாணி மண்டபத்தை அழித்து, தூதின் தோல்வியில் தளர்ந்து, செந்தூர் முருகனிடமே மீண்டு வருகின்றான்!

போர், ஈழத்தில், ஏமகூடத்தில் துவங்குகிறது! பல அசுர மாயங்கள் அரங்கேறுகின்றன!
சூரனின் மகன் பானுகோபன், மாயாயுதம் எறிந்து, வீரவாகுவை நன்னீர்க் கடலில் மூழ்கடிக்கிறான்!
அப்போது தான், முருகன் வீரவாகு மேல் வைத்த பாசம் தெரிய வருகிறது!


வீரவாகு வீழ்ந்தான் என்னும் போது தான், கோபமே கொள்ளாத நம்ம Cool Guy முருகனும், ஊரறிய முதலில் கோபப்படுகிறான்! வீரவாகுக்கு என்னவாயிற்றோ என்று அப்படி ஒரு பதைபதைப்பு!
என் முருகா - ஆர்வலர் புன்கண்ணீர் பூசல் தரும் - என்பது உன்னளவில் மட்டும் என்னிக்குமே உண்மை தான் முருகா!

மாயாயுதம் தகர ஞானாயுதம் எறிந்து, தன் அன்பனை மீட்டெடுக்கிறான் முருகன்!
பத்தாம் நாள் போரில், மாயத்தால் எங்கும் இருட்டாக்கி, அதே நன்னீர்க் கடலுக்குக் கீழே சென்று, மாமரமாய்....மரத்துப் போய் நிற்கிறான் சூரன்!
பிடிவாதம்! அதுவும் தலைகீழாக! வேர்கள் மேலே! கிளைகள் கீழே!

அப்போது தான்...........வேலால் வெஞ்சூர் பிளந்து, மயில் வாகனமாகவும், சேவற் கொடியாகவும் ஆக்கிக் கொள்கிறான், ஐயன் முருகன்!
முருகனின் ஆணையால், மொத்த வீரமகேந்திரபுரத்தையும், கடலில் மூழ்கடிக்கிறான் வருணன்!

செந்தூர் திரும்பி, மீண்டும் சிவபூசை நடக்கிறது!
* கையில் செபமாலையுடன் இன்றும் செந்தூர் முருகனைக் கருவறையில் காணலாம்!
* அந்த முருகனுக்குக் காவலாக, வீரவாகுவை இன்றும் அர்த்த மண்டபத்தில் காணலாம்!


இது தான் வீரவாகு-வின் சுருக்கமான கதை! :)
என் முருகனுக்கு வேண்டியவர்கள் எல்லாம், எனக்கும் வேண்டியவர்கள் அல்லவா! அவர்கள் நலத்தை இங்கு முருகனருளில் சொல்ல வைத்த முருகனருளை எனக்கு ரொம்பவே பிடிக்கும்! :)

இதோ, நடிகர் திலகம் சிவாஜியின் அந்த வீரவாகு பாடல்!!


வெற்றிவேல்! வீரவேல்!
சுற்றிவந்த பகைவர் தம்மைத்
தோள் நடுங்க வைத்த எங்கள்
சக்திவேல்! ஞான சக்திவேல்!

ஆதிசக்தி அன்னை தந்த ஞானவேல்!
அசுரர் தம்மை அஞ்சவைத்த வீரவேல்!
மோதி அந்தக் குன்றழித்த சக்திவேல்!
முவர் தேவர் வாழ்த்தவந்த வெற்றிவேல்!
(வெற்றிவேல்...வீரவேல்)

தெய்வம்உண்டு தெய்வம்உண்டு என்றுசொல்லும் வெற்றிவேல்!
தெய்வபக்தி உள்ளவர்க்குக் கைகொடுக்கும் வீரவேல்!
எய்தபின்பு மீண்டும் கந்தன் கையில்வந்து நின்றவேல்!
எங்கும்வெற்றி எதிலும்வெற்றி காணும்எங்கள் சக்திவேல்!
(வெற்றிவேல்...வீரவேல்)

வானத்தோடு பூமிதொட்டு வளர்ந்துநிற்கும் மாயவேல்!
இமயம்தொட்டுக் குமரிமட்டும் காத்துநிற்கும் சக்திவேல்!
ஆதிவேல்! அழகுவேல்! அன்புகாட்டும் தூயவேல்!
அகிலமுற்றும் புகழ்பரப்ப வேலெடுத்த முருகவேல்!
(வெற்றிவேல்...வீரவேல்)

குரல்: TMS
வரிகள்: ???
இசை: கே.வி. மகாதேவன்
ராகம்: நாதநாமக்ரியை
படம்: கந்தன் கருணை

11 comments:

Sabarinathan TA April 20, 2010 4:02 AM  

Message Super anna...

குமரன் (Kumaran) April 20, 2010 10:50 AM  

செந்தூர் முதலிய ஆறு படைவீடுகளும் ஆற்றுப்படைவீடுகளா நீங்கள் சொல்வது போல் போர் துவங்கும் முன் அமர்ந்த படைவீடுகளா இரவி? செந்தூர் போர் துவங்கும் முன் அணிவகுப்பைக் கண்ட இடம் என்பது பொருந்துகிறது; ஆனால் மற்ற படைவீடுகள் அப்படி இல்லையே!

நவசக்திகளில் முதல்வர் வீரபாகுவா? நவசக்திகளின் குமாரர்களான நவவீரர்களில் முதல்வர் வீரபாகுவா? நவசக்தி குமாரர்கள் தானே குமரனுக்குத் தம்பிகள் ஆகமுடியும்?!

வீரபாகுவைப் பற்றி சங்கத் தமிழ் பாடல்கள் இருக்கின்றனவா என்று கொக்கி போடுவதைப் பார்த்தால் இருக்கிறது என்று நீங்கள் அறிவதாகத் தோன்றுகிறதே! உண்மையா?

திருமுருகாற்றுப்படை சங்க காலப் பாடலா? அது திருமுறைகளில் ஒன்றாக அல்லவா இருக்கிறது? :-)

திருவாவினன்குடியிலும் வீரவாகுதேவர் சன்னிதியைக் கண்ட நினைவு!

சுருக்கமாக கந்த புராணத்தைச் சொல்லிவிட்டீர்கள்! வீரவாகுத் தேவரைப் பற்றியும் நன்கு சொன்னீர்கள்! கந்தன் கருணையே கருணை!

குமரன் (Kumaran) April 20, 2010 11:25 AM  

டி.எம்.எஸ் குரல்ல தான் எத்தனை ஈடுபாடு! முருகன் பாட்டுன்னா அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு வந்துவிடுகிறது போல!

kannabiran, RAVI SHANKAR (KRS) April 20, 2010 12:42 PM  

//டி.எம்.எஸ் குரல்ல தான் எத்தனை ஈடுபாடு! முருகன் பாட்டுன்னா அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு வந்துவிடுகிறது போல!//

T.M."சுந்தரராஜன்" அல்லவா? அதான் கீழே இருந்து மேலே இருக்கவனைப் பாடிக்கிட்டே இருக்காரு! :)
TMS பாடல்கள் இன்னும் நிறைய இருக்கு குமரன்! Not only movies, but from lotsa albums! Every Tuesday in my murugan arul! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) April 20, 2010 12:43 PM  

//Sabarinathan TA said...
Message Super anna...//

நன்றி சபரிநாதன்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) April 20, 2010 12:47 PM  

//குமரன் (Kumaran) said...
செந்தூர் முதலிய ஆறு படைவீடுகளும் ஆற்றுப்படைவீடுகளா நீங்கள் சொல்வது போல் போர் துவங்கும் முன் அமர்ந்த படைவீடுகளா இரவி?//

* ஆறு படை வீடா?
* ஆற்றுப் படை வீடா?
தெரியலையே!
யாரைக் கேட்கலாம் குமரன்?

எனக்கு இப்போ தேவை ஆற்றுப்படை தான்!
அதனால் நான் ஆற்றுப்படை-ன்னே எடுத்துக்கலாமா?

//செந்தூர் போர் துவங்கும் முன் அணிவகுப்பைக் கண்ட இடம் என்பது பொருந்துகிறது; ஆனால் மற்ற படைவீடுகள் அப்படி இல்லையே//

ஆமாம்! சரியான கேள்வி தான்!

kannabiran, RAVI SHANKAR (KRS) April 20, 2010 1:00 PM  

//நவசக்திகளில் முதல்வர் வீரபாகுவா? நவசக்திகளின் குமாரர்களான நவவீரர்களில் முதல்வர் வீரபாகுவா?//

படத் தரவைப் பாருங்க குமரன்! :)

அன்னையின் காலில் தோன்றுவது வீரபாகு முதலான ஒன்பது பேர்!
நவ-சக்தி என்பதாலேயே பெண்கள்-ன்னு பொருள் எடுத்துக்கிட முடியுமா தெரியலை! என் கந்த புராணப் புத்தகம் பெங்களூரில் இருக்கே! இப்போ நான் எப்படி பார்ப்பேன்? :)

//நவசக்தி குமாரர்கள் தானே குமரனுக்குத் தம்பிகள் ஆகமுடியும்?!//

அன்னை உமையவளுக்கு பிறந்தவர்கள் (காற் சிலம்பில்) என்றால், அப்போ தம்பி தானே?

//வீரபாகுவைப் பற்றி சங்கத் தமிழ் பாடல்கள் இருக்கின்றனவா என்று கொக்கி போடுவதைப் பார்த்தால் இருக்கிறது என்று நீங்கள் அறிவதாகத் தோன்றுகிறதே! உண்மையா?//

கொக்கியா? நானே ஒரு நக்கி! முருக நக்கி! :)
சங்கப் பாடல் வல்லார்கள், தமிழ்க் கடவுள் ஆய்ந்தார்கள் தான், இதை எல்லாம் எடுத்துச் சொல்ல முடியும் குமரன்!
வல்லீர்கள் நீங்களே! :)
நானோ தான் ஆயிடுக??? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) April 20, 2010 1:07 PM  

//திருமுருகாற்றுப்படை சங்க காலப் பாடலா? அது திருமுறைகளில் ஒன்றாக அல்லவா இருக்கிறது? :-)//

ஆமா! ஆமா!
பதினோராம் திருமுறையில் தான் இருக்கு!
அப்படீன்னா நம்பியாண்டார் நம்பி காலம்! இராசராசன் காலம்!
சோழர் கல்வெட்டு என்னிக்குமே உண்மை தான் பேசும்! :)

என்ன அநியாயம்? நக்கீரர் சங்க காலப் புலவர்-ன்னு பொய் சொல்லிட்டாங்களே!
ஆக்சுவலி, நக்கீரர், நம்பியாண்டார் கிட்ட தான், மதுரையில் இருந்து கிட்டே, Correspondence-ல்ல தமிழ் படிச்சாரு! மின்தமிழ் குழுமத்தில் கல்வெட்டு "வல்லு"நர்களைக் கேளுங்க! சொல்லுவாய்ங்க! :))

//திருவாவினன்குடியிலும் வீரவாகுதேவர் சன்னிதியைக் கண்ட நினைவு!//

உம்...palani.org-இல் பாக்குறேன்! நீங்க அடிவாரக் கோயில்ல பாத்தீங்களா-ண்ணா?

kannabiran, RAVI SHANKAR (KRS) April 20, 2010 1:13 PM  

//சுருக்கமாக கந்த புராணத்தைச் சொல்லிவிட்டீர்கள்!//

அச்சோ! நான் வீரவாகு பற்றி மட்டுமே சொன்னேன்!

ரொம்ப பேருக்கு வீரவாகு பற்றி அதிகம் தெரியாததால்...
இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம், வீரவாகு பற்றி என்னிக்காச்சும் ஒரு நாள் தனியாச் சொல்லணும்-ன்னு தோனும்!

இப்போ தான் முருகன் அருள்-ல்லயே இருக்கேனே! ஜூரம் வந்து நேரம் கிடைச்சிச்சி! சொல்லிட்டேன்! :)

ஜோ/Joe April 22, 2010 9:34 PM  

ஒரு பேச்சுக்கு நடிகர் திலகம் என்ற நடிகன் பிறந்திருக்கவில்லை என வைத்துக்கொள்வோம் .இது போன்ற கதாபாத்திரங்களில் வேறு எந்த நடிகரையும் பொருத்திப் பார்க்கலாம் .பார்த்து விட்டு இந்த கதாபாத்திரங்களுக்கு கிடைத்த முத்திரையும் அழுத்தமும் எந்த அளவுக்கு கிடைத்திருக்கும் என எண்ணிப்பார்த்தால் சிவாஜி என்னும் கலைஞனின் மகத்துவம் புரியும் ..சும்மா எதுக்கெடுத்தாலும் ஓவர் ஆக்டிங் என்று சொல்லுவது ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என சொன்னது போலத் தான். மத்தவங்களுக்கெல்லாம் அவர் அளவுக்கு பண்ண முடியாது-ன்னு சொல்லிகிட்டு போக வேண்டியது தானே :)

kannabiran, RAVI SHANKAR (KRS) April 29, 2010 11:45 AM  

// ஜோ/Joe said...
ஒரு பேச்சுக்கு நடிகர் திலகம் என்ற நடிகன் பிறந்திருக்கவில்லை என வைத்துக்கொள்வோம் .இது போன்ற கதாபாத்திரங்களில் வேறு எந்த நடிகரையும் பொருத்திப் பார்க்கலாம்//

ஜோ அண்ணன் வந்தா தான் சிவாஜி பதிவு களை கட்டும்! :)

//கதாபாத்திரங்களுக்கு கிடைத்த முத்திரையும் அழுத்தமும் எந்த அளவுக்கு கிடைத்திருக்கும் என எண்ணிப்பார்த்தால் சிவாஜி என்னும் கலைஞனின் மகத்துவம் புரியும்//

அட, நீங்க வேற...
"கதாபாத்திரத்துக்கு" அழுத்தம் கொடுக்கக் கூடாது! தன்னை, நடிகனை மட்டுமே முன்னிறுத்திக்கணும்-ங்கிறது தானே இவிங்க எதிர்பார்ப்பே!

கதாபாத்திரமா மாறி நடிச்சா = ஓவர் ஆக்டிங்!
தன் ஸ்டைலையே காட்டி நடிச்சா = ஆக்டிங்!
Thatz the definition of some folks :)

இந்தப் பதிவு போடும் போது, சிங்கையில் செங்காங்க்-ல்ல நாம பேசிக்கிட்டோமே! அதைத் தான் நினைச்சேன்! :)

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP