Tuesday, April 20, 2010

சிவாஜியின் Walking ஸ்டைல் - யார் இந்த வீரவாகு?

கந்தன் கருணையில், பலரும் பார்த்து இருப்பீங்க! நடிகர் திலகம் சிவாஜி நடந்து காட்டும் ஸ்டைலை! :)
அந்தப் படத்தில் ஹீரோ என்ன தான் முருகனாக (சிவகுமார்) இருந்தாலும், Focus என்னமோ வீரவாகு மேலத் தான் விழும்! All Bcoz of Sivaji! :)

வீரவாகு அப்படித் தான் நடந்தாரோ, தெரியாது! ஆனால் சிவாஜி நடந்து காட்டுவது, ஒரு அணிவகுப்பு-ன்னா என்ன என்பதைக் கண் முன்னே கொண்டாந்து நிறுத்தும்!

அட, இப்படியெல்லாம் கூட யாராச்சும் நடப்பாங்களா என்ன? இதெல்லாம் ஓவர் ஆக்டிங் என்று சிலர் பேசலாம்! ஆனா, யாராச்சும் சிகெரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பாங்களா-போன்ற கேள்விகள் மட்டும் வரவே வராது!
யாரு அட்ஜஸ்ட் பண்ணிக்கறாங்களோ அவிங்கள தான் உலகம் அட்ஜஸ்ட் பண்ணிக்கச் சொல்லும்! கேள்வியெல்லாம் இது போன்ற ஆட்களை நோக்கித் தான் :)


சிவாஜி ஓவர் ஆக்டிங்கோ இல்லையோ, இவர்கள் ஓவர் ரியாக்டிங் என்பது வேணும்னா உண்மையா இருக்கலாம்!
அட, உணர்ச்சிகளை உள்ளபடியே காட்டாம, நடிப்புக்குள்ள கூட நடிக்கணும் என்பது தான் இவர்கள் எதிர்பார்ப்போ?



முன்பே சஷ்டிப் பதிவில் பார்த்தது போல்.....சூரசங்காரம் நடந்த இடம் திருச்செந்தூர் அல்ல! தமிழ் ஈழத்தில் உள்ள ஏமகூடம் என்ற இடமே அது!
செந்தூர் என்பது படைவீடு (Battle Camp) மட்டுமே! சூரனுக்கு எதிரான தேவர் படைகளைத் திரட்டி, போர் துவங்கும் முன்னால், அணி வகுப்பைப் பார்வையிடுகிறான் சேனாபதி!

எந்தச் சேனாபதி? கந்தச் சேனாபதியா?

தேவ சேனாபதி என்னவோ = முருகன் தான்!
ஆனால் முருகச் சேனைக்கும் ஒரு சேனாபதி உண்டு = அவன் தான் வீரவாகு!

யார் இந்த வீரவாகு?

* முருகன் = அன்னையவள் கரம் படாது, நேராகத் தந்தையவர் கண்ணில் தோன்றியவன்!
* வீரவாகு = தந்தையவர் கரம் படாது, நேராக அன்னையவள் காற்சிலம்பில் தோன்றியவன்!

தந்தையின் கண்களில் இருந்து, ஆறு முருகன்கள் தோன்றிய அதே வேளையில்...
அன்னையின் காற் சிலம்பு வெடித்து, அதில் நவ சக்திகள் என்னும் ஒன்பது சக்திகள் தோன்ற, அதில் முதல்வன் இந்த வீரவாகு!
விநாயகருக்குப் பதிலாக, முருகன்-வீரவாகு தான் அண்ணன்-தம்பி என்று உறவாய்க் கூடச் சிலர் கொள்வதுண்டு!

வீரபாகு, முருகனைப் போலவே அழகன்! ஆற்றல் மிக்கவன்!
இவனைப் பற்றிய சங்கத் தமிழ்ப் பாடல்கள் உள்ளனவா என்று ஆய்ந்து பார்க்க வேண்டும்!
தமிழ்க் கடவுளான குறிஞ்சிக் கடவுளைப் பற்றி ஆர்வம் உடையோர்கள், வீரவாகுவைப் பற்றிச் சற்றே முயன்று பார்த்துச் சொல்லலாமே! முருகாற்றுப்படை நக்கீரரிடமிருந்தே கூடத் துவங்கிப் பார்க்கலாம்!

முருகனைப் பற்றிக் கிடைக்கும் குறிப்புகள் போல், வீரவாகு பற்றி தனிக் குறிப்புகள் அவ்வளவாக கிடைப்பதில்லை!
ஆலயங்களில் கூட இடும்பனுக்கு உண்டு! ஆனால், வீரவாகு-க்கு தனியான சன்னிதிகள் அவ்வளவாக இல்லை! திருச்செந்தூரில் முன் மண்டபத்தில் வீரவாகு வாயிற் காப்போனாக இருப்பான்-ன்னு நினைக்கிறேன்!
சுவாமிமலையில் இலக்குமியாகிய திருமகள் சன்னிதிக்கு அடுத்து, வீரவாகு சன்னிதி உண்டு!



முருகன், பால முருகனாய் வளர்ந்து வரும் போது, வீரவாகுவும் அங்ஙனமே வளர்ந்து வந்தான்!
சொல்லப் போனால், முருகனின் வீர தீரச் செயல்களுக்கு முன்னமேயே, வீரவாகுவின் வீரம் தான் முதலில் பேசப்படுகிறது!

நாரதரின் வேள்வியில் உதித்த ஆடு, ஊருக்கே உலை வைக்க, அதை வீரவாகுச் சிறுவனே முதலில் அடக்கி, முருகனிடம் சேர்ப்பிக்கிறான்! இந்த ஆடே முருகனின் முதல் வாகனமாக ஆகின்றது!

முருகன், திருமாலின் புதல்வியருக்குத் தோன்றி, அவர்களை மணங் கொள்ள இசைந்து, வாக்கு கொடுக்கும் போதும், வீரவாகு உடன் இருக்கின்றான்!
முருகன், ஈசனின் வேலாயுதத்தை, அன்னையின் கையால் பெற்றுக் கொள்ளும் போதும், வீரவாகு உடன் இருக்கின்றான்!

போருக்குச் செல்லும் வழியில், தாருகன் பெரும் மலையாக நின்று தடுக்கிறான்! வீரவாகு தான் முதலில் எதிர்க்கச் சென்று, அசுரர்களின் மாயத்தில் மாட்டிக் கொள்ள...
அதன் பின்னரே முருகன் கிரெளஞ்ச மலைக்கு வந்து, மலைமாவு சிந்த வடிவேல் எறிகிறான்! மலைச்சிறையில் இருந்து வீரவாகுவை மீட்டு எடுக்கின்றான்!

பின்னர் திருச்செந்தூரில் படைவீடு அமைத்து, சிவபூசை செய்யப்படுகிறது!
தேவதச்சன் அமைத்த மயிலாசனத்தில் அமர்ந்து, சூரனின் முழுக் கதையினையும், தேவ குரு சொல்லக் கேட்கின்றான் முருகன்!
அதன் பின்னரே, வீரவாகுவைத் தன் தூதுவனாக அசுரனிடம் அனுப்பி வைக்க ஏற்பாடு ஆகின்றது!

இங்கு தான் வீரவாகுவின் பல சாகசச் செயல்கள் பேசப்படுகின்றன! கிட்டத்தட்ட இராமாயணக் கதைக் களன் போலவே இருக்கும்!


வீரமகேந்திரபுரத்தில் நுழைந்த வீரவாகு, முதலில் சந்திப்பது, சிறையில் இருக்கும் ஜெயந்தனைத் தான்!
ஏன்-னு தெரியலை! ஜெயந்தன் இந்திர குமாரன்! அவனுக்கு ஆறுதல் கூறி, முருகன் உன்னை விடுவிக்க வருவான் என்று நம்பிக்கை ஊட்டுகின்றான்! பின்னரே அசுர சபைக்குச் செல்கின்றான்!

சபையேறி வந்தவனைக் கண்ணியம் கூட தராமல் நடத்துகிறது படித்த சூர உள்ளம்!

ஆனால் முருகனருள் முன்னிற்காதோ!
இதய ஆசனத்தில் முருகன் இருக்க, மதியாதார் வாசலிலும் ஆசனம் தோன்றுகிறது!
தூது பேசுகிறான் வீரவாகு! காதற்ற ஊசியில் நூல் நுழையுமோ? கடும் நெஞ்சில் நூலோர் சொல் நுழையுமோ?

தூது தோல்வியில் முடிகிறது! வீரவாகுவைச் சிறைப்பிடிக்க ஆணையிடுகிறான் சூரன்! வீரவாகுவோ தன்னை அடக்க வந்த சூரனின் மகன் வச்சிரவாகுவைக் கொல்கிறான்! சதமுகன் முதலான பிற படைவீரர்களையும் கொன்று...
அத்தாணி மண்டபத்தை அழித்து, தூதின் தோல்வியில் தளர்ந்து, செந்தூர் முருகனிடமே மீண்டு வருகின்றான்!

போர், ஈழத்தில், ஏமகூடத்தில் துவங்குகிறது! பல அசுர மாயங்கள் அரங்கேறுகின்றன!
சூரனின் மகன் பானுகோபன், மாயாயுதம் எறிந்து, வீரவாகுவை நன்னீர்க் கடலில் மூழ்கடிக்கிறான்!
அப்போது தான், முருகன் வீரவாகு மேல் வைத்த பாசம் தெரிய வருகிறது!


வீரவாகு வீழ்ந்தான் என்னும் போது தான், கோபமே கொள்ளாத நம்ம Cool Guy முருகனும், ஊரறிய முதலில் கோபப்படுகிறான்! வீரவாகுக்கு என்னவாயிற்றோ என்று அப்படி ஒரு பதைபதைப்பு!
என் முருகா - ஆர்வலர் புன்கண்ணீர் பூசல் தரும் - என்பது உன்னளவில் மட்டும் என்னிக்குமே உண்மை தான் முருகா!

மாயாயுதம் தகர ஞானாயுதம் எறிந்து, தன் அன்பனை மீட்டெடுக்கிறான் முருகன்!
பத்தாம் நாள் போரில், மாயத்தால் எங்கும் இருட்டாக்கி, அதே நன்னீர்க் கடலுக்குக் கீழே சென்று, மாமரமாய்....மரத்துப் போய் நிற்கிறான் சூரன்!
பிடிவாதம்! அதுவும் தலைகீழாக! வேர்கள் மேலே! கிளைகள் கீழே!

அப்போது தான்...........வேலால் வெஞ்சூர் பிளந்து, மயில் வாகனமாகவும், சேவற் கொடியாகவும் ஆக்கிக் கொள்கிறான், ஐயன் முருகன்!
முருகனின் ஆணையால், மொத்த வீரமகேந்திரபுரத்தையும், கடலில் மூழ்கடிக்கிறான் வருணன்!

செந்தூர் திரும்பி, மீண்டும் சிவபூசை நடக்கிறது!
* கையில் செபமாலையுடன் இன்றும் செந்தூர் முருகனைக் கருவறையில் காணலாம்!
* அந்த முருகனுக்குக் காவலாக, வீரவாகுவை இன்றும் அர்த்த மண்டபத்தில் காணலாம்!


இது தான் வீரவாகு-வின் சுருக்கமான கதை! :)
என் முருகனுக்கு வேண்டியவர்கள் எல்லாம், எனக்கும் வேண்டியவர்கள் அல்லவா! அவர்கள் நலத்தை இங்கு முருகனருளில் சொல்ல வைத்த முருகனருளை எனக்கு ரொம்பவே பிடிக்கும்! :)

இதோ, நடிகர் திலகம் சிவாஜியின் அந்த வீரவாகு பாடல்!!


வெற்றிவேல்! வீரவேல்!
சுற்றிவந்த பகைவர் தம்மைத்
தோள் நடுங்க வைத்த எங்கள்
சக்திவேல்! ஞான சக்திவேல்!

ஆதிசக்தி அன்னை தந்த ஞானவேல்!
அசுரர் தம்மை அஞ்சவைத்த வீரவேல்!
மோதி அந்தக் குன்றழித்த சக்திவேல்!
முவர் தேவர் வாழ்த்தவந்த வெற்றிவேல்!
(வெற்றிவேல்...வீரவேல்)

தெய்வம்உண்டு தெய்வம்உண்டு என்றுசொல்லும் வெற்றிவேல்!
தெய்வபக்தி உள்ளவர்க்குக் கைகொடுக்கும் வீரவேல்!
எய்தபின்பு மீண்டும் கந்தன் கையில்வந்து நின்றவேல்!
எங்கும்வெற்றி எதிலும்வெற்றி காணும்எங்கள் சக்திவேல்!
(வெற்றிவேல்...வீரவேல்)

வானத்தோடு பூமிதொட்டு வளர்ந்துநிற்கும் மாயவேல்!
இமயம்தொட்டுக் குமரிமட்டும் காத்துநிற்கும் சக்திவேல்!
ஆதிவேல்! அழகுவேல்! அன்புகாட்டும் தூயவேல்!
அகிலமுற்றும் புகழ்பரப்ப வேலெடுத்த முருகவேல்!
(வெற்றிவேல்...வீரவேல்)

குரல்: TMS
வரிகள்: ???
இசை: கே.வி. மகாதேவன்
ராகம்: நாதநாமக்ரியை
படம்: கந்தன் கருணை

Monday, April 12, 2010

பி.சுசீலாவின் முதல் முருகன் பாட்டு! - வைகறைப் பொழுதில் விழித்தேன்!

வணக்கம் மக்களே! இன்னிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை! வெளிய வெயில் காய்ஞ்சாலும் உள்ள படபட-ன்னு குளிருது! :)
அதனால், இந்தச் செவ்வாய்க்கு....ரொம்ப எழுதாமல்...

ஒரு அபூர்வமான பாட்டு முருகனருளில்! கிட்டத்தட்ட சுசீலாம்மாவின் முதல் முருகன் பாட்டு-ன்னே சொல்லீறலாம்-ன்னு நினைக்கிறேன்! நீங்களே கேட்டுப் பாருங்க! சுசீலாம்மாவின் ஆரம்ப காலக் குரல்!

பாட்டில் நாதசுரமும் இருக்கு! இருந்தாலும் சுசீலாவின் குரல் நாதசுரத்துக்குப் பொருந்தி வருது - ஜானகியை விட! :) இது பற்றிய கேள்வி ஜானகி-சுசீலா பதிவில் இருக்கு! :)




வைகறைப் பொழுதில் விழித்தேன் - அந்த
வடிவேல் முருகனை நினைத்தேன்
நெஞ்சத்தை மலராய்த் தொடுத்தேன் - அவன்
நினைவில் காலத்தைக் கழித்தேன்!
(வைகறைப் பொழுதில்)

திருப்புகழ்த் தேரில் இழுத்தேன் - அதை
தினமும் மனத்தால் சுவைத்தேன் - என்
தேவைகள் யாவையும் உரைத்தேன் - அவன்
திருவருள் தந்தான் களித்தேன்!
(வைகறைப் பொழுதில்)

உள்ளத்தில் கோயிலை அமைத்தேன் - பக்தி
உணர்வில் ராகத்தை வளர்த்தேன்
ஓம் எனும் மந்தரம் படித்தேன் - அவன்
கருணையைப் பொழிந்தேன் மகிழ்ந்தேன்!
(வைகறைப் பொழுதில்)

சூடிடும் குறிஞ்சி மலராவான் - அவன்
ஏந்திடும் தீபத்தின் ஒளியாவான் - மெய்
அருள் வரும் ஞானக் களியாவான் - என்றும்
அவனே வாழ்வுக்கே உயிராவான்!
(வைகறைப் பொழுதில்)

ஓம் சரவண பவாய நம ஓம்!

வரிகள்: ?
இசை: ?
குரல்: பி.சுசீலா


ஓம் சரவண பவாய நம ஓம் என்று அழகாக இழுத்து முடிக்கிறார்!

சின்ன வயசில், ஊரில் மார்கழி மாசம் போது, இந்தப் பாட்டைத் தான் வைகறைப் பொழுதில் மொதல்ல போடுவாங்க! திருப்பாவை ஒலிக்க விடுவதற்கு முன்பு, இந்தப் பாட்டு தான் ஒலிக்கும்! ஏன்-ன்னா சவுண்ட் சர்வீஸ் அண்ணா (பாஸ்கர்-ன்னு நினைக்கிறேன்) ஒரு தீவிர முருக பக்தர்! :)

நானும் "வைகறைப் பொழுதில் விழித்தேன்"-ன்னு கேட்டுக்கிட்டே தான் விழிச்சி இருக்கேன்! அப்பறம் தான் திருப்பாவை! யாரோ ராகமாப் பாடுவாங்க ஸ்பீக்கர்-ல! ஒரே லைனை பத்து வாட்டி இழுப்பாங்க! அது அவ்ளோ நல்லா இருக்காது சுசீலாம்மா பாடுவதைப் போல்! :)
இருந்தாலும் திருப்பாவை ஆச்சே! எப்படி வுட்டுக் கொடுக்கறது? மனசு வராதே! விதியே-ன்னு முப்பது பாட்டும் ஸ்பீக்கர்-ல்ல கேட்டுக்கிட்டே, கோயிலடி-கிணத்தடி-மஞ்சக் காப்பு அரைக்கிறது போல வேலையெல்லாம் முடிச்சி இருப்பேன்!

ஐயமாரு, அவிங்க வீட்ல தனி வாளியில் பொங்கியாந்த பொங்கலை, எனக்குத் தனியாக் கூப்புட்டுக் கொடுப்பாரு! பெருமாள் சாப்பிடாம அவரு சாப்பிட மாட்டாரு! ஆனா என்னைய மட்டும் சாப்பிடச் சொல்வாரு! சின்ன புள்ள ஒத்தை ஆளா மஞ்ச அரைச்சிருக்கேன்-ல்ல? :)
நானும் பெருமாள் சாப்புட்டாரா-ன்னா சென்ட்டி எல்லாம் அப்போ பார்த்ததில்லை! நல்ல புள்ளையா, பசியிலும் குளிரிலும் சுடச்சுட எறங்கும்! :)

Btw, திருப்பாவை முப்பதும் சுசீலாம்மாவும் தன் ஸ்டைலில் பாடி இருக்காங்க! யாராச்சும் சுட்டியோ, தகவலோ கொடுங்களேன்! புண்ணியமாப் போவும்!

சரி...என் முருகன் பாட்டுக்கு வருவோம்! நான் பேச்செடுத்தாலே பொறந்த வீட்டு பெருமாள் பேச்சு வந்துருது-ல்ல? :)
இந்தப் பாட்டில் தேன் தேன்-ன்னு வருது, கவனிச்சீயளா?
இப்படி சுசீலாம்மாவின் முதல் முருகன் பாட்டே தேனாகி...
பின்பு காலமெல்லாம் தித்திக்கும் பாடல்களைத் தந்தது!

நெஞ்சத்தை மலராய்த் தொடுத்தேன்!
அவன் நினைவில் காலத்தைக் கழித்தேன்!
அவன் நினைவில் காலத்தைக் கழித்தேதேதேதேன் - என்பதில் தான் எத்தனை "தேன்"!!! செல்வமே முருகாஆஆஆ!

Friday, April 09, 2010

மாயக் குறமாதின் மனம் மேவும் வாலக் குமரேசா!


திருப்புகழ் பாடல்கள் முதன்முறையாகப் படிக்கும் போது கடினமாக இருப்பது போல் தோன்றும். அவையே இசைவாணர்கள் பாடக் கேட்டால் எளிமையாக இருப்பது போல் தோன்றும். அவ்வகையிலான ஒரு பாடல் இது.

பதிவு எழுத வந்த புதிதில் (2005 நான்காவது காலாண்டில்) கால்கரி சிவா அண்ணா இப்பாடலின் எம்பி3 அனுப்பினார். அதனை இன்று தான் ஜிமெயிலில் கண்டெடுத்து இங்கே இட முடிந்தது.

கலை மேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் கடலேறிப்
பல மாய வாதிற் பிறழாதே
பதி ஞான வாழ்வைத் தருவாயே
மலை மேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் குமரேசா
சிலை வேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் பெருமாளே


இப்பாடலை கந்தர்வக் குரலோன் ஜேசுதாஸின் குரலில் இங்கே கேட்கலாம்.

பாடலின் பொருளை எஸ்.கே. ஐயாவோ இரவிசங்கரோ தந்தால் மிக நன்றாக இருக்கும். இரவியின் எதிரே ஒரு மின்மினி ஆடுவதைப் போல் இப்பாடலுக்குப் பொருள் தர விழைகிறேன். அவர்கள் வந்து இன்னும் அழகான பொருள் தருவார்கள்!

மலை மேவு மாயக் குறமாதின் - வள்ளிமலையில் வாழும் வியப்பூட்டும் அழகை உடைய குறப்பெண்ணான வள்ளியம்மையின்

மனம் மேவும் வாலக் குமரேசா - மனத்தில் நிலையாக வீற்றிருக்கும் என்றும் இளையவனான குமரேசா!

சிலை வேட - வில்லையேந்திய வேடனே!

சேவற் கொடியோனே - சேவலைக் கொடியாகக் கொண்டவனே!

திருவாணி கூடற் பெருமாளே - திருவும் வாணியும் கூடும் திருவாணிக்கூடலாம் பவானியில் எழுந்தருளும் பெருமாளே!

கலை மேவு ஞானப் பிரகாசக் கடலாடி - எல்லா கலைகளையும் தனக்குள் வைத்திருக்கும் ஞான ஒளியாகிய கடல் முருகப்பெருமான்; அக்கடலில் திளைத்து ஆடி,

ஆசைக் கடலேறிப் - ஆசைகள் என்னும் பெருங்கடலை அவன் கருணையால் நீந்திக் கடந்து, மற்றை நம் காமங்கள் அவன் அருளாலே தீர்ந்து,

பல மாய வாதிற் பிறழாதே - பல வகையான மனத்தை மயக்கும் வீண் வாதங்களில் அடியேன் வழி தவறிச் செல்லாமல்,

பதி ஞான வாழ்வைத் தருவாயே - பசு, பதி, பாசம் என்னும் மூவகைப் பொருள்களைப் பற்றிய ஞானமும் அதனை ஒட்டிய அன்பு வாழ்க்கையும் தருவாயே!

Monday, April 05, 2010

கமல்-ஸ்ரீதேவி முருகன் பாட்டு! - வடிவேலன் மனசு வச்சான்!

சில பாடல்களில்... கமல்-ஸ்ரீதேவி தனியாத் தெரிவாங்க! ஆனா அந்த Romance-இல் என் முருகன் தெரிவானா? :)
இந்தப் பாட்டைக் கேளுங்க, பதில் உங்களுக்கே தெரிஞ்சிடும்!

இதில் கமலும்-ஸ்ரீதேவியும் ஸ்டைலாகச் சொடுக்கிச் சொடுக்கி ஆடுவது...
எனக்கென்னவோ...
தினைப்புனத்தில் முருகனும்-வள்ளியும் ஆடுவது போலவே இருக்கும்! அப்படித் தான் கற்பனை பண்ணிக்குவேன்! :)



அப்போ சென்னைக்கு வந்த புதுசு; தண்ணிப் பஞ்சம் வேற;
கீழே இருந்து மாடிக்கு, தண்ணிக் குடம் சுமப்பதற்குள், என் bend-u கழண்டுரும்:)
அப்பல்லாம் வானொலிப் பாட்டு தான்,  புள்ளைக்கு உற்சாகம்!

வீட்டில் ஒரு Sharp Tape Recorder;
பள்ளி ஆசிரியர் வாங்கிக் குடுத்தது; அப்பா, காசெட்டில் (TDK 45 , 60  and 90), "உள்ளம் உருகுதைய்யா" தான் முதலில் பதிஞ்சி வைப்பாரு;
எல்லாக் காசெட்டிலும் மொத பாட்டு இதே வச்சா, கோவம் வருமா? வராதா? நீங்களே சொல்லுங்க!:)

சின்னப் புள்ள எனக்கோ, "வடிவேலன் மனசு வைச்சான்" கேட்டதில் இருந்து, அதை Record பண்ண ஆசை! (TMS க்காக மட்டுமில்லை; but for Sridevi also:)))

ஒரு நாள் வானொலியில் ஒலிபரப்பும் போது,
நான் Record+Play Button, சேர்த்து அழுத்தி விட,
அது "உள்ளம் உருகுதையா" மேல் பதிஞ்சி போயிரிச்சி;

அவ்ளோ தான்; அப்பா என்னை விளாசித் தள்ளிட்டாரு;
பாட்டி தான் ஒன்னும் புரியாம..
"வடிவேலன் மனசு வச்சான்" கூட முருகன் பாட்டு தானேடா? எதுக்கு கொழந்தைய அடிக்கற? -ன்னு... அப்பவே, என் "முருக பக்தியை" மெச்சினாங்க:))


தாயில்லாமல் நானில்லை!
எம்.ஜி.ஆர் பாட்டு இல்லீங்க! இது கமலஹாசன் நடித்த படம்!
ஹீரோவான பிறகு, ரஜினி வில்லனாக நடித்த படமும் கூட!

மருத்துவமனையில் இருந்த போது, அருகிலேயே உள்ள வாகினி ஸ்டூடியோவுக்கு, ரஜினி தானே விரும்பிச் சென்று, ஒரு சீனில் சான்ஸ் கேட்டு நடித்த படம்! தேவர் ஃபிலிம்ஸ் படத்தின் மதிப்பு அப்படி!

இளவரசியான ஸ்ரீதேவியை, இசைக் குழுவின் கமல் காதலிக்க... ஸ்ரீதேவியின் அப்பா-சமஸ்தான மகாராஜா, ரவுடி ரஜினியை ஏவி விடுவார்!
ஆனால் ஸ்ரீதேவி தன் உள்ளம் பொங்க அழுது....காதலை வெளிப்படுத்த, ரஜினி மனம் மாறி, வாழ்த்தி விட்டுப் போய் விடுவார்!

இதில் வரும் கமல்-ரஜினி சண்டைக் காட்சிகளில்,
நீண்ட நாள் கழிச்சி, மறுபடியும் இரு தரப்பு ரசிகர்கள்.....நிஜமாலுமே சண்டை போட்டுக் கொண்டார்களாம்! அப்போவெல்லாம் பதிவுலகம் என்பது இல்லை போல! :)

சரி நாம பாட்டுக்கு வருவோம்!
* எப்போதும் உடனிருக்கும் மயிலார் (அவரு பேரு: வடிவேலன்),
* காதலர்கள் களிப்பிலும் உடன் இருக்க...
* ஸ்ரீதேவி பக்குவமா மயிலைக் கொஞ்சி...
* "ஹேய்...யாராச்சும் வெளிய வராங்களா-ன்னு பாத்துக்கோ"-ன்னு சொல்ல...
* மயிலார் தத்தித் தத்தி அழகா நடக்க...
* இதுல மயில் அகவுற சத்தமும் கேட்கும்.....யாராச்சும் இதுவரை கேட்காதவங்க கேட்கலாம்! :)

இதோ...முருகனும் முருகியும், அவனும் அவளுமாய்....
பாட்டின் நடுவில் வரும் மெட்டு...
தத்தாத தானா...... தத்தாத தானா.......
தத்தாத தாந் - தனா தானா!

முன்பெல்லாம் தனியறையில் நானும் இப்படியெல்லாம் பாடிக்கிட்டே ஆடுவேன்! அதில் ஒரு தனிப்பட்ட சுகம்! :))

இதோ பாடல், கேட்டுக் கொண்டே படிங்க!


படம்: தாயில்லாமல் நானில்லை
இசை: சங்கர் கணேஷ்
குரல்: TMS & பி.சுசீலா


வடிவேலன்
மனசு வச்சான், மலர வச்சான், மணக்குது ரோஜாச் செடி!
மாந்தோப்பு ஜோடிக்கிளி! மங்காத தங்கக்கொடி!!

(தத்தாத தானா..
தத்தாத தானா...
தத்தாத தாந் தனா தானா!)

அச்சாரமா ஒண்ணு கொடு, ஆராயிரம் அள்ளிக்கொடு!
இந்த மச்சான் வந்து மாலை இடுவான்!
வருவான் தருவான்! வருவான் தருவான்!

செவ்வத்திப்பூ கன்னத்துக்குள், தேனூறுது என்னத்துக்கு?
சின்னச் சிட்டு உன்னைக் கட்டிப் புடிப்பா
கொடுப்பா...முடிப்பா! கொடுப்பா...முடிப்பா!
(வடிவேலன்)

அன்னக்கொடி சின்ன இடை! அம்மாடியோ என்ன நடை!
அடி கண்ணால் ஏண்டி கட்டி இழுத்த?
சிரிச்சேன்...ரசிச்சேன்! சிரிச்சேன்...ரசிச்சேன்!

இந்நேரமாக் கண்ணுறங்கேன்! என்னென்னமோ கொண்டுவந்தேன்!
அந்தக் கந்தன் வள்ளி இந்தக் கதை தான்!
அதுதான்...இதுதான்! அதுதான்...இதுதான்! :)
(வடிவேலன்)


இது முருகன் பாட்டு தானா? முருகனருளில் போடலாமா?
அதுவும், செவ்வாய்க் கிழமை அதுவுமா?
என் முருகனின் "செவ்"வாய் இனிமைக்குக் கிழமை ஏது? எந்நாளும்.....அவன் அதரம் மதுரம், வதனம் மதுரம்! So,

அந்தக் கந்தன் வள்ளி இந்தக் கதை தான்!
அதுதான்...இதுதான்!
My Darling Boy Muruga! - அதுதான்...இதுதான்! :)

பாட்டு நல்லா இருந்திச்சா? :)
எண்பதுகளில், TMS-சுசீலாம்மா ஜோடி சேர்ந்து பாடுவது....அதுவும் இளைய தலைமுறை கமல்-ஸ்ரீதேவிக்கு என்பது அபூர்வம்! அதில் இது ஒன்னு!

Wednesday, March 31, 2010

ஜானகியா? சுசீலாவா? - சிங்கார வேலனே தேவா!

முருகனருள்-150 உற்சவத்தின் தொடர்ந்த தொடர்ச்சியாக...
149 - உனக்கும் எனக்கும் கல்யாணமா!
150 - கவிக் காவடி

சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?
உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு, ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா! பாடு சாந்தா, பாடு!


இது நம்மில் எத்தனை பேருக்கு மனப்பாடம் ஆன வரிகள்! கல்லூரியில் இதை வைத்துச் செய்யாத கேலியா? ஆனால் இன்று இந்தப் பாட்டைத் தனிமையில் (ஏகாந்தமாக) கேட்கும் போது, அப்படியே மனம் லயித்து விடுகிறது!
நாதசுரச் சக்கரவர்த்தி, காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களின் வாசிப்பு அப்படி!

காட்சியை youtube-இல் ஓட்டாமல், மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள்!
ஜெமினியின் அசைவுகள், நடிகையர் திலகம் சாவித்திரியின் நளினம், கே.சாரங்கபாணியின் கன ஜோரான பாவனை-அதுவும் உதட்டைப் பிதுக்கித் தவில் கொட்டும் ஸ்டைலே தனி!

"சிங்கார வேலனே தேவா" = இதைப் பாடுவது ஜானகியா? சுசீலாம்மாவா?

சந்தேகமே இல்லை! "Melody Queen of the South" எனப்படும் ஜானகியே தான்!
* சரி, இந்தப் பாட்டை ஏன் சுசீலாம்மா பாடவில்லை?
* ஜானகி = "Melody Queen of the South" என்றால், சுசீலாம்மா = "Music Queen of the South" ஆச்சே?
* ஜானகி = "இன்"னிசை அரசி! சுசீலாம்மாவோ = "இசை" அரசி!
* அப்பறம் ஏன் இதைச் சுசீலாம்மா பாடவில்லை?
யார் பாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்-ன்னு நினைக்கறீங்க? சொல்லுங்க பார்ப்போம்! :)

இந்தப் பாட்டுக்கு ஒரு பின்னணிக் கதையும் உண்டு, வாரீகளா? பார்க்கலாமா?



இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, முதலில் இந்தப் பாட்டைப் போடுவதாக இல்லை! அவர் போட எண்ணிய பாட்டு, ஞான சம்பந்தரின் தேவாரப் பாடல்! - "மந்திரம் ஆவது நீறு, வானவர் மேலது நீறு"!
இதைத் தான் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் வாசித்து விட்டுச் சென்றாராம் நாதசுரத்தில், இப்போதைய மெட்டில்! நம்ப முடியலை-ல்ல? :)
karaikurichi

பின்னர்...வெறுமனே நாதமாக இல்லாமல், ஒரு பாடகியின் குரலும் சேர்ந்து ஒலித்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல, எஸ்.ஜானகி வரவழைக்கப்பட்டார்!
தேவாரப் பாடலும் ஏனோ மாறியது! கவிஞர் கு.மா.பா "சிங்கார வேலனே தேவா" என்று மாற்றி எழுதினார்! ஜானகி பாடினார்!
தகப்பனுக்கு வர வேண்டிய புகழை, தகப்பன்-சாமி தட்டிச் சென்று விட்டான்! :)

ஆனால் காருக்குறிச்சியார், தேவாரம்-ன்னு நினைச்சி, ஏற்கனவே வாசித்துக் கொடுத்தது, கொடுத்தது தான்! அதை மாற்ற யாருக்கும் மனமில்லை!
பாடலையும், இசையும் பின்னர் காப்பி & பேஸ்ட் செய்தார்கள்! ஆனால் கேட்கும் போது அப்படி மிக்ஸ் செய்தார்கள் என்று சொல்லத் தான் முடியுமா?
அத்தனை நேர்த்தி! எப்போ? = 1960-களில்! கீ-போர்ட் வந்து கீச் கீச் என்னாத கால கட்டம்! :)


சரி, இவ்வளவு கனமான, கர்நாடக இசை மலிந்த ஒரு பாட்டுக்கு...
அதுவும் ஆபேரி ராகமாம்...(நமக்குத் தெரிஞ்சதெல்லாம் ஸ்டராபேரி, கையில் எப்பமே இருக்கும் ப்ளாக்பேரி தான்! :)

இப்படி ஒரு நுணுக்கமான மரபு இசைக்கு, எப்படி ஜானகியைத் தேர்வு செய்தார் இசையமைப்பாளர்?
இத்தனைக்கும், இதற்கு முன்பு ஜானகி அவர்கள், அவ்வளவா கனமான பாடல்களைப் பாடியதும் இல்லை! அப்போது தான் அவர்கள் சினிமாப் பயணமே ஆரம்பம்!

கனரக மரபிசைப் பாடல்கள் - அதுவும் வேகமா - சாம்பிளுக்கு இதோ:
* சுசீலாம்மா = மன்னவன் வந்தானடி தோழி, மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன, இரவும் நிலவும் வளரட்டுமே..
* ஜானகி = சிங்கார வேலனே தேவா, சங்கராபரணம்-சாமஜ வர கமனா (கீச் கீச் நிறையவே உண்டு :)
* வாணி ஜெயராம் = ஏழு ஸ்வரங்களுக்குள், கேள்வியின் நாயகனே!

ஜானகி அவர்கள் பாடிய மரபிசை - சின்னத் தாயவள், சுந்தரன் ஞீயும் சுந்தரி ஞானும்...போன்ற பாடல்கள் எல்லாம் இனிமை தான்! சந்தேகமே இல்லை!
ஆனால் அந்தப் பாடல்கள், மன்னவன் வந்தானடி போல் "கனரகம்" இல்லை!

அப்படி இருக்க, "சிங்கார வேலனே தேவா"-என்னும் கனரகத்துக்கு, ஜானகி எப்படித் தேர்வானார் என்ற காரணத்தைத் தெரிஞ்சிக்கிட்டா மலைச்சிப் போயிருவீக! :)


இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, நாதசுரத்துக்கு-ன்னே ஈடு கொடுக்கக் கூடிய குரல்களைப் பல விதமா ஆய்வு பண்ணாராம்!
ஏன்-ன்னா நாதசுரத்துக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை! அம்புட்டு கனம்! அந்த சப்தத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய கனம் யாருக்கு இருக்கு?

பல பாடகர்களையும் பொருத்திப் பொருத்திப் பார்த்து, ஜானகி தான் நாதசுரத்துக்கென்றே மிகவும் இயைந்து பொருந்தினாராம்!

ஆந்திர அரசின் பி.சுசீலா விருதைப் பெறும் முதல் கலைஞர், எஸ்.ஜானகி


உம்ம்ம்ம்...என்ன காரணத்தால் அப்படிச் சொல்லப்பட்டதோ தெரியாது!
ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்தப் பாடலை, "மன்னவன் வந்தானடி" பாடிய சுசீலாம்மா பாடினால் எப்படி இருந்திருக்கும்?-ன்னு கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை! :)
பின்னாளில், நாதசுரத்துக்கும் தன்னால் ஈடு கொடுக்க முடியும் என்பதைத் தில்லானா மோகனாம்பாளில்...சுசீலாம்மா நிரூபித்துக் காட்டினார் = "மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன"?

அதற்காக ஜானகி அவர்களை இந்தப் பாடலுக்கு தோது இல்லை-ன்னு சொல்ல வரலை! நல்லாத் தான் பண்ணி இருக்காங்க!
ஆனா ஜானகிக்கு எப்பமே ஒரு "கிக்"கான மெல்லீலீலீய குரல்! அது நாதசுரத்துக்கு ஈடு கொடுக்க வல்லது-ன்னு "சொல்லப்பட்ட காரணம்" தான், எனக்குச் சட்டு-ன்னு பிடிபடலை!
அப்படிப் பார்த்தா, எல்.ஆர்.ஈஸ்வரி தான் நாதசுரத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய Best Choice! :)

மத்தபடி, காதல் பாட்டு-ன்னு வந்துச்சி-ன்னா, எப்பமே நான் ஜானகியின் பரம விசிறி-ன்னு பல பேருக்கு, குறிப்பா கண்ணன் பாட்டு வலைப்பூ வாசிச்சவங்களுக்கு நல்லாவே தெரியும்! Coz of that "kick"! :)

மேகம் கருக்குது, நிலாக் காயும் நேரம், பட்டுப் பூவே மெட்டுப் பாடு, இஞ்சி இடுப்பழகா, கொடியிலே மல்லியப்பூ, தாலாட்டுதே வானம் - இப்படிச் சதா சர்வ காலமும் ஜானகியைக் கேட்ட நான்...உம்ம்ம்...
Janaki Madam is a Very Good Companion = When You are in Happy Times! But am always so? முருகா!


சரி...சரி...சுசீலாவா?-ஜானகியா? இந்தச் சிக்கல்-ல நுழையும் முன்னாடி, சிக்கல் சந்நிதிக்குள்ளாற நுழைவோம் வாருங்கள்!

முருகன் ஊருலாத் திருமேனி (உற்சவர்) = சிங்கார வேலன்....கொள்ளை அழகு! வடித்த சிற்பி யாரோ?

இதழ்க் கோட்டோரம் புன் சிரிப்பு தவழும் வதனம்!
சைட் ஆங்கிலில் இருந்து பார்த்தால் கூட, நம்மைப் பார்ப்பது போலவே ஒரு பாவனை! படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்....தெரியும்!
சந்தனக் காப்பை முகத்தில் வழித்து விடும் போது...
அந்த இடது பக்க இதழோரமா.....
Two Lips-My Tulips....அப்படியே குவிச்சி என்னை என்னமோ பண்ணும்! :)

சிக்கல் சிங்கார வேலர்


(பெரு காதல் உற்ற தமியேனை நீ நித்தல் பிரியாதே! பட்சம் மறவாதே!
பெருவாழ்வு பற்ற அருள்வாயே! உனக்"கே" என்னை அருள்வாயே!

வாரணமாயிரம் சூழ வலஞ் செய்து
ஏரக முருகன் ஏகின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக், கனாக் கண்டேன்!
)

இக்கோவிலின் மூலமூர்த்தி முருகன் அல்ல! சிவனார் தான்!
பல புகழ் பெற்ற முருகன் கோயில்களிலும் இப்படியே - திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உட்பட!
இறைவன் = நவநீத ஈஸ்வரர் (வெண்ணெய்ப் பிரான்)! இறைவி = வேல் நெடுங் கண்ணி! சூர சங்காரத்தில், அம்மையிடம் முருகன் வேல் வாங்கும் போது, இந்தக் கோயிலில் ஒரு அதிசயம் காணலாம்! என்னென்று சொல்லுங்கள்? புதிரா புனிதமாவில் ஒரு முறை கேட்கப்பட்டது!

சரி வாங்க பாட்டைக் கேட்கலாம்!
For a change, முதலில் தெலுங்கில் கேட்போமா? :)

பயப்படாதீங்க! சூப்பரா இருக்கு! ஜானகியே தான் பாடறாங்க! - "நீ லீலா பாடித தேவா, மனதே ஆலிஞ்ச வேடக தேவா!"-ன்னு தெலுங்கில் வருது! படம்: முரிப்பிஞ்சே முவ்வாலு! கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!


படம்: கொஞ்சும் சலங்கை
வரிகள்: கு.மா.பாலசுப்ரமணியம்
குரல்: எஸ்.ஜானகி
இசை: எஸ்.எம்.சுப்பையாநாயுடு
நாதஸ்வரம்: காருக்குறிச்சி அருணாசலம்
ராகம்: ஆபேரி

தமிழில்...


சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா - திருச்
செந்தூரில் நின்றாடும் தேவா - முல்லைச்
சிரிப்போடும் முகத்தோடும் வாவா!

செந்தமிழ்த் தேவனே சீலா - விண்ணோர்
சிறைமீட்டுக் குறை தீர்த்த வேலா
சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா!


சரி...நாதசுரத்துக்கு ஈடுகொடுக்க வல்லவர்-ன்னு...ஆய்வு எப்படியோ இருக்கட்டும்....
அப்போது தான் திரைப் பயணத்தை ஆரம்பித்த ஜானகி அவர்களுக்கு,
முருகன் கொடுத்த அழகிய Lift என்றே இதைக் கொள்ள வேணும்!
இந்தப் பாட்டுக்கு அப்புறம் ஜானகியின் கொடி பட்டொளி வீசி பறக்கத் துவங்கி விட்டது!



படத்தில் ஜெமினி-சாவித்ரி பாடல் காட்சி:


Other Versions:

தவில் - வலையப்பட்டி:


கீ-போர்ட் சத்யா:


புல்லாங்குழலில்..விமல் என்ற இளங்கலைஞர்

மலையாளக் கலைஞர் Stephen Devassy on Keyboard:


மலையாளத் தொலைக்காட்சிப் போட்டி ஒன்றில்...அருணா மேரி:


கடைசீயா....நம்ம சின்மயி :)

Sunday, March 28, 2010

முருகனருள் 150: கவிக் காவடி!

அனைத்து முருகனடியார்களையும் அணைத்து,
இதோ, பங்குனி உத்திரம் அன்று.....முருகனருள் 150ஆம் பதிவு!

முருகனருள் வலைப்பூக் குழுவின் சார்பில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்!
இங்குள்ள முருகனடியார்கள் மட்டுமன்றி,
அடியவர், அடியவர் அல்லாதார் அனைவரையும் வணங்கி,
இந்தச் சிறப்புக் காவடிப் பதிவைத் துவங்கிடுவோம்!

ஒரு நூறு கடந்து,
இரு நூறு எதிர் கொள்ள,
இரு,நூறு என்று இடுகைகளை எண்ணி,

ஒரு நூறும், இரு நூறும்,
என்னில் அவன், முன் ஊற,
அவனில் நான், நான் ஊற,
ஐ நூறு, துயர் அறு நூறு,

ஒரு நூறும் + அரை நூறும்
திரு முருகன் திரு நீறே!
இன்று அவனின் திரு நூறே!




காவடிகளில் பல காவடிகள் உண்டு!
பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடியாம்! சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, மச்சக் காவடி, மயில் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என்று பல காவடிகள்!

ஆனால் கவிக் காவடி கேள்விப்பட்டு இருக்கீங்களா?
கவிதை எழுதி , இரண்டு பக்கமும் தொங்க விட்டு வரும் காவடியா? :)
இல்லையில்லை! இது கவி-நயா என்ற அக்கா எழுதிய கவி-காவடி!

இந்தக் காவடிச் சிந்தை, பல மாதங்களுக்கு முன்பே எழுதி, இங்கு பதிவிட அனுப்பி இருந்தார்!
ஆனால் என் நிலைமை என்ன நிலைமையோ, அப்போது விட்டுப் போனது!
விட்டுப் போனதை விட்டு விடுவானா என் முருகன்?
விட்டுப் போனதைத் தொட்டுக் கொண்டு விட்டான் இன்று!

இதோ கவிநயா அக்கா எழுதிய காவடிச் சிந்து, முருகனருள் வலைப்பூவின் 150ஆம் பதிவாக...
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! கவிதை வேல் முருகனுக்கு அரோகரா!



மீனா அவர்களின் குரலில்... கேட்டுக்கிட்டே படிங்க... நன்றி மீனா!

Murugan kavadi son...


குமரன் என்பது-அவன் பேரு - குன்று
தோறும் அவனது ஊரு - தன்னை
மன்றாடிடும் அடியார்களை, கண்போலவே காத்திடும் - அவன்
இறைவன் எங்கள் தலைவன்!

சூரனை வேலால் பிளந்தான் - கொண்டைச்
சேவற் கொடியோனாய்த் திகழ்ந்தான் - சக்தி
வேலன்-சிவ பாலன்-அவன், தேவர்-துயர் தூசாக்கிட
உதித்தான் அவ தரித்தான்!

மயில் மீதினில் ஏறியே வருவான் - அவன்
துயர்களைக் களைந்தெறிந் தருள்வான் - ஆறு
முகங்கொண்ட முருகன்-அவன், அழகன்-என மனங்-குழைந்திட
வருவான் இன்பம் தருவான்!


காவடி தூக்கியே ஆடு - அவன்
காலடி பணிந்தே பாடு - நம்
பாவங்களைக் பொடியாக்கிடும் தூயன்-அவன் திருவடிகளை
நாடு தினம் நாடு!

ஆறு படை வீடு பாரு - அது
ஆறு தலைத் தரும் கேளு - கந்தன்
சரவணபவ எனும்-மந்திரம் வினைகள்-களை திரு-மந்திரம்
கூறு நாளும் கூறு!

செந்தமிழ்க் காவலன் அவனே - நாமும்
சிந்தையில் கொள்ளுவோம் அவனை - சின்ன
முருகன்-அவன், அழகன்-அவன், குமரன்-அவன், கந்தன்-பதம்
பணிவோம் பணிந்து மகிழ்வோம்!!




வாழ்க்கையின் பாரத்தை...
இன்முகத்துடன், பாட்டமும், ஆட்டமுமாய்ச் சுமந்து விட்டால்.....பாரம் தெரியாது! பாசம் தெரிந்து விடும்! = இது தான் காவடி! எளிய மக்கள், மெத்தப் படித்த நமக்கு உணர்த்தும் பாடக் காவடியே பால் காவடி!

சரி, முதன் முதல்...காவடி எப்போ எடுத்தாங்க?
அந்தக் கதை........முருகனருள் - 100 ஆம் பதிவில் இருக்கு! இதோ!
முதல் காவடி எடுத்தது இடும்பன் தான்!
இது பற்றி புராணக் குறிப்புகள் தான் இருக்கே தவிர, இலக்கியக் குறிப்புகள் அவ்வளவா இல்லை!

* நாட்டு மக்கள், நம் கந்தனை, காலாற, காவடி எடுத்து வழிபடும் வழக்கம் பற்றி...
சங்க இலக்கியங்களில் காணவில்லை!
* பின் வந்த சிற்றிலக்கியங்களிலும் அவ்வளவாகக் காணவில்லை!
* சந்தம் செய்யவே பிறந்த நம் சொந்தக் கவியான அருணகிரியும், ஏனோ காவடிச் சிந்தில் போட்டாரில்லை!

பிற்கால இலக்கியங்களில் இல்லாவிட்டால், தமிழ்க் கடவுள் தான் இல்லையென்று ஆகி விடுமா? காவடி தான் இல்லையென்று ஆகி விடுமா?

பெரும்பாலும் பண்டைய நாட்களில் தல யாத்திரைக்கு எளிய கிராம மக்கள் நடந்து தான் போவாங்க! இன்னிக்கும் சில பேரு அப்படிப் பாத யாத்திரை போறாங்க!
அப்போ, வழியில் களைப்பு தெரியாம இருக்க பாடப்படும்/ஆடப்படும் பாடல் = வழிநடைச் சிந்து!
காவடியும் சேர்த்து வச்சிக்கிட்டு ஆடினால் = காவடிச் சிந்து!

கிராம மக்களே பாடுவதால், ரொம்ப கடினமான சொற் செட்டு எல்லாம் இல்லாமல் எளிமையாக இருக்கும்!
இதன் துள்ளல், மக்களிடையே மிகவும் பிரபலம் ஆகியது! பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கியங்களிலும் தலை தூக்க ஆரம்பித்தது! இசைக் கச்சேரிகளிலும் நுழைந்து கொண்டது!

தமிழ் இலக்கியத்துக்கு, எளியோரின் இந்த வழிநடைச் சிந்தை கொண்டு வந்தவர் கலியன் என்னும் திருமங்கை ஆழ்வார்! இது பற்றி இங்கே!
ஆனால், இது வழிநடைச் சிந்தாக இருந்ததே தவிர, காவடி ஆடும் சிந்தாக மாறவில்லை!

கடைசியில்...19ஆம் நூற்றாண்டு, சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்...
தெலுங்குக் குடும்பத்தில் பிறந்து,
தமிழ்க் கடவுளுக்கு உரித்தான காவடியை,
பாட்டுக்கும் மேடைக் கச்சேரிக்கும் கொண்டு வந்தவர்!

சென்னிக்குளம் முருகன், கழுகுமலை முருகன் - இவிங்க ரெண்டு பேர் மேலேயும் இவரு போட்ட காவடிச் சிந்துப் பாட்டுக்கள் எக்கச்சக்கம்! இன்னிக்கும் கச்சேரிகளில் காவடிச் சிந்து-ன்னா இவரு பாட்டு தான்!
அப்படியே ஊத்துக்காடு வேங்கட கவி, பாரதியார், பாபநாசம் சிவன் போன்றோரும் கொஞ்சம் கொஞ்சம் பாடி...இன்று புஷ்பவனம் குப்புசாமி வரை.......காவடி தொடர்கிறது!

ஈழம், சிங்கை, மலேயா, பர்மா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் ராச்செஸ்டர், லண்டன், பாரீஸ்...இன்னும் பாரெல்லாம் பரவி ஆடுகிறது!


முருகனருள் வலைப்பூ...

பாடல்களுக்கான வலைப்பூ என்ற ஆரம்பப் பரிணாமத்தையும் தாண்டி,
* இலக்கியம், சமூகம், ஆய்வுகள்,
* புதிர் விளையாட்டுகள்,
* ஆலய நிகழ்வுகள்/தகவல்கள்,
* பொதுச் சேவைக்கான இடம்...(குழந்தைகள், முதியோர், மருத்துவம், கல்வி முனைப்புகள்-தொடர்புகள்)
என்று பலப்பல முகங் காட்டி இந்த முருகனருள் பரவ வேணும்!
- உங்கள் ஆலோசனைகளையும், வாழ்த்துக்களையும் தாருங்கள்!

முருகனருள் = பல்கிப் பெருகி, ஆயிரம் முகங்களாக மலர்ந்து, பல்லாண்டு பல்லாண்டு, அவன் அடியார்கள் கூடும் இடமாக இருக்க வேணும்!

இருநிலம் மீதினில்
எளியனும் வாழ
எனது முன் ஓடி வர வேணும்! முருகாஆஆஆ!



Reference: இதர காவடிப் பதிவுகள்:

முருகனருள் வலைப்பூவில்:
தைப்பூசம்: குத்துப் பாட்டு=கிளிக் கண்ணி+காவடிச் சிந்து!
கே.ஆர்.எஸ் பிறந்தநாள் முருகன் பாட்டு
100ஆம் பதிவு! பதிவர்கள் எடுக்கும் ஆறுபடைக் காவடிச் சிந்து!
வள்ளியைத் தொட்டு - காவடிச் சிந்து
காவடி ஆட்டமா! - காவடிச் சிந்து பாட்டமா!
காவடிச் சிந்தின் கதை!

கண்ணன் பாட்டு வலைப்பூவில்:
முருகனுக்கு மட்டுமா? கண்ணனுக்கும் காவடி எடுக்கறாங்க டோய்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
கண்ணன் பிறந்தான்! எங்கள் மன்னன் பிறந்தான்!

முருகனருள் 149: உனக்கும் எனக்கும் கல்யாணமா!!!

முருகனருள் வலைப்பூ 150-ஐ தொடும் நல்வேளையிலே...
மங்களகரமாக இங்கு ஒரு திருமணம்!
அப்படியே கற்பனை பண்ணிப் பார்த்துக்கோங்க அந்த அழகுத் திருக்கல்யாணத்தை!

* பேரழகுப் பெட்டகமான மயிலார், முருக மா பிள்ளையை, முருக மாப்பிள்ளையாக்கி, பறந்தடித்துக் கொண்டு வர...
* நிகழும் திருவள்ளுவராண்டு 2041, பங்குனித் திங்கள் பதினைந்தாம் நாள் (29-Mar-2010), உத்திர நட்சத்திரம் கூடிய பங்குனி உத்திர நன்னாளிலே...

* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
* அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ, செந்தில் மா நகரும் சிறப்புடனே தாம் வாழ,
* ஆன்றோர்-சான்றோர்-ஆச்சார்யர்கள் மங்களாசாசனம் பாட
* ஆழ்வார்கள்-நாயன்மார்கள் நாலாயிரப் பாசுரங்களாலும், தேவாரப் பதிகங்களாலும் நல்லாசி கூற,
* எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்குமாய்,
* காதல் திருமணம் இனிதே நடக்கின்ற போழ்தினிலே,

* அன்பர்கள்-அடியார்கள் நீங்கள் எல்லாரும்...
* சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து,
* முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் எழுந்தருளி,
* பல்லாண்டு பல்லாண்டு என்னுமாறும்,
* கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது,
* தம்பதிகளை ஆசிர்வதித்து அருளுமாறு விண்ணப்பம்!




ஆகா! யாருப்பா தம்பதிகள்? யாருக்கும் யாருக்கும் கல்யாணம்? :)

வாரணமாயிரம் சூழ வலஞ் செய்து-ன்னு, தோழி கோதையின் கனவு எல்லாருக்கும் தெரியும்! ஆனால்...ஆனால்...இதோ....பின்வரும் பாட்டை எங்காச்சும் படிச்சிருக்கீங்களா-ன்னு பாருங்க? :)

இன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
என்னை உடையவன் எழில்முருகத் திருநம்பி
முன்னை என் கால்பற்றி, முன்றில் அம்மியின் மேல்,
நன்மெட்டி நாண் பூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!

இது போல ஒரு பத்து பாசுரம் இருக்கு! அதை முருகனருளான மாதவிப் பந்தலில் அப்பறமா இடுகிறேன்!
இப்போ கல்யாணப் பந்தல்-ல கூடுவோம்!
அப்பறமா மாதவிப் பந்தல்-ல கூடுவோம்! :)



இன்னும் சில மணி நேரத்தில் முருகனருள்-150 உதிக்கப் போகிறது!
இப்போது சிற்றஞ் சிறுகாலே!
உலகம் உவப்ப பலர் புகழ் ஞாயிறு.....பதிவு கண்டாங்கு!

முருகனருள்-150, கவிநயா அக்காவின் காவடிச் சிந்து என்று முன்னமே முடிவாகி விட்டது!
பங்குனி உத்திரம் அன்னிக்கி இட, ஷைலஜா அக்காவும் ஒரு பாட்டு எழுதி அனுப்பி இருந்தார்! சபாஷ் சரியான போட்டி! :)

பங்குனி உத்திரம் = முருகனுக்குத் திருமண நாள் ஆகையாலே...
கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டு,
ஷை-அக்காவின் கவிதையை, கல்யாணக் கவிதையா, மாற்றி விட்டேன்!
அக்காவும், பெரிய மனசு பண்ணி, என்னை மன்னிச்சிட்டாங்க! அப்படித் தானே-க்கா? :)

சில வரிகளை மட்டுமே கல்யாணத்துக்கு ஒட்டி வருவது போல் மாற்றம் செஞ்சேன்!
அக்காவின் வைர வரிகளில் எல்லாம் கை வைக்கவில்லை!
மாங்கல்யத் தங்க வரிகளில் மட்டுமே தங்க வைத்தேன்:)

* அப்போ, கண்ணன் பாட்டு-99: அடியேன் எழுதிய கவிதையை, ஷைலஜா அக்கா பாடித் தந்தாங்க!
* இப்போ, முருகனருள்-149: அக்கா எழுதிய கவிதையை, அடியேன் பாடித் தருகிறேன்!

நன்றிக்...கடன் பல தீர்த்து.........கந்தன் என்னை அழைத்துக் கொள்ளட்டும்!
இதோ...பாடலும்...இசையும்...சிறப்புப் பதிவுமாய்...



முருகனருள்-149!



[தடை நீங்கி....திருமண உறுதியும் அறிவிப்பும்]

திருச்செந்தூர் என்ன வெகு தூரமா? - உன்
திருவடி அன்றி வேறு பரிகாரமா?
ஒருச்செந்தூர் அங்கே நம் மனத்தோரமா
உனக்கும் எனக்கும் திருக் கல்யாணமா!!!

[திருமணம் - திருமாங்கல்யம் - அம்மி மிதித்தல்]

வாள்கொண்ட கண்ணுக்கு மை தீட்டினேன் - உன்னை
வரவேற்கச் செவ்வாழைக் கை நீட்டினேன்!
ஆட்கொண்டு மாங்கல்யம் தனைப் பூட்டினாய் - என்னை
கைப்பற்றிக் கால்பற்றிச் சுகம் கூட்டினாய்!

[முதல் இரவு - பாலும் பழமும்]

பால்தந்து உனக்கென்னைத் தேர் ஆக்கினேன்!
பழம்தந்துன் பழந்தோல்வி நேர் ஆக்கினேன்!
தோள்தந்து துயில்காண விரைந்து ஓடினேன்!
தமிழ்தந்துன் திருமார்பில் கரைந்து ஆடினேன்!

[எந்நாளும்...]

காதல்கொண்டார் சொல்லும் சொல் என்னவோ? - என்
வேதமும் நீ அன்றி வேறென்னவோ?
சாதல் வந்தால் கூட கவலை இல்லை! - என்
சங்கீதம் நீயன்றி வேறு இல்லை!!!
முருகா! முருகா! முருகா! முருகா!


உன் கையை நீநீநீட்டி.......என் கையை ஈஈஈட்டிக் கொள்!
தாவிப் படரக் கொழு கொம்பு இல்லை!
கொழு கொம்பு வேண்டேன்! கந்து தனையே வேண்டினேன்!

கந்தா...கை நீநீநீட்டி கையைப் பற்றிக் கொள்!
தனிக் கொடியை, தணி-கைக் கொடியைச் சுற்றிக் கொள்!

உன் கையும் உண்டு, எனக்கொரு மெய்த் துணையே! முருகாஆ!

கந்தனுக்காகத் தான் கண்ட கனாவினை
முந்துற மாதவிப் பந்தல் பகர்ந்து என்
அந்தமும் ஆவியும் நீயே நீயெனச்
செந்தூர் அவனிடம் சென்று சேர்மினே!

Tuesday, March 23, 2010

"ஓரருளே! உடனருளே!"

"ஓரருளே! உடனருளே!"


பேரருளைப் பாடுதலே பெருமகிழ்வு தந்திருக்கும்
பேரருளால் வந்ததெல்லாம் பெருமகிழ்வே தந்திருக்கும்
பெருமகிழ்வு கொண்டிருக்கும் ஓரருளில் கலந்திருந்தால்
பெருமகிழ்வும் குறைவின்றி நாடோறும் வளர்ந்திருக்கும்!

ஆருமில்லை இங்கெனக்கு எனவெண்ணி வருந்தாமல்
ஆருமில்லாப் போழ்தினிலும் தன்னருளைப் பொழிந்திருப்பாய்!
ஓரருளே நினைப்பற்றி ஓராயிரம் உருக்கொண்டால்
ஓரருளாய் ஒன்றிவந்து உலப்பிலா அன்பளிப்பாய்!

தீராத துன்பமெலாம் தினம்வந்து வாட்டுகையில்
தீராது இதுவென்றே மனம்வருந்தி வாடுகையில்
தீராதும் தீர்த்துவைக்கும் ஓரருளே! உடனின்று
தீராத துன்பமெலாம் தான்வெருட்டித் தீர்த்திடுவாய்!

ஓராது யானுன்னை மறந்திங்கே சென்றாலும்
ஓராது எனக்கருளும் ஒருதெய்வம் நீதானே
பாராது யான்செய்யும் பல்வேறு பாவமெல்லாம்
பாராது எனைக்காக்கும் ஓரருளும் நீதானே!

கூரான நாவாலே குத்தியுனைக் கிழித்தாலும்
கூறாது கூடவந்து காக்கின்ற ஓரருளே!
கூறாது யான்செய்யும் பிழையாவும் நீபொறுத்துக்
கூரான வேலுடனே என்முன்னே வரவேணும்!

ஏறாதென் புத்தியிலே என்னவருள் செய்தாலும்
ஏறாதோ எனக்கிங்கு நினையறியும் அருள்ஞானம்
ஏறாத மலைதாண்டி இருக்கின்ற ஓரருளே
ஏறுமயில் மீதேறி எனைக்காக்க வரவேணும்!

சீரான வழியினிலே நான் தினமும் சென்றிடவே
சீராக உடனிருந்து எந்நாளும் அருள்வோனே
சீரோடும் சிறப்போடும் ஓரருளால் செழித்திடவே
சீரான மயிலேறி வேலோடு வரவேணும்!

வேறேதும் பாதையிலே நான்சென்று வீழாமல்
வேராக எனைத்தாங்கி நாடோறும் காப்போனே
வேறான மாயமலம் எனைவிட்டு நீங்கிடவே
வேரறுக்க வேலெடுத்து வினைதீர்க்கும் ஓரருளே!

வாராது போவாயோ வந்துமுகம் காட்டாயோ
வாராது வாடுமிந்த பாலன்முகம் பார்க்கலையோ
வாராது போனாலுன் வல்லமைக்கு அழகாமோ
வாராதிருப்பதேனோ ஓரருளைத் தாராயோ!

காரிருளாய்த் துன்பங்கள் கடிந்தென்னைத் துரத்துதே
காரிருளில் கதிரவனாய்க் கடிதேகி வாமுருகா
பாரினிலே பட்டதெல்லாம் பனிபோல விலகிடவுன்
பார்வையொன்றே ஓரருளே! பரிவுடனே உடனருளே!

வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!


Sunday, February 21, 2010

கிருத்திகைப் பதிவு



இன்று கிருத்திகை திருநாள் . சிங்கை வந்து இரண்டு நாள்தான் ஆகிறது .முருகனருளில் பதிவு போட்டு பலநாட்கள் ஆகிறது . முருகன் அருளால் மலை போல வந்த துன்பம் நீங்கி உடல் நலம் பெற்றது. இந்தப் பாடல் தான் காணிக்கை. விரிவான பதிவு தொடரும்

Friday, January 29, 2010

தைபூச நாயகனே!


பூசத்தின் நாயகனே பூவுலகம் காப்பாயா ?
புள்ளி மயில் ஏறி வரும் வடிவழகா

தை மாத ஒரத்திலே தங்க ரதம் கண்டவரே
காவடியில் உன் முகம் கண்டோம் கதிர்காமா (பூசத்தின்)

செந்தூர்க் கடலினிலும் பரங்குன்றத் தரையினிலும்
பழமுதிர்ச் சோலையிலும் பழனிமலை மீதினிலும்
தணிகை மலைக் காவடியில் தெய்வமகள் உடனுறையும்
சுவாமி மலை அருளினிலும் அரங்கேற்ற வந்தவரே (பூசத்தின்)

தைபூச விழா காணும் முருகனுக்கு அரோகரா

சித்ரம் அவர்கள் எழுதி அனுப்பியது...

Monday, November 09, 2009

அழகென்ற சொல்லுக்கு முருகா...


முருகா... முருகா...

அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)

சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்
சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)

குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா - மனித
சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)

பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)

அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)





***

சேந்தனுக்கு மிகவும் பிடித்த பாடல் இது. தினமும் காலையில் நான் அலுவலகத்திற்குச் செல்லும் போது அவனை அவனுடைய பள்ளியில் விட்டுவிட்டுச் செல்வேன். இந்த மார்கழி வந்தால் அவனுக்கு மூன்று வயது நிறைகிறது. கூடுந்தில் (Van) ஏறியவுடன் 'பாபா. முருகா கீத் பஜே. முருகா கீத் பஜே' (அப்பா. முருகா பாட்டு வேணும். முருகா பாட்டு வேணும்) என்று தொடங்கிவிடுவான். அவன் பள்ளியை அடையும் வரை அவனும் சேர்ந்து பாடிக் கொண்டு வருவான். மற்ற நேரங்களில் நான் 'அழகென்ற சொல்லுக்கு' என்றால் அவன் 'முருகா' என்று சேர்ந்து பாடுகிறான்.

அந்த வயதில் அவன் அக்காவிற்கு ஹனுமான் சாலீஸா பிடித்திருந்தது. இப்போது 'எந்தப் பாட்டைப் போட்டாலும் சரி' என்று இருக்கிறாள்; இவனும் அப்படி ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நினைக்கிறேன். :-)

Monday, October 19, 2009

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -4

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -4
"மனவேடன் காதல்"
'நம்பிராஜன் கூற்று:'

'தினையெல்லாம் முத்திப்போச்சு! அறுவடைக்கு நாளாச்சு!
அதுவரைக்கும் காவல் காத்த ஆசைமகளும் வீடு வந்தாச்சு!
கலகலப்பா காட்டுக்குப் போன புள்ள, காலடியைச் சுத்திச் சுத்தி
வளையவந்த சிறு புள்ள, இப்பல்லாம் ஏனிப்படி பேசாம குந்திகிடக்கா?


துறுதுறுன்னு வேலையெல்லாம் பக்குவமா செய்யிறவ,
பித்துப் பிடிச்சாப்புல மூலையில சாஞ்சு கிடக்கா!
ஆரோடும் பேசவில்லை! சாப்பாடும் செல்லவில்லை!
தினைப்புனத்தைப் பாத்தபடி ஆர் வரவோ தேடியிருக்கா!

ஏன்னு கேக்கப்போனா ஏதுமவ பேசவில்லை!
எம்மகளைப் பாக்கறப்ப பெத்த மனசும் தாங்கவில்லை!
என்ன செஞ்சா தீருமின்னு குறி கேட்டுப் பாக்க வேணும்!
மலைக்காட்டு முனி வந்து மக மேல குந்திகிச்சோ!
வேப்பமரப் பேயொண்ணு எம்மவளைப் புடிச்சிருச்சோ!

ஆத்தாளை அனுப்பிவைச்சு என்னவின்னு கேக்கச் சொன்னேன்! தனக்கொண்ணும் தெரியலைன்னு திரும்பி வந்து கை விரிக்கா!
எங்கசாமி மலைக்குமரன் அருள் கேட்டு வளி கேட்டு அப்படியே செஞ்சிறணும்! இனிமேலும் தாங்கிடவே என்னால முடியலியே!'

என்றிவ்விதம் யோசித்து,
தேவராட்டி, வெறியாட்டாளன்
இருவரையும் வரவழைத்து,
நடந்த கதை சொல்லிவைத்து
குறி சொல்லக் கேட்டிருந்தேன்.

அகில்புகையும் மணமணக்க, உடுக்கையொலி உரக்கொலிக்க,
பம்பையொலி பாரதிர, வெறியாட்டன் வேகமதைக் கூட்டிநின்றான்.
ஆவேசப் பாட்டெடுத்து அழைத்ததுமே அருள்முருகன் அவன்மேலே அருள்செய்து அருள்மொழியால் உரைத்திட்டான்!

'தினைப்புனத்தில் நின்மகளை யாம் வந்து கைபிடித்தோம்!
விரைவிலங்கு வந்திருந்து நின்மகளை மணம் செய்வோம்!
அலங்காரப் பூசைகளும், அபிசேக ஆராதனையும்
அளவின்றி எமக்காக நீயுடனே செய்துவிடு!'

அமுதமொழி கேட்டிட்ட ஆனந்தம் கண்மறைக்க
அப்படியே பூசைகளும் அழகனுக்காய்ச் செய்திருந்தேன்.
ஆனாலும் மகள் நிலையில் மாற்றமேதும் தெரிந்திடாமல்,
செய்வதென்ன இனியென்று கைபிசைந்து தவித்திருந்தேன்!

'காட்டினிலே கண்டெடுத்து காதலுடன் வளர்த்தமகள்,
தாபத்தால் தவிப்பதனைப் பார்த்திடவோ மனமில்லை!
நாட்டமுடன் நான்வணங்கும் வேலனவன் வந்திருந்து,
சீக்கிரமாய் என்மகளின் தாபத்தைத் தீர்க்கவேணும்!'

'மனவேடன் கூற்று':

'வள்ளிக்கு வாக்குரைத்து வந்திட்ட நாள்முதலாய்,
அவள் நினைவே எனை வாட்டித் துயரதிகம் செய்கிறது!
மீண்டுமந்த மான்விழியைக் காணாமல் இருந்திடவோ
மனமிங்கு நிலையின்றி பரிதவித்து அலைகிறது!

தினைப்புனத்தில் தேவியவள் திருமுகத்தை மீண்டுமொரு
தடவையேனும் பாராமல் என்னாலும் இயலவில்லை!'
என வாடி, தாபத்தால் தினைப்புனத்தைத் தேடிவந்து,
தேவிநின்ற குடிசைவாசல் மரத்தடிக்கு மீண்டும் சென்றேன்!

காட்டுக்குடிசையதில் காற்றுமட்டும் தானிருக்கக்,
காதலியைக் காணாமல் கந்தனிவன் தவித்திட்டேன்.
கால்போன இடமெல்லாம் காதல்மகள் தடம்தேடி
காட்டுவழி நடந்தங்கோர் சிற்றூரை அடைந்திருந்தேன்!

காட்டுவேடன் தலைவனவன் நம்பிராஜன் வீடடைந்து நள்ளிரவில்
ஆருமில்லா வேளையினில் இங்குமங்கும் அலைந்திருந்தேன்
வெளிப்பட்ட பெண்ணொருத்தி வனத்திலெனை வள்ளியுடன்
கண்டிருந்த நினைவங்கு வந்திடவே ஆவலுடன்
அவளிடத்தில் "ஆசைமகள் எங்கே?" என்றேன்!

'நின்னைக் காணாத் தாபத்தால் தன் தேகம் தான் மெலிந்து,
ஊனுமின்றி உறக்கமின்றி எம் தலைவி வாடுகிறாள்!
இப்போதே நீர் சென்று தாபத்தைத் தணித்திடுக!
என்னோடு வந்திடுக!' எனச் சொல்லி அழைத்துச் சென்றாள்!

கண்ணெதிரே யான் கண்ட காட்சியினைச் சொல்லிடவும்
நெஞ்சமும் பதறிடுது,.... இப்போது நினைத்தாலும்!
உடல்மெலிந்து, ஊனிளைத்து, கண்ணிரண்டும் பஞ்சடைந்து,
காதல்மகள் கட்டிலினில் களைப்பாகப் படுத்திருந்தாள்!

தாவியவள் பக்கலிலே தயவாக யானமர,
தளிர்க்கொடியாள் கண்விழித்து, மழையெனவே நீருகுத்தாள்.

'நள்ளிரவில் நீரிங்கு வந்ததனை என்னுடைய சோதரரும்
கண்டிட்டால் தாளாக்கோபத்தால் தாறுமாறு செய்திடுவார்!
இனிக் கணமேனும் உமைவிட்டு கன்னியெந்தன் உயிரிங்கு நில்லாது!
கனிவோடு எனைக் கொண்டு கடிந்தேக வேண்டுகிறேன்!'

என்னுமவள் சொல் கேட்டு, அப்படியே அல்லியளைக்
கொடியெனவே அள்ளிக்கொண்டு,
யானிருக்கும் தணிகைமலை வந்தடைந்தேன்!

களவு மணமா கந்தனுக்கு?
'நம்பிராஜன் கூற்று ':

சேவலின்னும் கூவவில்லை! செங்கதிரும் தெரியவில்லை!
கருக்கலிலே வந்தென்னை 'கொடிக்கி'[வள்ளியின் தாய்] அன்று எழுப்பிவிட்டாள்.
'என்னவொரு அவசரமாய் நீயென்னை எழுப்பலாச்சு?' என வியந்து நான் கேட்க, கண்ணீரும் கம்பலையுமாய் எனைப் பார்த்து கதறிட்டாள்.

'கள்ளன் வந்து நம் மகளைக் கவர்ந்திங்கே சென்றாராம்.
கண்டவர்கள் சொன்னாங்க! கட்டிலிலும் ஆளில்லை!

அக்கம்பக்கம் அனைத்திடமும் தேடியிங்கு பார்த்துவிட்டேன்!
அருமைமகளைக் காணவில்லை!' என்று சொல்லி கண்ணீர் வீட்டாள்!

'யானிருக்கும் இடத்தினிலே தைரியமாய் உள்நுழைந்து
என்மகளைக் கொண்டுசெல்ல எவருக்கிங்கு துணிச்சலாச்சு!
இப்போதே படைதிரட்டி யானவரைத் தேடிடுவேன்!'
எனச் சொல்லி கூட்டமாக மகளைத் தேடப் புறப்பட்டேன்.

கண்ணுக்கெட்டிய தொலைவரையும் எவரையுமே காணாமல்
தளர்ந்தங்கோர் சோலையதைக் கண்டவுடன் அதை நாடிச் சென்றேன்.
ரத்தம் கொதிக்கவைக்கும் காட்சியொன்றை யான் கண்டேன்!
மரத்தடியில் என் மகளும் முகம்தெரியா வேறெவனும்
சல்லாபம் செய்திட்ட காட்சியது!

'ஆரடா நீ? கொன்றிடுவேன் யானுன்னை!
விட்டுவிடு என் மகளை' எனவங்கே நான் பாய,
என்மகளும் அவன் பின்னே ஒளியக் கண்டேன்!


'வனவள்ளி கூற்று':

ஆத்திரமும் கண்மறைக்க, அறிவொழிந்து என் தகப்பன்,
என் சொல்லைக் கேளாமல் எங்கள் மேல் பாய்ந்து வந்தான்.
அச்சத்தால் நடுநடுங்கி, உடலெல்லாம் பதைபதைக்க,
அழகனவன் பின்னாலே கோழிக்குஞ்சாய் ஒளிந்துகொண்டேன்.

'ஆயிரம் வீரரொடு ஆயுதத்தை கைக்கொண்டு, அப்பனிங்கு வருகின்றான்! தப்பித்துச் செல்வதுவும் இயலாதென நினைக்கின்றேன்.
ஏதேனும் செய்தென்னைக் காத்திடுக!' எனச் சொன்னேன்!
என்னவனும் அழகாக எனைப் பார்த்து முறுவல் செய்தான்.

'அஞ்சாதே இளமானே! அவரெமக்குச் சமமாகார்!' எனச் சொல்லி
என்னவனும் விழிமலரைத் திறந்தங்கு கோபமாக விழித்திட்டார்
ஏவிவிட்ட கணைகளெல்லாம் வளைந்துவிட்ட நாணலதாய்
குமரவேளின் காலடியில் பணிந்தங்கு குவிந்தன!

அருகிருந்த சேவலதை அமரர்தலைவன் பார்த்திடவே,
உயர்வான சேவலதும் ஓங்கியொரு கூவல் செய்ய,
அப்பனோடு கூடிவந்த அத்துணைப் படைகளுமே
அச்சத்தால் நடுநடுங்கி, அப்படியே அழிந்து போயின!

மாண்டுபட்ட தகப்பனவன் திருமுகத்தைப் பார்த்திருந்து,
வருத்தத்தால் கண்ணீர் விட்டேன்!

அங்குவந்த நாரதனும், அண்ணலவன் முகம் பார்த்து,
'பெற்றவரைக் கொன்றுபோட்டு, கன்னியை நீர் கவருவதும்
முறையல்ல' எனச் சொல்ல, 'என் மனையாட்டி பெருமையினை
உலகறியச் செய்திடவே, யாமிங்கு இது செய்தோம்! அஞ்சவேண்டா!' எனவுரைத்து,

'நீயே அவர்களை எழுப்பிடுக!' எனச் சொல்ல,
'எழுந்திடப்பா என்னப்பா! என்னை நீயும் மன்னியப்பா!'
என நானும் சொல்லுகையில், எல்லாரும் உயிர் பெற்றார்!


'நம்பிராஜன் கூற்று':

உறக்கத்தில் எழுந்தாற்போல் விழித்தங்கு காணுகையில்,
மலைக்காட்டுத் தெய்வமகன் குமரவேளைக் கைதொழுதேன்!

மணவாளன் இவனென்றே மனதுக்குள் அறிந்ததுமே,
மதிமயங்கி யான் செய்த பிழையெல்லாம் புரிந்திடவே
'மன்னித்தருள்க!'வென முருகனவன் அடிபணிந்து,
'வேடர்மகள் உமக்கெனவே பிறந்திட்ட தெய்வமகள்!

மணமுடிக்க நும்மவர்க்கு முழுதான உரிமை இருக்க,
கள்ளன்போல் கவர்ந்திங்கு சென்றதுவும் எமக்கிழுக்கு!
குலப்பெருமை குறைந்திடாது இப்போதே எம்மகளை
எமக்களித்து அருளிடுக! எம்மோடு வந்திருந்து
முறையாக எம்மகளை எம்மூரில் மணந்திடுக!'

எனச் சொல்லி வேண்டிநின்றேன்!
அழகனவன் 'அப்படியே ஆகுக!' என்றான்!
அனைவருமே மகிழ்ந்திருந்தார்!

எம்மூரை அடைந்தவுடன், அனைவரையும் ஒருக்கூட்டி,
அழகான பந்தலிட்டு, ஆனையெல்லாம் முழங்கிடவே
என்மகளை திருக்குமரன் கைகளிலே ஒப்படைக்க,
இனிதாகத் திருமணத்தை நாரதரும் நடத்திவைத்தார்!



வானினின்று மலர்மாரி தேவரெல்லாம் பூச்சொரிய,
வான்மேகம் குளிர்ந்திருந்து மென்தூறல் தெளித்திருக்க,
சந்தனத்தின் மணமங்கு மலைக்காடு தாங்கிநிற்க,
தென்றலது
அதையெடுத்துப் பாங்காகக் கொண்டுவர,
தீ
வளர்த்து மந்திரங்கள் நாரதரும் நவின்றிருக்க,
ஐம்பூத சாட்சி
யாக வடிவேலன் வள்ளிக்குறத்தியின்
வலதுகையைப் பற்றிக் கொண்டான்!

'மனவேடன்':

அங்கிருந்து புறப்பட்டு, அருந்துணைவி கூடவர,
தணிகைமலை சென்றடைந்து தெய்வானை முன் சென்றேன்.

அமிர்தவல்லி, சுந்தரவல்லி எனத் திருமாலின் பிறப்பிரண்டும்,
பலகாலம் தவமிருந்து,இருவேறு இடம் வளர்ந்து,
கூடிவந்த நேரமதில் குமரனெனைத் தானடைந்த மகிழ்வினிலே,

இருவருமே அன்புகாட்டும் விதமாக ஆரத் தழுவிக்கொண்டார்!

ஞானமெனும் ஒரு சக்தி இடப்புறத்தில் தெய்வானை!
இச்சையெனும் ஒருசக்தி வலப்புறத்தில் வள்ளியென,
அழகுமயில் மீதமர்ந்து தனிவேலைக் கையிலேந்தி
அண்டிவரும் அடியவர்க்கு அருள் வழங்கி வருகின்றோம்!...............

மனவேடன் சொல்லி முடித்தான்! மகிழ்ச்சி பொங்க அருள் செய்தான்! தெய்வமகள், வனவல்லி இருவருமே மனமகிழ்வுடன் உடனிருந்தார்!

கூடிநின்ற அனைவருமே குமரவேளை வாழ்த்தி நின்றார்!

அருளிடும் கந்தனின் கதையிதுவே
அதையே சிறியேன் சொல்லிவந்தேன்
சொற்குற்றம் பொருட்குற்றம் பொறுத்தருளி
அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன்

கந்தனின் கருணைப் பெருவெள்ளம்
தடையின்றி அனைவர்க்கும் கிட்டிடுமே
[காலையில்]

கதையினைப் படித்தவர் மிகவாழி!
கேட்டவர் அனைவரும் தான் வாழி!
அன்பினை நாளும் யாம் வளர்த்து
நல்லறம் பெருகிட வேண்டிடுவோம்!

கந்தா! கடம்பா! கதிர்வேலா!
கார்த்திகை மைந்தா! கருணை செய்வாய்!!

காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் நிறைவு செய்தேன்!

முருகனருள் முன்னிற்கும்!!
வேலும் மயிலும் துணை!
கந்தன் கருணை வெல்க!
******************** சுபம் *********************


எங்கள் நண்பர் திரு. ராமச்சந்திரன் [சித்ரம்] தனது ஒரு கவிதையை இந்த சஷ்டி நன்நாளில் திருமுருகனுக்கு அர்ப்பணிக்க வேண்டி அனுப்பியதை இங்கு பதிகிறேன்.

"கரை கண்ட முருகன்!"

கண்ணான முருகனைக் காணவா
கரைகண்ட முருகனைத் தேடவா
திகட்டாத நின் அருளை வேண்டவா
தினை மா மருகனைப் பாடவா

ஆறு குன்று கண்ட ஆறுமுகா
அசுரர் குலம் களைத்த வேல்வீரா
சங்கடங்கள் தீர்க்கவல்ல சரவணபவா
சஷ்டியில் வந்தெனக்கு அருள்வாயா!!

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -3"

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -3
"மனவேடன் காதல்"


'வனவள்ளி கூற்று':

'ஆபத்துக்குப் பாவமில்லை! விருந்தினரை உபசரித்தல் வேட்டுவரின் பண்பாகும்!' எனச்சொல்லி எனைவளர்த்த என் தாயின் சொல் நினைந்து,
பக்கத்தில் அமர்ந்தபடி பட்டுக் கையெடுத்து பக்குவமாய்த் தைலம் தடவி பாங்காகப் பிடித்துவிட்டேன்!

'இதமாக இருக்குதடி பெண்ணே! இன்னும் கொஞ்சம் மேலமுக்கு!' என்றவரைப் பொய்க்கோபத்துடன் பார்த்துவிட்டு,
'போனால் போகிறது! பாட்டைக்குச் செய்ததென எண்ணிக்கொள்வோம்!' என நினைத்து இன்னும் கொஞ்சம் பலமாக, இதமாகக் கால் பிடித்தேன்!


'மனவேடன் கூற்று':

மனக்கள்ளி குறவள்ளி மெல்லிய தன் கையெடுத்து, இதமாகப் பிடித்துவிட என்னையே நான் மறந்துபோனேன்!

'தினையருந்தும் நேரமாச்சு! எழுந்திருங்க பாட்டையா!' என்றவளின் குரல்கேட்டு சட்டென்று எழுந்திருந்தேன்.
வட்டிலிலே தினையிட்டு வட்டமாக அதைக் குழித்து, நடுவினிலே தேன் விட்டு, சிந்தாமல் சிதறாமல் மாவோடு கலக்கின்ற மலர்க்கரத்தைப் பார்த்ததுமே மையல் கொண்டேன்!

குழைத்திட்ட தினைமாவை உருண்டையாக உருட்டியவள் என்கையில் வைத்திடவே ஆவலுடன் நான்விழுங்க.........???
தொண்டையிலே சிக்கியது உள்ளேயும் செல்லாமல், வெளியினிலும் வாராமல் இடையினிலே பந்தாக கதவடைத்து நின்றிடவே,
விக்கலொன்று வெளிக்கிட்டு மேல்மூச்சை அடைத்திருக்க, கண்கள் செருகியதால் கைகாட்டி ஜாடையாக தண்ணீர்! தண்ணீர்! எனச் சைகைசெய்தேன்!

பட்டுக்கையெடுத்து பைங்கிளியாள் குறத்திமகள் என் தலையில் தட்டிவிட்டு நீரெடுக்கச் சென்றாள்.
சென்றிட்ட வேகத்தில் விரைவாகத் திரும்பியவள் 'நீரெல்லாம் என்ன செய்தீர் நீர்? ஒரு சொட்டும் காணவில்லையே!' எனப் பதறினாள்.

'மலையருவி உண்டிங்கு பக்கத்தில்! சுனையொன்று அதனடியில்! சுவையான நீருண்டு! நீருண்டு தணிந்திடவே! சென்றுவாரும் சீக்கிரமாய்!' என அல்லிமகள் படபடத்தாள்.

'நீயும் கூட வந்திட்டால் சுகமாக இருக்குமே!' என நான் சொன்னதுமே,
'காட்டானை அலையுமிடம்! காரிகை நான் வரமாட்டேன்! நீரே சென்றுவருக!' என்றவளும் பகர்ந்திருந்தாள்!

'வழிதெரியா இடத்துக்கு வயதான கிழவனென்னைத் தனியாக அனுப்புதலும் முறையல்ல! ஆனை ஓட்டும் மந்திரமும் இங்கெனக்குத் தெரியுமடி! பயமின்றி என்னோடு நீதுணையாய் வந்துவிடு!' என்றவுடன்,
அரைமனதாய்ச் சம்மதித்து, என்கையைப் பற்றியவள் எனையிட்டுச் சென்றிட்டாள்!
தணிகைமலைத் தாகமின்னும் தணியாத யானுமவள் தளிர்க்கரத்தைப் பற்றியே மலையருவிப் பக்கலில் சென்றோம்.
இதமான குளிர்த்தென்றல் மிதமாக வீசிவர, மலையருவி நீர் தெளித்து திவலைகளும் முகத்தில்பட,
கன்னிமகள் பனிமலர்ப்பூம் பாவையென மிளிர்ந்திருக்க, பேரழகைப் பருகியபடி நீரமுதை நான் பருகினேன்!

'வனவள்ளி கூற்று':

தாகம் தணிந்தவுடன் தணிகைமலை வேலவனின் திருப்புகழைக் கேட்டிடவே ஆவலுடன் அங்கமர்ந்தோம்.
குரலெடுத்து கணீரென குமரனவன் திருப்புகழைக் காதார நான் கேட்க சுதியோடு அவர் பாட,
எனை மறந்து கண்மூடி நானிருந்த வேளையினில், கரமொன்று சூடாக என்மீது பட்டிடவே திடுக்கிட்டுக் கண்விழித்தேன்!

முதியவரின் கரமொன்றென் வளைக்கரத்தைப் பற்றிநிற்க, வந்திட்ட கோபத்தில் வெடுக்கென்று உதறிவிட்டு சட்டென்று யானெழுந்தேன்!

தள்ளிவிட்ட வேகத்தில் தண்ணீரில் அவர் விழுந்தார்! காப்பாற்றிட வேண்டியெனைக் கரங்கூப்பி முறையிட்டார்!
கைபிடித்து வெளியெடுத்து கரையினிலே அமர்த்திவிட்டு குடிசை நோக்கி நான் விரைந்தேன்!
'அண்ணா வரணும்!' எனவொரு குரலும் பின்னாலே ஒலித்திடவே என்னவென பார்க்குமொரு ஆவலினால் முகம் திருப்ப,
காட்டானையொன்று துதிக்கையை வீசிவந்து காதுமடல் படபடக்க எனைநோக்கி ஓடிவர கன்னி நான் படபடத்தேன்!!!!!!

ஒற்றையானை ஓடிவந்தால் ஓடிச்சென்று தப்பிக்கும் உபாயம் சொல்லித்தந்த உணர்வங்கு ஓங்கிவர,
வழிமறைத்து நின்றிருக்கும் ஆனைதாண்டிச் செல்லுதலும் இயலாதே எனவறிந்து, 'காத்திடுக! காத்திடுக' எனவவரைக் கூப்பிட்டேன்!

'ஆனை கண்டு பயம் வேண்டா! விரட்டுகின்ற வழி தெரியும்! ஆனாலும் அதற்கு முன்னால்
நீயெனக்கு சத்தியமாய் ஒருவார்த்தை சொல்லவேண்டும்!'
என்றவரின் சொல்கேட்டு எரிச்சலும் கோபமும் இணைந்தங்கே என்னுள் பிறக்க, 'சத்தியம் செய்வதற்கு நேரத்தைப் பார்த்தீரே!
சீக்கிரமாய் ஆனையதை விரட்டுதற்கு வழி பாரும்! ' என்றிட்ட என் கூவல் காதுகளில் விழாததுபோல், கையிரண்டும் மார்மீது குறுக்காகக் கட்டியபடி,

'சீக்கிரமாய்ச் சத்தியம் செய்தால்... "நானுன்னை மணப்பேன்".... எனச் சத்தியம் செய்திட்டால் ஆனையிங்கு சென்றுவிடும்! சீக்கிரமாய்ச் சொல்லிவிடு' என்றார் பாட்டையா!
ஆனைபயம் மனக்கதவை ஆழமாகப் பதிந்துவர, 'அப்படியே செய்கின்றேன்! யானும்மை மணப்பதற்கு சத்தியமும் செய்கின்றேன்' என்றதுமே,
'அண்ணா! செல்!' எனவந்த முதியவரும் ஒரு சொல்லைச் சொன்னதுமே, மந்திரத்தால் கட்டுண்டதுபோல ஆனை விலகிச் சென்றதங்கே!


'மனவேடன் கூற்று':

ஆனையது சென்றதுமே அல்லிமகள் எனைவிட்டு தழுவிநின்ற தளிர்க்கரத்தைச் சட்டென்று விலக்கிவிட்டு,
எட்டிநின்று எனைப்பார்த்துக் கைகொட்டிக் கலகலவெனவே சிரித்தபடி, 'ஏய்ச்சுப்புட்டேனே தாத்தா! ஏய்ச்சுப்புட்டேனே!' என்றாள்!

'யானும்மைக் கைபிடிப்பேனெனக் கனவினிலும் எண்ணவேண்டா! ஆனைபயத்தில் சொன்ன சொல்லும் ஆனையோட போயே போச்சு!' என்றவளைப் பார்த்தபடி,
'அண்ணா! வரணும்!' என மீண்டும் யான் சொல்ல, ஆனையங்கு வந்திடவே அழகுமகள் என் தோளில் அல்லியென துவண்டு வீழ்ந்தாள்!

'அறியாமல் சிறுபிள்ளை யான் செய்த பிழை பொறுத்து ஆனையதை விரட்டிடுக! சொன்னபடி கேட்டிடுவேன்! மணந்திடவே சம்மதிப்பேன்'
என்றவளின் சொல்கேட்டு, 'அண்ணா! செல்!' என்றதுமே, ஏளனமாய் எனைப் பார்த்து ஆனையங்கு அகன்றதுவே!

'என்னவொரு மந்திரத்தைச் சொல்லியிங்கு செய்தீரோ இந்த மாயம்! எத்தனையோ அதிசயங்கள் நீரிங்கு செய்கின்றீர்!
எனக்கதனைச் சொல்லிடுவீர்' என்றவளின் சொல்லழகில் மெய்ம்மறந்து யானுமங்கு குறவள்ளி காதினிலே மந்திரத்தைச் சொல்லிநின்றேன்!

வள்ளிக்கண்ணாள் தள்ளி நின்றாள்! இரக்கமுடன் எனைப் பார்த்தாள்! 'காடழைக்கும் நேரத்தில் காதலியா உமக்கு வேண்டும்?
காதவழி சென்றுவிடும் காரியத்தை யான் செய்வேன்!' எனச் சொல்லிச் சிரித்தபடி,
'அண்ணா! வரணும்!' என ஓங்கிக் குரல் விடுத்தாள்!

ஓடிவந்த ஆனையங்கு உத்தமியாள் அருகடைந்து "என்ன?"வெனக் கேட்பதுபோல் ஏறிட்டு அவளைப் பார்க்க,
'வயதான இவர் செய்யும் குறும்பிங்கு தாங்கவில்லை! வயற்காட்டைத் தாண்டியொரு வழிமீதிவரை விட்டிடுக!' என வேண்டி நின்றாள்!

வரம்தந்த சாமியையே புறந்தள்ளும் பொல்லாத இந்தப்பெண் பொய்யள் மட்டும் அல்லள், கள்ளியும் கூடத்தான் என மகிழ்ந்து[!] அண்ணனவன் முகம் பார்த்தேன்!

'யானிங்கு செய்வதற்கு இனிமேலும் ஏதுமில்லை! நீயாகப் போகிறாயா? நான் வந்து முட்டிடவோ!' என்பதுபோல் எனைப்பார்த்த அண்ணனவன் குறிப்பறிந்து, கால்தெறிக்க ஓடினேன்!
காதல்மொழிக் குறத்தியவள் கைகொட்டிச் சிரிக்கின்ற வளையோசைச் சத்தமங்கு பின்னாலே கேட்டுவர,

காதவழி சென்றபின்னர் காலார தரையமர்ந்து அடுத்தென்ன செய்வதென அமைதியாகச் சிந்தித்தேன்!

வேறென்ன வழி இனிமேல்?....
********************************
'வனவள்ளி கூற்று':

நடந்ததெல்லாம் நானெண்ணி வாய்விட்டுச் சிரித்தபின்னும், வனவேடன் திருமுகமே மனக்கண்ணில் மிளிர்கிறதே!

மாயமென்ன செய்துவிட்டான்! ஏனவனை மறக்கவில்லை! ஏனிந்தக் குழப்பமென சிந்தித்து அமர்ந்திருக்க,
கையினிலே கூடையுடன், மறுகையில் கோலேந்தி, வாய்மணக்கும் தாம்பூலம் செந்தூரமாய்ச் சிவந்திருக்க
மலைகுறத்தி எனைநோக்கி, குறிசொல்லுமொரு மலைக்குறத்தி ஒயிலாக நடந்து வந்து, 'மனம்விரும்பும் மணவாளன் மடிதேடி வரப்போகும் குறியொண்ணு சொல்லவந்தேன்! இடக்கையைக் காட்டென்றாள்'!
'குறி சொல்லியின் கூற்று':

காடுமலை வனமெல்லாம் எங்க பூமி அம்மே!
கந்தனெங்க குலதெய்வம் காத்திடுவான் அம்மே!
கோலெடுத்து கைபாத்து குறிசொல்லுவேன் அம்மே!
சொன்னகுறி தப்பாது பொய்யொண்ணும் கிடையாது அம்மே!

பூமியிலே பொறந்தாலும் நீ தேவமக அம்மே!
சாமியின்னு கும்பிடலாம் தங்கக்கையி அம்மே!
மலைக்குமரன் மனசுக்குள்ள குடியிருக்கான் அம்மே!
வலைவீசி தேடுறே நீ வந்திடுவான் அம்மே!

இதுக்கு முன்னே நீயவனைப் பாத்திருக்கே அம்மே!
வேசம்கட்டி வந்திருந்தான் புரியலியா அம்மே!
வந்தவனை விரட்டிப்புட்டே அறியாத பொண்ணே!
மறுபடியும் வந்திருவான் சத்தியமிது அம்மே!

கைப்புடிச்சு கூப்புடுவான் மறுக்காதே அம்மே!
தைமாசம் கண்ணாலம் குறிசொல்லுது அம்மே!
வந்தாரை வாளவைக்கும் சாமியவன் அம்மே!
சொந்தமாக்கித் தூக்கிருவான் தங்கமே அவன் உன்னை!

வாக்குசொன்னா தப்பாது வரங்கொடுத்தா பொய்க்காது
நாவெடுத்து நான் சொல்லும் குறியிங்கு அம்மே!
கஸ்டமெல்லாம் தீருமடி களுத்துமாலை ஏறுமடி!
இஸ்டம்போல எல்லாமே சுகமாகும் அம்மே!


'வனவள்ளி கூற்று':

குறிசொன்ன குறத்தியவள் சொன்ன சொல்லில் மனம்மகிழ்ந்து, கழுத்துமாலை ஒன்றெடுத்து கைகளிலே கொடுத்துவிட்டேன்!
எனை வாழ்த்திப் பாடிவிட்டு அவள் சென்ற பின்னாலே, நடந்ததெல்லாம் நினைத்திருந்து மனதுக்குள் அசைபோட்டேன்!

'வந்திருந்தான்' எனச் சொன்ன சொல்லங்கு வாளாக மனக்கதவை அறுத்தங்கு வாட்டிடவே, 'அறியாத சிறுமகளாய் அநியாயக் கோபம் கொண்டு, ஆசையுடன் வந்தவரை ஏசிவிட்டுத் துரத்தினேனே!
மீண்டுமெனைக் கண்டிடவே வருவானோ வடிவேலன்?' என்றெண்ணிக் கலங்கையிலே, வந்தானே வளைச்செட்டி!

'கைப்பிடிச்சு வளையடுக்க, கன்னிக்கெல்லாம் மணமாகும்! ராசியான வளைக்காரன்! சோசியமும் சொல்லிருவேன்!'
மான்போல நீயிருக்க மச்சானும் தேடிவர கைமுழுக்க வளையடுக்கக் கையைக் கொஞ்சம் காட்டு தாயி!
'
என்று சொல்லி கட்டிவைத்த மூட்டையினைக் கவனமாகப் பிரித்தபடி, கட்டாந்தரையினிலே அவனமர்ந்தான்!
உரிமையொடு வலக்கையை ஆதரவாய்ப் பற்றியவன், உள்ளங்கை ரேகை கண்டு உதட்டினிலே முறுவலித்தான்!

'கல்யாண ரேகையொண்ணு கச்சிதமா ஓடுதிங்கு! கட்டப்போகும் மணவாளன் கிட்டத்தில் தானிருக்கான்!
கைநிறைய வளையடுக்கி கன்னி நீ வீடு போனா, கட்டாயம் அவன் வந்து கலியாணம் கட்டிடுவான்!'

என்றங்கே சொல்லியபடி கை முழுதும் வளையலிட்டான்! வளைக்காரன் கைபட்டு வல்லிக்கொடி நான் சிலிர்த்தேன்!
'இந்தமுறை ஏமாற நானிங்கு விடமாட்டேன்! வந்திருக்கும் வளைக்காரர் ஆருன்னு சொல்லிடுங்க!'

என்று சொன்ன மறுகணமே வளையல்செட்டி தான் மறைந்தான்! வடிவேலன் எதிரில் நின்றான்! வஞ்சிநான் மெய்சிலிர்த்தேன் !

'திருமாலின் மகளாக எமக்காகப் பிறந்திட்ட அழகான கன்னியுன்னை உரிய நேரம் வந்திருந்து முறையாக மணம் முடிப்போம் எனச் சொல்லி அனுப்பிவைத்தோம்!
சொல்லெடுத்துக் கொடுக்கின்ற சுந்தரவல்லி நீயும், பூவுலகில் வள்ளியென நம்பிக்கு மகளாகப் பிறந்திருந்தாய்!
நினைவேண்டி யாமிங்கு வனவேடம் தரித்திருந்து நின்மேனி எழிலெல்லாம் கண்ணாரக் கண்டு களித்தோம்!

'வனவேடன், வேங்கைமரம், வயோதிகனும் யாமேதான்! வஞ்சியுன்னைக் கண்டிடவே பலவேடம் யாம் தரித்தோம்!
வேழமுகன் என்னண்ணன் கரியாகி எதிர் வந்தார்! கன்னியுனைச் சீக்கிரமே கலியாணம் செய்திடுவோம்!
இச்சைக்கு அதிபதியாய் என்றுமுன்னைத் தொழுதிருந்து இச்சகத்தில் இணையில்லாப் புகழோடு யாமிருப்போம்!
கவலையின்றி இல்லம் சென்று காத்திருப்பாய் எமக்காக!'

எனச் சொல்லி மறைந்துவிட்டான்! கன்னி நான் மூர்ச்சையானேன்!

இனி என்ன?

***********************
[நாளை வரும்!]


அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP