Sunday, May 18, 2008

வள்ளியைத் தொட்டு - காவடிச் சிந்து

எந்தவேளையும் கந்தவேளைத் தொழுவோர்க்கும் சொந்தவேளை என்ற ஒன்றே இல்லாதவர்க்கும் நாளும் கிழமையும் ஒன்றே. அப்படியிருப்பினும் ஒருவேளையாவது இறைவனின் திருவேளை என்றுண்ணி வாழ்கின்ற பேர்களுக்கு அவ்வேளையும் செவ்வேளையாக வாழ்த்துவோமாக. அவ்வகையில் வைகாசி விசாகத் திருநாளாகிய இன்று தமிழ்வேளைத் தொழுது இவ்வேளையைத் தமிழ் வேளை என்று ஆக்கும் பெருமையை வேண்டுவதே சிறப்பாகும்.

கண்டோரும் விண்டோரும் சொல்லில் பொருளில் இறைவனைப் பாடிய வேளையில் அன்புண்டோரும் பாடலாம். இறைவன் அருளினைக் கூடலாம் என்ற கருத்தினை ஒப்புக் கொண்டு செம்மொழியும் நல்லன்பும் மட்டுமே உளத்தில் நிறுத்தி முருகன் அருளால் செய்த பாடல் இது. காவடிச் சிந்து மெட்டில். பாவை அறியாப் பாலகன் பாலை அகல எண்ணிச் செய்த இந்த விளையாட்டுச் சிந்தினைச் செந்திலை நினைத்துப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.



வள்ளியைத் தொட்டுக் கரமிட்டக் காதலன்
வேலவன் வடிவேலவன் - அந்தக்
கள்ளியின் சேல் கண்டு கால் தொட்டுக் காத்திடும்
காவலன் நம்காவலன்

புள்ளியைக் கொண்ட மயில் விட்டு வேகமாய்
ஏகினான் நமைச் சாகினான் - நாளும்
எள்ளியே துன்பத்தை நம்மினும் தூரமிட்
டோட்டினான் வழி காட்டினான்

பள்ளியைத் தந்து மெய்யறி வூட்டிடும்
போதகன் தமிழ்ப் போதகன் - மலர்
அள்ளியே தூவியே பாடிடும் கூட்டத்தில்
நாயகன் அருள் தாயகன்


இந்தப் பாடலை அன்பர்களோ நண்பர்களோ பாடித் தந்தால் மிகவும் மகிழ்வேன்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

21 comments:

ஜீவி May 19, 2008 1:45 AM  

//வள்ளியைத் தொட்டுக் கரமிட்டக் காதலன்
வேலவன் வடிவேலவன் - அந்தக்
கள்ளியின் சேல் கண்டு கால் தொட்டுக் காத்திடும்
காவலன் நம்காவலன்//

ஜி.ரா.,

எடுப்பை அழகாக எடுத்திருக்கிறீர்கள்..
இறைவனின் புகழ்பாடி கூட்டமாக
அவன் அருள் வேண்டி நடைபயணம் மேற்கொள்ளும் பொழுது, காவடிசிந்து
அழகில் லயித்து இப்படிப்பட்ட பாடல்களை கோரஸாக அனைவரும் சேர்ந்து பாட அற்புதமாக இருக்கும்;
பரவசமும் ஏற்படும்.
உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்..

மெளலி (மதுரையம்பதி) May 19, 2008 6:15 AM  

நல்லாயிருக்கு ஜிரா....

பாட்டா பாடுவதற்கு கொஞ்சம் நெரடறமாதிரி தெரியுது...கொஞ்சம் நேரம் குடுங்க...நான் இன்ன்னோரு முறை பாடிப் பார்க்கிறேன் :)
(ஆனா ரெக்கார்ட் எல்லாம் பண்ணி அனுப்ப முடியாது :-))

ஷைலஜா May 19, 2008 6:49 AM  

ஆஹா படிக்கறப்போவே பாட்டு அசைஞ்சி வருதே என் நாவில்..இதோ பாடி அனுப்பறேன்
முருகனைப்பாட கசக்குமா என்ன?
பாக்கியம் பெற்றேன்!

தி. ரா. ச.(T.R.C.) May 19, 2008 8:30 AM  

புள்ளியைக் கொண்ட மயில் விட்டு வேகமாய்
ஏகினான் நமைச் சாகினான் - நாளும்
எள்ளியே துன்பத்தை நம்மினும் தூரமிட்
டோட்டினான் வழி காட்டினான்

அருமையான சந்தம். ஒரு முறை பாடிப் பார்த்தேன். காவடி எடுக்கும் போது அருமையாக தாளத்தை கூட்டி குறைத்து பாடினால் முருகன் நேரிலேயே வந்து விடுவான்

Kavinaya May 19, 2008 8:44 AM  

நல்ல வேளையில் வந்து கந்த வேளைப் பற்றிப் பாடிய பாடல் இனிமை.

ஷைலஜா May 19, 2008 9:43 AM  

இந்தப்பாடலை அருமையா வேற ஒருத்தர் பாடப்போறாங்க காத்திருக்கவும்!

குமரன் (Kumaran) May 19, 2008 9:53 AM  

இராகவன்,

நான்கு பகுதிகளாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏற்கனவே இருக்கும் மூன்றாவது பகுதியை நான்காவது பகுதியாக்கி இந்த அணில் இராகவனுக்குச் செய்யும் தொண்டாகச் செய்த கீழே தந்துள்ள பகுதியை மூன்றாவது பகுதியாக்குங்கள்.

திருவரங்கபிரியா,

இந்தப் பகுதியையும் சேர்த்துப் பாடித் தாருங்கள்.

அள்ளியெ டுத்து அணைத்திடும் அன்னையின்
பாலகன் கந்த வேலவன்
புள்ளி மயிலினில் புன்னகை செய்திடும்
தூயவன் அத்தி நாயகன்

குமரன் (Kumaran) May 19, 2008 9:56 AM  

இராகவன்,

காவடிச்சிந்தில் இருக்கும் பாடல் புரிகிறது. ஆனால் முதல் இரு பத்தி புரியவில்லையே. பத்தி இல்லாதவன் என்பதாலோ?

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் நூற்களை நிறையப் படித்தீர்களோ? அந்த நடையில் எழுதியிருக்கிறீர்கள்?!

// பாவை அறியாப் பாலகன் பாலை அகல எண்ணிச் செய்த //

இது எனக்கு இரண்டு விதமாகப் புரிந்தாலும் முதல் புரிதலான திருப்பாவை அறியா பாலகன் என்பது தவறு என்பதால் அதனைத் தள்ளி அடுத்தப் புரிதலை மட்டுமே கொள்கிறேன். விரைவில் பாலை அகலட்டும். அதற்குத் தமிழ்வேள் அருளட்டும்.

Kannabiran, Ravi Shankar (KRS) May 19, 2008 12:16 PM  

காவடிச் சிந்தின் சிறப்பே அதன் எடுப்பு!
கால் மாறித் தோள் ஏறித் தாவிடும் தொடுப்பு!

தொடுப்பினை எடுப்பாய்த்
தமிழ்கொண்டு மடிப்பாய்ப்
பாடிடும் அன்பர்க்குக்
கொடுப்பினைக் கொடுப்பாய்-அவர் தம்
கடுப்பினை முடிப்பாய்!

காவடிச் சிந்து முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஜிரா!
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
//புள்ளியைக் கொண்ட மயில் விட்டு வேகமாய்
ஏகினான் நமைச் சாகினான்//

சாகினான்=விளக்கம் ப்ளீஸ்!

//நான்கு பகுதிகளாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது//

ஆமாம் ஜிரா!
குமரன் சொல்வது சரி!
காவடிச் சிந்து என்பது, பாமர மக்கள், வழிக்களைப்பு தீர, ஒய்யாரமாய் ஆடிப் பாடிச் செல்லும் சிந்துக் கவியில் ஒரு வகை!
ஒருத்தர் எடுக்க அதுக்குப் பதிலாய் இன்னொருத்தர் தொடுக்க - இப்பிடித் தான் காவடிச் சிந்துப் பாட்டு செல்லும்!
அதுனால 2,4,6,8 ன்னு ரெட்டைப் படையாத் தான் பாட்டு வரும்!

இங்க எத்தனை பேர் காவடி சுமந்து இருக்காங்க-ன்னு தெரியாது! ஆனாக் கிட்டக்க இருந்து பார்த்தா சட்டுன்னு விளங்கிடும்!
நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு முறை சுமந்துள்ளேன். அதுக்கு எங்க பாட்டி பாட்டு படிச்சாங்க!
அப்போ பாட்டி எடுக்க, அதுக்கு எசையா இன்னொருதர் தொடுப்பாரு!

காவடிச் சிந்தில் இன்னொரு விசயம் எளிமை! நாட்டு மக்கள் பாடுறா மாதிரி எளிய தமிழ்ச் சொற்களா வந்தா சிந்து இன்னும் களை கட்டும்!

இதைப் போல் தொடர்ந்து முயற்சி செய்யுங்க ஜிரா! வாழ்த்துக்கள்!

Kavinaya May 19, 2008 12:39 PM  

//தொடுப்பினை எடுப்பாய்த்
தமிழ்கொண்டு மடிப்பாய்ப்
பாடிடும் அன்பர்க்குக்
கொடுப்பினைக் கொடுப்பாய்-அவர் தம்
கடுப்பினை முடிப்பாய்!//

ஆஹா! எடுத்துக் கொடுத்ததும் தொடுத்து முடித்துத் தடுத்தாட்கொண்ட இரவி வாழ்க!

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடக்கும்போது சிவல்புரி சிங்காரம் அவர்களின் "எள்ளுப்பூ மூக்கு" என்று தொடங்கும் ஒரு பாடல் பாடுவோம். அது காவடிச் சிந்துதானே? எனக்கு ரொம்பப் பிடித்த பாடல் அது.

G.Ragavan May 19, 2008 1:42 PM  

// ஜீவி said...

ஜி.ரா.,

எடுப்பை அழகாக எடுத்திருக்கிறீர்கள்..
இறைவனின் புகழ்பாடி கூட்டமாக
அவன் அருள் வேண்டி நடைபயணம் மேற்கொள்ளும் பொழுது, காவடிசிந்து
அழகில் லயித்து இப்படிப்பட்ட பாடல்களை கோரஸாக அனைவரும் சேர்ந்து பாட அற்புதமாக இருக்கும்;
பரவசமும் ஏற்படும்.
உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். //

நன்றி ஜீவி. கூட்டமாய்க் கூடி காவடி தூக்கி ஆடி முருகன் அருளைப் பாடிப் பரவசம் அடையவே காவடிச் சிந்து. அந்த முயற்சியை ஊக்குவித்தமைக்கு நன்றி.

G.Ragavan May 19, 2008 4:03 PM  

// மதுரையம்பதி said...

நல்லாயிருக்கு ஜிரா....

பாட்டா பாடுவதற்கு கொஞ்சம் நெரடறமாதிரி தெரியுது...கொஞ்சம் நேரம் குடுங்க...நான் இன்ன்னோரு முறை பாடிப் பார்க்கிறேன் :)
(ஆனா ரெக்கார்ட் எல்லாம் பண்ணி அனுப்ப முடியாது :-)) //

பாடிப் பாருங்க. எங்கையேவது தப்பா எழுதீருப்பேன். சொன்னா திருத்திக்கிறேன்.

ரெக்கார்ட் பண்ணி அனுப்ப முடியாதா? முருகன் பாட்டைப் பாடி அனுப்ப முடியாதா? ;)

jeevagv May 19, 2008 10:34 PM  

பாடல் நன்றாக இருக்கிறது ஜிரா!
//வள்ளியைத் தொட்டுக் கரமிட்டக் காதலன்//
வள்ளியை கை தொட்டுக் கரமிட்டக் காதலன் - என்றிருந்தால் சந்தம் மேலும் சேர்ந்து வருகிறது.

இப்படிப்போடலாம்:
தன்னன தன்னன தன்னன தன்னன
தானன தன தானன
வள்ளியை கைதொட்டு கரமிட்ட காதலன்

வேலவன் வடி வேலவன்!
கள்ளியின் சேல்கொண்டு கால்தொட்டு காத்திடும்

காவலன் நம் காவலன்!

VSK May 19, 2008 11:43 PM  

ஜீவா சொன்ன கருத்தே என் கருத்தும்!

ஒரு 'கை' சேர்த்தால் இன்னமும் சரியாகும் என எண்ணுகிறேன்.

அதே போல,
'அறிவூட்டிடும்' என்பதற்குப் பதிலாக, 'அறிவே ஊட்டிடும்' என மூன்றாம் பத்தியில் வந்தால் சந்தம் சரிய்யாக வருகிறது.

நாளை பாடி அனுப்புகிறேன்!

VSK May 19, 2008 11:58 PM  

இது எப்படி இருக்குன்னு சொல்லுங்க, ஜி.ரா.!

வள்ளியைத் தொட்டுக்க ரமிட்டக் காதலன்
வேலவன் வடிவேலவன் - அந்தக்
கள்ளியின் சேல் கண்டு கால் தொட்டுக் காத்திடும்
காவலன் நம் காவலன்

புள்ளியைக் கொண்டம யில்விட்டு வேகமாய்
ஏகினான் நமைச் சாகினான் - நாளும்
எள்ளியே துன்பத்தை நம்மினும் தூரமிட்
டோட்டினான் வழி காட்டினான்

பள்ளியைத் தந்து மெய்யறிவே ஊட்டிடும்
போதகன் தமிழ்ப் போதகன் - மலர்
அள்ளியே தூவியே பாடிடும் கூட்டத்தில்
நாயகன் அருள் தாயகன்

அள்ளியெ டுத்து அணைத்திடும் அன்னையின்
பாலகன் கந்த வேலவன் -- வண்ணப்
புள்ளி மயிலினில் புன்னகை செய்திடும்
தூயவன் அத்தி நாயகன்

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
வேலுண்டே பயம் இல்லையே - கந்தன்
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
வேலுண்டே பயம் இல்லையே -- கந்தன்
வேலுண்டே பயம் இல்லையே -- கந்தன்
மயிலுண்டே பயம் இல்லையே!

சரின்னா நாளை பாடி வரும்!:))

G.Ragavan May 21, 2008 5:39 PM  

// குமரன் (Kumaran) said...

இராகவன்,

காவடிச்சிந்தில் இருக்கும் பாடல் புரிகிறது. ஆனால் முதல் இரு பத்தி புரியவில்லையே. பத்தி இல்லாதவன் என்பதாலோ? //

ஆகா... குமரனுக்குப் புரியவில்லையா.. அப்படியானால் நான் எழுதியதில்தான் குற்றம்.

// பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் நூற்களை நிறையப் படித்தீர்களோ? அந்த நடையில் எழுதியிருக்கிறீர்கள்?! //

தெரியலையே குமரன். அப்படி எதுவுமே யோசிக்கலை. மெட்டு வந்ததும்.. பட்டுப் பட்டுன்னு சொற்கள் விழுந்திருச்சு. ரொம்பவும் யோசிச்செல்லாம் போடலை.

// // பாவை அறியாப் பாலகன் பாலை அகல எண்ணிச் செய்த //

இது எனக்கு இரண்டு விதமாகப் புரிந்தாலும் முதல் புரிதலான திருப்பாவை அறியா பாலகன் என்பது தவறு என்பதால் அதனைத் தள்ளி அடுத்தப் புரிதலை மட்டுமே கொள்கிறேன். விரைவில் பாலை அகலட்டும். அதற்குத் தமிழ்வேள் அருளட்டும். // //

நன்றி குமரன். குமரன் வாழ்த்து தமிழ்த்தாய் வாழ்த்து :)

மூனாவதா ஒரு பொருளும் இருக்கு. வெண்பாவை அறியாப் பாலகன்
வஞ்சிப்பாவை அறியாப் பாலகன்
களிப்பான கலிப்பாவை அறியாப் பாலகன்

இப்பிடியும் வெச்சுக்கலாமே குமரன்.

குமரன் (Kumaran) May 21, 2008 5:47 PM  

//மெட்டு வந்ததும்.. பட்டுப் பட்டுன்னு சொற்கள் விழுந்திருச்சு. //

இராகவன். பாட்டு புரிஞ்சது. உரைநடை தான் ரொம்ப சுத்தி சுத்தி வர்ற மாதிரி இருக்கிறதால புரியலைன்னு சொன்னேன். :-)

நான் எழுதிக் கொடுத்த நாலுவரியைப் பத்தி ஒன்னும் சொல்லலையே? நல்லா இல்லையா? பிடிக்கலையா?

G.Ragavan May 21, 2008 6:10 PM  

// VSK said...


சரின்னா நாளை பாடி வரும்!:)) //

அதெல்லாம் கேக்கக் கூடாது. மொதல்ல பாடி அனுப்புங்க. :) காத்திருக்கிறோம்.

Kavinaya May 21, 2008 10:50 PM  

//நான் எழுதிக் கொடுத்த நாலுவரியைப் பத்தி ஒன்னும் சொல்லலையே? நல்லா இல்லையா? பிடிக்கலையா?//

குமரா. இதுக்குப் பேருதான் whaling for compliments-ங்கிறது போல :)

குமரன் (Kumaran) May 23, 2008 9:20 AM  

கவிநயா அக்கா. பாராட்டுகள் எனக்கும் பிடிக்கும் என்பது உண்மை தான். ஆனாலும் இங்கே நான் கேட்பது பாராட்டுகள் இல்லை. இராகவன் அந்த நாலு வரிகளைப் பற்றி பேசாமல் இருப்பதற்கு ஏதேனும் காரணங்கள் உண்டா என்று தெரிந்து கொள்ளத் தான் கேட்கிறேன். வேறொன்றும் இல்லை.

Kavinaya May 23, 2008 9:21 AM  

சும்மா கிண்டல் பண்ணினதை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டீங்க :(

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP