"ஓரருளே! உடனருளே!"
"ஓரருளே! உடனருளே!"
பேரருளைப் பாடுதலே பெருமகிழ்வு தந்திருக்கும்
பேரருளால் வந்ததெல்லாம் பெருமகிழ்வே தந்திருக்கும்
பெருமகிழ்வு கொண்டிருக்கும் ஓரருளில் கலந்திருந்தால்
பெருமகிழ்வும் குறைவின்றி நாடோறும் வளர்ந்திருக்கும்!
ஆருமில்லை இங்கெனக்கு எனவெண்ணி வருந்தாமல்
ஆருமில்லாப் போழ்தினிலும் தன்னருளைப் பொழிந்திருப்பாய்!
ஓரருளே நினைப்பற்றி ஓராயிரம் உருக்கொண்டால்
ஓரருளாய் ஒன்றிவந்து உலப்பிலா அன்பளிப்பாய்!
தீராத துன்பமெலாம் தினம்வந்து வாட்டுகையில்
தீராது இதுவென்றே மனம்வருந்தி வாடுகையில்
தீராதும் தீர்த்துவைக்கும் ஓரருளே! உடனின்று
தீராத துன்பமெலாம் தான்வெருட்டித் தீர்த்திடுவாய்!
ஓராது யானுன்னை மறந்திங்கே சென்றாலும்
ஓராது எனக்கருளும் ஒருதெய்வம் நீதானே
பாராது யான்செய்யும் பல்வேறு பாவமெல்லாம்
பாராது எனைக்காக்கும் ஓரருளும் நீதானே!
கூரான நாவாலே குத்தியுனைக் கிழித்தாலும்
கூறாது கூடவந்து காக்கின்ற ஓரருளே!
கூறாது யான்செய்யும் பிழையாவும் நீபொறுத்துக்
கூரான வேலுடனே என்முன்னே வரவேணும்!
ஏறாதென் புத்தியிலே என்னவருள் செய்தாலும்
ஏறாதோ எனக்கிங்கு நினையறியும் அருள்ஞானம்
ஏறாத மலைதாண்டி இருக்கின்ற ஓரருளே
ஏறுமயில் மீதேறி எனைக்காக்க வரவேணும்!
சீரான வழியினிலே நான் தினமும் சென்றிடவே
சீராக உடனிருந்து எந்நாளும் அருள்வோனே
சீரோடும் சிறப்போடும் ஓரருளால் செழித்திடவே
சீரான மயிலேறி வேலோடு வரவேணும்!
வேறேதும் பாதையிலே நான்சென்று வீழாமல்
வேராக எனைத்தாங்கி நாடோறும் காப்போனே
வேறான மாயமலம் எனைவிட்டு நீங்கிடவே
வேரறுக்க வேலெடுத்து வினைதீர்க்கும் ஓரருளே!
வாராது போவாயோ வந்துமுகம் காட்டாயோ
வாராது வாடுமிந்த பாலன்முகம் பார்க்கலையோ
வாராது போனாலுன் வல்லமைக்கு அழகாமோ
வாராதிருப்பதேனோ ஓரருளைத் தாராயோ!
காரிருளாய்த் துன்பங்கள் கடிந்தென்னைத் துரத்துதே
காரிருளில் கதிரவனாய்க் கடிதேகி வாமுருகா
பாரினிலே பட்டதெல்லாம் பனிபோல விலகிடவுன்
பார்வையொன்றே ஓரருளே! பரிவுடனே உடனருளே!
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!
9 comments:
வீஎஸ்கே,
பாடல்கள் நன்று !
148 ஆம் பாடலைத் தந்த SK ஐயாவுக்கு நன்றி!
அவர் கொடி அசைத்து, துவக்கி வைக்கும் விழா...
இன்னும் சில நாட்களில் (Mar 29) - முருகனருள்-150!
//ஆருமில்லை இங்கெனக்கு எனவெண்ணி வருந்தாமல்
ஆருமில்லாப் போழ்தினிலும் தன்னருளைப் பொழிந்திருப்பாய்!//
படிச்சிக்கிட்டே வரும் போது, திடீர்-ன்னு...எனக்காகவே இதை எழுதினீங்களோ-ன்னு தோனிச்சி SK ஐயா!
தக்க சமயத்தில் முருகன் எனக்கு-ன்னு சொன்னதாகவே எடுத்துக்கறேன்!
//கூரான வேலுடனே என்முன்னே வரவேணும்//
இருநிலம் மீதில் எளியனும் வாழ
எனதுமுன் ஓடி வரவேணும்
என்ற திருப்புகழ் போலவே இருக்கு!
என் முருகா, எனதுமுன் ஓடி வரவேணும்! எனதுமுன் ஓடி வரவேணும்!
* பாடல அருமை
பின்னே வரும் வினையினை சற்று முன்னே தீர்ப்பாயே முத்தமிழ் முருகனே .........சித்ரம் ..//
ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு பாடலை நிதானமா இன்னைக்குத் தான் படிச்சேன் எஸ்.கே. ஐயா. :-)
ஓராது யானுன்னை மறந்திங்கே சென்றாலும்
'ஓறாது' எனக்கருளும்... என்று இருந்தால் இன்னும் பொருத்தம் என்று தோன்றியது.
//ஓராது யானுன்னை மறந்திங்கே சென்றாலும்
'ஓறாது' எனக்கருளும்... என்று இருந்தால் இன்னும் பொருத்தம் என்று தோன்றியது.//
ஓரு ōru
, n. Instant, as the time-measure of the snap of the finger; நொடி. (அக. நி.)
ஒரு நொடி கூட தாமதிக்காது என்னும் பொருளில் எழுதினேன் குமரன்!
//படிச்சிக்கிட்டே வரும் போது, திடீர்-ன்னு...எனக்காகவே இதை எழுதினீங்களோ-ன்னு தோனிச்சி SK ஐயா!
தக்க சமயத்தில் முருகன் எனக்கு-ன்னு சொன்னதாகவே எடுத்துக்கறேன்!//
உங்கள் நினைவும் இதை எழுதும் போது எனக்கு வந்தது ரவி!
//பாடல்கள் நன்று //
நன்றி கோவியாரே!
//* பாடல அருமை
பின்னே வரும் வினையினை சற்று முன்னே தீர்ப்பாயே முத்தமிழ் முருகனே .........சித்ரம் ..//
அப்படியே ஆகட்டும் ஐயா! மிக்க நன்றி1
Post a Comment