Monday, January 31, 2011

சிவாஜி vs சரிதா - கீழ் வானம் சிவக்கும்! முருகன் பாட்டு!

இந்தப் பதிவு.....முருகனருள் தோழனுக்கு!
அவனுக்குப் பிடித்தமான பாட்டு, பிடித்தமான நடிகர்-நடிகை! பிடித்தமான பாடகர்! பிடித்தமான இசையமைப்பாளர்! பிடித்தமான படம்! :)கீழ்வானம் சிவக்கும்-ன்னு ஒரு படம் வந்துச்சி! சிவாஜி-சாவித்திரி மாதிரி, சிவாஜி-சரிதா காம்பினேஷன்-ன்னு வச்சிக்குங்களேன்!
ரெண்டு பேரும் மாமனார்-மருமகளா போட்டி போட்டுக்கிட்டு நடிச்சி இருப்பாங்க!

நாங்க எல்லாரும் சென்னைக்கு வந்த போது...புரசைவாக்கம், Roxy தியேட்டரில் (இப்போ இந்த தியேட்டரே இல்ல, அடுக்கு மாடி சரவணா ஸ்டோர்ஸ் ஆகி விட்டது வேறு விஷயம்)...
ஒரே மாசத்தில் நாலைஞ்சு பழைய படங்களை எல்லாம் ஓட்டினாங்க! சிவாஜி ஹிட் படங்கள்! அதுல இதுவும் ஒன்னு! எப்படி ஞாபகம் இருக்கு-ன்னா...

1. சென்னையில், நாங்க எல்லாரும் சேர்ந்து பார்த்த முதல் படம் இது!
2. தியேட்டருக்கு கீழேயே, White Field Bakery! சின்னப் பையன் எனக்கு, அந்த கேக் வாசனையும், பட்டர் பிஸ்கட் வாசனையும்...ஆஆ...
3. இந்தப் படத்தில் வரும் - "முருகா முருகா முருகா" பாட்டு!

இந்தப் பாட்டில், ஒரு வீட்டுத் தோட்டத்தின் நடுவே முருகன் சிலை இருக்கும்!
அங்கே நின்னுக்கிட்டு, சிவாஜியும் சரிதாவும், மாறி மாறிப் பாடுவாங்க!
என்னமோ தெரியலை, அந்த முருகன் சிலை எனக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சி!

"அப்பா, மெட்ராஸ்-ல்ல வாடகை வீடு நல்லாவே இல்லை! ரொம்ப குறுகல்! நாம சொந்தமா வீடு கட்டிக்கிட்டுப் போனா, சின்ன தோட்டமாச்சும் வைக்கணும்!
நடுல, இதே போல ஒரு முருகன் சிலை வைக்கணும்!"-ன்னு சொல்லிய ஞாபகம்...எனக்கே இருக்கு! :)படத்துக்கு வருவோம்!
சிவாஜி, பெரிய மருத்துவர்! அவரு பையன் சரத்பாபு - மருமகள் சரிதா! ரொம்ப பாசமா இருப்பாங்க மாமனாரும் மருமகளும்!
அப்போ....பார்வையற்ற ஜெய்சங்கர், கண் அறுவை சிகிச்சை செஞ்சிக்க, சிவாஜி கிட்ட வருவாரு! தன் தங்கையின் வாழ்வைக் கெடுத்தவனைக் கொலை பண்ணும் வெறியில் இருப்பாரு! அவர் கையில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த சிவாஜிக்கு செம ஷாக்!

சரத்பாபுவும்-அந்தப் பெண்ணும் ஃபோட்டோவில் இருப்பாய்ங்க!

தன் பையன் சரத்பாபுவைப் போட்டுத் தள்ளத் தான் ஜெய்சங்கர் வந்திருக்காரு-ன்னு தெரிஞ்ச பிறகும், சிகிச்சை செய்வாரு சிவாஜி!
ஆனா Doctor vs Father உணர்ச்சிப் போராட்டத்தில் அப்பப்போ தவிப்பாரு! இதனால், சரிதா, சிவாஜி மேல சந்தேகப்பட்டு, வெறுப்பும் கோபமும் தானாவே வளர்த்துக்குவாங்க! ஆனா தன் கணவன் தான் அதில் உள்ளான்-ன்னு தெரியாது!

தன் புருஷன் தான் இதுல Involved-ன்னே தெரியாம, சிவாஜியைத் தாறுமாறாகச் சரிதா பேச...கதை விறுவிறு-ன்னு போகும்!

சிவாஜியைப் பொய்யர், புரட்டர், மருத்துவத் துரோகி-ன்னு எல்லாம் பேசிய அந்தப் பாசமிகு மருமகள்...சான்சே இல்லை!
சிவாஜிக்கு ஈடு குடுத்து நடிக்கவல்ல ஒரே பின்னாளைய கதாநாயகி = சரிதா! முதல் மரியாதை ராதா கூட அப்புறம் தான்!


பாட்டைக் கேட்டுகிட்டே படிங்க!

முருகன் முன்னாடி...
* குற்றம் சாட்டி ஒதுக்கும் ஒரு உள்ளமும்,
* குற்றவாளி "ஆக்கப்பட்டு" அழும் இன்னொரு உள்ளமும்,
மாறி மாறி மோதும் காட்சி!

குரல்: TMS, பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: MSV
படம்: கீழ்வானம் சிவக்கும்

சரிதா:
கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே,
முருகா முருகா முருகா!
என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்?
சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?

சிவாஜி:
கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா

சரிதா:
சுந்தர வேல்முருகா, துண்டுகள் இரண்டாக
சூரனைக் கிழித்தாய் அன்றோ! - ஒரு
தோகையைக் காலடியில், சேவலை கை அணைவில்
காவலில் வைத்தாய் அன்றோ!

சிவாஜி:
மந்திரத் தெய்வங்களின் மாயக் கதைகளுக்கு
வரைமுறை கிடைாது அன்றோ!
அவை தந்திரம் செய்வதுண்டு, சாகசம் கொள்வதுண்டு
சகலமும் நன்றே அன்றோ!

என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்?
சில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?
(கண் கண்ட தெய்வமே)

சரிதா:
காட்சியைக் கொன்றவர் முன், சாட்சியைக் கொன்றுவிட்டு
ஆட்சியும் செய்தாய் ஐயா - உன்தன்
மாட்சிமை என்னவென்று காட்சிக்கும் தோன்றவில்லை
சூழ்ச்சியைச் சொல்வாய் ஐயா!

சிவாஜி:
பிள்ளையைக் கொன்றுவிட்டு, பெரிய விருந்து வைத்தான்
கள்ளமில் பரஞ் சோதியே - விருந்து
எல்லாம் முடிந்த பின்னே, பிள்ளையினை அழைத்தான்
இறைவன் அருள்ஜோதியே!

சரிதா: காரிருள் சூழ்ந்ததும் கதிரும் மறைந்தது - நீதி எல்லாம் துடிக்கும்!
சிவாஜி: மேற்கினில் சூரியன் மறைந்தாலும் - கீழ் வானம் சிவக்கும்!
சரிதா: கந்தன் இருப்பது உண்மை என்றால் இது உண்மைகள் வெளியாகும்!
சிவாஜி:காலம் வரும் வரை காத்திருந்தால் அது நல்லவர் வழியாகும்!!

இருவரும்: கண் கண்ட தெய்வமே!
கை வந்த செல்வமே!
முருகா முருகா முருகா!
முருகா முருகா முருகா!சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?-ன்னு அது கேட்க...
சில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?-ன்னு இது கேட்க...
பாவம், என் முருகன் என்ன தான் பண்ணுவான்? ரெண்டு பேருமே முருகனைத் தான் துணைக்கு கூப்பிடறாங்க! யாரை-ன்னு அவன் பாக்குறது? எப்படிப் பாக்குறது?

* அவன் அர்ச்சனையைப் பார்ப்பதில்லை! = லட்சார்ச்சனை, லட்சம் பேர் செய்யறாங்க....ஒரு டிக்கெட் ரூ200.00 தான்! பிரசாத டின் கிடைக்காட்டி குடுமிப்பிடிச் சண்டை தான்! :)
* அவன் ஆட்களைப் பார்ப்பதில்லை! அவனோட பேரை, நிறைய வாட்டி ஒருவர் சொல்வதாலேயே அவர்களைப் பார்ப்பதும் இல்லை! = சரவணபவன் அண்ணாச்சி சொல்லாத முருகன் பேரா? :)

பின்பு எதைப் பார்க்கிறான் முருகன்?

சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது உன் வேலையா? வேலய்யா இது உன் வேலையா? என்று ஒரு உள்ளம் குற்றம் சாட்டும் போது...
தன்னையும், தன்-மானத்தையும், தன் மகிழ்வையும்...அன்புக்காகவே இழக்கத் துணிந்த அந்த அன்பு...அன்பிற்கும் உண்டோ டைக்கும் தாழ்!
= அந்த உருக அன்பு, முருக அன்பு ஒன்றினையே, முருகன் பார்க்கிறான்!
போதும் நீ பட்டது; வா என்னிடம் என்று வாரி அணைத்துக் கொள்கிறான்!

பெரு காதல் உற்ற தமியேனை
நித்தல் பிரியாதே! பட்சம் மறவாதே!
கை வந்த செல்வமே! என் - முருகா முருகா முருகா!

Monday, January 24, 2011

கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்!

முருகனருள்-200 நிறைந்த நல்வேளையில், நல்லவர் பாடும் நல்ல பாடல் ஒன்றை இன்னிக்கி கேட்போமா?
இவருடைய பாடலில் நிறைவு உண்டு! ஆனால் இவருடைய வாழ்வில்?
- முருகா, என் கண்ணே...ஏன் இவளை இப்படிச் செய்து விட்டாய்?
இவள்??? பலரும் அறிந்த பெயர் கே.பி.சுந்தராம்பாள் என்னும் KBS!
இன்று சினிமாவில் ஒரு சில நகைச்சுவை நடிகர்கள், அம்மையாரின் குரலை, "ஞானப் பழத்தைப் பிழிந்து" என்றெல்லாம் கேலி பேசினாலும், ஆதவனை அற்பத்தனம் கேலி பேசி மாளுமா?
சுந்தராம்பாளின் குரலுக்கு விலை கொடுத்து, இவர்கள் கட்டுப்படி ஆவார்களா?
1935-இல், இளம் வயதில், இவர் பெற்ற ஊதியம் ஒரு லட்ச ரூபாய்!
அப்போ, தங்கம் - ஒரு சவரன் 13 ரூபாய்! = கிட்டத்தட்ட 7700 சவரன்! :)

KBS வெறுமனே பக்திப் பாடகர் மட்டும் தானா? விடுதலைப் போராட்ட வீரர் அல்லவா!
தமிழிசை இயக்கத்துக்கு குரல் கொடுக்க, பலரும் தயங்கிய நேரத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமியும், கே.பி. சுந்தராம்பாளும் அல்லவா முதன் முதலில் ஓடி வந்தார்கள்!

சுந்தராம்பாள் வாழ்வை இன்று லேசாக எட்டிப் பார்ப்போம் வாருங்கள், முருகனருள்-200 வழியாக!
அப்படியே கலைஞர் கருணாநிதியின் பேச்சுக்கு உடன்பட மறுத்த கதையும், பார்க்கலாம்......கடைசியாக :)
Kodumudi. Balambal-இன் மகள் Sundarambal (KBS)
MS Subbulakshmi போலவே, இவருக்கும் அம்மாவின் இனிஷியல் மட்டுமே!

சிறு வயதிலேயே நாடக மேடைக்கு வந்தாகி விட்டது! நாடகம் என்றாலும், அது இசையுடன் கலந்தது தானே! ஆங்கிலத்தில் Musical-ன்னா மட்டும் நமக்கு Classics-ன்னு மரியாதை வரும்! :)
ஆண் வேடம் (ராஜ பார்ட்), பெண் வேடம் (ஸ்தீரி பார்ட்) என்று கலவையாக நடித்துப் புகழ் பெறத் துவங்கி விட்டார் சுந்தராம்பாள்! அரிச்சந்திரா, பவளக்கொடி, ஸ்ரீ வள்ளி என்று நாடகப் புகழ்...விதியோ இலங்கைக்கு வா வா என்றது!

எஸ்.ஜி. கிட்டப்பா - பெரும் புகழ் பெற்ற இன்னொரு மேடை நாடகக் கலைஞர்; இசை அறிஞர்! = Sencottah Gangadhara Iyer Kittappa = SG கிட்டப்பா!
பெற்றோர் வைத்த பெயர் இராமகிருஷ்ண ஐயர்! ஆனால் செல்லமாக கிட்டன், கிட்டன் என்றே அழைக்க, அதுவே கிட்டப்பா ஆனது! கேரள-தமிழக எல்லை அல்லவா!

கிட்டப்பாவின் நாடகத்துக்கு, முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்களே முன் வரிசையில் வந்து கேட்பார்கள்! நாடகம் பார்க்க அல்ல! அவர் குரலைக் கேட்க! அப்படி ஒரு குரல் வளம்! இவரையும் இலங்கைக்கு நாடகம் போட அழைத்தனர்!

"இலங்கை முழுக்க இப்போ சுந்தராம்பாளின் கொடி பறக்கிறது! அங்கே போய் சிக்கிக் கொள்ள வேண்டாம்" என்று ஒரு சிலர் கிட்டப்பாவை எச்சரித்தனர்!
"கிட்டப்பாவிற்கு எதிரே உன்னால் நிற்க முடியுமா?" என்று வேறு சிலரோ, சுந்தராம்பாளை பயமுறுத்தினர்! இப்படி சுந்தராம்பாள்-கிட்டப்பா சந்திப்பே மோதலில் தான்! :)

ஒரே மேடையில் இருவருமே கலக்கினர்! வள்ளித் திருமணம், இலங்கை முழுக்க ஒரே பேச்சு!
மோதல் நட்பாய் மலர, அதே நாடகத்தைத் தமிழ்நாடு வந்தும் பலமுறை அரங்கேற்றம்! அவரவர் பாடலுக்கு, அவரவர் விசிறிகள்! இசைத்தட்டு விற்பனை!

ஆனால்...ஆனால்...ஆனால்,
இதயத்தின் எங்கோ ஒரு மூலையில்...
காதல்...காதல்....காதல்!


கலையுலகில் மட்டுமின்றி....வாழ்க்கையிலும் இணைந்து வாழ முடியுமா?
ஆனால் கிட்டப்பாவோ ஏற்கனவே திருமணம் ஆனவர்!
திருநெல்வேலி விசுவநாத ஐயரின் மகள் கிட்டம்மாளை முன்பே மணந்து இருந்தார்! ஆனால் இலங்கையில் விளையாடியது விதி!

முறையெல்லாம் பார்த்துக் கொண்டு இந்தக் காதல் மலரவில்லையே!
மோதல் நட்பாய் மாறி, அதுவே காதல் ஆகிப் போனது யார் குற்றமோ?
உள்ளத்தில் ஊறி விட்ட காதலை, இப்போ எதைக் கொண்டு அழிப்பது?
அதன் கதி, அதோ கதி! முருகா...அதோ கதி!
= கதியாய் விதியாய் வருவாய் குகனே!

கிட்டப்பா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது சுந்தராம்பாளுக்குத் தெரியும்!
என்ன செய்ய? இன்றைய சினிமா போல் பணம் கொடுத்து, சொத்து கொடுத்து, குடும்பத்தைத் துரத்தி விடலாமா? :) சுந்தராம்பாளுக்கு இல்லாத பணமா? புகழா? அந்தஸ்தா?

சுந்தராம்பாள் ஒரு பேதை! அதிகம் உரிமை எடுத்துக் கொள்ளத் தெரியவில்லை!
இயல்பிலேயே முருக பக்தி! விட்டுக் கொடுக்கும் போக்கு! ஆனாலும் எதற்கும் தளராத மனக்கோட்டை மட்டும் மலைக்கோட்டையாக இருக்கு!

காதலே வென்றது! "உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்" என்று கிட்டப்பா வாக்கு அளித்தார்!

பின்னாளில், சுந்தராம்பாள் இது பற்றித் தானே வாய் திறந்து சொன்னது: "அம்மி மிதித்தோ அருந்ததி பார்த்தோ எங்கள் திருமணம் நடக்கவில்லை! அது பதிவுத் திருமணமும் அல்ல! அது ஈசனருளால் நடந்த திருமணம்! ஜன்மாந்திரத் தொடர்பு என்பார்களே அவ்வாறு நடந்த திருமணம்!"


முருகனாக சுந்தராம்பாள், (ராஜபார்ட்). நாடக மேடையில்!

பிறகு, பல நாடகங்கள், பல நாடுகள் என்று இந்த வெற்றிக் கூட்டணி சென்று வந்தது! நாடக மேடைக்கு வெளியே தான் கணவனும் மனைவியும்!
மேடை ஏறிவிட்டால் கடுமையாக மோதிக் கொள்வார்கள்! தொழில் ரீதியான கேலியும் கிண்டலும் தூள் பறக்கும்! :))

விதி தன் பிடியை இன்னும் இறுக்கியதோ என்னவோ, வந்தது வினை, கண்ணன் வடிவில்! = பாலாழி பாய்ந்த பாதகனோ? :(
கிருஷ்ண லீலா என்னும் நாடகம்! என்னமோ தெரியலை, அதைப் பார்க்கப் போக வேண்டாம் என கிட்டப்பா கூறினார்!

ஆனால் முருகனைப் போலவே கண்ணன் மேலும் அன்பு கொண்டிருந்த சுந்தராம்பாள், அந்த நாடகத்தைக் காணச் செல்ல....
அல்ப விஷயத்துக்காக கோபித்துக் கொண்டு, விட்டுவிட்டு பாதியிலேயே சென்று விட்டார் கிட்டப்பா! பத்திரிகைகள் கண்ணும் காதும் மூக்கும் ஒட்டி ஒட்டி எழுதின!

கருத்து வேற்றுமை! இடைவெளி அதிகமாயிற்று!
= "உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்" என்ற சத்தியம்??? :(


பிறகு, சுந்தராம்பாள் அவருக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதினார்! ஒவ்வொன்றிலும்......காதலும், கோபமும், தாபமும், இயலாமையும், மாறா அன்பும், இன்னும் என்னென்னமோ...கடிதத்தின் முடிப்பு மட்டும்...தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள், சுந்தராம்பாள்!

கிட்டப்பா, தேசிய இயக்கத்தில் சேர்ந்து கதர் உடுத்த, அதையே சுந்தராம்பாளும் பற்றிக் கொண்டார்! பல தேசபக்தி நாடகங்களில் நடித்தார் சுந்தராம்பாள்!
வெளியில் அதிகம் காட்டிக் கொள்ள வில்லையென்றாலும், சதா சர்வ காலமும், மனத்தால் அவரையே தாங்கி வாழ்ந்தாள் இந்த முருக பக்தை!

கிட்டப்பா வாழ்விலும் விதி விளையாடியது!
27 வயதிலேயே கடுமையான வயிற்றுவலி! குடல் வெந்து ஈரல் சுருங்கி.....1933-இல் அகால மரணம் எய்தினார்! :(
சேதி கேட்டுத் துடித்த அந்த முருக பக்தை, என்னென்ன எண்ணி இருப்பாளோ? எப்டியெல்லாம் கசிந்து இருப்பாளோ? முருகா - இது உனக்குத் தகுமா?

அன்று பூண்டாள் துறவுக் கோலம்!
25 வயது தான்! காதல்-கணவருடன் அதிகம் வாழவில்லை தான்! ஆனாலும் உடம்பில் வெள்ளாடை! நெற்றியில் வெண்ணீறு! கழுத்தில் துளசி மாலை!! - கண்ணா, பாவீ, தகுமா? :(

பால், இனிப்பு என்று எந்தப் போகப் பொருளும் உண்பதில்லை!
மேடையில் ஆண்களுடன் ஜோடியாய் நடிப்பதில்லை! மேடையிலும் தனிமை! வாழ்விலும் தனிமை!
சுந்தரம் சுந்தரம் என்றே அழைப்பார் போலும் அம்மையாரை! அந்தச் சுந்தர நினைவுகளே வாழ்வாகிப் போனது சுந்தராம்பாளுக்கு!


இப்படி ஒடிந்து கிடந்தவரை இழுக்க, நந்தனார் சரித்திரம் என்னும் சினிமா வந்தது!
அம்மையாரை நந்தனாராக நடிக்க வைக்க, தயாரிப்பாளர் ஆசான்தாஸ் தவமாய்த் தவம் இருந்தார்! காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி வேறு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்.............ஊகூம்!
நந்தனாராக கே.பி.சுந்தராம்பாள்! அந்தணராக மகராஜபுரம்

அவரிடம் சாக்கு போக்கு சொல்லி, தன் ஊதியம் ரொம்ப அதிகம்...ரூபாய் ஒரு லட்சம் என்று பேச்சுக்குச் சொல்ல,
ஆகா...அதற்கும் கட்டுப்பட்டார் தயாரிப்பாளர்! அம்மையாரின் மனமே இளகிப் போனது!
யாருக்கும் ஜோடியாய் நடிக்க மாட்டேன் என்ற பல நிபந்தனைகளோடு, நந்தனாராக ஆண் வேடம் கட்டி நடிக்க ஒப்புக் கொண்டார்!

பின்பு, வரிசையாகப் படங்கள்!
மணிமேகலை, ஒளவையார், பூம்புகார், திருவிளையாடல், கந்தன் கருணை, துணைவன், காரைக்கால் அம்மையார், கடைசியாக திருமலைத் தெய்வம்!
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?-ன்னு மனக் கவலையோடவே பாடிய அந்தப் பேதை உள்ளம்.....புற்று நோயால் 1980-இல் அணைந்து போனது!

முருக நீழலில்.....சுந்தராம்பாள்.....நீங்காது நிறைந்தேலோர் எம்பாவாய்!தலைப்பு பற்றி ஒன்னுமே சொல்லலையே-ன்னு நீங்கள் கேட்பது புரிகிறது! :)
கலைஞர் கருணாநிதி திரைக்கதை-வசனம் எழுதிய படம் பூம்புகார்!
கண்ணகியின் கதை! வாழ்க்கை என்னும் ஓடம்-ன்னு சுந்தராம்பாள் பாடுவதைப் பார்த்து இருப்பீங்களே! யாரிடமாவது சிடி இருந்தால், பாடலைத் தயவு செய்து Youtube-இல் Upload செய்யுங்களேன்!

இந்தப் படத்தில், கவுந்தி அடிகளாக நடிக்க, கே.பி சுந்தராம்பாள் தான் சரியானவர் என்பது கலைஞரின் எண்ணம்! கண்ணகி-கோவலனுக்கு வழித்துணையாக வரும் சமணப் பெண் துறவி = கவுந்தி அடிகள்!

இளங்கோவடிகளின் கதையையே, தனக்கு ஏற்றவாறு, அங்கொன்றும் இங்கொன்றுமாய் மாற்றிக் கொண்ட கலைஞர், சுந்தராம்பாளை நடிக்க வைக்க மட்டும் பெரும்பாடு பட்டார்! :)

என்ன தான் அப்போதைய முன்னணி வசனகர்த்தா, கலைஞர் வசனத்தில் நடிப்பதே பெரிய பெருமை என்று பேசப்பட்டாலும், அதெல்லாம் யாருக்கு? யாசிப்பவன் இருந்தால் தானே, கொடுப்பவனுக்குப் பெருமை! இங்கே சுந்தராம்பாள் தான் யாசிக்கும் நிலைமையிலேயே இல்லையே!
பழுத்த முருக பக்தை! "சமணத் துறவியாக எப்படி நடிப்பேன்? மேலும் தான் பாடுவதோ விடுதலை இயக்க மேடை...எப்படி பகுத்தறிவுப் பாசறையில்...அதுவும் கருணாநிதியின் வசனத்தில்?"

இப்படியெல்லாம் சுந்தராம்பாள் கருத,
கலைஞரோ, கட்சிக்காக அல்ல, பகுத்தறிவுக்காக அல்ல ...தமிழுக்காக என்று சொல்ல....அம்மையாரும் தமிழுக்காகவே ஒப்புக் கொண்டார்! ஆனால், பல நிபந்தனைகளோடு!
சுந்தராம்பாளைப் பிற்பாடு சரி செய்து கொள்ளலாம் என்பது கலைஞரின் கணக்கு! ஆனால் வந்தது வேறு வினை - கருணாநிதிக்கு?

காதல்-கணவர் மறைந்த பின், நெற்றியில் பூசிக் கொள்ளும் திருநீற்றை, மேக்-அப்புக்காகக் கூட அழிக்க மாட்டேன் என்று அம்மையார் உறுதியாக நிற்க...
கருணாநிதியோ, "அம்மா, கவுந்தியடிகள் என்பவர் சமணர், இது பாத்திரத்துக்கு ஒட்டாதே" என்று கெஞ்ச......

கற்பனை செய்து பாருங்கள்....கலைஞர் மு கருணாநிதி அவர்கள் கெஞ்சுவதை...வெற்றிகரமான வசனகர்த்தா, ஒரு சீனில் வந்து போகும் பெண்மணியிடம்...இத்தனை விண்ணப்பம்! :)

பின்னர், செட்டில் வேறு ஒருவர் கொடுத்த யோசனையின் பேரில்...
பட்டையாக விபூதி போட்டுக் கொள்ளாமல்.......
திருநீற்றையே மெல்லீசா, ஒத்தையாக....நாமம் போல் போட்டுக் கொண்டு....
அப்படியே நடித்தும் பாடியும் கொடுத்தார் சுந்தராம்பாள்! இன்றும் சினிமாவில் கவுந்தி அடிகளைப் பார்த்தால், ஒற்றை நாமம் தரித்தது போலவே இருக்கும்!

இதோடு முடியவில்லை கலைஞரின் கணக்குகள்....
அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது,
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது?
- என்று சிலப்பதிகாரத்தில் கூடப் "பகுத்தறிவு"ப் பாணியில் கேலியாக எழுத...
இறைவனைக் கேலி செய்யும் வரியைப் பாட மாட்டேன் என்று மறுத்து விட்டார் சுந்தராம்பாள்!

இறைவனை, "இல்லை" என்று மறுதலிக்கவே மாட்டேன் என்று அம்மையார் சொல்லிவிட...
வேறு வழியில்லாமல் கலைஞரும் - நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது! என்று பாட்டையே மாற்றிக் கொடுத்தார்:))
இது தான், கலைஞரையே மடக்கிய கேபி சுந்தராம்பாள் நினைவலைகள்!

அவர் தாம் மாசில்லாக் காதலோடு, முருகன் திருவடியில், சுந்தராம்பாள் என்றும் அமைதி கொள்ளட்டும்! தமிழ் இசையோடு நிலைத்து நிற்கட்டும்!!


இதோ, சுந்தராம்பாள் பாடும் மிக அழகான பாடல் ஒன்னு! கேட்டுக் கொண்டே பாட்டை வாசியுங்கள்!
முருகனருள் = பாடல்கள் வலைப்பூ! கட்டுரை வலைப்பூ அல்ல! :)

படம்: கந்தன் கருணை
வரிகள்: ஒளவையார் (இது இலக்கிய நூல்களில் இல்லை! ஒளவை தனிப் பாடல் திரட்டு)
குரல்: கே.பி.சுந்தராம்பாள்
இசை: கே.வி.மகாதேவன்

ஒளவையே, உலகில் அரியது என்ன?

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது!
மானிடராயினும்....கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்...ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது!
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்...தானமும் தவமும் தான் செய்தல் அறிது!
தானமும் தவமும் தான் செய்தலாயினும்...வானவர் நாடு வழி திறந்திடுமே!

கொடியது என்ன?

கொடியது கேட்கின் வரிவடி வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது; இளமையில் வறுமை
அதனினும் கொடிது; ஆற்றொணாக் கொடு நோய்
அதனினும் கொடிது; அன்பு இல்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது; அவர் கையால் இன்புற உண்பது தானே!

பெரியது என்ன?

பெரியது கேட்கின் நெறிதமிழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்

அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறையவர் பாகத்து ஒடுக்கம்
இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே.....!

ஒளவையே, இனியது என்ன? = எங்கள் இனியது கேட்கின்!

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளாரைக் கனவினும் நனவினும் காண்பது தானே.

அரியது கொடியது பெரியது இனியது - அனைத்துக்கும் முறையோடு விடை பகன்ற ஒளவையே....புதியது என்ன?
(இனி வரும் வரிகள்: கண்ணதாசன்)

என்றும் புதியது
பாடல் - என்றும் புதியது
பொருள் நிறைந்த - பாடல் என்றும் புதியது
முருகா உனைப் பாடும் - பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது...

முருகன் என்ற - பெயரில் வந்த - அழகே என்றும் புதியது
முறுவல் காட்டும் - குமரன் கொண்ட - இளமை என்றும் புதியது

உனைப்பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது...அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது

முதலில் முடிவு அது
முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது!


நாளும்.......மாசில்லாக் காதலையும், முருகத் தமிழையும், தமிழ் இசையையும் போற்றிய சுந்தராம்பாள் திருவடிகளே சரணம்!

Thursday, January 20, 2011

201. தைப்பூசம்: பழநி மலை மேல் நின்ற பெருமாளே!

இன்று தைப்பூசம் அதுவுமாய் (Jan 20, 2011)....முருகன் வீட்டு விசேடம்!
முருகனருள் வலைப்பூ என்று துவங்கி,
அவன் பாடல்களுக்காகவே அமைந்து,
இன்று முருகன் பாடல்கள் 200-ஐத் தொட்டு நிற்கிறது!


200ஆம் இடுகைக்கு வந்துள்ள அடியார்களாகிய உங்கள் அத்தனை பேரையும் வரவேற்று, வணங்கி மகிழ்கிறேன்! உங்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு!

முருகனருள் - பாடல்கள் வலைப்பூ தோன்றிய நாள் முதலாய், இன்று வரை பல்கிப் பெருகி, ஆதரவளித்த வாசகர்கள், இனி வரப் போகும் வாசகர்கள்
- அனைவருக்கும் இவ்வமயத்தில், முருகனருள் குழுவினராகிய நாங்கள் நன்றி சொல்லிக் கொள்கிறோம்! பல்லாண்டு முருகனருளில் திளைப்போம்!தைப்பூசம் = தை மாதம், பூச நட்சத்திரத்தில் வரும் திருநாள்!
தைப்பூசம் தான், முருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள்!
வேல் வாங்கிய அதே நாளில், நாம் 200ஆம் பதிவும் வாங்குவோம், வாருங்கள்! :)

"முருகா முருகா" என்ற உங்களின் கசிந்துருகும் கூக்குரல் அல்லவோ....,
சங்கத் தமிழ் முருகனை, இன்று சென்னைத் தமிழ் வரை...
தலைமுறை தலைமுறையாய் நிறுத்தி, தமிழ்க் கடவுளாய், விளக்கி, விளங்கி வந்துள்ளது! அடியார்களின் பொருட்டே அவனும் நின்று வந்துள்ளான்! வாழ்க சீர் அடியார் எல்லாம்!

இந்த இரு நூறு, வெறுமனே இருக்கட்டும் நூறு என்றில்லாமல்,
* முன்னிற்கும் முன்னூறாய்
* நாவூறும் நா-னூறாய்
* ஐயனுக்கோர் ஐ-நூறாய்
* துயர் அறுக்கும் அறு-நூறாய்
* காதல் எழும் எழு-நூறாய்
* என்னுள் ஊறும் எண்-ணூறாய்
* முத்தமிழின் முத்-தொள்ளாயிரமும், இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் என்னுமாறே காதல் முருகனை வாழ்த்தி அருளுங்கள்!

எங்கள் "முருகனருள்" முருகனுக்கு அரோகரா!


சுப்பையா சார் ஒளிவருடிக் கொடுத்து, SK ஐயா தட்டச்சித் தந்த 200ஆம் பதிவு இங்கே!

இந்த 200ஆம் சிறப்புப் பதிவில், சிறப்பான ஒரு திருப்புகழ்ப் பாட்டை, சி்றப்பான ஒருவரின் குரலில் கேட்போமா?
* தைப்பூசம் என்றாலே அது பழனி தானே! இதுவும் பழனித் திருப்புகழ் தான்!
* தைப்பூசம் என்றாலே காவடிகள் அல்லவா! இதுவும் காவடி மெட்டு தான்!
பாடுபவர் = பித்துக்குளி முருகதாஸ்!
காவடிச் சந்தம் வரவேண்டுமே என்பதற்காகக் கொஞ்சம் கொஞ்சம் திருப்புகழ் வரிகளை மாற்றியும் போடுகிறார்! :)

திருப்புகழ் வரிகளை இப்படியெல்லாம் மாற்றலாமா என்று ஒரு சிலர் கேட்கக் கூடும்! ஆனால் பித்துக்குளியார் இவ்வாறு செய்வதற்கு ஒரு காரணம் உண்டு!

காவடியைப் பற்றிய கதைகளும், காவடிச் சிந்தின் தோற்றமும் முன்பே பார்த்துள்ளோம்!

என்ன காரணமோ தெரியவில்லை, முருக இயக்கத்தில் இத்தனை செல்வாக்கு பெற்ற காவடி, ஏனோ முருக இலக்கியத்தில் இடம் பெறவில்லை!

நக்கீரர் சங்க காலப் புலவர்! அப்போது காவடி இல்லாமல் இருந்திருக்கலாம்! ஆனால் மிகவும் பின்னால் வந்த அருணகிரியார் (15th CE) கூடக் காவடியை எங்கும் குறித்தார் இல்லை! பல சந்த ஓசைகளில் பாடிய சந்த முனி! ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, ஒரு திருப்புகழைக் கூடக் காவடிச் சிந்திலே அவர் அமைத்தாரில்லை!

திருமங்கை ஆழ்வார் (8th CE) மட்டும், "வழிநடைச் சிந்து" என்ற பொது மக்கள் இசையை இலக்கியத்தில் கொண்டு வந்தார்! ஆனால் அதில் "காவடி" என்று தனியாகப் பெயரிட்டுக் குறிக்கவில்லை! சந்த ஓசையை மட்டும் "வழிநடைச் சிந்து" என்ற பேரில் பயன்படுத்தினார்!

மிகவும் பின்னாளில், 19th CE-இல் தான், அண்ணாமலை ரெட்டியார், "காவடிச் சிந்து"க்கென்றே பாடல்கள் பல எழுதி, காவடியை இலக்கியத்துக்குள் முழுவதுமாய்க் கொண்டு வந்து சேர்த்தார்! தமிழ்க் காவடிச் சிந்து, தெலுங்கு ரெட்டியாருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது!

அதனால் தான் பித்துக்குளியாரும், திருப்புகழ் வரிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வரிசை மாற்றி....
காவடிச் சிந்திலே தர வேண்டும் என்பதற்காக, பழனித் திருப்புகழை இப்படி மாற்றித் தருகின்றார்!

பித்துக்குளி பாடும் மெட்டு, அப்படியே என்னவனின் தங்க ரதம் அசைந்து வராப் போலவே, அசைந்து அசைந்து வருது! நீங்களே கேட்டு மகிழுங்கள்!இசைக்காக முன்னே சேர்க்கும் வேறொரு பகுதி....

கருவில் உருவே தங்கு, சுக்கில நிதான வளி
பொரும அதிலே கொண்ட, முக்குண விபாக நிலை
கருத அறியா வஞ்சகக் கபடம் மூடி - உடல் வினை தானே

கலகம் இடவே பொங்கு, குப்பை மன வாழ்வு
நிஜம் என உழலும், மாயம் செனித்த குகையே
உறுதி கருதும், இந்த அசுர மா மட்டை...
முருகா....சண்முகா....பழனியாண்டவா....

அரகர சிவாய என்று, தினமும் நினையாமல் நின்று
அனுதினமும் நாணம் இன்றி அழிவேனோ?
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே! பழநிமலை மீதில் நின்ற பெருமாளே!!


பழனித் திருப்புகழ்:

கருவின் உருவாகி வந்து
வயது அளவிலே வளர்ந்து
கலைகள் பலவே தெரிந்தும் ...... அதனாலே

கரியகுழல் மாதர் தங்கள்
அடிசுவடு மார் புதைந்து
கவலை பெரிதாகி நொந்து ...... மிக வாடி

கருவில் பிறந்து, பின்பு வெளியே வந்து, பலவும் கற்று வளர்கிறோம்!
ஆனால் அந்தக் கல்வியும் செல்வமும் எதற்குப் பயன்படுத்துகிறோம்? = வெறும் போகம் அனுபவிக்க மட்டும் தானா?
கருங்கூந்தல் மங்கையர் மார்பிலே மயங்கி, பலதும் "மகிழ்ச்சி" என்று செய்து விட்டு, ஆனால் "கவலை" என்று மிஞ்சி வாடுகிறேனே! ஏனோ?

அரகர சிவாய என்று
தினமும் நினையாமல் நின்று
அறுசமய நீதி ஒன்றும் ...... அறியாமல்

அசனம் இடுவார்கள் தங்கள்
மனைகள் தலைவாசல் நின்று
அனுதினமும் நாணம் இன்றி ...... அழிவேனோ?

அரகரா! சிவாய! என்று நினைக்க மாட்டேன்! அறு சமய நீதி அறிய மாட்டேன்!
சோறுக்கு ஒரு வீடும், வேறுக்கு வேறு வேறு வீடும் கண்ட நான்,
அனுதினமும் நாணம் இன்றி அழிவேனோ? அரகரா என்று சொல்லாமல் அழிவேனோ?

குறிப்பு: அரோகரா என்ற மக்கள் வழக்கு மொழியை, இங்கு அருணகிரி எடுத்தாளுகிறார் பாருங்கள்! அரகரா என்று பழனியில் மக்கள் ஒலிக்கும் ஒலி, இந்தத் திருப்புகழிலும் ஒலிக்கிறது!உரகபடம் மேல் வளர்ந்த
பெரிய பெருமாள் அரங்கர்
உலகளவு மால் மகிழ்ந்த ...... மருகோனே!

பெரிய பாம்பின் மேல் கண் வளரும் பெருமாள்! = அரங்கன்!
அவன் உலகளந்த உத்தமன்! அவன் ஆசை மருகனே, முருகனே!

குறிப்பு: அருணகிரி பல இடங்களில் முருகனை, "பெருமாளே" என்று விளித்துப் பாடுவார்!

பெரும்+ஆள் = பெருமை மிக்கவன்!
இதுவே, முருகனைப் "பெருமாள்" என்று விளித்துப் பாடக் காரணம் என்று "மேம்போக்காகச்" சொல்வார்கள் சிலர்! ஆனால் அப்படி இல்லை என்பதை அருணகிரி இந்தப் பாட்டில் நிரூபித்துக் காட்டுகிறார் பாருங்கள்! :)

உரகபடம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் = பாம்புப் படுக்கையில் கண் வளரும், காவிரிக் கரை அரங்கன்!
முருகனைப் பெருமாள் என்னும் அருணகிரி, பெருமாளையும் "பெருமாள்" என்கிறாரே! எப்படி? :)

திருவரங்கத்தில் உள்ள முலவரை = "பெரிய பெருமாள்" என்று அழைப்பதே வழக்கம்!
ஊருலா உற்சவரை "நம்பெருமாள்" என்று அழைப்பது வழக்கம்!
அனைத்து வைணவ இலக்கியத்திலும் இப்படியே புழங்கும்!
இதை அருணகிரியும் அறிந்து வைத்துள்ளார்! அதை அப்படியே "பெரிய பெருமாள் அரங்கன்" என்றே ஆளுகிறார் பாருங்கள்!

பெரும்+ஆள் = பெருமாள்!
"திருமால்" என்று சங்க காலம் தொட்டு வழங்கி வந்த பெயர், காலப் போக்கில் "பெருமாள்" என்றாகி விட்டது!
சேர அரசர்கள் ஒரு சிலரையும் (குலசேகரப் பெருமாள், சேரமான் பெருமாள்), சமண முனிவர்கள் ஒரு சிலரையும் கூட இந்தப் பெயர் குறிக்கும்!

ஆனால், பொது மக்கள் ஏகோபித்தமாக வழங்குவது தானே என்றைக்கும் நிலைக்கும்?
பொது மக்கள் வழக்கில், தொல்காப்பியர் காலத்து திருமால், "பெருமாள்" என்றாகி விட்டார்!

இந்த மாற்றம், அருணகிரி காலத்துக்கும் (15th CE) முன்னரே நடந்து விட்டது! அப்படி இருக்க....
தன் முருகனைப் பாட, இன்னொரு தெய்வத்தைக் குறிக்கும் "பெருமாள்" என்ற சொல்லை ஏன் அருணகிரி பயன்படுத்தணும்?

* "ரஹீம்" என்றால் கருணை-ன்னு பொருள்! கருணையே உருவான கந்தனை, "கந்த ரஹீம்"-ன்னு வரிக்கு வரி பாடுவோமா? :)
* "பிள்ளையார்" என்றால் இளையவர்-ன்னு பொருள்! இளமையே உருவான முருகனை, "பிள்ளையாரே"-ன்னு பாட்டுக்குப் பாட்டு கூப்பிடுவோமா? :)

ஏங்க, அருணகிரி மட்டும் இப்படிப் பண்றாரு? :)
ஏன்னா அருணகிரியின் "அடி மனசு" அப்படி! அதில், என்னமோ தெரியலை, திருமாலுக்கும்/வள்ளிக்கும் நிறையவே இடமுண்டு!
பின்னொரு நாள் சொல்கிறேன்! இப்போ, பாட்டை மட்டும் சுவைப்போம்! ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்!

* அருணகிரியார், அறிந்தே தான், என் காதல் முருகனை, "பெருமாளே" என்று விளிக்கிறார்!
* பெருமாள் என்ற சொல், அருணகிரியின் காலத்தில், திருமாலை மட்டுமே குறிக்கத் துவங்கி விட்டது!
* அதை அருணகிரியே, இந்தப் பாட்டில் பெரிய "பெருமாள் அரங்கன்" என்று சான்று காட்டுகிறார்!
* இருந்தாலும், முருகனையும், "பெருமாளே" என்று வரிக்கு வரி சொல்வது...அருணகிரியின் ஆழ்ந்த உள்ளக் கிடக்கை!உபயகுல தீப துங்க
விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி ஊரில் அன்று ...... வருவோனே!

உபய குலம் = இரண்டு குலத்திலும், அதாச்சும் தாய் வழியிலும், தந்தை வழியிலும் ஒரு சேரப் பெருமை மிக்க முருகா! = உபய குல தீப துங்கா!

தாய் மூலம் இல்லாது, தந்தையால் மட்டுமே "தோன்றியவர்" முருகன் என்பார்கள் ஒரு சிலர்! "கருவில் பிறப்பு" என்பது அவர்களைப் பொறுத்தவரை ஏனோ ஒரு தாழ்ச்சி! :(
"பிறவான் இறவான்" என்பதில் பெருமை காண்பவர்கள் இவர்கள்! அதற்கு கச்சியப்பரின் "உதித்தனன் உலகம் உய்ய" என்பதைச் சொல்லிச் சொல்லிச் சிலாகிப்பார்கள்! மற்றவரைப் போல் பிறக்கவில்லையாம், "உதித்தானாம்"!
அடியார்களின் பொருட்டு, கீழே இறங்கிப் பிறந்தால் தான் என்ன-என்பதை நினைத்துப் பார்க்கலாம் அல்லவா? ஆனால், அது கருணையின் பாற்பட்டது ஆச்சே! கருணை முக்கியமா? பெருமை முக்கியமா??

கருவிலே பிறக்கவில்லை! தாய் மூலம் இல்லை - என்று முருகனுக்கு ஏதோ ஏற்றம் கொடுப்பதாக நினைத்துக் கொள்வார்கள்! ஆனால் அருணகிரி அதை மறுக்கிறார்!
தந்தையின் ஒளியிலே தோன்றியவன், தாயின் அணைப்பில் தான் உருவமே காண்கிறான்! அவன் தாய்-தந்தை என்று இரண்டு மூலமும் கொண்டவன்! = உபய குல தீப துங்கன்!

விருது கவி ராஜ சிங்கன் = தேவாரம் என்னும் தமிழ்க் கவியிற் சிறந்த ஞான சம்பந்தப் பெருமான், முருகனின் அம்சம் என்றே சொல்வாரும் உண்டு!
அதான் அருணகிரியும், புகலியூர் என்னும் சீர்காழியில் அன்று வருவோனே, என்று பாடுகிறார்!பழனியாண்டவர் (மூலவர் ராஜ-அலங்கார ஓவியம்),
சின்னக்குமாரர் (உற்சவ புகைப்படம்)


பரவை மனை மீதில் அன்று

ஒருபொழுது தூது சென்ற
பரமன் அருளால் வளர்ந்த ...... குமரேசா!

தம்பிரான் தோழரான சுந்தரர், தான் காதலுக்கும் காமத்துக்கும் கூட, தோழனையே நம்பினார்! அவனையே தூது நடக்க வைத்தார்!

சங்கிலி நாச்சியை இரண்டாம் காதலியாக மணந்த அவர், முதல் மனைவியான பரவை நாச்சியாரின் கோபத்தைத் தணிக்க, பரமனையே தூது செல்வீரா என்று வேண்டினார்! அதைத் தான் இங்குப் பாடுகிறார் அருணகிரி!

எல்லாம் சரி! ஆனால் இறைவன், பரவை வீட்டுக்கு இரண்டு முறை அல்லவா நடந்தான்?
அவளும், ஒரு முறை கதவைச் சார்த்தி, அடுத்த முறை தானே திறந்தாள்?
அருணகிரியோ, "பரவை மனை மீதில் அன்று *ஒருபொழுது* தூது சென்ற" என்கிறாரே! = ஒரு பொழுதா? இரு பொழுதா?

பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்! 200ஆம் பதிவில் புதிர் போடும் அருணகிரியார் வாழ்க! வாழ்க! :)


பகை அசுரர் சேனை கொன்று
அமரர் சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே!!

பகை அசுரர்களின் சேனையை அழித்து, அமரர்களை சிறை மீட்ட புவன சுந்தரன் எங்கள் முருகன்! அவன் பழனி மலை மீது ஒய்யாரமாய் நிற்கிறான்!


ஒய்யாரம் என்றால் எப்படி?
பிறந்த மேனியில், ஆணழகனாய்...
தலையை முழுக்க ஷேவ் செய்து...
குறு குறு கண்ணும், கூரிய நாசியும்
கடிக்க இனிய காதுகளுமாய்...
வழித்த முகமும், சிரித்த சிரிப்புமாய்
பஞ்சாமிர்தத்தை விட இனிப்பான அவன் செவ்விதழில்...
ஹேய் என்று அழைத்து...
அதி பயங்கர வளைவான இடுப்பிலே கையை வைத்து
என்னிடம் வா,.....உனக்கு யார் இல்லீன்னாலும் நான் இருக்கேன்-ன்னு

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியெண்ணி ஏழை நெஞ்சம்
புண்ணாகப் போனது இனிப் போதும்,
வா என்னிடம் வா...என்று கொஞ்சும்...
முருகா, என் கண்ணாளா.....என் இன்பமே!

அவனை, அவனை, அவனை....
என் ஆவியைக் கண்குளிரப் பாருங்கள்! கண்குளிரப் பாருங்கள்!

பழநிமலை மீதில் நின்ற பெருமாளே!!
எங்கள் 200 பதிவுகளின் மேலும் நிற்கும் முருகோனே!


200ஆம் பதிவுக் கொண்டாட்டங்களுக்கு வந்துவிட்டு, பஞ்சாமிர்தம் இல்லாமல் உங்களை அனுப்புவோமா? இதோ:

Sunday, January 16, 2011

200. பழநிப் பதிகம்இன்று தைப்பூசம் அதுவுமாய் (Jan 20, 2011)....முருகன் வீட்டு விசேடம்!
முருகனருள் வலைப்பூ என்று துவங்கி,
அவன் பாடல்களுக்காகவே அமைந்து,
இன்று முருகன் பாடல்கள் 200-ஐத் தொட்டு நிற்கிறது!


தைப்பூசம் = தை மாதம், பூச நட்சத்திரத்தில் வரும் திருநாள்!
தைப்பூசம் தான், முருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள்!
வேல் வாங்கிய அதே நாளில், நாம் 200ஆம் பதிவும் வாங்குவோம், வாருங்கள்! :)

200ஆம் இடுகைக்கு வந்துள்ள அடியார்களாகிய உங்கள் அத்தனை பேரையும் வரவேற்று, வணங்கி மகிழ்கிறேன்! உங்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு!


"முருகா முருகா" என்ற உங்களின் கசிந்துருகும் கூக்குரல் அல்லவோ....,
சங்கத் தமிழ் முருகனை, இன்று சென்னைத் தமிழ் வரை...
தலைமுறை தலைமுறையாய் நிறுத்தி, தமிழ்க் கடவுளாய், விளக்கி, விளங்கி வந்துள்ளது!
அடியார்களின் பொருட்டே அவனும் நின்று வந்துள்ளான்! வாழ்க சீர் அடியார் எல்லாம்!

இந்த இரு நூறு, வெறுமனே இருக்கட்டும் நூறு என்றில்லாமல்,
* முன்னிற்கும் முன்னூறாய்
* நாவூறும் நா-னூறாய்
* ஐயனுக்கோர் ஐ-நூறாய்
* துயர் அறுக்கும் அறு-நூறாய்
* காதல் எழும் எழு-நூறாய்
* என்னுள் ஊறும் எண்-ணூறாய்
* முத்தமிழின் முத்-தொள்ளாயிரமும், இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் என்னுமாறே காதல் முருகனை வாழ்த்தி அருளுங்கள்!

எங்கள் "முருகனருள்" முருகனுக்கு அரோகரா!வரிகள்: டாக்டர் - அர. சிங்கார வடிவேலன்
சுப்பையா சார், புத்தகத்தில் இருந்து ஒளி வருடிக் கொடுக்க,
VSK ஐயா தட்டச்சித் தந்தது...

தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா
தங்கநிறச் செங்கதிர்போல் மின்னும் வேலா
அமிழ்தூறும் ஆறுமுகம் அமைந்த கோவே
அன்பூறும் மனந்தோறும் மலரும் பூவே
உமிழூறும் உன்பெயரைச் சொல்லிச் சொல்லி
உள்ளுருகி வருகின்றோம் வினையைத் தீர்க்கச்
சிமிழுக்குள் குங்குமம்போல் பழநி யப்பா
சிந்தைக்குள் முகங்காட்டிச் சிரிப்பா யப்பா

விலைவாசி போலுயர்ந்த மலைகள் தோறும்
வினைவாசி குறைந்தொழிய விளங்கும் வேலா
அலைவீசும் திருச்செந்தூர்க் கடலைப் போல
ஆயிரநூ றாயிரமாய் அன்பர் கூடி
மலைவாழை உனைக்காண நடையைக் கொண்டோம்
மனவாழை அன்பென்னும் கனியைச் சிந்தக்
கலைவாழும் பழநிமலை ஆண்டி யப்பா
கதிகாட்டி மனங்களிலே கனிவா யப்பா

சீர்தோறும் சிறந்துவரும் தமிழுக் குள்ளே
தினந்தோறும் குளிப்பதனால் சிவந்த வேலா
கார்தோய வளர்ந்துவரும் மலையின் மேலே
கணந்தோறும் வாழ்வதனாற் பொழியும் கையா
நீருயர மலர்கின்ற பூவைப் போல
நெஞ்சுயர மலர்பவனே உன்னைக் காண
ஊர்கூடி வருகின்றோம் பழநி யப்பா
உளந்தேடிக் கால்பாவி ஒளிர்வா யப்பா.

வழிநெடுகப் பலகாரம் தந்து நிற்பார்
வாயார உன்புகழே பாடி நிற்பார்
ஒளிபெறவே உன்னருளைப் போலி னிக்கும்
உண்ணீரும் இளநீரும் உதவி நிற்பார்
களிபெருகி உன்னடியார் செல்லும் காட்சி
கலிதீர்க்கும் உன்னினிய காட்சி என்பார்
வழிநடப்பார் எல்லாரும் பழநி யப்பா
வழிநடக்க மனந்தோறும் மலர்வா யப்பா.

முருகப்பா! வேலப்பா! பழநி யப்பா!
முத்தமிழால் வைதாலும் உவந்து நெஞ்சம்
உருகப்பா! கந்தப்பா! உயிருக் குள்ளே
உயிரப்பா எனவிளங்கும் ஒப்பில் அப்பா!
பருகப்பா! தருகின்ற பாட்டை யெல்லாம்
பண்புடையோர் சிறந்தோங்கப் பார்ப்பா யப்பா!
திருகப்பா! வேரோடு வினையை என்று
சேவிப்பார் சிந்தையிலே திகழ்வா யப்பா.

கதிர்காட்டும் பச்சைநிறக் கழனி எல்லாம்
கண்காட்டும் உன்மயிலின் தோகை காட்டும்
முதிர்காட்டும் தன்குலையால் வளைந்த தென்னை
முன்வணங்கும் உன்னடியார் முதிர்ச்சி காட்டும்
புதிர்காட்டும் உலகத்தில் அன்பே ஆண்டால்
புழுவுடலும் உன்னருளின் புனிதம் காட்டும்
குதிகாட்டும் நீரருவி மலையில் வாழ்வாய்
குறைநீக்கும் உன்னருளிற் குளிக்கச் செய்வாய்.

பாலான வெண்ணீற்றில் படியும் போது
பழமான உன்மேனி பளிங்காய்த் தோன்றும்
மேலான சந்தனத்தில் விளங்கும் போது
விரிகதிரோன் முகஞ்சிவந்து வெட்கிப் போவான்
காலான தாமரையில் பாலும் தேனும்
கரைபுரண்டு நிற்கையிலே கடலுந் தோற்கும்
வேலாஉன் பேரழகைப் பழநிக் குன்றில்
விரைந்துண்ண வருகின்றோம் விருந்து வைப்பாய்.

தாய்பிரிந்த குழந்தைக்குத் தாயே ஆவாய்!
தாளிழந்த முடவனுக்குக் காலே ஆவாய்!
வாயிழந்த ஊமைக்கு வாயே ஆவாய்!
வகையிழந்த ஏழைகளின் வங்கி ஆவாய்!
நோயுற்ற உடலுக்கு மருந்தே ஆவாய்!
நொந்தழுதால் முந்திவரும் கந்த வேளே!
சேய்காண வருகின்ற தாயைப் போலத்
திசைநோக்கி வருகின்றோம் தினமும் காப்பாய்.

வடிவேலா என்னாத வாயும் வாயோ?
மயிலேறும் உனைக்காணாக் கண்ணும் கண்ணோ?
படியேறி வாராத காலும் காலோ?
பண்பாளன் பெயர்கேளாக் காதும் காதோ?
அடிமலரை வணங்காத கையும் கையோ?
அருள்மணத்தை முகராத மூக்கும் மூக்கோ?
படிமீது மானிடராய் வாய்த்த தோற்றம்
பயன்பெறவே அருள்கொடுப்பாய் பழநி யப்பா.

வேலெடுத்த உன்னருமைப் பெயர் எடுத்தால்
வினையெடுத்த இப்பிறவி நடை எடுக்கும்
பாலெடுத்த உன்முகத்தைப் பார்த்தி ருந்தால்
பசியெடுத்த அன்பருயிர் பண்பெ டுக்கும்
வாலெடுத்த உன்மயிலின் வனப்பைக் கண்டால்
வளமெடுத்து வாழ்க்கையிலே வண்மை ஓங்கும்
காலெடுத்தான் திருமகனே பழநி யப்பா
கையெடுத்து வருவோரைக் காப்பா யப்பா.

Thursday, January 13, 2011

பக்தர்களை அறிந்தவன் பழநி அப்பன்!


பக்தர்களை அறிந்தவன் பழநி அப்பன்!

மலை தெரியுது மலை தெரியுது கண்ணிலே - பழனி
மகராஜன் முகம் தெரியுது விண்ணிலே!
அலை தெரியுது அலை தெரியுது வழியிலே - வேலன்
அருள் தெரியுது அருள் தெரியுது ஒளியிலே!

இருள் விலகுது இருள் விலகுது வாருங்கள் - அங்கே
இலை நடுவினில் கனி தெரியுது தேடுங்கள்!
பொருள் குவிந்திடப் பொருள் குவிந்திடப் பாடுங்கள் - அவன்
புகழ் மலையினைக் கால் நடையினில் நாடுங்கள்!


வயது சென்றவர் இளைஞர் என்பவர் யாவரும் - அந்த
வானுலகத்து தேவர் தம்மொடு மூவரும்
வயலில் மீன்கள் குதிக்கும் இந்தக் கழனியை - நாடி
வந்து நிற்பார் வணங்கி நிற்பார் பழனியை!

கட்டியதோ ரெண்டு தாரம் அவனுக்கு - ஒண்டிக்
கட்டையாக வந்தது இந்தப் பழனிக்கு
வட்டியோடு முதலும் சேர்த்து மனதுக்கு - வாரி
வழங்கத் தானே வந்து விட்டான் தனிமைக்கு!

செட்டி என்னும் ஒரு பெயரைச் சுமந்தவன் - கந்தன்
தேவியையே அதன் வழி தான் மணந்தவன்
எட்டுத் திக்கும் நமது சேவை அறிந்தவன் - நாம்
இன்று வரும் நேரம் கூடத் தெரிந்தவன்!

வரி: கவிஞர் கண்ணதாசன்
(பழம் நீ நூலுக்காக எழுதியது)

இன்னும் இது போல் இதர பாடல்களை ஒளிவருடி அனுப்பிய, வாத்தியார் சுப்பையா சாருக்கு நன்றி!

Wednesday, January 12, 2011

நான் காணும் பொருள் யாவும் நீயாகவே


நான் காணும் பொருள் யாவும் நீயாகவே!
நின் அடியார்கள் துதிபாடும் கதியாகவே!
ஓம் என்னும் மறை பொருளே மருந்தாகவே
அதுவே என் வாழ்விற்கும் விருந்தாகவே! முருகா....!
குருவாக நீ வந்து அருள்வாயயப்பா!
உனைத் தொழும் பேறு என்றென்றும் தருவாயப்பா!


நான் காணும் பொருள் யாவும் நீயாகவே!

உண்ணாது உறங்காது உனையே நான் நினைத்திருக்க - உனை
எண்ணாத பொழுதெல்லாம் எனையே நான் சபித்திருக்க
பண்ணாக, இசையாக உனையே நான் படித்திருக்க நான்
மண்ணாக உன் மலைதனிலே வழியெங்கும் கிடந்திருக்க..
வரம் வேண்டும் நீஎனக்கு அருள்வாயப்பா!
உனைத் தொழும் பேறு என்றென்றும் தருவாயப்பா!
நான் காணும் பொருள் யாவும் நீயாகவே!


என் மனமென்னும் ஒருவீடு உனக்காகக் காத்திருக்க! - அதில்
நீ வந்து குடிகொண்டு மகிழ்வென்றும் பூத்திருக்க
தேன் தினையும் திருநீறும் பாலோடு இளநீரும்
பாங்காய் நான் படைத்து பூசைகளைச் செய்திருக்க
"சரவணபவ" தனையே என் நாவும் செபித்திருக்க
வரம் வேண்டும் நீஎனக்கு அருள்வாயப்பா!
உனைத் தொழும் பேறு என்றென்றும் தருவாயப்பா!
நான் காணும் பொருள் யாவும் நீயாகவே!

Tuesday, January 11, 2011

சீர்காழி - தங்க மயம் முருகன் சன்னிதானம்!

இந்தச் செவ்வாயில், வெங்கலக் குரலில்...அதிகம் அறிந்திராத பாடல் ஒன்னு!

முருகனின் உடம்பில் என்னென்ன இருக்கு? = ஒவ்வொருவரும் ஒன்னொன்னு சொல்வாங்க! திருநீறு, சிவப்பு, அழகு, இளமை, நகை, மாலை, அலங்காரம்-ன்னு!
ஆனால்....ஆனால்...ஆனால்.....அதெல்லாம் அப்புறம் தான்!

என் முருகனின் உடம்பெங்கும் கொட்டிக் கிடப்பது....நான் தான்!
அவனை அணு அணுவாக....
* மனத்தாலும்
* கையாலும்
* கண்ணாலும்
* மூக்காலும்
* இதழாலும் ஏந்தி ஏந்தி, ஏங்கி ஏங்கி....
அவன் திருமேனித் தீண்டல் என்பதே வாழ்வாகிப் போனதோ! அவன் தோல் என்பதே நானாகிப் போனதோ!

அவன் தோளில் வேல் இருக்க, என் தோளில் ஏன் ஏதோ உரசுகிறது? அவன் அபிஷேகத்தில் கரைய, எனக்கு ஏன் குளிர்கிறது?
அவன் சிலிர்க்கும் போது, எனக்கு ஏன் கூச்செறிகிறது? அவன் முந்துகையில் எனக்கு ஏன் வியர்க்கிறது?

ஓ....என் உடலே அவன் சன்னிதானம் ஆகிப் போனதோ!!
தங்க மயம் முருகன் சன்னிதானம்!
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்!

சீர்காழிக்கே உரிய முருகக் குரலில்...பாட்டைக் கேட்டுக்கிட்டே படிங்க!தங்க மயம் முருகன் சன்னிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்!
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்!!
(தங்க மயம் முருகன்)

எங்கும் மனம் பரப்பும் மாலைகளே!
அவன் ஈராறு கைகளாம் தாமரையே!
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே!
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே!
(தங்க மயம் முருகன்)

கருணை மழை பொழியும் கருவிழிகள் - அந்தக்
காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்!
அமுதம் ஊறி வரும் திருவடிகள் - அவை
அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்!
(தங்க மயம் முருகன்)அவன் தேகத்தில்...
முதல் பத்தியில் மாணிக்கம், புஷ்பராகம்-ன்னு மணிகளைச் சொன்னார்! - இதைக் காசு கொடுத்து வாங்கிடலாம்!
அடுத்த பத்தியில் தாமரை, மாலை-ன்னு மலர்களைச் சொன்னார்! - இவை இன்றிருக்கும், நாளை வாடி விடும்!

அதனால் தான், அடுத்து....இதெல்லாம் சொல்லாது,
அவன் உடல் உறுப்"பூ"க்களைச் சொன்னார்!!!

அந்த உறுப்"பூ"க்கள் வாடுமோ? என்னைக் கூடுமோ? நம் உறவைப் பாடுமோ? மனம் அவனையே நாடுமோ?
கருணை மழை பொழியும் கரு விழிகள் - அந்தக்
காட்சியில் தோன்றுவதோ பெரு வழிகள்!

தங்க மயம் முருகன் சன்னிதானம்!
அவன் மேனியே என் சன்னிதானம்!
அவன் கரு விழியே, என் பெரு வழி!
அவன் உறுப்"பூ"வே, நான் சூடும் பூ!

உன் நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்ட, முருகா...நூறு முறை பூத்திருப்பேன்!

Thursday, January 06, 2011

தளிர்போலே நடைநடந்து...

முருகனருளில் இடமளித்த ச்செல்லக் குழந்தைக்கும், குழுவினருக்கும், மனமார்ந்த நன்றிகளுடன்...


தளிர்போலே நடைநடந்து கந்தனவன் வருவான்
குளிர்பொழியும் நிலவணிந்த அன்னைமடி அமர்வான்
வேலெடுத்து வினையறுத்து வேதனைகள் களைவான்
கால்பிடித்த பக்தர்களைக் காக்கஓடி வருவான்

ஆடும்மயில் மீதினிலே தானுமாடி வருவான்
பாடுங்குயில் போலடியார் போற்றுவதில் மகிழ்வான்
சந்தமுடன் செந்தமிழைப் பாடிடவே அருள்வான்
சந்ததமும் பணிந்திருந்தால் சக்திவேலன் மகிழ்வான்

தந்தைக்கு உபதேசம் செய்வித்தான் அவனே
சிந்தைக்குள் ஒளியானான் ஆடல்சிவன் மகனே
அவன்பேரைச் சொல்லிடுவோம் அன்புடனே தினமே
அவனடிகள் நினைவொன்றே தரும்நமக்கு பலமே!


--கவிநயா

Tuesday, January 04, 2011

சரவணப் பொய்கையில் நீராடி...முருகப் பாவை நோன்பு!

மார்கழி மாதத்தை "நீராடல்" மாதமாகவே சொல்வது வழக்கம்!
இந்த மார்கழி-க்கு மாதவிப் பந்தலில், மார்கழிப் பதிவுகள் ஏதுமில்லை! என்றாலும் முருகனருளில் ஒரு மார்கழிப் பாட்டு - "நீராடல்" பாட்டு, இதோ அளிக்கிறேன்!

இது பலரும் அறிந்த பாட்டு! ஆனால் முருகனருளில் இது வரை வராதது வியப்பிலும் வியப்பே! சிபி அண்ணா, இராகவன் போன்ற முருக அன்பர்கள் இங்கே கோலாச்சிய காலத்தில் கூட, இந்தப் பாட்டு எப்படி மிஸ் ஆனது-ன்னு தான் தெரியலை! :)

அதனால் என்ன? இப்போது குமரன் அண்ணா கோலோச்சும் காலத்தில் வந்ததாக இருக்கட்டும்! :)இந்தப் பாடல் ஒரு அதிகாலைப் பாடல்!
அதுவும் சுசீலாம்மா-வின் Humming-ஓடு தொடங்கும் அழகிய பாடல்!
அப்படியே நியூயார்க்கில் உள்ள முருகனின் காதலி...தன் மனசில் உள்ளதையெல்லாம், இதமாகப் பதமாகக் கொட்டுவது போலவே இருக்கும்! :)

சரவணப் பொய்கையில் நீராடி
"துணை தந்தருள்" என்றேன் முருகனிடம்!
= பாவை நோன்பு!

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணனலே தந்து வைத்தான் ஆறுதலை!!
= பாவைக்கு அருளல்!

Youtube வீடியோ கிடைக்கவில்லை! என் கிட்ட இருந்த பழைய சிடி-யை, Kates Video Cutter-இல் வெட்டி ஏத்தியுள்ளேன்! தரம் சுமாராத் தான் இருக்கும்! சொல்ப அட்ஜஸ்ட் மாடி! :) கேட்டுக்கிட்டே படிங்க!சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்!
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்!!
(சரவணப் பொய்கையில் நீராடி)

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை!
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை!!
(சரவணப் பொய்கையில் நீராடி)

நல்லவர் என்றும் நல்லவரே!
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே!!
நல்ல இடம் நான் தேடி வந்தேன்
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்!!
(சரவணப் பொய்கையில் நீராடி)


படம்: இது சத்தியம்
இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர்: பி.சுசீலா
பாடல்: கண்ணதாசன்

இதுல ஒரு சிறப்பு என்ன-ன்னா, மருந்துக்குக் கூட முருகன் படமோ, கோயிலோ பாட்டில் தென்படாது!
குளித்துக் கொண்டே பாடுவதோடு சரி! வெறும் உள்ளத்து உணர்ச்சி மட்டுமே! - அதான் எனக்கு மிகவும் பிடிச்சிப் போச்சி!

நீங்களே சொல்லுங்க, காதலி என்னைக்காச்சும் தன் காதலனை ஊர் அறிய புகழ்ந்து எழுதி இருக்காளா? எப்பமே பொறந்த வீட்டுப் பேச்சு தான் ஜாஸ்தியா இருக்கும்!
ஆனா, அவனுக்கு-ன்னு ஒன்னு-ன்னா, அப்போ மட்டும் பதறிப் போய் ஓடியாருவா! மத்தபடி எப்பமே அவனோடு மோதலோடு கூடிய காதல் தான்!
அந்தக் காதலின் ருசியே ருசி! கண்ணாலம் ஆயிருச்சி-ன்னா இப்படியெல்லாம் இருக்க முடியாதே! புகுந்த வீடு வந்துருமே! :))

சரவணப் பொய்கையில் நீராடி
"துணை தந்தருள்" என்றேன் முருகனிடம்!
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணனலே தந்து வைத்தான் ஆறுதலை!!

முருகா - இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்!!
என் கொங்கை நின் அன்பர் அல்லால் தோள் சேரற்க!!

Saturday, January 01, 2011

Happy New Year! சிந்தனை செய் மனமே!

அனைவருக்கும் & முருகனருள் வலைப்பூ நேயர்களுக்கும்...,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)
Wish You All A Very Happy New Year-2011
புத்தாண்டில், "நிம்மதியான சந்தோஷங்கள்", உங்களைப் பூப்போலச் சூழட்டுமென என் முருகனிடம் சொல்லிக் கொள்கிறேன்! :)அது என்ன "நிம்மதியான" சந்தோஷம்? :)
மனசுக்கு நிம்மதி இருந்தாலே, பாதி சந்தோஷம் வந்துரும்! மீதி சந்தோஷம், நாம் தேடி அடைஞ்சிக்குவோம்! என்ன சொல்றீங்க? :)

சந்தோஷம்-மகழ்ச்சி என்பதால், புத்தாண்டு அன்று ஒரு மகிழ்வான பாடலைப் பார்ப்போமா? அம்பிகாபதி லவ் ஸ்டோரி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்! இன்னிக்கி அந்தப் படத்தில் இருந்து அருமையான ஒரு முருகன் பாட்டு, மருகனருள் வலைப்பூவில்! - சிந்தனை செய் மனமே!

ஒருத்தர் சும்மா ஏதாச்சும் நம்மளைக் கேட்டுக்கிட்டே இருந்தா, சும்மா "னை-னை" ங்காதே என்று சொல்லுவோம்ல? இந்தப் பாட்டில் பாருங்கள், "னை-னை" என்றே வருகின்றது! ஆனால் மிகவும் அழகாக!

செந்தமிழ் தரும் ஞான தேசிக-னை,
செந்தில் கந்த-னை,
வானவர் காவல-னை,
குக-னை, சிந்த-னை......
செய் மனமே!

படம்: அம்பிகாபதி
குரல்: டி எம் எஸ்
இசை: ஜி ரா (அட நம்ம ஜிரா இல்லீங்க, இவர் ஜி.ராமநாதன்)
வரிகள்: KD சந்தானம்

ராகம்: கல்யாணி

பாடலை இங்கு கேளுங்கள்!

சிந்தனை செய் மனமே, தினமே
சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே, செய்தால்
தீவினை அகன்றிடுமே!
சிவகாமி மகனை, சண்முகனை
சிந்தனை செய் மனமே!


செந்தமிழ் தரும் ஞான தேசிகனை,
செந்தில் கந்தனை, வானவர் காவலனை, குகனை
சிந்தனை செய் மனமே!


சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை!
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே...

அருமறை பரவிய
சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே!திருத்தணியில் தான் ஆங்கிலப் புத்தாண்டுப் படி உற்சவம் பிரபலமானது! எல்லாரும் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்களே என்று பார்த்த வள்ளிமலை சுவாமிகள், சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி மாற்றி விட்டார்! :)

மகரந்தம் மணக்க...
மலர்கள் பூத்துக் குலுங்க...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP