031: குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்!!!
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் (குன்றத்திலே)
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்கள் ஆனந்த மன்றம்
தங்கம் வைரம் பவளம் முத்து தவளும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை (குன்றத்திலே)
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
வேல் முருகா! வெற்றி வேல் முருகா!
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல்! முருகனுக்கு வேல் வேல்!
பாடியவர்: ஏ.ஆர். இரமணி அம்மாள்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்தியநாதன்
இயற்றியவர்: கண்ணதாசன்
திரைப்படம்: தெய்வம்
17 comments:
தேவரின் தெய்வம் திரைப்படத்தில் அத்தனை பாடல்களும் மிகச்சிறப்பு. திருப்பரங்குன்றத்திற்கு பெங்களூர் ரமணியம்மாளின் குரலில் பாடல். மிக அருமை. பாடலைக் கேட்கையிலும் பார்க்கையிலும் நினைக்கையிலும் ஒரு திருமண வீட்டிற்குச் சென்ற நிறைவைக் கொடுக்கும்.
தங்கம் வெள்ளி பவழம் முத்து தவழும் தெய்வானை
வாங்கிக் கொண்டாள் தாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை
குடும்ப வாழ்க்கையை எத்தனை அழகாக எளிமையாகக் கவிதையில் வைத்தார் கவியரசர்.
இந்தப் படத்திற்குப் பாடல்களை இயற்றும் பொழுது கவியரசரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி. இது அவரே எழுதி நான் படித்தது. எந்த நூலில் என்று மறந்து விட்டேன்.
கவியரசரின் மகளுக்குத் திருமணம் வைத்து விட்டார். திடீர் பணமுடை. திகைத்துப் போனார். அப்பொழுது வந்தது உதவி சாண்டோ சின்னப்பாத்தேவரின் உருவில்....தெய்வம் படத்திற்காக பாடல் எழுதக் கேட்டு...வேண்டிய பணமும் கிடைத்தது. அப்பொழுது சொன்னாராம்..."கண்ணதாசனுக்குத் தேவை என்ற பொழுது கண்ணன் வருவான் என நினைத்தேன்...ஆனால் முருகன் வந்து திருமணத்தை நடத்தி வைத்து விட்டான். அதுவும் தமிழை வாங்கிக் கொண்டு..."
இந்தப் பக்குவந்தான் அவரைப் பின்னாளில்
"கண்ணா என்றாள் முருகன் வந்தான்
முருகா என்றாள் கண்ணன் வந்தான்" என்றும் எழுத வைத்தது என்றால் மிகையில்லை.
அருமையானதொரு பாடலை...முருகன் அன்பர்கள் உளமுருகி கொண்டாடி மகிழும் பாடலை அறிமுகப்படுத்தியிருக்கின்றீர்கள் குமரன். மிக நன்றி.
ஆகா...
பெங்களூர் ரமணியம்மாளின் குரல்
கேட்டு எவ்வளவு நாள் ஆகி விட்டது!
நன்றி குமரன்!
ஆமாம் உங்களிடம் ஒரு கேள்வி.
இந்தப் பாடலை வைத்து உங்களைக் கல்லூரியில் நண்பர்களோ நண்பிகளோ வேடிக்கை செய்த நிகழ்ச்சிகள் உண்டா? :-)
சென்னையில் க்ரோம்பேட்டையில் குமரன் குன்றம் என்ற ஆலயம் உள்ளது.
அந்தக் குமரன் குன்றத்திலும்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் தான்! இம்முறை செல்லும் வாய்ப்பு கிட்டியது! என்ன ஜிரா-வுடன் சென்று இருக்க வேண்டியது! அது மட்டும் மிஸ்-ஆகி விட்டது!!
கண்ணனும் கந்தனும் எத்தனையோ வகையில் ஒத்தவர்கள் தானே இராகவன்?! கண்ணன் பாட்டிலும் முருகன் அருளிலும் கண்ணபிரானும் குமரனும் இருக்கிறோமே?! :-)
பவளம் சரியா? பவழம் சரியா?
இரவிசங்கர். பாடலின் முதல் வரியை வைத்துப் பள்ளியில் கிண்டல் செய்திருக்கிறார்கள். அடுத்த வரி தெரியாத காலம் அது. அதனால் நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு குன்றம் இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்லி மகிழ்ந்து கொள்வேன். :-)
அடுத்த வரியையும் சேர்த்து மிக நெருங்கிய நண்பர்கள் கல்லூரியில் கிண்டல் செய்திருக்கிறார்கள். அப்போது புன்னகையோடு நிறுத்திக் கொள்வேன். :-)
குமரா!
இந்த ரமணி அம்மா குரல் தெரியும்; ஆனால் அவர் படம் எதுவும்; புத்தகத்தில் கூடப் பார்க்காத நிலையில்; இப்படம் ஈழத்தில் திரையிட்ட போது; பார்த்துப் பிரமித்தேன். சன்னக் குரலென்பாங்களே!
அதுதான் இது. அத்துடன் பல முருகன் கோவில்களில் திருவிழாக்களைக் கூட காண தேவர் செய்த
ஒப்பற்ற சேவை.குன்னக்குடியார், கவியரசரும் கைகோர்த்து அள்ளித் தந்த பாடல்கள்!
நல்ல பதிவு!
எனக்கு இந்தப் படத்தின் மூலம் தான் பெங்களூர் ரமணி அம்மாவையே தெரியும் யோகன் ஐயா. இவரது மற்ற பாடல்களை இதுவரை கேட்டதில்லை. இன்றே இணையத்தில் தேடிக் கேட்கிறேன்.
நீங்கள் சொன்னது போல் பல முருகன் திருக்கோவில் திருவிழாக்களைப் பார்க்க இந்தப் படத்தைப் பார்த்தாலே போதும். நன்றாகக் காட்டியிருப்பார்கள்.
எதுகையில் என்னதொரு சொல் விளையாட்டு பார்த்தீர்களா குமரன்!
இந்தப் பாடலுக்கு ஒரு கம்பீரத்தைக் கொடுத்தது (பாடியவருடைய குரலையும் சேர்த்து) அந்த சொல் விளையாட்டுத்தான்!
அருமையான பாடல்.
தேவரின் தெய்வம் படத்தில் வரும் மருதமலை மாணியே முருகையா பாடலும் தேன் தமிழ்பாடலே.
நன்றி குமரன்
வாத்தியார் ஐயா. இந்தப் பாடலில் எதுகைச்சுவையை விட மோனைச்சுவையும் கொண்டாட்டம் வண்டாட்டம், தெய்வயானை முருகப்பெம்மானை போன்ற ஒத்திசைவாய் வரும் சொற்சுவையும் நன்றாக இருக்கின்றன. இவற்றை அனுபவிக்கும் நீங்கள் அபிராமி பட்டரின் இந்தப் பாடலையும் பார்க்கவேண்டும். எதுகையிலும் மோனையிலும் அசத்தியிருப்பார்.
http://abiramibhattar.blogspot.com/2007/03/40.html
செல்வன்.
மருதமலை பாடலும் இந்தப் பதிவில் இருக்கிறது. இந்த இடுகையைப் பாருங்கள்.
http://muruganarul.blogspot.com/2006/10/007.html
குமரன்,
ஈழத்தில் என் ஊரின் முருகன் ஆலயத் திருவிழாக் காலங்களில் ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பாடல்களில் ஒன்று. கவியரசரின் அற்புதமான வரிகள், பெங்களூர் ரமணியம்மா அவர்களின் கணீர் குரலும் அவர் சொற்களை உச்சரிக்கும் விதமும், இப் பாடலைக் கேட்கும் முருக பத்தர்களைப் பரவசம் அடையச் செய்யும்.
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
/* கவியரசரின் மகளுக்குத் திருமணம் வைத்து விட்டார். திடீர் பணமுடை. திகைத்துப் போனார். அப்பொழுது வந்தது உதவி சாண்டோ சின்னப்பாத்தேவரின் */
இராகவன், நானும் இது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். லியோனி அவர்களின் பட்டிமன்ற நிகழ்ச்சி ஒன்றை ஒளியிழையில் பார்த்தேன். அந் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஒருவர்[பெயர் நினைவில்லை] சொன்னது இதுதான்.
கவிஞர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் இல்லாது திண்டாடிய போது தேவர் உதவினாராம்[இப் படம் எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில்]. அதனால்தான் கவியரசர் "மதுரைமலை மாமணியே முருகையா" எனும் பாடலில், தேவரின் உதவியை நினைவு கூர்ந்து அவர் செய்த உதவியை எப்போதும் மறக்க மாட்டேன் என்பதை பாட்டிலேயே சொன்னாராம்,
"கோடிகள் கிடைத்தாலும் கோமகனை மறவேன்
நாடி என் வினை தீர நான் வருவேன்"
இந்த வரிகள் வெளியில் இருந்து பார்க்கும் எமக்கு முருகனைப் பற்றிச் சொன்னது போல் இருந்தாலும், கவியரசர் தேவருக்கு இப் பாடலின் மூலம் சொன்ன நன்றியாம்.
// குமரன் (Kumaran) said...
கண்ணனும் கந்தனும் எத்தனையோ வகையில் ஒத்தவர்கள் தானே இராகவன்?! கண்ணன் பாட்டிலும் முருகன் அருளிலும் கண்ணபிரானும் குமரனும் இருக்கிறோமே?! :-)
பவளம் சரியா? பவழம் சரியா? //
தெரியவில்லையே குமரன். எனக்குத் தெரிந்து சிறுவயதிலிருந்து பவழம் என்றே பழகி வருகிறேன். அப்படித்தான் படித்த நினைவு.
நல்ல பாடல் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி குமரன் அவர்களே!
ஜி.ரா , தாங்கள் கூறிய செய்தி எனக்குப் புதிது நன்றி!
அடடா இந்தப் பாடலும் ரமணியம்மா அவர்களின் குரலும் நான் சிறுவயதில்அனுபவித்த மார்கழிமாத குளிருடன் கூடிய பஜனை காலங்களை நினைவுபடுத்துகின்றது!
அருமையான பாடல். தெய்வம் படத்தில் திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்ட கதை சின்னப்பா தேவரின் வாழ்வில் முருகன் அருளிய ஒரு சம்பவமே. முருகனின் பெயரை உருகிச் சொன்னால் ஓடோ டி வந்திட மாட்டானோ அவன்.
ரமணி அம்மாளின் குரலில் முருகன் பாடல்களைக் கேட்பதும் ஒரு பரவச அனுபவம்தான். அவர் பாடிய 'என்னப்பனே என் ஐயனே' என்ற பிரபல சங்கீத விமர்சகர் சுப்புடு எழுதிய பாடலையும் இங்கு இடலாமே
இந்தப் பாடலை முதன்முதலில் நான் கேட்டபோது எனக்கும் ஒரு சந்தேகம் வந்தது. ஏனெனில் அதுவரை கணீரென்ற பெண் குரல்களையே கேட்டுக் கொண்டிருந்த எனக்கு வித்தியாசமாக ஒரு முதிய பெண்ணின் வாய்ஸில் கேட்டது புதுவித அனுபவத்தைத் தந்தது. ஆனாலும் அந்த வரிகள் அத்தனையும் வைர வரிகள்..
//தங்கம் வைரம் பவளம் முத்து தவளும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை (குன்றத்திலே)//
இந்த வரிகளை மனப்பாடம் செய்வதற்காக பாடலை உற்று உற்றுக் கேட்டும் பாடல் சென்ற ஸ்பீடில் முதலில் புரியவில்லை. பின்பு பாடல் புத்தகம் வாங்கி மனப்பாடம் செய்து ஒப்புவித்தது எனக்கு இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது.
கவியரசரின் மகள் திருமணத்திற்கு தேவர் உதவிய அந்தச் சம்பவத்தை கவியரசர் தனது அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில் எழுதியுள்ளார். படித்துப் பாருங்கள்.. தேவரைப் போல் ஓடோடி வந்து உதவியது யாருமில்லை என்று உருகியிருக்கிறார் கவியரசர்.
அனுபவங்கள்தான் பாடங்களாகும். அந்தப் பாடங்கள்தான் வேதங்களாகும்.. அந்த வேதங்களால்தான் நாம் இஇறைவனை அடைய முடியும்..
முருகா.. முருகா.. முருகா..
Post a Comment