Tuesday, December 29, 2020

எல்லேநம் சேக்காளி | முருகன் திருப்பாவை - 15

எல்லேநம் சேக்காளி, சோலியாத் தூங்குதியோ?

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-15

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


15/30 | பத்தாம் வீட்டுத் தோழியை எழுப்பல் (கடைசி வீடு)!

எல்லேநம் சேக்காளி, சோலியாத் தூங்குதியோ?
வல்லடியாய் ஏசாதீர்; வந்திடுவேன் பையத்தான்!
சில்லென்று வேண்டாம் சிரிப்பாணி; கொண்டி-திற!
சில்சிலுப்பு நானல்ல; நீங்கள்தான் ஆயிடுக!

நில்லாமல் வந்தனர்காண், நொம்பலம் பாராமல்!
எல்லாரும் வந்தனரோ? வந்தார்வந் தெண்ணிக்கொள்!
சில்லு,கை ஏந்தியவன் செல்லமாம் மாமருகன்
சொல்லுவோம் வேல்முருகா சொல்லேலோ ரெம்பாவாய்!   (15)


தென் தமிழக/ நெல்லை வட்டார வழக்கு - அருஞ்சொற்பொருள்:

*சேக்காளி= தோழன்/தோழி
*சோலி= வேலை
*வல்லடி= வம்பு
*ஏசல்= திட்டுதல்
*பைய= மெதுவாக
*சிரிப்பாணி= கள்ளச் சிரிப்பு
*கொண்டி திற= தாழ்ப்பாள் திற
*சில்சிலுப்பு= அலட்டல்
*நொம்பலம்= சிரமம்/வலி
*சில்லு= சக்கரம் | சில்லு, கை ஏந்திய திருமால்

முருகன் திருப்பாவை தொடரும்..

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP