காவடி ஆட்டமா! - காவடிச் சிந்து பாட்டமா!
பழனியிலே இன்று பங்குனி உத்திரம்! வழியெங்கும் காவடிகள் காவடிகள்!
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்,
முருகா என்று ஓதுவார் முன்!
அது போல், பலகாலும், பார்க்கும் இடமெங்கும், காவடிக் கடலோ என்று எண்ணும் படிக்கு, அரோகரா, அரோகரா என்று காவடிகள் ஆட்டம்!
அதுவும் எத்தனை எத்தனை காவடிகள்!
பால் காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடி!
மேலும் பல காவடிகள் என்னென்ன என்று சொல்லி உதவுங்கள்!
தைப்பூசக் காவடிகளை மிஞ்சும் பங்குனி உத்திரக் காவடிகள்!
வலப் பக்கம் காவடி, இடப் பக்கம் காவடி!
முன்னே காவடி, பின்னே காவடி!
மேலே காவடி, கீழே காவடி!
இப்படி எங்கெங்குக் காணினும் காவடியடா!
குடும்ப பாரம் சுமக்கும் அன்பான எளிய மக்கள், இன்று அன்பு ஒன்றே சுமந்து எடுத்து வரும் காவடிகள்!
காவடியின் மகிமை தமிழகம் மட்டுமா பேசும்? ஈழம், சிங்கை, மலேசியா, இன்னும் தமிழ் இருக்கும் இடமெல்லாம் அல்லவா பேசும்!
இந்த இனிய நாளில், காவடிப் பாடல் ஒன்றைப் பாடி, காவடியானைப் போற்றுவோம்!
உன்னி கிருஷ்ணன் பாடுவது, இங்கே!
சென்னிக்குள நகர் வாசன் - தமிழ்த்
தேரும் அண்ணாமலை தாசன் - செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்-புனை
தீரன் அயில் வீரன்
(ஜகம்=உலகம்; புய=புஜம்=தோள்; வரை=மலை
ஜகம் மெச்சிய மதுரமான கவிமாலை; அதைத் தன் மலை போன்ற அகன்ற தோளில் சார்த்திக் கொள்கிறான் முருகன்)
வண்ண மயில் முருகேசன் - குற
வள்ளி பதம் பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்-வர
வாதே சொல்வன் மாதே
(கழுகாசலம்=கழுகு மலை; அந்த மலையின் பதியான முருகன் கோவிலின் வளத்தை நான் சொல்கிறேன் பெண்ணே!)
சன்னிதியில் த்வஜ ஸ்தம்பம் - விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் - என்னும்
சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதினில்
தாங்கும் உயர்ந் தோங்கும்
(த்வஜ ஸ்தம்பம் = கொடி மரம்; கும்பம்=குடம்; சலராசி=கடலில் வாழும் மீன், மகரம் போன்ற உருவ அமைப்புகள் கொண்ட கொடிகள் எல்லாம் சிறக்க, முருகன் கோவில் திகழ்கிறது )
அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்-செவி
அடைக்கும் அண்டம் புடைக்கும்
(காவடி எடுக்கும் அடியார்கள் பாடும் திருப்புகழ் முழக்கமானது, அமராவதிப் பட்டினத்தில் உள்ள தேவர்கள் செவியையே சென்று அடைக்கும்!)
கருணை முருகனைப் போற்றி - தங்கக்
காவடி தோளில் ஏற்றி - கொழும்
கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமே-கதி
காண்பார் இன்பம் பூண்பார்.
(நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருக, தங்கத்தினும் மேலான காவடியைத் தோளில் தூக்கி வருகிறார்கள்;
முருகக் கனலில் உருகிய மெழுகாய் வரும் பக்தர்கள் கதி காண்பார், இன்பம் பூண்பார்)
வரிகள்: அண்ணாமலை ரெட்டியார்
ராகம்: காவடிச் சிந்து
தாளம்: ஆதி
தமிழிசைக்குப் பெரும் பணி செய்தவர் அண்ணாமலை ரெட்டியார்.
அவரின் காவடிச் சிந்து பாடல்கள், மிகவும் புகழ் பெற்றவை. எளிய தமிழ்! அதே சமயம் துள்ளும் தமிழ்!
சென்னிக்குளம் அவர் சொந்த ஊர். அங்குள்ள முருகன் மேல் அவர் பாடிய சில பாடல்களில் அப்படியொரு சந்தம்!
பாடும் போதே, கால்கள் தானே ஆடி விடும்!
நீங்களும் கூடவே பாடிப் பாருங்கள் தெரியும், கால்கள் தானே ஆடுகிறாதா என்று! :-)
காவடியா, உன்னடி கா அடியா? எம்மைக் காக்கும் அடியா!
அரோகரா! அரோகரா!!
15 comments:
அருமையான காவடிச் சிந்து பாடல் கே.ஆர்.எஸ்.
தாளம் போட வைக்கும் சந்தம். ஆட்டமும்தான் போட வைக்கும்!
ஆட்டுவிப்பவன் அவனல்லவா!
அவனும் விரும்பும் ஆட்டம் காவடி ஆட்டம்தானே!
//நாமக்கல் சிபி said...
தாளம் போட வைக்கும் சந்தம். ஆட்டமும்தான் போட வைக்கும்!
ஆட்டுவிப்பவன் அவனல்லவா!//
உண்மை தான் சிபி.
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே!
///கருணை முருகனைப் போற்றி - தங்கக்
காவடி தோளில் ஏற்றி - கொழும்
கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமே-கதி
காண்பார் இன்பம் பூண்பார்.////
முத்தாய்ப்பான வரிகள்!
பாடலைப் பதிந்து, மனக் கண்ணில் காவடிகளைக் காட்டியமைக்கு நன்றி!
// SP.VR. சுப்பையா said...
மனக் கண்ணில் காவடிகளைக் காட்டியமைக்கு நன்றி!//
வாத்தியார் ஐயா,
காலையில் நீங்கள் பதிவில் பழனி மலையைக் காட்டினீர்கள்;
அடியோங்கள் உடனே, காவடிகளையும் கண்டு விட்டோம்!
நன்றி ஐயா!
அண்ணாமலையாரின் சொந்த ஊர் கழுகுமலை. அங்குதான் அவர் காவடிச் சிந்துகளை இயற்றி இலக்கியமாக்கினார். மிகவும் அழகான கோயில்.
இந்தப் பாடல் உன்னிகிருஷ்ணன் குரலில் சுகமாக இருந்தாலும் சுறுசுறுப்பாக இல்லை என்பது என் கருத்து. முருகப் பெருமானை வேண்டி வணங்கி காவடி தூக்கிக்கொண்டு ஆடியும் பாடியும் வருகின்ற அடியார் பாடும் பாடலில் சுறுசுறுப்பு தேவை. இதை வேறு யாரேனும் பாடியிருக்கின்றார்களா? சூலமங்கலமோ? சீர்காழியோ? டீ.எம்.எஸ்சோ? பித்துக்குளியோ? சௌம்யா பாடி கேட்டிருக்கிறேன்.
//இந்தப் பாடல் உன்னிகிருஷ்ணன் குரலில் சுகமாக இருந்தாலும் சுறுசுறுப்பாக இல்லை என்பது என் கருத்து//
ஓரளவு உண்மை தான் ஜிரா.
காவடியாட்டத்தின் போது, ஓங்கி ஒலித்துப் பாடும் பாட்டும் ஆட்டமும் நமக்கு நன்கு பழக்கமாகிவிட்ட படியால் இவ்வாறு தோன்றுகிறது!
ஆனால் ஒய்யாரக் காவடிகளும் உண்டு! அதிலும் குறிப்பாக, மாலை நேரத்தில் எடுக்கப்படும் மயில் காவடிகள், அதிக மேள சப்தம் இல்லாது, ஒய்யாரம் தூக்கலாக இருக்கும். வள்ளி-முருகன் காதல் வரிகளாக இருக்கும்.
TMS, சீர்காழி போன்றவர்கள் பாடும் சுட்டி எனக்குக் கிடைக்கவில்லை!
கிடைத்தால் மறக்காமல் இங்கு இட வேண்டுகிறேன்.
எனக்கும் பிடித்த காவடிச் சிந்து
நன்றி , ரவி
மிக இனிமையும்;சொற்கட்டும் நிறைந்த பாடல்; இதை நித்தியசிறியும் மிக துடிப்புடன் பாடியுள்ளார்.
இட்டதற்கு நன்றி!
பல முறை விரும்பிக் கேட்கும் பாடல் இரவிசங்கர். எழுத்துருவில் பார்க்கும் போது சொற்சுவையை இன்னும் நன்றாக அனுபவிக்க முடிகிறது.
எனக்கு மிகவும் பிடித்த காவடிச்சிந்து :-) நன்றி குமரன்...
//செல்லி said...
எனக்கும் பிடித்த காவடிச் சிந்து
நன்றி , ரவி//
கேட்டு ரசித்தீர்களா, செல்லி!
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
மிக இனிமையும்;சொற்கட்டும் நிறைந்த பாடல்;//
ஆமாம் யோகன் அண்ணா...சொற்கட்டு அற்புதம்...பாட்டைப் படிக்கும் போதே தாளம் வந்து விடுகிறது!
//குமரன் (Kumaran) said...
பல முறை விரும்பிக் கேட்கும் பாடல் இரவிசங்கர். எழுத்துருவில் பார்க்கும் போது சொற்சுவையை இன்னும் நன்றாக அனுபவிக்க முடிகிறது//
ஆம் குமரன்; இன்னும் பல காவடி சிந்துகளை இங்கே இட்டால், நன்றாக இருக்கும்.
//Sethukkarasi said...
எனக்கு மிகவும் பிடித்த காவடிச்சிந்து :-) நன்றி குமரன்... //
நன்றி Sethukkarasi. கேட்டு மகிழ்ந்தீர்களா?
கேட்டு மகிழ்ந்தேன் கே.ஆர்.எஸ்...
Post a Comment