36. சொல்லச் சொல்ல இனிக்குதடா!
சில பேரின் பேரைச் சொன்னாலே நமக்கு பத்திக்கிட்டு வரும்!
ஆனா பாருங்க, இங்க முருகப் பெருமான் பேரைச் சொல்லும் போது கூட, நமக்குப்
பத்திக்கிட்டு வருது = பத்தி(பக்தி) கிட்டும் வருது! :-)
சொல்லச் சொல்ல எப்படி ஒரு பொருள் இனிக்கும்?
திருப்பதி லட்டு ஒரு விண்டு எடுத்து வாயில் போட்டுப் பாருங்க!
எப்போது இனிக்கிறது? பட்டவுடன் சற்றே தான் இனிக்கிறது!
ஆனால் நாவில் முழுதும் கரையும் போது தான், இனிப்பின் எல்லைக்கே போகிறோம்!
இனி லட்டு இல்லை; எல்லாம் கரைந்து விட்டது என்னும் போது தான்,
ஏக்கமும் சேர்ந்து கொண்டு, நினைப்பே இனிப்பைக் கூட்டுகிறது!
அது போல, பெருமாளிடமோ, முருகனிடமோ, இறைவனிடமோ, முழுதும் கரையும் போது தான், இனிப்பின் எல்லைக்கே போகிறோம்!
இனி இல்லை, எல்லாம் கரைந்து விட்டோம் என்னும்படிக்கு, சுவை பற்றிக் கொள்கிறது!
தொடக்கத்தில் சும்மானாங்காட்டியும் அவன் பேரைச் சொன்னாலும்,
பின்பு அதுவே, சொல்லச் சொல்ல இனிக்குதடா!
பாலராஜன் கீதா அனுப்பிய MP3 இங்கே!
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)
பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)
பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
முருகா அமைதி கொண்டது - அறிவில்
சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
கந்தா பெருமை கொண்டது - முருகா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)
உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது - குமரா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ
கந்தா உன் அருளன்றோ - முருகா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)
படம் : கந்தன் கருணை
இசை : K.V. மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: P.சுசீலா
நடிப்பு: சாவித்திரி, ஜெமினி கணேசன்
இயக்கம்: ஏ.பி. நாகராஜன்
16 comments:
//ஆனால் நாவில் முழுதும் கரையும் போது தான், இனிப்பின் எல்லைக்கே போகிறோம்!
இனி லட்டு இல்லை; எல்லாம் கரைந்து விட்டது என்னும் போது தான்,
ஏக்கமும் சேர்ந்து கொண்டு, நினைப்பே இனிப்பைக் கூட்டுகிறது!//
இது அக்மார்க் பித்தானந்தாவின் பதிவு தான்.
:)
பாடல் வரிகள்,குரல் மற்றும் இசை நம்மை அப்படியே கிரான்ட் கேன்யான் மேல் நடக்கவைக்கும்.
இதை படிக்கும் போது நானே பாடி பார்த்துக்கொண்டேன்.
யூ டுயூபில் இப்போது பார்க்கமுடியாது.
இரவிசங்கர் எப்போது பித்தானந்தா ஆனார்?
:-)
//இது அக்மார்க் பித்தானந்தாவின் பதிவு தான்//
GK ஐயா
நம்மள இப்படி பித்தானந்தா என்று சொல்லிப் பின்னிப்புட்டீங்களே!
சிபியார் கேட்டாருன்னா, நான் என்ன பதில் சொல்லுவேன்? முருகா! :-)
மூன்று மேதைகளின் கூட்டணியில் அமைந்த பாடல் இது. அதனால்தான் அத்தனை சுவை!
இரண்டு பேர்களின் பெயரை எழுதினீர்கள். மூன்றவது மேதையின் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
திரு.ஏ.பி.நாகராஜன்.
//பாடல் வரிகள்,குரல் மற்றும் இசை நம்மை அப்படியே கிரான்ட் கேன்யான் மேல் நடக்கவைக்கும்//
அட ஆமாம் குமார் சார்!
கிரான்ட் கேன்யான் = குன்று (மலை) இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் தானே! கரெக்டாத் தான் சொன்னீங்க :-)
// குமரன் (Kumaran) said...
இரவிசங்கர் எப்போது பித்தானந்தா ஆனார்?
:-) //
அதானே! கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள் குமரன் :-)
//SP.VR. சுப்பையா said...
மூன்று மேதைகளின் கூட்டணியில் அமைந்த பாடல் இது....மூன்றவது மேதையின் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்//
சேர்த்து விட்டேன் ஆசானே!
திரு.ஏ.பி.நாகராஜன் போல் இன்று யாரேனும் உளரா என்ற ஏக்கம்!
முருகன் என்ற பெயரைச் சொல்லும் பொழுதும் பற்றிக் கொண்டு வரும் ரவி. :-) ஆம். இன்பம், பெருமை, புகழ், செல்வம், வீடுபேறு ஆகியவை நம்மைப் பற்றிக் கொண்டு வரும்.
முத்தமிழ்க்கடவுளின் முந்துதமிழ்ப் பெயருக்குள்ளே அனைத்து நலன்களும் இருக்கையில் சொல்லச் சொல்ல இனிக்காமல் எப்படி இருக்கும்? அப்படி இருந்தால் நாவில் ஏதேனும் கோளாறு என்றுதான் பொருள்.
திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் கவியரசரின் பாடல்வரிகளை இசையரசி பாடிக் கேட்கையில் சுகமோ சுகம். நல்லதொரு பாடல்.
// G.Ragavan said...
முருகன் என்ற பெயரைச் சொல்லும் பொழுதும் பற்றிக் கொண்டு வரும் ரவி. :-)//
ஆமாம் ஜிரா. பத்திக் கிட்டும் வரும்; பற்றிக் கொண்டும் வரும்.
//சொல்லச் சொல்ல இனிக்காமல் எப்படி இருக்கும்? அப்படி இருந்தால் நாவில் ஏதேனும் கோளாறு என்றுதான் பொருள்//
அந்தக் கோளாறையும், அவனைக் கேளாரையும் திருத்திப் பணி கொள்பவனும் அவனே அல்லவா!
ஜிரா, இனியது கேட்கின் எங்கே?
சில நாளாய் இனியது கேட்க முடியவில்லையே! :-)
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா, இனியது கேட்கின் எங்கே?
சில நாளாய் இனியது கேட்க முடியவில்லையே! :-) //
பணிப்பளுதான் ரவி. பனிப்பளுத்தலையர் மகன் மனம் வைத்தால் விரைவிலேயே கேட்கலாம்.
mp3 வடிவில் :
http://music.cooltoad.com/music/song.php?id=198967
ரவி சங்கர்!
இந்தப் பாடல் வந்த காலத்திலே மனதில் அப்பிக் கொண்ட பாடல்.
"உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்"..இதைப் பற்றி யோசித்தேன். சீனகுழந்தையானாலும்; அரபுக் குழந்தையானாலும்; பிரஞ்சுக்குழந்தையானாலும்.. அதன் தாய்
"செல்வமே;அழகே;அமுதே" என கொஞ்சுவது வழமை.;;;இதேல்லாம் முருகு தானே!!
அதனால் கவிஞர் ஆடும் தொட்டிலெல்லாம் முருகனாமத்துட ஆடுதென்கிறார்.
//பாலராஜன்கீதா said...
mp3 வடிவில் :
http://music.cooltoad.com/music/song.php?id=198967 //
நன்றி பாலராஜன் சார். பதிவிலும் ஏற்றி விட்டேன்!
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
"உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்"..இதைப் பற்றி யோசித்தேன். சீனகுழந்தையானாலும்; அரபுக் குழந்தையானாலும்; பிரஞ்சுக்குழந்தையானாலும்.. ...இதேல்லாம் முருகு தானே!!//
அழகான சிந்தனை யோகன் அண்ணா.
உலகில் ஆடும் தொட்டில் எல்லாம் முருகான அழகு தானே!
இந்தப் பாடலில் எனக்கு ஒவ்வொரு வரியும் பிடிக்கும். மிக மிகப் பிடித்த வரிகள் 'உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள் நின்று வாழ்த்துவது உன் அருளன்றோ' என்பது தான்.
Post a Comment