Thursday, April 19, 2007

முருகனுக்கு ஒரு நாள் திருநாள்



முருகனுக்கு ஒருநாள் திருநாள். ஆம் இன்று கார்த்திகைத் திருநாள்.
ஆமாம் இன்று திருமதி.தாரா நடராஜன் எழுதி திரு. ஒ.ஸ்.அருண் பாடிய இந்தப்பாடலைக்கேட்டுக் கொண்டு இருந்தேன்.மிக அருமையான பாடல்.
நீங்களும் படியுங்கள்.இசை வடிவத்தில் போட அனுமதியில்லை.
ராகம்:-- யமுனா கல்யாணி தாளம்:--ஆதி
பல்லவி
வர மனம் இல்லையா முருகா,,
வரம்தர மனம் இல்லையா என்னிடம்....(வர மனம்)
அனுபல்லவி
பிறவிப்பிணி நீங்கவே இறைவா உன்னை அழைத்தேனே
பிறைசூடன்மைந்தா குறைதீர்க்கும் குமரா... (வர மனம்)
சரணம்
வாழ்க்கை எனும் கடலிலே மூழ்கியே தவிக்கிறேன்
காத்திடவா என்றே அழைத்தேனே
கந்தா குமரா கதிர்வேலா என்னிடம் (வர மனம் இல்லையா)
இதில் சில உண்மைகள் உண்டு. இந்தப்பாட்டை கேட்டது உண்மை.
மேலே இடப்பட்டுள்ள முருகனின் பிரதிமை சிங்கப்பூரிலிருந்து இன்று என்னிடம் வந்தது உண்மை.இதை அனுப்பித்தவர் வேறு யாருமில்லை பிறைசூடன் மைந்தன் (சந்திரசேகரனின் மைந்தன்தான் ). முருகன் சிலை எனக்கு வேண்டும் எனற என் குறைதீர்த்த குமரன். பாடியவர் பெயரும் அருண்.அனுப்பியவர் பெயரும் அதேதான்
சரி இன்றையப் பாடலை பார்த்து,படித்து, கேட்ப்போமா.
ராகம்:-- சாவேரி தாளம்:- மிஸ்ர சாபு.
பல்லவி
முருகா முருகா என்றால் உருகாதோ உன்தன் உள்ளம் வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ( முருகா முருகா)
அனுபல்லவி
ஒருகால் உரை செய்தாலும் உன் பாதம் நினைந்தாலும்
அருளே தந்திடும் கந்தா அல்லும் பகலும் நான்.. (முருகா)
சரணம்
அறியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ
அன்பே வடிவம்கொண்ட அய்யா நீ சினந்தாயோ
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள்செய்வாய்
செந்தில்மாநகர் வாழும் தேவாதி தேவனே...(முருகா முருகா)
என்ன ஒரு அழகான பாடல். பலமுறை சொல்லவேண்டாமாம். அவன் பெயரை ஒருதரம் சொன்னாலே போதுமாம் விரைவாக ஓடி வருவான் அருள்செய்ய. அன்பே வடிவம் கொண்ட அய்யா உனக்குகூட என் பிழையால் கோபம் வந்ததா.என் அந்தக் குறையைப் பெரிது படுத்தாமல் பொறுத்து அருள் செய்ய உள்ளம் உருகி வா முருகா திருச்செந்தூரில் இருப்பவனே என்று உள்ளம் உருகி வேண்டுகிறார் திரு. பெரியசாமி தூரன் அவர்கள். பாடல் அமைந்த ராகம் சாவேரி. இரக்கத்க்கென்றே பிறந்த ராகம் சாவேரி.உள்ளத்தை உருக்கி மனக்கவலையை போக்கவல்ல ராகம் இது.
மிக அழகாக இந்தப்பாடலை திருமதி.பம்பாய் ஜெயஸ்ரீ ராம்நாத் அவர்கள் பாடியுள்ளார்கள்
பாடலை கேட்க < "இங்கே கிளிக்"> செய்யவும்

17 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) April 20, 2007 1:27 AM  

//கந்தா குமரா கதிர்வேலா என்னிடம் (வர மனம் இல்லையா)//

திராச ஐயா!
நீங்கள் எத்தனை முறை வா எனக் கூப்பிட்டாலும் கிருத்திகை அன்று தான் உ(எ)ங்களிடமும் வரவேண்டும் என்று விரும்பினான் போலும் அந்தத் தோகை மயில் மீது அமர்ந்த சுந்தரம்!

பெருமான் சிலை கொள்ளை அழகு!
அதுவும் ஒரு கால் மடித்து, மறு கால் மயில் மீது அமர்ந்த நிலை!
மகுடம் , வேல் மின்ன
கண்களில், இதழில் ஒரு புன்னகையும் தெரிகிறதே!

தந்தைக்கு அனுப்பி, அதன் மூலம் எங்களுக்கும் காட்டிய ஜூனியர் திராசவுக்கு நன்றி!

தி. ரா. ச.(T.R.C.) April 20, 2007 1:50 AM  

@ரவி நீங்கள் கூறியது சரி தான்.கூவி அழைக்காமலே அன்று வ்ந்த குமரனுக்கு நன்றி சொல்லுவதா,தந்த குமரனுக்கு நன்றி சொல்லுவதா இல்லை அதை அழகாக எடுதுக்கூறிய உங்களுக்கு நன்றி கூறுவதா

VSK April 20, 2007 9:27 AM  

வேண்டியவர்க்கு வேண்டும்வரை வரம்தரும் முருகன் அனைவருக்கும் வாரி வழங்க இந்த நன்னாளில் வேண்டிக் கொண்டு, அருமையான இரு பாடல்களை எமக்களித்த உங்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

முதல் பாடலில் "மூழ்கியே" வைக் கவனிக்கவும்!

முருகனருள் முன்னிற்கும்!

G.Ragavan April 20, 2007 11:54 AM  

திராச ஐயா...கந்தனை நினைத்தால் கண் முன்னே வருவான் என்பது உலகறிந்த வழக்காயிற்றே! நீங்கள் விரும்பி நினைத்த பின்னும் வாராதிருப்பானோ. இன்று கோயிலுக்குச் செல்லும்படி உள்ளம் விரும்பியது. அருகில் இருந்தது அடையாறு அனந்தபத்மநாபசுவாமி திருக்கோயில். அங்கு முருகன் இல்லையே என்று மனம் சிறிது நினைத்தாலும் கண்ணன் வேறு கந்தன் வேறா என்று எண்ணிச் சென்றேன். அங்கே மூன்று கதவுகளும் சாத்தியிருந்தன. சென்றதும் சடபடதடவென மேளமும் நாதமும் கிளம்ப கதவங்கள் ஒவ்வொன்றாக திறக்க முருகா முருகா முருகா என்று வணங்கினேன். அரங்கனைத்தான். பிறகு திருக்கோயிலை வலம் வருகையில் ஒரு பெரிய படம். இறைவனும் இறைவியும் இருக்கும் படம். அதில் ஒருபுறம் முருகப்பெருமான் மயிலேறிக் கொண்டு வேல் பிடித்துக்கொண்டு நின்றான். சந்தததும் நினையாமல் எப்பொழுதோ நினைக்கும் நமக்கு இப்படிக் கோயிலில்...அனந்தபத்மநாபசுவாமி கோயிலில் காட்சி தந்தானை எப்படிப் புகழ்வது! கேட்பவர்க்கு இது கேணத்தனமாக இருக்கும். ஆனால் அனுபவித்தவருக்கு! முருகா! முருகா! முருகா!

குமரன் (Kumaran) April 21, 2007 8:32 AM  

திராச. பெரியசாமி தூரன் அவர்களின் பாடல்கள் பலவும் மிக ஆழ்ந்த பொருளைக் கொண்டு இருக்கின்றன. அண்மைக்காலமாக அவர் பாடல்களைத் தேடித் தேடிக் கேட்கிறேன். மீண்டும் ஒரு முறை இந்தப் பாடலைக் கேட்டு அனுபவிக்க வாய்ப்பளித்தீர்கள். மிக்க நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) April 21, 2007 11:39 AM  

@விஸ்கே.வருகைக்கும்,தவற்றை சுட்டிக்காட்டியதற்கும் நன்றி

தி. ரா. ச.(T.R.C.) April 21, 2007 11:47 AM  

வாருங்கள் திரு.ராகவன். நீண்டநாட்கள் ஆகிவிட்டன உங்களைப் பார்த்து.


சந்தததும் நினையாமல் எப்பொழுதோ நினைக்கும் நமக்கு இப்படிக் கோயிலில்...அனந்தபத்மநாபசுவாமி கோயிலில் காட்சி தந்தானை எப்படிப் புகழ்வது!

ஏன் இப்படி புகழலாமே

"ஓடோடியே வருவான் முருகன்
பக்தன் குறை தீர்க்க வண்ணமயில்ஏறி
ஓடோடியே வருவான் முருகன்.
வாடிடும் பயிருக்கு வான்மழைபோலே
கன்றின் குறைகேட்ட தாய்ப் பசு போலே ஓடோடியே வருவான் முருகன்"

தி. ரா. ச.(T.R.C.) April 21, 2007 11:56 AM  

@குமரன்.வணக்கம். தூரனின் இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதனால்தான் உங்களுக்கும் பிடிக்கும் என்று முருகனருளில் படைத்தேன்.இந்ததடவை போனஸ் திருமதி தாரவின் பாடல்.இனி ஒவ்வொருதடவையும் அவர்கள் பாடல் ஒன்று போனஸாக உண்டு.எளிமையான் தமிழில் உள்ளத்தை உருக்கும் பக்தி ததும்பும் பாடல்கள். கேட்டு உங்கள் கருத்தைக்கூறவும்

rv April 21, 2007 4:22 PM  

முருகா என்றால் உருகாதோரும் தான் உண்டோ?

சாவேரி எனக்கு அலர்ஜியென்றாலும், இந்தப் பாடல் விசேஷ விதிவிலக்கு. டி.எம்.கிருஷ்ணாவும் இந்தப் பாடலில் பின்னிவிடுவார்..

முதற்பாடல் பரிச்சயமில்லை. ஆனால் அருமையான வரிகள்.

இங்கே இட்டதற்கு நன்றி...

ஷைலஜா April 21, 2007 6:03 PM  

பாம்பே ஜய்ஸ்ரீ குரலில் பெ தூரனின் பாடல் உருகி நெகிழ்ந்து உள்ளத்தைத் தொடுகிறது..சாவேரி ராகத்திற்கே நீங்கள் சொல்வதுபோல இரக்கத்திற்கென்றே அமைந்த த்வனி வேறு..எந்தவினையாலும் வந்தவழி ஏகச்செய்யும் கந்தனின் நாமம் கேட்கக் கேட்க செவியும் மனதும் நிறைந்துதான் போகிறது.நன்றி திராச.
ஷைலஜா

தி. ரா. ச.(T.R.C.) April 21, 2007 9:45 PM  

@ராமனாதன். ஆமாம் கிருஷ்ணாவும் சரி எம்.ஸ் அம்மாவும் இந்தப்பாடலை மிக உருக்கமாகப் பாடுவார்கள்.

திருமதி தாரா நடராஜன் பாடல்கள் புதியவை.திரு.ஓ.ஸ். அருண் தன் பஜனைப் பாடல்களில் பாடி பிரபலப்படுத்திவருகிறார்.

தி. ரா. ச.(T.R.C.) April 21, 2007 9:49 PM  

@ஷைலஜா. வுருகைக்கும் கருத்துக்கும் நன்றி.முருகன் பாடல் என்றால் தனிச்சுவைதான்.அதுவும் கந்தஸ்வாமி எந்தன் சொந்தஸ்வாமி ஆகிவிட்டதால் கொஞ்சம் அதிகம்.

Subbiah Veerappan April 23, 2007 3:43 PM  

பாடலும் அற்புதமாக உள்ளது! சர்வ அலங்காரத்துடன் முருகப் பெருமானின் திருவுருவமும் அற்புதமாக உள்ளது

பதிவிற்கு மிக்க நன்றி -தி.ரா.ச அவர்களே!

இலவசக்கொத்தனார் April 23, 2007 7:04 PM  

சாவேரி அலர்ஜியா? என்ன ஆச்சு இந்த மருந்துக்கு? நல்ல பாடறவங்க பாடினா, நம்ம் கிருஷ்ணா மாதிரி, சூப்பரா இருக்கும்.

ரொம்ப எளிமையான பாட்டு. நன்றி ஐயா.

தி. ரா. ச.(T.R.C.) April 26, 2007 11:16 AM  

திரு சுப்பையா. எங்கே இன்னும் அண்ணனை காணோமேன்னு நினைச்சேன். வந்துட்டீங்க முருகன் அருளால் நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) April 26, 2007 11:21 AM  

@இலவசம் சிலபேருக்கு சங்கீதமே அலர்ஜி. அதுக்கு மருத்துவர் தேவலை.சாவேரி ராகம் எம்.டி.ஆர் பாடிகேட்கவேண்டும்.அதிசயம் ஆனால் உண்மை. இதை எழுதிக்கொண்டு இருக்கும்போது நெய்வேலி சந்தானகோபாலன் சாவேரி "சங்கரி பக்த வசங்கரி சாவேரி ராகப் பிரியகரி" என்ற பல்லவி பாடிக்கொண்டு இருக்கிறார்.

rahini August 07, 2008 8:47 AM  

murukanai veendukinren thodaradum ungkal eluthu aattal.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP