Monday, August 31, 2015

திரு முருகா!


திரு முருகா, அருள் தரும் முருகா

அருள் முருகா, திரு மால் மருகா

(திரு முருகா)



நீல மயில் மீதில் ஏறி வரும் முருகா

வேலைக் கையில் ஏந்திப் பகை அறு முருகா

(திரு முருகா)



ஆறு மலர் மீதினிலே தவழ் முருகா

ஆறு முக மாகி வந்து அருள் முருகா

ஆறெ ழுத்து மந்தி ரத்தில் உறை முருகா

ஓமெ ழுத்தின் உட் பொருளை உரை முருகா

(திரு முருகா)


--கவிநயா

Monday, July 27, 2015

பச்சை மயிலோடு பழகுபவன்!

 

பச்சை மயிலோடு பழகும் வடிவேலவனே
இச்சை கொண்டழைத்தேன் அருகே வருவாய் குகனே!
(பச்சை)

நச்சுப் பாம்பணிந்த பிச்சாண்டியின் மகனே
பட்சம் கொண்டெந்தன் பக்கம் வா குகனே
அச்சம் தவிர்த்தெனக்கு அபயம் தந்திடுவாய்
சிட்சித் தருளிடவே சீக்கிரம் வந்திடுவாய்!
(பச்சை)

மெச்சி உனைப் பாட முத்தமிழ் தந்திடுவாய்
கெச்சை ஒலித்திடவே இக்கணம் வந்திடுவாய்
பிச்சி உமையாளின் பேறு பெற்ற திருமகனே
உச்சி முகர்ந்துன்னை அணைத்திட வருவாய் குகனே!
(பச்சை)


--கவிநயா 

 

Monday, July 13, 2015

மெல்லிசை மன்னர், "தெய்வத்திரு" MSV..

இப்ப தான் மருத்துவமனையில் இருந்து, என்னை இல்லம் கொண்டாந்து சேர்க்கிறான் நண்பன்..
வீட்டுக்கு வந்ததும், இணையத்தில், MSV மறைந்துவிட்டார் எனும் செய்தி:(

மெல்லிசை மன்னரும், திரையிசைச் சக்கரவர்த்தியுமான = MSV!


என்னவா முருகா, அப்பா பெருமாளே
பணிவே உடலான இந்த "மெல்-இசையை",
உன் பத மலர் நீழலில் ஆழ்த்தி, அமைதியும்+அன்பும் கொடு!

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் MSV புகழ் பாடுங்களே!

தேவனை, இவரைப் பாருங்கள்; இவர் இசை தன்னை வாங்கிக் கொள்ளுங்கள்!
--

தமிழ்த் தாய்க்கு இசை தந்த மெல்லிசை மன்னவா,

தமிழ்த் தாய் வாழ்த்து உள்ளளவும்..
எழாதாரும், உன் இசைக்கு எழுந்து நிற்கத் தான் வேண்டும்!
அழிவு உன்னை அண்டாது! வாழி நீ..


கையில் Drips கட்டி உள்ளதால், ஒரு கையால் அதிகம் எழுத முடியலை.. மன்னிக்கவும்! பிறிதொரு நாள், MSV-முருகன் பாடல்களை இங்கு கிழமை தோறும் இடுகிறேன்;
இப்போதைக்கு.. இந்தப் பாடல் = வருவான் வடிவேலன்; வரிகள்: http://muruganarul.blogspot.com/2013/07/varuvaanvadivelan.html



MSV-யை இழந்து வாடும், அவர் மகன்களுக்கும்/மகள்களுக்கும்
மூன்று தலைமுறை மெல்லிசை ரசிகர்களுக்கும்
முக்குயில்கள், சுசீலாம்மா + ஜானகி + வாணி ஜெயராமுக்கும்
என் தனிப்பட்ட அளவில்.. தோழன் இராகவனுக்கும், நண்பர் இராம் அவர்களுக்கும் (MSV Times நெறியாளர்).. நெஞ்சார்ந்த இரங்கல்!


முருகா,
நீயும் ஒரு முறை, எங்கள் MSV-யைப் பணிந்து, வணங்கிக் கொள்!
இசைத்திரு MSV, இன்று.. தெய்வத்திரு MSV ஆகிவிட்டது..

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே!
--

*Various Murugan Songs of MSV
http://muruganarul.blogspot.com/search/label/MSV?m=1

*Various Kannan songs of MSV
http://kannansongs.blogspot.com/search/label/MSV?m=1

Monday, June 29, 2015

காப்பாற்ற வா!

கந்த வடிவேலா காப்பாற்ற வாவா
செந்தில் வடிவேலா சீக்கிரமாய் வாவா!

ஆறுமுக வேலனுன்னை
அண்டியவர் கோடியுண்டு
வண்டுவிழி வள்ளியுடன் வாவா, முருகா
தேவயானை தேவியுடன் வாவா!

பக்தர்களைக் காக்கவென்று
பச்சை மயில் ஏறிக் கொண்டு
சக்திசிவ பாலகனே வாவா, எங்கள்
வெற்றிவடி வேலவனே வாவா!

வேதனைகள் தீர்க்கவென்று
வேலெடுத்து ஏந்திக் கொண்டு
மாலவனின் மருமகனே வாவா, எழிற்
கோலமயில் ஏறியிங்கு வாவா!

கான இருள் விரட்டி விட்டு
ஞானந் தர வேண்டுமென்று
தந்தைக் குபதேசித்தவா வாவா, எங்கள்
சிந்தையிலே வந்து அருள் தாதா!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.trinethram-divine.com/2011/09/arumughan.html


Monday, June 01, 2015

Happy Birthday முருகா! (Jun 01, 2015)

இன்று, (Jun 1, 2015) = வைகாசி விசாகம்!

முருகன் பிறந்த நாள்.. (தோற்ற நாள்)
(சம்ஸ்கிருத புராணக் கதைப்படி; தமிழ்த் தொன்மங்களின் படி அல்ல)

எனினும் பிறந்த நாள் மகிழ்ச்சி-ன்னாலே ஒரு மகிழ்ச்சி தானே?
அதனால், பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கறேன்..

Happy Birthday முருகா!
Sweet & Sensual Kisses to you:)
நீ நல்லா இருக்கணும்;
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க!

வேதம் தமிழ் செய்த மாறன், நம்மாழ்வார் (எ) 32 வயசு நாயகி பாவப் பையனுக்கும்...
இன்று தான், உன் கூடவே பிறந்தநாள்! அவனு(ரு)க்கும், பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அடியார்கள்... வாழ்மின் வாழ்மின் என்று அருள் கொடுக்கும்
படிக்கேழ் இல்லாப் பெருமாளை...... பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துள், திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார், வீற்றிருந்து, பெரிய வானுள் நிலாவுவரே!




படம்: கந்தன் கருணை
குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி, & சூலமங்கலம் ஜெயலட்சுமி & ஜமுனா ராணி & ஏ.பி. கோமளா
இசை: கே.வி. மகாதேவன்
வரி: கண்ணதாசன்


ஆறுமுகம் ஆன பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன், முருகன் எனும், இனியபெயர் கொண்டான்!

காலமகள் பெற்றமகன் கோலமுகம் வாழ்க!
கந்தன் என, குமரன் என, வந்தமுகம் வாழ்க!
(ஆறுமுகம் ஆன பொருள்)

1. தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று
2. தண் நிலவின் சாறு எடுத்து வார்த்த முகம் ஒன்று
3. பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று
4. பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று
5. வேல் வடிவில் கண் இரண்டும் விளங்கு முகம் ஒன்று
6. வெள்ளி ரதம்போல வரும் பிள்ளை முகம் ஒன்று
(ஆறுமுகம் ஆன பொருள்)


என்னைக்கும் கேட்காதவன், போன வாரம், உன்னிடம், தெரியாத்தனமா உதவி-ன்னு கேட்டுட்டேன்-டா; 
இனி கேட்க மாட்டேன்; உன்னால முடியாத போது, Will never put you into embarrassment.
உதவி வேணாம்; உன் பதவி போதும்; பதம் எனும் பதவி போதும்!

நீ வேண்டாயே ஆயிடினும், மற்றாரும் பற்றில்லேன்
மெய்த்துயர் வீட்டாவிடினும், சித்தம்மிக உன்மேலே வைத்தேன் அடியேனே.. 

Whatever..
Love u so much
Happy Birthday!

Wednesday, May 27, 2015

கந்தன் வந்தான், கந்தன் வந்தான், வள்ளிமலை மேலாக!


முருகனருள் வலைப்பூ அன்பர்களுக்கும் + குழுவினர்க்கும், நெடுநாள் கழித்து நெஞ்சார்ந்த வணக்கம்!



வள்ளிமலை = என் உள்ள மலை!
எங்கள் வடார்க்காடு மாவட்டத்திலேயே உள்ளது; வடுக நாட்டு எல்லை!

அறுபடைவீடுகள் போல் அதிக ஆரவாரம் இன்றி, ஆன்மீக வணிகம் இன்றி..
அவள்-அவன், சங்கத் தமிழ்க் காதலாய்..
"அவள் பாதம் வருடிய மணவாளா" என்று..
கோயிலை விட.. மலையும், குகையும்,  புனமும், முகடும்..அவங்க உயிர்க்காதலை உரசி உரசிப் பேசும்!

வாரியாரே, கோயில் பணி என்ற பேரில், அதிகம் கட்டடம் கட்ட அஞ்சி, மலையும் குகையுமாயே விட்டு விட்ட தலம்!
வள்ளி, மாயோனின் செல்ல மகள் என்பதால், தீர்த்தம்+சடாரியும், அவள்-அவன் சந்நிதியில் உண்டு; ஆங்கு, பார்ப்பனரல்லாத பூசகர் தான்!

அந்த வள்ளிமலைப் பாடலை இன்று தருகின்றேன்; சினிமாப் பாடல் தான்:)
ஆனால் சுவையான பாடல்; வரலாற்றுச் சிறப்பு மிக்கது!

இன்று May 27!
தோழன் இராகவன் (எ) ஜிரா பிறந்தநாள்  -  Happy Birthday Ragava!
அவன் உடல்-உள்ள நலம் வேண்டி..
உங்கள் வாழ்த்து வேண்டி, ஆசி வேண்டிப் பணிகின்றேன்.




தமிழ்ச் சினிமாவில்..
இசையமைப்பாளர்கள் கூட்டு சேர்ந்து இசையமைத்த சிற்சில படங்கள் உண்டு!
இயக்குநர்கள் கூட்டு சேர்ந்து, இயக்கிய சிற்சில படங்களும் உண்டு!

ஆனால், இசையமைப்பாளர்கள் & இயக்குநர்கள்?
"இருவருமே" கூட்டு சேர்ந்து, அளித்த படங்கள், மிகவும் சொற்பம்!
அவற்றுள் ஒன்று.. தெய்வத் திருமணங்கள் என்ற படம்!
3 இசையமைப்பாளர்கள் + 3 இயக்குநர்கள்

மீனாட்சி கல்யாணம்  =  இசை: KV மகாதேவன்,    இயக்கம்: P. நீலகண்டன்
வள்ளித் திருமணம்    =  இசை: GK வெங்கடேஷ்,  இயக்கம்: K.காமேஸ்வர ராவ்
திருமால் திருமணம்  =  இசை: MSV                      இயக்கம்: கே.சங்கர்

ஆனால் பாடல்கள் + வசனம் = கண்ணதாசன் ஒருவர் மட்டுமே!
பாடலைப் பார்ப்போமா?
என் மனங் கவர் ஸ்ரீதேவி, வள்ளியாய் நடித்த காட்சிகள்.. In my fave Violet dress:)


படம்: தெய்வத் திருமணங்கள்
வரி: கண்ணதாசன்
குரல்: S. ஜானகி
இசை: GK வெங்கடேஷ்



கந்தன் வந்தான், கந்தன் வந்தான்..
வள்ளிமலை மேலாக..
துள்ளி வரும் வேலாட..

புள்ளி மயில் வேலன் - அவன் மங்கை உமை பாலன்
பூஞ்சிட்டுக் பெண்ணிடத்தில் காதல் கொண்ட சீலன்
பொன்னழகு மின்னலிட வெற்றி கொண்ட வீரன்!
(கந்தன் வந்தான், கந்தன் வந்தான்)

ஆறு பதினாறு, வடிவேலன் வரலாறு
ஐந்து படை வீடு கொண்டான் - பேர் கொண்டான்
மேலும் ஒரு வீடு - நான் காண வேண்டும் வேலா
ஆசை ரொம்ப நாளாய் - அதைத் தீர்த்து வைப்பாய் வேலா

செந்தூரின் போர் வீரனே - என்
செந்தூரம் உன் கையிலே!
சேவல் கொடி போட்டு - உன்
திருமுகத்தைக் காட்டு!
(கந்தன் வந்தான், கந்தன் வந்தான்)

மை எழுதும் கண்ணில், உன்
மெய் எழுதிப் பார்த்தேன்
மந்திரத்தின் குருநாதனே! நாதனே!

மஞ்சள் முக வள்ளி - என்றும் உன் பெயரைச் சொல்லி
ஆடுகிறாள் துள்ளி - அவள் கொள்வதில்லை பள்ளி..

சிங்கார வடிவேலனே - என்
சிங்காரம் உனக்கல்லவா!
இந்த மலைக் குறத்தி, உன் இதயத்தில் ஒருத்தி!
இந்த மலைக் குறத்தி, உன் இதயத்தில் ஒருத்தி!
(கந்தன் வந்தான், கந்தன் வந்தான்)

குறிப்பு:
இதே போல், இந்தப் படத்தில், S. ஜானகி பாடிய நாட்டுப்புறப் பாட்டு..
வள்ளி ஆலோலம் பாடுவதாய் - "வெத்தலைக் கிளியே, சொல்லாதே வெளியே, ஓடி வா, ஓடி வா" என்ற பாட்டு மிக்க அழகானது.

*சுசீலாம்மாவும் பாடியுள்ளார்கள், MSV இசையில், அதி அற்புதமான பாடல், "வானமும் பூமியும் ஆலிங்கனம்"
*வாணி ஜெயராமின், "திருமாலே.. சீராரும் மணிவண்ணா", KV மகாதேவன் இசையில், Super Hit பாடல்!
*"தங்கம் வைரம் நவமணிகள்" என்ற பாடலும் வாணி ஜெயராம் தான், பாலமுரளி கிருஷ்ணாவுடன் இணைந்து!

பாடகர் நட்சத்திரப் பட்டாளம், நடிகர் நட்சத்திரப் பட்டாளம், இயக்குநர் பட்டாளம்.. என்று மெய்யாலுமே இந்தப் படம் ஒரு கல்யாண வீடு தான்!


வாரியார், மிகவும் நேசித்த தலம் = வள்ளிமலை!

அவரைக் கால தாமதம் செய்து, அரியலூர் இரயிலில் செல்ல விடாது, இரயில் விபத்திலிருந்து காத்துக் குடுத்த தலம் = வள்ளிமலை!
இதை வாரியாரே பலமுறை சொல்லுவார், "முருகன் பணிக்காக, வள்ளியை நொந்து கொண்டேன்; ஆனால் காப்பாற்றியதென்னவோ, அவள் தான்"


வாரியாரின் சொந்த ஊரான வேலூர்-காங்கேய நல்லூரில் இருந்து, எங்கள் கிராமத்தைத் தாண்டித் தான், குப்பு ரெட்டித் தாங்கல் வழியாக, வள்ளிமலைக்குப் போகணும்.

தெலுங்கு நாட்டின் எல்லை என்பதால், தமிழோடு, தெலுங்கும் அதிகம் உண்டு;

குப்பு ரெட்டித் தாங்கலில் தான் அத்தை-மாமா சில காலம் தங்கியிருந்தார்கள், கிராம நிர்வாக அதிகாரியாக! (VAO)
அப்போ, சிறுபிள்ளை இரகசியக் காதலாய், எனக்குப் பிடித்துக் கொண்ட வள்ளிமலைக் காதல்.. இன்னும் இறங்கலை; என்றும் இறங்காது!

வாரியார், மிக அதிகமான காட்சிகளில் "நடித்த" ஒரு சினிமா= துணைவன்!
அதன் காணொளியும் தருகிறேன்; சும்மா கண்டு மகிழுங்கள்:)




வள்ளிமலைக்குச் செல்ல வேண்டிய நேர்த்திக் கடன் ஒன்னு இருக்கு!
சேர்ந்து செல்லணும்!
வள்ளி வாழ்ந்து புழங்கிய இடங்களைக் காணணும்!


முருகன் எ. குறிஞ்சி நிலப் பையனுக்காகவே..
நடையாய் நடந்து, பாதம் தேய்ந்த வள்ளி - பாதம் வருடிய மணவாளா!

அவன் ஏற்றுக் கொள்வானா? என்று கூடத் தெரியாது..
பேசவும் இல்லாது, பார்க்கவும் இல்லாது..
வந்த பல ஆணழக-மணாளர்களை விலக்கி,
அவன் ஒருவனுக்காகவே வாழ்ந்து முடிந்த வள்ளி!

அவள், முருகனை விட உயர்ந்தவள்/பெரியவள்! - பெரிதினும் பெரிது கேள்!

Once again,
Happy Birthday Ragava! மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Tuesday, May 26, 2015

கந்தனென்று சொல்லச் சொல்ல...


பாகேஸ்வரி ராகத்தில் சுப்பு தாத்தா பக்தியுடன் பாடியது... மிக்க நன்றி தாத்தா!



கந்தனென்று சொல்லச் சொல்லக் கவலைகள் இல்லை, அந்தக்
கந்தன் அருள் பெறுவதுவே வாழ்க்கையின் எல்லை!
(கந்தனென்று)

சிந்தனையில் கந்தனை வை
கந்தனையே வந்தனை செய்
கந்தனன்றி சொந்தமில்லை பந்தமுமில்லை, அவன்
கஞ்ச மலர்ப் பாதமன்றி தஞ்சமுமில்லை!
(கந்தனென்று)

கவலைகளை விட்டு விடு
கந்தனடி பற்றி விடு
ஆறெழுத்து மந்திரத்தை நாளும் சொல்லிடு, அந்த
ஆறுமுகன் துணையிருப்பான் நீயும் நம்பிடு!
(கந்தனென்று)

திருப்புகழின் நாயகனாம்
தீயுதித்த ஷண்முகனாம்
விருப்புகளை அவனிடத்தில் தந்து விட்டாலே, நம்மை
வேல் கொண்டு காத்திடுவான் வாழ்க்கை எல்லாமே!
(கந்தனென்று)


--கவிநயா 

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP