Thursday, October 27, 2011

1) திருப்பரங்குன்றம்: தந்தியின் கொம்பைப் புணர்வோனே!

முருகனருள் வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்!
தீபாவளி, அமாவாசை நோன்பு (கேதார கெளரி) முடிந்து...
இதோ கந்த சஷ்டி விழா துவங்கி விட்டது!

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பொருளில் (Theme) சஷ்டி இடுகைகள் இடுவது வழக்கம்!
* 6 நாளும் = தமிழ்ச் சினிமாவில் முருகன்
* 6 நாளும் = அறுபடை வீடு- குறிப்புகள்
என்று முந்தைய ஆண்டுகளில் பார்த்தோம்! இந்த ஆண்டு என்ன?

எனக்குத் தனிப்பட்ட சில நெருக்கடிகள்.....
அதனால், அதிகமாயும் இல்லாது, அதே சமயம், என் முருகனுக்கு குறைவாயும் இல்லாது...
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு படைவீட்டுத் திருப்புகழை இடுகிறேன்!
* 6 நாளும் = 6 படைவீட்டுத் திருப்புகழ்கள்!

மிக எளிமையான, சின்னத் திருப்புகழாப் பார்த்து இடுகிறேன்! மனப்பாடம் செய்து கொள்ள, இது அருமையான வாய்ப்பு!
வாங்க ஓடலாமா....முதல் படைவீட்டுக்கு? என்ன ஊரு அது?



திருப்பரங்குன்றம்!

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலம் துஞ்சித் திரியாதே
கந்தன் என்று உற்று உனைநாளும்
கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றில் பெருமாளே!

என்ன...எளிமையான பாட்டு தானே!
எட்டா வரி அல்ல! எட்டே வரி!
மனப்பாடம் பண்ண எளிது! ரொம்பச் சந்தமோ...நாலு நாலா பத்திகளோ இல்லாம, ஒரே பத்தியில்...முத்தைத் தரும் பத்தியான பாடல்!



பொருள்:

சந்ததம் பந்தத் தொடராலே = எப்பவும், பந்த பாச மயக்கத்தால், அன்பு எனும் அலையில் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறேன்!
சஞ்சலம் துஞ்சித் திரியாதே = தூக்கத்திலும் துன்பப்பட்டுத் திரிகிறேன்!

கந்தன் என்று உற்(று) உனைநாளும் = கந்தாஆஆஆ ன்னு உன்னோடு உறவாடி
கண்டுகொண்டு அன்பு உற்றிடுவேனோ = மனசாற, உடம்பாற...நான் உன்னைப் பார்க்கணும்!
அந்த ஆழ்மனசு அன்பை உனக்குக் குடுத்து, உறவாடணும் போல இருக்கு, முருகா!

தந்தியின் கொம்பைப் புணர்வோனே = ஐராவதம் என்னும் யானை (தந்தி) வளர்த்த கொழு கொம்பு = தேவானை அம்மை! அவளைப் புணர்வோனே (சேர்வோனே)
சங்கரன் பங்கிற் சிவைபாலா = சங்கரன் பங்கிலே சங்கரி! அவன் சிவன்-ன்னா இவள் சிவை! அதனால் நீ சிவ-பாலன் & சிவை-பாலன்!

செந்திலங் கண்டிக் கதிர்வேலா = செந்தில்(திருச்செந்தூர்), கண்டிக் கதிர்காமம் ஆகிய புகழ் மிக்க ஊர்களில் உள்ளவனே!
தென்பரங் குன்றில் பெருமாளே = தென் மதுரையில்...பரங்குன்றம்...அதில் விளங்குகின்ற பெருமானே!


எந்த ஊருக்கும் இல்லாத பெருமை = மதுரைக்கு உண்டு!
அறு படையிலே, இரு படைகளைக் கொண்டது!
* முதல் படைவீடு = திருப்பரங்குன்றம்
* கடைசிப் படைவீடு = பழமுதிர் சோலை
இப்படிப் படைவீடுகளைத் துவக்கியும் முடித்தும் வைக்கிற பெருமை = மதுரைக்கு உண்டு!

என் இங்கித மணவாளா, முருகா...
உனக்கு நான், எனக்கு நீ...
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு...

உன்னோட இந்தப் படத்தையே, வாழ்த்துப்படமாக, ஈராண்டுக்கு முன்பு அனுப்பி வைச்சேனே! திருப்பரங்குன்ற முருகா....அதற்கு ஈடாக, எனக்கு நீ தந்தது இது தானோ?
தந்தியின் கொம்பைப் புணர்வோனே!
என் காதலை நீயும் புணர்வாயே!

(சஷ்டி - முதல் நாள் - நிறைந்தது)


From yester year posts.....
* 2007 சஷ்டிப் பதிவுகள்
* 2008 சஷ்டிப் பதிவுகள்
* 2009 சஷ்டிப் பதிவுகள்
* 2010 சஷ்டிப் பதிவுகள்



முன்பு பதிவிட்ட, திருப்பரங்குன்ற ரகசியங்கள் இதோ:
திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயில்!
குகைக்குள்ளே கருவறை என்பதால் சுற்றி வர முடியாது! மேலே விமானமும் இல்லை!
பல கோயில்களில் முருகன் நின்ற நிலையிலேயே இருக்க...இங்கு மட்டுமே அமர்ந்த நிலையில் முருகன்!

* முருகன் திருமணக் கோலத்தில் பீடத்தில் அமர்ந்து இருக்க...
* கீழே ஒரு புறம் மணப்பெண் தேவயானை அமர்ந்து இருக்க...
* மறுபுறம் நாரதர்.....திருமாலின் சார்பாகப் பெண் கொடுக்கும் பாவனையில்!
(இந்திரன் என்று சொல்வாரும் உண்டு! ஆனால் முனிவர் போல் தாடியும் உண்டு)

மேலே பறப்பது போல் பிரபையில் சூரிய சந்திரர்கள்!
விளக்கொளியில் இன்னும் நுட்பமாகக் கருவறையை நோக்கினால் விநாயகர், அசுவினி குமாரர்கள், அமரர்கள் என்று பலரும் உண்டு!
மிக முக்கியமாக துர்க்கை அன்னையும், சிவபிரானும், பெருமாளும் கருவறையில் உள்ளார்கள்! இப்படிச் சுற்றம்சூழ திருமணக்கோலமாகக் கருவறை உள்ளது!

* இங்கு முருகனுக்கு அபிடேகம் (திருமுழுக்கு) கிடையாது! அனைத்து அபிடேகங்களும் திருக்கை வேலுக்கே!

* திருப்பரங்குன்ற மூலவர் சிவபெருமானே! விழாக்களிலும் நந்தியின் கொடியே ஏற்றப்படும்!



* கொடிமரத்தின் முன்பு மூன்று வாகனங்களையும் ஒரு சேரக் காணலாம்!
எலி, நந்தி, மயில் என்று மூன்றும் முன்னிற்கும்!
அதைத் தாண்டி உள்ளே நுழைந்ததும்....அனைத்து தெய்வங்களுக்கும் அவரவர் சன்னிதிகளைக் காணலாம்! எல்லாமே குட்டிக் குட்டிக் குறுகலான குடைவரைகள் தான்!

* சிவபெருமான் = பரங்கிரி நாதராய் எழுந்தருளியுள்ளார்! அம்மை = ஆவுடை நாயகி. திருப்பரங்குன்றத்து ஈசனைச் சம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தேவாரத்தில் பாடியுள்ளனர்!
* திருப்பரங்குன்றத்தில் பவளக்கனிவாய்ப் பெருமாளும் உண்டு! அழகருக்குப் பதிலாக, மீனாட்சி திருமணத்தில் இவரே கலந்துகொண்டு, அன்னையை, ஈசனுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது!

* நக்கீரர் திருமுருகாற்றுப்படையைச் செய்ததும் இங்கு தான்!




* திருமாலின் விழிநிறைப் புதல்வியர் அமிர்தவல்லி, சுந்தரவல்லி! முருகனை மனதார விரும்பினர்! அவனை அடைய வேண்டிச் சரவணப் பொய்கையில் தவம் இருந்தனர்!
ஆனால், அவதார நோக்கம் நிறைவேறிய பின்னரே, தான் அவர்களை மணக்க முடியும்-ன்னு சொல்லி, பிறவியெடுத்துக் காத்திருக்கச் சொல்லி விட்டான் முருகன்!

அதன்படி...அமிர்தவல்லி, அமரர் தலைவன் இந்திரனின் ஊரிலே, கற்பகச் சோலையில் தோன்றி, ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்படுகிறாள்!
சுந்தரவல்லி, தினைப்புனத்தில் வள்ளிக்குழியில் பிறந்து, வேட்டுவ நம்பியால் வளர்க்கப்படுகிறாள்! முருகனையே எண்ணியெண்ணி வாழ்வில் நடந்தே தேய்கிறாள்!
தேவானை தேவ முறைமையோடு வளர, வள்ளியோ மானிடப் பிறவியாய்...முருகனே பித்தாகி, அவனே அவனே என்று உழல்கிறாள்!

சூர சங்காரங்கள் முடிந்த பின்னர், அமரேந்திரன் தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான்! சரவணப் பொய்கையில் முன்னர் தாம் கொடுத்த வாக்கின் படியே, தேவானை அம்மையைப் பரங்குன்றில் மணக்கிறார்.
அவ்வண்ணமே, வள்ளி அம்மைக்கு கீழிறங்கி வந்து, பொய்க் காதல் நாடகங்கள் ஆடி, வள்ளியை வேட்டு, திருத்தணிகையில் மணம் புரிகிறார்
.
இருவர் காதலையும் போராடிப் பெற்றே மணமும்-மனமும் களிக்கின்றான் முருகன்!
முன்னது போர்க்களப் போரின் பரிசு! பின்னது தினைப்புனப் போரின் பரிசு!

* பரங்குன்ற மலைமேலும் ஆலயம் ஒன்று உள்ளது. இஸ்லாமிய தலம் ஒன்றும் உள்ளது.
அல்-சிகந்தர் என்றும் செகுந்தர் என்றும் சி-கந்தர் என்றும் கொண்டாடுகிறார்கள்.
முருகனின் தோழராகக் கருதப்படுகிறார். கதிர்காமத்தில் காணப்படுவதும் இவரே!
ஆனால் அண்மைக் காலங்களாக, கார்த்திகை தீபத்தின் போது, மதப் பிரச்சனைகள் கிளம்புகின்றன. இத்தனை ஆண்டு கால ஒற்றுமையை ஊதி அணைப்பதும் தகுமோ?

* திருப்பரங்குன்ற ஆலயத்தில் இருப்பது முருகனே அல்ல! அது ஒரு சமணத் தெய்வம், (அ) ஜேஷ்டா தேவி! இறைவனின் முகத்தில் பெண் சாயல் தெரிகிறது என்று ஒரு பிரச்சனையும் கிளம்பியது.

தரமுள்ள ஆதாரங்கள் ஏதுமின்றி, திருப்பதி-திருமலையில் இருப்பது முருகன் தான் என்று முன்பு கிளப்பி விட்டதைப் போலவே, பரங்குன்றத்து இறைவன் முருகன் அல்லன் என்றும் கிளப்பி விடப்பட்டது.
குகைகள் எப்பமே சமணர்கள் தான் சமைப்பார்கள், எனவே இது சமணத் தலம் என்று வீண் வாதங்கள் எழுந்து அடங்கின. இது பற்றி ponniyinselvan.in-இலும் சில இழைகள் ஓடின!

* திருப்பரங்குன்றின் பிரபலமான திருப்புகழ்கள் சில இதோ:-
- கருவடைந்து பத்துற்ற திங்கள்
- சந்ததம் பந்தத் தொடராலே
- மன்றல் அம் கொந்து மிசை
- உனைத் தினம் தொழுதிலன்


4 comments:

jeevan October 27, 2011 4:14 PM  

அருமையான பதிவு, படித்து மகிழ்ந்தேன். அரோகரா

குமரன் (Kumaran) October 27, 2011 5:01 PM  

இன்று காலையில் தான் கண் விழித்தவுடன் இந்தப் பாடல் மனத்தில் ஓடியது. ஏனென்று தெரியாமலேயே. அந்த அதிகாலைச் சூழலில் வீட்டினர் அனைவரும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க கீழே வந்து மெதுவான குரலில் ஒவ்வொரு வரியாகப் பாடி மகிழ்ந்தேன். இன்று சஷ்டி விரதம் துவக்கம் என்பதே நினைவில்லை. இந்த இடுகையைக் கண்டு தொடர்பை எண்ணி வியந்தேன். :-)

நன்றி இரவி! அனைத்து நலங்களும் பெருகட்டும்!

இராஜராஜேஸ்வரி October 28, 2011 2:10 PM  

இருவர் காதலையும் போராடிப் பெற்றே மணமும்-மனமும் களிக்கின்றான் முருகன்!
முன்னது போர்க்களப் போரின் பரிசு! பின்னது தினைப்புனப் போரின் பரிசு!/

பகிர்வே பரிசாய் அருமையாய் இருக்கிறது. பாராட்டுக்கள்..

cheena (சீனா) October 29, 2011 5:08 AM  

அன்பின் கேயாரெஸ்

அருமையான இடுகை - சஷ்டியின் போது - முருகனைப் பற்றிய இடுகை. அறுபடை வீட்டுத் திருப்புகழ்கள் - ஆறு நாளும் - நன்று நன்று.

படை வீடுகளைத் துவக்கியு7ம் முடித்தும் வைக்கிற பெருமை எங்கள் மதுரைக்கு உண்டு - நல்ல கருத்து.

அமர்ந்த நிலையில் முருகன் - துர்க்கை அன்னையும், சிவபிரானும், உடனிருக்க, மாமனாகிய பெருமாளும் அருகிருக்க, அண்ணன் விநாயகன் வாழ்த்துகளோடு திருமணக்கோலம் கருவறையில் காண்பது அரிய செயல். நக்கீரன் திரு முருகாற்றுப் படை செய்த தலம்.

போர்க்களப் பரிசாக ஒன்று - தினைப்புனப் பரிசாக ஒன்று. கொடுத்து வைத்தவனைய்யா முருகப் பெருமான்.

சமணக் கோவிலா - சர்ச்சைகளூம் மதப் பிரச்னைகளூம் வரத்தான் செய்யும்.

நல்லதொரு இடுகை கண்டு மகிழ்ந்தேன் - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் கேயாரெஸ் - நட்புடன் சீனா

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP