நாளை வருமென்று நம்பலாமா?
கீதையில் ஓரிடத்தில் கண்ணன் இவ்வாறு கூறுவான்: இறக்கும் தருவாயில் என்னை நினைப்பவருக்கு நான் மோக்ஷம் தருகிறேன்.
மேலோட்டமான பொருள் என்ன? இருக்கும் வரை என்ன வேண்டுமானாலும் செய்வோம் இறக்கும்போது கண்ணனை நினைப்போம். நமக்கு மோக்ஷம்.
ஆனால் இதில் இரு சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று: இறப்பு எப்போது வரும் என்று தெரியாது. இன்னொன்று வாழும்போது செய்யாத ஒன்றை இறக்கும் தருவாயில் செய்வது முடியாத ஒன்று. பரிட்சைக்குப் படிக்காமலேயே சென்று தேறி விடவேண்டும் என்று நினைப்பவரின் செயலை ஒத்தது. நன்கு படிதாலுமே சமயத்தில் காலை வாரி விட்டுவிடுகிறது:-))
இந்த இரு காரணங்களுக்காக நாம் பரம்பொருளை இன்றே, இப்போது நினைக்க ஆரம்பிக்க வேண்டும். நாளை என்ற ஒன்றை நம்பலாகாது. ஒன்றே செய் நன்றே செய் இன்றே செய் என்று ஔவை கூறியதையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம்.
மதுரை ஜி எஸ் மணியின் அருமையான பாடல். முதலில் பாடலைப் பார்த்துவிடுவோம்.
நாளை வரும் என்று நம்பலாமா?
நாளை வரும் என்று நம்பலாமா?
குகன் தாளைப் பணிந்தருள் பெறவேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா?
வேலைப் பிடித்த கந்தவேளை மனமுருகிக்
காலை மாலை ஒருவேளையும் துதிக்காமல்
நாளை வருமென்று நம்பலாமா?
குகன் தாளைப் பணிந்தருள் பெறவேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா?
அழகான வாலிபம் அணங்குடனே தீரும்
திரண்டு வரும் நேரம் கவலை பல சூழும்
திருமுருகன் நாமம் நினைக்க நேரமில்லை
மறுபிறவி என்பது எங்கோ தெரியவில்லை
நாளை வரும் என்று நம்பலாமா?
குகன் தாளைப் பணிந்தருள் பெறவேண்டாமா?
வேல் – வேல் என்ற ஆயுதம். வேள் – அழகன். வேலிருப்பதால்தான் அவன் வேள். வேல் என்பது புறக்கண்ணுக்குத் தெரியும் வேல் என்ற ஆயுதத்தை மட்டும் குறிக்காது தகப்பன் சுவாமி என்று பெயர் இலங்கும்படி ஆழ அகலக் கற்றவன் வேலன் என்பதையும் உள்ளடக்கியதாகப் படுகிறது.
ஸ்தூல வேல் திருமேனி அழகையும், சூட்சும வேல் (வேலின் தத்துவம்) திருவுள்ளத்தின் அழகையும் காட்டுகின்றன. வேலாம்படையின் முன் மற்றவை எல்லாம் நூலாம்படை என்று சில வார்த்தைகளில் வேலின் சிறப்பு பற்றிக் கவிஞர் வாலி தன் தமிழ்க்கடவுள் (கந்தபுராணம் புதுக்கவிதை வடிவில்) நூலில் கூறுகிறார்.
பகற்பொழுது காலையில் தொடங்கி மாலையில் முடிகிறது. முழு தினமும் கந்தனைப் பற்றி எண்ணாது இயந்திர வாழ்வின் நடைமுறைகளில் கழிந்து போனாலும் நாளின் தொடக்கத்தில் அல்லது முடிவில் மட்டுமாவது கந்தனை நினைவிற்கொள்ள வேண்டும்.
வாலிபத்தில் அவன் நினைவு இருப்பதில்லை. பிறகு கவலைகள் சூழ்ந்து கொண்டுவிடுகின்றன. அப்படியானால் கந்தனை நினைப்பதற்கு எதுதான் சரியான நேரம்? இப்போதே ஆரம்பித்து விடவேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
மறுபிறப்பென்பது எங்கோ தெரியவில்லை என்று வருவது விசேஷம். குகனின் அனுக்ரஹத்தால் மறுபடி பூவுலகில் மானிடப் பிறப்பெடுத்துக் கந்தன் பற்றிய பிரக்ஞை இருக்கும் பட்சத்தில் ஜென்மம் முழுதும் அவன் புகழ் பாடிக் களிக்கலாம். இல்லாத பட்சத்தில்? சுவர்க்கமே கிடைத்தாலும் அர்ச்சாவதார ரூபங்கள் கண்டு பாடிக் களிக்கும் ஆனந்தம் கிட்டாது. அதனால்தான் எங்கோ தெரியவில்லை என்று பாடினார். ‘அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரத்துளானே’, ‘மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று தொண்டரடிப் பொடியும் அப்பரும் பாடியதன் பொருள் இப்போது கொஞ்சம் புரிகிறது.
ஆகவே நாளை வரும் என்று நம்பாமல் இப்போதே குகன் தாளைப் பணிந்தருள் பெறுவோம்.
இந்தப் பாடலை சுதா ரகுநாதனின் குரலில் இங்குக் கேட்டு மகிழுங்கள். பாடலைக் கேட்க இன்னுமொரு சுட்டி.
7 comments:
\\அரங்கமா நகரத்துளானே\\
அரங்கமா நகருளானே என்று வரவேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்.
'அப்போதைக்கு இப்போதே சொல்லி வைப்பது' என்பது இதுதான் :) நன்றி கோபி.
முன்பதிவு.
on reading the third verse,i remembered the following 'bhajagovindam'verse[with my thamizh version}
பாலஸ் தாவத் க்ரீடாசக்த --ஸ்தருணஸ்தாவத்த ரூணிசக்தஹ
வ்ருத்தஸ்தாவச் சிந்தாசக்தஹ பரேப்ரும்ஹாணி கோபினசக்தஹா]
விளையாட்டில் சிறுவயதை கடந்தாய் ;
இளமையைச் சிற்றின்பத்திலிழந்தாய்;
முதுமையில் குடும்பக் கவலையில் கவிழ்ந்தாய்;
முழுமுதற்கடவுளை முற்றிலும் மறந்தாய்.
குகனை நினைப்பதற்கும் குகனருள் வேண்டும்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனத்
தேவாரம் சொல்லும்.
சுப்பு ரத்தினம்.
http://kandhanaithuthi.blogspot.com
“அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் நாராயணா” தான் கோபி.
நல்ல பதிவு.
கூடாது. நாளை வருமென நம்புதல் மடமை. அன்றாடம் விழித்தெழுந்து சாக்காடாம் உறக்கத்துள் புகும்முன் ஒருமுறையேனும் அவன்தாள் பணிந்திட விழைவோம். நாளென் செய்யும் வினைதான் என்செய்யும்?
Post a Comment