Monday, October 19, 2009

"கந்தன் கருணை" -- இரண்டாம் பாகம் - 1

"கந்தன் கருணை" -- இரண்டாம் பாகம் - 1

சென்ற ஆண்டு கந்தர் சஷ்டியின் போது எழுதிய "கந்தன் கருணை என்னும் இந்தத் தொடர் கவிதையை இதே போலவே தொடருங்க என நண்பர் ரவி சொல்லி இருந்தார்.
ஆனால், ஏதோ ஒரு உந்தலில் வேறுவிதமாக எழுத எண்ணம் வந்தது. அதைத்தான், 'புதுப்பொலிவுடன்' எனச் சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சியை இந்த ஆண்டு இங்கு அளிக்கிறேன்.
முருகனருள் முன்னிற்கும்.

முதல் பாகம் - 1
முதல் பாகம் - 2


"மனவேடன் காதல்!"

அழகிய திருத்தணி மலை! அதன் மீது முருகப்பெருமான் வலப்புறம் வள்ளியுடனும், இடப்புறம் தெய்வானையுடனும் கம்பீரமாக அமர்ந்திருந்தான்.
அடிபணிந்து தொழுது நின்றேன்.
முருகன் அன்புடன் எனைப் பார்த்து முறுவலித்தான். 'என்ன?' என்பதுபோல் கண்
சிமிட்டினான்.
"சூரனை வதைத்து அன்னை தேவசேனாவை மணந்தது வரை எழுதிவைத்தேன். வள்ளி அம்மையாரை தாங்கள் மணம் செய்த கதையைத்
தங்கள் திருவாக்கினாலே கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்" என்றேன் பணிவுடன்!
முருகன் சிரித்தான்!
"அதற்கென்ன! நானும் வள்ளியுமே சொல்கிறோம். கேட்டுக்கொள்!" என்றான்.
"முதலில் நான்தான் சொல்வேன்!" என தெய்வானை அம்மையார் முன்வந்தார்.
பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் துள்ளிக் குதித்தேன்!
அவர்கள் சொன்ன கதையை இங்கே பதிகிறேன்.
***********************************************

'மணமகள் கூற்று':

"பரங்குன்றான் பெருங்கருணை!"

கத்திவரும் சேவலது கொத்தவரும் பாம்பையெல்லாம் கொத்திக் கொத்திப் போடுது!
சீறிவரும் வேலதுவும் சீறிவரும் கொடும்பகையை சீறிப்பாய்ஞ்சு சிதைக்குது!
பறந்துவரும் மயிலதுவும் பறந்துவரும் கணைகளையும் பறந்துபறந்து மாய்க்குது!
கூடவரும் பூதப்படை கொடியவராம் அரக்கர்களை கொன்று சாய்த்துக் குவிக்குது!
என்னவனாம் முருகப்பன் கண்ணசைவில் கடிந்துவரும் பகையெல்லாம் பனியாக விலகுது!
மன்னவனாம் கதிர்காமன் மக்களையே காத்திடவே மனமிசைந்து வருகிறான்!
மனத்துள்ளே நிலைகொண்ட மகராசன் மனத்தினிலே மகிழ்ச்சி பொங்கச் செய்கிறான்!
சினமெல்லாம் தணிந்தபின்னே தேவியென்னைக் கைப்பிடித்து எனக்கிங்கே அருள்கிறான்!

'மனவேடன் கூற்று':

சினமெல்லாம் தணிந்திடவே வந்து நின்றேன் தணிகைமலை!
வருகின்ற அடியார்க்கு கேட்டவரம் தந்தபடி நின்றேன் சிலையாகி!
தெய்வயானை துணையிருக்க தமிழமுதம் பொங்கிவர களித்தேன் சிலநாளை!
என்நிலையை, ஏகாந்தம் குலைத்திடவே நாரதனும் வந்தான் எனைநாடி!

'வள்ளிமலை என்னுமொரு காட்டினிலே மலைக்குறத்தி உனையெண்னிப் பாடுகின்றாள்!
கள்ளமிலா உள்ளத்துடன் கன்னியவள் பரண்நின்று கவண்வில்லை வீசுகிறாள்!
கந்தனவன் சொந்தமென வருவானென வேட்டுவச்சி மனம்வெதும்பி வாடுகிறாள்!
உண்ணவில்லை! உறக்கமில்லை! உன்னையெண்ணிக் காடுமலை ஏறியவள் தேடுகிறாள்!

இப்போதே நீசென்று 'எண்ணத்தை மனம் நிறைக்கும்' கன்னியவள் துயர் தீரு!
தப்பாமல் நினக்கெனவே தவமிருக்கும் தனியாளின் தாகத்தைத் தணித்துவிடு!
தணிகைமலை அமர்ந்திருக்கும் நீயெழுந்து இப்போதே தவிக்கின்ற அடியாளைச் சேர்ந்துவிடு!'
எனச்சொன்ன நாரதனைக் கனிவோடு பார்த்திருந்து, கனிமொழியாள் முகம் பார்த்தேன்!

ஏறெடுத்து எனைப்பாரா ஏந்திழையாள் இப்போது நேரெடுத்து எனைப் பார்த்தாள்!
விழிமலரில் காதலுடன் விளக்கவொண்ணா பேரெழிலாள் எனைநோக்கி இது பகர்ந்தாள்!
"எல்லாம் அறிந்திருந்தும் எனைநோக்கிப் பார்க்கின்ற மர்மத்தை என்ன சொல்வேன்!
அங்கே தவமிருக்கும் மங்கைநல்லாள் என்னவளின் தங்கையென அறியாத கள்வனோ நீ!

யாமிருவர் நினைவேண்டி தவமிருந்த அன்றொருநாள் எமக்களித்த வரமின்று மறந்தனையோ!
தட்டாமல் இப்போதே தேவரீர் நீர் சென்று தங்கையினைக் கூட்டிவருக!
ஞானத்தின் வடிவழகாய் நாயகியாள் நானிருக்க, இச்சைக்கு வள்ளியென விதித்தவரே!
மோனத்தை வேலாக்கி ஆணவத்தை மயிலாக்கி அன்பரசு செய்கின்ற மன்னவரே!
' என்றாள்!

தனிவேலைத் தங்கவிட்டு, தங்கமகள் தெய்வானை தன்னிடத்தில் விடைபெற்று எழுந்தேன் நான்!
வனவேடன் வேடமிட்டு வனத்தினிடை செல்லுதலே நலமென்று நினைத்தந்த வேடம்பூண்டேன்!
காதல்மனம் கடிந்தேக, தாபமிங்கு பெருக்கோட தனிவேடனாய்த் தனியாளாய் நடந்தேன்!

காதலனைக் காணாமல் கனிமொழியாள் வருந்துகின்ற காட்சியினிக் காண்போம்!

அங்கே!....
'வனவள்ளி மனநிலை!'

வனவேடன் தலைவனிவன் நம்பிராஜன் என் தகப்பன் காடுநிலம் உழுகையிலே கண்டெடுத்தான் எனையங்கு.

மகளில்லாக் குறைநீங்க மகாதேவன் தந்தானென மகளாக வளர்க்கின்றான் குறையொன்றும் இல்லாமல்.

தினைப்புனத்தைக் காப்பதற்கே கவண்கல்லை கைதந்து பரண்மீதில் நிற்கின்றேன் மனமங்கு செல்லவில்லை.

ஆலோலம் பாடியிங்கு ஆரவாரம் செய்திருந்து நாடிவரும் புள்ளினத்தை நான் விரட்டிப் பாடினாலும்

நான் விரும்பும் மணவாளன் மலைக்குமரன் வாராமல் மனம்தவித்து வாடுகிறேன் கண்ணிரண்டால் தேடுகிறேன்.

மகிழ்ந்தென்னைக் கூட்டிடவே மலையரசன் தானென்று மகராசன் வருவானோ மனமள்ளிப் போவானோ?

தேடியவன் வருகின்ற திசைபார்த்து திசைபார்த்து கண்ணிரண்டும் பூத்ததுதான் கண்டதிங்கு பலனடியோ!

கீழிறங்கி கால்நடந்து காட்டுவழி மலைவழியே காதலனைத் தேடியிங்கு கால்கடுக்க நடக்கின்றேன்.

குத்துகின்ற முள்ளெதுவும் பாதத்தில் உறைக்கவில்லை பத்துகின்ற வெயிலதுவும் பாவியுடல் எரிக்கவில்லை.

கால்தவறி இடறிவீழ்ந்து மலைச்சரிவில் உருளுகின்றேன் கண்மயங்கி நாவறண்டு நினைவொழிந்து சரிகின்றேன்!

'மனவேடன் கூற்று':

'காடுமலை ஏறி, களைச்சு விழுந்தெழும்பி ஆற அமரத் தேடித்திரிந்தடைந்தேன் மரவடி .!

கண்ணை மூடிக் களைப்பின் அலுப்பினிலே அயர்ந்தே போனேன் சில நொடி! எழுந்து பார்த்த பின்னே உணர்ந்தேன்! ஆதரவாய் தடவிக்கொடுக்கும் ஒரு கரம்!
என்னை அணைத்தபடி தன்னுள் புதைத்தபடி அன்பாய் மறுகரம்!
கற்கள் உரசியதால் பாசி வழுக்கியதால் அங்கங்கே தேகத்தில் அடி!
அந்த வலியெல்லாம் தகர்த்து எறிவதற்கோ வந்தது இந்த அன்புப் பிடி?!!
"யாரது" எனக் கேட்க வலுவின்றிக் கொஞ்சம் மெளனித்து இருந்தேன்!

எழுப்பினால் மயக்கம் கலைந்து விலகிடுவாளோ என அஞ்சி மடிவைத்திருந்தேன்!

'வனவள்ளி கூற்று':

பசியின் களைப்பினில் பஞ்சணைத் துயிலினில் கண்ணை மூடிக்கிடந்தேன்!
"துயிலை விட்டெழுந்தால் விட்டுப்போய் விடுமோ இந்த மஞ்சம் என ஏங்கியது எனது நெஞ்சம்!

விழிக்க விருப்பமின்றி கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு கிடந்தேன் சில கணங்கள்!!
"பசியின் களைப்பினிலோ பாவை நீயும் களைத்தே போனாய் என்று
காதருகே வந்து தேனாய் ஒழுகி நின்று கேட்டது அந்தக் குரல்!

கொஞ்சம் விழித்தபடி அந்தக் கைகள் பிடித்தபடி அண்ணாந்து முகம் பார்த்தேன்!
கருணை பொழியும் அந்தக் கண்களினிலே பொங்கும் முகவழகில் வேர்த்தேன்!

'என்ன சொல்வதென்று ஏதும் அறியா வண்ணம் 'சுற்றும் முற்றும் அங்கு பார்த்தேன்!
'தடவிக்கொடுத்த படி தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் தரவோ?' எனக் கேட்டவுடன் பொங்கும் நீரென கண்ணில் நீர் வார்த்தேன்!

"அன்பை அறியா இந்தப் பேதைஉலகம் என்று எண்ணித்தானே தனியே வாழ்ந்தேன்!
காடே சுகமென்று இங்கு வந்து சேர்ந்தேன்! "அன்பால் அணைக்கின்றாயே!! யாரோ நீயென்று விழிகள் விரியக் கேட்டேன்!! ??


'மனவேடன் கூற்று' :

காடுமலை எனதரசு! நானலையும் மலைக்காடு! நாரியவள் நலிந்தங்கு மரத்தடியில் துயிலுகிறாள்!

மூடிநின்ற கண்களுக்குள் முழுமனதின் வேதனைகள் கொத்தாகப் படர்வதினால் விழியங்கு உருள்கிறது!

பொத்திவைத்த சோகமெலாம் மொத்தமாக விதிர்விதிர்த்து மூச்சுக்காற்று வழியாக முன்னெழும்பித் தவிக்கிறது!

பொங்குமுலைத் தனமெல்லாம் நெஞ்சினிலே கொண்ட துயர் தூக்கித் தூக்கிப் போடுவதால் தானாகக் குதிக்கிறது!

ஏதேதோ கனவுகளும் மனம் வதைத்துப் போடுவதால் மெல்லியலாள் மேனியெலாம் மேல்நோக்கி எழும்பிடுது!

சொல்லவொணா சோகமதை நெஞ்சினிலே தாங்கியவள் சோர்ந்தயர்ந்து தூங்கினாலும் நினைவலைகள் அவளையிங்கு தூங்கவிடச் செய்திடாத அவலத்தால் விசும்புதைக் கண்டு மனம் பொறுக்கவில்லை!

ஆதரவாய் அருகமர்ந்து அன்புடனே மடியெடுத்து மேல்துண்டை மெல விசிறி மேனியிலே துளிர்க்கின்ற வேர்வையதைத் துடைத்து விட்டேன்!

கையசைவில் காற்றுவர மேலிருந்த மரக்கிளையும் மெல்லியதோர் தென்றலதை மெதுவாக இதம்வீசி மங்கையிவள் வெப்பத்தை சற்றாகத் தணித்ததுவே!

மேகத்தை வரவழைத்து குளிரூட்டி பொழிந்திடவே மனதாலே பணித்திடவே, மெதுவான சாரலது இதமாகப் பொழிந்திடவே செவ்விதழ்கள் நனைந்ததினால் நாவெழுந்து வெளிக்கிட்டு நல்லதரம் நனைத்திருந்தாள்!

சில்லென்று பொழிகின்ற மெல்லியதோர் தூறலினால் மேனியிலே சிலிர்ப்பலைகள் சட்டென்று எழுந்துவர பட்டென்று கண்விழித்தாள்!

மேல்நோக்கி விழிதிறந்து மெல்ல அவள் பார்க்கையிலே காடுவனம் கடந்திட்ட கன்னியிவள் வள்ளியவள் கண்பார்வை எனைத் தாக்க வேலனிவன் மெய்ம்மறந்தான்!


‘வனவள்ளி கூற்று’:

புன்சிரிப்பை மட்டும் உதிர்த்து ஏதும் சொல்லவில்லை அவனும்!

'உண்ட பின்னே பெண்ணே! பேசிக்கொள்வோம் என்றான்!..

"பசி ஆற்றும் செயல் நன்மை மகிழ்ந்தேன் அதனால் நானும்

"யாரோ என்று சொன்னால் உண்பேன்" என்றேன் நானும்!

'பசி வந்தால் பெண்ணே பத்தும் பறக்கும்' என்பர்.

பசித்த பின்பும் கூட பிடிவாதம் விட மறுத்தாய்!' என்றே சொல்லிச் சிரித்தான்!.

வந்த சிரிப்பை வாயுள் அடக்கிக்கொண்டே கேட்டேன்!

'எதுவும் பறக்காதிங்கே!!...யாரோ நீங்கள்?!!' என்றேன்!.

"அன்பைத் தேடும் அன்பை நானும் நாடி வந்தேன்!

இறைவன் தந்த பந்தம் என்றே உன்னைக்கொண்டேன்!

பிரியா வரம் ஒன்றே நானும் வாங்கி வந்தேன்!

உனக்காய் வாழும் நாளில் என்னை முழுதாய்த் தருவேன்! “

என்றே சொல்லி முடித்தான்!!

ஏதோ ஏதோ எண்ணம் வந்து என்னுள் பரவ சின்ன வயதில் கேட்ட வரங்கள் சிரிப்பை எழுப்ப ‘மீண்டும் நிமிர்ந்து பார்த்தேன்!!

அங்கே என்னைத் தொலைத்தேன்! பழங்கள் ஒரு கையில் பச்சிலைகள் மறுகையில்!!

‘பசியைத் தீர்க்கும் பரிவும் நோயைத் தீர்க்கும் குணமும் கொண்ட இவனே எந்தன் உயிரின் வரமாய் உணர்ந்தேன்!

உள்ளில் பொங்கிய உணர்வினை மறைத்து, யாரிவன் என்னும் உண்மையினை அறிந்திடவே பொய்யாகக் கோபத்தை முகத்தினிலே வரவழைத்து சினந்தவனைப் பார்த்தேன்!

சினந்தவள் செய்ததென்ன?
**********************************************
[நாளை வரும்!]


6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) October 20, 2009 6:30 AM  

சூப்பரோ சூப்பர்!
வசன கவிதையா SK? :)

Kannabiran, Ravi Shankar (KRS) October 20, 2009 6:52 AM  

//காதலனைத் தேடியிங்கு கால்கடுக்க நடக்கின்றேன்.
குத்துகின்ற முள்ளெதுவும் பாதத்தில் உறைக்கவில்லை பத்துகின்ற வெயிலதுவும் பாவியுடல் எரிக்கவில்லை.
கால்தவறி இடறிவீழ்ந்து மலைச்சரிவில் உருளுகின்றேன்//

"பாதம் வருடிய" மணவாளா - தான் ஞாபகத்துக்கு வந்தது!

Kannabiran, Ravi Shankar (KRS) October 20, 2009 6:57 AM  

//'பசி வந்தால் பெண்ணே பத்தும் பறக்கும்' என்பர்.
பசித்த பின்பும் கூட பிடிவாதம் விட மறுத்தாய்!' என்றே சொல்லிச் சிரித்தான்!.
வந்த சிரிப்பை வாயுள் அடக்கிக்கொண்டே கேட்டேன்!
'எதுவும் பறக்காதிங்கே!!...யாரோ நீங்கள்?!!' என்றேன்!.
//

ஹிஹி
இது நாங்க பேசுற டயலாக் போலவே வந்திருக்கு! :)
கடைசியில் வரும் பொய்க் கோபம் உட்பட! :)

VSK October 20, 2009 10:37 AM  

//சூப்பரோ சூப்பர்!
வசன கவிதையா SK? :)//

அப்படி ஒரு முயற்சி செய்து பார்த்தேன் ரவி. நல்லா இருக்கா! [அதான் சூப்பரோ சூப்பர்னு சொல்லிட்டேனேன்னு முணுமுணுக்க வேண்டாம்!:))]

VSK October 20, 2009 10:38 AM  

//"பாதம் வருடிய" மணவாளா - தான் ஞாபகத்துக்கு வந்தது!//

முருகனுக்குப் பிடித்தது, கண்ணனுக்கும் பிடித்துப் போவது சரிதானே! :))

VSK October 20, 2009 10:39 AM  

//ஹிஹி
இது நாங்க பேசுற டயலாக் போலவே வந்திருக்கு! :)
கடைசியில் வரும் பொய்க் கோபம் உட்பட! :)//


அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் இவன்! நமக்கும் அவன் தானே பாடம் சொல்லணும்! சரிதானே ரவி? மு மு.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP