கந்த சஷ்டி 5: சூர சங்காரம் எங்கு நடந்தது? தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?
மக்களே, இன்று தான் கந்த சஷ்டி (Nov-3)!
முருகன் சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் எண்ணப்படுவது திருச்செந்தூர் கடற்கரை!
ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டியின் போது, செந்தூரில் வெகு விமரிசையாக நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது!
ஆனால்...சூர சங்காரம் எங்கு நடந்தது? = தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?
என்னடா இது, இவன் புதுசாக் கெளப்பறான்-னு பாக்கறீங்களா மக்கா?:) ஹா ஹா ஹா! வாங்க பார்க்கலாம்!
இனி, கீழ் வருபவை... கச்சியப்பரின் கந்த புராணப் போர்க் காட்சிகள்!
வடகயிலையில்....
அம்மையிடம் வேலும், அப்பனிடம் 11ஆயுதங்களும் வாங்கிய முருகன், தெற்கு நோக்கிச் செல்கிறான்.
விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தைத், தாராகாசுரன் ஆண்டு வருகிறான்.
தாரகன் சூரனின் தம்பி. அண்ணனுக்குத் தங்கக் கம்பி!
அவனைக் கண்டு, முருகன் புன்னகை பூக்க, தாருகனுக்கு முருகனை எதிர்க்க மனம் வரவில்லை!
அதனால், கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி, படைகளை வழிமறிக்க, வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார்.
ஆனால், வீரபாகுவையும், முருகனின் சேனையையும், மலையரணுக்குள் அழுத்திச் சிறைகொண்டு விடுகிறான் தாருகன்!
தன்னுடன் வந்து அடியவரைச் சிறை மீட்க, முருகனின் கூர் வேல் மலையைப் பிளக்கிறது; தாருகன் அழிகிறான்! தாருகனே = வேலுக்கு முதல் பலி!
(* தாருகன் = மாயா மலம்;மெய் ஞானம் பெற வேண்டின், முதலில் புறத்தே உலக மாயை அறுபட வேண்டும் என்று தத்துவமாகவும் சொல்லுவார்கள்; பிறகு பார்ப்போம்)
சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான். முருகனின் சேனையைக் கணக்கிட உளவுப்படையை அனுப்புகிறான்.
மன்னி ஆற்றங்கரையில் சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவ தச்சனைப் பணிக்கிறான் முருகப் பெருமான்.
ஈசனும், முருகன் முன் தோன்றி, பாசுபதம் என்னும் இன்னொரு படையும் (அஸ்திரம்) அளிக்கின்றார்.
திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது
பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், முருகனைச் செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள்.
புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவ குருவான வியாழனிடம் (பிரகஸ்பதி), சூரனின் முழுக் கதையை, அனைவரும் அறியச் சொல்லுமாறு கேட்கிறான் முருகன்.
அதன் பின்னரே வீரபாகுவை மட்டும் வீர மகேந்திரபுரத்துக்குத் தூது அனுப்ப முடிவாகிறது!
வீரபாகு, முதலில் சிறைக்குள் புகுந்து, இந்திரனின் மகன் செயந்தனுக்கு, முருகனின் செய்தியைச் சொல்லி, ஆறுதல் சொல்கிறார்!
பின்பு சிறையில் உள்ள அமரர்களை நோக்கி, "நீங்கள் ஈசனை மதிக்காத தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால் தான் இத்தனை துன்பமும்";
இப்போது உணர்ந்து கொண்டதால், சிறை மீட்க, ஈச வடிவமேயான முருகன் வந்திருப்பதாகச் சேதி சொல்கிறார்.
பின்னர் அவைக்குச் சென்று, ஆங்கே சூரனிடம் தூது உரைக்கிறார்
= அமரரைச் சிறை விடுத்து, முருகனைப் பணிந்து, நன்றே வாழ் என்பதே தூது பொருள்!
ஆனால், அசுரனின் ஆணவப் பேச்சால் தூது முறிகிறது.
கைகலப்பில் சூரனின் புதல்வர்கள் சதமுகன், வச்சிரவாகு இருவரும் வீரபாகுவால் அங்கேயே கொல்லப் படுகிறார்கள்.
வீரபாகு திருச்செந்தூர் திரும்பி, முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறார்.
இனியும் தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கைக்குச் செல்கிறான் முருகப் பெருமான் = ஏமகூடம்!
அங்கிருந்தே போர் துவங்குது; லட்சத்து ஒன்பது வீரர்கள்! (நவ வீரர்கள் + 1,00,000 அமரர்-பூதப் படை)
பானுகோபன் என்னும் சூரனின் மகன், நன்னீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த, அதை முருகன் முறியடிக்கிறான்.
சிறந்த சிவ பக்தனான பானுகோபன், மாண்டு போகிறான்!
பின்னரே, சூரனின் இன்னொரு தம்பியான சிங்கமுகன், போர்க்களம் வருகிறான்!
சிங்கமுகன் அறிவிற் சிறந்தவன்; முருகனுடன் ஏன் போர் செய்யலாகாது? என்று பல தரவு கொடுத்தும், உறவு ஏற்கவில்லை!
வரம் கொடுத்தவர்களையே எதிர்ப்பது அறம் அன்று... என்று சொல்கிறான் சிங்கன்! ஆனால், சூரனின் காதறுந்த ஊசியில் நூல் நுழையவில்லை!
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, சிங்கமுகன் களம் நுழைய, போர் வலுக்கிறது;
சிங்கனின் சிரம், அறுக்க அறுக்க முளைக்கும் வல்லமை பெற்றது;
அதனால் அவன் மேல் வேல் எய்யாது, குஞ்சம் ஏவி, நெஞ்சைப் பிளக்கிறான் முருகன்!
( * சிங்கன் = கன்ம மலம் என்று தத்துவ இயலார் சொல்வார்கள்)
----------------
கடைசியில்...
சூரனே களம் புக, பலப்பல படைகள் ஏவிப் போர் புரிகிறான்!
* ஈசனால் வழங்கப்பட்ட இந்திர ஞாலம் என்னும் தேரில், படைகளைச் சூரன் கடத்த, தேரைத் தன் வசம் ஆக்குகிறான் முருகன்
* சூலப் படையை ஏவ, பாசுபதம் கொண்டு தடுக்கிறான் முருகன்!
சுற்றார், தேர், ஆயுதம் என்று அனைத்தையும் இழந்து நிற்கும் சூரன், வந்திருப்பது யார் -என உணர்கிறான்!
ஆனாலும்...... மானம் தடுக்கிறது! தன்-மானம் தடுக்கிறது!
காலில் கூட விழ வேணாம்; தன்-மானத்தையும் விட வேண்டாம்;
= ஒரே ஒரு சொல் - "ஏதோ நடந்து விட்டது; முருகா, நாம் பேசலாமே"?
= ஆனால், சூரனுக்கு வாய் வரவில்லை!
= மனத்திலே கருணை இல்லை, அதனால் வாயிலே சொல்லும் இல்லை:(
"என்ன வேண்டும் முருகா உனக்கு? கேள், தருகிறேன்" -ன்னு அதிகாரமாகச் சொல்லி இருந்தாலும்...
முருகன் சிரித்துக் கொண்டே, பணிவான-கனிவான சொல்லால்,எடுத்துச் சொல்லியிருப்பான்;
ஆனால் "தான்-மனம்" என்பதை, "தன்-மானம்" என்ற போர்வையால் மறைத்துக் கொண்டான் சூரன்!
கடலாய், இருளாய் மாறி மாறிப் போர்! - தனி ஒருவன்!
எதுவுமே உதவாமல் போக, கடைசியில் வெறுத்துப் போய், கடலுக்கு அடியில் ஒரு மாமரமாய் நின்று கொண்டான்!
கொக்கு, தலையை மண்ணுக்குள் விட்டுக் கொண்டால், உலகமே மறைந்து விடுமா என்ன??
மரத்துப் போய் நிற்றல் என்பார்களே... அது போல நிற்க...
கூர் வேல் சூரைப் பிளக்கிறது! சூர சங்காரம் நடந்து முடிகிறது!!
பிளவுண்டு மரத்த-மரித்த நிலையில் உள்ள சூரன்
மனங் கசிந்து கை தொழ...
* மனத்-தீரம் = மனத்து ஈரமாய் மாற...
* கண் ஈரம் = கந்தன் ஈரமாய் மாற...
* மாமரக் கூறுகள், சேவலும் மயிலுமாய் மாற....
மாமயில் ஊர்தியாய், சேவலங் கொடியாய், முருகன் பால் என்றும் நீங்காது நிலைக்கின்றன!
அன்னான் சேவலும் மயிலும் போற்றி! திருக்கை வேல் போற்றி போற்றி!
சைவ சித்தாந்த - தத்துவப் பொருள்:
சூர சங்காரத்துக்கு, சமய அடிப்படையிலே, அதீத தத்துவப் பொருள் சொல்வாரும் உளர்!
* தாருகன் = மாயா மலம்
* சிங்கன் = கன்ம மலம்
* சூரன் = ஆணவ மலம்
(மலம் -ன்னா குற்றம்)
ஒரு உதாரணமாப் பார்க்கலாமா?
(நானாச் சும்மாச் சொல்லுற உதாரணம்; பிழை இருப்பின் மன்னிக்க!)
இருட்டு அறையில் ஒருவனை அடைத்து.. அவன் கண்ணையும் இறுக்கக் கட்டியாகி விட்டது! = அவனால் ஏதாச்சும் பார்க்க முடியுமா?
1) மாயா மலம் = இருட்டு அறை;
என்ன தான் கண் கட்டை அவிழ்த்தாலும், இருட்டா இருந்தா ஒன்னும் தெரியாதே!
=> உலக இன்பங்கள் = மாயை!
அதனால் முதலில் மாயை போக்க வேண்டும்! அதான் தாருகன் முதலில் அழிந்தான்!
2) கன்ம மலம் = கண் கட்டு
அடுத்து, கண் கட்டை அவிழ்த்தா, அறையில் இருப்பது தெரியும்!
=> செய்த வினைகள் = கன்மம்
ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்! வினையைப் போக்கணும்! அதான் அடுத்து சிங்கமுகன் அழிந்தான்!
3) ஆணவ மலம் = "தான்" என்ற உணர்ச்சி
என்ன தான் அறையில் விளக்கேத்தி, கண் கட்டை அவிழ்த்தாலும், நாம கண்ணைத் தொறக்கணுமே!
கண்ணத் தொறக்கவே மாட்டேன், கூசுது ன்னு அடம் புடிச்சா? = ஆணவ மலம்! = தான், தான் = சூரன்
இருக்குறதலேயே, இதான் மோசமானது! இதை அழிச்சாத் தான் = வெளிச்சத்தின் பலன் கிடைக்கும்!
எப்படி அழிப்பது? = "ஞான" வேல் கொண்டு! = அதான் சூரன் இறுதியா அழிந்தான்!
* வேல் = மெய் ஞானம்
அந்த ஞானம், ஆணவத்தைப் பிளக்க...
தான் தான் என்ற சப்தம் நீங்கி, ஓம் ஓம் என்ற சப்தம் எழுகிறது!
* மயில் = விந்து; சேவல் = நாதம்
இரண்டும் சேர்ந்து = நாத-விந்து-கலாதீ = ஓங்காரம்!
ஆகவே சேவலும்-மயிலும் = ஓம் என்பதைக் குறிக்கும்!
தத்துவம் போதும்:) நாம, கதைக்கு வருவோம்....
ஆக, போர் நடந்தது ஈழத்து ஏமகூடத்தில்-ன்னு பார்த்தோம்!
ஈழத்துக்கும், முருகனுக்கும் உள்ள தொடர்பினைக் கண்டு, அடியேன் மனம் என்னமோ செய்கிறது!
ஈழத்தின் இன்பத்துக்கும் அந்த முருகவேளே முன்னிற்க, முன்னிற்க!
இதோ கச்சியப்பரின் கந்த புராணச் செய்யுள்: (யுத்த காண்டம், ஏமகூடப் படலம்/மீட்சிப் படலம்)
ஒன்பதோடு இலக்கவீரர் ஓங்கலார் அறுவர்கள்
அன்புசெய்து போற்றிசெய்ய அறுமுகேசன் அமரர்கள்
முன்புசெய் பணித்திறம் முறைப்படப் புரிந்திட
இன்பினோடும் ஏமகூட எழிலிருக்கை வைகினான்
இவ்வகை அயில்வேல் அண்ணல் இராயிரம் பூத வெள்ளங்
கவ்வையின் அமைந்து செல்லக் கனைகடல் வரைப்பின் ஏகி
எவ்வம தடைந்த தொல்லை இலங்கை யங் குவடு நீங்கி
மைவரை புரைசூர் மேவு மகேந்திர புர முன் போந்தான்
ஏமகூடம் என்ற ஊர் இப்போது இலங்கையில் எங்கு இருக்கு?
யாரேனும் அறியத் தாருங்கள்!
திருச்செந்தூரில் நடித்துக் காட்டப்படும் சூர சங்காரம் மிகப் பிரபலமானதால், பலருக்கும் செந்தூரில் தான் போர் நடைபெற்றது என்ற நினைப்பு வந்து விடுகிறது!
திருச்செந்தூர் மட்டுமல்லாது, பல முருகன் ஆலயங்களிலும், ஏனைய ஆறுபடை வீடுகளிலும் கூடச் சூர சங்காரம் நடித்துக் காட்டப்படுகிறது! ஆனால் சூர சங்காரம் நடந்தது ஈழத்தில் தான்!
----------------------
முருகனின் ஆணைப்படி, மொத்த வீர மகேந்திரபுரியும், வருணன், கடலுள் மூழ்கடிக்க, போர் முடிகிறது!
(குறிப்பு: இது கச்சியப்பர்/ தீவிர சமயவியலார் கூற்று மட்டுமே - தனிப்பட்ட முறையில் எனக்கு ஒப்புதல் இல்லை - என் முருகன் கருணை மிக்கவன்;
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக என்பது வெறும் வசனமே; என்னவனுக்குக் குடி கெடுக்கத் தெரியாது; அவன் முகம் பொழி "கருணை" போற்றி!)
வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றான்!
போரின் மனக்கேதங்கள் தீர...
முன்பு கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜப மாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன்.
அப்போது, மக்கள் பலரும், அங்கு குழுமி, அவனை வணங்க...
பாதிப் பூசையின் நடுவிலே...
ஒரு கையில் செபமாலையும், இன்னொரு கையில் அர்ச்சிக்கும் தாமரைப் பூவுமாய்...
"என்ன நலமா?"... என்று நம் பால் முகம் திருப்பிச் சிரிக்கும் திருக்கோலம்!
= இந்தக் கோலமே இன்றும் நாம் திருச்செந்தூர் கருவறையில் காண்பது!
மூலத்தானத்து முதல்வன் நிற்க....
சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்!
அச்சோ ஒருவா அழகியவா!
என் காதல் முருகா பழகியவா!
உன் வாசல் படியாய்க் கிடந்து - உன் பவள வாய் காண்பேனே!
உன் திருவறைக்கு எதிர் நின்று - உன் திருமேனி தின்பேனே!
இன்றைய சஷ்டிப் பாடல்...
படம்: தெய்வம்
குரல்: சீர்காழி, TMS
வரிகள்: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!
அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால்... நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா... வருவாய் அருள்வாய்...... முருகா!
முருகா!!!
சஷ்டியின் ஆறு நாள் பதிவுகளில், ஒரு நாள் பதிவு விட்டுப் போனது. அதை நாளை திருப்பரங்குன்றப் பதிவாய் இட்டு, திருமணப் பதிவாய் நிறைவு செய்கிறேன்!
இது வரை சஷ்டிப் பதிவுகளுக்கு, அன்பாய் வந்திருந்த அன்பர் அனைவர்க்கும் என் நன்றி!
கந்த சட்டி காணும் வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா!
நண்பர்கள் அனைவர்க்கும் கந்த சட்டி வாழ்த்துக்கள்!
திருச்செந்தூர் தலம் பற்றிய ரகசியக் குறிப்புகளைச் சென்ற ஆண்டு சஷ்டியின் போதே கொடுத்திருந்தேன். இங்கு காணலாம்!
25 comments:
கோபப்பட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் ஒரு கேள்வி. கந்தபுராணம் சூரவத வரலாற்றுக்கும், ராமாயண ராவண வதை இதிகாசத்துக்கும், பல ஒற்றுமைகள் உள்ளதை கவனித்திருக்கிறீர்களா?!
@யோசிப்பவர்
இதுல கோபப்பட என்னங்க இருக்கு?
நுட்பமான ஒப்புமை தானே!
கந்தபுராண-இராமாயண ஒற்றுமைகள் குறித்து முன்னரே உரையாடியும் உள்ளோம்! இதோ:
http://madhavipanthal.blogspot.com/2007/10/blog-post_28.html
//கந்தபுராண-இராமாயண ஒற்றுமைகள் குறித்து முன்னரே உரையாடியும் உள்ளோம்! //
இராமயணம் மற்றும் கந்தபுராணம் ஆகியவற்றின் 64 ஒற்றுமைகளை இங்கே மிகத் தெளிவாக சான்றுகளுடன் எழுதி இருக்கிறார்கள்.
நான் எங்கே போய் ஒளிந்து கொள்வது ? :)
ஆஹா.. சூரசம்ஹாரத்தை பற்றி இன்னைக்கு தான் நல்லா தெரிஞ்சுகிட்டேன்.. அதுவும் பாடலில் அருமையாக காட்டியிருப்பார்கள்.. சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இங்கு நடப்பது போல் இலங்கையிலும் நடக்கிறதா ?
// ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன்.
இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது//
ஆஹா ரெண்டு தடவை போயும் சரியா கவனிக்கலையே.. ஒரு தடவை அறுபடை தரிசனம் போனா தான் எனக்கு மும்மலம் அழியும்னு நினைக்கிறேன்..
ஒவ்வொரு நாளும் அருமையான பாடல்கள், பதிவுகள். நன்றி கண்ணா.
அனைவருக்கும் கந்த சஷ்டி திருநாள் வாழ்த்துகள்.
வீரமகேந்திரபுரம் எங்கே இருக்கிறது இரவி? சங்க இலக்கியங்களும் முருகன் மாமரத்தைப் பிளந்ததைப் பற்றியும் சூர் தடிந்ததைப் பற்றியும் பேசுகின்றன. அவை குமரிக்கண்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளா? குமரியை கடல் கொண்ட பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளா?
திருச்செந்தூரில் படை வீடு அமைத்து தூது முடியும் வரை காத்திருந்தான் என்று தான் தெரியும். அங்கே தான் சூர சம்ஹாரம் நடைபெற்றது என்று பெரும்பாலோனோர் நினைக்கிறார்கள் என்று தெரியாது. நான் இது வரை அப்படி நினைக்கவில்லை.
//நான் எங்கே போய் ஒளிந்து கொள்வது ? :)//
சூரனிடம் தான் கேட்கவேண்டும். கந்தனின் வேல் கண்டு கடலின் நடுவே ஒளிந்து கொண்டது அவன் தானே. :-)
ஏமகூடம் என்பது இலங்கையில் உள்ள கதிர்காமமே! அருண்கிரிநாதர் இனிக்க இனிக்க முருகனைப் பாடித்துதித்த திருப்புகழ்களை பாடும் போதெல்லாம்
எல்லா ஈழத்தமிழர்களுக்கும் இன்றைய கதிர்காமத்தின் அலங்கோலநிலை ஞாபகம் வந்து நெஞ்சை அறுக்கும். என் அப்பா,தாத்தாவின் காலங்களில் எல்லாம் யாழ்ப்பாணத்தில் இருந்து பாதயாத்திரையாக கதிர்காமத்திற்கு செல்வார்கள். தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த அந்த திருத்தலத்தில், சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்தி, தமிழர்களை விரட்டினார்கள். அங்கிருக்கும் முருகன் கோயிலை தங்கள் கோயிலாக்கினார்கள். அக்கோயிலுக்கு பின்னால் மாபெரும் பௌத்தவிகாரை கட்டி, முருகனின் தலம் என்ற முக்கியத்துவத்தையே அகற்றினார்கள். இவ்வளவும் என் அப்பா காலத்தில் நடந்தவை. அங்கே "கதிரை மலை" என்னும் மலையில் முருகனின் பழமையான கோயில் இருக்கிறது.முதல் முதல் கதிர்காமத்திற்கு போனபோது, அதையாவது விட்டுவைத்திருக்கிறார்களே என்று நிம்மதியானேன்.ஆனால் இன்று அங்கிருந்த முருகன் கோயிலின் சுவட்டைக்கூட காணமுடியவில்லை.
புதிதாக பௌத்த கோயில் ஒன்று எழுந்து நிற்கிறது.
இந்த அநியாயத்தை எல்லாம் யாரிடம் போய் சொல்ல?
//கோவி.கண்ணன் said...
நான் எங்கே போய் ஒளிந்து கொள்வது ? :)//
//குமரன் (Kumaran) said...
சூரனிடம் தான் கேட்கவேண்டும். கந்தனின் வேல் கண்டு கடலின் நடுவே ஒளிந்து கொண்டது அவன் தானே. :-)//
கண்ணனும் பானைகளுக்கு இடையில் ஒளிந்து கொண்டான்.
(நாயகன் இஷ்டைலில் படிங்க)
கோவி அண்ணா - நீங்க கண்ணனா? சூரனா? :)
அதைப் பொறுத்து அப்படி அப்படி ஒளிந்து கொள்ளலாம்! :))
//Raghav said...
சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இங்கு நடப்பது போல் இலங்கையிலும் நடக்கிறதா ?//
ஆமாம் ராகவ்! நடக்கிறது!
நல்லூர், கதிர்காமம் மற்றும் உகந்தமலை - இங்கெல்லாம் அடியேன் அறிந்த வரை நடைபெறுகிறது!
காபி அண்ணாச்சி, யோகன் ஐயா, மலைநாடான் ஐயா-வைக் கேட்டால் இன்னும் பல தகவல்கள் கிடைக்கும்!
//Raghav said...
ஆஹா ரெண்டு தடவை போயும் சரியா கவனிக்கலையே..//
அதான் இங்க கவனிச்சிட்டீங்களே ராகவ்! :)
//ஒரு தடவை அறுபடை தரிசனம் போனா தான் எனக்கு மும்மலம் அழியும்னு நினைக்கிறேன்..//
போய் வாங்க, போய் வாங்க!
முருகனே மனசு வச்சிக் கூப்பிடுவான்! போய் வந்து பதிவிடுங்க! :)
//கவிநயா said...
ஒவ்வொரு நாளும் அருமையான பாடல்கள், பதிவுகள். நன்றி கண்ணா//
கந்த சஷ்டி வாழ்த்துகள்-க்கா!
யோமோதிய பதிவும், யாம் தந்த தகவலும், தாமே பெற வேலவர் தந்ததினால்! :)
//குமரன் (Kumaran) said...
வீரமகேந்திரபுரம் எங்கே இருக்கிறது இரவி?//
ஏமகூடம்=கதிர்காமம்-னு ஆதித்தன் சொல்றாரு!
வீரமகேந்திரபுரம் எங்கே இருந்தது-ன்னு தெரியலை குமரன். கடலில் மூழ்கடித்ததாக வருகிறது.
ஏமகூடத்தில் இருந்து எழும்பியதாகப் பாடல்! திரிபுரம் போல, வானில் இருந்ததா என்றும் தெரியவில்லை!
//சங்க இலக்கியங்களும் முருகன் மாமரத்தைப் பிளந்ததைப் பற்றியும் சூர் தடிந்ததைப் பற்றியும் பேசுகின்றன. அவை குமரிக்கண்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளா? குமரியை கடல் கொண்ட பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளா?//
குறிஞ்சிக் கடவுள் முருகன் என்று தொல்காப்பியம் பேசும் போது,
குறிஞ்சி நில அமைப்பு உருவாவதற்கு முன்போ, இல்லை அது தொடங்கும் போதோ...முருகன் பற்றிய நிகழ்வுகள் இருந்திருக்க வேண்டும்!
குறிஞ்சி நில அமைப்பு உருவாவதற்கு முன்பே என்று கொண்டால், குமரிக் கண்டம் தான் போக வேண்டும்! ஆனால் இலக்கியங்கள் தரும் குமரிக் கண்டச் செய்திகள் மிகவும் குறைவு! ஆராய்ச்சியின் துணையோடு இதை நுணுக்கிப் பார்க்க முடியும்!
//அங்கே தான் சூர சம்ஹாரம் நடைபெற்றது என்று பெரும்பாலோனோர் நினைக்கிறார்கள் என்று தெரியாது. நான் இது வரை அப்படி நினைக்கவில்லை.//
குமரன்-ன்னா சும்மாவா? :)
நண்பர்கள் பலர் சூரனை அழித்த இடம் எது-ன்னு கேட்டால் உடனே சொல்வது திருச்செந்தூர்!
பாட்டிலேயே பாருங்க! என்ன வருது?
அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
அதான் குறிப்பிட்டேன்! :)
//ஆதித்தன் said...
ஏமகூடம் என்பது இலங்கையில் உள்ள கதிர்காமமே!//
எப்படிச் சொல்றீங்க ஆதித்தன்.
பாடல் குறிப்பு ஏதாச்சும் இருந்தாத் தாங்களேன்!
அருணகிரியார் கதிர்காமம் குறித்துப் பாடி இருக்காரு! ஆனா ஏமகூடம்-ன்னு குறிப்பிட்டுச் சொல்றாரா என்ன?
//அருண்கிரிநாதர் இனிக்க இனிக்க முருகனைப் பாடித்துதித்த திருப்புகழ்களை பாடும் போதெல்லாம்
எல்லா ஈழத்தமிழர்களுக்கும் இன்றைய கதிர்காமத்தின் அலங்கோலநிலை ஞாபகம் வந்து நெஞ்சை அறுக்கும்//
:(
அருணகிரியார் மட்டுமல்ல! சம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஈழம் குறித்து தேவாரப் பதிகங்கள் பாடியுள்ளனர். அது பற்றிப் பதிவும் இட்டிருந்தேன்!
//என் அப்பா,தாத்தாவின் காலங்களில் எல்லாம் யாழ்ப்பாணத்தில் இருந்து பாதயாத்திரையாக கதிர்காமத்திற்கு செல்வார்கள்//
கதிர்காமப் பாத யாத்திரை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். யாழ்ப்பாணத்தில் இருந்து கால்நடையாகக் கதிர்காமம் சென்று, மாணிக்க கங்கையில் நீராடி, ஏழு திரைக்கு அப்பால் உள்ள திரை-முருகனை வணங்கி, அருகில் உள்ள தேவயானி அம்மன் கோயில், முகம்மது நவி ஆலயங்களிலும் வழிபாடு செய்வது பற்றிப் பலரும் சொல்லி உள்ளனர்.
//அக்கோயிலுக்கு பின்னால் மாபெரும் பௌத்தவிகாரை கட்டி, முருகனின் தலம் என்ற முக்கியத்துவத்தையே அகற்றினார்கள்//
:(
பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்-ன்னு சொல்வாங்க!
கதிர்காமம் என்பது தமிழ்-இந்துக்கள், பெளத்தர், இஸ்லாமியர் என்று அனைவருக்கும் பொதுவான இடம் இல்லையா?
முருகா...எப்படி மிஸ் பண்ணினோன் இந்த பதிவுகளை!!
நன்றி தல கே.ஆர்.எஸ் ;)
//தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?//
:) சூப்பர், இதை வெறும் கேள்வியாகவே பார்க்கவில்லை, இலங்கையா ? திருச்செந்தூரா ? என்று ஏன் கேட்கவில்லை என்று கேட்கவைக்கும் கேள்வியும் இதனுள் இருக்கிறது.
கேஆர்எஸ், உங்களின் தமிழ் ஈழ ஆசியை ஒரு கேள்விக்குள் வேள்வியாக வைத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்.
//கோபிநாத் said...
முருகா...எப்படி மிஸ் பண்ணினோன் இந்த பதிவுகளை!!//
அதான் இப்ப மிஸஸ் பண்ணிட்டியே கோபி! என்சாய் முருகன்! :)
//கோவி.கண்ணன் said...
:) சூப்பர், இதை வெறும் கேள்வியாகவே பார்க்கவில்லை, இலங்கையா ? திருச்செந்தூரா ? என்று ஏன் கேட்கவில்லை என்று கேட்கவைக்கும் கேள்வியும் இதனுள் இருக்கிறது//
மன்சை அப்படியே புரிஞ்சிக்கிட்டீங்கண்ணா! :)
எதுக்கு வெறும் இலங்கை-னு சொல்லணும்?
நற்சொற்களைத் திரும்பச் திரும்பச் சொல்லும் போது, அதுவும் ஆத்ம சக்தியான ஆன்மீக விடயங்களில் சொல்லும் போது, அது பலரும் சொல்வதாகிறது. மந்திரங்களுக்கு அதிர்வு-ன்னு சொல்லும் போது, இது போன்ற நலம் விரும்பும் சிந்தனைகளுக்கும் அதிர்வு உண்டு!
என்றாவது ஒரு நாள் பலிக்கும் என்ற நன்னம்பிக்கையில் தான்!
ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் (ஈழம்) உய்ய!
http://kataragama.org/
அருமை அருமை
read this article:
http://www.dlshq.org/download/shanmukha.htm
Near by Tiruchendur a village called as MANAPADU (17Km from tiruchendur, you can seen this from tiruchendur temple) which is drived from MA PADU
MA- ARAKAN or SOORAN Or Mango Tree
PADU- Death
There are some caves and secrete places in this place.
நவ வீரர்கள் தியானம் தமிழில் கிடைத்தால் நலம்
இலங்கையிலும் மிகச்சிறப்பாக நடக்கின்றது
Post a Comment