கந்த சஷ்டி 3: கந்தன் திரு நீறணிந்தால்! சுவாமிமலை!
"மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா" என்பதை TMS அழுத்திப் பாடும் போது, நம் மனதில் திருநீறும் சேர்ந்தே அழுந்தி விடும் அல்லவா! அப்படி என்ன பெருசா மகிமை இருக்குதுங்க திருநீறில்? பின்னூட்டதில் சொல்லுங்களேன் பார்ப்போம்! (க்ளூ வேணும்னாக் கொடுக்கறேன்! - சம்பந்தர் திருவாலவாயன் திருநீறு-ன்னு பாடிய வரிகளை எடுத்துக்கிட்டா, மகிமை-1, மகிமை-2...அப்படின்னு ஒரு பெரிய பட்டியலே வந்து விடும்!)
திருநீறுக்கு ஐஸ்வர்யம் என்ற இன்னொரு பேரு இருக்கு தெரியுமா?
வாரியார் சுவாமிகள், தென் மாவட்டத்தில் ஒரு ஊருக்குப் போன போது, சில பழங்குடி மக்கள், அவரிடம், "ஐஸ்வர்யம் கொடுங்க சாமீ"-ன்னு கேட்டனர். வாரியாருடன் போன பழுத்த சைவர்கள் சிலர், சரி ஜனங்க ஏதோ துட்டு கேக்குதுங்க போல-ன்னு நினைச்சிகிட்டாங்களாம்! வாரியார் அவர்களை எல்லாம் திருத்தினார்.
"ஐஸ்வர்யம்=திருநீறு என்பது நமக்கே இப்பல்லாம் தெரியறதில்லை! விபூதி என்றால் செல்வம்! நித்ய விபூதி என்று தான் வைணவர்கள் குறிப்பிடுவார்கள்! அது எப்படி இந்த ஆதிவாசி ஜனங்களுக்குத் தெரிந்தது?"-ன்னு மிகவும் வியந்தாராம் வாரியார்!
விபூதி என்னும் அழியாப் பெருஞ்செல்வம்! நித்ய விபூதி, லீலா விபூதி என்றெல்லாம் கீதையில் வரும்! மந்திரமாவது நீறு! வானவர் மேலது நீறு! சுந்தரம் ஆவதும் நீறு! துதிக்கப்படுவதும் நீறு!
இன்னிக்கி திருநீற்றைப் பற்றிய ஒரு பாட்டு! கூடவே மிகவும் வாசனை மிக்க சுவாமிமலை ரகசியங்கள்!
கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் - மனப்பாடம் செய்ய எளிதான பூசைப் பாடல்! TMS வெங்கலக் குரலில் கேட்டு, படித்து மகிழவும்! பாடலை இங்கே கேட்கவும்!
குரல்: TMS வரிகள்: MP Sivam
கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும்
(கந்தன்)
சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்தநேரம் பார்த்திருந்து அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்துச் சொந்தம் கொண்டாடிடுவாள்
(கந்தன்)
மணம்மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பமெல்லாம் தெய்வம்துணை தாருமடா
(கந்தன்)
சாமி மலைக்குப் போவோம் வாரீகளா?
அது என்னாங்க சாமி மலை? குழந்தை மலை தானே அது?
சிவபெருமான் தானே சாமி?
இளைய வயது பிருகு முனிவர், பிரணவ மந்திரத்தை சதா ஜெபித்து ஜெபித்து, அவர் தலையில் பிரணவ அக்னி கிளம்பியது. சிறியவர்கள் எல்லாம் பிரணவ ரகசியம் அறிந்து கொள்வதா என்று பயந்து போன சிவபெருமான், அந்தப் பிரணவாக்னியைத் தம் கையால் அணைத்து விட்டார். பிரணவம் அவருக்கும் சற்றே மறந்து போனது!
பின்னாளில், பிரம்மன் செருக்கினை அடக்குவது போல ஒரு காட்சியை உருவாக்கி, தந்தைக்குப் பிரணவப் பொருளினைத் தெளிய உரைத்தது முருகக் குழந்தை!
எல்லாரும் பிரணவத்துக்குப் பொருள் சொன்னான், பொருள் சொன்னான் என்று தான் சொல்கிறோமே தவிர, அந்தப் பிரணவத்துக்கு என்ன பொருளைச் சொன்னான்? என்று சொல்கிறோமா? ஹிஹி! பிரணவம் என்றால் என்ன? பந்தலில் பின்னொரு நாள் சொல்கிறேன்!
இளையவர் அறிவதா என்று நினைத்த சிவனாருக்கு, இளையனாரே பொருள் சொல்ல வேண்டி வந்தது! சிவனார் மனம் குளிர, உபதேச மந்திரம், இரு செவி மீதிலும் பகர்ந்தான்!
இப்படிச் சாமிக்கே சாமியானவன் சாமிநாதன்!
அந்தச் சாமி நாதனின் மலையானதாலே, அது சாமி மலை! (சுவாமி மலை)!
திருவேரகம் என்பது பண்டைத் தமிழ்ப் பெயர்! மக்கள் வழக்கில் சாமி மலையானது!
* சரி, திருவேரகம் = திரு+ஏர்+அகம் என்றால் என்ன? ஏன் இந்தப் பெயர்? சொல்லுங்க பார்ப்போம்
* சுவாமி மலையில் கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் மலையே கிடையாது! ஹா ஹா ஹா! அப்பறம் எப்படி சுவாமி மலை ஆச்சு?
சுவாமி மலை என்பது செயற்கையான ஒரு குன்று போல் அமைப்பு! கொஞ்சம் உயரமான தளம் கொடுத்து, அறுபது படிக்கட்டுகள் வைத்துக் கட்டி இருக்காங்க! இந்து ஆண்டுகளான பிரபவ என்று தொடங்கும் அறுபது ஆண்டுகளைக் குறிக்க!
* முருகப் பெருமானின் வாகனமாக இங்கு மயில் கிடையாது! பிணிமுகம் என்ற யானை தான்! கோயில் முகப்பிலும் அதுவே இருக்கு!
* கீழ்த் தளத்தில் ஒரு பிரகாரம் - மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். முப்பது படிக்கட்டுகள் ஏறி இரண்டாம் பிரகாரம். மலையைச் சுற்றி வருவது போல். மீண்டும் முப்பது படிக்கட்டுகள் ஏறினால் மூன்றாம் பிரகாரம். கருவறையைக் கொண்டது! கருவறை மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டது!
* சுவாமிமலை, காவிரி பாயும் மிகவும் அழகிய ஊர்! பச்சைப் பசேலென திருவலஞ்சுழி என்னும் பிள்ளையார் கோயிலும் அருகில் தான்! குட காவிரிக்கு வட பாலார், திருவேரகத்தில் உறைவா என்று பாடுகிறார் அருணகிரி!
* சுவாமி மலை, ஆலயத்தின் உற்சவச் சிற்பங்கள் செய்வதற்கு மிகவும் புகழ் பெற்ற ஊர்! Investment Casting/Lost Wax Casting என்று சொல்லப்படும் மெழுகினால் உருக்கி ஐம்பொன் சிலைகளைச் செய்யும் ஆச்சாரி/நகாசு வேலைகள் இங்கு சிறப்பு. ஸ்தபதிகள் நடத்தும் கொல்லர் உலைக் கூடங்கள் நிறைய! வீட்டிற்கும் அழகிய சிறு சிற்பங்கள் செய்து கொடுக்கிறார்கள்!
* ராஜன் கலைக் கூடம் இன்று ராஜன் என்னும் தலித் ஒருவரால் நடத்தப்படுகிறது!
பரம்பரை பரம்பரையாக இல்லாது, ஆர்வம் உள்ளவர் அனைவருக்கும் உலோகச் சிலை வடிக்கும் கலையைச் சொல்லிக் கொடுக்கிறார் ராஜன்.
புதிய வர்த்தக உத்திகள் கடைப்பிடிப்பதால், பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் உண்டு! மரபு அறிவோடு, புதிய தொழில் நுட்பமும் சேர்ப்பதால், வேலை நேர்த்தியும் அட்டகாசம்!
ஜீயர்கள் பலர், திவ்யதேச வாகனங்கள் எல்லாம் செய்ய, இவர் குழுவைத் தான் நியமித்துள்ளனர்!
தலித் ஒருவர் உருவாக்கிய எம்பெருமானின் திருவுருவங்கள் தான், பல ஆலயக் கருவறைகளை அலங்கரிக்கின்றன!
எதிர்ப்புகள் குறைந்து போய், இன்று பல புதிய ஆலயங்களில், சாமி சிலைகள் செய்ய சுவாமிமலை ராஜனையே பலரும் நாடுகிறார்கள்! திருமணமே செய்து கொள்ளாமல், இறைத் திரு உருவங்கள் செய்தே பணியாகக் கொண்டுள்ளார் ராஜன்! - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
* நக்கீரர், பழமுதிர் சோலையில் எப்படி வேடுவர்கள் முருகனைப் பூசை செய்ததைக் காண்பித்தாரோ, அதே போல் சுவாமி மலையில், அந்தணர்கள் பூசை செய்வதைக் காட்டுகிறார்!
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்து உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று
என்பது திருவேரகத்துத் திருமுருகாற்றுப்படை!
* சுவாமி மலையைப் போலவே, தில்லி வாழ் தமிழர்கள், தில்லியில் முருகனுக்கு ஒரு ஆலயம் எழுப்பி உள்ளார்கள்! மலை மந்திர் என்பது லோக்கல் பெயர். உத்தர (வடக்கு) சுவாமி மலை என்பது சிறப்புப் பெயர்!
* பிரபலமான சில சுவாமி மலைத் திருப்புகழ்ப் பாடல்கள் இதோ:
- பாதி மதி நதி, போது மணி சடை,
- காமியத்து அழுந்தி இளையாதே,
- சரண கமலாலயத்தில்,
- செக மாயை உற்று,
- மருவே செறித்த குழலார் மயக்கின்
இதில் எனக்கு மிகவும் பிடித்தது, வாணி ஜெயராம் பாடும் பாதி-மதி-நதி பாடல். எம்.எஸ்.வி இசையில் மிகவும் அருமையாக இருக்கும்! இலக்கண இசையாகவோ, அருணகிரியின் வழக்கமான சந்த இசையாகவோ இல்லாமல், மெல்லிசையாக இருக்கும்! சூத மிக வளர் சோலை மருவிடு சுவாமி மலை தனில் உறைவோனே!
* ஒரு மாதத்துக்கு முன் நடைபெற்ற அம்மா-அப்பாவின் மணிவிழாவின் போது, அனைவரும் தில்லைக்கும், சுவாமி மலைக்கும் சென்று வந்தோம். அப்போ, பல சுவையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்தப் பயணக் குறிப்பு, மாதவிப் பந்தலில், வெகு விரைவில்! :)
தகையாது எனக்கு உன் அடி காண வைத்த, தனி ஏரகத்தின் முருகோனே
தரு காவிரிக்கு வட பாரிசத்தில், சமர் வேல் எடுத்த பெருமாளே! - முருகா!!
17 comments:
//மணம்மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பமெல்லாம் தெய்வம்துணை தாருமடா///
சஷ்டி காலங்களில் அப்பாவின் அதிகாலை வேளை டேப்ரெக்கார்டர் பாடல்கள் ஒலிக்க டி.எம்.எஸும் சீர்காழியும் உருகி உருகி மாறி மாறி பாடி நான் பக்தியில் திளைத்த காலங்கள் நினைவுகளாய் வந்து நிற்கிறது!
நன்றி அண்ணாச்சி! (நாங்களும் இருக்கோம்ல சஷ்டி விரதம்! :))))
//விபூதி என்னும் அழியாப் பெருஞ்செல்வம்!/
எனக்கென்னவோ விபூதி பூசுனாத்தான் முகமே ஒரு களையா இருக்கறமாதிரி ஒரு பீலிங்க்!!!!
(ப்ரெண்ட்ஸ் தான்ங்க சொன்னாங்க அப்படி!)
:))
//ஒரு மாதத்துக்கு முன் நடைபெற்ற அம்மா-அப்பாவின் மணிவிழாவின் போது, அனைவரும் தில்லைக்கும், சுவாமி மலைக்கும் சென்று வந்தோம். அப்போ, பல சுவையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்தப் பயணக் குறிப்பு, மாதவிப் பந்தலில், வெகு விரைவில்! :)//
அட சூப்பரூ!
(திருக்கடையூரும் உண்டுல்ல)
சுவாமிநாதமலை சுவாமிமலையாகக் குறுகிவிட்டது போலும். :-)
குன்று போன்ற அமைப்பா? சின்னஞ்சிறு குன்று அதன் மேல் கட்டடம் எழுப்பிவிட்டார்கள் என்று தான் எண்ணியிருந்தேன்.
பிரபவ என்று தொடங்குவது 'இந்து' ஆண்டுகளா? சரி தான். எனக்குச் சொன்னவர்கள் தமிழ் ஆண்டுகள் என்று சொன்னார்கள். :-)
யானை வாகனத்தைச் சன்னிதியில் மயில் இருக்கும் இடத்தில் பார்த்த நினைவு இருக்கிறது. மற்ற இடங்களில் எல்லாம் மயில் வாகனம் முருகன் திருமுன்னில் வந்த பின்னரும் இங்கே மாறாமல் இருக்கும் மாயம் என்னவோ?
சுவாமிமலைத் திருப்புகழ்களில் பாதி மதி நதியும் சரண கமலாலயத்தையும் தெரியும்.
திருவேரகத்தைப் பற்றி சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்களோ என்று நினைக்கிறேன்.
//திருவேரகத்தைப் பற்றி சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்களோ என்று நினைக்கிறேன்//
யப்பா, உங்க கண்ணுக்கு மட்டும் எப்படித் தான் இம்புட்டு சக்தி இருக்கோ சாமீ? :))
எல்லாஞ் சுயநலம் தான் குமரன். சாமி மலை முருகனுக்கும் எனக்கும் தனியான ஒரு கனெக்சன் இருக்கு!
அதான் இங்கு சொல்லாம, பல விடயங்களை அந்த ஸ்பெஷல் பதிவுக்கும், ராகவனுக்கும் ஒதுக்கி வைத்தேன்! :)
ஆனா நீங்க வந்து குட்டை ஒடைக்கப் பாக்குறீங்க! :))
//ஆயில்யன் said...
எனக்கென்னவோ விபூதி பூசுனாத்தான் முகமே ஒரு களையா இருக்கறமாதிரி ஒரு பீலிங்க்!!!!//
அதான் ஒங்க ஃபோட்டோவைப் பாத்த ஒடனேயே தெரிஞ்சி போச்சே ஆயில்ஸ் அண்ணாச்சி! :))
//(ப்ரெண்ட்ஸ் தான்ங்க சொன்னாங்க அப்படி!) :))//
தோடா! அப்படியே அந்த ப்ரெண்ட்ஸ் பேரையும் சொல்றது?
//ஆயில்யன் said...
நன்றி அண்ணாச்சி! (நாங்களும் இருக்கோம்ல சஷ்டி விரதம்! :))))//
சஷ்டி முடிஞ்சாப் பொறவே உங்க வீட்டுக்கு வாரேன்! இப்போ வந்த பழம் நீ அப்பா-ன்னு பழம் மட்டும் கொடுத்து எஸ்ஸாயிருவீங்க! :)
//ஆயில்யன் said...
அட சூப்பரூ!
(திருக்கடையூரும் உண்டுல்ல)//
திருக்கடையூர் உண்டு!
அதை விட சிதம்பரம் என்னும் தில்லை உண்டவே உண்டு! :)))
மாதவிப் பந்தல் பத்தி ஒருத்தரு தில்லையில் நம்ம கிட்டயே சொன்னாரு! :))
எப்படியோ தப்பிப் பொழைச்சி, பாரீஸ் வழியாக, இராகவனிடம் சடாரி வாங்கி, நியூயார்க் வந்து சேர்ந்தேன்! :))
//பிரபவ என்று தொடங்குவது 'இந்து' ஆண்டுகளா? சரி தான். எனக்குச் சொன்னவர்கள் தமிழ் ஆண்டுகள் என்று சொன்னார்கள். :-) //
ஹிஹி! விட மாட்டீங்களே! மெளலி அண்ணா, ஹெல்ப் ப்ளீஸ்! :))
//குன்று போன்ற அமைப்பா? சின்னஞ்சிறு குன்று அதன் மேல் கட்டடம் எழுப்பிவிட்டார்கள் என்று தான் எண்ணியிருந்தேன்//
குன்றே இல்லை குமரன்!
செயற்கைக் குன்று போலக் கூடத் தெரியாது! சும்மா மூனு தளம் இருக்கும்! அம்புட்டு தான்!
இந்தப் படத்துல நல்லா தெரியும் பாருங்க!
http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SQysMOmpwOI/AAAAAAAAEfo/_Yj7ZsDdxH4/s1600-h/swamimalai11.jpg
காஞ்சி அத்திகிரி போலத் தான் சுவாமிமலையும்! :)
//யானை வாகனத்தைச் சன்னிதியில் மயில் இருக்கும் இடத்தில் பார்த்த நினைவு இருக்கிறது. மற்ற இடங்களில் எல்லாம் மயில் வாகனம் முருகன் திருமுன்னில் வந்த பின்னரும் இங்கே மாறாமல் இருக்கும் மாயம் என்னவோ?//
நல்ல கேள்வி!
சூர சங்காரத்துக்கு முன்னுள்ள தலமெல்லாம் யானை வாகனம். பின்னுள்ள தலமெல்லாம் மயில் வாகனமா? யாராச்சும் சொல்லுங்கப்பா!
முருகனுக்கு ஆடு, யானை, மயில் மூன்றுமே வாகனங்கள் தான்! ஆடு வாகனம் உள்ள ஆலயம் எங்கிருக்கு?
ஐஸ்வர்யம் அள்ளியெடுத்து
ஆனந்தமாய் அணிந்துகொண்டு
ஆனைமுகன் சோதரனை
அனுதினமும் பணிந்திடுவோம்!
சுவாமிமலை மற்றும் சிற்பத் தகவல்களுக்கும் நன்றி.
Naan ithuvarai pohatha padaiveedu.. Ingha vantha payan.. anghe pohum bagyam kidaikkumnu ninaikkiren..
kelvighal.. Me the Escape now...
//கவிநயா said...
ஐஸ்வர்யம் அள்ளியெடுத்து//
யூ மீன் ஐஸ்வர்யா ராய், அக்கா? :)
//சுவாமிமலை மற்றும் சிற்பத் தகவல்களுக்கும் நன்றி//
நன்றிக்கா! நம்ம கச்சேரி எப்போ? :)
//Raghav said...
Naan ithuvarai pohatha padaiveedu.. Ingha vantha payan.. anghe pohum bagyam kidaikkumnu ninaikkiren.//
பந்தலில் ஒரு தனிக் கச்சேரி இருக்கு சாமிமலைக்கு! அதையும் பாத்துட்டு, அப்பறம் போய் வாங்க ராகவ்! :)
//kelvighal.. Me the Escape now...//
நம்பிட்டோம்! :)
தகப்பன் சுவாமியின் தரிசனம் அற்புதம், சுவாமிநாதனை ஒரு புலவர் திருவேரகத்து செட்டியார் என்று பாடியுள்ளார், எப்போதாவது அக்கதையை சொல்லுங்களேன்.
//Kailashi said...
தகப்பன் சுவாமியின் தரிசனம் அற்புதம்//
அற்புதமானவருக்கே அற்புதம் சொன்னவன் ஆயிற்றே!
//சுவாமிநாதனை ஒரு புலவர் திருவேரகத்து செட்டியார் என்று பாடியுள்ளார், எப்போதாவது அக்கதையை சொல்லுங்களேன்.
//
கண்டிப்பா சொல்றேன்!
இல்லீன்னா நண்பன் ராகவனைச் சொல்ல வைக்கிறேன்! :)
sir
pl read the book kallagar written
by paramasivan.
Post a Comment