கந்த சஷ்டி 6: தெய்வயானைத் திருமணம்! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்!
மக்கா, கந்த சஷ்டி நேற்றே (திங்கள்) நிறைவுற்றது. எனினும், இதோ விட்டுப் போன ஒரு பதிவு!
பதிவு விட்டாலும் பரங்குன்றான் விடுவானா என்ன?
இன்னிக்கி திருப்பரங்குன்றத்து ரகசியங்கள் மற்றும் பாடல் - "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்"!
* பொதுவாக வள்ளித் திருமணம்= "பேச" மட்டுமே படும் விரிவுரையாளர்களால்
* ஆனால் தேவானைத் திருமணம்? = எல்லா ஆலயங்களிலும் "செய்"விக்கப்படுகிறது!= இது ஏன்?
பரங்குன்றச் சிற்பம் - தேவானைத் திருமணம்
பின்னர் பரங்குன்றில் அம்மையை மணந்தான் முருகன் = இது "கதை"
போர் முடிந்த அடுத்த நாளே திருமணம் நடைபெற்றிடவில்லை!
ஐப்பசி எல்லாம் கடந்து, பங்குனி உத்திரத்தில் தான் முருகன்-தேவானையம்மைத் திருமணம்!ஆனா, ஆலயங்களில் இன்று நாம் காண்பது, அடுத்த நாளே திருக்கல்யாண உற்சவம்!
தெய்வயானை அம்மை பற்றிய தனியான பதிவினைப் பின்னொரு நாள் இடுகிறேன்.
இது பற்றிப் பதிவுலகில் சிற்சில விவாதங்கள் நடைபெற்றதுண்டு! அவரவர் மனோநிலையின் படிப் பலரும் உரையாடினார்கள்!
ஆனால் வாரியார் சுவாமிகள் "நுட்பமாகத்" தேவானை அம்மையைப் பற்றி முன்வைத்துள்ள "சூட்சுமம்", பதிவுலகில் வைக்கப்படவே இல்லை!
சரி, இன்று அழகனுக்கும்-அம்மைக்கும் திருமண விழா அல்லவா! சும்மானாச்சும் வாழ்த்து சொல்லுங்க மக்கா! :)
திருப்பரங்குன்றம் - திருக்கல்யாண வைபவம்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்! - இந்தப் பாட்டு முதலில் சினிமாப் பாட்டே அல்ல! குன்னக்குடி தன்னோட ஆல்பம் ஒன்றுக்காக இசையமைத்த பாட்டு! ஆனால் சினிமாவுக்கென்று குன்னக்குடி முதன் முதலில் "கொடுத்த" பாட்டு முருகன் பாட்டாக அமைந்ததும் முருகனருள் தான்!
கவிஞர் பூவை செங்குட்டுவனை, முருகா முருகா என்று வருமாறு பாட்டு போடச் சொன்னாராம் குன்னக்குடி! கவிஞரோ அப்போது நாத்திகர்! கொஞ்சம் தயங்கினாரு போல! ஆனால் குன்னக்குடி கேட்டாரே-ன்னு, பாட்டை எழுதிட்டாரு! சூலமங்கலம் சகோதரிகளும் பாடிட்டாங்க!
இந்த ஆல்பத்தை எங்கேயோ கேட்ட கண்ணதாசன், மெல்லிய இசையில் கிறங்கிப் போய், ஏ.பி நாகராஜனிடம் போட்டுக் கொடுக்க, அவர் குன்னக்குடியைக் கேட்க, குன்னக்குடியும் மனம் உவந்து, பாட்டைக் கந்தன் கருணை சினிமாவுக்குக் கொடுத்து விட்டார்!
வரிகள்: பூவை செங்குட்டுவன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி-பி.சுசீலா
படம்: கந்தன் கருணை
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச் செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்
(திருப்பரங்குன்றத்தில்)
பழநியிலே இருக்கும் கந்தப் பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் -
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
(திருப்பரங்குன்றத்தில்)
சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
(திருப்பரங்குன்றத்தில்)
திருப்பரங்குன்ற ரகசியங்கள் இதோ:
* திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயில். குகைக்குள் தான் கருவறை என்பதால் சுற்றி வர முடியாது. முருகன் திருமணக் கோலத்தில் பீடத்தில் அமர்ந்து இருக்க, கீழே ஒரு புறம் மணப்பெண் தேவயானை அமர்ந்து இருக்கிறாள். மறுபுறம் நாரதர்! (இந்திரன் என்று சொல்வாரும் உண்டு! ஆனால் முனிவர் போல் தாடியும் உண்டு, பின்னாள் "ஒட்டு வேலைகளும்" உண்டு)
மேலே பறப்பது போல் பிரபையில் சூரிய சந்திரர்கள். விளக்கொளியில் இன்னும் நுட்பமாகக் கருவறையை நோக்கினால் விநாயகர், அசுவினி குமாரர்கள், அமரர்கள் என்று பலரும் உண்டு! மிக முக்கியமாக துர்க்கை அன்னையும், சிவபிரானும், பெருமாளும் கருவறையில் உள்ளார்கள். இப்படிச் சுற்றம் சூழ திருமணக் கோலமாகக் கருவறை உள்ளது!
* இங்கு முருகனுக்கு அபிடேகம் (திருமுழுக்கு) கிடையாது! அனைத்து அபிடேகங்களும் திருக்கை வேலுக்கே!
* கொடிமரத்தின் முன்பு மூன்று வாகனங்களையும் ஒரு சேரக் காணலாம்! எலி, நந்தி, மயில் என்று மூன்றும் முன்னிற்கும்!
அதைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அனைத்து தெய்வங்களுக்கும் அவரவர் சன்னிதிகளைக் காணலாம்! எல்லாமே குட்டிக் குட்டிக் குறுகலான குடைவரைகள் தான்!
* சிவபெருமான் பரங்கிரி நாதராய் எழுந்தருளியுள்ளார். அம்மை ஆவுடை நாயகி.
திருப்பரங்குன்றத்து ஈசனைச் சம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தேவாரத்தில் பாடியுள்ளனர்!
* நக்கீரர் திருமுருகாற்றுப்படையைச் செய்ததும் இங்கு தான்!
நக்கீரரும் முருகனும்
ஆலமரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்த நக்கீரர் முன்னால், வித்தியாசமான இலை ஒன்று விழுகிறது! அதுவும் பாதி இலை நீரில், மீதி மண்ணில்!
நீரின் இலை மீனாகவும், மண்ணின் இலை பறவையாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுக்க, இது என்ன அதிசயம் என்ற ஆவலில், பார்க்கிறார் நக்கீரர்! தவம் கலையும் சமயமாகப் பார்த்துப் பிடித்துக் கொண்டது பூதம்!
உள்ளே இருக்கும் ஏனைய 999 பேர்களும், ஆயிரமாவது ஆளும் மாட்டிக் கொண்டாரே, இனி மொத்தமாக அழிந்தோம் என்று பயத்தில் நடு நடுங்க, அவர்களை ஆற்றுப்படுத்தி முருகனை நோக்கிப் பாடுகிறார் நக்கீரர்.
தன்னுயிர் காப்பதற்காக இல்லாது, இவர்களை ஆற்றுப்படுத்தவாவது உன்னை நிலைநாட்டிக் கொள் முருகா என்று இறைவனை வேண்ட, முருகனும் பூதத்தை அழித்து அனைவரையும் விடுவித்து அருள்கிறான்.
= இது "கதை":)
= ஆனால், பாடல்= உண்மை!
* திருமாலின் புதல்வியர் அமிர்தவல்லி, சுந்தரவல்லி. இருவரும் முருகனை விரும்பிச் சரவணப் பொய்கையில் தவம் இருந்தனர்.
அவதார (உதித்த) நோக்கம் நிறைவேறிய பின்னர் தாமே வேட்டு அவர்களை மணப்பதாக உறுதி அளித்தான் முருகன்!
அதன்படி அமிர்தவல்லி அமரர் தலைவன் இந்திரன் மகளாகத் தோன்றி, ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்படுகிறாள்;
சுந்தரவல்லி சிவமுனியின் புதல்வியாகத் தோன்றி நம்பிராஜனால் வளர்க்கப்படுகிறாள்!
சூர சங்காரங்கள் முடிந்த பின்னர், அமரேந்திரன் தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான்.
முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் பரங்குன்றில் மணக்கிறார்.
பின்னர், அவ்வண்ணமே, வள்ளி அம்மையையும் வேட்டு, திருத்தணிகையில் மணம் புரிகிறார்.
=இதுவும் "புராணக்" கதையே:)
இருவர் காதலையும் போராடிப் பெற்றே மணமும் மனமும் களிக்கின்றான் முருகன்!
முன்னது போர்க்களப் போரின் பரிசு! பின்னது தினைப்புனப் போரின் பரிசு!
* பரங்குன்ற மலை மேலும் ஆலயம் ஒன்று உள்ளது. இஸ்லாமிய தலம் ஒன்றும் உள்ளது.
அல்-சிகந்தர் என்றும் செகுந்தர் என்றும் சி-கந்தர் என்றும் கொண்டாடுகிறார்கள்
முருகனின் தோழராகக் கருதப்படுகிறார். கதிர்காமத்தில் காணப்படுவதும் இவரே!
ஆனால் அண்மைக் காலங்களாக, கார்த்திகை தீபத்தின் போது, மதப் பிரச்சனைகள் கிளம்புகின்றன.
இத்தனை ஆண்டு கால ஒற்றுமையை ஊதி அணைப்பதும் தகுமோ?
* கதிர்காமத்து முருகன் ஆலயத்திலும் தேவானை அம்மைக்குத் தனியான ஆலயம் பின்னாளில் எழுப்பினார்கள்!
* திருப்பரங்குன்ற ஆலயத்தில் இருப்பது முருகனே அல்ல! அது ஒரு சமணத் தெய்வம், இல்லீன்னா ஜேஷ்டா தேவி!
= இறைவனின் முகத்தில் பெண் சாயல் தெரிகிறது என்று ஒரு பிரச்சனையும் கிளம்பியது.
தரமுள்ள ஆதாரங்கள் ஏதுமின்றி, திருப்பதி-திருமலையில் இருப்பது முருகன் தான் என்று முன்பு கிளப்பி விட்டதைப் போலவே,
பரங்குன்றத்து இறைவன் முருகன் அல்லன் என்றும் கிளப்பி விடப்பட்டது.
ஆனால், முருகன் இருப்பது, முருகன் கருவறையிலேயே... அருகனோ, மலை மேல் முழைகளில்!
முருகன்-அருகன் = இரண்டு மரபுகளும், பரங்குன்றில் உண்டு!
* நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் தரும் குறிப்பு:
மறுவில் கற்பின் வாணுதற் கணவன் - திருப்பரங்குன்றம்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவினன்குடி அசைதலும் உரியன் - திருவாவினன்குடி
இதை= "தேவானை" என்பார்கள் சிலர்; பேரே இல்லாமல் எப்படித் தான் சொல்கிறார்களோ?:)
வள்ளியம்மை பற்றித் தரும் குறிப்பு
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின், மடவரல் வள்ளியடு நகையமர்ந் தன்றே - திருச்சீரலைவாய்!
வள்ளியைப் பேர் சொல்லிப் பாடும் நக்கீரர், தேவானையை அப்படிப் பாடாதது ஏனோ?
மடந்தை/ கற்பின்-கணவன் என்பதெல்லாம் பொதுப் பெயரே!
அவை= தேவானையைக் குறிப்பது ஆகாது!
---
திருப்பரங்குன்றின் பிரபலமான திருப்புகழ்கள் சில இதோ:
- கருவடைந்து பத்துற்ற திங்கள்
- சந்ததம் பந்தத் தொடராலே
- மன்றல் அம் கொந்து மிசை
- உனைத் தினம் தொழுதிலன்
சஷ்டிப் பதிவுகள் இத்துடன் நிறைந்தன! முருகா!
தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்
திருப் பரங் கிரி தனில் உறை சரவணப் பெருமாளே.
19 comments:
பரங்குன்றே சிவபெருமான் என்பது ஐதீகமல்லவா KRS ஐயா, ஆறு பதிவுகளும் அருமை.
அப்பனே முருகா.. இருக்குற இடத்தில இருந்தே உன் சஷ்டி திருவிழாவை முழு மனதுடன் சேவித்தேனப்பா..
எனக்கு அருளனும்னு நினைச்சன்னா, உனை எனக்கும் மற்றும் எல்லோர்க்கும் காட்டி அருளிய ரவி அண்ணனுக்கே அருள்வாயாக.. இதுவே அடியேன் செய்யும் விண்ணப்பம்
//Kailashi said...
பரங்குன்றே சிவபெருமான் என்பது ஐதீகமல்லவா//
ஆமாம் கைலாஷி ஐயா. குன்றமே சிவ வடிவம் என்று சொல்லுவார்கள்.
//ஆறு பதிவுகளும் அருமை//
நன்றிங்க!
எங்கள் குமரனை முதிர்ந்த பழம் என்று சொல்ல என்ன துணிவு உங்களுக்கு? எழுதும் போது வள்ளிமலைக் கிழவனை நினைத்துக் கொண்டீர்களோ? :-)அது 'பழமுதிர்சோலையில் உதிர்ந்த பழம்' ஐயா.
சென்னையில் கந்த கோட்டம் உண்டுன்னு தெய்வயானை அம்மை தன் திருமண நாள் இரவில் பாடுவாளா? எங்கேயே ஏரணம் இடிக்கிறதே. :-)
திருப்பரங்குன்றத்தில் முக்கிய தெய்வமான திருமுருகன் வலப்பக்கத்தில் இருக்க துர்கையம்மன் நடுவில் இருக்கிறாளே. முதன்மைத் தெய்வம் தானே நடுவில் இருக்கும்? என்று கல்வெட்டு முன்பொரு முறை கேட்டாரே. அவருக்கு விடை இருக்கிறதா?
வேலுக்குச் செய்த அபிஷேகப் பாலின் சுவை தெரியுமா உங்களுக்கு? நான் அறிவேன் அந்தச் சுவையை. :-)
எலி, நந்தி, மயில் வாகனங்களா? மூஞ்சூறு வாகனம் தான் பிள்ளையாருக்கு என்று படித்ததாக நினைவு.
எனக்கு 'சந்ததம் பந்தத் தொடராலே', 'மன்றலம் கொந்து மிசை' திருப்புகழ்கள் தெரியும்.
நல்ல உழைப்பு இரவிசங்கர். வழக்கம் போல். மிக்க நன்றி.
//Raghav said...
அப்பனே முருகா.. இருக்குற இடத்தில இருந்தே உன் சஷ்டி திருவிழாவை முழு மனதுடன் சேவித்தேனப்பா//
அதான் முருகனருள்!
//எனக்கு அருளனும்னு நினைச்சன்னா, உனை எனக்கும் மற்றும் எல்லோர்க்கும் காட்டி அருளிய ரவி அண்ணனுக்கே அருள்வாயாக..//
ஆகா!
ராகவ்-என்ன இது? வயசுப் பையன் இப்படியெல்லாம் வேண்டலாமா? :)
முருகா...
ராகவ் உட்பட அனைத்து நண்பர்களையும், முன்னாள் நண்பர்களையும், வன்பர்களையும், அனைவரையும் உன் கடைக்கண் பார்வையிலேயே வைத்து நன்மை காட்டுப்பா!
//குமரன் (Kumaran) said...
நல்ல உழைப்பு இரவிசங்கர்//
:)
//வழக்கம் போல். மிக்க நன்றி//
ஒவ்வொரு சஷ்டிப் பதிவுக்கும் வந்திருந்து முருகப் பெருமானின் பதிவோற்சவம் நடாத்திக் கொடுத்த குமரனே - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
//குமரன் (Kumaran) said...
எங்கள் குமரனை முதிர்ந்த பழம் என்று சொல்ல என்ன துணிவு உங்களுக்கு?//
ராகவா காப்பாத்து!
//எழுதும் போது வள்ளிமலைக் கிழவனை நினைத்துக் கொண்டீர்களோ? :-)//
எங்கூருக்குப் பக்கத்தூரு வேலூரு வள்ளிமலையைக் கிண்டல் அடிக்கறீங்களா? ராகவா - ரா, கா, வா! :)
//அது 'பழமுதிர்சோலையில் உதிர்ந்த பழம்' ஐயா.//
முதிர்ந்த பழம் தானே கீழே உதிர்ந்து உதிர்ந்த பழம் ஆவும் ஐயா? :))
//சென்னையில் கந்த கோட்டம் உண்டுன்னு தெய்வயானை அம்மை தன் திருமண நாள் இரவில் பாடுவாளா? எங்கேயே ஏரணம் இடிக்கிறதே. :-)//
பொயட்டிக் லைசென்ஸ்! :)
//திருப்பரங்குன்றத்தில் முக்கிய தெய்வமான திருமுருகன் வலப்பக்கத்தில் இருக்க துர்கையம்மன் நடுவில் இருக்கிறாளே. முதன்மைத் தெய்வம் தானே நடுவில் இருக்கும்?//
தில்லையில், சிற்சபையானது ஆலயத்தின் இடப்பக்கம், ஒரு ஓரமா இருக்கு! உடலுக்கு இதயம் போல-ன்னு அப்படி ஒரு கட்டமைப்பு! மேலே விமானத்தில் கோடுகளின் எண்ணிக்கை கூட, உடல் நரம்புகளின் எண்ணிக்கை தான்!
சிற்சபை ஓரமா இருக்குன்னு, முருகன் சன்னிதி தான் நடுவுல இருக்குன்னு, அம்பலவாணர் மூலவர் இல்லை, முருகன் தான் தில்லை மூலவர்-ன்னு கெளம்புவமோ? :)
//கல்வெட்டு முன்பொரு முறை கேட்டாரே. அவருக்கு விடை இருக்கிறதா?//
மேற் சொன்னது தான் விடை! :)
//வேலுக்குச் செய்த அபிஷேகப் பாலின் சுவை தெரியுமா உங்களுக்கு? நான் அறிவேன் அந்தச் சுவையை. :-)//
வயலூர் முருகனின் வேலாபிஷேகப் பாலை அருந்தி இருக்கேன் குமரன். இன்னும் நாக்கில் இருக்கு!
பொதுவாக கருவறையை விட, உலோக உற்சவர் மீது செய்யப்படும் திருமுழுக்குப் பால் சுவையாவும் மணமாவும் இருக்குறதைப் பாத்திருக்கேன்!
//மூஞ்சூறு வாகனம் தான் பிள்ளையாருக்கு என்று படித்ததாக நினைவு//
மூஷிகம்-ன்னு கரீட்டா தமிழ்-ல சொல்லுங்க! :)
சின்னப் பசங்க நாங்கெல்லாம் எலி-ன்னு தான் சொல்லுவோம்! :)
ஆறு பதிவும் அருமை தல ;))
மிக்க நன்றி ;)
அறுமுகனுக்கு அரோகரா!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரிப்பது முருகனருளில் வந்து எதிரொலிக்குதடா முருகா. உன் கருணையே கருணை. கண்ணனுக்கு நன்றி. வேலும் மயிலும் துணை!
!!! உங்க பதிவுகளெல்லாம் உக்காந்து படிக்கர மேட்டரே இல..நின்னுகிட்டு தான் படிக்கறது..கமெண்ட் செக்ஷன்ல கன்னத்துல போட்டுக்கரேன் :)) கலக்கிப்புட்டேல் போங்கோ. திருப்பரன்குன்ற முருகன் எங்க குல தெய்வம்.
அருமை! அருமை!! அருமை!!! சொல்வதற்கு வேறு வார்த்தைகள் இல்லை. கந்தனுக்கு அரோகரா!
உங்களுடை இநத வலைப்பதிவு, எங்கள் தளத்தில் இவ்வார வலைப்பதிவாகஇடம்பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.
நன்றி
4tamilmedia Team
//கோபிநாத் said...
ஆறு பதிவும் அருமை தல ;))//
கரெக்ட்டா எண்ணிட்டியே கோப்பி! :)ஆறு முகமும் அருமை அருமை! அதனால் அறுமுகனுக்கு அரோகரா!
//கவிநயா said...
திருப்பரங்குன்றத்தில் நீ சிரிப்பது முருகனருளில் வந்து எதிரொலிக்குதடா முருகா//
முருகனருள் மதுரைக்காரங்க சொத்து-ன்னு சொல்லாம சொல்றீங்க-க்கா! ஹூம்! :)
//உன் கருணையே கருணை. கண்ணனுக்கு நன்றி//
கண்ணனுக்கு நன்றியா? முருகனுக்கு இல்லையா? நீங்க எந்தக் கண்ணனைச் சொல்றீங்கக்கா? :)
//gils said...
!!! உங்க பதிவுகளெல்லாம் உக்காந்து படிக்கர மேட்டரே இல..நின்னுகிட்டு தான் படிக்கறது..//
ஹிஹி! ஜிம்முல ஓடிக்கிட்டே கூட படிக்கலாம்! ஜிரா அப்படித் தான் செய்றாரு!
//கமெண்ட் செக்ஷன்ல கன்னத்துல போட்டுக்கரேன் :))//
யார் கன்னத்துல கில்ஸ்? :)
வித்யா சங்கரன் வார்த்தைக்கு மறுப்பேது!? :)
//கலக்கிப்புட்டேல் போங்கோ. திருப்பரன்குன்ற முருகன் எங்க குல தெய்வம்//
பரங்குன்றம் பத்திக் குமரன் பக்கம் பக்கமா சொல்லுவாரு! இப்போ அவர் கட்சியில் நீங்களும் சேர்ந்துக்கிட்டீங்க!
//Expatguru said...
அருமை! அருமை!! அருமை!!! சொல்வதற்கு வேறு வார்த்தைகள் இல்லை. கந்தனுக்கு அரோகரா!//
நன்றி தலைவரே!
முருகா! முருகா! முருகா!
//4தமிழ்மீடியா said...
உங்களுடை இநத வலைப்பதிவு, எங்கள் தளத்தில் இவ்வார வலைப்பதிவாகஇடம்பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.
நன்றி
4tamilmedia Team//
நன்றி 4தமிழ்மீடியா குழுவினரே!
முருகனருள் எங்கும் முன்னிற்க!
முருகனருள் வலைப்பூ குழுவினர் சார்பாகவும், வாசக அடியார்கள் சார்பாகவும் 4தமிழ்மீடியா-க்கு நன்றி தெரிவித்துக் கொள்வதில் உவகை உறுகிறேன்!
ஆடும் பரிவேல் அணி சேவல் என
பாடும் பணியே பணியாய் அருள்வாய்!
Post a Comment