Friday, October 28, 2011

2) திருச்செந்தூர்: ஆண்மைக்கார முருகன்!

சஷ்டி: 2ஆம் நாள்!
வாங்க திருச்செந்தூர் திருப்புகழுக்கு ஓடலாமா?:)
இந்தப் பாட்டும் ஓடற பாட்டு தான்! வேகமா ஓடும்!
தினமும், சின்னச் சின்னத் திருப்புகழ்-ன்னு நேத்திக்கி சொன்னேன்!
ஆனா திருச்செந்தூர்-ன்ன வுடனேயே....அளவில்லா அன்பால், அளவே இல்லாமப் பாடிட்டாரு அருணகிரி!
செந்தூருக்கு மட்டும் 4வரி, 8வரிப் பாட்டே இல்ல! பெரிய பாடல்கள் தான்! இந்தப் பாட்டைப் பழகிக்குவோம் வாங்க! சூப்பர் சந்தம்!

அருணகிரிக்குத் திருச்செந்தூரில் தான், தன் அப்பாவைப் போலவே முருகன் நடனமாடிக் காட்டினான்! பாட்டும் அதே மெட்டில் தான் இருக்கு! = முந்து தமிழ்!

அது என்ன "முந்து தமிழ்"?
= எல்லா மொழிக்கும் ஓட்டப் பந்தயம் நடக்குது! அதுல தமிழ் முந்துது:)

தேக்கநிலை இன்றி, முந்திக்கிட்டே இருந்தாத் தான், உயிர்கள் உருவாகும்! விந்து விந்து, முருகவேள் "முந்து"!
வடமொழி முந்தவில்லை! பிந்தி விட்டது!
ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன், சீரிளமைத் திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே!

ஆனா, தமிழ், ஒரு சாராருக்குள் மட்டும் அடங்கி விடாமல், பழம்பெருமையில் மட்டுமே தங்கி விடாமல் முந்திக்கிட்டே இருக்கு!
அதான் "முந்து தமிழ்"-ன்னு துவங்குறாரு!முந்துதமிழ் மாலை கோடிக்கோடி
சந்தமொடு நீடு பாடிப்பாடி
முஞ்சர் மனைவாசல் தேடித்தேடி...உழலாதே

மொழிகளுள் முந்திச் செல்லும் தமிழிலே, பாமாலைகள் கோடிக் கோடி!
அதையெல்லாம் சந்தத்தோடு பாடிப்பாடிப் பாடணும்!
அதை விட்டுட்டு, அழகான பொண்ணுங்க வீட்டு வாசலைத் தேடித்தேடி உழன்றேன்; (இனி உழல மாட்டேன்!)


செஞ்சிறிய கால் விசாலத் தோகை
துங்க அநுகூலப் பார்வைத் தீர
செம்பொன் மயில் மீதிலே எப்போது...வருவாயே???

சிவப்பான சின்ன கால்! பெரிய தோகை = மயிலுக்கு!
தெறிப்பான, வீரமான, அனுகூலமாப் பார்வை அந்த மயிலுக்கு!
அந்த மயில் மீது ஒயிலாக...என் முருகவா...நீ எப்போடா என் கிட்ட வருவ???அந்தண் மறை வேள்விக் காவல்கார
செந்தமிழ்ச் சொல் பாவின் மாலைக்கார
அண்டர் உபகாரச் சேவல்கார...முடிமேலே

வேள்வியைக் காக்கும் காவல் காரனே
தமிழையே சூடிக்கொள்ளும் மாலைக் காரனே
அமரர்களுக்கு உதவும் சேவல் காரனே, (சேவல் கொடியவனே)!!


அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார
குன்று உருவ ஏவும் வேலைக்கார
அந்தம் வெகுவான ரூபக்கார...எழிலான

வணங்குவோர் எல்லாருக்கும் நேசக் காரனே!
குன்றை அழிக்க (குன்றாய் மாறிய தாரகாசுரன்), வேலை ஏவிவிட்ட "வேலைக்" காரனே!
முடிவே இல்லாத அழகை உடைய ரூபக் காரனே!


சிந்துர மின்மேவு போகக்கார
விந்தை குறமாது வேளைக்கார
செஞ்சொல் அடியார்கள் வாரக்கார...எதிரான

தேவானை மேவி விரும்பும் போகக் காரனே!
குறவஞ்சி வள்ளியின் மெய்க் (உடம்புக்) காவலனே! வேளைக் காரனே!
சிறப்பான மொழிகளைப் பாடும் அடியவர்கள், அன்புக் காரனே!


செஞ்சமரை மாயு மாயக்கார
துங்கரண சூர சூறைக்கார
செந்தில் நகர் வாழும் ஆண்மைக்கார...பெருமாளே!

எதிர்த்தும் வரும் பகைவரை மாய்க்கும் மாயக் காரனே!
போரில் சூரனைச் சூறையாடிய, சூறைக் காரனே!
செந்தில் எனும் செந்தூர் நகரில் வாழும்...என் முருகவா...
நீயே என் பெண்மைக்கு, ஆண்மைக் காரன்! வாடா முருகவா, எப்போது வருவாயோ?From yester year posts.....

முன்பு பதிவிட்ட, திருச்செந்தூர் ரகசியங்கள் இதோ:

* சூரசங்காரம், பலரும் நினைத்துக் கொள்வது போல், திருச்செந்தூரில் நடக்க வில்லை!
அது நடந்த இடம் = தமிழ் ஈழத்தில் உள்ள ஏமகூடம்!

திருச்செந்தூரில் நடித்துக் காட்டப்படும் சூர சங்காரம் மிகப் பிரபலமானதால், பலருக்கும் திருச்செந்தூரில் தான் போர் நடைபெற்றது என்ற நினைப்பு வந்து விடுகிறது!
திருச்செந்தூர் மட்டுமல்லாது, பல முருகன் ஆலயங்களிலும் சூர சங்காரம் நடித்துக் காட்டப்படுகிறது! ஆனால் சூர சங்காரம் நடந்தது ஈழத்தில் தான்!

செந்தூரில் போருக்கு முன்னரே மயனால் கட்டப்பட்ட ஈசனின் ஆலயம்!

அங்கே....சூரனை அழித்த மனக்கேதம் தீர, கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன்!
இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது!திருச்செந்தூர் கோவிலின் முதல்மூர்த்தி யார் தெரியுமா? = முருகன் இல்லை! சிவபெருமான் தான்! :)
சூரனைக் கொன்ற மனக் கேதம் தீர, முருகன் ஈசனை லிங்கமாய் வழிபட்டான். இன்று கோவிலில் நாம் காணும் காட்சியும் அதே தவக் காட்சி தான்!


திருச்செந்தூருக்கு இதுவரை செல்லாதாவர்கள் வசதிக்காக இதோ ஒரு சிறு வர்ணனை!
அப்படியே மனத்திரையில் விரித்துக் கொள்ளுங்கள் என் விரிஞ்சனை!

* கையில் ஜபமாலை, இன்னொரு கையில் சத்தி என்னும் ஆயுதம்!
* முன்கையில் ஒரு தாமரைப்பூ....
* அதை இடப்பக்கம் உள்ள ஈசனுக்கு அர்ச்சிக்கும் போது...
* நாம் திரண்டு வந்து நிற்பதைப் பார்த்து....கொஞ்சம் இருங்க வந்துடறேன்...என்பது போல், நம்மைத் திரும்பிப் பார்த்துச் சிரிக்கும் முகம்! So Romantic Pose!:)
* கையில் வேல் இல்லை! அவன் தோளிலே தாங்கி நிறுத்தியுள்ளார்கள்!முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்!
அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன! கருவறைக்குள் எட்டிப் பார்த்தால், சிவலிங்கம் தெரியும்!
அப்பாவை மந்திரப் பொருள் கேட்டு மிரட்டிய பிள்ளை, இங்கே பணிவே உருவாக, அப்பாவுக்குப் பூசை செய்கிறது! என்ன பணிவு என்ன பணிவு! டேய் செல்லம்.... :)


மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று!
திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து விட்டது).
கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்!

ஆலயத்தில் சிவப்புக் குன்று-செம்பாறைகள் இருந்து, அவற்றைக் குடைந்தே கருவறை உள்ளது! செந்து+இல்=செந்தில்!
பின்னாளில் பிரகாரங்கள் என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்!

கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம்! ஒருமுகம்! சிரிமுகம்!
சிறு பாலகன் ஆதலால், அதே உசரம் தான்! ஆளுயரம் இல்லை!

தலைமாலை சூடி, மணி முடி தரித்து,
வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து,
வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!
கையிலே தாமரைப் பூ பிடிச்சி நிக்கும் ஸ்டைல்!!

உருண்ட முகத்தில் கரிய விழிகளும், கூரிய நாசியும்,
திருப்பவளச் செவ்வாயுமாய்...
தோள்களில் வெற்றி மாலை தவழ,
அதிலே அடியேன் உயிரும் சேர்ந்தே தவழ...


என் மணவாளா...முருகவா! உன் கருவறைப் படியாய் இருந்து, உன்னை எப்பவும் பாத்துக்கிட்டே இருப்பேன்!


செந்தூர் மூலவரைப் பார்த்தாச்சு! உற்சவர்? = மொத்தம் 4 உற்சவர்கள்!
= சண்முகர், ஜெயந்திநாதர், குமார விடங்கர் (மாப்பிள்ளை முருகன்), அலைவாய்ப் பெருமாள்!

நிலைக் கண்ணாடியும் ஒரு உற்சவரே!
சூரசங்காரம் முடிந்து, சண்முகர் திரும்புகையில், கண்ணாடி முன்னே முருகனை நிறுத்தி,
அந்தக் கண்ணாடியில் தோன்றும் நிழல் உருவத்துக்கு, அபிடேகம் (திருமஞ்சனம்) செய்யப்படும்!
= நிழல்நீராட்டு, சாயாபிஷேகம்!


முக்கிய உற்சவர் = சண்முகப் பெருமான்!
டச்சுக்காரர்கள் கடலில் தூக்கி வீசி எறிந்த இந்தச் சிலையை, வடமலையப்ப பிள்ளை மீட்டுக் கொண்டு வந்து நிறுத்தினார்! கட்டபொம்மன் வழிபட்ட விக்ரகமும் கூட!

ஊரெல்லாம் கந்தசஷ்டி 6 நாள் நடைபெற, இங்கு மட்டும் 12 நாள் நடக்கும்!
7 ஆம் நாள், தேவானைத் திருமணம், பின்பு மூன்று நாட்கள், கொலு மண்டபத்தில் ஊஞ்சல் காட்சி!
மும்மூர்த்திகள் வடிவங்களாகவும் அலங்காரம் நடைபெறும்!
பிரம்மன், ஈசன், திருமால் போல் வேடமிட்டுத் தோன்றுவான் முருகன்!
மூலவர் கிழக்கு பார்த்து இருப்பதால், அந்தப் பக்கம் கடல் என்பதால், கோபுரம் மேற்கில் இருக்கும்! அது பூட்டியே தான் இருக்கும்!
ஆண்டுக்கு ஒரு நாள் திறப்பதே வழக்கம்! நாழிக் கிணறு, வள்ளிக் குகை, சண்முக விலாச மண்டபம், கடற்கரை என, அழகு கொஞ்சும் செந்தூர்!


செந்தூரின் பன்னீர் இலைத் திருநீறு மிகவும் புகழ் வாய்ந்த ஒன்று!
செந்தூரான் புட்டமுது, சிறுபருப்புப் பொங்கல், கருப்பட்டியும்-பனங்கிழங்கும் புகழ் மிக்கவை
!

3 comments:

குமரன் (Kumaran) October 28, 2011 8:17 PM  

இந்தப் பாடலைப் படிச்சு ரொம்ப நாளாச்சு. சின்ன வயசுல படிச்சது. நன்றி இரவி.

cheena (சீனா) October 29, 2011 5:28 AM  

அன்பின் கேயாரெஸ்

அருமை அருமை - திருச்செந்தூரின் பெருமை பாடும் இடுகை அருமை. செந்தூரைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒன்று விடாமல் பகிர்ந்தமை நன்று.

காவல்காரன், மாலைக்காரன், சேவல்காரன், நேயக்காரன், வேலைக்காரன், ரூபக்காரன், போகக்காரன், வேளைக்காரன், வாரக்காரன், மாயக்காரன், சூறைக்காரன், ஆண்மைக்காரன் - அடாடா - எத்தனை குணங்கள் - ஆகா ஆகா !

தெய்வயானைக்கு போகக்காரன் - ஆனால் வள்ளிக்கோ மெய்க்காவலன்.

அருமையான் இடுகை கேயாரெஸ் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

joy April 19, 2017 8:09 AM  

திருச்செந்தூரில் இருப்பது முருகனா? அல்லது சுப்ரமணியனா? முருகன் தமிழன் சுப்ரமணியன் எவனோ? ஆக சுப்ரமணியன் சிலையை வைத்து முருகனாக பார்பது எந்த விதத்தில் சரி. புரியவில்லை

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP