Thursday, October 05, 2006

"துள்ளி விளையாடும்"

"துள்ளி விளையாடும்"

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த ஆதிரை என்ற சிறுமி இந்தப் பாடலை எங்கள் வீட்டிற்கு வந்த போது பாடினார்.
கேட்டதுமே மனம் பறி கொடுத்தேன்.
செட்டிநாட்டு மக்கள் அந்தக் காலத்தில் மலேயாவுக்கு பிழைக்கப் போனபோது கூடவே செந்திலாண்டவனையும் கூட்டிச் சென்று கோயில் கட்டி, 'தண்ணீர்மலையான்' எனப் பெயரிட்டு வழிபட்டனர்.
இப்போதும் பல செட்டி நாட்டுப் பெயர்கள் தண்ணீர்மலையான் என்று இருக்கும்.
அந்த நிலையைக் காட்டும் இப்பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.[குறிப்பாக ஆசிரியர் ஐயா அவர்களுக்கு!!]

பாடல்

துள்ளி விளையாடும் - சின்னப்
பிள்ளை முகம் மறந்து

வெள்ளி விளையாடும் -- மலேயா
சீமைநகர் அடைய

நாகப்பட்டினத்து - கடலில்
நங்கூரம் பாய்ச்சி நிற்கும்

செட்டிக்கப்பலுக்கு - துணையாம்
செந்தில் ஆண்டவனே


செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

கப்பல் ஏறுகையில் - முதலில்
கடல் முகம் தெரியும்

கண்களில் நீரோடு -- நிற்கும்
மனைவி முகம் தெரியும்

அன்னை முகம் தெரியும் -- அன்பு
பிள்ளை முகம் தெரியும் [2]

அந்த முகங்களிலே -- செந்தில்
கந்தன் முகம் தெரியும்


செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

பினாங்க் துறைமுகத்தை -- கப்பலும்
நெருங்கி விட்டதையா

கப்பல் அடியினிலே -- கூட்டம்
கண்டிட வந்திருக்கு

தண்ணீர் பூ மலையில் -- நிற்கும்
தண்ணிமலையானே[எங்கள்]

பெண்டுபிள்ளைகளைக் -- காக்கும்
புனித மலையானே


தண்ணி மலையானே -- எங்கள்
தண்ணிமலையானே
கண்களில் நீர் வழிய -- நாங்கள்
கைகள் கூப்புவோமே

செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

தைப்பூச நாளினிலே -அவனும்
நகரத்தைக் கண்டிட

தங்க ரதமேறி - தேரில்
நகர்ந்து வருவானாம்

பார்க்குமிடமெங்கும் -- மக்கள்
பக்தி முகம் தெரியும்

காவடி ஆடிவரும் -- சீனர்
காலடியும் தெரியும்


தண்ணிமலையானே -- எங்கள்
தாகம் தீர்ப்போனே
வந்தவரைக் காக்கும் -- எங்கள்
தண்ணிமலையானே

செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

[விரைவு கதியில்][fast speed]
செந்தில் ஆண்டவனே -- ஐயா

செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே x3

கந்தனுக்கு வேல் வேல் - அந்தக்
காவடிக்கும் வேல் வேல்
கந்தனுக்கும் வேல் வேல்- எங்கள்
கடம்பனுக்கும் வேல் வேல் x 3
****************************************************

முருகனருள் முன்னிற்கும்!
வேலும் மயிலும் துணை!

13 comments:

இலவசக்கொத்தனார் October 05, 2006 5:20 PM  

பாடலைக் கேட்க வழியுண்டோ?

SK October 05, 2006 11:37 PM  

வேணுங்கறவங்க தொலை பேசுங்கள். நான் பாடிக் காட்டுகிறேன்!
ஹஹஹஹ
என்னிடம் அந்த CD இருக்கிறது.
ஆனால் எங்கே என்று தெரியவில்லை.
நல்லவேளை, இது முழுக்க மனப்பாடமாய் இருந்ததால் பிழைத்தேன்
சிபியாரிடம் இதை இன்று போடுவதாய் வாக்களித்து வேறு இருந்தேன்.

பி.கு.:
நான் நல்லா பாடுவேன்.
நம்பிக் கூப்பிடுங்க

:)))!

கோவி.கண்ணன் [GK] October 06, 2006 12:32 AM  

எஸ்கே ஐயா !

பாடல் அருமை, எங்க ஊரு வந்திருக்கு !

அதைவிட பாடிக் காட்டியது செவிக்கு இனிமை ! மனதிற்கு இதம், சிலிர்ப்பு !

அலைகடல் மேல் தாலாட்டும் அசை !
வசீகரப் பாடல் ... !

பாராட்டும், நன்றியும் மிக்க மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.

SK October 06, 2006 12:44 AM  

நான் தான் சொல்லியிருந்தேனே, இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று!
மிக்க நன்றி, கோவியாரே1

மக்களே! உடனே ஃபோன் போட்டு பாட்டைக் கேட்டு விட்டார் கோவியார்.
ஒரு நல்ல குரலில் இப்பாட்டைக் கேட்க உடனே அணுகவும்!!
:))

செல்வன் October 06, 2006 12:52 AM  

எஸ்.கே

ரிகார்ட் செய்து வலையேற்றினால் உலகமே உங்கள் குரலை கேட்கும் அல்லவா?திரை யாராவது இசை அமைப்பாளர் கேட்டால் திரையிசைப் பாடகராக வரவும் வாய்ப்பு உண்டு:-)

SP.VR.சுப்பையா October 06, 2006 1:06 AM  

எஸ்.கே அய்யா
இந்த எளியவனையும் உங்கள் முருகனருள் பதிவுற்குள்
நினைவுகூர்ந்தமைக்கு நன்றி!
எனக்கு முருகன் பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும்
அதிலும் எஸ்.கே அவர்கள் தொகுத்துக் கொடுத்ததென்றால் இரண்டு மடங்கு பிடிக்கும்!

G.Ragavan October 06, 2006 2:05 AM  

மலேசியத்தில் தண்ணீர்மலை முருகனும் பத்துமலை முருகனும் மிகப் பிரபலம். சென்று கண்டு தொழ நாலாயிரம் கண்களை நான்முகன் கொடுக்காவிட்டாலும் நான் முகன் என்று சொல்லும்படி ரெண்டு கண்கள் குடுத்திருக்கிறான். தொழுவேன் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறான்.

எஸ்.கே, பாடல் மிகவும் அருமை. ஒழுங்கா அந்தப் பாட்டப் பாடிப் பதிவு செஞ்சு இங்க வலையேத்தலைன்னா...மயிலார அனுப்ப வேண்டி வரும்னு மட்டும் எச்சரிக்கிறேன். :-)

இந்தப் பாடல் எனக்கு ஒரு திரைப்பாடலை நினைவு படுத்தி விட்டது.

பத்துமலைத் திரு முத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம் என்ற பாடல்தான்.

அதில் இப்படி வரும்
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா
அந்த வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா
ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே என் முருகா
நீ அள்ளிப் போடும் அருளுக்காக ஆடுகின்றோம் முருகா

மேற்கூறிய வரிகளை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார். ஆனால் மிகவும் நீளமான இந்தப் பாடலை சீர்காழி, டீ.எம்.எஸ், பெங்களூர் ரமணி அம்மாள், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர்களோடு இசையமைத்துத் தானும் பாடியிருக்கிறார் மெல்லிசை மன்னர். பாடலைக் கவியரசர் இயற்றியிருக்கிறார்.

SK October 06, 2006 10:03 AM  

இதுக்கு பேர்தான் உசுப்பேத்தி விடறதுங்கறதா, செல்வன்! :)

ஆனால், அந்த CD கிடைக்கலைன்னா, நீங்க [நான்!] சொன்ன மாதிரிதான் செய்ய வேண்டிவரும்!

இப்பவே எச்ச்ரிக்கிறேன்.

SK October 06, 2006 10:08 AM  

உங்கள் பின்னுட்டமென்றாலே எனக்கு இனிப்பு மாதிரி.
சொல்ல வந்ததையும் சேர்த்து, இன்னும் பல ஆச்சரியமான தகவல்களையும் தந்து அசத்துகிறீர்கள், ஜி.ரா.!

செல்வனுக்கு சொன்ன மாதிரி, CD கிடைக்கலேன்னா அப்படியே செய்கிறேன்!

தமிழ் மணம் செய்த பாக்கியம்!! :))

இந்த தண்டனை தேவைதான்!

நீங்கள் சொல்லிய பாடல் மிகவும் அருமை.

பின்னுட்டங்களை அன்போடு வலையேற்றியதற்கும் [ நான் ஒரு டம்மி என்பதைப் புரிந்து கொண்டு!!] என் மனமார்ந்த நன்றி!

SK October 06, 2006 10:10 AM  

தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி, ஆசிரியர் ஐயா!

தாங்கள் இப்பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?

G.Ragavan October 08, 2006 1:30 AM  

// பின்னுட்டங்களை அன்போடு வலையேற்றியதற்கும் [ நான் ஒரு டம்மி என்பதைப் புரிந்து கொண்டு!!] என் மனமார்ந்த நன்றி! //

SK. இங்கு யாரும் டம்மியில்லை. முருகனருள் முன்னிற்கையில் டம்மி என்று யாரைச் சொல்ல முடியும்?

எந்தப் பாடலுக்கான பின்னூட்டம் என்று ஒரு சிறு குழப்பம். அதனால்தான் அப்படி ஆகிவிட்டது. அடுத்த முறை எச்சரிக்கையாக இருக்கிறேன்.

குமரன் (Kumaran) October 08, 2006 10:19 AM  

மிக நல்ல பாடல் எஸ்.கே. ஒலிவடிவிலும் இருந்தால் நன்கு இருக்கும்.

இராகவன். எந்தப் பாடலுக்கு (பதிவுக்கு) வந்தப் பின்னூட்டமாய் இருந்தால் தான் என்ன? யார் முதலில் பார்க்கிறோமோ அவர்கள் அனுமதித்துவிட்டால் நல்லது தானே. எஸ்.கே. இதில் யார் டம்மி யார் டம்மியில்லை என்பது?

SK October 08, 2006 11:09 AM  

நான் எந்த ஒரு தவறான நோக்கத்துடனும் அதைச் சொல்லவில்லை, ஜி.ரா.

சொன்னது தவறாகப் புரிந்து கொண்டிருப்பின், வருந்துகிறேன் அதற்காக.

நீங்கள் அவ்வாறு ஒரு புரிதலுன் செய்தது எனக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது.

நமது இ.கொ. சொல்லித்தான் எனக்கு, நான் கூட பின்னூட்டங்களைப் பர்க்க முடியும் என்பதே தெரிந்தது!

எனவே, இனிமேல் இன்னும் எச்சரிக்கையாய் இருந்து இந்த நல்ல செயலைத் தொடர்ந்து செய்யுமாறு வேண்டுகிறேன்!! :))

இதில் நான் குமரன் கருத்துடன் முழுதும் இணங்குகிறேன். நன்றி, குமரன்.

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP