Monday, June 29, 2015

காப்பாற்ற வா!

கந்த வடிவேலா காப்பாற்ற வாவா
செந்தில் வடிவேலா சீக்கிரமாய் வாவா!

ஆறுமுக வேலனுன்னை
அண்டியவர் கோடியுண்டு
வண்டுவிழி வள்ளியுடன் வாவா, முருகா
தேவயானை தேவியுடன் வாவா!

பக்தர்களைக் காக்கவென்று
பச்சை மயில் ஏறிக் கொண்டு
சக்திசிவ பாலகனே வாவா, எங்கள்
வெற்றிவடி வேலவனே வாவா!

வேதனைகள் தீர்க்கவென்று
வேலெடுத்து ஏந்திக் கொண்டு
மாலவனின் மருமகனே வாவா, எழிற்
கோலமயில் ஏறியிங்கு வாவா!

கான இருள் விரட்டி விட்டு
ஞானந் தர வேண்டுமென்று
தந்தைக் குபதேசித்தவா வாவா, எங்கள்
சிந்தையிலே வந்து அருள் தாதா!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.trinethram-divine.com/2011/09/arumughan.html


Monday, June 01, 2015

Happy Birthday முருகா! (Jun 01, 2015)

இன்று, (Jun 1, 2015) = வைகாசி விசாகம்!

முருகன் பிறந்த நாள்.. (தோற்ற நாள்)
(சம்ஸ்கிருத புராணக் கதைப்படி; தமிழ்த் தொன்மங்களின் படி அல்ல)

எனினும் பிறந்த நாள் மகிழ்ச்சி-ன்னாலே ஒரு மகிழ்ச்சி தானே?
அதனால், பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கறேன்..

Happy Birthday முருகா!
Sweet & Sensual Kisses to you:)
நீ நல்லா இருக்கணும்;
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க!

வேதம் தமிழ் செய்த மாறன், நம்மாழ்வார் (எ) 32 வயசு நாயகி பாவப் பையனுக்கும்...
இன்று தான், உன் கூடவே பிறந்தநாள்! அவனு(ரு)க்கும், பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அடியார்கள்... வாழ்மின் வாழ்மின் என்று அருள் கொடுக்கும்
படிக்கேழ் இல்லாப் பெருமாளை...... பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துள், திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார், வீற்றிருந்து, பெரிய வானுள் நிலாவுவரே!




படம்: கந்தன் கருணை
குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி, & சூலமங்கலம் ஜெயலட்சுமி & ஜமுனா ராணி & ஏ.பி. கோமளா
இசை: கே.வி. மகாதேவன்
வரி: கண்ணதாசன்


ஆறுமுகம் ஆன பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன், முருகன் எனும், இனியபெயர் கொண்டான்!

காலமகள் பெற்றமகன் கோலமுகம் வாழ்க!
கந்தன் என, குமரன் என, வந்தமுகம் வாழ்க!
(ஆறுமுகம் ஆன பொருள்)

1. தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று
2. தண் நிலவின் சாறு எடுத்து வார்த்த முகம் ஒன்று
3. பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று
4. பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று
5. வேல் வடிவில் கண் இரண்டும் விளங்கு முகம் ஒன்று
6. வெள்ளி ரதம்போல வரும் பிள்ளை முகம் ஒன்று
(ஆறுமுகம் ஆன பொருள்)


என்னைக்கும் கேட்காதவன், போன வாரம், உன்னிடம், தெரியாத்தனமா உதவி-ன்னு கேட்டுட்டேன்-டா; 
இனி கேட்க மாட்டேன்; உன்னால முடியாத போது, Will never put you into embarrassment.
உதவி வேணாம்; உன் பதவி போதும்; பதம் எனும் பதவி போதும்!

நீ வேண்டாயே ஆயிடினும், மற்றாரும் பற்றில்லேன்
மெய்த்துயர் வீட்டாவிடினும், சித்தம்மிக உன்மேலே வைத்தேன் அடியேனே.. 

Whatever..
Love u so much
Happy Birthday!

Wednesday, May 27, 2015

கந்தன் வந்தான், கந்தன் வந்தான், வள்ளிமலை மேலாக!


முருகனருள் வலைப்பூ அன்பர்களுக்கும் + குழுவினர்க்கும், நெடுநாள் கழித்து நெஞ்சார்ந்த வணக்கம்!



வள்ளிமலை = என் உள்ள மலை!
எங்கள் வடார்க்காடு மாவட்டத்திலேயே உள்ளது; வடுக நாட்டு எல்லை!

அறுபடைவீடுகள் போல் அதிக ஆரவாரம் இன்றி, ஆன்மீக வணிகம் இன்றி..
அவள்-அவன், சங்கத் தமிழ்க் காதலாய்..
"அவள் பாதம் வருடிய மணவாளா" என்று..
கோயிலை விட.. மலையும், குகையும்,  புனமும், முகடும்..அவங்க உயிர்க்காதலை உரசி உரசிப் பேசும்!

வாரியாரே, கோயில் பணி என்ற பேரில், அதிகம் கட்டடம் கட்ட அஞ்சி, மலையும் குகையுமாயே விட்டு விட்ட தலம்!
வள்ளி, மாயோனின் செல்ல மகள் என்பதால், தீர்த்தம்+சடாரியும், அவள்-அவன் சந்நிதியில் உண்டு; ஆங்கு, பார்ப்பனரல்லாத பூசகர் தான்!

அந்த வள்ளிமலைப் பாடலை இன்று தருகின்றேன்; சினிமாப் பாடல் தான்:)
ஆனால் சுவையான பாடல்; வரலாற்றுச் சிறப்பு மிக்கது!

இன்று May 27!
தோழன் இராகவன் (எ) ஜிரா பிறந்தநாள்  -  Happy Birthday Ragava!
அவன் உடல்-உள்ள நலம் வேண்டி..
உங்கள் வாழ்த்து வேண்டி, ஆசி வேண்டிப் பணிகின்றேன்.




தமிழ்ச் சினிமாவில்..
இசையமைப்பாளர்கள் கூட்டு சேர்ந்து இசையமைத்த சிற்சில படங்கள் உண்டு!
இயக்குநர்கள் கூட்டு சேர்ந்து, இயக்கிய சிற்சில படங்களும் உண்டு!

ஆனால், இசையமைப்பாளர்கள் & இயக்குநர்கள்?
"இருவருமே" கூட்டு சேர்ந்து, அளித்த படங்கள், மிகவும் சொற்பம்!
அவற்றுள் ஒன்று.. தெய்வத் திருமணங்கள் என்ற படம்!
3 இசையமைப்பாளர்கள் + 3 இயக்குநர்கள்

மீனாட்சி கல்யாணம்  =  இசை: KV மகாதேவன்,    இயக்கம்: P. நீலகண்டன்
வள்ளித் திருமணம்    =  இசை: GK வெங்கடேஷ்,  இயக்கம்: K.காமேஸ்வர ராவ்
திருமால் திருமணம்  =  இசை: MSV                      இயக்கம்: கே.சங்கர்

ஆனால் பாடல்கள் + வசனம் = கண்ணதாசன் ஒருவர் மட்டுமே!
பாடலைப் பார்ப்போமா?
என் மனங் கவர் ஸ்ரீதேவி, வள்ளியாய் நடித்த காட்சிகள்.. In my fave Violet dress:)


படம்: தெய்வத் திருமணங்கள்
வரி: கண்ணதாசன்
குரல்: S. ஜானகி
இசை: GK வெங்கடேஷ்



கந்தன் வந்தான், கந்தன் வந்தான்..
வள்ளிமலை மேலாக..
துள்ளி வரும் வேலாட..

புள்ளி மயில் வேலன் - அவன் மங்கை உமை பாலன்
பூஞ்சிட்டுக் பெண்ணிடத்தில் காதல் கொண்ட சீலன்
பொன்னழகு மின்னலிட வெற்றி கொண்ட வீரன்!
(கந்தன் வந்தான், கந்தன் வந்தான்)

ஆறு பதினாறு, வடிவேலன் வரலாறு
ஐந்து படை வீடு கொண்டான் - பேர் கொண்டான்
மேலும் ஒரு வீடு - நான் காண வேண்டும் வேலா
ஆசை ரொம்ப நாளாய் - அதைத் தீர்த்து வைப்பாய் வேலா

செந்தூரின் போர் வீரனே - என்
செந்தூரம் உன் கையிலே!
சேவல் கொடி போட்டு - உன்
திருமுகத்தைக் காட்டு!
(கந்தன் வந்தான், கந்தன் வந்தான்)

மை எழுதும் கண்ணில், உன்
மெய் எழுதிப் பார்த்தேன்
மந்திரத்தின் குருநாதனே! நாதனே!

மஞ்சள் முக வள்ளி - என்றும் உன் பெயரைச் சொல்லி
ஆடுகிறாள் துள்ளி - அவள் கொள்வதில்லை பள்ளி..

சிங்கார வடிவேலனே - என்
சிங்காரம் உனக்கல்லவா!
இந்த மலைக் குறத்தி, உன் இதயத்தில் ஒருத்தி!
இந்த மலைக் குறத்தி, உன் இதயத்தில் ஒருத்தி!
(கந்தன் வந்தான், கந்தன் வந்தான்)

குறிப்பு:
இதே போல், இந்தப் படத்தில், S. ஜானகி பாடிய நாட்டுப்புறப் பாட்டு..
வள்ளி ஆலோலம் பாடுவதாய் - "வெத்தலைக் கிளியே, சொல்லாதே வெளியே, ஓடி வா, ஓடி வா" என்ற பாட்டு மிக்க அழகானது.

*சுசீலாம்மாவும் பாடியுள்ளார்கள், MSV இசையில், அதி அற்புதமான பாடல், "வானமும் பூமியும் ஆலிங்கனம்"
*வாணி ஜெயராமின், "திருமாலே.. சீராரும் மணிவண்ணா", KV மகாதேவன் இசையில், Super Hit பாடல்!
*"தங்கம் வைரம் நவமணிகள்" என்ற பாடலும் வாணி ஜெயராம் தான், பாலமுரளி கிருஷ்ணாவுடன் இணைந்து!

பாடகர் நட்சத்திரப் பட்டாளம், நடிகர் நட்சத்திரப் பட்டாளம், இயக்குநர் பட்டாளம்.. என்று மெய்யாலுமே இந்தப் படம் ஒரு கல்யாண வீடு தான்!


வாரியார், மிகவும் நேசித்த தலம் = வள்ளிமலை!

அவரைக் கால தாமதம் செய்து, அரியலூர் இரயிலில் செல்ல விடாது, இரயில் விபத்திலிருந்து காத்துக் குடுத்த தலம் = வள்ளிமலை!
இதை வாரியாரே பலமுறை சொல்லுவார், "முருகன் பணிக்காக, வள்ளியை நொந்து கொண்டேன்; ஆனால் காப்பாற்றியதென்னவோ, அவள் தான்"


வாரியாரின் சொந்த ஊரான வேலூர்-காங்கேய நல்லூரில் இருந்து, எங்கள் கிராமத்தைத் தாண்டித் தான், குப்பு ரெட்டித் தாங்கல் வழியாக, வள்ளிமலைக்குப் போகணும்.

தெலுங்கு நாட்டின் எல்லை என்பதால், தமிழோடு, தெலுங்கும் அதிகம் உண்டு;

குப்பு ரெட்டித் தாங்கலில் தான் அத்தை-மாமா சில காலம் தங்கியிருந்தார்கள், கிராம நிர்வாக அதிகாரியாக! (VAO)
அப்போ, சிறுபிள்ளை இரகசியக் காதலாய், எனக்குப் பிடித்துக் கொண்ட வள்ளிமலைக் காதல்.. இன்னும் இறங்கலை; என்றும் இறங்காது!

வாரியார், மிக அதிகமான காட்சிகளில் "நடித்த" ஒரு சினிமா= துணைவன்!
அதன் காணொளியும் தருகிறேன்; சும்மா கண்டு மகிழுங்கள்:)




வள்ளிமலைக்குச் செல்ல வேண்டிய நேர்த்திக் கடன் ஒன்னு இருக்கு!
சேர்ந்து செல்லணும்!
வள்ளி வாழ்ந்து புழங்கிய இடங்களைக் காணணும்!


முருகன் எ. குறிஞ்சி நிலப் பையனுக்காகவே..
நடையாய் நடந்து, பாதம் தேய்ந்த வள்ளி - பாதம் வருடிய மணவாளா!

அவன் ஏற்றுக் கொள்வானா? என்று கூடத் தெரியாது..
பேசவும் இல்லாது, பார்க்கவும் இல்லாது..
வந்த பல ஆணழக-மணாளர்களை விலக்கி,
அவன் ஒருவனுக்காகவே வாழ்ந்து முடிந்த வள்ளி!

அவள், முருகனை விட உயர்ந்தவள்/பெரியவள்! - பெரிதினும் பெரிது கேள்!

Once again,
Happy Birthday Ragava! மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Tuesday, May 26, 2015

கந்தனென்று சொல்லச் சொல்ல...


பாகேஸ்வரி ராகத்தில் சுப்பு தாத்தா பக்தியுடன் பாடியது... மிக்க நன்றி தாத்தா!



கந்தனென்று சொல்லச் சொல்லக் கவலைகள் இல்லை, அந்தக்
கந்தன் அருள் பெறுவதுவே வாழ்க்கையின் எல்லை!
(கந்தனென்று)

சிந்தனையில் கந்தனை வை
கந்தனையே வந்தனை செய்
கந்தனன்றி சொந்தமில்லை பந்தமுமில்லை, அவன்
கஞ்ச மலர்ப் பாதமன்றி தஞ்சமுமில்லை!
(கந்தனென்று)

கவலைகளை விட்டு விடு
கந்தனடி பற்றி விடு
ஆறெழுத்து மந்திரத்தை நாளும் சொல்லிடு, அந்த
ஆறுமுகன் துணையிருப்பான் நீயும் நம்பிடு!
(கந்தனென்று)

திருப்புகழின் நாயகனாம்
தீயுதித்த ஷண்முகனாம்
விருப்புகளை அவனிடத்தில் தந்து விட்டாலே, நம்மை
வேல் கொண்டு காத்திடுவான் வாழ்க்கை எல்லாமே!
(கந்தனென்று)


--கவிநயா 

Wednesday, February 04, 2015

முத்தமிழ் முருகா!

தைப்பூசத்திற்காக... தாமதத்திற்கு மன்னிச்சுக்கோடா முருகா...

ஷண்முகனின் பாடலை ஷண்முகப்ரியாவில் சுப்புத் தாத்தா அழகாகப் பாடித் தந்ததை நீங்களும் அனுபவியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



முத்தமிழ் முருகா! சக்திவேல் குமரா!
சித்தத்தில் நின்றாடும் செந்தில் வடிவேலவா!
(முத்தமிழ்)

ஓங்காரத் தத்துவத்தின் உட்பொருள் உரைத்தாய்!
சிங்காரத் தமிழினைச் செப்புவித்தாய்!
(முத்தமிழ்)

எந்தை சிவன் ஈன்ற விந்தை மைந்தனே!
தொந்திக் கணபதியின் சோதரனே!
வந்தேன் என முன்னே வந்தருள் புரிபவனே!
சொந்தம் உனையன்றி யார் குகனே!
(முத்தமிழ்)


--கவிநயா

Monday, December 01, 2014

அவன் அழகன்!

அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!

ராகமாலிகாவில் சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடியிருப்பதை நீங்களும் அனுபவித்துக் கேளுங்களேன்! மிக்க நன்றி தாத்தா!



அழகனின் அழகைப் பாடித் தீருமோ? தர்பாரி கானடா ராகத்தில் சுப்பு தாத்தா மீண்டும் பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!



எத்தனை அழகு 
எந்தன் கந்த வடி வேலன்!
முத்து நகை பூக்கும் எழில் 
சக்தி சிவ பாலன்!
(எத்தனை)

பக்தர்களின் உளமிருப்பான்
சித்தமெல்லாம் நிறைந்திருப்பான்
அப்பனேயென் றழைத்து விட்டால்
அந்தக் கணம் வந்து நிற்பான்!

நெற்றியிலே நீறிருக்கும்
நேசமுகம் மலர்ந்திருக்கும்
சுற்றிவரும் வினைவிரட்டும்
சக்திவேல் கரம் இருக்கும்!
(எத்தனை)

பன்னிருகண் தாயின்
பரிவினைக் கொண்டிருக்கும்
கனியிதழ்ப் புன்னகையோ
கற்கண்டாய் இனித்திருக்கும்!

மார்பினில் ஆரங்கள்
மயிலுடன் அசைந்து வரும்
கிண்கிணிப் பாதங்கள்
சங்கீதம் இசைத்து வரும்!
(எத்தனை)

வேலெடுத்து வந்திடுவான்
வினையெல்லாம் விரட்டிடுவான்
கோலமயில் ஏறி வந்து
கொஞ்சு தமிழ் பேசிடுவான்!

முருகென்னும் பெயரழகன்
கருணையின் வடிவழகன்
இனித்திடும் தமிழழகன், நம்மை
ஈர்த்திடும் அருளழகன்!
(எத்தனை)


--கவிநயா

 படத்துக்கு நன்றி: kaumaram.com

Monday, October 27, 2014

ஆடும் பரிதனில் ஆடி வருபவன்!

அனைவருக்கும் இனிய கந்த சஷ்டித் திருநாள் வாழ்த்துகள்!

 


சுப்பு தாத்தா அருமையாக அனுபவித்துப் பாடித் தந்ததைக் கேட்டுக் கொண்டே வாசியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


("பாதி மதி நதி போது மணி சடை" என்ற திருப்புகழின் மெட்டில்...)


தான தனதன தான தனதன
தான தனதன… தனதான

ஆடும் பரிதனில் ஆடி வருகின்ற
வேடன் மருகனே…வடிவேலா
கூறும் அடியவர் குறைகள் தீர்த்திடும்
குறத்தி வள்ளியின்…மணவாளா

சூர பதுமனைக் கீறிப் பிளந்திட்டு
சுரபதிக் கருளிய…சுடர்வேலா
நாறும் எழில்மலர் சூடி மகிழ்ந்திடும்
தேவ யானையின்… மணவாளா

பூத கணத்தொடு சூழ வருகின்ற
வேத நாயகன்…திருமகனே
பாதச் சிலம்புகள் கீதம் இசைத்திட
பறந்து மயிலினில்…வாகுகனே

காதின் அணிகொண்டு வானின் மதிசெய்த
மாது சக்தியின்…மணிமகனே
நாதனுனை நம்பி நாளும் வணங்கிடும்
ஏழை அடியர்க்கு…அருள்குகனே


--கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.kaumaram.com/gallery/017.html
(படத்தைப் பெரிதுபடுத்திப் பாருங்கள்)

 

Monday, June 23, 2014

வேலனைப் பாடுவதே வேலை!


நீல மயில் மீதில் ஏறி நித்தம் நித்தம் ஆடி வரும்

கோல எழில் கொண்டவனே வேல் முருகா!

உன்னைக்  கொஞ்சிக் கொஞ்சிப் பாடுவதென் வேலை முருகா!



பாலனாக வந்து பர சிவனுக்கே பாடஞ் சொன்ன

பார்வதியின் புத்திரனே வேல் முருகா!

            உந்தன் புகழைத் தினம் பாடுவதென் வேலை முருகா!



வீறு கொண்டு சூரன் தன்னை வேலைக் கொண்டு வீழ்த்தி விட்ட

வெற்றி வடி வேலவனே வேல் முருகா!

            உன்னைப் போற்றித் தினம் பாடுவதென் வேலை முருகா!



தேவர் தம்மைக் காத்த பின்னே தேவ யானைத் தேவியைத் தன்

தாரமாகக் கொண்டவனே வேல் முருகா!

            உந்தன் தாள் பணிந்து பாடுவதென் வேலை முருகா!



காட்டுக்குள்ளே வேடுவனாய் காதல் கொண்ட கிழவனாய்

வேடமிட்டு வந்தவனே வேல் முருகா!

            உந்தன் லீலைகளைப் பாடுவதென் வேலை முருகா!



ஆறு படை வீடு கொண்டு அன்பு மிக்க பக்தருக்கு

ஆறுதலைத் தருபவனே வேல் முருகா!

                        உன்னை அன்பு மீறப் பாடுவதென் வேலை முருகா!


--கவிநயா

Saturday, June 14, 2014

செல்லக் குழந்தை!


தர்பாரி கானடாவில் சுப்பு தாத்தா மனமுருகப் பாடியிருப்பதை நீங்களும் கேட்டு மனம் ம(நெ)கிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


நீ என் குழந்தையடா – உன்னை
மடியேந்துதல் என் உரிமையடா… முருகா…
(நீ என்)

தீச்சுடரில் பிறந்தாய்
தீங்கனியாய் வளர்ந்தாய்
மாங்கனியால் பழனி
மாமலையில் அமர்ந்தாய்!      
(நீ என்)

உன் முகம் காண்கையிலே
உள்ளத்தில் ஒரு நேசம்
திருமுகம் காண்கையிலே
தோன்றுது தனிப் பாசம்!

திருமகள் மருமகனே
திருப்புகழ் நாயகனே
அறுமுகத் திருமகனே
அருகினில் வா குகனே!
(நீ என்)

கூவி அழைக்கின்றேன்
குமரா திரு முருகா!
தாவி எனை அணைக்க
தக்ஷணமே வருவாய்!

தத்தித் தவழ்ந்து வரும்
தங்கத் திருப் பாதம்
எட்டி எனை உதைத்தால்
கிட்டிடுமே மோக்ஷம்!
(நீ என்)


--கவிநயா

படத்துக்கு நன்றி:  http://knowledgefruit.blogspot.com/2010/12/story-of-subrahmanya-is-found-in.html

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP