இராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா!
முருகனருள் வலைப்பூ அன்பர்களுக்குத் தமிழ் திகழ் வணக்கம்!
Covid-19 கட்டுப்பாடுகள் ஆங்காங்கே தளர்த்தப்பட்டாலும்,
வழமையான பாதுகாப்போடே, நலமோடு இருக்க வேண்டுகிறேன்.
கால மாற்றத்தால், பதிவுலகை விட்டுக்
கீச்சு உலகம், முகநூல் உலகம்
என்று பறவைகள் பல்வேறு திசைகளில் பறந்தாலும்,
ஆண்டுக்கு ஒரு முறை பதிவுலகம் வருவது என்பது,
பறவைகளின் வேடந்தாங்கல் வலசை போலத் தான்!
நண்பன், ஜி.ரா எனும் கோ. இராகவன் பிறந்தநாள்.
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள், ராகவா!
நலம் ஏம வைகல், இயைந்து ஏல்-ஓர் எம்பாவாய்!
பிறந்தநாள் பாடலாக, இந்த அரிய திரைப்பாடல்!
ஓடும் நதி என்ற படத்தில்,
சுசீலாம்மா பாடுவது! வயலூர் முருகா என்று வாயாரத் துவங்கி..
வயலூர்.. திருப்புகழ்த் தலம்!
எங்கெங்கோ அலைந்து திரிந்த அருணகிரியை,
"போதும்! என்னிடம் வா.." என்று விளித்த தலம்!
குயிலோ மொழி அயிலோ விழி.. முதலான 19 திருப்புகழ்ப் பாடல்கள்,
இத் தலத்துக்கென்றே அருணகிரி பாடினாலும்,
வேறு தலங்களின் பாடல்களிலும், இந்தத் தலத்தை
அருணகிரியால் மறக்க முடியாது முனுகுவார்!
திரு ஆவிநன்குடித் (பழனி) திருப்புகழிலும்.. இராச கம்பீர நாடாளும் நாயக,
வயலூரா! என்று.. வயலூரை வாய்மொழியாது அவரால் இருக்க முடியாது!
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
இராச கம்பீர நாடாளும் நாயக - வயலூரா
ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடு அதில்
ஆவிநன்குடி வாழ்வான தேவர்கள் - பெருமாளே! (பழனித் திருப்புகழ்)
இது ஒரு வகைக் காதல்!
வேறு தலமும் புலமும் போய்விட்டாலும்,
பறவைகள் வேடந்தாங்கலை நோக்கி இனப்பெருக்க வலசை வருவது போல்,
வேறு களங்களில் இயங்கினாலும்,
அங்கும் நினைவில் ஆழ்த்தி, உதடுகள் முனுகிடும் காதல் - வயலூர்க் காதல்!
திருச் சிராப்பள்ளி, வயலூர் முருகனை வணங்கியே,
வாரியார் சுவாமிகள் தன் உரைகள் பலவும் துவக்குவார்!
வயலூர்த் திருப்புகழ்ப் பாடல்கள் மொத்தம் 19.
எல்லாவற்றிலும், 'வயலூர்' எ. சொல் நேரடியாக வரும், ஒரு பாடல் தவிர!
அது தான், 'கைத்தல நிறைகனி' எனும் திருப்புகழ் துவக்கப் பாடல்!
திருவண்ணாமலையில் தான் திருப்புகழ் தொடங்கிற்று என்றாலும்,
அந்த 'முத்தைத் தரு பத்தித் திருநகை'..
உயிர்-உணர்ச்சிப் பெருக்கால் திடீரென்று விளைந்து விட்ட ஒன்று!
அதைத் 'திருப்புகழ்' என்ற நூலாக்கி, ஓர் ஒழுங்கு வரிசையில் பாடல்களை அடுக்க, வயலூர்த் தலமே துணை புரிந்தது! அதனால், காப்புப் பாடலோடு சந்தமிகு திருப்புகழ் நூல், வயலூரில் இருந்தே துவங்குகிறது!
திருப்புகழ்ப் பயணத்தின் முதல் தலம், வயலூர்!
வயலூரின் வளம் அப்படி! நில வளம் மட்டுமல்ல, மனவளம்!
அந்த மனவள மணவாளப் பெருமானை,
நம்பி நம்பி என்று நம்பி அழைப்பதை, இப் பாடலில் காண்க/கேட்க!
முருகா
அறிவோம் முருகா
வருவோம் முருகா
வயலூர் முருகா
வயலூர் முருகா
குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி
எங்கள் குடும்பம் இருப்பதுன்னை நம்பி நம்பி
பெண்ணுடனே பிறந்த தங்கை தம்பி - தன்னை
என்னுடன் காவல் கொண்டேன் உன்னை நம்பி
கடந்ததும் நடந்ததும் கந்தன் விளையாட்டு
காலங்கள் யாவிலும் நல்ல வழி காட்டு
உள்ள துன்பம் யாவும் இல்லை எனும்போது
உன்னையன்றி யாரை நம்பும் இந்த மாது
நெஞ்சம் உருகாதா
கொஞ்சு தமிழ் வேலா
நெஞ்சம் உருகாதா
கொஞ்சு தமிழ் வேலா
சந்தனம் குங்குமம் சிந்தும் வயலூரா
ஓம் எனும் மந்திரம் சொல்லி வரும் வேலா
மஞ்சள் முகம் பார்த்து பிள்ளை மொழி கேட்டு
மன்னன் மணிக்கைகள் அஞ்சல் என்று காட்டு
நெஞ்சம் உருகாதா
கொஞ்சும் வயலூரா
நெஞ்சம் உருகாதா
கொஞ்சும் வயலூரா
படம்: ஓடும் நதி
குரல்: பி.சுசீலா
வரி: கவியரசர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் M.S.விசுவநாதன்
0 comments:
Post a Comment