சித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்! 6 திருப்புகழ்கள்!
முருகனருள் வலைப்பூ அன்பர்கட்கு, நெடுநாள் கழித்து.. மீள் வணக்கம்!
இன்று (May 27), தோழன் கோ. இராகவன் எனும் ஜி. ராகவன் (ஜிரா) பிறந்தநாள்!
"மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள், இராகவா" எனச் சொல்லி,
6 திருப்புகழ்களை ஒரே பாடல் கோப்பிலே கேட்போமா? சித்ராம்மா குரலில்!
பொதுவாக, திருப்புகழை இன்று பலரும் கர்நாடக இசையில் பாடுகிறார்கள்!
*விரைவான வீறு மெட்டை, ஆலாபனை என்று இழுத்து,
*ஒரே வரியை மீண்டும் மீண்டும் பாடி,
*ஆங்காங்கே பொருள் சிதறி,
*இசை இலக்கணம் மட்டும் போதும், பொருள் போனால் என்ன? எ. போக்கில்,
சந்தம் மிகு திருப்புகழை, கர்நாடக இசை சற்றுக் குதறித் தான் விடுகிறது:(
அப்படியல்லாது, மரபிசையிலேயே பாடி, திருப்புகழின் வீறு மிக்க சந்தமும் அழகுற வெளிப்படுத்துகிறார் ஒரு சினிமாப் பாடகர் என்பது வியப்பு தானே?
அதற்கும் முன்பே வழங்கி வந்த தமிழ்ப் பண்ணிசை! வண்ணம், தூக்கு, நாட்டிய விறலிப் பண்களையே பெரிதும் பயன்படுத்தினார்!
திருப்புகழில் வடமொழி (சம்ஸ்கிருதம்) தட்டுப்பட்டாலும், இசையென்னவோ தமிழிசை தான்! இயல் மட்டுமே வடசொற் கலப்பு சற்று இருக்கும்!
வாருங்கள், மனம் மயக்கும் சித்ராம்மா குரலில்..
திருப்புகழ்ச் செவி நுகர் கனிகளை உண்போம்!
இரு முக்கனிகள், 2*3 = 6 பாடல்கள்!
1. நாத விந்து கலாதி - பழனித் திருப்புகழ்
2. திருமகள் உலாவும் - கதிர்காம/ ஈழத் திருப்புகழ்
3. தமரும் அமரும் - பழனித் திருப்புகழ்
4. அபகார நிந்தை - பழனித் திருப்புகழ்
5. அல்லி விழியாலும் முல்லை நகையாலும் - வள்ளிமலைத் திருப்புகழ்
6. ஏறு மயில் ஏறி - திருவண்ணாமலைத் திருப்புகழ் (பொதுப் பாடல்)
என்ன பழனிக்கு மட்டும் ஓரவஞ்சனையா? என்று என்னை வினவாதீர்கள்:) அருணகிரியை வினவுங்கள்!:))
மொத்தம் 1338 திருப்புகழ்த் தலப்பாடல்களில்,
அதிக எண்ணிக்கை.. ஆவிநன்குடி என்கிற பழனிக்கே! 98 பாடல்கள்!
கேட்டு மகிழுங்கள்!
Happy Birthday Ragava!
உடல் நலமும் உள்ள வளமும் ஓங்கி, தமிழ் சிறக்க வாழி!
இப் பாடல் கோப்பில் வரும், 6 திருப்புகழ்ப் பாடல்களின் வரிகள்.. கீழே!
இவற்றுள் 1, 2, 4, 6 பாடல்களை, இவ்வலைப்பூவில் முன்னமே இட்டுள்ளோம்.
இடப் பக்கப் பட்டியில், விண்மீன் குறியுடன் துவங்கும், முதல் வரி அகர முதலிப் பட்டியலைக் காண்க! பல முருகன் பாடல்களைத் தேட உதவும்!
1. நாத விந்து கலாதி - பழனித் திருப்புகழ்
நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகுகோடி
நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூர நமோ நம - பரசூரர்
சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம - கிரிராஜ
தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம - அருள்தாராய்
ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் - மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பீர நாடாளு நாயக - வயலூரா
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டு அவரோடே முன்னாள் அதில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலை - இல் ஏகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் - பெருமாளே!
2. திருமகள் உலாவும் - கதிர்காம ஈழத் திருப்புகழ்
திருமகள் உலாவும், இரு புய முராரி,
திரு மருக நாமப் பெருமாள் காண்!
செக தலமும் வானும், மிகுதிபெறு பாடல்,
தெரி தரு குமாரப் பெருமாள் காண்!!
மருவும் அடியார்கள், மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண்!
மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர் காமப் பெருமாள் காண்!!
அரு வரைகள் நீறு, பட அசுரர் மாள
அமர் பொருத வீரப் பெருமாள் காண்!
அரவு பிறை வாரி, விரவு சடை வேணி
அமலர் குரு நாதப் பெருமாள் காண்!!
இரு வினை இலாத, தரு வினை விடாத
இமையவர் குலேசப் பெருமாள் காண்!
இலகு சிலை வேடர், கொடியின் அதி பார
இரு தன விநோதப் பெருமாளே!!
3. தமரும் அமரும் - பழனித் திருப்புகழ்
தமரும் அமரும் மனையும் இனிய
தனமும் அரசும் அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய எறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவும் இருபாதம்
கருத அருளி எனது தனிமை
கழிய அறிவு தர வேணும்!
குமர சமர முருக பரம
குலவு பழனி மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி மணவாளா!
அமரர் இடரும் அவுணர் உடலும்
அழிய அமர்செய்து அருள்வோனே
அறமும் நிறமும் அயிலும் மயிலும்
அழகும் உடைய பெருமாளே!
4. அபகார நிந்தை - பழனித் திருப்புகழ்
அபகார நிந்தை பட்டு உழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநான் நினைந்தருள் பெறுவேனோ?
இபமா முகன் தனக்கு இளையோனே
இமவான் மடந்தை உத்தமி பாலா
செபமாலை தந்த சற் குருநாதா
திருவாவி நன்குடிப் பெருமாளே!
5. அல்லி விழியாலும் - வள்ளிமலைத் திருப்புகழ்
அல்லி விழியாலும் முல்லை நகையாலும்
அல்லல்பட ஆசைக் கடல் ஈயும்
அள்ள இனிதாகி நள்ளிரவு போலும்
உள்ள வினையார் அத் தனம் ஆரும்
இல்லும் இளையோரும் மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் சமனாரும்
எள்ளி எனதுஆவி கொள்ளை கொளும் நாளில்
உய்ய ஒரு நீ பொற்கழல் தாராய்!
தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர்
சொல்லும் உபதேசக் குருநாதா
துள்ளி விளையாடு புள்ளி உழை நாண
எள்ளி வனம் மீதுற்று உறைவோனே
வல்லை வடிவேலைத் தொடுவோனே
வள்ளி படர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளி மணவாளப் பெருமாளே!
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
7 comments:
Belated happy birthday Ragavan!
Thanks... god bless you..
உங்கள் மாதவிப்பந்தலில் கடந்த சில நாட்களாக வந்து திருப்பாவை பற்றிய பகுதிகளைக்கொண்டு படித்து பக்திப்பாடல் பரவசம் கொண்டேன். அங்கு நீங்கள் தொடர்ந்து எழுதாத்து விட்டு விட்டது ஏனோக்கு? தயவு கூர்ந்து தொடர்ந்து எழுதுமாறு தயவோடும் ஆர்வத்தோடும் மேலும் அறியும் ஆர்வத்தோடும் கேட்டுக்கொள்ளுகிறேன். மிக்க நன்றி் அன்புடன் ப. யசோதா.
ஒவ்வொரு பாடல்களுக்கும் நாய்கள் கொடுத்திருக்கும் விளக்கம் அபாரம். மீண்டும் மீண்டும் படித்துப் படித்து வியக்கிறேன். இங்கு தான் இறுதியாகப் பதிவு போட்டிருக்கிறீர்கள் என்பதால் இங்கு வந்து சொல்லும் படி ஆகி விட்டது் இவைகளும் படித்து உட்புறத்தில் தக்கதே. உங்கள் நற் தொண்டிற்கும் மொழி ஆழுமைக்கும் என் மனம்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
மன்னிக்கவும். தவறுதலாக எழுத்தும் பிழைகள் வந்து விட்டன.....புதிதான எழுத்துருவில் தட்டச்சுவதால் இந்தச்சாலை சிரமம் நேர்ந்தது இப்போது தான் கண்டேன். மன்னிக்க....
யசோதா அக்கா என்னக்கா இப்படி பொசுக்குன்னு நாய்கள்னு சொல்லிப்புட்டீங்க .... இருந்தாலும் அறியாமல் செய்யும் பிழைகள் அன்றே மன்னிக்கப்படுகின்றன என்பதால் அய்யா மன்னிச்சுட்டாங்க கவலைபடாதீங்க ... அப்படியே இதையும் கிளிக்குங்க.
நாத விந்து கலாதி - பழனித் திருப்புகழ். ஆஹா குயிலொன்று தேனாகவந்து காதில் அமுதமாக சொரியும் இன்னிசை ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
Post a Comment