லால்குடி ஜெயராமன்: செந்தில் நகர் மேவும் தேவா
நேற்று (Apr 22, 2013) காலமான வயலின் இசைக் கலைஞர், திரு. லால்குடி ஜெயராமன் அவர்களுக்கு அஞ்சலி;
லால்குடியாரின் ஆன்மா, இறைத் திரு நீழலில், இளைப்பாற வேண்டுதல்!
சற்றே "ஆச்சாரமான" இசைக் கலைஞர் எனினும், அவருடைய இசை என்னைப் பெரிதும் கவர்ந்த ஒன்று;
"பெண்களுக்கு வாசிக்க மாட்டேன்; ஆண்களுக்கு மட்டுமே வயலின் பக்க இசை" - போன்ற அவரின் அபிமானங்கள்... எனக்குக் கிஞ்சித்தும் உடன்பாடே இல்லை!
என்றாலும், அவர் என்னைக் கவர்ந்தது வியப்பே! அவரின் இசை அப்படி;
("கருத்து வேறு; மனிதம் வேறு" - என்றே என்னைச் சற்றே மாற்றிப் படைத்து விட்டான் முருகன்;
அதனால் விளையும் துன்பமும் இன்பமும் = வாழ்க்கை அவனுடன் தான்!)
லால்குடியின் இசை = மரபில் ஊறித் திளைக்கும் இசை;
ஆனால், அந்த மரபு = மிகச் சுத்தமான மரபு
தியாகராஜரின் மோட்சமு கலதா... அப்படியே லால்குடியின் வயலின், கண்ணீரிலே கரையும்!
இப்படிப்பட்டவரு, "சிருங்காரம்" என்னும் சினிமாப் படத்துக்கும் இசை அமைச்சாரு:)
அந்தப் படமே, ஒரு மரபிசைப் படம் தான் = கோயில் தேவதாசியின் கதை;
தேவதாசி = நித்ய சுமங்கலியா? பெண்ணடிமையா? சாதிக் கொடுமையா?
எதுன்னாலும்...
விடுதலையோ/ அடிமையோ = அவளின் "காமம்"; அதுவே நிரந்தரம்!
* அந்தப் படத்தின் பாடல்கள் = இங்கே
* படத்தின் வலைத்தளம் = இங்கே
வயலினை, இரும்புக் கம்பியால் மீட்டாமல், தேன் கம்பியால் மீட்டியவர் லால்குடி ஜெயராமன்;
அவர் இல்லாத இந்த வேளையில்...
"திருமுருகன்" மீது, அவரே எழுதி, இசையமைத்த பாடல் ஒன்று... இன்று!
செந்தில் நகர் மேவும் தேவா - சிவபாலா, நீ
சிந்தை இரங்கி எனை ஆளவா - வேலவா!
எந்த வேளையும் உன்னை அன்றி - வேறோர் எண்ணம் உண்டோ?
எந்தன் உள்ளமும் நீ அறியாயோ? - ஏன் இந்த மாயம்?
(சிட்டை ஸ்வரம்)
இது தகுமோ? தருமம் தானோ?
வாராதிருக்க மருமம் ஏனோ?
கனிந்து வந்திடா விடில், யான் என் செய்குவேன்?
ஏதும் புகலிடம் அறியேன்; ஒரு கணமேனும் மறந்தறியேன்;
இவ்விளம் பேதை..
மகிழ - முழு மதி - முகம் அதில் - குறுநகை யொடு
கருணை - பொழிய வா - அருளே தருக வா - திரு மால் மருகா!
(முடிப்பு)
வா வா, ஆடும் மயில் மீது வா!
அழகா முருகா நீ...
உன் வடிவழகைக் காண, என் முன் நீ
(வா வா, ஆடும் மயில் மீது வா!)
என் முறை கேட்டிலையோ? வர மனமிலையோ?
செவி புகவிலையோ? இனியாகிலும்
(வா வா, ஆடும் மயில் மீது வா!)
உருகி உருகி, உளம், ஊண் உறக்கம் இன்றிப்
பெருகிப் பெருகி, விழி உடலது சோர்ந்திட
ஆவலோடு உனை நாடி எங்கும் தேடினேன்
மனம் வாடினேன் - துயர் ஓடிடவே
(வா வா, ஆடும் மயில் மீது வா!)
அன்றே ஒரு நாளும் உனைக் கை விடேன் - என அன்புடனே
ஆதரவைச் சொன்னதும், மகிழ்ந்துளம் கலந்ததும் - சிறிதும் நினைவிலையோ?
பரம தயையும் - பரிவும் உறவும் - மறையுமோ இன்று?
இனித் தாளேன்!
தணிகை வளரும் அரு மணியே, என் கண் மணியே,
என் உயிரின் துணையே!
(வா வா, ஆடும் மயில் மீது வா!)
ராகம்: நீலாம்பரி
தாளம்: ஆதி
எழுதி/இசை: லால்குடி ஜெயராமன்
2 comments:
அழகா முருகா நீ...
பாடல் அருமை...
தொடர வாழ்த்துக்கள்...
அழகன் முருகனை வா வா என
பாடிய லால்குடி ஜெயராமன் அவர்களை
நினைவு கூர்ந்தது மனம் நெகிழ்சசெய்தது.
எனது கந்தனைத் துதி வலைக்கு ஒரு புதிய பதிவு இல்லயே
என்ற என் குறையை ஏற்று
கந்தனே
கண்ணபிரானை அனுப்பி வைத்திருக்கிறார்.
நன்றி கே.ஆர்.எஸ்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
www.kandhanaithuthi.blogspot.in
Post a Comment