கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 14 - நிறைவு
“நல்லோர்
நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்காரத்தடி
அறிந்து
எனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந்து உணவாகச்
சூரபத்மாவைத்
துணித்த கை அதனால்
இருபத்து
ஏழ்வர்க்கு உவந்து அமுது அளித்த
குருபரன்
பழனிக் குன்றினில் இருக்கும்
சின்னக்
குழந்தை சேவடி போற்றி!
எனைத் தடுத்து ஆட்கொள என்றனது
உள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள்
சேனாபதியே போற்றி!
குறமகள்
மனம் மகிழ் கோவே போற்றி!
திறம் மிகு திவ்ய தேகா
போற்றி!
இடும்பாயுதனே
இடும்பா போற்றி!
கடம்பா
போற்றி! கந்தா போற்றி!
வெட்சி
புனையும் வேளே போற்றி!
உயர் கிரி கனகசபைக்கு ஓர்
அரசே!
மயில் நடம் இடுவோய் மலரடி
சரணம்!
சரணம் சரணம் சரஹண பவ
ஓம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!”
"சஷ்டி
கவசத்தின் இறுதிப் பகுதி இது.
இறைவன் திருவடிகளே சரணம் என்று போற்றி
இந்தத் துதிப்பாடலை நிறைவு செய்கிறார் அடிகளார்.
நல்லவர்களான
அடியவர்களின் நினைவில் நின்று என்றும் நடனம்
செய்யும் திருவடிகள் எல்லா பகையையும் அழிக்கும்
முருகப்பெருமானின் திருவடிகள். அவற்றை அறிந்து எனது
உள்ளத்திலும் இருத்தினேன்.
அஷ்ட லக்ஷ்மிகளில் வீர லக்ஷ்மிக்கு விருந்து
உணவாக சூரபத்மனைத் துணித்தத் திருக்கைகளால் இருபத்தி ஏழு நட்சத்திர தேவதைகளில்
கார்த்திகைக்கு உரிய தேவதைகளிடம் அமுது
உண்டு கார்த்திகேயன் என்று பெயர் பெற்று
எல்லா நட்சத்திரங்களுக்கும் பெருமை தந்த குருபரனான
பழனிக்குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தையின் சிவந்த
திருவடிகள் போற்றி!
நல்லோர்
நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்காரத்தடி
அறிந்து
எனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு விருந்து உணவாகச்
சூரபத்மாவைத்
துணித்த கை அதனால்
இருபத்து
ஏழ்வர்க்கு உவந்து அமுது அளித்த
குருபரன்
பழனிக் குன்றினில் இருக்கும்
சின்னக்
குழந்தை சேவடி போற்றி!
தீய வழிகளில் நான் செல்லாமல் என்னைத்
தடுத்து உனது அடியவனாக என்னை
ஆட்கொள்வதற்காக நீயாகவே உன் கருணையினால்
எனது உள்ளத்தில் நிறைந்த அழகிய வடிவு
உடைய வேலவனே போற்றி!
தேவர்களின்
சேனைத்தலைவனே போற்றி!
குறவர்களின்
திருமகளான வள்ளியம்மையின் மனத்தை மகிழ்விக்கும் தலைவனே
போற்றி!
வலிமையுடைய
தெய்வீகமான திருவுடலை உடையவனே போற்றி!
எனைத் தடுத்து ஆட்கொள என்றனது
உள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள்
சேனாபதியே போற்றி!
குறமகள்
மனம் மகிழ் கோவே போற்றி!
திறம் மிகு திவ்ய தேகா
போற்றி!
இடும்பைகள்
என்னும் துன்பங்களை ஆயுதமாக உடையவனே! இடும்பைகளை
நீக்குபவனே! போற்றி!
கடம்ப மாலை அணிந்தவனே போற்றி!
கந்தனே போற்றி!
வெட்சி
மாலை அணியும் தலைவனே போற்றி!
இடும்பாயுதனே
இடும்பா போற்றி!
கடம்பா
போற்றி! கந்தா போற்றி!
வெட்சி
புனையும் வேளே போற்றி!
மிக உயர்ந்த கந்தகிரியில் இருக்கும்
பொற்சபைக்கு ஒப்பில்லாத அரசனே! மயிலில் ஏறி
நடனம் இடுபவனே! உனது மலர் போன்ற
திருவடிகள் சரணம்! ஆறெழுத்து மந்திரத்திற்குத்
தலைவனே சரணம் சரணம்! ஆறுமுகத்தரசே
சரணம் சரணம்!
உயர் கிரி கனகசபைக்கு ஓர்
அரசே!
மயில் நடம் இடுவோய் மலரடி
சரணம்!
சரணம் சரணம் சரஹண பவ
ஓம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!
இத்துடன்
கந்தர் சஷ்டி கவசத்திற்கு பொருள்
சொல்லி நிறைவுற்றது நண்பா. முழு நூலுக்கும்
பொருள் சொல்லி முடிக்கும் வரை
பொறுமையாக என்னுடன் இருந்ததற்கு நன்றி நண்பா. முருகனின் அடியவர்களான நம் இருவர் இடையிலும்
எந்தக் காலத்திலும் எந்த பிரிவும் வராமல் முருகன் திருவருள் புரியட்டும். அப்படியே
ஏதேனும் கருத்து வேறுபாடு வந்தாலும் அவை தானே விலகி ஓட திருமுருகன் திருக்கைவேல் அருளட்டும்.
வெற்றி வேல்! வீர வேல்!"
***
கந்தர்
சஷ்டி கவசம் நூலுக்குப் பொருள்
சொல்லப் பணித்த கவிநயா அக்கா, இராகவன், இரவிசங்கர் முதலிய நண்பர்கள்
அனைவருக்கும் மிக்க நன்றி. பணிச்சுமையாலும்
வேறு வேலைகளாலும் தொடர்ந்து எழுத முடியாமல் போனது.
பொறுமையாகப் படித்த அனைவருக்கும் நன்றி.
அண்மையில்
காலம் சென்ற எனது தாய்வழிப்
பாட்டி திருமதி. சந்திரா அவர்களின் நினைவுக்கு
இந்த சிறு பணி சமர்ப்பணம்.
7 comments:
அருமை... முந்தைய பதிவுகளை படிக்கிறேன்...
மிக அருமையான, போற்றப்பட வேண்டிய அரும்பெரும் பணி. இறையருட் கருணை பொழியும் அற்புதத் தொடரை நன்முறையில் நிறைவு செய்திருக்கிறீர்கள்.முருகனருளால் தாங்கள் எல்லா வளமும் பெற்று நலமாக வாழப் பிரார்த்திக்கிறேன். தொடரட்டும் தங்கள் சீரிய பணி!!.
முருகா இப்பணி முருகுடன் வாழ்க!
முருகன் அருளெனும் வலைப்பூ வாழ்க!
கவசப் பொருளின் பதிவுகள் வாழ்க!
கவசப் பொருள்சொல் குமரன் வாழ்க!
கந்தன் அடியார் காப்பு வாழ்க!
கந்தர் சட்டிக் கவசம் வாழ்க!
ஆவி நன் குடி ஏரகம் வாழ்க!
செந்தூர் அலைகள் சிறப்புடன் வாழ்க!
பரங்கிரி தணிகை சோலை வாழ்க!
ஆறா மனத்தில் ஆறும் வாழ்க!
கந்தர் சட்டிக் கவசம் வாழ்க!
எந்தன் மனதில் என்னவன் வாழ்க!
நம்பிக் கைப்பிடி நம்பி வாழ்க!
நம்பி வந்தொரு நட்பும் வாழ்க!
என்
உயிருக்கு உயிராம் முருகன் வாழ்க!
என்
உயிர் போயிடினும் உன்னருள் வாழ்க!
உயிரின் கவசம் எதுவோ வாழ்க!
முருகன் உறவு அதுவே வாழ்க!
மிகவும் நன்றி. இது போல் கந்தகுரு கவசத்திற்கும் பதிவு உள்ளதா ?
http://spiritualcbe.blogspot.in/
இனிமேல் தான் எழுத வேண்டும் சரவணகுமார்.
ஐயா,
நான் பல முறை முயன்று தடைகளைத்தாண்டி கந்த சஷ்டி கவசத்தை முப்பத்தி ஆறு முறை தொடர்ந்து தியானத்தில் ஒரே சிந்தனையுடன் கூறி இருக்கிறேன். ஆனால் பலன் கிடைக்குமா?
அன்பன்
சுந்தரேசன்
Post a Comment