Sunday, June 05, 2011

காதல் காவடிச் சிந்து! - முருகன் நடையழகு!

மாதவிப் பந்தல் பதிவுக்கு எதிர்ப் பதிவு இது! :)

பொதுவாக, இறைவனை வீதியுலாவுக்கு எழுந்தருளப் பண்ணும் போது, சிற்சில சமயம், நடையழகு காட்டப்படும்!
1. சிம்ம கதி = சிங்க நடை
2. கஜ கதி = ஆனை நடை
3. அஸ்வ கதி = புரவி நடை
4. ஹம்ஸ கதி = அன்ன நடை
5. சர்ப்ப கதி = அரவு நடை

* துவக்கத்தில் சிம்மம் போல் உதறிப் புறப்படுதல்,
* மெல்ல யானை போல் நடந்து,
* பின்பு குதிரை வேகம்!
* திரும்பி வரும் போது, களைப்பால் அன்ன நடை!
* கடைசியில், பாம்பு புற்றுக்குள் போகும் போது, தலையைப் படக்-ன்னு எட்டிப் பார்த்து, மொத்தமும் சுருட்டிக்கும்! அது போல் கருவறைக்குள் படக்-ன்னு புகுதல்!
= இதுவே நடையழகு!

இதெல்லாம் தோளில் சுமந்து வரும் போது மட்டுமே சாத்தியம்; தேரிலோ, வண்டிச் சகடையிலோ வைத்து இழுத்து வரும் போது சாத்தியப்படாது!

ஒரு சில வைணவத் தலங்களில் மட்டுமே, இந்தத் தோளில் கதி போட்டு, உலா வருவதைக் கவனித்துள்ளேன்! அதுவும் நாட்டியம் ஆடி ஆடி அழைத்து வரும் அழகு! மற்ற வைணவக் கோயில்களும் கூட நடையழகு கிடையாது! வெறும் சகடை தான்!

சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் கொஞ்ச நேரம் தோளில் லேசாக ஆட்டினாலும், உடனே சகடைக்கோ, தேருக்கோ மாற்றி விடுவார்கள்! நடையழகு பூரணமாக இருக்காது!
திருவாரூரில் அஜபா நடனம்; திருவண்ணாமலையில் அதே போல! ஆனால் அங்கும் சகடையில் ஏற்றி விடுவார்கள்! ஈசன் = நடன நாயகன் அல்லவா! ஆனால் என் முருகன்?


இதைப் பார்க்கும் போதெல்லாம் மனசு அடிச்சிக்கும்! என் முருகனுக்கு இப்படிப் பண்ண மாட்டாங்களா, பண்ண மாட்டாங்களா-ன்னு!

முன்னால் கும்பலாய் தமிழ் ஓதி வர,
இறைவன் தமிழுக்குப் பின்னால்!
வடமொழி சொல்றவங்க சொச்சம் பேரு, இறைவனுக்கும் பின்னாடி கொஞ்சமாய் ஓதி வருவாங்க!

இவருக்கே இம்புட்டு கெத்து-ன்னா, என்னவன் முருகன் = மாப்பிள்ளை!
அவனுக்கு எம்புட்டு கெத்து இருக்கும்! போங்கடா! :) என் முருகனும் இப்படியெல்லாம் தோளிலே ஆடி ஆடி வரும் நாள் வரும்! தமிழ் ஓதி வரும் நாள் வரும்!

அது வரை, நான் உன்னை நடையழகு செய்விக்கிறேன்-டா, Darling Muruga! Come on Honey, Letz dance! :)



* காவடிச் சிந்து ஒன்னை இன்று அவசரம் அவசரமாய் எழுதினேன்!
* படம் ஒருவன் பிறந்தநாளுக்கு வரைந்தது!
* அத்தனையும் இங்கே என் முருகனுக்கே இட்டு.....இதோ...காதல் காவடிச் சிந்து :)

(தந்தனத் தன, தந்தனத் தன,
தந்தனத் தன, தந்தனத் தன
- என்ற மெட்டிலான காவடிச் சிந்து)

வண்ண மயில் தோகை ஒன்று, முன்ன மாகப் பின்னி வைத்து
அங்கும் இங்கும் ஆடிஆடி நோக்குதே - கந்தன்
அழகு மயில் என்னை உற்றுப் பாக்குதே!

நெற்றி மேலது நீலச் சுட்டியும், பேசும் வாய்மொழி வெல்லக் கட்டியும்
விட்டுவிட்டு என்னை வந்துச் சீண்டுதே - கைகள்
தொட்டுத்தொட்டுக் கொஞ்சி என்னைத் தீண்டுதே!
(1)
------------------------------------------------------------

பழனி மலையதும், சாமி மலையதும், தணிகை மலையதும், சோலை மலையதும்
வாடி வாடி என்று என்னைக் கூவுதே - பரங்
குன்றும் செந்தூர் அலையும் காலை நீவுதே!

ஆறு ஊர் படை, வீடு மீதினில், நானும் அவனொடு, சேர்ந்து வாழ்ந்திட
ஆசை ஆசை என்று என்னை ஏவுதே - உள்ளம்
பாகில் ஊறும் பாலைப் போலப் பாவுதே!
(2)
------------------------------------------------------------

கந்தன் வந்தெனைக் கூட்டிச் செல்வேன், காலம் முழுவதும் காத்து நிற்பேன்
சொல்லி என்தன் மூச்சையும் முகர்ந்தனன் - சொக்கி
ஈர இதழில் இன்பத் தமிழைப் பகர்ந்தனன்!

வேலும் ஆடிட, மயிலும் ஆடிட, சேவற் கொடியும் சேர்ந்து ஆடிட
வேகம் வேகம் ஆக வேலன் கூடினன் - என்னுள்
வேண்டி வேண்டி என்னென்னமோ தேடினன்!
(3)
------------------------------------------------------------

தந்தனத் தன, தந்தனத் தன, தந்தனத் தன, தந்தனத் தன
ஆடி ஆடி மேனி யெல்லாம் வேர்த்தனன் - ஐயன்
தாவித் தாவித் தாகம் எல்லாம் தீர்த்தனன்!

மரகதத் திரு, மயில் அணித் திரு, மாயவன் தன், மகள் எனக்கொரு
காதலோடே ஆசை நடை நடந்தனன் - நான்
காணும் முன்னே வாசலைக் கடந்தனன்! ஐயோ

காணும் முன்னே வாசலைக் கடந்தனன்! (4)
------------------------------------------------------------

காணும் முன்னே வாசலைக்க-டம்பன் அந்தப் பாவி மீண்டும்
வேணும் என்றே வாசலை அடைந்தனன்!! - நீ
வேணும் என்றே என்னையும் அடைந்தனன்!! - முருகன்

வேணும் என்றே என்னையும் அடைந்தனன்!!

முருகா!.......

4 comments:

Kavinaya June 07, 2011 8:47 AM  

பாடல் வெகு அழகு. படமும்தான்! மாலையும் மாலையும் கை கோர்த்திருக்கே :)

Kannabiran, Ravi Shankar (KRS) June 07, 2011 9:40 AM  

//மாலையும் மாலையும் கை கோர்த்திருக்கே :)//

உங்க கண்ணுல கரெக்டா படுமே :)

அது ஒரே மாலை தான்-க்கா! இரண்டு பேர் சூடினாலும், அதன் முடிவான குஞ்சரம் ஒன்னாத் தான் இருக்கும்!

எங்கூரு வாழைப்பந்தல் பெருமாளுக்கு இப்படித் தான் கட்டுவாங்க! ஏன்-ன்னா அவர் அவளை விட்டுப் பிரியவே மாட்டாரு! அபிஷேகம் கூட இப்படியே தான் ஆகும்! :)

அது மனசுலயே இருக்கா! அதான் முருகனுக்கு அப்படியே வந்துடிச்சி!:)

Lalitha Mittal June 08, 2011 8:33 AM  

அருமை!அழகு!!அற்புதம்!!!

Unknown August 24, 2012 11:19 PM  

If u want to see murugan nadai azagu u must see the Maryland (USA) Murugan temple of North America. Oh, my god, Definitely you will love it murugan nadai azagu.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP