காலமெல்லாம் இனிக்கும் காட்சி!
===========================================
காலமெல்லாம் இனிக்கும் காட்சி!
ஒவ்வொருவருக்கும் ஒரு காட்சி காலமெல்லாம்
இனிய நினைவாக அவர்கள் மனதில் நிற்கும்.
ஆனால் முருகபக்தர்களுக்குக் காலமெல்லாம் மனதில்
நிற்கும் இனிய காட்சி ஒன்று உண்டு என்றால் அது
வேலோடும், மயிலோடும், பேரழகோடும் - முருகன்
அமர்ந்திருக்கும் காட்சிதான் என்பதில் எந்தவித
ஐயப்பாடும் இல்லை!
அப்படிப்பட்ட காட்சி ஒன்றை மனதை நெகிழ்விக்கும்
விதமாகக் கவிஞர் ஒருவர் பாடலாக்கிக்
கொடுத்துள்ளார். பாடலைப் பதிவிட்டுள்ளேன்.
அன்பர்கள் அனைவரையும் படித்துமகிழ வேண்டுகிறேன்!
-----------------------------------------------
"வேல்வந்து வினைதீர்க்க
மயில்வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி - குமரன்
கொலுவிருக்கக் கண்டேனடி
(வேல்வந்து)
பால்கொண்டு நீராட்டி
பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி
திருப்புகழ்மாலை கேட்டேனடி
பங்குனியின் உத்திரத்தில்
பழனிமலை உச்சியினில் - கந்தன்
எனைக் கண்டானடி
சிந்தையில் நின்றானடி
வேலழகும் மயிலழகும்
வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி - அந்தக்
காட்சியென்றும் இனிக்குமடி!
(வேல்வந்து)"
--------------------------------------------------
பாடல் ஆக்கம்: கவிஞர்.திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம்
இசை: திரு.வைத்தியநாதன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்.
அன்புடன்,
அடியார்க்கு அடியவன்
SP.VR. சுப்பையா
8 comments:
சுப்பையை ஐயா,
சூழமங்கலம் தமக்கைகளின் இனிமையான பாடல்... மார்கழி மாதங்களில் கோவில்களில் எங்கும் கேட்கலாம்.
அடிக்கடி வானொலியிலும் ஒலிபரப்புவார்கள் கண்ணன்
பாடலைப் படிக்கும்போது ஏற்படும் உணர்வை விட அவர்கள் பாட்க் கேட்கும்போது இன்னும் அருமையாக இருக்கும் கண்ணன்!
//பால்கொண்டு நீராட்டி
பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி
திருப்புகழ்மாலை கேட்டேனடி//
சுப்பையா சார்,
பூசை/வழிபாட்டுக்குரிய அனைத்தும் சொல்லி, வழிபாடாகவே ஆக்கி விடுகிறார் கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் - கவனித்தீர்களா?
பால், பழம், பூ, புகழ்மாலை (துதி)
கடைசியில் மனம் (காலமெல்லாம் இருக்கும்)
மிக அழகான பாடல்.
//வேலழகும் மயிலழகும்
வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி - அந்தக்
காட்சியென்றும் இனிக்குமடி!//
எளிமையாக நிற்கும் பழனி ஆன்டவனின் திருவுருவும் தனி அழகு தான். பாடல் அருமை.
///K.R.S அவர்கள் சொல்லியது:
பூசை/வழிபாட்டுக்குரிய அனைத்தும் சொல்லி, வழிபாடாகவே ஆக்கி விடுகிறார் கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் - கவனித்தீர்களா?///
ஆமாம் கே.ஆர்.எஸ் அவர்களே!
மேலும் பாடலின் சொற்கட்டமைப்பு படிப்பவர்களுக்கு எளிதில் மனனம் ஆகும் வகையில் உள்ளது மற்றுமொரு சிறப்பு!
///அன்புத்தோழி அவர்கள் சொல்லியது: எளிமையாக நிற்கும் பழனி ஆண்டவனின் திருவுருவும் தனி அழகு தான். பாடல் அருமை. ///
அருமை, பெருமை எல்லாம் முருகனையே சேரும் சகோதரி!
முருகப்பெருமானை அடியவர் வழிபடு முறையினைத் தமிழ்படு கவிதையில் அழகாக இயம்பியுள்ளார் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் அவர்கள். அதை இசைபடு மொழியில் பாடிச் சிறப்பித்திருக்கிறார்கள் சூலமங்கலம் சகோதரிகள். இந்தப் பாடலைக் கேட்கவும் ஆவலாக உள்ளது. சுட்டி கிடைக்குமா?
வேலும் மயிலும் கூடி நாடி வரும் அடியவர்க்குக் கந்தன் கொடுக்கும் அற்புதக் காட்டியை அன்றி காலமெல்லாம் இனிக்கும் காட்சி எது!
காலஞ்சென்ற கவிஞர் திரு.உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் ஒரு பாடல் எங்களுக்கு பத்தாம் வகுப்பில் தமிழில் பாடமாக இருந்தது. என்ன கவிதை என்று மறந்து விட்டது. ஆனால் அதனிடையே வரும் "இல்லையென்ற பெரும்சொல்லே எத்திக்கும் நிலைத்திருக்கும்" என்ற வரி ஏனோ ஏன் மனதில் வெகு...வெகு ஆழமாக பதிந்து விட்டது. இவ்வரிகள் ஏனோ அடிக்கடி நினைவுக்கு வருகிறது.
Post a Comment