Wednesday, March 07, 2007

சித்தம் இராங்கா தேனையா செந்தில் வேலையா..


கருணைகூர் முகங்கள் ஆறும் கொண்டவன் அல்லவா முருகன். அதனால்தான் மொத்த இரக்கமும் அவனிடத்தில் இறக்கம் கொண்டுள்ளது.ஆனாலும் தன் மேல் முருகன் இரக்கம் காட்டவில்லையே என்று திரு. பாபநாசம் சிவன் அவருடைய தனித்தமிழில் உள்ளம் உருகிப் பாடுகிறார். இதற்கு அவர் எடுத்துக்கொண்ட ராகமும் இரக்கம் பற்றிய ராகமான ஸஹானா தான்.

ராகம்:- ஸஹானா தாளம்:- மிஸ்ர சாபு

பல்லவி

சித்தம் இரங்காதேனையா செந்தில்வேலையா--நின்....(சித்தம்)

அனுபல்லவி

சித்தம் இரங்கதேனையா சிறியேனிடம் அறு மாமுக சிறிதேனும் நின்.(சித்)

சரணம்

பக்தர்க் கிரங்கும் தீனபந்து என்றுன்னை நம்பி
பகலிரவும் பணிந்து பாடி பஜிக்கும் என்பால் நின் (சித்தம்)
தலையில் மலை வீழ்ந்தாலும் தாங்க ஷண்முகன் உண்டென்று

உலகம் அறிய உந்தன் திருவடி அடைந்தேனே
மலையோ என் வினை உந்தன் கருணைத்துளி இருந்தால்
வையம் வியக்க ராமதாஸன் தன்னை ரக்ஷிக்க நின்...(சித்தம்)


திருமதி.சௌமியா அவர்கள் பாடிய இந்தப்பாட்டை கேட்க இங்கே "> <'கிளிக்"> செய்யவும்
திரு.சஞ்சய் சுப்ரமணியம் பாடிய இந்தப் பாடலைக் கேட்க இங்கே"'><"கிளிக்>" செய்யவும்

28 comments:

இலவசக்கொத்தனார் March 07, 2007 8:43 AM  

சஹானாவே அருமையான ராகம், அதிலும் தமிழ்ப் பாட்டு, அதுவும் நம்ம முருகனைப் பத்தி, சும்மா சித்தம் இரங்காததேனய்யா அப்படின்னு போட்டு குழையற பாட்டு. ஆஹா. வேற என்ன வேணும். முதல் தடவை கேட்ட உடனே நேரா நம்ம பிடித்தவைகள் பட்டியலில் போய் உக்காந்துகிடுச்சு இல்ல!!

அந்த முதல் அடி செந்தில்வேலையாவா அல்லது செந்தில் வேலைய்யாவா? முதல்ல சொன்ன மாதிரி இருந்தா செந்திலின் வேலை என வரும், மற்றது செந்தில் வேலைய்யா என அவனை விளிப்பது போல் வரும். எனக்கென்னவோ வேலைய்யா என்றே வர வேண்டும் என நினைக்கிறேன்.

VSK March 07, 2007 8:57 AM  

கந்தர் அலங்காரத்தில் திரும்பத் திரும்ப இக்கருத்தைச் சொல்லியே முருகனிடம் முறையிடுகிறார் அருணகிரிநாதர்.

நல்ல பாட்டினை அளித்தமைக்கு நன்றி.

இன்றையப் பொழுது இனிதே விடிந்தது, முருகனருளால்!

தி. ரா. ச.(T.R.C.) March 07, 2007 11:08 AM  

நானும் முதலில் வேலைய்யா என்றுதான் போட்டேன். ஆனால் அவருடைய கீர்த்தனையை பரிசோதித்துப் பார்த்ததில் வேலையா என்றுதான் இருந்தது.கவிங்கர்களின் சுதந்திரத்தில் வேலைய்யா என்பது வேலையா என்று ஆகிவிட்டது.மற்றும் ஸ்வரப்ரஸ்தாரத்துக்காக 'ய்' விடப்பட்டது.எப்படி இருந்தால் என்ன அருமையான பாட்டு.நன்றி இலவசம்

தி. ரா. ச.(T.R.C.) March 07, 2007 11:18 AM  

வணக்கம் ஸ்.கே. எளிய தமிழில் இசையோடு கந்தர் அலங்காரத்தின் பெருமையை சுருக்கி அளித்தவர்தான் சிவன் அவர்கள்.
இரங்காதேனையா என்ற பதத்திற்கு எதுகை மோனையாகத்தான் வேலையா என்று எழுதினார் போலும்

குமரன் (Kumaran) March 07, 2007 8:59 PM  

சித்தம் இரங்காதது ஏனையா? என்று அருமையான பாடல் தி.ரா.ச. முதல் முறை கேட்கிறேன் என்று நினைக்கிறேன்.

ஏன் ஐயா - ஏனையா
வேல் ஐயா - வேலையா

சரியாகத் தானே இருக்கிறது கொத்ஸ். வேலய்யா என்றால் வேல் + அய்யா என்று ஆகும். அப்படியும் சிலர் சொல்கிறார்கள். எண்ணை, எண்ணெய் போன்ற குழப்பமே இது. சரியானது எள்+நெய் = எண்ணெய்; ஆனால் வழக்கில் எண்ணை என்று எழுதுகிறோம். இங்கே தலைகீழ். குமரையா என்று சொல்வதில்லை; குமரய்யா என்று சொல்கிறோம். அதனால் தான் உங்களுக்கு அந்த ஐயம் வந்திருக்கிறது. ஆனால் குமர + ஐயா என்பது குமரையா என்று தானே வரவேண்டும். :-)

தி. ரா. ச.(T.R.C.) March 07, 2007 9:54 PM  

@குமரன் வந்ததற்கும் நன்கு விளக்கம் அளித்ததற்கும் நன்றி. சிவன் பாடல்களில் சற்று அதிகம் கையாளப்படாத பாடல் இது.இந்தப்பாட்டை திரு.டி.என்.சேஷகோபாலன் அவர்கள் மிகவும் இனிமையாகப் பாடியுள்ளார் ஆனால் அந்த சுட்டி கிடைக்கவில்லை.

இலவசக்கொத்தனார் March 07, 2007 10:17 PM  

//கவிங்கர்களின//

கவிஞர்களின் - குமரந்தான் எங்க எழுத்துப்பிழைகளைப் பார்த்தாலும் திருத்தச் சொல்லி இருக்கார்.

நான் சஞ்சய் பாடியும் இந்தப் பாட்டைக் கேட்டு இருக்கேன். அருமையாகப் பாடி இருக்கார்.

G.Ragavan March 07, 2007 11:08 PM  

அருமையான பாடல். இந்தப் பாடலைப் படித்ததும் எனக்கு ஒரு கந்தபுராணப் பாடல் நினைவிற்கு வருகிறது.

முழுமதியன்ன ஆறு முகங்களும்
முந்நான்காகும் விழிகளின் அருளும் என்று தொடங்கும்....வேறுள படையின் சீரும்...அணிமணி தண்டை ஆர்க்கும் செழுமலரடியும் கண்டான்....அவன் தவம் செப்பப்பாற்றே!

இருக்குறது போர்க்களம். வந்திருக்குறது சண்டை போட. சூரனோ அருவாளத் தூக்கீட்டு வெட்ட வர்ரான். எதுத்து வர்ர ஆளு எவ்வளவு ஆத்தரத்தோட வரனும்? ஆனா இங்க முழுமதியன்ன ஆறுமுகங்களும் காட்டுறாரு. போர்க்களத்தில் எதிர்த்து வருகின்றவனுக்குக் கூட கருணை காட்டுறாரு. அவரா நம்மைக் கைவிடுவார்.

எனக்கு இந்த ராகமெல்லாம் தெரியாது. ஆனா சகானாவுல "ஆதி நாதன் கேட்கின்றான். அரளிப்பூவைத் தொடுக்கின்றேன்" என்ற மெல்லிசை மன்னரோட பாட்டு தெரியும். அந்தப் பாட்டோட மெட்டுல இந்தப் பாட்டைப் பாடிப் பார்த்தேன். சரியாவே பொருந்தி வருது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) March 08, 2007 5:18 PM  

அண்ணா!
பக்திரசமும்; உருக்கமும் மிக்க சகனாவில்; மிக அருமையான பாடல். பல தடவை கேட்டுள்ளேன்.
எப்போதும் கேட்கலாம்;எத்தனை தடவையும் கேட்கலாம்.

rv March 09, 2007 12:03 AM  

மனதை உருக்கும் பாடல் தி.ரா.ச.

வரிகளை இட்டமைக்கு நன்றி.

பின்னிரவில், சஞ்சய் பாடி கேட்கவேண்டும். ஆஹா!

வேல்+ஐயா என்று குமரனே வந்து சொன்னப்புறம் சரியாகத்தான் இருக்கிறது. :)

2006 செப்டம்பரிலிருந்து இந்தப் பதிவு இருக்கிறதா?? இன்றுதான் முதல்முறையாக படுகிறது. சித்தமும் அப்படியோ? :((

பராசரன் March 09, 2007 12:37 AM  

அருமையான பாடல். சஞ்சய் அவர்களில் இனிமையான குரலில் பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன். தலையில் மலை விழுந்தாலும் தாங்க நீ இருக்கும்போது என்ன கவலை என்று சரணாகதி தத்துவத்தின் essence ஐ அப்படியே கொண்டுவந்துவிட்டார் சிவன் அவர்கள்.

இது போன்ற பாடல்களினால் மரபிசையை பாமர மக்களுக்கும் கொண்டு சென்ற சிவனின் பணி போற்றத் தக்கது

தி. ரா. ச.(T.R.C.) March 09, 2007 9:52 AM  

@கொத்ஸ். பிழை திருத்தியதற்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) March 09, 2007 9:57 AM  

வருங்கள் ஜி.ரா. உண்மைதான். கருணை காட்டுவதில் முருகனை யாரும் மிஞ்சமுடியாது.சிவனின் வரிகளே சாட்சி. "பக்தரை காக்கும் தீனபந்து என்றுன்னை நம்பி பகலிரவும் பாடி பஜித்து'

தி. ரா. ச.(T.R.C.) March 09, 2007 10:01 AM  

யோகன். நான் எப்படியாவது இந்தப்பாட்டை இரு நாட்களுக்கு ஒருமுறை கேட்டு விடுவேன். அவ்வளவு பிடித்தப் பாடல்.

தி. ரா. ச.(T.R.C.) March 09, 2007 10:05 AM  

இராமனாதன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

2006 செப்டம்பரிலிருந்து இந்தப் பதிவு இருக்கிறதா?? இன்றுதான் முதல்முறையாக படுகிறது. சித்தமும் அப்படியோ? :((

'கண்களில் தெரியக்கண்டான்'
என்ற கம்பரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.

தி. ரா. ச.(T.R.C.) March 09, 2007 10:12 AM  

@பராசரன் வருகைக்கு நன்றி.நீங்கள் கூறுவது உண்மைதான் மரபிசையை பாமர மக்களுக்கு கொண்டு சென்றதில்
சிவனின் பங்கு மகத்தானது.சிவனைப்பற்றிய 5 பதிவுகள் மற்றொரு பதிவான கௌசிகம் என்பதில் அளித்துள்ளேன்

ஷைலஜா March 09, 2007 10:19 AM  

சஹானா என் விருப்பராகம்! பார்த்தேன் ரசித்தேன் பக்கம்வரத்துடித்தேன்....திரைப்பாடல்
நினைவிற்குவருகிறது..சஞ்சய் குரலில்தான் எத்தனை இறைஞ்சுதல்! கேட்கக்கேட்க இனிமை.
அளித்த திரா ச உங்களுக்கு நன்றி
ஷைலஜா

Radha Sriram March 09, 2007 10:50 AM  

ரொம்ப நல்ல பாட்டு நான் சிக்கில் குருஷரன் பாடி கேட்டு இருக்கேன்.....

சஹானாவும் பக்தி ராகம் இல்லையா??

ஞானவெட்டியான் March 09, 2007 11:45 PM  

அன்பு தி.ரா.ச,
முருகனின் தலைகள் ஆறு;

ஆறு சோதியாகவும், ஆற்றறிவாயும், ஆறுதலையுடையதாக இருப்பதால்
முகம் ஆறுதலைத் தருவதாலும் ஆறு முகமுண்டாயிற்றென்று என விளம்பலுமுண்டு.

தி. ரா. ச.(T.R.C.) March 10, 2007 3:20 AM  

@எலிஸபெத் மார்க்கெரட் அலக்ஸிஸ்
சஹாணா,ஆனந்தபைரவி,மாஞ்சி,ஆஹிரி,குறிஞ்சி எல்லாமே பக்தி ராகங்கள்தான்.இதில் உள்ள எல்லா தமிழ்ப்பாடல்களும் மனத்தை மயிலறகால் வருடி தொடும்

தி. ரா. ச.(T.R.C.) March 10, 2007 3:26 AM  

@ஞானவெட்டியான் நன்றி தகவலுக்கு. ஆனால் இந்த நுணுக்கமெல்லாம் தெரியாமலே அவனை பற்றிக்கொண்டு விட்டேன்.அவன் கருணைக்கு அளவேகிடையாது என்னை இரண்டு தடவை கூற்றுவனிடமிருந்து காப்பாற்றியவன்.

தி. ரா. ச.(T.R.C.) March 10, 2007 3:39 AM  

@ஷைலஜா உங்களுக்கு 'எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம்' மற்றும் டி ம் ஸின் எண்ணமெல்லாம் ஒரு இடத்தையே நாடுதே பாடல்களும் ஞாபகத்திற்கு வரவேண்டுமே அதுவும் ஸஹாணாதான்.நன்றி.

நாமக்கல் சிபி March 11, 2007 11:24 PM  

முருகனடியார்களின் எண்ணிக்கை கூடக் கூட முருகனருள் வலைப்பூ மென்மேலும் இனிமை பெறுகிறது என்று சொல்லவும் வேண்டுமா!

தி.ரா.ச அவர்களின் வருகைக்கு முதற்கண் எமது நன்றி. அவருக்கு அழைப்பு விடுத்த குமரன் அவர்களுக்கும் எமது நன்றி!

குமரனின் எண்ணம் திண்ணம்!

நாமக்கல் சிபி March 11, 2007 11:25 PM  

//தலையில் மலை வீழ்ந்தாலும் தாங்க ஷண்முகன் உண்டென்று
உலகம் அறிய உந்தன் திருவடி அடைந்தேனே
//

அவனின் திருவடி அடைதல் ஏழேழ் பிறப்பிற்கும் உண்டான பாக்கியம் அன்றோ!

மெளலி (மதுரையம்பதி) March 12, 2007 6:07 AM  

திருப்பரம்குன்றத்துக் குமரனை தரிசித்து வந்தேன் தங்களது பதிவில்/பாடலில் அவன் முகம் திரும்பவும் கண்டேன்.

அருமையான பாடல், நன்றி தி.ரா.ச அவர்களே.

தி. ரா. ச.(T.R.C.) March 12, 2007 12:23 PM  

நன்றி சிபி காலையில் தொலைபேசியிலும் இப்பொழுது பின்னுட்டத்திலும் பாரட்டியதற்கு.
முருகனின் பாடல்கள் அடியார்களை ஒருமைப்படவைக்கும்.ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என்று வள்ளாரால் புகழப்பட்ட கந்தக்கோட்டம் குமரனை இன்று திரு. கே ஆர் ஸ் அவர்களுடன் அருமையான தரிசனம் செய்தோம்.

தி. ரா. ச.(T.R.C.) March 12, 2007 12:26 PM  

மதுரையம்பதி முருகன் தரிசனம் நன்றாக இருந்ததா? அதைப்பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.

Sethu Subramanian January 12, 2016 11:31 PM  

சித்தம் இரங்காததேனய்யா (இரங்காதது + ஏன் + அய்யா )
சித்தம் இரங்காததேனையா (இரங்காதது + ஏன் + ஐயா)

செந்தில் வேலய்யா (வேல் + அய்யா )

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP