முந்து தமிழ்! வேலைக்கார முருகன்! நாதசுரத் திருப்புகழ்!
முருகனருள் அன்பர்கட்கு வணக்கம்!
Corona பெருந்தொற்றுக் காலப் பாதுகாப்போடு, நலமே விளைக யாவருக்கும்!
முதியோர்/இளையோர் என்றில்லாமல்,
முடிந்தால் அனைவருமே Vaccine/தடுப்பூசி போட்டுக் கொள்க!
அஃதொன்றே Corona-வை வெல்லும் வழி!
இல்லத்து முதியோரைத் தடுப்பூசிக்குத் தனியே அனுப்பாது, உடன் செல்க!
இன்று, தோழன் கோ. இராகவன் (ஜிரா) பிறந்தநாள் (May 27).
இந்தப் பாடலை இங்கே இட்டு, ஆசி/வாழ்த்து வேண்டுகிறேன்!
Happy Birthday Ragava!
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
*நல்ல உணவும், நளி மிகு உடையும்,
*இசை தவழும் உறையுளும்,
*வெற்றி மிகு பணியும்,
*நீடு உடல் நல வாழ்வும்,
*மாறிலா உறவும், திருப் புகழும்,
நின்னைச் சேர்ந்தேலோர் எம் பாவாய்!
முருகனருளில் ஒரு சினிமாப் பாடல் இடம்பெறும்.
இன்றோ, நாதசுரம் ஒலிக்க, திருப்புகழ் இசைப் பாடல்.
இந்தப் பாடல், இசைக்கு மட்டும் பரவல் (பிரபலம்) அல்ல!
அதன் மாறுபட்ட, ”முருக விளி”-க்கும் மிகப் பரவலானது!
பொதுவாகச் சில காதலிகள், தங்கள் காதலனை அன்புச் சினத்தால்
வசைப்பது போல் இசைப்பதுண்டு!
அப்படியே அருணகிரியும், இத் திருப்புகழில், செய்கிறார்!
*அடேய், மாயக் காரா, வேலைக்காரா.. என்று திட்டுவது போல்
*அன்புமிகு நேயக் காரா, என் ஆண்மைக் காரா.. என்று ஒருவிதக் கொஞ்சல்!
அத்துணை மதிப்பு (மரியாதை) மிக்க விளி அல்ல!
தையல் காரன், Paper காரன், வேலைக் காரன் என்று சொல்லாது,
தையலாளர், இதழாளர், பணியாளர் என்று சமூகநீதிக்கு மாறி விட்டோம்!
குறைந்த அளவேனும், -காரன் விட்டு, -காரர் எ. சொல்லுக்கு மாறலே நலம்!
அங்கெல்லாம்.. வாடா, போடீ, -காரன், -காரி தான், நெருக்கம் கூட்டும்!
காதல் கணவனையும், வீட்டுக்’காரர்’ என்பது தானே வழக்கம்?:)
அதே போல், வரிசையாக முருகனைக் -கார விளி, விளிக்கிறார் அருணகிரி!
-காரா, -காரா.. என்று ’கார’மான அருச்சனை!:)
என்னென்ன -காரன், முருகன்? நீங்களே பாருங்கள்!
- காவல் காரன்
- மாலைக் காரன்
- சேவல் காரன்
- நேயக் காரன்
- வேலைக் காரன்
- ரூபக் காரன்
- போகக் காரன்
- வேளைக் காரன்
- வாரக் காரன்
- மாயக் காரன்
- சூறைக் காரன்
- ஆண்மைக் காரன்!
என்ன, போதுமா, -காரன்கள்?:) முருகனுக்கு, ’கார’ அருச்சனை இதுவே!:))
இது திருச்செந்தூர்த் திருப்புகழ்! ”முந்து தமிழ் மாலை கோடி கோடி”!
வடசொல் ஆங்காங்கு இருப்பினும், தமிழை ’முந்துதமிழ்’ என்று போற்றுவது!
குண்டும்-ஒல்லியும் இல்லாத அளவான இளமை மொழி தானே முந்தி ஓடும்?
பெரிய எண்ணிக்கை சொல்லி, எடுத்த எடுப்பிலேயே அச்சமூட்டாதீர்!
அதன் விளைவே, தமிழுக்கு 30 அல்ல; 247 எழுத்து எ. அச்சமூட்டும் பரப்பல்:(
எழுத்து இல்லை! வெறும் ஓசை/ஒலிப்பு மட்டுமே!
- ச= சொல் முதலில் Cha (சொல், Chol)
- ச= சொல் இடையில் sa (இசை, Isai)
- ச= மெய்யெழுத்தோடு Cha (இச்சை, Ichchai)
- ச= இன எழுத்தோடு, Ja (மஞ்சள், Manjal)
क ख ग घ ङ (ka kha ga gha ṅa); च छ ज झ ञ (ca cha ja jha na)
என்று ஒவ்வொரு ஓசைக்கும் ஓர் எழுத்து வைத்து
மொழியை மிகவும் குண்டாக்கி விடாது..
ச என்ற ஒரே எழுத்தே, சூழலுக்கு ஏற்றாற் போல் (Context based Phonology)
cha (chol), sa (isai), ja (manjaL) என்று ஒலிக்கவல்ல ஒயிலான மென்மொழி, தமிழ்!
குண்டு மொழியால் ஓட முடியாது!
தமிழ்மொழி முந்தி ஓடும்! வெல்லும்!
"முந்து தமிழ்" மாலை கோடி கோடி!
நாதசுரத்தில் பாடலைக் கேட்டு மகிழுங்கள்:
MPN சேதுராமன் - பொன்னுசாமி அய்யாக்களின் உருக்கமான வாசிப்பு!
நாதசுரம் என்றாலே.. எந்தவொரு பாடலுக்கும் பெருவீறு (கம்பீரம்) வந்து விடும்!
Salem S Jayalakshmi, மிகச் சிறந்த மரபிசை & மக்களிசைப் பாடகர்!
அம்மாவின் அரிய ஒலிப்பேழை (1976) தன்னில் கிட்டிய இப் பாடல்!
முந்துதமிழ் மாலை கோடிகோடி
சந்தமொடு நீடு பாடிப்பாடி
முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி - உழலாதே
முந்தை வினையே வராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத்து ஏக
முந்து அடிமையேனை ஆளத் தானும் - முனைமீதே
திந்தி திமி தோதி தீதித் தீதி
தந்த தன தான தானத் தான
செஞ்செ ணகு சேகு தாளத் தோடு - நடமாடும்
செஞ்சிறிய கால் விசாலத் தோகை
துங்க அநு கூல பார்வைத் தீர
செம்பொன் மயில் மீதிலே எப்போது - வருவாயே?
-----------------------------------------------------------
அந்தண் மறைவேள்வி காவல் கார
செந்தமிழ்ச் சொல் பாவின் மாலைக் கார
அண்டர் உபகார சேவற் கார - முடிமேலே
அஞ்சலி செய் வோர்கள் நேயக் கார
குன்று உருவ ஏவும் வேலைக் கார
அந்தம் வெகுவான ரூபக் கார - எழிலான
சிந்துரம் இன் மேவு போகக் கார
விந்தை குற மாது வேளைக் கார
செஞ்சொல் அடியார்கள் வாரக் கார - எதிரான
செஞ் சமரை மாயும் மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்தில் நகர் வாழும் ஆண்மைக் கார - பெருமாளே!
(பாடலின் பொருளின் எளிதே; சில அரிய சொற்களுக்கு மட்டும் பொருள்:
*முஞ்சர்= அழிவுப் பாதையில் செல்வோர்
*முனை மீதே= என் முன்னிலையில்
*செஞ் சிறிய கால்= சிவப்பான சிறிய காலுள்ள மயில்
*துங்க அநுகூலம் (வடமொழி)= தூய்மையான பலன்கள்
*அந்தண்= தமிழ்ச் சான்றோர் (பிராமணர் என்ற பொருளல்ல)
*அண்டர்= வானவர்
*ரூபம் (வடமொழி)= உருவம்
*சிந்துரம்= செந்நிற மணப் பொடி
*வேளைக்காரன்= காவலன்
*வாரக்காரன்= அன்புள்ளவன்
*செஞ்சமர்= குருதி மிகு போர்
*துங்கரண சூர= போர்வெறி மிக்க சூரன்
*சூறை= பெருங்காற்று
*செந்தில் நகர்= திருச் செந்தூர்)
0 comments:
Post a Comment