Friday, May 27, 2022

முருகன் மாலைகள் மொத்தம் எத்தனை?

முருகனருள் அன்பர்கட்கு வணக்கம்!

பெருந்தொற்றுக் காலம் முடிந்து,
பெரும்பழகும் காலம் வந்தமை, மகிழ்ச்சியே!
இதற்கு உறுதுணையாய் இருந்த அறிவியல் வளர்ச்சிக்கும்,
நம்மோடு உற்ற உளவியல் துணையாய், 
நம்மை நீங்காது நின்ற சுற்றம் நட்புக்கு & முருகனுக்கு நன்றி!
இன்று முருகனருளில் ஒரு மாலைப் பாடல்!
தோழன். கோ. இராகவன் பிறந்தநாளை ஒட்டி (May 27);

வழமை போல், இவ்வாண்டும்..
ஒரு பாடல் மாலை! மாலைப் பாடல்!

மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள், இராகவா!
உடல்நலமும் உள்ளநலமும் தழைத்தேலோ ரெம்பாவாய்!
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவ ரெம்பாவாய்!


மாலை என்ற அழகிய தமிழ்ச் சொல்லுக்கு,
மயக்கும் அழகு என்று பொருள்! மால் + ஐ = மாலை!
மாலுதல் என்றாலே, தமிழில் மயங்குதல் தான்!

ஒளி, இருளோடு மயங்கும் காலம்= மால்+ஐ= மாலை.
*மாலை, யாமம், வைகறை= இருளை ஒட்டிய சிறுபொழுதுகள்.
*காலை, பகல், எற்பாடு= ஒளியை ஒட்டிய சிறுபொழுதுகள்.

சங்கத் தமிழில், முதல் பொழுதே.. மாலை தான்! காலை அல்ல!:)
காரும் மாலையும் முல்லை
குறிஞ்சி, கூதிர் யாமம் என்மனார் புலவர் (தொல்காப்பியம்)

அவ்வண்ணமே, கழுத்தில் சூடும் மாலையும்,
அழகால் மயக்கும் பொருளிலேயே வருவது!
எத்தனை நகைகள் சூடிக் கொண்டாலும்,
மாலை சூடிய கழுத்து என்பது, தனி மயக்கம் தானே?:)

ஏனெனில், பூமாலை இயற்கை ததும்பும் மயக்க அழகு!
மணம் மட்டுமல்ல, குணமும் உண்டு மாலைக்கு!
1) கண்டு, 2) உண்டு, 3) உயிர்த்து, 4) உற்று.. என நான்கு உணர்ச்சியும்
ஒருசேரக் கொண்டது பூமாலையின் இன்பம்!
மாலை பேசாது என்பதால், 5) கேட்டு என்ற உணர்ச்சி மட்டும் இல்லை!
ஐந்து உணர்ச்சியும் அமைவது காதலன்/காதலியிடம் மட்டுமே என்பது குறள்!
தார்       -     மாலை

மாலை என்றாலே பெண்கள் சூடுவது தான்!:)
ஆனால், இன்று எல்லாவற்றுக்கும் அச்சொல்லையே புழங்குகிறோம்.
பல வகை மாலைகள், நம் அழகுத் தமிழில் உண்டு!
 1. தார்= ஆண்கள் அணிவது (இரு புறமும் தொங்கும்)
 2. மாலை= பெண்கள் அணிவது (தொங்காது இணைக்கும்)
 3. கோதை= ஆண்/பெண் இருவரும் அணிவது (கோத்த தொகுப்பு)
 4. கண்ணி= தலையில் சூடுவது
 5. தெரியல்= தெரியப்படுத்தச் சூடுவது (அடையாளம்)
 6. தொடையல்= தொடுத்துச் சூடுவது
 7. ஒலியல்= வளைத்துச் சூடுவது
 8. தாமம்= நாரினால் அமைத்துச் சூடுவது
 9. படலை
 10. அலங்கல்
 11. அணியல்
 12. பிணையல்
 13. வாசிகை
 14. சிகழிகை
 15. கத்திகை
 16. சுருக்கை
 17. சூட்டு
 18. இலம்பகம்
என்று இத்தனை வகை மாலைகள், தமிழில் உண்டு! ஒவ்வொன்றுமே ஓர் அழகு!
ஒலியல்


திருவருள் என்றொரு படம் வந்தது, 1975-இல்!
தேவரின் திருவருள் என்று தான் விளம்பரம் செய்வார்கள்.
ஏனெனில், தயாரிப்பு: சாண்டோ சின்னப்பா (தேவர்).

அப்போதெல்லாம் பல சாமிப் படங்கள் வந்தவொரு காலம்; இப்போது இல்லை!:)
சில வடமொழிப் புராணம், சில மூட நம்பிக்கை, சில உண்மையான பக்தி..
என்று கலவையாகப் பக்திப் படங்கள் வந்து கொண்டிருந்த காலம் அது!

அப்படி வந்த ஒரு முருகன் படம் திருவருள்.
அக்கால இதழொன்று எழுதிய விமர்சனம் (மதிப்புரை), இதோ வாசித்துப் பாருங்கள்!
கதையைப் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!:) ஆனால் சுருக்கமாக..

இது ஒரு கணவன் - மனைவிக் கதை!
கணவனோ, பெரும் முருக பக்தன்; மனைவியோ, பெரும் பண பக்தை!:)
அவள் உழைத்த பணம் அல்ல! அவன் உழைத்த பணம் தான்!
ஆனாலும், சில பெண்களுக்கு, பிறர் உழைப்பும், தங்களுக்கே!..
என்ற பேராசை (அ) அறியாமை, எப்படியோ மேலோங்கி விடுகிறது!

சிறந்த பாடகனான அவனுக்குக் குவியும் பணமே..
அவர்களின் குடும்ப வாழ்வைப் பிரித்துப் போடுகிறது!
முருகன் பணிக்கு அவன் ஒதுக்கும் பணத்தில், நேரத்தில், பணிகளில் தலையிட்டு
ஒரு கட்டத்தில், முருகனின் வேலுக்கான தங்கம்/ வைரத்தையே 
திருடும் அளவுக்குப் போய் விடுகிறாள், அந்தப் பேராசை மிக்க பெண்!
அவனின் உற்ற தோழனே, அப்பழியை ஏற்றுக் கொண்டு
அவர்கள் குடும்பம் சிதையாது காக்க முயல்கிறான்!

ஆனால், வாரியார், வாரியாராகவே திரையில் தோன்றி
வீடு தேடி வந்து, அவர்களிடம் நன்கொடை கேட்கும் போது
அவரையே அவமதிப்பு செய்து திருப்பி அனுப்பி விடுகிறாள்!:(
இதனால், மனைவியையும் வீட்டையும் உதறிச் செல்கின்றான் அவன்!
மீண்டும் எப்படிச் சேர்கிறார்கள்? வாரியார் தோன்றிச் சேர்த்து வைப்பதே கதை!

”தீண்டுவீராயில் திருநீலகண்டம்” என்ற பெரிய புராணக் காட்சியெல்லாம் கூட
இந்தப் படத்தில் சோடிக்கப்பட்டு இருக்கும்:)
படத்தில், மயில் தத்தித் தாழப் பறக்கும் காட்சிகள் சுவையாக இருக்கும்!
இது வரை காணாவிட்டால், கட்டாயம் காண்க! கண்டிருந்தாலும், மீள்காணுங்கள்!


அருள்மொழி அரசு, திருமுருக கிருபானந்த வாரியார்,
பல படங்களில் தோன்றி நடித்துள்ளார்!
சில படங்களுக்கு, உரையாடல் (வசனம்), கதையும் எழுதியுள்ளார்!
 1. சிவகவி – கதை வசனம் மட்டுமே
 2. தெய்வம்
 3. துணைவன்
 4. திருவருள்
 5. சண்முகப்ரியா
 6. கந்தர் அலங்காரம்
 7. மிருதங்கச் சக்கரவர்த்தி
 8. நவகிரக நாயகி
ஆனால், துணைவன் & திருவருள் படங்களில் மட்டும்,
வாரியார் வரும் காட்சிகள் மிக நீளமானவை!

இன்று, சில காட்சிகள் பிற்போக்குத்தனமாகத் தோன்றலாம்.
குறிப்பாக, மருத்துவத்தை ஒதுக்கும் பக்திக் காட்சிகள்.
ஆனால், அந்நாளில் அது மக்களுக்கு ஏற்புடையதாகவே இருந்தது!:)
வாரியாருக்கு, சினிமா நடிப்பு என்று தனியாகச் சொல்லித் தரத் தேவையில்லை!
ஏனெனில், அவரின் ஓவ்வொரு பேருரையுமே, நாடகம் போல் தான் இருக்கும்!

குரலின் தனிக் கம்பீரம் (வீறு), இசை, உரையாடல், பாடல்கள், கையசைவுகள்..
என்று ஒரு மேடை நாடகத்தையே, அவர் மேடைக் கச்சேரிகளில் காணலாம்!
அதனால் ஈர்க்கப்பட்ட சிறுவர்/சிறுமியர் முதல், அகவை மூத்த வயசாளிகள் வரை,
வாரியார் கச்சேரிக்கு, மயங்காதவர்களே இல்லை எனலாம், நாத்திகர்கள் உட்பட!:)

ஆச்சாரம் மிக்கவர்களின் Bore அடிக்கும் உபந்நியாசங்களை விட
வாரியார் போன்றோரின் பேருரைகள் தான், சமயத்தைக் கூடக் காப்பாற்றின!
மதம் பரவச் செய்ததில், மஹா பெரியவர்களின் பங்கை விட, வாரியார் பங்கு அதிகம்!

வாருங்கள், இன்றைய பாடலுக்குள் செல்வோம்!
பிறந்தநாள் பையன், கோ. இராகவனையும் வாழ்த்துவோம்! முருகனருள் முன்னிற்க!


படம்: திருவருள்
வரி: கவிஞர் கண்ணதாசன்
குரல்: இசையரசி பி.சுசீலா 
இசை: குன்னக்குடி வைத்தியனாதன் 

மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
திருநிறை செல்விக்கு திருமண மாலை
தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை
(மாலை வண்ண மாலை)

ஆயிரம் பொன்பெறும் அருட்பா மாலை
ஆண்டவன் அடியார்க்கு செபமணி மாலை
கவிஞர்கள் சூடும் கவிமணி மாலை
காதலர் சூடிட தினம் வரும் மாலை

அந்த மாலை.. அந்தி மாலை
(மாலை வண்ண மாலை)

கலைமகள் தருவது கல்வி மாலை
திருமகள் தருவது செல்வ மாலை
அறுமுகன் சொன்னது பிரணவ மாலை
அது தான் அவனது திருவருள் மாலை

அது தான் முருகனின் திருவருள் மாலை
(மாலை வண்ண மாலை)


2 comments:

Ranjith Ramadasan July 30, 2022 2:25 AM  

மிகவும் அருமை நல்ல பதிவு,
நண்பர்களே... இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

I'm providing ultra speed ssd web hosting and domain services in cheap price also..
Please visit.. Prohostor.com

இ.பு.ஞானப்பிரகாசன் February 23, 2023 9:33 AM  

2022-இல் நீங்கள் ஒரு பதிவு எழுதியிருக்கிறீர்களா! அதுவும் இவ்வளவு இறையன்பு சொட்டச் சொட்ட! வியப்புத்தான் ஆசானே!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP