சங்கத் தமிழில், முதல் பொழுதே.. மாலை தான்! காலை அல்ல!:)
காரும் மாலையும் முல்லை
குறிஞ்சி, கூதிர் யாமம் என்மனார் புலவர் (தொல்காப்பியம்)
அவ்வண்ணமே, கழுத்தில் சூடும் மாலையும்,
அழகால் மயக்கும் பொருளிலேயே வருவது!
எத்தனை நகைகள் சூடிக் கொண்டாலும்,
மாலை சூடிய கழுத்து என்பது, தனி மயக்கம் தானே?:)
ஏனெனில், பூமாலை இயற்கை ததும்பும் மயக்க அழகு! மணம் மட்டுமல்ல, குணமும் உண்டு மாலைக்கு! 1) கண்டு, 2) உண்டு, 3) உயிர்த்து, 4) உற்று.. என நான்கு உணர்ச்சியும் ஒருசேரக் கொண்டது பூமாலையின் இன்பம்! மாலை பேசாது என்பதால், 5) கேட்டு என்ற உணர்ச்சி மட்டும் இல்லை!
ஐந்து உணர்ச்சியும் அமைவது காதலன்/காதலியிடம் மட்டுமே என்பது குறள்!
தார் - மாலை
மாலை என்றாலே பெண்கள் சூடுவது தான்!:)
ஆனால், இன்று எல்லாவற்றுக்கும் அச்சொல்லையே புழங்குகிறோம். பல வகை மாலைகள், நம் அழகுத் தமிழில் உண்டு!
தார்= ஆண்கள் அணிவது (இரு புறமும் தொங்கும்)
மாலை= பெண்கள் அணிவது (தொங்காது இணைக்கும்)
கோதை= ஆண்/பெண் இருவரும் அணிவது (கோத்த தொகுப்பு)
கண்ணி= தலையில் சூடுவது
தெரியல்= தெரியப்படுத்தச் சூடுவது (அடையாளம்)
தொடையல்= தொடுத்துச் சூடுவது
ஒலியல்= வளைத்துச் சூடுவது
தாமம்= நாரினால் அமைத்துச் சூடுவது
படலை
அலங்கல்
அணியல்
பிணையல்
வாசிகை
சிகழிகை
கத்திகை
சுருக்கை
சூட்டு
இலம்பகம்
என்று இத்தனை வகை மாலைகள், தமிழில் உண்டு! ஒவ்வொன்றுமே ஓர் அழகு!
ஒலியல்
திருவருள் என்றொரு படம் வந்தது, 1975-இல்!
தேவரின் திருவருள் என்று தான் விளம்பரம் செய்வார்கள்.
ஏனெனில், தயாரிப்பு: சாண்டோ சின்னப்பா (தேவர்).
அப்போதெல்லாம் பல சாமிப் படங்கள் வந்தவொரு காலம்; இப்போது இல்லை!:)
சில வடமொழிப் புராணம், சில மூட நம்பிக்கை, சில உண்மையான பக்தி..
என்று கலவையாகப் பக்திப் படங்கள் வந்து கொண்டிருந்த காலம் அது!
அப்படி வந்த ஒரு முருகன் படம் திருவருள்.
அக்கால இதழொன்று எழுதிய விமர்சனம் (மதிப்புரை), இதோ வாசித்துப் பாருங்கள்!
கதையைப் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!:) ஆனால் சுருக்கமாக..
இது ஒரு கணவன் - மனைவிக் கதை!
கணவனோ, பெரும் முருக பக்தன்; மனைவியோ, பெரும் பண பக்தை!:)
அவள் உழைத்த பணம் அல்ல! அவன் உழைத்த பணம் தான்! ஆனாலும், சில பெண்களுக்கு, பிறர் உழைப்பும், தங்களுக்கே!..
என்ற பேராசை (அ) அறியாமை, எப்படியோ மேலோங்கி விடுகிறது!
சிறந்த பாடகனான அவனுக்குக் குவியும் பணமே..
அவர்களின் குடும்ப வாழ்வைப் பிரித்துப் போடுகிறது!
முருகன் பணிக்கு அவன் ஒதுக்கும் பணத்தில், நேரத்தில், பணிகளில் தலையிட்டு
ஒரு கட்டத்தில், முருகனின் வேலுக்கான தங்கம்/ வைரத்தையே
திருடும் அளவுக்குப் போய் விடுகிறாள், அந்தப் பேராசை மிக்க பெண்!
அவனின் உற்ற தோழனே, அப்பழியை ஏற்றுக் கொண்டு
அவர்கள் குடும்பம் சிதையாது காக்க முயல்கிறான்!
ஆனால், வாரியார், வாரியாராகவே திரையில் தோன்றி
வீடு தேடி வந்து, அவர்களிடம் நன்கொடை கேட்கும் போது
அவரையே அவமதிப்பு செய்து திருப்பி அனுப்பி விடுகிறாள்!:(
இதனால், மனைவியையும் வீட்டையும் உதறிச் செல்கின்றான் அவன்!
மீண்டும் எப்படிச் சேர்கிறார்கள்? வாரியார் தோன்றிச் சேர்த்து வைப்பதே கதை!
”தீண்டுவீராயில் திருநீலகண்டம்” என்ற பெரிய புராணக் காட்சியெல்லாம் கூட
இந்தப் படத்தில் சோடிக்கப்பட்டு இருக்கும்:)
படத்தில், மயில் தத்தித் தாழப் பறக்கும் காட்சிகள் சுவையாக இருக்கும்! இது வரை காணாவிட்டால், கட்டாயம் காண்க! கண்டிருந்தாலும், மீள்காணுங்கள்!
அருள்மொழி அரசு, திருமுருக கிருபானந்த வாரியார்,
பல படங்களில் தோன்றி நடித்துள்ளார்!
சில படங்களுக்கு, உரையாடல் (வசனம்), கதையும் எழுதியுள்ளார்!
சிவகவி – கதை வசனம் மட்டுமே
தெய்வம்
துணைவன்
திருவருள்
சண்முகப்ரியா
கந்தர் அலங்காரம்
மிருதங்கச் சக்கரவர்த்தி
நவகிரக நாயகி
ஆனால், துணைவன் & திருவருள் படங்களில் மட்டும், வாரியார் வரும் காட்சிகள் மிக நீளமானவை!
இன்று, சில காட்சிகள் பிற்போக்குத்தனமாகத் தோன்றலாம்.
குறிப்பாக, மருத்துவத்தை ஒதுக்கும் பக்திக் காட்சிகள்.
ஆனால், அந்நாளில் அது மக்களுக்கு ஏற்புடையதாகவே இருந்தது!:)
வாரியாருக்கு, சினிமா நடிப்பு என்று தனியாகச் சொல்லித் தரத் தேவையில்லை!
ஏனெனில், அவரின் ஓவ்வொரு பேருரையுமே, நாடகம் போல் தான் இருக்கும்!
குரலின் தனிக் கம்பீரம் (வீறு), இசை, உரையாடல், பாடல்கள், கையசைவுகள்..
என்று ஒரு மேடை நாடகத்தையே, அவர் மேடைக் கச்சேரிகளில் காணலாம்!
அதனால் ஈர்க்கப்பட்ட சிறுவர்/சிறுமியர் முதல், அகவை மூத்த வயசாளிகள் வரை,
வாரியார் கச்சேரிக்கு, மயங்காதவர்களே இல்லை எனலாம், நாத்திகர்கள் உட்பட!:)
ஆச்சாரம் மிக்கவர்களின் Bore அடிக்கும் உபந்நியாசங்களை விட
வாரியார் போன்றோரின் பேருரைகள் தான், சமயத்தைக் கூடக் காப்பாற்றின!
மதம் பரவச் செய்ததில், மஹா பெரியவர்களின் பங்கை விட, வாரியார் பங்கு அதிகம்!
*நல்ல உணவும், நளி மிகு உடையும், *இசை தவழும் உறையுளும், *வெற்றி மிகு பணியும், *நீடு உடல் நல வாழ்வும், *மாறிலா உறவும், திருப் புகழும், நின்னைச் சேர்ந்தேலோர் எம் பாவாய்!
ஒவ்வோர் ஆண்டும், இந்நாளில், முருகனருளில் ஒரு சினிமாப் பாடல் இடம்பெறும். இன்றோ, நாதசுரம் ஒலிக்க, திருப்புகழ் இசைப் பாடல்.
இந்தப் பாடல், இசைக்கு மட்டும் பரவல் (பிரபலம்) அல்ல! அதன் மாறுபட்ட, ”முருக விளி”-க்கும் மிகப் பரவலானது!
பொதுவாகச் சில காதலிகள், தங்கள் காதலனை அன்புச் சினத்தால் வசைப்பது போல் இசைப்பதுண்டு! அப்படியே அருணகிரியும், இத் திருப்புகழில், செய்கிறார்!
எத்துணை நேரம் தான் காத்திருப்பது? எப்போது வருவாயோ? *அடேய், மாயக் காரா, வேலைக்காரா.. என்று திட்டுவது போல் *அன்புமிகு நேயக் காரா, என் ஆண்மைக் காரா.. என்று ஒருவிதக் கொஞ்சல்!
-காரன் என்பது, தமிழ் வழக்கில் இன்று ஏனோ, வசை போலாகி விட்டது! அத்துணை மதிப்பு (மரியாதை) மிக்க விளி அல்ல! தையல் காரன், Paper காரன், வேலைக் காரன் என்று சொல்லாது, தையலாளர், இதழாளர், பணியாளர் என்று சமூகநீதிக்கு மாறி விட்டோம்! குறைந்த அளவேனும், -காரன் விட்டு, -காரர் எ. சொல்லுக்கு மாறலே நலம்!
ஆனால், காதலர் இருவருக்கிடையே செல்லமான கொஞ்சல்களில் ஏது சமூகநீதி?:) அங்கெல்லாம்.. வாடா, போடீ, -காரன், -காரி தான், நெருக்கம் கூட்டும்! காதல் கணவனையும், வீட்டுக்’காரர்’ என்பது தானே வழக்கம்?:) அதே போல், வரிசையாக முருகனைக் -கார விளி, விளிக்கிறார் அருணகிரி!
-காரா, -காரா.. என்று ’கார’மான அருச்சனை!:) என்னென்ன -காரன், முருகன்? நீங்களே பாருங்கள்!
இது திருச்செந்தூர்த் திருப்புகழ்! ”முந்து தமிழ் மாலை கோடி கோடி”! வடசொல் ஆங்காங்கு இருப்பினும், தமிழை ’முந்துதமிழ்’ என்று போற்றுவது! குண்டும்-ஒல்லியும் இல்லாத அளவான இளமை மொழி தானே முந்தி ஓடும்?
தமிழ் மொழிக்கு 247 எழுத்துக்கள் அல்ல!
புதிதாகக் கற்றுக் கொள்வோர்/ குழந்தைகளுக்கு, பெரிய எண்ணிக்கை சொல்லி, எடுத்த எடுப்பிலேயே அச்சமூட்டாதீர்!
தமிழில், 30 எழுத்துக்கள் மட்டுமே!
உயிர் எழுத்து= 12; மெய் எழுத்து= 18
எழுத்து எனப்படுப
அகர முதல ... னகர இறுவாய்,
முப்பஃது என்ப (தொல்காப்பியம்)
*தனி எழுத்துரு பெற்று விட்டதாலேயே (ஃ, கொம்பு, கால், பிற..)
இப்படி Context-க்கு ஏற்றவாறு ஒலிப்பு மாறும் நுட்பமே,
*தமிழ் ஒல்லியாகவும் இல்லாமல்,
*தமிழ் குண்டாகவும் இல்லாமல்
இளமையாக, வளமையாக உள்ளது!
क ख ग घ ङ (ka kha ga gha ṅa); च छ ज झ ञ (ca cha ja jha na) என்று ஒவ்வொரு ஓசைக்கும் ஓர் எழுத்து வைத்து மொழியை மிகவும் குண்டாக்கி விடாது.. ச என்ற ஒரே எழுத்தே, சூழலுக்கு ஏற்றாற் போல் (Context based Phonology) cha (chol), sa (isai), ja (manjaL) என்று ஒலிக்கவல்ல ஒயிலான மென்மொழி, தமிழ்!
குண்டு மொழியால் ஓட முடியாது! தமிழ்மொழி முந்தி ஓடும்! வெல்லும்! "முந்து தமிழ்" மாலை கோடி கோடி!
நாதசுரத்தில் பாடலைக் கேட்டு மகிழுங்கள்: MPN சேதுராமன் - பொன்னுசாமி அய்யாக்களின் உருக்கமான வாசிப்பு! நாதசுரம் என்றாலே.. எந்தவொரு பாடலுக்கும் பெருவீறு (கம்பீரம்) வந்து விடும்!
அதே பாடலை, சேலம் செயலட்சுமி அம்மாவின் தீங்குரலில் கேட்டு மகிழ்க! Salem S Jayalakshmi, மிகச் சிறந்த மரபிசை & மக்களிசைப் பாடகர்! அம்மாவின் அரிய ஒலிப்பேழை (1976) தன்னில் கிட்டிய இப் பாடல்!
முந்துதமிழ் மாலை கோடிகோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி - உழலாதே
முந்தை வினையே வராமற் போக மங்கையர்கள் காதல் தூரத்து ஏக முந்து அடிமையேனை ஆளத் தானும் - முனைமீதே
சிந்துரம் இன் மேவு போகக் கார விந்தை குற மாது வேளைக் கார செஞ்சொல் அடியார்கள் வாரக் கார - எதிரான
செஞ் சமரை மாயும் மாயக் கார துங்கரண சூர சூறைக் கார செந்தில் நகர் வாழும் ஆண்மைக் கார - பெருமாளே!
(பாடலின் பொருளின் எளிதே; சில அரிய சொற்களுக்கு மட்டும் பொருள்:
*முஞ்சர்= அழிவுப் பாதையில் செல்வோர் *முனை மீதே= என் முன்னிலையில் *செஞ் சிறிய கால்= சிவப்பான சிறிய காலுள்ள மயில் *துங்க அநுகூலம் (வடமொழி)= தூய்மையான பலன்கள் *அந்தண்= தமிழ்ச் சான்றோர் (பிராமணர் என்ற பொருளல்ல) *அண்டர்= வானவர் *ரூபம் (வடமொழி)= உருவம் *சிந்துரம்= செந்நிற மணப் பொடி *வேளைக்காரன்= காவலன் *வாரக்காரன்= அன்புள்ளவன் *செஞ்சமர்= குருதி மிகு போர் *துங்கரண சூர= போர்வெறி மிக்க சூரன் *சூறை= பெருங்காற்று *செந்தில் நகர்= திருச் செந்தூர்)