Thursday, July 14, 2011

ஏறுமயில் ஏறிவிளை ஆடும் முகம் ஒன்றே!

இன்றைக்கு, முருகனருளில், அனைவருக்கும் தெரிந்த அழகான பாட்டு! = ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!

யார் எழுதியது? = நம்ம அருணகிரி தான்! திருப்புகழில் வரும் பாடல்!
ஆனா, திருப்புகழ்ச் சந்தம் எதுவுமே தளும்பாத "அமைதியான" பாடல்!

இதுவே கடைசித் திருப்புகழ் எனச் சொல்லப்படுவதும் உண்டு!
அது என்ன "ஏறு மயில் ஏறி"? மயில் ஏறி-ன்னு சொன்னாப் போதாதா?
ஏறு மயில்-ன்னா, யாரோ ஏறிய மயில் மீது, முருகனும் ஏறுகிறானா?
மயில் என்ன Subway Trainஆ? பலரும் ஏற, பின்னாடியே நாமும் ஏற? :)))

அட, ஏறு = காளை மாடு-ன்னு ஒரு பொருள் இருக்குல்ல?
ஏறு தழுவுதல்-ன்னு சொல்றோம்-ல்ல? (ஜல்லிக் கட்டு)

அப்ப ஏறு மயில்=காளை மயிலா?
அது எப்படிய்யா ஒரு காளை, மயிலாகும்? அருணகிரி ஆரம்பிக்கும் போதே தகாரறு பண்றாரா என்ன? ஹிஹி! இல்லை!

ஏறு-மயில் = வினைத் தொகை! ஏறின - ஏறுகின்ற - ஏறும் மயில்!
ஏறு-மயில் = உம்மைத் தொகை! ஏறும், மயிலும்!

முருகன் மயில் மேலும் ஏறுவான்,அவங்க அப்பாவின் வாகனம், காளை மீதும் ஏறுவான்!
சின்ன பய புள்ள-ல்ல! வீட்டுல இருக்குற கார், பைக்-ன்னு ஒன்னு விடாம எல்லாத்து மேலேயும் ஏறுகிறது!
அதான்....ஏறி "விளையாடும்"-ன்னு சொல்றாரு! ஏறிப் "பறக்கும்"-ன்னு சொல்லலை பாருங்க! :)

அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்! அதுனால அப்பன் வாகனமும் சுப்பனுக்கு அடங்கிருச்சி:)
அண்ணாவின் எலி வேலைக்கு ஆவாது!
அம்மாவின் சிங்கம்-ன்னா பயமோ என்னவோ கொழந்தைக்கு!
மாடு+மயில் மேல மட்டும் ஜாலியா ஏறி விளையாடுது! :)

* ஏறு(ஏறிச் செல்லும்) மயில்
* ஏறு(எருது) + மயில்=இரண்டிலும் ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(உயரமான) மயில் மீது ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(போர்) = போர் வாகன மயில் மீது ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(ஆண்) மயில் மீது ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(ஏறிச் செல்லும்) மயில்=அது சென்று கொண்டிருக்கும் போதே...அதன் மீது தாவி ஏறுவான்! ஓடுற பஸ்ஸில் ஏறும் இளவட்டம் போல! :)


சொல்லித் தருகிறார்! கூடவே பாடலாம்...கேட்டுக்கிட்டே படிங்க...

madhavipanthal.podbean.com

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!

ஓடும் மயிலில், ஓடி ஏறி, விளையாடும் ஒரே முகமும்...
ஞானியான அப்பாவுடனேயே பிரணவ ஞானம் பேசும் ஒரே முகமும்...

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!

கஷ்டங்களைச் சொல்லி அழும் அடியார்கள் வினைகளைத் தீர்க்கும் ஒரே முகமும்...
தாரகன் என்னும் மாய அரக்கனின் மலையைப் பொடியாக்கி, வேல் பிடித்து நிற்கும் ஒரே முகமும்...

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
போரில் வந்த சூரனை, மற்ற அசுரர்களை வதைத்திட்ட ஒரே முகமும்...

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
மாறிலா வள்ளி என்னும் பேதையை, உணரவும்-புணரவும், ஆசையுடன் வந்த ஒரே முகமும்...

ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

அருணாசலம் என்னும் திரு-அண்ணாமலையில் கோயில் கொண்ட கம்பத்து இளையனாரே! என் கந்தனே!
ஒரே முகங்களால் பலவும் செய்து, ஆறுமுகமாகவும் ஆகி நிற்கிறாய்!
ஆறுமுகம் ஆன பொருள் = நீ தான்!
 நீ அருள வேண்டும் = எதை? = ஆறுமுகம் ஆன பொருளை = உன்னை!


எதை அருள வேண்டும்? = உணவு, உடை, இடம் | பணம், புகழ் | காமம், சுகம் - இதெல்லாமா? இல்லை! இல்லை!

"நீ" அருள வேண்டும்=உன்னையே அருள வேண்டும்!
ஏங்கியே வாழும் பேதைக்கு, உன்னைக் கொடுப்பாயா?
ஆறுமுகமான பொருளை (உன்னை) எனக்கு அருள்!


உன் மடியில் தலை வச்சிப் படுத்துக்கிடவா?
உன் முகத்தைப் பாத்துக்கிட்டே.....உன் மூச்சின் நிழலில்.....நானும் நீயும்.....
வாழும் காலம் யாவும்,
மடியில் சாய்ந்தால் போதும்....
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா?


எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்.....
அவனுக்கே என்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு!


மகாராஜபுரம் சந்தானம் குரலில்:


சுதா ரகுநாதன் குரலில்:


எல்லாத்தையும் விட, எனக்குப் பிடிச்சது: இளையராஜா இசையில், குத்துப் பாட்டில், என் முருகனுக்குக் குத்துங்கடே:)))
தம்பிப் பொண்டாட்டி படத்தில்...மின்மினி, பிரசன்னா, ஸ்வர்ணலதா பாடும் - இதோ - குத்து Style - ஏறுமயில் ஏறி விளை ஆடும் முகம் ஒன்றே!

--------------

13 comments:

குமரன் (Kumaran) July 14, 2011 11:16 PM  

ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்!

சிவ.சி.மா. ஜானகிராமன் July 15, 2011 12:11 AM  

ஆகா..

ஏறு - என்ற ஒரு சொல்லை வைத்துக்
கொண்டு இத்தனை விளையாட்டா ?

இந்த ஒரு சொல்லில் இத்தனை பொருளா ?

என வியக்கும் வண்ணம் பாடியருளியிருக்கிறார் அருணகிரிநாதர்..

அதைக்கண்டுணர்ந்து வெளிப்படுத்திய தங்களுக்கும் வாழ்த்துக்கள்.


http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

Lalitha Mittal July 15, 2011 6:01 AM  

ஏறு!!!!!!!!!! சூப்பர்!!!!!!!!!!

adithyasaravana July 15, 2011 7:49 AM  

ஓடுற மயில்ல ஏறுற குழந்தையா.. ரொம்ப குறும்பு குழந்தைப்போல..அதுதான் யோசிக்கக்கூட இல்லை... பழம் வாங்க பறந்து போச்சு.. சின்ன வயசுல இந்த பாட்டைத்தான் எங்க அப்பத்தா சொல்லி குடுத்தாங்க.. ஏறுக்கு இவ்வளவு விளக்கமா? .. திருச்செந்தூரின் கடலோரத்தில் பாட்டுத்தான் ஞாபகம் வருது.. எங்க ஆதி அதை அவ்வளவு அழகா ப்பாடுவான்..வாடும் இந்த ஏழையையும் பாரு முருகா..ரொம்ப ஏங்கி போயிருக்குது..

kannabiran, RAVI SHANKAR (KRS) July 17, 2011 8:06 PM  

நன்றி குமரன் அண்ணா!
ஆறுமுகமான பொருள்=ஆறுமுகம் தான் பொருள்! அதை அருள வேண்டும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) July 17, 2011 8:08 PM  

@ஜானகிராமன்
ஏறு என்ற சொல்லே, இந்தப் பாட்டின் மொத்த அழகு!
ஏறும் போது ஏறுமுகமான பாட்டு...
ஆறுமுகமான பொருள்-ன்னு நிறைவதில் ஒரு நிறைவு!

kannabiran, RAVI SHANKAR (KRS) July 17, 2011 8:08 PM  

நன்றி லலிதாம்மா!
ஏறு-க்கு வேறு விளக்கங்கள் இருந்தாலும் சொல்லவும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) July 17, 2011 8:12 PM  

@சரவணன் அண்ணா
பல வீடுகளில் இது குழந்தைகளுக்குச் சொல்லிக் குடுக்கும் பாட்டு தான்! எனக்கும் அப்படியே! :)

ஒவ்வொரு வரியும் பாடிக்கிட்டே நடிச்சிக் காட்டுவேன்-ன்னு பாட்டி சொல்லுவாங்க! அதுல ஏறு மயில்-ன்னு வரும் போது, ஓடுற வண்டியில் ஏறுவது போலவே ஏறுவேனாம்!:)
வள்ளியை மணம் புணர வந்த முகம்-ன்னு வரும் போது, வள்ளி வெட்கப்படுறாப் போலவே வெட்கப்படுவேனாம்! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) July 17, 2011 8:14 PM  

//ஏறுக்கு இவ்வளவு விளக்கமா? ..//

ஆமா!

//திருச்செந்தூரின் கடலோரத்தில் பாட்டுத்தான் ஞாபகம் வருது.. எங்க ஆதி அதை அவ்வளவு அழகா ப்பாடுவான்//

Youtube-இல் எடுத்து போடக் கூடாதா?..

//வாடும் இந்த ஏழையையும் பாரு முருகா..ரொம்ப ஏங்கி போயிருக்குது..//

:)
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று!
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கும் முகம் ஒன்று!

kannabiran, RAVI SHANKAR (KRS) July 17, 2011 8:19 PM  

@சரவணன் அண்ணா
கேக்க மறந்து போனேன்! பாட்டியை, அப்பத்தா-ன்னு தான் கூப்பிடுவீங்களா?:)

இந்தப் பாட்டில் வரும் ஒரு வரியை, செட்டிநாட்டில் பாட மாட்டாங்களாம்! சுப்பையா சார் சொல்லிக் கேள்வி!
பலருக்கும் அருணாச்சலம்-ன்னு பேரு இருக்கும்! அது தங்கள் கணவர் பேரா இருந்துச்சின்னா...எப்படிச் சொல்லுறது? அதுனால...

ஆதி "அவுங்க பேரு" அமர்ந்த பெருமாளே-ன்னு பாடீருவாங்களாம்! :)))

நல்ல வேளை, பெருமாள்-ன்னு செட்டிநாட்டில் அதிகம் வைக்கறது கிடையாது!
இல்லீன்னா...ஆதி "அவுங்க பேரு" அமர்ந்த "அப்பாரு பேரு"-ன்னு பாடி இருப்பாய்ங்க! :)

குமரன் (Kumaran) July 17, 2011 9:10 PM  

ஆதி அவுக பேரு அமர்ந்த பெருமாளே பத்தி படிச்சப்ப கல்லூரி நாட்கள்ல திருவரங்கத்துல நடந்தது நினைவுக்கு வந்தது.

அப்ப கல்லூரி விடுமுறையில திருவரங்கம் போயி கோவில் வாசலுக்கு எதிர் வரிசையில இருக்குற சத்திரத்துல தங்கியிருந்தேன். மதுரையில இருந்து வந்து அங்கே தங்கியிருந்த பாட்டி ஒருத்தங்க ரொம்ப நட்பாயிட்டாங்க. நிறைய கேள்விகள் கேக்கிறதும் அதுக்கு அவுங்க பதில் சொல்றதுமா போய்கிட்டு இருந்தப்ப, தாலாட்டு பாட்டு தெரியுமான்னு கேட்டேன். தெரியுமேன்னு ஒரு பாட்டைப் பாடத் தொடங்குனாங்க.

கஸ்தூரி ரெங்கேசா கஸ்தூரி ரெங்கேசா
கல்யாண புருஷா
காவேரி ஸ்தலவாசா கருணா கடாக்ஷா
லாலி லாலய்ய லாலின்னு பாடிக்கிட்டு வர்றாங்க. பக்கத்துல இருந்த அந்தப் பாட்டியோட தோழியான இன்னொரு பாட்டி 'இவ புருஷன் பேரு வரதன். புருஷன் பேரைச் சொல்லக்கூடாதுன்னு தான் கல்யாண வரதான்னு சொல்லாம கல்யாண புருஷான்னு பாடறா'ன்னு சொல்லி ரெண்டு பேரும் ஒரே சிரிப்பு. :-)

வேங்கட ஸ்ரீனிவாசன் August 03, 2011 2:44 AM  

//ஏறு மயில்//

இங்கே வினைத்தொகை.

குமரனுக்கு எப்பொழுதுமே மயில் தான் வாகனம்.

அப்பாவினுடயது (காளை) அண்ணனுடயது அன்னையினுடையது எது இருந்தாலும் மயில் தான் முக்காலமும்.

குமரன் (Kumaran) August 03, 2011 7:34 AM  

வேங்கட ஸ்ரீனிவாசன் ஐயா. குமரனுக்கு யானையும் வாகனமாக அமைவதுண்டு. சுவாமிமலையில் கருவறைக்கு முன் யானை தான் நிற்கும் மயில் நிற்கும் இடத்தில் என்று கேட்டதுண்டு.

இங்கே 'வியாக்கியான' மரபில் ஒரு சொற்றொடருக்குப் பல சுவையான பொருள் உரைப்பதைப் போல் உரைத்து இரவிசங்கர் குணானுபவத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் அதனைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP