Tuesday, June 14, 2011

அபகார நிந்தை - ஆறுதல் திருப்புகழ்!

வீண் அபவாதத்தில் மாட்டிக் கொண்டு முழிக்கும் போது, ஆறு தலையால் ஆறுதல் கொடுத்து, ஆற்றும் ஆற்றுப்படை எது?

நக்கீரரின் திருமுருகு ஆற்றுப்படையா? = இல்லை!
இது திருப்புகழ் ஆறுதல்! அவனே தன் கரத்தால், மெல்ல மெல்ல வருடிக் கொடுத்து, ஆற்றுப்படுத்துவது!

ஆமாம்! இந்தத் திருப்புகழ் மிகவும் மனமுருக்கும் திருப்புகழ்!

மிகவும் நொந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற அருணகிரி, முருகனால் காப்பாற்றப்பட்டு, சில பாடல்களைப் பாடத் துவங்கி இருந்தார்!
அந்த வேளையில் தான் என்னவோ, அவரின் பாசமே உருவான அக்கா = ஆதி, இளம் வயதிலேயே மரணம் அடைந்தார்!

* தனக்கு மணமாகா விட்டாலும், தம்பிக்கு முதலில் மணமுடித்து, அவன் காம வேள்வியைக் கட்டுப்படுத்த எண்ணியவர்!
* அப்போதும் அடங்காத தம்பி, குடும்பத்தையும் கவனிக்காது போகவே, தான் ஓடாய் உழைத்து, அவன் மனைவியையும் காத்தவர்!
* நோய் பீடித்த தம்பியை, தாய் போல் அரவணைத்துக் காத்தவர்!

* அப்போதும் காமம் அடங்காத தம்பி, அன்று சிரித்த கணிகையரால் இன்று ஒதுக்கப்பட்ட போது துடிதுடித்தான்! அடக்க முடியவில்லை! கதறினான்!
* அவன் படும் பாட்டைக் கண்டு, மனம் அடக்கத் தெரியாத தொழுநோய்த் தம்பிக்கு, "வா", என்று தன்னையே தரத் துணிந்தவர்!
* இந்த ஒரு வார்த்தை தான் அவனை ஒட்டு மொத்தமாய் புரட்டிப் போட்டது!

தாயினும் மேலான ஆதி அக்கா! தன் தாய் = முத்தை அவன் சரிவரக் கண்டதில்லை! அந்த முத்து = இந்த ஆதி!
'முத்தை'த் தரு பத்தித் திருநகை...என்று தாயாகவே துவங்கியது திருப்புகழ்...

அந்த அக்கா தான் இப்போ மரணமுற்றுக் கிடக்கிறார்கள்! இவனோ இப்போது அருணகிரி"நாதர்" ஆகி விட்டான்!
இருந்தாலும் இவனுக்கு உடைத்துக் கொண்டு வருகிறது!
ஊர் அரசல் புரசலாக ஏசுகிறது - இவள் வாழ்வு இப்படிப் பாழாய்ப் போனதற்கு இந்த அருணகிரி'நாதரே' காரணம்!!!

அதை எண்ணியெண்ணி அவன் தலம் தலமாகத் திரிய ஆரம்பிக்கின்றான்!
பழனியில் ஒரு பாலகன்!
அவன் தான் இவன் மனத்தை மயிலிறகால் வருடிக் கொடுக்கிறான்!
மனத்தை ஒருமைப்படுத்த, கையில் ஜபமாலையும் கொடுக்கிறான்! செபமாலை தந்த சற் குருநாதா என்று பாடுகிறார் அருணகிரி...பழனி மலையில்!

அபகார நிந்தை பட்டு - நான் உழலாதே
...முருகா...
செபமாலை தந்த சற் குருநாதா



தலம்: பழனி
வரிகள்: அருணகிரிநாதர்

அபகார நிந்தை பட்டு.....உழலாதே
அறியாத வஞ்சரைக்......குறியாதே

உபதேச மந்திரப்..............பொருளாலே
உனைநான் நினைந்தருள்.......பெறுவேனோ?

இபமா முகன் தனக்கு......இளையோனே
இமவான் மடந்தை........உத்தமி பாலா

செபமாலை தந்த சற்......குருநாதா
திருவாவி னன்குடிப்........பெருமாளே!


மிகவும் எளிமையான திருப்புகழ்! பொருளே சொல்லத் தேவையில்லை! அவனே பொருளாக ஆகி விட்டான்!
இபமா முகன் = யானை முகன்; இமவான் மடந்தை = இமவான் பெண்ணான பார்வதி

திருவாவினன்குடி என்பது தான் உண்மையான படைவீடு! இது பழனிமலைக்கு கீழே உள்ள ஆலயம்!
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கணும் என்ற மக்களின் பேச்சு வழக்கால், பின்னாளிலே மலை மேல் போகர் ஒரு ஆலயம் அமைக்க...,
அந்த ஆண்டிக் கோலச் சிலையாலும் கதையாலும், மலைமேல் உள்ள ஆலயம் மிகுத்த புகழைப் பெற்று விட்டது!

இருப்பினும், பழனி செல்லும் போது, கீழேயுள்ள திருவாவினன்குடி ஆலயத்தையும் தரிசித்து வாருங்கள்!
மயில் மேல் காலை மடித்து, ஒயிலாய் அமர்ந்த என் முருகனைக் கண்ணாரக் கண்டு வாருங்கள்!

அபகார நிந்தை பட்டு - நான் உழலாதே
செபமாலை தந்த சற் குருநாதா
முருகா.....அபகார நிந்தையில் ஆறுதல் கொடு! அணைத்துக் கொள்!

9 comments:

cheena (சீனா) June 14, 2011 7:03 AM  

அன்பின் கேயாரெஸ் - இதென்ன புதுக்கதையாக இருக்க்கிறது - கேள்விப்ப்ட்டதே இல்லையே ! ம்ம் உண்மையான் கதையா ? தரவுண்டா ? ம்ம்ம்ம் - கேயேரெஸ் சொன்னாச் சரியாத்தான் இருக்கும் - இருந்தாலும் நம்ப முடியவைல்லை. நட்புடன் சீனா

Lalitha Mittal June 14, 2011 9:00 AM  

simple n sweet thiruppugazh!
tried to imajine the feather[peacock]touch;soooo sooooothing!

Kannabiran, Ravi Shankar (KRS) June 14, 2011 9:53 AM  

@சீனா ஐயா
அருணகிரியின் வாழ்க்கை வரலாறே அதானே!
தரவு, குமரன் வந்து தருவாரு :)

//ம்ம்ம்ம் - கேயேரெஸ் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்//
:)
நோ நோ; எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்...

Kannabiran, Ravi Shankar (KRS) June 14, 2011 9:54 AM  

@லலிதாம்மா
நான் அடிக்கடி முருகன் இப்படி மயிலிறகால் வருடிக் குடுப்பது போல் தான் கற்பனை பண்ணிக்குவேன்!:)

VSK June 15, 2011 1:51 PM  

நல்ல பாடல். எளிமையான பாடல். முருகா முருகா! கதை இல்லாமலும்கூட சிறந்திருக்கும்.

Kannabiran, Ravi Shankar (KRS) June 15, 2011 8:41 PM  

@VSK
//கதை இல்லாமலும்கூட சிறந்திருக்கும்//

:))

எனக்குத் தேவை 'சிறப்பு' அல்லவே!
படிப்பவர் மனத்தில் 'பதைப்பு'!
அருணகிரிக்கும் அஃதே தேவை! தான் செய்த தவறை வேறெந்த முருகன் அடியாரும் செய்து விடக் கூடாது என்றே எண்ணுவார் அவரும்! அப்படி அருணகிரியை 'முழுக்க' வாசிக்காததால் தான் 'சரவண பவன்' இராஜகோபால் அண்ணாச்சி போன்றவர்கள் வாயளவில் 'முருகா; என்பதோடு நின்றுவிட்டார்கள், என்பது என் பணிவான எண்ணம்!

மற்றபடி கதையில் தவறு இருந்தால் என்னை மன்னியுங்கள்!

துளசி கோபால் June 15, 2011 11:46 PM  

'கதை' நானும் கேள்விப்பட்டு இருக்கேன்.

போனவாரம் புரை ஏறி இருக்கணுமே! அறுபடை வீட்டுக்குப் போயிருந்தோம்.

நேற்றும் கூட ( இது சுப்ரபாதம்)

Kannabiran, Ravi Shankar (KRS) June 16, 2011 11:25 AM  

@டீச்சர்
//போனவாரம் புரை ஏறி இருக்கணுமே! அறுபடை வீட்டுக்குப் போயிருந்தோம்//

ஆகா! என்னைய நினைச்சிக்கீட்டீங்களா அறுபடை வீட்டுல?:)
ரெண்டு-மூனு முறை, புரை ஏறிச்சி போன புதன் கிழமை! ஆனா அது அலுவலகத் தோழி குடுத்த துவர்ப்பான Mexican Mango Chutneyயால-ன்னு நினைச்சேன்! இல்லீயா? Mango Boy Murugan-ஆலயா?:)

//கதை' நானும் கேள்விப்பட்டு இருக்கேன்//

நன்றி டீச்சர்!

kirubarp October 26, 2012 11:29 AM  

ஐயா திருப்புகழை நீண்ட நாளாக அணுபவிக்கிறவர்களில் நானும் ஒருவன் நான் உணர்ந்ததை எழுதிவருகிறேன் !


http://www.godsprophetcenter.com/rich_text_65.html

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP