Sunday, June 12, 2011

'வைகாசி விசாகன்!'

'வைகாசி விசாகன்!'

விசாகப் பெருமானே! வினையெல்லாம் தீர்ப்பவனே!
மயில்மீது வருபவனே! மனமகிழச் செய்பவனே!
வேதத்தின் மூலமே! வாழ்வளிக்கும் தெய்வமே!
உயிர்மேவும் அழகனே! உள்ளமெலாம் நிறைபவனே!


மேலான தெய்வமே! மெய்ப்பொருளாம் பிரணவமே!
மலையேறி வருபவர்க்கு மங்களங்கள் அளிப்பவனே!
வேலிருக்க வினையில்லை எனவென்முன் வருபவனே!
மலையிருக்கு மிடமெல்லாம் முருகனென அருள்பவனே!


சிவனாரின் நுதலினிலே பொறியாக வந்தவனே!
சரவணத்தில் குழந்தையென தவழ்ந்திங்கு உதித்தவனே!
புவியினிலே பல்வேறு அற்புதங்கள் செய்பவனே!
கரங்குவித்துத் தொழுபவரைக் கரையேற்றிக் காப்பவனே!


நாடிவரும் அடியவரின் துயரெல்லாம் தீர்ப்பவனே!
நானிலத்தில் மிக்காரும் ஒப்பாரு மிலாதவனே!
ஓடிவந்து அருளிடவே உனையன்றி யாரிங்கு!
மானென்னும் குறவள்ளி பதம்பணியும் மலைக்குகனே!


கோடிக்கோடி பக்தர்களின் குலதெயவம் நீதானே!
கோடிசூரியர் ஒளிசேர்ந்து குன்றின்மேல் திகழ்பவனே!
வேடிச்சி கரம்பிடிக்க வனத்தினிலே அலைந்தவனே!
தேடியுனைச் சரணடைந்தோம் தென்பழனி யாண்டவனே!


சூரனவன் செருக்கடக்கச் செந்தூரில் நின்றவனே!
சீறிவரும் வேல்விடுத்துச் சேனைகளை யழித்தவனே!
கூர்வேலால் சூரனவன் மார்பினையே பிளந்தவனே!
ஏறிவரும் பக்தர்களைக் காத்தருளும் குஞ்சரனே!


ஈராறு விழியாலே கருணையினைப் பொழிபவனே
இருக்கின்ற தொல்லையெல்லாம் தீர்ந்திடுமே நின்னருளால்
ஓராறு முகத்தினிலே மலர்கின்ற புன்சிரிப்பால்
தீராத வினையெல்லாம் தீர்த்தருளும் சேவகனே!


கண்ணிரண்டும் நின்னடியே காண வேண்டும்!
காலிரண்டும் நின்மலையே ஏற வேண்டும்!
தொண்டென்றும் நானுனக்கே செய்ய வேண்டும்!
நாவினிக்க நின்புகழைப் பாட வேண்டும்!


அன்னைதந்தை யானவனே! அறுமுகனே! அன்பனே!
ஏதுபிழை செய்தாலும் நீயெனையே பொறுத்திடணும்!
கன்னித் தமிழ்த் தெய்வமே! கந்தனே!நீ
காலமெலாம் என்னருகில் கைவேலுடன் வரவேணும்!


தெய்வானை இடமிருக்கக் குன்றத்தில் அருள்பவனே!
வள்ளித்தாய் வலமிருக்கத் திருத்தணியில் திகழ்பவனே!
மெய்ப்பொருளை உரைத்திடவே ஏரகத்தில் அமர்ந்தவனே!
பிள்ளைப் பிராயத்திலே பழனியிலே நின்றவனே!


அலைவாயில் அருகினிலே அருளுமெங்க ளழகனே!
பழமுதிர்ச் சோலையினிலே பக்தர்களைக் காப்பவனே!
கலையாத கல்வியும் குன்றாத செல்வமும்
நிலையாக நீயெமக்குத் தந்திடவே தாள்பணிந்தோம்!
******************


வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

7 comments:

Lalitha Mittal June 13, 2011 8:26 AM  

'vaikaasi visaagan'dharisanam pazhanip panchaamruthamaai inikkirathu!thanks!!

VSK June 13, 2011 8:42 AM  

தங்களது தரிசனத்துக்கும் வணங்குகிறேன் அம்மா. முமு.

கவிநயா June 13, 2011 10:25 PM  

நல்லா இருக்கு அண்ணா!

வெற்றிவேல் முருகனுக்கு... அரோகரா!
வீரவேல் முருகனுக்கு... அரோகரா!

VSK June 14, 2011 8:14 AM  

மிக்க மகிழ்ச்சி கவிநயா! திரும்பி வந்தாச்சா?:))முமு

kannabiran, RAVI SHANKAR (KRS) June 14, 2011 10:58 AM  

//மானென்னும் குறவள்ளி பதம்பணியும் மலைக்குகனே!//

அது! நல்லா பாதம் பணிடா முருகா!:)
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா!

kannabiran, RAVI SHANKAR (KRS) June 14, 2011 11:01 AM  

/கண்ணிரண்டும் நின்னடியே காண வேண்டும்!
காலிரண்டும் நின்மலையே ஏற வேண்டும்!
தொண்டென்றும் நானுனக்கே செய்ய வேண்டும்!
நாவினிக்க நின்பகழைப் பாட வேண்டும்!//

அப்படியே அம்மன் பாட்டு போல இருக்கு! மண்ணளக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா...
அம்மன் பாட்டு முதலமைச்சர் கவிக்கா நோட் சேச லேதா? ஏமி கொடுமைரா முருகா!:)

VSK June 15, 2011 1:43 PM  

இதுக்கெல்லாமா முதலமைச்சரைக் கூப்பிடறது? அவர் சாமிக்கு அவர் பாடறாருன்னு சொல்லிருவாங்க மாண்புமிகு. கவிக்கா.! சும்மா மூட்டி விடப் பாக்காதீங்க ரவி!:))

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP