வாங்க மக்கா! நேற்றே பஞ்சமியும்,சஷ்டியும் ஒரே நாளில் வந்து விட்டதால், நிறைவுப் பகுதியான 6ஆம் பதிவை, இன்று இடுகிறேன்!
கந்த சஷ்டி முடிந்த திருமண நாள் அல்லவா! என் முருகனுக்கு முதலிரவு!:) மிக இனிமையான பாடல் ஒன்னு... பழமுதிர்சோலைப் பாடல்! பார்ப்போமா? நாலே வரி தான்!
நேற்று சஷ்டி அதிகாலையில், நியூயார்க் ஆலயத்தில், பாடச் சொல்லி அழைத்திருந்தார்கள்! இதே பாடலையே அங்கும் பாடினேன்! அதன் ஒலித்துண்டு கீழே! கேட்டுக்கிட்டே வாசிங்க!:)
அகரமும் ஆகி, அதிபனும் ஆகி, அதிகமும் ஆகி - அகமாகி அயன் என ஆகி, அரி என ஆகி, அரன் என ஆகி - அவர்மேலாய்
எழுத்துக்களில் = அகரம் போல் முதல் நீ! மக்களில் = தலைவன் போல் முதல் நீ! வரம் தருவதில் அதிகம் நீ! என் அகமும் நீ! படைத்தலில் = அயன் (பிரமன்) நீ! காத்தலில் = அரி (திருமால்) நீ! அழித்தலில் = அரன் (சிவன்) நீ! முத்தொழில் மூவர் மேலும் உன் குணம், மணம் வீசுகின்றது!
இகரமும் ஆகி, எவைகளும் ஆகி, இனிமையும் ஆகி - வருவோனே இருநிலம் மீதில் எளியனும் வாழ, எனது முன் ஓடி - வரவேணும்!!
இங்குள்ளதும் நீ! எங்குள்ளதும் நீ! இனிமையும் நீ...இப்படி நீயாக நீ இருந்தவாறு வரும் திருமுருகா! இந்த நிலத்தில், உனக்காகவே நான் வாழ்கிறேன்...எனக்காக என் முன்னே ஓடி வர மாட்டியா? வாடா!
வேதங்களின் பதி நீ! வலாரி என்னும் அசுரனைக் கொன்றவன் இந்திரன்! அவன் படைகளைச் சிறை மீட்டுத் தந்து, அமராவதியை மகிழ்வித்தவனே! அந்தியன் என்ற பூர்வகுடி வனவேடன், உன்னை ஈழத்தின் கதிர்காமத்திலே வைத்துப் பூசை செய்தானே! அதில் மகிழும் முருகவனே!
(ஈழத்தில் செல்வச்சன்னிதி மற்றும் கதிர்காமத்தில் பிராமணர் அல்லாதோர் பூசகராக உள்ளனர்! கதிர்காமத்தில் விளங்கும் பூசகரை கப்புறாளை என்றும் செல்வச்சன்னிதி பூசகரை கப்பூகர் எனவும் அழைப்பர் - நன்றி: கானா பிரபா)
செககண சேகு, தகுதிமி தோதி, திமி என ஆடும் - மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை, மலை மிசை மேவு - பெருமாளே!!
தகதிமி தகதிமி என்று விதம் விதமான தாள கதியில், மயிலோடு ஆடுபவனே! செல்வ வளங்கள் நிறைந்த பழமுதிர்சோலை! அந்தச் சோலைமலையில் மேவும் பெருமானே! என் கண்ணாளா!
முன்பு பதிவிட்ட, பழமுதிர் சோலை ரகசியங்களைப் பார்ப்போமா?
பழமுதிர்-ச்-சோலை ன்னு சொல்லாதீங்க! "ச்" வராது!
பழம் உதிர் சோலை = பழங்கள்...உதிர்ந்த சோலை, உதிர்கின்ற சோலை, உதிரும் சோலை என்னும் அழகிய வினைத் தொகை!
நம் வினையும் தொகைந்து விடும் முருக வினைத் தொகை!
பழமுதிர் சோலை ஆலயம்
* இங்கு முருகனுக்கு ஒரு காலத்தில் ஆட்டு ரத்தம் கலந்த அரிசிச் சோற்றைப் படைத்த வேடுவர்கள் உண்டு! சொல்பவர் நக்கீரர்! கொழுவிடைக் குருதி விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச் செய்து என்கிறார் திருமுருகாற்றுபடையில்!
* மற்ற படைவீடுகளைப் போல பிரம்மாண்டமான ஆலயம் இங்கு கிடையாது! முன்பு கூட வேல் வழிபாடு மட்டுமே இருந்துள்ளது. அண்மைக் காலங்களில் தான் தனியான ஆலயமும், முருகனின் சிலை வைத்து வழிபாடுகளும் தோன்றியுள்ளன!
* முற்காலத்தில், வேட்டுவர்கள், குறிஞ்சி நில மக்கள் எப்படி வழிபட்டு வந்தனரோ, அப்படியே தான் பல வழிபாடுகள் இன்றும் உள்ளன; வேட்டுவர்களின் தெய்வமான ராக்காயி அம்மனும் மலை மேல் உண்டு!
* நாகரீக மாற்றங்களால் அதிகம் அசைந்து கொடுக்காது, பண்டைத் தமிழ் மலையாகவே பழமுதிர் சோலை இருந்து வருகிறது போலும்!
* நூபுர கங்கை என்னும் சிலம்பாறு, காட்டாறாகப் பாயும் மலை. இங்கு மாதவி மண்டபத்தில் அமர்ந்து, இளங்கோ தம் காப்பியத்தை எழுதினார் என்று சொல்வாரும் உண்டு!
* ஒளவைக்கு நாவற் பழம் காட்டி, "பாட்டி, பழம் சுடுகிறதா?" என்று கேட்ட இடம் இதுவே!
* ஆழ்வார்கள் சோலைமலையின் இயற்கை அழகில் மனம் பறிகொடுத்து வர்ணித்துள்ளார்கள். ஆண்டாளின் கல்யாண வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனும் சோலைமலை அழகரே!
மாலிருஞ்சோலை பாடற் குறிப்புகள் பரிபாடல் முதலான சங்க இலக்கியங்களிலும் வருகின்றன!
* மாமன் திருமால் கீழே, காட்டில்! மருகன் முருகன் மேலே, மலையில்!
சோலைமலை, அழகர் கோயில்!
* கீழே ஒரு அழகன் - முல்லை அழகர்! மேலே ஒரு அழகன் - குறிஞ்சி முருகன்!
இப்படி இரு அழகன்களும் ஒரு சேர இருப்பதால், சோலைமலை முழுதும் அழகு ததும்பி வழிவதில் வியப்பென்ன?
* பலரும் அறிந்த பழமுதிர் சோலை திருப்புகழ்-கள்
- அகரமும் ஆகி அதிபனும் ஆகி,
- சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல்
* இழுமென இழிதரும் அருவிப், பழமுதிர் சோலை மலைகிழ வோனே - என்று பழமுதிர்சோலையில் தான் முருகாற்றுப்படை முடிகிறது!
திரு மலிவான பழமுதிர் சோலை, மலை மிசை மேவும் பெருமாளே! இரு நிலம் மீதில், எளியனும் வாழ, எனது முன் ஓடி வர வேணும்!
வாடா முருகா! என் முன்னே...ஓடி வாடா....எத்தனை காலம் ஏங்குவேன்? முருகாஆஆஆ!
இந்த ஆண்டு கந்த சஷ்டியின் போது, முருகனருள் வலைப்பூவில் என்ன பார்க்கலாம்? வெறும் பாடல்கள் மட்டும் தானா? ஒவ்வொரு படைவீட்டிலும் மறைமுகமான சில ரகசியங்களைக் கூடவே பார்க்கலாமா? தீபாவளிப் பட்டாசு வெடித்த கையோடு, இப்படி எல்லாம் ஒரு ரகசியமா? தீபாவளிக் கொண்டாட்டம் எல்லாம் எப்படிப் போச்சு மக்கா?
ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி-அமாவாசை முடிந்து முதல் நாள் அன்று துவங்குவது கந்த சஷ்டி! மொத்தம் ஆறு நாட்கள்! * ஆறு படை வீடுகளில் படையுடன் தங்குகிறான் முருகன்! * பின்னர் ஆறு நாட்கள் கடும் போர்! * இறுதி நாள் சூரசங்காரம்! தீமையை அழித்து நல்லன காத்தல்! வெறும் இவ்வளவு தானா இந்த சஷ்டி?
ஆற்றுப்படை கேள்விப்பட்டு இருப்பீங்க! நக்கீரரின் திருமுருகாற்றுப்படையும் கேள்விப்பட்டு இருப்பீங்க! ஆறு=வழி! வழி காட்டி உதவுதலை ஆற்றுப்படை-ன்னு சொல்லுவது மரபு. வறுமையில் வாடும் புலவர்களுக்கு, ஏற்கனவே பரிசில் பெற்ற புலவர்கள், நல்ல வழி சொல்வது போல் இருக்கும் ஆற்றுப்படைப் பாடல்களின் அமைப்பு.
இந்த ஊர் மன்னன் நல்ல வள்ளல், அந்த ஊர் மன்னன் கலைகளின் ரசிகன் என்றெல்லாம் சொல்லி வழிகாட்டுதல் ஆற்றுப்படை. இந்தப் பதிவர் ரொம்ப நல்லவரு! அவரு எவ்வளவு அடிச்சாலும் அழுவ மாட்டாரு, இவரு பின்னூட்ட வள்ளல்-ன்னு எல்லாம் நாம ஆற்றுப்படுத்தறோம் இல்லையா? சுட்டி கொடுத்து வலைச்சரம் எல்லாம் கட்டுறோம் இல்லையா? அது போல-ன்னு வச்சுக்குங்களேன்! :)
தான் மட்டுமே நல்லா இருக்கணும் என்று நினைக்காது, அடுத்தவருக்கும் செல்வம் பெறும் வழியைக் காட்டிக் கொடுத்து ஒருவருக்கொருவர் உதவினார்கள் தமிழ்ப் புலவர்கள்! பொருநர் ஆற்றுப்படை, சிற்பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை எல்லாம் சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்கள்.
பழமுதிர் சோலை நாவல் மரம்
சரி, முருகு-ஆற்றுப்படை எதற்கு? நக்கீரர் தமிழ் இலக்கியப் புரட்சியாளர். ஒரு நல்ல ஆன்மீகப் பதிவர் :) எல்லாரும் அரசன், வள்ளல் என்று தான் ஆற்றுப்படை நூற்களைச் செய்தார்கள். தான் மட்டும் வித்தியாசமாகச் செய்ய நினைத்தார்.
அகம்-புறம் என்பது தான் அப்போதைய தமிழ் இலக்கிய முறை! இறை பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே வந்து போகுமே தவிர, முழு நூலும் இறையருள் பாற்பட்டதாய் இருக்காது! எல்லாரும் சினிமா, கலை, கதை, காதல், போர்-ன்னு எழுதும் போது, இவர் மட்டும் ஆன்மீகத்தை நுழைத்தால்? :)
என்னைப் பொறுத்தவரை முதல் ஆன்மீகப் பதிவர் என்பது எங்கள் ஆசான் நக்கீரரே! :) முருகு ஆற்றுப் படை என்று தைரியமாகப் பதிந்து, புதிய வழி காட்டினார் பதிவுலகிற்கு!
எதுக்கு வழி காட்டணும்? = செல்வத்துக்கு வழி காட்டணும்! செல்வம் இருக்கும் இடத்துக்கு மட்டும் வழிகாட்டினால் போதுமா? அங்கே கஷ்டப்பட்டு, அலைந்து திரிந்து, போன பின்பு, செல்வம் தர முடியாது போ-என்று அந்த மன்னன் சொல்லி விட்டால்? இல்லை...ஒப்புக்கு ஏதோ ஒரு சிறு செல்வத்தை மட்டும் அவன் அளித்து விட்டால்?
தேவியருடன், பழமுதிர் சோலை முருகப் பெருமான்
செல்வத்துள் செல்வம் அருட் செல்வம்! அருள் என்னும் அன்பு ஈன் குழவி, பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு - என்பது குறள். * அருள்பவன் யார்? = யாரையும் அழிக்க நினைக்காதவன். கருணையால் ஆட்கொள்பவன்! * அழிவில்லாத செல்வம் எது? = தெய்வத்-திரு-அருள் * எந்தவொரு சூழ்நிலையிலும் தரமாட்டேன் என்று சொல்லாதவன் யார்? = வள்ளியின் வள்ளல்! முருகப் பெருமான்!
அவனிடம் நம்மை ஆற்றுப்படுத்துகிறார் நக்கீரர்!அவன் இருக்கும் ஒவ்வொரு படைவீடாகச் சொல்லி, நம்மைச் சென்று சேர்பிக்கிறார் நக்கீரர்! அட, நம்மைச் சேர்ப்பிக்க இவர் யாருங்க நடுவுல? நல்ல கேள்வி!
ஆற்றுப்படையின் இலக்கணம் என்ன? ஏற்கனவே பரிசு பெற்றவன், இன்னொருவனுக்கு அந்த அரசனைக் காட்டி வழி சொல்லுவது! நக்கீரர் ஏற்கனவே பரிசு பெற்றவர்! அதான் அதை நமக்கும் சொல்லி நம்மையும் அவனிடம் ஆற்றுப்படுத்துகிறார்!
நக்கீரரும் முருகனும்
கார்க்கிமுகி என்னும் கொடும் பூதம் ஏற்கனவே 999 புலவர்களைப் பிடித்து அடைத்து வைத்தது; ஆயிரமாவது ஆளாக நக்கீரரையும் பிடித்துக் கொண்டது! ஆலமரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்த நக்கீரர் முன்னால், வித்தியாசமான இலை ஒன்று விழுகிறது! அதுவும் பாதி இலை நீரில், மீதி மண்ணில்!
நீரின் இலை மீனாகவும், மண்ணின் இலை பறவையாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுக்க, இது என்ன அதிசயம் என்ற ஆவலில், பார்க்கிறார் நக்கீரர்! தவம் கலையும் சமயமாகப் பார்த்துப் பிடித்துக் கொண்டது பூதம்! உள்ளே இருக்கும் ஏனைய 999 பேர்களும், ஆயிரமாவது ஆளும் மாட்டிக் கொண்டாரே, இனி மொத்தமாக அழிந்தோம் என்று பயத்தில் நடு நடுங்க, அவர்களை ஆற்றுப்படுத்தி முருகனை நோக்கிப் பாடுகிறார் நக்கீரர்.
தன்னுயிர் காப்பதற்காக இல்லாது, இவர்களை ஆற்றுப்படுத்தவாவது உன்னை நிலைநாட்டிக் கொள் முருகா என்று இறைவனை வேண்ட, முருகனும் பூதத்தை அழித்து அனைவரையும் விடுவித்து அருள்கிறான்.
கந்த சஷ்டியின் போது, ஆறு நாட்களும், ஒவ்வொரு படைவீட்டின் சில ரகசியங்களைப் பார்ப்போமா? இன்று பழமுதிர்சோலை! அதுக்கு முன்னால் இன்றைய பாட்டு!
பழமுதிர் சோலை ஆலய ஓவியம்
வருவான்டி தருவான்டி மலையாண்டி... ஒவ்வொரு வரியும், டி,டி என்றே முடியும்! டகு டகு டிகு டிகு என்று மணியோசை போலவே! எல்லாம் கண்ணதாசன் கைவண்ணம்! பாடலை இங்கு கேளுங்கள்! கீழே காணுங்கள்! பாடலின் நடுவே (செட் போட்டு எடுக்கப்பட்ட) பழனியாண்டவர் அபிடேகக் காட்சியும் காணத் தவறாதீர்கள்!
* சூலமங்கலம் ராஜலட்சுமி, சூலமங்கலம் சகோதரிகளுள் ஒருவர். கந்த சஷ்டி கவசம் ஒலிப் பேழைகள் எத்தனையோ வந்த போதும், முதலில் வந்த சூலமங்கலம் பாட்டு போல வருமா? திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்று பாடுவதும் இவரே, சுசீலாம்மாவோடு!
* M.R விஜயா திரைப்படப் பின்னணிப் பாடகி என்பதை விட, தெய்வீக இசைப் பாடகி என்பதே பொருத்தம். பட்டீஸ்வரம் துர்கை மீது இவர் பாடும் தொகுப்பு, மணமாகாத பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம்! மதுரை அரசாளும் மீனாட்சி என்று பாடுவதும் இவரே!
வருவான்டி தருவான்டி மலையாண்டி வருவான்டி தருவான்டி மலையாண்டி - அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி - அவன் தான்டி வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!
சிவனாண்டி மகனாகப் பிறந்தான்டி - அன்று சினம் கொண்டு மலை மீது அமர்ந்தான்டி நவலோக மணியாக நின்றான்டி - என்றும் நடமாடும் துணையாக அமைந்தான்டி - அவன் தான்டி, வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!
பாலபி ஷேகங்கள் கேட்பான்டி - சுவை பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பான்டி காலாற மலை ஏற வைப்பான்டி கந்தா என்றால் இங்கு வந்தேன் என்று - சொல்லி வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!
சித்தர்கள் சீடர்கள் பல கோடி - அவன் செல்வாக்கு எவற்கேனும் வருமோடி பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப் புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!
பழமுதிர் சோலை ஆலயம்
படைவீட்டின் சில ரகசியங்களைப் பார்ப்போமா? இன்று பழமுதிர் சோலை!
* இங்கு முருகனுக்கு ஒரு காலத்தில் ஆட்டு ரத்தம் கலந்த அரிசிச் சோற்றைப் படைத்த வேடுவர்கள் உண்டு! சொல்பவர் நக்கீரர்! கொழுவிடைக் குருதி விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச் செய்து என்கிறார்.
* மற்ற படைவீடுகளைப் போல பிரம்மாண்டமான ஆலயம் இங்கு கிடையாது! முன்பு கூட வேல் வழிபாடு மட்டுமே இருந்துள்ளது. அண்மைக் காலங்களில் தான் தனியான ஆலயமும், முருகனின் சிலை வைத்து வழிபாடுகளும் தோன்றியுள்ளன!
* முற்காலத்தில், வேட்டுவர்கள், குறிஞ்சி நில மக்கள் எப்படி வழிபட்டு வந்தனரோ, அப்படியே தான் பல வழிபாடுகள் இன்றும் உள்ளன; வேட்டுவர்கள் தெய்வமான ராக்காயி அம்மனும் மலை மேல் உண்டு!
* நாகரீக மாற்றங்களால் அதிகம் அசைந்து கொடுக்காது, பண்டைத் தமிழ் மலையாகவே பழமுதிர் சோலை இருந்து வருகிறது போலும்!
* நூபுர கங்கை என்னும் சிலம்பாறு, காட்டாறாகப் பாயும் மலை. இங்கு மாதவி மண்டபத்தில் அமர்ந்து, இளங்கோ தம் காப்பியத்தை எழுதினார் என்று சொல்வாரும் உண்டு!
* ஒளவைக்கு நாவற் பழம் காட்டி, "பாட்டி, பழம் சுடுகிறதா?" என்று கேட்ட இடம் இதுவே!
* ஆழ்வார்கள் சோலைமலையின் இயற்கை அழகில் மனம் பறிகொடுத்து வர்ணித்துள்ளார்கள். ஆண்டாளின் கல்யாண வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனும் சோலைமலை அழகரே! மாலிருஞ்சோலை பாடற் குறிப்புகள் பரிபாடல் முதலான சங்க இலக்கியங்களிலும் வருகின்றன!
சோலைமலை, அழகர் கோயில்!
* கீழே ஒரு அழகன் - முல்லை அழகர்! மேலே ஒரு அழகன் - குறிஞ்சி முருகன்! இப்படி இரு அழகன்களும் ஒரு சேர இருப்பதால், சோலைமலை முழுதும் அழகு ததும்பி வழிவதில் வியப்பென்ன?
* அகரமும் ஆகி அதிபனும் ஆகி, சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல் = போன்ற புகழ்மிக்க திருப்புகழ்கள், பழமுதிர்சோலை மீதே!
இழுமென இழிதரும் அருவிப், பழமுதிர் சோலை மலைகிழ வோனே! திரு மலிவான பழமுதிர் சோலை, மலை மிசை மேவும் பெருமாளே! இரு நிலம் மீதில், எளியனும் வாழ, எனது முன் ஓடி வர வேணும்! முருகா!