Tuesday, December 10, 2013

பி.சுசீலா: ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்!

ஐந்தெழுத்து, ஆறெழுத்து என்று சொல்லுவார்கள், சமய உலகிலே!
எட்டெழுத்தும் உண்டு!

*பஞ்சாட்சரம் = ஐந்தெழுத்து = நம சிவாய
*ஷடாட்சரம் = ஆறெழுத்து = சரவண பவ

எட்டெழுத்து = ஓம் நமோ நாராயணாய
இவை "மந்திரங்கள்" என்றும் சொல்லப்படும்/ ஓதப் படும்!

"ஓங்காரம்" = ஐந்தெழுத்து/ஆறெழுத்தில் கிடையாது; நாம் தான் அவற்றோடு "ஓம்" சேர்த்துச் சொல்ல வேண்டும்!
எட்டெழுத்தில், ஓங்காரம் உள்ளேயே இருக்கும்! ஓங்காரத்தையும் சேர்த்தால் தான் எட்டெழுத்து; பிரிக்க முடியாத பிரணவம்!

இப்படிப் பிரணவமாக இருப்பதால், அரங்கன் கருவறை = "பிரணவாகாரம்" என்று சொல்லப்படும்!
எப்படி இருப்பினும், இவை எல்லாமே "நுணுக்கமான" மந்திரங்கள்;
அதில் முருகனுக்கே உரித்தானது = சரவண பவ!


"பவ" என்றால் பிறப்பு; அறுத்தல்!
"சரவண" = தர்ப்பைக் காட்டிலே பிறந்தவன் (தோன்றியவன்)

பரிபுர பவனே பவம் ஒழி பவனே
அரிதிரு மருகா அமரா பதியை..
-ன்னு கந்த சட்டிக் கவச வரிகள் ஞாபகம் வருதா?:)
அதே "பவம்" ஒழி சரவண பவன் அவன்!

சிவபெருமானின் கண்ணொளி, கங்கைக் கரையில், தர்ப்பைக் காட்டிலே (சரவணத்திலே), ஆறு பொறிகளாக இறங்கிற்று;
இப்படி நம் பிறப்பை அறுக்க = பிறந்தவன் (தோன்றியவன்) முருகப் பெருமான்!

அதனால் சரவணம் + பவம் = சரவண பவ
இந்தத் திருவாறெழுத்து, முருக அன்பர்களுக்கு மிக்க இனிப்பானது!

அந்த ஆறெழுத்தை வச்சி, இன்னிக்கி ஒரு பாடல்; சுசீலாம்மாவின் தேன் குரலில்... பழைய அபூர்வப் பாடல்..
(சினிமாப் பாடல் அல்ல, Album Music) - கேட்போமா?

(Note: மேற்சொன்னது எல்லாம் சம்ஸ்கிருத மரபு!
இவை சங்க தமிழ் மரபு அல்ல! தமிழ் முருகன் = இயற்கை வழிபாடே!)



ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்
அனுதினம் ஓதிடும் மந்திரமாம்
ஆறுதல் தந்திடும் மந்திரமாம்
சரவணபவ எனும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)

ஆறுமுகம் தரும் மந்திரமாம் - நல்ல
அறிவை வளர்க்கும் மந்திரமாம்
ஆறுபடையின் திரு மந்திரமாம் - நல்ல
அன்பை வளர்க்கும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)

நெஞ்சில் நினைக்கும் மந்திரமாம் - நல்ல
நீதியைக் காக்கும் மந்திரமாம்
அஞ்செழுத்தால் பெற்ற மந்திரமாம் - நல்ல
அறநெறி காட்டும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)

வஞ்சத்தை வெல்லும் மந்திரமாம் - நல்ல
வாழ்வைத் தந்திடும் மந்திரமாம்
வேலும் மயிலும் தொழும் மந்திரமாம் - நல்ல
வெற்றிகள் தந்திடும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)


குரல்: பி.சுசீலா
வரி: பாரதிசாமி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

எல்லா வரிகளிலும் "மந்திரமாம்" -ன்னு வரும்; கூடவே "நல்ல" -ன்னு தொக்கும்!
அத்தகு "சரவண பவ" (எ) திருவாறெழுத்தை நினைச்சிப் பார்ப்போம், சுசீலாம்மாவின் தேன் குரலில், நம் மனசையோட்டி!

"சரவண பவ"னார் சடுதியில் வருக!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் December 10, 2013 1:29 AM  

ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...

Vivek April 01, 2020 12:59 AM  

சர"ஹ"ணபவ என்றாலே ஆரெழுத்து. சரவணபவ என்றால் வ இரண்டு முறை வருவ்தால் 5 எழுத்துதான். மேலும் ரஹண பவச ரரரா ரிஹணபவ்ச ரிரிரி என்னும் வரிகளை கவனிக்க

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP