Sunday, September 23, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 7

'சரி. அடுத்த பகுதியைப் பாடு நண்பா"


"என்றனை ஆளும் ஏரகச் செல்வ!
மைந்தன் வேண்டும் வரம் மகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதன் என்று
உன் திருவடியை உறுதி என்று எண்ணும்
என் தலை வைத்து உன் இணையடி காக்க!
என் உயிர்க்கு உயிராம் இறைவன் காக்க!
பன்னிரு விழியால் பாலனைக் காக்க!
அடியேன் வதனம் அழகுவேல் காக்க!
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க!
விதி செவி இரண்டும் வேலவர் காக்க!
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!
பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க!
முப்பத்திரு பல் முனைவேல் காக்க!
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!
என் இளங்கழுத்தை இனியவேல் காக்க!
மார்பை இரத்ன வடிவேல் காக்க!
சேர் இளமுலை மார் திருவேல் காக்க!
வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க!
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க!
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!
பழு பதினாறும் பருவேல் காக்க!
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க!
நாணாங்கயிற்றை நல்வேல் காக்க!
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க!

பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!
வட்டக் குதத்தை வல்வேல் காக்க!
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க!
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க!
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க!
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க!
நாவில் சரஸ்வதி நற்றுணையாக!
நாபிக் கமலம் நல்வேல் காக்க!
முப்பால் நாடியை முனைவேல் காக்க!
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க!

“மிகப்பெரிய பகுதியாகத் தான் பாடிவிட்டாய். ஆனால் இந்தப் பகுதியை இன்னும் சிறு பகுதிகளாகப் பிரிக்காமல் இப்படியே பொருள் காண்பது தான் பொருத்தம்.

இந்த நூலின் பெயரான கவசம் என்பதற்கு ஏற்ற பாடல் வரிகள் இவை. உடலின் ஒவ்வொரு உறுப்பினையும் காக்கும்படி வேண்டும் வரிகள்.

என்றனை ஆளும் ஏரகச் செல்வ!

என்னை ஆளும் திருவேரகத்தின் தலைவனே!

மைந்தன் வேண்டும் வரம் மகிழ்ந்துதவும்

உன் குழந்தையான நான் வேண்டும் வரங்களை எல்லாம் மகிழ்ச்சியுடன் தந்தருள்கின்றாய்!

லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதன் என்று

லாலா லாலா லாலா என்ற பெரும் ஒலியுடன் அருள்கொண்டு ஆடுபவர்களின் மேல் இறங்கும் ஆவேசமும், உனக்கும் உன் அடியார்களுக்கும் மகிழ்வினை உண்டாக்கும் வினோதமான திருவிளையாடல்களும் உடையவன் என்று உன்னைப் போற்றி

உன் திருவடியை உறுதி என்று எண்ணும்
என் தலை வைத்து உன் இணையடி காக்க!

உனது திருவடிகளே நிலையான செல்வம் என்று எண்ணும் எனது தலையின் மீது உன் இணையான திருவடிகளை வைத்து என் தலையை காக்க வேண்டும்!

என் உயிர்க்கு உயிராம் இறைவன் காக்க!
பன்னிரு விழியால் பாலனைக் காக்க!

என் உயிருக்கு உயிராக உள்ள இறைவனே என்னை காக்க வேண்டும்! உனது பன்னிரு விழிகளால் உனது குழந்தையான என்னைக் காக்க வேண்டும்!

அடியேன் வதனம் அழகுவேல் காக்க!

அடியவனின் முகத்தை அழகுவேல் காக்கட்டும்!

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!

திருநீற்றுப்பொடியினை அணிந்த என் நெற்றியை புனிதவேல் காக்கட்டும்!

கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க!

எனது இரண்டு கண்களையும் கதிவேல் காக்கட்டும்!

விதி செவி இரண்டும் வேலவர் காக்க!

பிரமனால் படைக்கப்பட்ட எனது இரண்டு செவிகளையும் வேலவர் காக்கட்டும்!

நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!

என் மூக்குத் துளைகள் இரண்டையும் நல்வேல் காக்கட்டும்!

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க!

பேசும் எனது வாயைப் பெருவேல் காக்கட்டும்!

முப்பத்திரு பல் முனைவேல் காக்க!

எனது முப்பத்திரண்டு பற்களையும் முனைவேல் காக்கட்டும்!

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!

சொற்களைச் செப்பும் எனது நாவைச் செவ்வேல் காக்கட்டும்!

கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!

எனது இரு கன்னக்கதுப்புகளையும் கதிர்வேல் காக்கட்டும்!

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க!

என் இளமையான கழுத்தை இனியவேல் காக்கட்டும்!

மார்பை இரத்ன வடிவேல் காக்க!

என் நடுமார்பை இரத்ன வடிவேல் காக்கட்டும்!

சேர் இளமுலை மார் திருவேல் காக்க!

இரண்டு பக்கங்களிலும் இணையாகச் சேர்ந்திருக்கும் பக்கமார்புகளை திருவேல் காக்கட்டும்!

வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க!

எனது இரண்டு தோள்களும் வளமுடன் இருக்குபடி வடிவேல் காக்கட்டும்!

பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க!

என் பிடரிகள் இரண்டையும் பெருவேல் காக்கட்டும்!

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!

என் முதுகு அழகுடன் இருக்கும்படி அருள்வேல் காக்கட்டும்!

பழு பதினாறும் பருவேல் காக்க!

என் பதினாறு விலா எலும்புகளையும் பருவேல் காக்கட்டும்!

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!

என் வயிறு நோயின்றி விளங்க வெற்றிவேல் காக்கட்டும்!

சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க!

எனது சிறிய இடை அழகு பெறும்படி செவ்வேல் காக்கட்டும்!

நாணாங்கயிற்றை நல்வேல் காக்க!

என் இடுப்பில் அணியும் அரைஞான் கயிற்றை நல்வேல் காக்கட்டும்!

ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க!

ஆண்குறிகள் இரண்டையும் அயில்வேல் காக்கட்டும்!

பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!

இரண்டு பிட்டங்களையும் பெருவேல் காக்கட்டும்!

வட்டக் குதத்தை வல்வேல் காக்க!

வட்டவடிவான குதத்தை வல்வேல் காக்கட்டும்!

பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!

வலிமையான தொடைகள் இரண்டையும் பருவேல் காக்கட்டும்!

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க!

எனது கணைக்கால்களையும் முழந்தாள்களையும் கதிர்வேல் காக்கட்டும்!

ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!

ஐந்து விரல்களுடன் கூடிய என் பாதங்களை அருள்வேல் காக்கட்டும்!

கைகள் இரண்டும் கருணைவேல் காக்க!

இரண்டு கைகளையும் கருணைவேல் காக்கட்டும்!

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க!

இரண்டு முன்கைகளையும் முரண்வேல் காக்கட்டும்!

பின்கை இரண்டும் பின்னவள் இருக்க!

இரண்டு பின்கைகளையும் பின்னவளான திருமகள் இருந்து காக்கட்டும்!

நாவில் சரஸ்வதி நற்றுணையாக!

எனது நாவில் சரஸ்வதி அமர்ந்து நல்ல துணை ஆகட்டும்!

நாபிக் கமலம் நல்வேல் காக்க!

தாமரை போல் வடிவுடைய என் தொப்புளை நல்வேல் காக்கட்டும்!

முப்பால் நாடியை முனைவேல் காக்க!

மூன்று பிரிவாகச் செல்லும் என் உடலிலுள்ள நாடிகளை முனைவேல் காக்கட்டும்!

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க!

என்னை எப்பொழுதும் எதிர்வேல் காக்கட்டும்!”

“சரி. நேரடிப் பொருளைச் சொல்லிவிட்டாய். இனி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுவாய் என்று நினைக்கிறேன்"

"எளிமையான வரிகள் தான் இவை நண்பா. இன்னும் கொஞ்சம் நுணுகிப் பார்க்கலாம்.

என்றனை ஆளும் ஏரகச் செல்வ!

இறைவனின் உரிமைப் பொருட்களே இங்கே இருக்கும் உயிர்ப்பொருட்களும் உயிரில்லாப்பொருட்களும். இறைவனுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனியே ஆள்பவன், அடிமை என்னும் தொடர்பு எப்போதும் இருக்கிறது. பொருளுக்கு உரியவன் பொருளைக் காத்துக்கொள்வதைப் போல் உயிருக்கு உரியவன் ஆன இறைவனும் ஒவ்வொரு உயிரையும் காத்துக் கொள்கிறான்.

இப்படி ஒவ்வொரு உயிருக்கும் தலைவனாக, உடையவனாக இறைவன் இருப்பதை உணர்ந்த ஒருவன் பாடும் வரிகள் இவை. திருவேரகச் செல்வனான இறைவனே என்றனை ஆள்பவன் என்று உணர்ந்தவர் பாடும் வரிகள் இவை.

அந்த அடியவன் தனக்கும் இறைவனுக்கும் உள்ள என்றும் அழியாத உறவையே உறுதியென்று நம்புபவன்! அந்த உறவின் அடையாளமாக இறைவனின் திருவடிகளில் தன் தலை பணிந்து இருப்பதையே உறுதியென்று வாழ்பவன்! வைத்த நிதி, உறவினர், மக்கள், தான் பெற்ற கல்வி போன்றவற்றை உறுதியாக எண்ணும் உயிர்களின் நடுவில் இறைவனின் திருவடிகளையே உறுதியென்று எண்ணும் அடியவன் இவன்!

உன் திருவடியை உறுதி என்று எண்ணும்
என் தலை வைத்து உன் இணையடி காக்க!

இந்த உடலின் எல்லா செயல்களுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த உடலின் உள்ளே இருக்கும் உயிர். அதுவே இந்த உடலின் செயல்களான கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலன்களையும் இயக்கி, இந்த உடலை வளர்த்து, இந்த உடலை நடத்திச் செல்கிறது. இந்த உடலை ஆள்வதுவும் இந்த உயிரே. இந்த உடல் இந்த உயிருக்கே உடைமையானது.

அது போல இந்த உயிரின் உயிராக இருப்பவன் இறைவன். உயிரின் அனைத்துச் செயல்களுக்கும் அடிப்படையாக இருப்பவன் இறைவன். இந்த உயிரை வளர்த்து, இயக்கி, நடத்திச் செல்பவன் இறைவன். இந்த உயிரை ஆள்பவனும் இறைவனே. இந்த உயிர் இறைவனுக்கே உடைமையானது.

என் உயிர்க்கு உயிராம் இறைவன் காக்க!

ஒருவரைப் பார்ப்பவர்கள் முதலில் அவரது முகத்தைத் தான் பார்க்கிறார்கள். அதனால் முகத்திற்கு அழகு முக்கியம். அந்த முகத்தைக் காப்பதும் அழகுவேலாக இருக்க வேண்டும்.

அடியேன் வதனம் அழகுவேல் காக்க!

திருநீறு புனிதமானது. புனிதமற்றவற்றை எல்லாம் நீக்கி புனிதமாக்கவல்லது. அந்த திருநீற்றை அணிந்திருக்கும் நெற்றியை காப்பது புனிதவேலாக இருக்கட்டும்.

பொடி புனை நெற்றியைப் புனிதவேல் காக்க!

ஒளிவீசும் கண்களை வேண்டுவதால் கதிரொளி வீசும் கதிர்வேல் அதனைக் காக்க வேண்டும்.

கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க!

கூர்மையான பற்களைக் காப்பது கூர்மையான முனைவேலாக இருக்கட்டும்.

முப்பத்திருபல் முனைவேல் காக்க!

நாவால் சொல்லுவதெல்லாம் செம்மையுடன் இருக்க வேண்டுவதால் செவ்வேல் நாவைக் காக்கட்டும்!

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!

இப்படியே ஒவ்வொரு உறுப்பையும் காப்பதற்கு ஒரு தனிக்குணத்தை சிறப்பாக வைத்து அந்த குணத்தை உடைய வேல் அந்த உறுப்பைக் காக்க வேண்டும் என்று வேண்டுகிறார் அடிகளார்”
 
(தொடர்ந்து பேசுவார்கள்)

11 comments:

Unknown September 24, 2012 12:47 AM  

அருமையான விளக்கம் . நன்றி

திண்டுக்கல் தனபாலன் September 24, 2012 1:15 PM  

சிறப்பான பகிர்வுக்கு நன்றி...

குமரன் (Kumaran) September 27, 2012 6:24 AM  

நன்றி ஞானம் சேகர் & திண்டுக்கல் தனபாலன்

VSK October 08, 2012 3:09 PM  

சீரான நேரான விளக்கம்.

இந்த வரிகளுள் மிகவும் சிறப்பானவை உன் திருவடியை உறுதி என்று எண்ணும்
என் தலை வைத்து உன் இணையடி காக்க! என்னும் வரிகளே!

தன்னையும், முருகனையும் ஒன்றெனக் கருதிப் பாடிய வரிகள்.

முருகனின் திருப்பாதங்கள் இவர் தலை மேல் வைத்துக் காப்பதாகவும், இவரது தலையை முருகனின் கமலப் பாதங்களின் மீது வைத்து இவரே அவற்றைக் காப்பதாகவும் கூடப் பொருள் கொள்ளலாம்.

என் தலை வைத்து 'உன்' இணையடி காக்க!
உன் இணையடி வைத்து 'என்' தலை காக்க!

முழுமையாகச் சரண் புகுந்தபின், பேதமற்றுப் போகும் என்பதைக் காட்டும் வரிகள் இவை.

முருகனருள் முன்னிற்கும்.

Chandra Mohan October 14, 2012 12:24 AM  

Very admirable elucidation, keep up the great work Kumaran!

குமரன் (Kumaran) October 16, 2012 9:50 PM  

நன்றி எஸ்.கே. ஐயா. நல்ல விளக்கம்.

குமரன் (Kumaran) October 16, 2012 9:50 PM  

Thanks Chandra.

Geetha Sambasivam October 23, 2012 8:25 AM  

சிறப்பான விளக்கங்கள்.

குமரன் (Kumaran) October 23, 2012 10:31 AM  

நன்றி கீதாம்மா.

Kavinaya November 06, 2012 9:27 AM  

//வைத்த நிதி, உறவினர், மக்கள், தான் பெற்ற கல்வி போன்றவற்றை உறுதியாக எண்ணும் உயிர்களின் நடுவில் இறைவனின் திருவடிகளையே உறுதியென்று எண்ணும் அடியவன் இவன்!//

அழகான விளக்கங்களில் பிடித்த வரி இது. நன்றி குமரன்.

குமரன் (Kumaran) November 08, 2012 6:31 PM  

திருவாதவூரடிகளின் மாணிக்க வாசகங்கள் அக்கா அவை!

வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும்
பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP