Sunday, September 02, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 6


"சரி. அடுத்த பகுதியைப் பாடு நண்பா"

"ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகு உடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடர் ஒளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும்
திருவடி அதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து"

"நீண்ட பகுதியாக இருந்தாலும் எளிதான பொருள் உடைய பகுதி நண்பா இது.

முருகப்பெருமானின் திருவுருவ வருணனை கூறி அவன் திருவடிகளில் சிலம்பொலி முழங்க விரைந்து மயில் மீது எனைக் காக்க வரவேண்டும் என்று வேண்டும் பகுதி.

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்.

ஆறுமுகங்களும் அழகுடன் கூடி திருமுடிகளில் அணிகின்ற கீரிடங்கள் ஆறும்.

நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்.

திருநீறிடும் ஆறு நெற்றிகளும் நீண்ட புருவங்களும்.

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்.

பன்னிரண்டு திருக்கண்களும் பவளம் போல் சிவந்த திருவாய்களும்.

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்.

நல்ல நெறி காட்டும் ஆறு திருநெற்றிகளிலும் நவரத்தினங்களால் செய்யப்பட்ட சுட்டி என்னும் அணிகலனும்.

ஈராறு செவியில் இலகு குண்டலமும்.

பன்னிரண்டு திருச்செவிகளிலும் திகழ்கின்ற குண்டலங்களும்.

ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமும் தரித்து.

வலிமையான பன்னிரண்டு தோள்களுடன் கூடிய அழகிய திருமார்பில் பலவகையான அணிகலன்களையும் பதக்கங்களையும் அணிந்து.

நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்.

நல்ல மாணிக்கங்களை உடைய நவரத்தின மாலையும் (அணிந்து).

முப்புரி நூலும் முத்தணி மார்பும்.

மூன்று பிரிவுகளை உடைய பூணூலும் முத்து மாலையும் அணியும் மார்பும்.

செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும்.

தனியாக புகழும் படி அழகு கொண்டு விளங்கும் திருவயிறுகளும் திருவுந்திகளும்.

துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்.

அசையும் இடையில் சுடர்வீசும் ஒளிகொண்ட பட்டாடையும்.

நவரத்னம் பதித்த நற்சீராவும்.

நவரத்தினங்கள் பதித்த நல்ல கவசமும்.

இருதொடை அழகும் இணை முழந்தாளும் திருவடி அதனில் சிலம்பொலி முழங்க.

இரு அழகிய தொடைகளும் இணையாக இருக்கும் முழந்தாள்களும் (கொண்டு), திருவடிகளில் அணிந்த சிலம்பில் இருந்து எழும் ஒலி முழங்க.

செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

சிலம்பொலி இப்படி எல்லாம் ஒலியெழுப்ப விரைந்து.

விந்து விந்து மயிலோன் விந்து.

உலகங்களுக்கெல்லாம் வித்தாக இருக்கும் மயிலோன்.

முந்து முந்து முருகவேள் முந்து.

விரைந்து விரைந்து முருகவேள் (எனைக் காக்க) விரைந்து (வருக)"

"முருகன் விரைந்து வருவதைப் போல் பாடல் வரிகளுக்கும் விரைவாகப் பொருள் கூறிவிட்டாய் நண்பா. உட்பொருள்களையும் விளக்கிச் சொல்ல வேண்டும்".

"இவை எளிமையான வரிகள் நண்பா. விளக்கிக் கூறும்படி ஓரிரு வரிகளே இருக்கின்றன.

சிலம்பொலி முழங்க மயிலோன் வருவதை இங்கே ஒலிக்குறிப்புகளால் சொல்லியிருக்கிறார் சுவாமிகள். அவையும் மந்திர மொழிகள் என்றும் அவற்றை குருமுகமாக பொருள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் பெரியோர்கள் சொல்லுவார்கள்.

பாமரர்களாகிய நம்மேல் கொண்ட கருணையால் இப்படி மந்திர மொழிகளையும் வழிபாட்டு நூலான இந்த நூலில் வைத்துப் பாடியிருக்கிறார் சுவாமிகள். அவரது கருணையை எப்படிப் புகழ்ந்தாலும் தகும்"

(தொடர்ந்து பேசுவார்கள்)

10 comments:

திண்டுக்கல் தனபாலன் September 02, 2012 9:26 AM  

ஒவ்வொரு வரியும், அதனின் விளக்கமும் மிகவும் அருமை... ரொம்ப நன்றி...

Unknown September 02, 2012 10:16 PM  

விளக்கம் அருமை . நன்றி

குமரன் (Kumaran) September 03, 2012 12:22 AM  

நன்றி திண்டுக்கல் தனபாலன் & ஞானம் சேகர்.

VSK September 07, 2012 1:52 PM  

எளிமையான நல்லதொரு விளக்கம், குமரன். ஒரு சில கருத்துகளைச் சொல்ல விழைகிறேன்.

'சீரா' என்றால் கவசம் என்னும் பொருளே எனினும், இங்கு அது குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தைப் பார்க்கையில், இது மார்பில் அணிகின்ற கவசம் அல்லாமல்,.... இடுப்புக்குக் கீழே, தொடைக்கும் மேலே விளங்கும் நவரத்தினக்கள் பதித்த ஒரு மறைப்புக் கவசம் எனக் கொள்ள வேண்டும்.

இத்தனை அழகு பொருந்திய அலங்காரத்துடன் முருகன் தண்டையொலி கிளம்ப நடந்து வருகிறான். அவன் வருதலைத் தெரிந்துகொண்ட மயில், முருகன் தன்னை அழைக்கும் அடியாரிடம் செல்லக் கிளம்பிவிட்டான் என அறிந்துகொண்டு, ஆவலுடன் 'விந்தி, விந்தி' முன்னே வருகிறது. [இடையுறு திருவென விந்து நந்தினான்-- கம்பரா.]

அப்படி வரும்போதே தனது இறக்கைகளையும் பறப்பதற்கு ஆயத்தமாக அடித்துக் கொண்டே வருகிறது. அதிலிருந்தும் எழும் ஒலிகளே 'விந்து, விந்து ' எனும் சொற்றொடருக்கு முன்னர் இருக்கும் முதல் நான்கு குறியொலிகள். அடுத்த நான்கும், அது மயிலோனைத் தாங்கிக்கொண்டு பறக்கையில் வேகமாக அடிக்கும் இறக்கையொலி கிளப்பும் ஒலிகளைக் குறிக்கும் எனப் பெரியோர் சொல்வர். [மயில் மீது அமர்ந்திருக்கையில், சிலம்புகள் அசைவதில்லை என்பதையும், அதனால் அங்கே சிலம்பொலி எழாது என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது.]

இப்படி அழகிய முருகன் மயில் மீதேறி முந்தி வருகிறான்... அடியார் அழைத்த உடனேயே!

குமரன் (Kumaran) September 07, 2012 4:26 PM  

நன்றி ஐயா. தொடர்ந்து மேன்மேலும் அழகான விளக்கங்கள் சொல்லிவருவதற்கும் மிக்க நன்றி.

Kavinaya October 02, 2012 12:14 PM  

அழகுப் பிள்ளையின் வருகையைத் தியானிக்க உதவும் அழகான வரிகள். அதற்குத் தகுந்தாற் போல விளக்கங்களும். நன்றி குமரன், மற்றும் அண்ணா.

குமரன் (Kumaran) October 03, 2012 1:04 AM  

நன்றி அக்கா.

Geetha Sambasivam October 23, 2012 8:21 AM  

குமரனின் விளக்கமும், எஸ்கே அவர்களின் மேலதிக விளக்கமும் அருமை. நன்றி.

குமரன் (Kumaran) October 23, 2012 10:32 AM  

நன்றி கீதாம்மா.

Anonymous October 11, 2022 11:04 PM  

அருமை அழகு பொருள் உணர்ந்து சொல்லுவார்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP