முருகன் என்னும் ஒரு அழகன்!
இந்த காவடிச் சிந்து பாடலை அழகாக பாடித் தந்திருப்பவர், மீனா சங்கரன். அவருக்கு நமது மனமார்ந்த நன்றிகள்.
|
முருகன் என்னும் ஒரு அழகன்
அவன் பழகும் அழகில் மிக இனியன்
தந்தை நுதல் தந்த கனல் தன்னில் மணம் வீசும் மலராய் அவன்
உதித்தான் இதழ் விரித்தான்
சிரித்தான் அவன் மணத்தான்
சரவணப் பொய்கையில் பிறந்தான்
அவன் ஆறுரு வாகவே பிரிந்தான்
கங்கை பெண்டிர் தம் சிசு வாகி அவர் அன்பில் வச மாகி
தவழ்ந்தான் அவன் வளர்ந்தான்
மகிழ்ந்தான் அவன் சிறந்தான்
உமையவள் குமரனை கண்டாள்
அவனைக் கண்டதும் பேரன்பு கொண்டாள்
மைந்தன் அறுமுகனை இரு கரத்தால் அவள் எடுத்தாள் சேர்த் தணைத்தாள்
ஒன்றாய் மிக நன்றாய்
கண்டாய் மலர்ச் செண்டாய்
வேலொடு மயில் தனில் ஏகும்
அவன் பதங்களே வழித் துணையாகும்
செந்தில் முருகன் எனும் அழகன் அவன் கந்தன் எனும் கருணை குகன்
குளிர்வான் மனம் மகிழ்வான்
கனிவான் அருள் பொழிவான்
--கவிநயா
12 comments:
மீனாட்சி மேடம் குரலில் நெடுநாள் கழித்து முருகனருள் பதிவு! நன்றி-க்கா! Thank you Maam!
//அவன் பழகப் பழக மிக இனியன்//
அவன் பழக ஆரம்பிக்கும் போதே இனியன் தான்! :)
//தந்தை நுதல் தந்த கனல் தன்னில் மணம் வீசும் மலராய்//
அந்த நெற்றிப் பொறிக்கும் ஒரு வாசம் உண்டு! அவனை முகர்ந்த பார்த்த எனக்கு நல்லாத் தெரியும்! அவன் வாசனை மொத்தம் மூனு! ஆனா என்னன்னு வாசனை-ன்னு சொல்ல மாட்டேன்! :)
சரவணம் என்னும் தர்ப்பைக் காடு! தர்ப்பைக் காட்டில் எப்படி வாசம் வீசும்? மொத்தமும் புல் தானே? அதையும் மீறி வாசம் வீசுது என்றால் அது முருகனின் வாசமே!
//வேலொடு மயில் தனில் ஏகும்
அவன் பதங்களே வழித் துணையாகும்//
பொதுவா மயில் அதிக தூரம் பறக்காது! ஆனால் முருகன் மயில் பறக்கிறது என்றால்....
பறக்கும் போது, அவன் இரு பாதங்களும் அதன் உடலை அணைத்து இறுக்க, அந்த உந்துதலில் தான் பறக்கி்றது! ஆக பாதங்களே மயிலின் வழிக்குத் துணை ஆகிறது! நம் மனதின் வழிக்கும் துணை ஆகிறது!
காவடிச் சிந்தினில் களித்தேன் - கந்தன்
நாவடி ஈரத்தில் குளித்தேன்! - அவன்
சேவடி தனைச் சிக்கெனப் பிடி
தாவடி தனில் தீந்தமிழ்க் கொடி
படர்ந்தேன் உனைத் தொடர்ந்தேன் - உடல்
கொடுத்தேன் உயிர் கொடுத்தேன்!
//அவன் பழக ஆரம்பிக்கும் போதே இனியன் தான்! :)//
தெரியுமே! இப்படி சொல்வீங்கன்னு :) ஆனா எழுதும்போது அப்படியே வந்ததால் மாத்தலை.
//அவன் வாசனை மொத்தம் மூனு! ஆனா என்னன்னு வாசனை-ன்னு சொல்ல மாட்டேன்! :)//
ஹ்ம்... அதெல்லாம் தெரிஞ்சுக்க கொடுத்து வச்சிருக்கணுமே :(
//பறக்கும் போது, அவன் இரு பாதங்களும் அதன் உடலை அணைத்து இறுக்க, அந்த உந்துதலில் தான் பறக்கி்றது! ஆக பாதங்களே மயிலின் வழிக்குத் துணை ஆகிறது! நம் மனதின் வழிக்கும் துணை ஆகிறது!//
அருமை. கண்ணனின் சொல்லாடலுக்கு கேட்கணுமா.
//காவடிச் சிந்தினில் களித்தேன் - கந்தன்
நாவடி ஈரத்தில் குளித்தேன்! - அவன்
சேவடி தனைச் சிக்கெனப் பிடி
தாவடி தனில் தீந்தமிழ்க் கொடி
படர்ந்தேன் உனைத் தொடர்ந்தேன் - உடல்
கொடுத்தேன் உயிர் கொடுத்தேன்!//
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் கண்ணா.
மாத்திட்டேன் கண்ணா :)
மீனாட்சி சங்கரனின் இசையில் கவிநயாவின் காவடிச்சிந்து==ஞானப்பழத்துக்கு தேனபிஷேகம்!
வாங்க லலிதாம்மா. நன்றி :)
மீனாள் + மீனாள் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா?! :-)
நன்றி குமரா :)
கழுகுமலை தனிலுறையும் முருகவேளே, கருத்துடனே உன் பாதமலர் தானே ஓதப்,
பழுதொன்றும் வாராமல் காக்க வேணும், பச்சைமால் தன் மருகா பார்பதியின் மைந்தா;
வழுவாமல் அடியேன் முன் நிற்க வேணும், வரும் பிழைகள் தனையகற்றி வழுவச் செய்வாய்,
தெளிவாயுன் பாதம் துதிப்தேனையா, சுவாமி தென்கதிரை முருகோனே தரிசிப்பாயே..
காடுதனில் வேங்கை மரமாகி நின்றாய், கானவர்கள் கண்டு உன்னைக் கடு வேகத்தால்,
சாடிடவே மனதிலெண்ணிப் பரிசை கத்தி, தானெடுத்தாய் தவிடுபொடி யாக்கவென்றே;
கூடிய குறவரெல்லாம் நிமித்தம் கண்டு, குமரவேள் என்றெண்ணிக் குலைந்திட்டார்கள்,
தேடியே உன் பாதம் துதிப்தேனையா, சுவாமி தென்கதிரை முருகோனே தரிசிப்பாயே.............
கழுகுமலை தனிலுறையும் முருகவேளே, கருத்துடனே உன் பாதமலர் தானே ஓதப்,
பழுதொன்றும் வாராமல் காக்க வேணும், பச்சைமால் தன் மருகா பார்பதியின் மைந்தா;
வழுவாமல் அடியேன் முன் நிற்க வேணும், வரும் பிழைகள் தனையகற்றி வழுவச் செய்வாய்,
தெளிவாயுன் பாதம் துதிப்தேனையா, சுவாமி தென்கதிரை முருகோனே தரிசிப்பாயே..
காடுதனில் வேங்கை மரமாகி நின்றாய், கானவர்கள் கண்டு உன்னைக் கடு வேகத்தால்,
சாடிடவே மனதிலெண்ணிப் பரிசை கத்தி, தானெடுத்தாய் தவிடுபொடி யாக்கவென்றே;
கூடிய குறவரெல்லாம் நிமித்தம் கண்டு, குமரவேள் என்றெண்ணிக் குலைந்திட்டார்கள்,
தேடியே உன் பாதம் துதிப்தேனையா, சுவாமி தென்கதிரை முருகோனே தரிசிப்பாயே.............
கிட்டாத பொருள் தன்னைப் போலென்னாளும், கீர்த்தியுடனே இந்தப் புவியில் நானும்,
எட்டி எட்டி உன்னைப் பார்க்கும் போது, ஏமாற்றி என்னை விட்டு ஏகலாமோ;
சட்டமுடன் தோகை மயில் மீதேறி, சடாட்சரமாய் என்முன்னே தோற்ற வேணும்,
திட்டமுடன் உன் பாதம் துதிப்தேனையா, சுவாமி தென்கதிரை முருகோனே தரிசிப்பாயே.....
கழுகுமலைப் பத்திலிருந்து சில பாடல்கள்...
வருகைக்கும், பாடல் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிர்மலராஜ்.
Post a Comment