018: பாரதியின் வேலன் பாட்டு!
பாரதியின் வேலன் பாட்டு
பாடியவர்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
பாடல்: பாரதியார் கவிதைகள் - தோத்திரப் பாடல்கள்
பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்!
வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா! - அங்கோர்
வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடியானது வேலவா!
சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியைக் - கண்டு
சொக்கி மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட பாதகன் - சிங்கன்
கண்ணிரண்டு ஆயிரங் காக்கைக்கு இரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை - ஒரு
பார்ப்பனக் கோலம் தரித்துக் கரந்தொட்ட வேலவா!
வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை - உடல்
வெம்பி மறுகிக் கருகிப் புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச் செல்வத்தை - என்றும்
கேடற்ற வாழ்வினை, இன்ப விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் - பானு
கோபன் தலைபத்துக் கோடி துணுக்குறக் கோபித்தாய்
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறு வன மானைப்போல் - தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை மணங்கொண்ட வேலவா!
ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே - கையில்
அஞ்சல் எனுங்குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி யாவையும் இங்கு
நீங்கி அடியரை நித்தமுங் காத்திடும் வேலவா!
கூறு படப்பல கோடி அவுணரின் கூட்டத்தைக் - கண்டு
கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய்
மாறு படப்பல வேறு வடிவொடு தோன்றுவாள் - எங்கள்
வைரவி பெற்ற பெருங்கனலே வடி வேலவா!
பொருள்
வெற்பு=மலை;கிரவுஞ்ச மலை வேல் கொண்டு எறிந்தான் முருகப் பெருமான்.
சிங்கன்=சிங்கமுகாசுரன்
அமராவதி = அமரர்களின் நகரம்
பானுகோபன்=சூரனின் மகன்
கையில் அஞ்சல் எனுங்குறி = "யாமிருக்க பயம் ஏன்?" என்று அபயம் தரும் திருக்கைகள்
அவுணர்=அரக்கர்
அண்டம்=உலகம்
வைரவி=பைரவி, உமையன்னை
"சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை" என்ற வரியை உன்னிப்பாகக் கேளுங்கள்! வள்ளீ...யை...என்று தேன் குழைத்தே பாடுகிறார், இந்தப் பாடலில்.
அடியேன், முருகனருளில், முதல் பதிவு.
முருகனருள் முன்னிற்க!
19 comments:
முதல் பதிவை முத்தாகப் போட்டவரை
முருகா விடாமல் முன்னின்று, கைகொடுத்து
அனுதினமும் ஓர்பதிவு அடியார் அவரெழுத
ஆறுமுகனேநீ வருக அழகு மயில்மீது!
அழகான பாடல், அதுவும் எம்.எஸ் அவர்களின் குரலில்...ஆகா. நன்றி சிபி.
பாரதி முருகனைப் பற்றி அருமையான பாடல்கள் பாடியிருக்கின்றார். இந்தப் பாட்டு. சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ என்ற பாடல். பிறகு முருகனையும் வள்ளியையும் வைத்து ஒரு வசனகவிதை. பெயர் மறந்து விட்டது. இந்தப் பாடல் மிகவும் சுறுசுறுப்பாக சந்த நயத்தோடு காவடி எடுப்பவர்கள் பாடச் சிறந்தது.
இதுவரை கேட்டதேயில்லை கே. ஆர். எஸ்.
விளக்கமும் நன்று. இட்டதற்கு நன்றி.
இரவிசங்கர். சிறு வயதில் இருந்து பல முறை பாடி மகிழ்ந்த பாடல் இது. எம்.எஸ். அவர்கள் பாடி சில முறை கேட்டிருக்கிறேன். மீண்டும் கேட்க வழி செய்ததற்கு நன்றி. ஒவ்வொரு வரியும் பொருளுரைக்க விரிந்து கொண்டே செல்லும்.
ஜிரா
//வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை//
இதன் பின்னுள்ள கதை என்னவோ?
பாரதியின் பாடலுக்கு நன்றி கேஆர்எஸ்.
ஜிரா
பாரதியின் வசன கவிதை காற்று தனில் முருகனும் வள்ளியும் கதை மாந்தர் பெயர் மட்டுமே. காற்றின் சிறப்பு கூற வந்த வசன கவிதை அது.
வெள்ளலைக் கரங்களின் பின்னுள்ள கதையை அறிய நானும் ஆவலுடையவனாயிருக்கிறேன்.
இராகவனும் சாத்வீகனும் பேசிய 'வள்ளி முருகன்' வசனகவிதையை அடியேன் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' வலைப்பூவில் தொடராக இட்டிருக்கிறேன். பார்க்காதவர்கள் முடிந்தால் பாருங்கள்.
http://nambharathi.blogspot.com/2006/01/120-15.html
கண்ணபிரான் அருமையான பாடல்வரிகள் பாடல்குரலும்.இதை காவடிச்சிந்துவிலும் பாடலாம்.காற்றோடு மறைந்த திரு சடகோபன் அவர்களும் அருமையாக பாடியுள்ளார்.நன்றி
//SP.VR.சுப்பையா said...
முதல் பதிவை முத்தாகப் போட்டவரை
முருகா விடாமல் முன்னின்று, கைகொடுத்து...//
தங்கள் அன்புக்கும் ஆசிக்கும் நன்றி சுப்பையா சார்!
//மெளல்ஸ், பெங்களூர் said...
அழகான பாடல், அதுவும் எம்.எஸ் அவர்களின் குரலில்...ஆகா. நன்றி சிபி//
நன்றி மெளல்ஸ்!
//G.Ragavan said...
பாரதி முருகனைப் பற்றி அருமையான பாடல்கள் பாடியிருக்கின்றார்.... இந்தப் பாடல் மிகவும் சுறுசுறுப்பாக சந்த நயத்தோடு காவடி எடுப்பவர்கள் பாடச் சிறந்தது.//
ஆமாம் ஜிரா!
காவடிச் சிந்து தான்!
எம்.எஸ் பாடுவது காவடிச் சிந்தில் இல்லை என்றாலும் அதுவும் இனிக்கிறது!
காவடிச் சிந்தில் "பச்சைக் கலை மயில் ஆட்டம்; புகழ் பாடும் அடியவர் கூட்டம்" என்ற மெட்டில் வரும்!
//இராமநாதன் said...
இதுவரை கேட்டதேயில்லை கே. ஆர். எஸ்.
விளக்கமும் நன்று. இட்டதற்கு நன்றி.//
ஆமாங்க மருத்துவரே! பலர் படித்திருப்பார்கள்; சிலர் கேட்டிருப்பார்கள்!
அதனால் தான் இரண்டையும் சேர்த்தாற் போல இங்கு இட முனைந்தேன்!
தங்கள் அன்புக்கு நன்றி!
//குமரன் (Kumaran) said...
ஒவ்வொரு வரியும் பொருளுரைக்க விரிந்து கொண்டே செல்லும்//
ஆமாங்க குமரன்! அதனால் தான் பாட்டும் சுட்டியும் மட்டும் போட்டு, ஐ ஆம் தி எஸ்கேப்!
பொருள் விரிக்க, நீங்க, ஜிரா, SK ஐயா தான் வரணும்!:-)
//சாத்வீகன் said...
பாரதியின் பாடலுக்கு நன்றி கேஆர்எஸ்//
சாத்வீகன் நன்றி வசன கவிதை விளக்கத்துக்கு!
//தி. ரா. ச.(T.R.C.) said...
கண்ணபிரான் அருமையான பாடல்வரிகள் பாடல்குரலும்.இதை காவடிச்சிந்துவிலும் பாடலாம்.//
வாங்க திராச!
ஆமாம், காவடிச் சிந்தில் பாடினால் இன்னும் உள்ளம் உவக்கும்!
//காற்றோடு மறைந்த திரு சடகோபன் அவர்களும் அருமையாக பாடியுள்ளார்//
திராச ஐயா, சுட்டி கிடைக்குமா?
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
//வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை//
இதன் பின்னுள்ள கதை என்னவோ? //
ஆறுமுகச் செல்வன் ஆறுமதச் செல்வனுக்குச் சொல்வனோ! :-) என்ன ரவி எனக்குத் தெரியுமா என்றுதானே சோதிக்கின்றீர்கள்?
போரில் கடலாய் நிறைந்தான் சூரன். அவனை வற்றியதைத்தான் இப்படிச் சொல்கிறார் பாரதி.
// சாத்வீகன் said...
ஜிரா
பாரதியின் வசன கவிதை காற்று தனில் முருகனும் வள்ளியும் கதை மாந்தர் பெயர் மட்டுமே. காற்றின் சிறப்பு கூற வந்த வசன கவிதை அது.//
சரியாகச் சொன்னீர்கள் சாத்வீகன். இப்பொழுது நினைவு வந்து விட்டது.
அது சரி...யாரேனும் கவரிமான் படத்தில் வரலட்சுமி பாடிய சொல்ல வல்லாயோ கிளியே பாடல் குடுக்க முடியுமா?
// ஆமாம் ஜிரா!
காவடிச் சிந்து தான்!
எம்.எஸ் பாடுவது காவடிச் சிந்தில் இல்லை என்றாலும் அதுவும் இனிக்கிறது!
காவடிச் சிந்தில் "பச்சைக் கலை மயில் ஆட்டம்; புகழ் பாடும் அடியவர் கூட்டம்" என்ற மெட்டில் வரும்! //
அதுவும் காவடிச் சிந்துதான் ரவி. :-)
ரவி,
என் குலதெய்வம் மீதான மகாகவியின் பாடலை எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
நல்ல இடுகை..
Download Bharathiar songs Mp3
http://chinathambi.blogspot.com
Post a Comment