013 : எத்தனை கண் வேண்டுமைய்யா?
எத்தனை கண் வேண்டுமைய்யா?
உன்னழகுத் திருமேனி கண்டு
பரவசத்தில் பாட உன்மேல்
தீராத மையல் கொண்டு! (2)
- எத்தனை கண்
தணிகைதனில் கோவில் கொண்ட
சுப்ரமணிய நாதா நீயும்
சேவற்கொடி தானும் கொண்டு
தங்க ரதம் ஏறி வர!
- எத்தனை கண்
குன்றதனில் ஏறி நின்றே
குமரகுரு நாதா நீயும்
குறையிலாத செல்வம் தருவாய்
செந்தில் வடி வேலவனே!
- எத்தனை கண்
அறுபடை வீடு கொண்ட
ஆறுமுக நாயகனே!
உன்னடியை நாடி வந்தோம்
பொன்னடியைத் தாருமைய்யா!
- எத்தனை கண்
முத்தான முத்துக் குமரா!
காக்கும் கதிர் வேலவனே!
பித்தான அடியவர்க்கு - துன்பம்
போக்கும் மயில் வாகனனே!
- எத்தனை கண்
13 comments:
நாமக்கல்லாரே, எத்தினி அவதாரம் எடுப்பீடூ, பித்தானந்தா படம் இங்கிட்டு வருது :-))))
பிதற்றல் முற்றித்தான் பித்தானந்தாவாக ஆகியிருக்கிறேன். அதனால்தான் ஒரே புரொஃபைல் படம்.
ஆமா! நீங்க என்ன இந்தப் பக்கம்?
:)
நாமக்கல்லாரே. நீங்கள் எழுதிய பாடலா? ரொம்ப நல்லா இருக்குங்க.
//எழுதியவர்: நாமக்கல் சிபி//
இப்ப தெரியுது ஏன் "பித்தானந்தா" என்று பெயர் சூட்டிக் கொண்டீர்கள் என்று. எங்களைப் போல 'பித்தான' அடியவர்க்கு, 'ஆனந்தம்' கொடுக்கவா?...நாமக்கல் "கவிஞரே"!
பாட்டு நல்லா இருக்குங்க!
//நாமக்கல் "கவிஞரே"!
பாட்டு நல்லா இருக்குங்க!
//
மிக்க நன்றி கே.ஆர்.எஸ் அவர்களே!
//நீங்கள் எழுதிய பாடலா? ரொம்ப நல்லா இருக்குங்க.
//
மிக்க நன்றி குமரன்.
நான் எழுதிய பாடல் என்றா தோன்றுகிறது?
:))
ஜகனமனைத்தையும் மோகனப்படுத்தும் பாடலொன்றைத் தீந்தமிழில் எழுதிக் கந்தன் திருவடிகளில் அர்ப்பணித்திருக்கின்றீர்கள் சிபியாரே....மிகச் சிறப்பு. தொழுகைகளில் எல்லாம் சிறந்த தொழுகை நம் சொற்களால் நம் விருப்பப்படி இறைவனோடு பேசுவதும் பாடுவதும்தான். அந்த வகையில் உங்கள் பணியும் நல்ல தொழுகைதான். அடுத்த பாடலை நான் எழுத முயல்கிறேன்.
பித்தானந்தா படத்தைப் பார்த்து ஓடோடி வந்தெனே தவிர, நான் என்ன ஜிராவா, முருகன் படத்தைப்
பார்த்து பக்தி பெருக்கடித்து வர ;-)
"பித்தான அடியவர்க்கு - துன்பம்
போக்கும் மயில் வாகனனே!"
சிபியாரே!
ஓம்; நாம் பித்தர்களே !இந்த மயில் வாகனனில்; நீங்களா?? எழுதினீர்கள்; நன்கு வருகிறது. என்ன மெட்டில் பாடவேண்டும். படத்தில் குமரன் கொள்ளையழகு.
யோகன் பாரிஸ்
// ramachandranusha said...
பித்தானந்தா படத்தைப் பார்த்து ஓடோடி வந்தெனே தவிர, நான் என்ன ஜிராவா, முருகன் படத்தைப்
பார்த்து பக்தி பெருக்கடித்து வர ;-) //
ஐயகோ! இதைக் கேட்பார் இல்லையா! என்னை எவ்வளவு குறைவாக உஷா எடை போட்டு விட்டார். படம் பார்த்தால் மட்டும்தானா உஷா...முருகா என்ற பேரைக் கேட்ட மாத்திரத்திலேயே...கேட்பதென்ன கேட்பது....தூக்கத்திலும் கூட நினைத்த பொழுதிலேயே பத்தி பெருகி உருகி வெள்ளமாக ஓடுமே....ம்ம்ம்ம்...தின்னாத்தான தெரியும் கருவாட்டு ருசி. :-)))
முருகா என்று நாம் உளமாற நினைத்தாலே போதும். முருகன் வருகிறாறோ இல்லையோ ஜீரா வந்து நிற்பார். அப்படித்தானே ஜீரா?
முருகனடியவர்களின் நட்பை என்றென்றும் அவர் விரும்புவதால்.
:))
நக்கலாக எழுதும் நாமக்கல்லாரா இப்படி ஒரு அருமையாண பக்த்தி ததும்பும் பாட்டை அளித்தது.அதுவும் என் குலதெயவமான திருத்தணி முருகன். நல்ல பாடல்.பித்தானந்தா என்ற முத்திரை வேறே. நடத்துங்கள்.
//நக்கலாக எழுதும் நாமக்கல்லாரா இப்படி ஒரு அருமையாண பக்த்தி ததும்பும் பாட்டை அளித்தது.//
எல்லாம் முருகனருள் தி.ர.சா அவர்களே! முருகன் மேல் பாடல் எழுதவேண்டும் என்பது எனது நெடுநாள் விருப்பம்.
முருகனருள் மூலம் நிறைவேறியது.
Post a Comment